Loading

என் ஆயுள் நீயே 29

அஷ்மிதாவை முதல் முறை உதயன் பார்த்த போது அவளின் முகத்தில் அப்படியொரு புன்னகை. அதீத குறும்பு. அவள் நனியிடமும், ரீமாவிடமும் அடித்த கொட்டத்தை ஒரு நாள் முழுவதும் உடனிருந்து பார்த்தவனுக்கு, அவளின் சந்தோஷ முகம் மட்டுமே பரிட்சயம். அதிலும் அவனை காண அவள் வரும் தருணங்களில் எல்லாம், அவனை கண்டதும் அவளின் கண்களில் வெட்டிச் செல்லும் மின்னலில் சுருண்டு மீள்வான்.

இன்று அந்த முகத்திலும், கண்ணிலும் அழுகையை காண்கையில் தான், அவளை தன் மனம் எத்தனை தூரம் நேசிக்கிறது என்பதை ஆழமாக உணர்ந்தான். ஒருநாளில் பல்வேறு உணர்வுகளை அவனுள் கடத்திட்டாள். அனுபவித்திட வைத்திட்டாள்.

“என்னை பாருடி.”

அஷ்மிதாவின் தாழ்ந்திருந்த இமையில் கட்டி நின்ற நீர்த்துளியில் தவிப்புகள் கூடிட, கரகரப்பாக மொழிந்தான்.

“இங்கப்பாரு… என்னை பார்க்கணும்” என்ற உதயன், “நீ எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். என்னைப்பற்றி எதுவுமே தெரியாம தானே எனக்காக எல்லாம், சோ… எனக்கும் எதுவும் தெரிய வேண்டாம். எல்லாம் தானா தெரியட்டும். இப்போ என் கண்ணு முன்னாடி தெரியிற இந்த அஷ்மிதா மட்டும் எனக்கு போதும்.” என்று அதீத அழுத்தத்தோடு அடர்த்தியாய் கூறிட, வேகமாக இமை விரித்து நேர்கொண்டு பார்த்தவளின் கன்னம் வழிந்தோடியது கண்ணீர்.

“உதய்…” அஷ்மிதாவின் உதடுகள் மெல்லிய நடுக்கம் காட்ட…

“அழாதடி… என்னவா வேணாலும் இருக்கட்டும். இவ்ளோ கஷ்டப்பட்டு நீ எனக்கு சொல்ல வேண்டாம். இன்னும் கொஞ்ச நாளில் என் பக்கத்தில் இங்க சாய்ந்து உட்கார்ந்திருப்ப” என்று தன் தோளில் கை வைத்துச் சுட்டிக்காட்டி, “அப்பவும் உன்னால் திடமா சொல்ல முடியும் அப்படின்னா சொல்லு. நான் தெரிஞ்சிக்கிறேன்” என்றான்.

தன்னைப்போல் தன்னை அறியாது, ஒரு பெண்ணின் மனம் ஆணிடம் எதிர்பார்க்கும் அன்பை இயல்பாய் தன் வார்த்தையில் காட்டிவிட்டான்.

அவளுக்கு அந்நொடியே அவனின் பரந்த கைகளுக்குள் அடங்கிவிடத் தோன்றியது.

கண்கள் இரண்டும் கண்ணீரில் மிதக்க, உதட்டில் குவிந்த முறுவல்.

“ஐ லவ் யூ உதய்.” மூரல்கள் வரிசைகட்டி பளிச்சிட, நனைந்த நயனங்களோடு அவள் சொல்லியதில் உறைந்து உயிர் மீண்டான்.

சொல்லிக்கொள்ளாமல், காதலுக்குரிய வார்த்தைகள் பகிர்தலின்றி உணர்ந்து அகம் சேர்ந்த காதலின் தித்திப்பை, அவளின் மொழி வழி நெஞ்சம் குளிர இரு மடங்காய் உணர்ந்தான்.

உதயனிடம் முகம் விரிந்த மகிழ்வு. நட்சத்திரமாக ஒளிர்ந்த அவனின் கூர் விழிகள் அவனின் இதயத்தின் நேச தடத்தை அவளுக்குக் காட்டிக் கொடுத்தது.

“மொத்தமா சாய்க்க பார்க்குறடி” என்று சத்தமின்றி மலர்ந்து சிரித்த உதயன், “தாத்தா” என்று எதோ சொல்ல ஆரம்பிக்க,

“நீங்க சொல்லல?” எனக் கேட்டாள்.

“என்ன சொல்லணும்?”

“தெரியாதா?”

“ம்ஹூம்…” கன்னம் குவிந்த அவனின் சிரிப்பில், அவனது கள்ளத்தனம் கண்டுகொண்டவள், “சொல்லவே வேண்டாம்” என்றாள்.

அதில் உதயன் அட்டகாசமாக சிரிக்க, கூடத்தில் நின்றிருந்த அனைவரின் பார்வையும் அவனிடம் திரும்பியது. ராகவனிடம் பேசிக் கொண்டிருந்த கஜமுகன் கூட தன் பேரனை திரும்பிப் பார்த்தார்.

“எனக்கு ஆச்சரியமா இருக்குக்கா!” காமாட்சி கங்காவிடம் சொல்ல, “யாரா இருக்கும்?” என்றார் லட்சுமி.

“அஷ்மிதா” என்ற இன்பாவின் பதிலில், “இவங்க, இந்த சிரிப்புக்கே, அந்தப் பொண்ணை சீக்கிரம் நம்ம வீட்டுக்கு கூட்டி வந்திடனும்” என்றார் லட்சுமி.

“ஆமா அத்தை. ஒரு நாளும் இப்படி ஆர்ப்பாட்டமா சிரிச்சது இல்லையே! கண்ணுல ஒளியை பார்த்தீங்களா?” என்று மகனை அதிசயித்துப் பார்த்தார் கங்கா.

“கண்ணுபடும் க்கா” என்ற கங்கா, “வராங்கா” என்க, முகத்தை சாதாரணமாக வைத்தனர்.

அஷ்மிதாவின் முகத்தில் பொய் கோபம் காட்டிட, சிரித்தபடி திரும்பிய உதயன், சுற்றம் உணர்ந்து தன் சிரிப்பை மறைத்தான்.

“உன்னால என் இயல்பை தொலைக்கிறேன் நான்.” கீழ் பற்களால் மேலுதட்டை அழுத்தமாக கவ்வி விடுத்து, பின்னந்தலையை வருடினான்.

அவனது நாணம் மறைக்கும் தடுமாற்றத்தில், அஷ்மிதா தடுமாறிப் பார்த்தாள்.

“என்னவாம்? பார்வை பலமா இருக்கு?”

“எதோ ஆகுது.”

“ஹான்” என்ற உதயன், “எனக்கு தான் எதோ ஆகிப்போச்சுண்ணு எல்லாரும் நினைப்பாங்க. இயல்புக்கு மாறா எல்லாம் பண்ணிட்டு இருக்கேன்” என்றான்.

“ஏன்?”

“அஷ்மிதா தான் ரீஸன்” என்றவன், “எனக்கே என்னை புதுசா இருக்கு” என்றான்.

“இல்லையே அப்படியே தான் தெரியுறீங்க” என்று அவன் சொல்லிய பொருள் புரியாது வேகமாக சொல்லியவள், “லாஸ்ட் வீக் பார்த்ததுக்கு இப்போ பெரிய சேன்ஜஸ் எதுவுமில்லை. மீசையை ட்ரீம் பண்ணியிருக்கீங்க… லைட்டா டிப் ஷார்ப். அப்புறம், எப்பவும் பியர்ட் தெரியிற அளவுக்கு விடமாட்டிங்க. இப்போ நாலு நாள் ஷேவ் பண்ணாத லுக். அப்புறம் முன்னிச்சி முடி அலை மாதிரி புருவத்தை ஒட்டியும் ஒட்டாம அசையும். இப்போ ஷார்ட் பண்ணியிருக்கீங்க. அப்புறம்…” என்றவள்,

உதயன் “அப்புறம் அஷ்மிதா” என்றதில் தான் அவனின் கண்கள் கொண்ட மாற்றத்தில், தான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பது விளங்க, ஒற்றை கண் சுருக்கி அசடு வழிய அவனைப் பார்த்தாள்.

அவள் சொல்ல சொல்ல, ‘தன்னை இத்தனை கவனிக்கிறாளா’ எனும் ஆச்சரியம், தன்னவள் தன்னை இத்தனை கவனிக்கின்றாள் எனும் குறுகுறுப்பில் அப்பட்டமான ரசனையை வழியவிட்டன அவனது விழிகள்.

“அப்புறம் அஷ்மிதா…” இதயத்தை சுருட்டும் குரல் கரகரப்பாக ஒலித்திட, திணறிப் பார்த்தாள்.

“அவ்ளோ தான்.” திக்கிக் கூறினாள்.

“இன்னும் முடியல போலிருக்கே” என்றவன், அவள் காட்டிய பாவனையில், “மூச்சு முட்டுது” என்றான்.

அவளின் விழிகள் அகல விரிந்தன.

சன்னமாக சிரித்தவன்,

“இப்போ ஓகேவா நீ?” எனக் கேட்டான்.

‘இத்தனை குறும்பும் பேச்சும் தன்னை சகஜமாக்கிடவா?’ என நினைத்தவள், “ம்” என்றாள்.

“ஓகே… தாத்தா உன் தாத்தாகிட்ட பேசிட்டு இருக்காங்க. நீ எதுவும் சொல்ல வேண்டாம். ஆண்ட்டிகிட்ட நான் பேசிக்கிறேன். அவங்களா உன்கிட்ட கேட்கும் போது இப்போ இருக்க தடுமாற்றம் இருக்காது” என்றான்.

அவளுக்காக பார்க்கிறான். அவளின் மன உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கின்றான். இதைவிட வேறென்ன வேண்டுமாம் அவளுக்கு. அவனை இன்னும் இன்னும் அவனை பிடித்தது.

“வைச்சிடட்டுமா அஷ்மிதா.”

“ஆங்…”

“ஆண்டிகிட்ட பேசிட்டு சொல்றேன்” என்ற உதயன் தன் வீட்டார் தன்னையே பார்த்திருப்பதில் இணைப்பை வைத்துவிட்டு அவர்கள் பக்கம் சென்றான்.

அப்போது தான் உதயன் வருவதை காமாட்சி சொல்லிட, அனைவரும் முகத்தில் மாற்றம் காட்டினர்.

“என்ன?”

அருகில் வந்த உதயன் கேட்டிட,

“நீங்க சத்தமா சிரிக்கிறது தான் ஹாட் நியூஸ்” என்று கிண்டல் செய்தான் இன்பா.

“சிரிக்கக்கூடாதா?”

“அச்சோ சாமி… உங்களை இப்படி பார்க்க நல்லாயிருக்கு” என்று லட்சுமி பாட்டி பதறி சொல்லிட,

“அப்போ நிறைய சிரிச்சிடலாம் பாட்டி” என்று அவரின் கன்னம் கிள்ளினான்.

அவனிடம் இந்த குறும்பு புதிது.

மேலும் மேலும் அவனிடத்தில் ஆச்சரியம் கொண்டனர்.

கஜா தாத்தா ராகவனிடம் பேசிக்கொண்டே உதயனை பார்க்க, தான் பேசுவதாக விழி அமர்த்தினான். அந்நேரம் தான் ராகவன் விமலாவிடம் அலைபேசியை கொடுத்திருந்தார்.

கஜாவும் விமலாவிடம் பெரியவராக விடயத்தை பகிர்ந்துகொண்டு உதயனிடம் கொடுத்தார்.

“வணக்கம் ஆண்ட்டி” என்ற உதயனின் கம்பீரக் குரலில், அன்று முகவரி கேட்டு பேசிய அதே பிரமிப்பு விமலாவிடம். உதயனின் ஆளுமை அவனை பார்க்காமலே அவருக்கு தெரிந்தது.

“ஃப்ரீயா பேசணும் ஆண்ட்டி” என்றான்.

“சொல்லுங்க தம்பி” என்ற விமலா, அவன் பேச்சினை ஆரம்பித்ததும் சொல்லியதில் வாய் பிளந்தார்.

“தாத்தா எனக்கு அஷ்மிதாவை பிடிச்சு சம்மதம் பேசுறதா சொல்லியிருப்பாங்க… உண்மை தான். பட் அந்த பிடித்தம்” என்றவன், “ஐ லவ் ஹெர்… எனக்கு மறைச்சு சம்மதம் கேட்க விருப்பமில்லை” என்றான்.

காதலை பெற்றவர்களிடம் நிமிர்ந்து நின்று சொல்ல முடியுமா? உதயன் கூறினான். அந்த நிமிர்வு விமலாவை அசரடித்தது.

“அன்ட் ஷீ லவ்ஸ் மீ டூ” என்றான்.

விமலாவுக்கு அஷ்மியா என்றிருந்தது.

மேற்கொண்டு சொல்ல வேண்டியதை தடுமாறாது உதயன் சொல்லிட, அவனின் பண்பானப் பேச்சும் அதே சமயம் அவனிடம் தென்பட்ட நிமிர்வும் விமலாவை அப்போதே சம்மதம் தெரிவிக்க வைத்தது.

உதயன் பேசவுமே விமலா ராகவனும் கேட்கும் வகையில் அலைபேசியை குரல் பெருக்கியில் வைத்திட, ராகவனுக்கும் நிறைவாக இருந்திட சம்மதிக்குமாறு கண்காட்டியிருந்தார்.

விமலா, “எங்களும் பரிபூரணம் தம்பி. நாளைக்கு வாங்க. நேரில் பேசுவோம்” என்றிட, “அப்படியே இன்னொரு விஷயம்” என்றான்.

விமலா “சொல்லுங்க மாப்பிள்ளை” என்றிட, முதலில் தம்பி என்றவர், தற்போது மாப்பிள்ளை என்றதில் உதயனிடம் மென் முறுவல். அந்த முறுவலோடு பிரணவ், நனியின் காதலை தெரிவித்திருந்தான்.

“எங்களுக்கும் நேத்து தான் மாப்பிள்ளை தெரியும்” என்றார் விமலா.

“அப்போ நான் சொல்றதை உங்களால் புரிஞ்சிக்க முடியும் அத்தை” என்று ஆன்ட்டி என்று அழைத்துக் கொண்டிருந்தவன் அத்தை என்ற மாற்றத்தில் மொத்தமாக விமலாவை தன் பக்கம் சாய்த்துவிட்டான்.

விமலாவும் அவனது விளிப்பில் இதழ் விரித்து, ‘வெரி ஸ்மார்ட்’ என மனதில் மெச்சிக் கொண்டார்.

அடுத்து தனது திட்டத்தை உதயன் தெரிவிக்க… விமலாவிடம் மௌனம்.

“என் பக்கம் இதை தவிர்த்து வேறு வழியில்லை அத்தை. உங்களுக்கு எதுமிருந்தால் சொல்லுங்க” என்று அவர் பக்கமே முடிவை திருப்பி விட்டான்.

“அவங்களா சேர வாய்ப்பில்லை. அவ்ளோ ஈகோ இருக்கு. அதே அளவுக்கு அன்பும் இருக்கு. நம்ம கடமையை சரியா செய்வோம். அடுத்து அவங்க கையில்” என்றான்.

“எனக்குமே நனியிதழ் ஒத்துவராது சொன்னதும் அவ்வளவு ஏமாற்றம் மாப்பிள்ளை. ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனால் அதுக்கு காரணம் பிரணவ் தெரிஞ்சதும் அந்த வருத்தம் இன்னுமே கூடிப்போச்சு. எளிதா முடிய வேண்டியதை சிக்கலாக்கிட்டானேன்னு இருந்துச்சு. உண்மை தெரிஞ்ச பின்னர் அவங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கலாம் நினைச்சேன். ஆனால் இப்போ நாம தான் சரி பண்ணனும் தோணுது. நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடலாம் மாப்பிள்ளை” என்றார்.

“தேங்க்ஸ் அத்தை” என்ற உதயன், “அப்பா, சித்தப்பா பேசுவாங்க” என்று அவர்களிடம் அலைபேசியை கொடுத்திட்டான்.

என்ன தான் உதயன் தன் பக்கமிருந்து அனைத்தும் பேசியிருந்தாலும், சில விஷயங்கள் பெரியவர்கள் கலந்தாலோசிக்க வேண்டுமென்று அவர்களுக்கான இடத்தை அளித்தான்.

பெரியவர்களுக்கான அவனின் மரியாதை அவனது சிறு செயலில் தெரிந்திட, விமலாவுக்கு உதயன் மீதான பிடித்தம் மரியாதையையும் சேர்த்து வழங்கியது.

இளங்கோவன், கஜேந்திரன் தங்கள் பங்குக்கு அவ்வீட்டு பெரியவர்களிடம் பேசிட, “அவங்களுக்கு ஓகே” என்று பெண்களிடம் திரும்பிக் கூறினான் உதயன்.

“வாவ் அண்ணா…” என்று அணைத்து விடுத்த இன்பா, “நடுவில் அந்த ரெண்டும் எதும் குழப்பம் செய்யாமல் இருக்கணும்” என்றான்.

“இப்போ பட்டுக்கு கோபமிருந்தாலும், கண்டிப்பா நோ சொல்லமாட்டாள்” என்று நகர்ந்து வந்த உதயன்…

“ஆல் செட்” என்று அஷ்மிதாவுக்கு தகவல் அனுப்பினான்.

 

 

என் ஆயுள் நீயே 30

அலை நனைத்த ஈர உடலோடு எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ! பிரணவ் பேசியதை அசைபோட்டுக்கொண்டே தன்னிலையில் மாற்றமில்லாது கடல் நீரோடு உறவாடிக் கொண்டிருந்தாள் நனியிதழ்.

இப்படி பட்டென்று பிரணவ் தன் மனதை உடைப்பானென்று நனியிதழ் எதிர்பார்க்கவில்லை.

அன்றைய காரணம் என்னவாகயிருந்தாலும், ஒருமுறை… ஒரேமுறை தன்னுடைய நேசத்தை மொழி வழி சொல்லியிருக்க வேண்டுமென இக்கணம் தோன்றியது.

அதற்காக உடனடியாக அவனிடம் இயல்பாகவும் முடியாதென நினைத்தாள்.

சுமந்த வலியெல்லாம் என்றோ ஓர் நாள் அர்த்தமற்று போவது இயற்கை. ஆனால் அர்த்தமற்றது அர்த்தமாவது அமையும் முடிவால் அல்லவா?

இன்று அவளின் காதல் முடிவு பிரணவ் சொல்லிவிட்டதால் சுபமாக இருக்கலாம். கொண்ட வலியெல்லாம் இல்லையென்று ஆகாதே!

அவன் காதலிக்கவில்லை என்ற போதெல்லாம் உயிர் நேசம் சுமந்தவளால், தன்மீது காதலிருந்தும் அவனே கல்யாணம் வேண்டாமென சொல்ல சொல்லியதில் அவளின் மொத்த காதலும் அடிபட்டுப் போனது.

அதனின் சிறு கோபம் அவளுள். ஆமா சிறு கோபம் மட்டுமே! அதனை எளிதாக துறந்து அவனிடம் சரண் புகுந்திட அவளது ஆவி துடிக்கிறது. இருந்தபோதும் சட்டென்று அவனிடம் ஒண்டிக்கொள்ள முடியவில்லை.

காத்திருப்பெல்லாம் அவனுக்காக எனும் போது, அவனை விட்டுக்கொடுக்கவும் முடியாது. ஆனால் காதலாய் அவனை இம்சை செய்ய முடியும். அவஸ்தைக்குள் உள்ளாக்க முடியும்.

எப்போதும் தன்னை அதட்டுபவன் இன்று தழைந்து சென்றது, இறங்கி வந்து காதலை சொல்லியது எல்லாம் அவள்மீது அவன் கொண்ட அன்பினால் அல்லவா. அந்த அன்பை கொண்டு அவனை தனக்குள் அடக்கி சீண்டிப்பார்த்திட நினைத்திட்டாள்.

காதலில் சீண்டலும், கோபமும் அழகு தான். அதனை காட்டும் விதத்தில்.

வலி கொடுத்தவனுக்கு காதலின் பேரவஸ்தையை காட்ட முடிவு செய்துவிட்டாள். அதற்காக வேண்டாமென்று பொய் திரை காட்டினாள் அவன் முன்.

இப்போதும், நீ வேணும் என்பதை தொடர்ந்து அவன் காதலாக சொல்லிய அனைத்தும் நெஞ்சின் ஆழம் தித்திப்பாய் இறங்கியது.

கண்கள் மூடி அனுபவித்தாள்.

அவளின் காதல் கண்ட ரணங்களுக்கு அவனது வார்த்தைகள் மயிலிறகாய் வருடிக் கொடுத்தது.

“வேணாம் சொல்ல சொன்னல… இப்போ வேணும் பின்னாடியே சுத்து” என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டவள் அவனை நினைத்து சிரித்துக் கொண்டாள்.

பிரணவ் வேண்டாமென்று எப்போதும் முடிவெடுத்திடமாட்டாள். அவனாக பிடித்தமில்லை என்று சொல்லியதும், அவனுக்கு தன்மீது காதல் வர வாய்ப்பேயில்லை, அப்படியிருக்கையில் தான் காதலென்று அவனை கட்டாயப்படுத்தவும் முடியாது. மொத்தமாக விலகுவது தான் சரியென்று வேண்டாமென முடிவெடுத்தாள். இப்போது அவனே வந்து நேசத்தை நெஞ்சம் முட்டிட தவிப்புகள் சேர சொல்லிடும் போது, வீம்புக்கென்று சொல்லிய வேண்டாமே அது.

“நல்லா படட்டும்” என்று முகம் மூடி சிரித்தவள், அதே மலர்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தாள்.

நாளை பெண் பார்க்க செல்லயிருப்பதால், வீட்டில் அனைவரின் முகத்திலும் சந்தோஷம் ததும்பியது.

எதிர்பட்ட இன்பாவிடம், “என்னண்ணா எதும் பங்ஷன் அரெஞ்மெண்ட்டா?” எனக் கேட்டாள்.

“ஆமாடா” என்ற இன்பா, “கடல் பாறையில் உட்கார்ந்திருந்தியா? ட்ரெஸ்லாம் நனைஞ்சிருக்கு. சேன்ஞ் பண்ணு. அண்ணா உன்கிட்ட பேசணும் வெயிட் பண்ணார்” என்றான்.

“என்ன விஷயம் அண்ணா?”

சுற்றி ஒரு பார்வை பார்த்த இன்பா,

“அண்ணாக்கு மேரேஜ் ஓகே ஆகியிருக்கு. ஒரு புரோபோசல் வந்துச்சு” என்றான்.

“நிஜமாவா? எப்போ? என்கிட்ட சொல்லவே இல்லை” என்று முகம் சுருக்கிய நனியிதழ், நினைவு வந்தவளாக மருதன் வந்ததற்கான கார்ணத்தைக் கேட்டாள்.

“யாரும் எக்ஸ்பெக்ட் பண்ணலடா” என்ற இன்பா, நடந்து முடிந்த மருதன், குமரி பஞ்சாயத்தை சடுதியில் கூறி முடித்தான்.

“வாவ் அண்ணா… அப்போ உங்க லவ் சக்சஸ் ஆகிட்டு” என்று அவனின் கைகளை பிடித்துக் கொண்டு தன் மகிழ்வை சிறு துள்ளலில் காண்பித்தாள்.

“ம்ம்… அப்பவும் அண்ணாக்கு கல்யாணம் ஆனா தானே எனக்கு ஆகும். இப்பவும் என் மகள் கல்யாணம் தடைபடுதே அப்படிங்கிற மாதிரி அத்தை பேசவும் அண்ணா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டார்.”

“அண்ணா எப்பவும் நமக்காகத்தான் யோசிக்கிறாங்க.” நனியிதழ் சொல்ல இன்பா ஆமோதித்தான்.

“அண்ணா ஓகே சொன்னதும் புரோபோசல் வந்திருச்சா?” நனியிதழ் கேட்க, “அண்ணாக்கு லவ்” என்றான், ஹஸ்கி குரலில்.

“வாட்…” அப்படியொரு அதிர்ச்சி நனியிதழிடம். அவளது அகண்ட விழிகளும், திறந்த உதடுகளும் அவளின் அப்பட்டமான நம்ப முடியா அதிர்ச்சியை காண்பித்தது.

“ஆமாவா அண்ணா!”

“உனக்கு ஏன் இவ்ளோ ஷாக்?”

“பின்ன இருக்காதா? அதுவும் செல்வா அண்ணா லவ் பண்றாங்க சொன்னா இருக்காதா?” என்றாள். அவளால் நம்பவே முடியல.

இன்பா அவளின் முகம் பார்த்து அட்டகாசமாக சிரித்தான்.

“நாமதான் அண்ணா ரொம்ப சைலண்ட் நினைச்சிருக்கோம்… அந்த அமைதியெல்லாம் இந்த ஒரு நாளில் காணாமப்போச்சு” என்ற இன்பா, “பயங்கர சேட்டை வேற. அவரை பார்த்து நாம வளர்ரோம் அப்படிங்கிறதுக்காகவும், தொழிலை பார்த்துக்க வேண்டிய பொறுப்பும் தான் அவரை ரொம்ப முதிர்வா நடக்க வச்சி நம்மளையும் மரியாதையா தள்ளி நிக்க வச்சிருச்சு” என்றான்.

“ம்ம்… பொண்ணு யாரு?”

“அது அண்ணா தான் உன்கிட்ட சொல்லுவாங்க” என்று இன்பா முடிக்கும் முன், “செல்வா” என்று அழைத்துக் கொண்டே உதயனின் அறை நோக்கி படிகளேறி வேகமாகச் சென்றாள்.

அறை மூடியிருந்தது. கதவினை தட்டவெல்லாம் இல்லை.

அகலமாக திறந்து உள் நுழைய, வேலை சம்மந்தமாக அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த உதயன், அழைப்பை வைத்தவனாக…

“மெல்ல வர வேண்டியதுதானே” என்று தனக்கு முன் மூச்சு வாங்க நின்றவளிடம் தண்ணீரை எடுத்து நீட்டினான்.

வேண்டாமென்று மறுத்த நனியிதழ், “பொண்ணு யாரு?” எனக் கேட்டாள்.

“இன்பா சொல்லிட்டானா?”

“ஆமா” என்று மார்பிர்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு முறைத்துக் கொண்டு கூறியவள், “என்கிட்ட சொல்லவே இல்லை” என்றாள்.

“எனக்கும் பிடிக்கும்ன்னு இன்னைக்குதான் தெரியும். வந்தனா பண்ண காரியத்தால் தான், எனக்கே என்னை புரிஞ்சுது” என்றான்.

“ஹோ…” என்ற நனி, உதயன் வந்தனா என்று சொன்ன பின்னரே அவள் தன்னிடம் காலை வழி மறித்து பேசியது நினைவு வந்து உதயனிடம் கூறினாள்.

“ரொம்பவே அமைதி. நல்ல பொண்ணு நினைச்சிருந்தேன். இப்படி எதிர்பார்க்கல” என்றாள்.

“ம்ம்” என்ற உதயன், “என் கல்யாணம் நடந்துட்டா வந்தனா சரியாகிடுவா. லீவ் ஹெர் டாபிக்” என்றான்.

“சரி சொல்லுங்க… பொண்ணு யாரு? நேம் என்ன? என்ன பண்றாங்க? எப்படி இருப்பாங்க?” என்று கேள்விகளை அடிக்கிக்கொண்டே சென்ற நனியிதழ், “அவங்ககிட்ட சொல்லிட்டிங்களா? அவங்களுக்கு ஓகேவா? நான் பார்க்கணுமே?” என்றாள்.

“எவ்ளோ க்வெஸ்டின்ஸ்…” என்று சிரித்த உதயன், “நாளைக்கு நேரா போற. பார்க்குற. உனக்கு பிடிச்சிருக்கா சொல்ற” என்றான்.

“அப்போ நீங்களா சொல்லமாட்டிங்களா?”

“நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கோ” என்றான்.

“எனக்கெதும் சஸ்பென்ஸ் வைக்கிறீங்களா நீங்க?”

“சஸ்பென்ஸ் இல்லை சர்ப்ரைஸ்.”

“என்ன சர்ப்ரைஸ்?”

“உன் அண்ணி தான் சர்ப்ரைஸ்” என்றான்.

“க்யூரியஸ் ஆகுது செல்வா” என்று அவனின் கரம் பிடித்தவள், “ஃபோட்டோ இருக்கா?” எனக் கேட்டாள்.

“இல்லை.”

உதயன் இல்லையென்றது உண்மை. ஆனால் நனியிதழ் தன் அண்ணனை நம்பாது குறுகுறுவென பார்த்தாள்.

“ஹேய் பட்டு. அம் சீரியஸ். என்கிட்ட பிக் எதுவமில்லை.”

“ஓகே ஓகே… நேர்லே பார்த்துக்கிறேன்” என்றாள்.

“தட்ஸ் குட்” என்ற உதயன், “உனக்கு பிடிக்கும் தானே?” கேட்டேன். உள்ளர்த்தம் அவன் மட்டுமே அறிந்தது.

“உங்களுக்கு பிடிச்சிருக்கே. செல்வாவுக்கு பிடிச்ச எல்லாம் எனக்கும் பிடிக்கும்” என்றாள்.

“இதை நாளைக்கு நீ நினைவு வச்சுக்கோ” என்றான்.

“எதுக்கு?”

“நாளைக்கு தெரிஞ்சிடும்” என்ற உதயன், மேற்கொண்டு இதைப்பற்றி அவள் பேசுவதை தடுப்பதற்காக பேச்சினை மாற்றினான்.

“கால் பேசும் போது வாய்ஸ் டல்லா இருந்துச்சே?”

நனியிதழுக்கு உதயனிடம் எதையும் மறைத்து பழக்கமில்லை. ஆதலால் கொஞ்சமும் யோசியாது, பிரணவ் அழைத்தது இருவரும் வாதம் செய்ததென எல்லாம் சொல்லிவிட்டாள். உதயன் அவளுக்கு அண்ணன் மட்டுமல்ல, தாயுக்கும் ஈடானவன். அவனிடம் இதை சொல்ல வேண்டும், இதை சொல்லக்கூடாது என்கிற எல்லை அவளிடமில்லை. அவனுக்கு அவள் முதன் முதலில் அறிந்த மகளிதிகாரம். தந்தையாக எதையும் பகிர்ந்துகொள்ளும் நெருக்கம் கொடுத்திருக்கிறான். நனிக்கு மட்டுமல்ல மற்ற பிள்ளைகள் மூவருக்கும் கூட அந்த நெருக்கமும், உரிமையும் அவனிடத்தில் உள்ளது. ஆதலால் வார்த்தை மாற்றாது எல்லாம் சொல்லிவிட்டாள்.

உதயனுக்கு உள்ளுக்குள், ‘அடப்பாவிகளா’ என்று தான் தோன்றியது.

“இது எல்லாமே கோபத்தில் பேசினது தானா பட்டு?” உதயன் கேட்க, மௌனமாக இல்லையென்று தலையசைத்தாள்.

“அப்புறம் எதுக்கு வேணாங்கிற ஆர்க்யூ?” என்று வினவினான்.

“அவங்க வேணாம் சொல்ல சொன்னாங்க தானே?” அத்தனை வேகம் அவளிடம்.

“ரிவெஞ்சா?”

“அப்படியில்லை. ஆனால்” என்று இழுத்த நனியிதழ், “கொஞ்ச நாள் என் பின்னாடி சுத்தட்டுமே” என்றாள்.

அவளின் எண்ணம் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க,

“கிடைக்கலன்னா அழ வேண்டியது. கிடைச்சதும் அழ வச்சு பார்க்கிறது. இதுதான் லவ் ஃபேக்ட் போல” என்றான்.

“அண்ணா!”

“பிரணவ் உன்னை விரும்பியும் அன்னைக்கு உன்னையே வேணாம் சொல்ல வச்சதில் உனக்கு ஈகோ. உன்னோட ஈகோ சாட்டிஸ்ஃபை பண்ண இப்போ பிரணவ்கிட்ட பிளே பன்ற நீ” என்றான். தங்கையின் தும்மலுக்கு கூட அர்த்தம் கண்டறிபவன், அவளின் மனதின் எண்ணத்திற்கு வடிவம் அறிந்திட மாட்டானா?

“தப்பு பண்றேனா செல்வா?”

“இப்படித்தான் லவ் பண்ணணும் அப்படின்னு யாரும் யாருக்கும் சொல்லிக்கொடுக்க முடியாது பட்டு. ஒவ்வொருத்தருக்கு இப்படி அப்படின்னு ஆயிரம் வித்தியாசம், ஆயிரம் மாற்றமிருக்கும். இது உன்னோட லவ். உனக்குதான் தெரியணும்” என்றான்.

நனியிதழ் அமைதியாக தன்னுடைய அண்ணனையே பார்த்திருந்தாள்.

பிரணவ் மற்றும் நனியிதழை சேர்த்து வைக்க, குடும்பமாக சேர்த்து திட்டம் வகுத்தாள், எளிதில் சேர கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் கடினமானதாக மாற்றிவிடுகிறார்களே என்று நினைத்தான்.

“இத்தனை வருஷம் இதுதான் வேணும்ன்னு இருந்த அடம் இப்போ எங்க பட்டு?” என்ற உதயன், “சின்ன சின்ன விளையாட்டுத்தனம் தான் பெரிய பெரிய அசம்பாவிதங்களுக்கு காரணமா அமைஞ்சிருக்கு. ஃபர்ஸ்ட் மனசுவிட்டு பேசுங்க. எல்லா சரியாகிடும்” என்றான்.

“புரியுது அண்ணா… பட் ஜஸ்ட் ஃபன் தான். அவங்களுக்கு என்னை புரியும். புரியணும். அவங்க எனக்காக எவ்வளவு தூரம் போறாங்க எனக்கும் தெரியணுமே. இப்போவே நான் அவங்களை சீண்டுறேன் தெரிஞ்சிருக்கும்” என்றாள்.

உதயன் எதுவும் சொல்லவில்லை. இவர்களுக்குள் என்னவும் செய்துகொள்ளட்டும். தான் செய்ய வேண்டியதை சரியாக செய்து வைப்போமென்று எடுத்த முடிவில் ஸ்திரம் பெற்றான்.

“அதுக்கு முறைச்சிக்கிட்டே இருக்கணுமில்ல” என்ற உதயனிடம், “அவங்க சொல்றாங்க நான் அவங்களை ஏமாத்திட்டன்னு உங்கக்கிட்டவே வந்து கம்பிளைன்ட் பண்ணுவாங்களாம். இப்படிலாம் சொன்னா வேற எப்படி ரியாக்ட் பண்றது. எப்போ பாரு அதட்டல் தான். அதான் நானும் கொஞ்சம் அதட்டிக்கிறேன்” என்றாள்.

உதயன் தலையை இருபக்கமும் அசைத்து மென்மையாக சிரித்தான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
42
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்