Loading

என் ஆயுள் நீயே 27

“உங்களுக்கு எதும் வருத்தமா?” என அனைவரிடமும் பொதுவாக உதயன் வினவிட, எதுவுமில்லை என்று சொல்லியும், அவன் பல்வேறு விதமாகக் கேட்க,

உதயன் ஏன் இவ்வாறு கேட்கிறான் என்று யாருக்கும் விளங்கவில்லை.

“என்ன உதயா இது லவ்வெல்லாம்? நம்ம குடும்பத்துக்கு எப்படி ஒத்து வரும் அப்படின்னு சின்ன திட்டுக்கூட இல்லையா?” என்று அவன் கேட்ட பாவனையில், “உதயா” என்று பொங்கி வந்த சிரிப்பை மறைக்க முடியாது இளங்கோவன் சிரித்தவாறு மகனின் அருகில் வந்து அவனின் தோளில் தட்டினார்.

“சீரியஸ்லி ப்பா… சின்னதா அதட்டக்கூட இல்லை” என்ற உதயன், “சித்தப்பா இன்பாவை மட்டும் முறைக்க செய்தீங்க” என்றான்.

இன்பா தனுவை தானும் விரும்புவதாக சொன்னதும், கஜேந்திரன் மகனை முறைத்து சீரானார். அதனை கண்டிருந்த உதயன் தற்போது கூறினான்.

“நான் இவனிக்கலையே!” இன்பா கிசுகிசுக்க, “அப்போ நான் என்ன பண்ணாலும் அக்செப்ட் பண்ணிப்பீங்க அப்படித்தானே?” என்றான்.

உதயன் எங்கு வருகிறானென்று இன்பா கண்டு கொண்டான். இருப்பினும் எவ்விதத்தில் சாத்தியாமென்று பார்த்தான்.

“நீங்க தப்பு எதுவும் பண்ணமாட்டிங்களே” என்ற கஜமுகன், “இப்போ என்ன உங்களை நாங்க திட்டணுமா?” எனக் கேட்டார்.

“பெத்தவங்கக்கிட்ட திட்டு வாங்கறதும் வரம்ல” என்ற உதயன், “இதுவரை என்னை அதட்டியாவது இருக்கீங்களா?” எனக் கேட்டான்.

“எங்களை வழி நடத்துறவங்க நீங்க. உங்களை ஒரு சொல் சொல்ல ஆவுமா தங்கம்” என்ற லட்சுமி, “நீங்க எது செய்தாலும், அதுல ஆயிரம் காரணமிருக்கும். சரியாவும் இருக்கும்” என்றார்.

“உங்க மனசுல என்னவோ இருக்கு அது என்னன்னு சொல்லுங்க” என்றார் இளங்கோவன்.

“நாளைக்கு தானே திருச்செந்தூர் போறீங்க? கன்ஃபார்மா?” எனக் கேட்டான்.

“எதிர்பார்த்த ஒன்னு. உங்க சம்மதத்துக்குதான் காத்திருந்தோம். நீங்களே சொன்னப்புறம் தள்ளி போடுவோமா?” என்ற கஜேந்திரன், “அம்மா நாளைக்கே நாள் நல்லாயிருக்கு சொன்னாங்க. அண்ணியும் உங்களுக்கு பிடிச்சிருக்கு சொன்னதும், பொண்ணை பார்க்க ஆவலா இருக்காங்க. அதனால் நாளைக்கு போறது உறுதி. அப்பா நீங்க கீழ வரதுக்கு முன்ன தான் ராகவன் ஐயாவிடம் பேசினாங்க” என்றார்.

“உங்களுக்கு கல்யாணம் எப்படான்னு இருந்திருக்காங்க அண்ணா” என்று முணுமுணுத்த தம்பியை பார்த்து கண்ணடித்தான் உதயன்.

“நீங்க ரொம்ப அமைதின்னு நினைச்சிட்டு இருந்தேன். இன்னைக்கு ஒரு நாளில் எவ்வளவு சேட்டை செய்றீங்க” என்று ஆச்சரியம் கொண்டான் இன்பா.

உதயன் மௌனமாக புன்னகைத்துக் கொண்டான்.

“என்னடா சத்தமில்லாம முனகுற?” கஜேந்திரன் அதட்ட இன்பா கப்சிப்.

“நீங்க விஷயத்தை சொல்லுங்க.” இளங்கோவன் தான் தொடங்கினார்.

உதயன் சொல்ல,

“இது சரியா தம்பி?” எனக் கேட்டார் கஜமுகன்.

“பட்டு அவங்களைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டா தாத்தா. இனி அவளா வேணுன்னும் கேட்கமாட்டாள். இப்போ இந்த செக் நான் சொன்னா கேட்பாள். ஆனால் அதுக்கப்புறம் அவளோட வாழ்க்கை?” என்று நிறுத்திய உதயன், “யாருக்காகவும் யாரோட வாழ்க்கையும் அழகாகிடாது தாத்தா. அந்த வாழ்க்கையில் நமக்கு பிடித்தம் இருக்கணும். நாம் நினைச்ச மாதிரி அமைஞ்சா தான் உணவு கூட ருசிக்கும். இது நம்ம பொண்ணோட வாழ்க்கை. அவள் ஆசைப்பட்டதை நிறைவேத்த என்னவும் செய்யலாம்” என்றான்.

“அவங்க வீட்டுல எப்படி ஒத்துப்பாங்க உதயா?” கங்காவுக்கு தன் பிள்ளைகளின் திருமணம் சிக்கலில் அமைந்துவிடுமோ எனும் கவலை.

“அவங்களுக்கும் அவங்க பையன் வாழ்க்கை முக்கியம் தானே?” என்ற உதயன், “விமலா ஆன்டி ரொம்பவே பிராக்டிகல். அவங்ககிட்ட பேசணும். புரிஞ்சிப்பாங்க” என்றான்.

“எல்லாம் நல்லதா நடந்தா சந்தோஷம்” என்ற கஜமுகன், “முதலில் நான் பேசறேன்” என்றார்.

ராகவனுக்கு அழைத்த கஜமுகன், எதிர்ப்பக்கம் எடுப்பதற்காகக் காத்திருக்க,

“பேசிட்டியா அஷ்மிதா?” என்று அஷ்மிக்கு குறுந்தகவல் அனுப்பினான் உதயன்.

“அச்சோ உதய்…” என்று அதற்கு மேல் என்ன தட்டச்சு செய்வதென்று வார்த்தைக்கு தடுமாற அப்படியே அனுப்பி வைத்தாள்.

கஜமுகன் ராகவனிடம் பேசிக் கொண்டிருக்க, அனைவரின் பார்வையும் அவர் மீதே. கவனித்த உதயன், சற்று நகர்ந்து வந்து அவளுக்கு அழைத்துவிட்டான்.

நான்கு வருடத்தில் ஒருமுறை கூட அழைக்காதவன், ஒற்றை நாளில் மூன்று முறை அழைத்துவிட்டான். காதல் மனதுக்கு அவனாக காரணம் தேடிக்கொண்டு.

“அஷ்மிதா.”

“நீங்க எப்படி சொன்னீங்க? எனக்கு பேசவே வரமாட்டேங்குது” என்றாள்.

அவள் வெகுவாகத் தடுமாறிக் கொண்டிருக்கிறாள் என்பது அவளின் குரல் நடுக்கத்திலே தெரிந்தது. தயக்கம் கொள்கிறாள். பெற்றோரிடம் காதலை சொல்வது எளிதல்லவே! சகஜமாக்க எண்ணினான்.

“அஷ்மிதாவுக்கு பேச வரலையா? நான் நம்பணுமா?” என்ற உதயன், “பிரணவ்வை அந்த அதட்டு அதட்டுற. பேச வரலன்னா எப்படி நம்புறது?” எனக் கேட்டான்.

“நிஜமாவே லவ் பண்றேன் சொல்ல தயக்கமா இருக்கு உதய்.”

உதயன் எதுவும் பேசவில்லை. இதில் என்ன தயக்கம் என்று தான் நினைத்தான். அவள் பக்கம் தடுமாற்றம் இருக்குமென்று நினைத்தானே தவிர, இவ்வளவு அச்சப்படுவாள் என்று எண்ணவில்லை.

எதுவாக இருந்தாலும் அவளாகவே சொல்லட்டுமென்று மௌனம் காத்தான்.

“உதய்.”

‘சும்மா கூப்பிட்டு மனுஷனை கரைச்சிடுவா!’ உள்ளுக்குள் அவளின் அழைப்பிற்கே அவஸ்தையை உணர்ந்தான்.

“ம்ம்…”

“உங்களுக்கு என்னைத் தெரியுமா?”

ஏன் இந்தக் கேள்வியெனை தெரியாத போதும் பதில் வழங்கினான்.

“தெரியுமே! செவன் இயர்ஸ் முன்ன பர்ஸ்ட் டைம் பார்த்தேன். அதுக்கு அப்புறம் பட்டுவோட அப்பப்போ பார்த்திருக்கேன். நடுவுல வன் இயர் சுத்தமா உன்னை பார்க்கல. லாஸ்ட் டூ இயர்ஸா பத்து நாளுக்கு ஒருமுறை, இல்லைன்னா மாசத்துக்கு நாலு முறைன்னு பார்த்திட்டு இருக்கேன். அப்புறம் எப்படி தெரியாம இருக்கும்” என்றான்.

உதயன் சொல்லியதை வைத்து, அவனை தான் பார்க்கச் சென்ற எல்லா நாளும் அவன் தன்னை கவனித்திருக்கிறான் என்பதில் அதிர்ந்தாள்.

“என்ன சைலண்ட்?”, உதயன்.

“அப்போ நான் வர எல்லா நாளும் நீங்களும் என்னை பார்த்திருக்கீங்க.”

“ஆமா.”

“நான் மறைஞ்சிருந்து தானே பார்ப்பேன்.” சந்தேகமாக வினவினாள்.

“நம்ம பிளேசில் ஒவ்வொரு இடுக்கிலும் காமிரா இருக்கு.”

அஷ்மிதாவின் விழிகள் அகல விரிந்தன.

“காமிராவை நீ கவனிச்சது இல்லையா?”

“இல்லையே” என்ற அஷ்மிதா, “எனக்கு உங்களை கவனிச்சு பார்க்கவே வர நேரம் போதாது. இதுல அதெல்லாம் எங்க நோட் பண்றது” என்று மெல்லொலியில் முணகிட, உதயனுக்கு நன்கு கேட்டு அவனது இதழ்களை நீண்டு விரியச் செய்தது.

“ஆஹான்…!”

“என்ன ஆஹான்?” என்றவள், “டைவர்ட் பண்ணாதீங்க” என்றாள்.

“யாரு… நானா? சரியாப்போச்சு” என்ற உதயன், “நீ என்ன சொல்லணும் டைரக்டா சொல்லு” என்றான்.

சட்டென்று ஆழ்ந்த அமைதி அவளிடம். மூச்சினை இழுத்து அவள் வெளியேற்றுவது காற்றின் ஓசையாக அவனால் அவதானிக்க முடிந்தது.

“அம்மா, அப்பா என்னோட… ம்ப்ச், உதய்.” சொல்ல முடியாது திணறினாள். மூச்சடைக்க, கண்கள் சடுதியில் கலங்கிவிட்டிருந்தது.

“அஷ்மிதா.” அவளின் குரல் பேதம் வைத்தே கண்டுகொண்டவனாக, அழைப்பைத் துண்டித்து காணொளி அழைப்பு விடுத்தான்.

காதலை உணர்ந்த பின்னர் முதன் முதல் அவளின் முகம் காண்கிறான். அலுவலகம் செல்ல கிளம்பியிருந்தவள், உதயனின் அழைப்பிற்கு பின் செல்லாது, கிளம்பியத் தோற்றத்திலே நின்றிருந்தாள். நேர்த்தியாக இருந்தபோதும்… கண்கள் கலங்கி, முகம் கசங்கி, அதீத சோகத்தில் காட்சியளித்தாள்.

அத்தோற்றம் உதயனின் நெஞ்சம் பிசைந்தது.

“அஷ்மிதா.”

அவனது விளிப்பில் முகம் பார்த்து முயன்று புன்னகைக்கச் செய்தாள். இமைகள் நடுங்க விழிகள் இரண்டும் நீர் நிறைந்து சிவந்திருந்தது.

கீழ் இமை இழை நுனியில் பனித்துளியாய் பளபளத்த துளி நீர் கன்னம் வழியத் தயாராக இருக்க…

“தவிப்பாகுதுடி. என்னன்னு சொல்லு” எனக் கேட்டான். கருவிழிகள் அலைபாய்ந்திட. இதயம் ஓசையின்றி பந்தாட. கவலைகள் படிந்த அவளின் முகம் அவனை சில்லாக உடையச் செய்தது.
_________________________

பிரணவ் அழைத்திட, திரையையே வெறித்திருந்தாள் நனியிதழ்.

எடுக்க மனம் உந்தித் தள்ளியபோதும் அவனின் மீது கோபம், அவளின் மூக்கின் நுனி நின்றது.

அவனுக்கும் தன்மீது விருப்பமுள்ளதென்று கல்லூரி நாட்களில் அவள் உணர்ந்தது தான். அந்த திடத்தில் தான், இனி அவனை பார்ப்பதே அரிதாகிவிடும் என்ற நிலையில் அவனிடம் தன் மனதை சொல்லிட நினைத்து பக்கம் சென்றாள்.

ஆனால் அவன் சொல்லி அவள் கேட்க நேர்ந்தது… அவளது காதலை சொல்ல முடியாது தடுத்திட. இன்று வரை சொல்லாது இருக்கின்றாள்.

அன்றைய அவனின் வார்த்தைகள், அவனுக்கும் தன்மீது காதல் உள்ளதென்று அவளின் எண்ணத்தை தகர்த்திருந்தது. அவன்மீது காதல் கொண்ட கண்களுக்கு அவனும் தன்னை விரும்புகிறான் எனும் கற்பனையை மனம் சாதகமாக எண்ணிக்கொண்டது என நினைத்துக்கொண்டாள்.

ஆனால் இன்று ஆர்யன் சொல்லியதை வைத்து, தன்னுடைய மனமும் கண்களும் பொய் சொல்லவில்லை. அவனுக்கும் தன்மீது நேசமுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டவளுக்கு அவனாக கேட்ட பிடித்தமின்மையை மீறி மீண்டும் காதலை காட்டிட அவளின் மனசாட்சி இடமளிக்கவில்லை. சிறு ஈகோ என்றும் சொல்லலாம். இல்லையா, இத்தனை நாட்கள் வலியோடு சுமந்த அவன் மீதான காதலின் சுயமரியாதை என்றும் சொல்லலாம். கேட்டுப்பெற வேண்டிய ஒன்றில்லையே இந்த காதல்.

இரு உள்ளங்கள் இணைந்த பிறகு, அங்கு வார்த்தை மொழிகள் தேவையில்லை. பார்வை சங்கமம் போதுமே! நீ நானென உணர நிழல் தடம் போதும். அதையெல்லாம் இருவரும் சரியாகத்தான் புரிந்து உணர்ந்து சொல்லிக்கொள்ளா நேசத்தில் இன்பம் சுமந்து நாட்களை கடத்தியிருந்தனர். இறுதிநாள் பார்வையின் உண்மையான காட்சி புலப்படாது இன்று வரை அவர்களின் காதலுக்கு வலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அழைப்பு முழுதாக முடிய, பெரும் மூச்சொடு அருகில் கீழே கடல்மணலில் அலைபேசியை வைத்தாள்.

குறுந்தகவல் வந்ததற்கான அறிவிப்பு ஒலித்தது.

“வேணும் நினைக்கும் போதெல்லாம் வரல. இப்போ வேண்டாம் தோணுது. எதுக்கு வரணும்?”

வேண்டும் என்பது தூரமும், வேண்டாம் என்பதை கையில் வைத்தும் வதைக்க வைப்பது தானே காலத்தின் நியதி.

நனியிதழும் அதில் சிக்கி சுழல்கிறாள்.

அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்…

குரல் பதிவு அனுப்பியிருந்தான் பிரணவ்.

“நான் மீட் பண்ணனும் சொன்னேன்” என்று தடித்து விழுந்த குரலைத் தொடர்ந்து, “கால் பண்ணா அட்டென்ட் பண்ணனும் இதழ்” என்றிருந்தான்.

‘இன்னமும் இந்த அதட்டல் மோட் மட்டும் மாறல.’ காற்றினை இதழ் குவித்து ஊதினாள்.

நனியிதழ் அழைப்பை ஏற்கவில்லை என்றதும், பிரணவ்விடம் கோபம்.

அந்த கோபத்திற்கான காரணம்,

இருவரும் நேசம் கொண்டும், தவறான புரிதல் ஒன்றால் காதலாய் திளைக்க வேண்டிய அழகிய நாட்களை காய்ந்த சருகின் தடமாய் அல்லவா நகர்த்தியிருக்கின்றனர். அந்த கோபமே இப்போது அவனுள் அதீதமாய்.

பார்த்த முதல் பார்வையிலிருந்தே அவள் மீது கொள்ளை காதல் அவனுக்கு. காட்டுவதில் தவறிப்போனான்.

அன்றைய தவறுதலுக்கான காரணத்தை சில நிமிடங்களுக்கு முன் அறிந்திருந்தவனின் மனம்… வலியா? அது நீங்கிய நிம்மதியா? தெரியாத உணர்வில் தன்னவளிடம் மொத்தக் காதலையும் கொட்டிக் கவிழ்த்திட துடித்திட, அவனவளோ இத்தனை நாள் கொண்ட அன்பிற்கும் சேர்த்து அலட்சியம் காட்டினாள்.

 

என் ஆயுள் நீயே 28

உதயன் அஷ்மிதாவை பிடித்திருக்கிறது. பேசுங்க என்று சொல்லிச் சென்றதுமே கஜமுகன் ராகவனுக்கு அழைத்து பேசி விஷயத்தை மேலோட்டமாக சொல்லியிருந்தார்.

உதயனின் விருப்பமென்று சொல்லாது, “நம்ம குடும்பம் பந்தத்தில் சேரனும் பிராப்த்தம் இருக்கும் போல. உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்குல” என்ற கஜமுகன், “எங்க பையனுக்கு பொண்ணு பார்க்கிறோம். உங்களுக்கு விருப்பமிருந்தா மேற்கொண்டு பேசுவோம். முந்தைய நிகழ்வை இதில் சேர்க்க வேண்டாம். நீங்க உங்க வீட்டில் கலந்து பேசி கூப்பிடுங்க. எங்களுக்கு நாளைக்கே பொண்ணை நேரில் வந்து பார்த்திட்டால் தேவலாம் தோணுது” என்றிருந்தார்.

ராகவனுக்கும் நல்ல குடும்பத்துடன் உறவாக முடியவில்லையென்று வருத்தம் இருந்தது. அது இப்படி மீண்டும் ஒரு வழியில் வர பிடித்துகொள்ளவே நினைத்தார்.

“கண்டிப்பா நல்ல விஷயமா சொல்றேன் கஜா” என்று வைத்த ராகவன் துள்ளலோடு தன் மகன் மற்றும் மருமகளை தேடிச் செல்ல ஜெயந்தன் அலுவலகம் சென்றிருந்தார். விமலா மட்டும் வீட்டில் சமையல் வேலைக்கு உதவியாக இருக்கும் மரிக்கொழுந்துவிடம் மதிய உணவிற்கு கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்.

பணியாள் முன்பு பேச முடியாது, “வேலை முடிந்ததும் சொல்லும்மா. கொஞ்சம் பேசணும்” என்றார்.

யோசனையாக அவரைப் பார்த்த விமலா, வேலைகளை முடித்துவிட்டு வர, மீண்டும் கஜமுகனிடமிருந்து ராகவனுக்கு அழைப்பு வந்தது.

“சொல்லுங்க கஜா” என்ற ராகவன், “இன்னும் வீட்டில் பேசல. இப்போ தான் மருமக்கிட்ட பேசலான்னு உட்கார்ந்தேன்” என்றார்.

“சரிங்க ராகவன்” என்ற கஜா, “நானே பேசுறனே” என்றார்.

“தாராளமா” என்ற ராகவன், “பிரணவ்வுக்கு பொண்ணு பார்க்க போயிருந்தோமே… அந்த வீட்டு பெரியவர் பேசணுங்கிறார்” என்று விமலாவிடம் அலைபேசியை நீட்டினார்.

“எதுக்கு மாமா?” என்று சத்தமின்றி சைகையால் வினவிய விமலா, “நல்ல விஷயம் தான்” என்று ராகவன் உதடைசைக்க, விமலாவுக்கு ‘நனியிதழ், பிரணவ் காதல் தெரிந்திருக்குமோ? அதுகுறித்து பேச இருக்குமோ?’ என சட்டென்று முகத்தில் தோன்றிவிட்ட அதீத மகிழ்வுடன், அலைபேசியை காதில் வைத்து, “வணக்கம். நல்லாயிருக்கீங்களா?” என்று முதல்கட்ட விசாரிப்புகள் முடித்து, “சொல்லுங்க” என்றிருந்தார்.
___________________________

பிரணவ்வின் குரலில் அவளிடம் மட்டும் அவன் காட்டும் வழமையான அதட்டல்.

‘எப்பவும் அதட்டல்.’ மனதோடு முணகியவள், “நீங்க பேசினா நாங்க பேசணுமா?” என வாய்விட்டு, அவனது முகப்பு படம் பார்த்து வினவ, மீண்டுமொரு குரல் பதிவு வந்து குதித்தது.

“அகெய்ன் கால் பண்ணுவேன். அட்டென்ட் பண்ணனும்” என்றிருந்தது.

“மிரட்டுறாங்க.” உதடு சுளித்தாள்.

மீண்டும் தகவல் வந்து விழுந்தது.

“அட்டென்ட் பண்ணக்கூடாது நினைக்காத… அடுத்த டூ ஹவர்சில் உன் வீட்டுக்கு வந்து நிப்பேன்.”

‘ம்க்கும் வந்துட்டாலும்.’ அலட்சியமாக நினைத்த போது, இம்முறை அலைபேசி தாங்கி வந்த பிரணவ்வின் அழைப்பை இறுதி ஒலியில் செவி மடுத்தாள்.

“மேடம் ரொம்ப பண்றீங்க?” எடுத்ததும் அவனது பேச்சில் அவளுக்கு சுர்ரென்று பொங்கியது.

ஆனாலும் அவன் தன்னிடம் எப்போதும் அதட்டல் தானே என்று புறம் ஒதுக்கினாள்.

அன்று பெண் பார்க்க வந்தன்று மட்டுமே அவளிடம் அவன் அமைதியாக பேசிச்சென்றது. அதுவும் இனி அவளிடம் பேசிட வாழ்வில் வாய்ப்பேயில்லை என்பதால் அந்த மென்மையைக் காட்டியிருந்தான்.

நடனத்திற்காக முதல் முறை நனியிதழ் பிரணவ்விடம் பேசிட, அதிலெல்லாம் அவளிடம் சிறு தயக்கமும் பதட்டமும் அப்பட்டமாக வெளிப்படும். அந்த பட்டமும், தயக்கமும் தன்னிடம் மட்டுமே என சில சந்திப்புகளில் கண்டு கொண்டவனுக்கு சுவாரஸ்யமாக இருந்திட, அவளிடம் அதட்டல் பேச்சினையே வழமையாக்கியிருந்தான். அதில் அதீத உரிமையையும் காட்டினான்.

இன்றும் அவனின் அதட்டலில் அன்றைய உரிமை கொட்டிக் கிடந்தது.

“என்ன பேசணும் நீங்க? பேச வேண்டியதை பேசுங்க.” சத்தமில்லை, ஆனால் அவனிடம் தடையின்றி பேசினாள்.

“பாருடா” என்று வியப்பைக் காட்டிய பிரணவ், “நல்லா பேச வருதே” என்றான்.

“ஏன்… எனக்கென்ன பேச, பயமா?” என்றவளின் பொய்யான திடம், அவளின் குரல் பிசிறில் அவனால் கண்டுகொள்ள முடிந்தது.

பெண் பார்க்க வந்த அன்றும் அவனிடம் இயல்பு மாறாது, பதட்டத்தோடு புடவை தலைப்பை இழுத்துப் பிடித்து, விரல்கள் குவித்து அவள் நின்றிருந்த தோற்றம் நினைவு வந்து அவனை மென்மையாக்கியது. இதழில் புன்னகைக் கூட வந்தமர்ந்தது.

“என்கிட்ட நீ நீயா இரு இதழ்” என்றான்.

“நான் ஏன் இருக்கணும்? நமக்குள்ள என்னயிருக்கு? எதுவுமில்லை. பிடிக்கல சொல்ல சொன்னீங்க தானே? சொல்லிட்டேன் தானா. அவ்ளோதான்” என்றவள், “வைக்கட்டுமா?” எனக் கேட்டாள்.

“பிடிக்கலனன்னு சொல்லலையே நீ?” என்றான்.

“ஹான்…”

“நான் சொன்னதை நீ சொல்லல தானே?”

“இப்போ அதுக்கு என்ன? எப்பவும் செட் ஆகாது சொன்னேன் தானே?”

“அப்படியா?”

“ஆமா!”

“சரி… மீட் பண்ணனுமே.”

“வேண்டாம்.”

“எனக்கு வேணும்.”

“எனக்கு வேண்டாம்.”

“நான் வேணாமா?” பிரணவ் ஆழ்ந்த குரலில் கேட்க, நொடி நேரத் தடுமாற்றம் அவளுள். சட்டென்று கண்ணீர் கன்னம் இறங்கியது.

“சொல்லுடி… நான் வேணாமா?” மீண்டும் கேட்டான்.

“வேண்டாம். உங்க மேல லவ் வந்ததிலிருந்தே பெயின் மட்டும் தான். இனியும் இந்த பெயின் எனக்கு வேண்டாம்” என்றாள்.

அவள் வார்த்தையின் வலி அவனுள் அழுத்தமாக இறங்கியது. கண்களை மூடித் திறந்தான்.

“அப்போ நீயும் என்னை லவ் பண்றன்னு ஒத்துக்கிற ரைட்?” என்றான்.

“இல்லை… பண்றேன் இல்லை. பண்ணேன். பாஸ்ட்… பாஸ்ட்…” என்று பற்களைக் கடித்தபடிக் கூறினாள்.

“நேர்ல பேசலாம் இதழ்!”

“ஃபோன்ல பேசவே எனக்கு மூச்சு முட்டுது. நேர்ல கண்டிப்பா முடியாது. இதோட நான் டாட் வைக்கிறேன். எல்லாத்துக்கும். இத்தனை வருஷம் நான் வேணான்னு இருந்தீங்க தானே? இனி எனக்கு நீங்க வேணாம்” என்றாள். வேண்டாம் என்பதை அத்தனை உறுதியாக மொழிந்திருந்தாள்.

“ஹேய்… என்னடி இப்போ உனக்கு? ஓவரா பன்ற? நான் உன்னை லவ் பண்றேன். இப்போ இல்லை, காலேஜில் உன்னை பர்ஸ்ட் டே பார்த்ததிலிருந்தே லவ் பண்றேன். எனக்கு நீ வேணும். கல்யாணம் பண்ணனும். அடுத்து நமக்குள்ள நடக்க வேண்டியது நடக்கணும். உன்கிட்ட தான் தெரிஞ்சிக்காணும் அதெல்லாம். நம்ம குழந்தை உனக்குள்ள தான் வளரணும். போதுமா? அவ்ளோதான்” என்று படபடவென பேசிய போதும், அதிலும் சிறு அதட்டலே வெளிப்பட்டது.

வழக்கமான அவனின் அதட்டல் தான். ஆனால் நனியின் முகம் சுண்டிவிட்டது.

“என்ன நீங்க மிரட்டுறீங்க?”

“ஆமாண்டி… அப்படித்தான் மிரட்டுவேன். என்ன பண்ணுவ? ஹான்…” எனக் கேட்டவன், “என்ன உன் அண்ணன்களிடம் சொல்லுவியா? சொல்லு. நானும் சொல்றேன். உங்க தங்கச்சி என்னை லவ் பண்ணி ஏமாத்திட்டான்னு சொல்றேன். ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு ஏமாத்திட்டான்னு சொல்றேன்” என்றான். அவள் வேண்டாம் என்கிற கோபம். என்ன பேசுகிறோமென்று தெரியாது, பல வருடம் அழுத்தி வைத்ததையெல்லாம் கொட்டினான்.

“ஹான்… அப்படியே சொல்லுங்களேன்… குழந்தை இருக்கு. மறைச்சி ஏமாத்திட்டான்னு” என்றவள் கோபத்தில் புசுபுசுவென மூச்சினை வெளியிட்டாள்.

அவள் சொல்லியதில் அவனது விழிகள் விரிய, அவனிடம் கள்ளப்புன்னகை. குறும்பாய் அவளிடம் வெளிப்பட்டது.

“ஆமா சொல்லுவேன். ஒன்னு இல்லை… ரெண்டு, மூணு…” என இழுத்து, “நாலு இருக்கு சொல்லுவேன்” என்றான்.

“ஏன் அவ்ளோ கம்மியா சொல்றீங்க? பத்து இருக்குன்னு சொல்லுங்களேன்” என்று அவளும் கடுப்பின் உச்சத்தில் பொருள் புரியாது அவனுடன் வார்த்தையால் மல்லுக் கட்டினாள்.

இருவருமே தங்களை அறியாது, இத்தனை காலம் மனதோடு பொத்தி வைத்த நேசத்தை, கனவில் வாழும் வாழ்வை வடிவம் கொண்டு பேசினர்.

ஆரம்பத்தில் அவள் தன்னை வேண்டாமென்று பிடிவாதமாக சொல்லிய கோபத்தில் பேசிய பிரணவ், அவள் அவனுக்கு ஈடாய் பேசவும் நிதானத்திற்கு வந்திருந்தான்.

அவளின் வார்த்தைகளை அகம் நுழைத்து ரசித்தான்.

இதமாய் பதமாய் நெஞ்சம் விரவும் காதலை அவளின் கோபத்திலும் உள்வாங்கினான்.

“சொல்ல ஆசை தான். ஆனால் ஒன்னுக்கே வழியில்லையே. எங்கிருந்து சொல்ல” என்ற பிரணவ், “அதுக்கு முதலில் என்கிட்ட வரணும் நீ” என்றான்.

“வர மாட்டேன். முடியாது” என்ற நனியிதழ், உதயன் அழைக்கவே, “வன் செக்” என்று அவனை நிலுவையில் வைத்திட்டு, உதயனின் அழைப்பை ஏற்று அவன் பேசும் முன்பே… “வரேன் செல்வா” எனக்கூறி வைத்து, பிரணவ்வின் இணைப்பில் வந்தாள்.

“நான் வைக்கிறேன். வீட்டுக்குப் போகணும்” என்றாள்.

“சரி போ” என்றான். பட்டென்று.

அவளுக்குத்தான் வைக்க முடியாத இம்சை.

வாய்விட்டு கூறியிருந்தாள்.

“இம்சை.”

“நிறையவே பண்ணனும் ஆசை” என்ற பிரணவ்வின் குரலில் ஏகத்திற்கும் தவிப்புகள் நிறைந்திருந்தன.

“வேண்டாம். எதுவும் வேண்டாம்” என்றவள் உடைந்திருந்தாள்.

“கிவ் மீ வன் சான்ஸ் இதழ்” என்று பிரணவ், மொத்தமாக இறங்கி வந்திருந்தான்.

“ரீசன்ஸ் அப்படியே தான் இருக்கு” என்றாள். இம்முறை அவளின் பழைய திடம் மீண்டிருந்தது.

“அதுக்கு பேசணும். மீட் பண்ணனும்” என்றான்.

“நீங்க எனக்கு வேணாம் முடிவு செய்து திரீ டேஸ் ஆகுது. என்னை விட்டுடுங்க” என்றாள்.

“அப்புறம் எதுக்குடி நாலு வருஷம் வேணும்னு வெயிட் பண்ண?” என்று கத்திய பிரணவ், “வீம்புக்கு பண்ணாத இதழ்” என்றான்.

“பிடிக்கல சொல்ல சொன்னீங்க தானே? சொல்லிட்டேன். முடிஞ்சுது. என்ன என் மேல் திடீர் லவ்? முடிஞ்சுது முடிஞ்சதாவே இருக்கட்டும்” என்றவள், பட்டென்று வைத்திருந்தாள்.

“ராட்சசி… வேணும்னு பன்றா” என்று பற்களைக் கடித்த பிரணவ், “செல்வா காலில் விழுந்திட வேண்டியது தான்” என்று மீசை துடிக்க சன்னமாக சிரித்தான்.

இங்கு இணைப்பைத் துண்டித்திருந்த நனியிதழ், “போ… போ… நீ எனக்கு வேணாம்” என்று அருகில் இல்லாதவனிடம் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

அவனுக்காக அவள் பார்த்து பார்த்து காத்திருக்க, அவனோ பிடிக்கல என்று சொல்ல சொல்லிய கோபம். காதல் இருந்தும் அவ்வாறு சொல்ல சொல்லிய வருத்தம். இப்போ பேசுவதை அப்போ பேசியிருக்கலாமே எனும் ஆதங்கம். அவளால் உடனடியாக நிமிடத்தில் மனதை சரியென்று ஆட்டுவிக்க முடியவில்லை.

இதையும் தன் இதயம் இயல்பாய் ஏற்கட்டும் என்று அதன் கட்டுபாட்டில் தன்னை முழுதாய் ஒப்படைத்துவிட்டாள். காதலை மனம் ஏற்றுக் கொண்டதைப் போல. சொல்ல முடியா தவிப்பை தனக்குள் நிறைத்துக் கொண்டத்தைப் போல. காத்திருப்பில் கட்டுண்டு இருந்ததைப்போல.

கண்ணில் நீர் திரண்டு உருள, ஒற்றை துளி கடல் அன்னையின் மடி சொட்டியது. பெரும் அலை ஒன்று அவள் உட்கார்ந்திருந்த இடம் வரை நனைத்து அவளின் உப்பு நீரை தனக்குள் கரைத்து விட்டதை அறியாது…

“லவ் யூ பிரணவ்” என்று இதழ் பிரித்து மொழிந்தாள். என்றும் அவ்வரியில் கனம் ஏறும் அவளின் நெஞ்சம் இன்று இதம் சுகித்தது.

(நாளை பதிவு இல்லை.)

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
42
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்