Loading

என் ஆயுள் நீயே 25

உதயனுக்கு என்ன பேச வேண்டுமென்கிற தயக்கமோ தடுமாற்றமோ எதுவுமில்லை. பேச வேண்டியதை தெளிவாக மனதில் வரிசை படுத்தி வைத்திருக்கிறான்.

குமரி ஆரம்பிப்பதற்காக மட்டுமே காத்திருக்கிறான்.

முதல் முறை உதயனின் தவிப்பான முகம் பார்த்ததாலோ என்னவோ அனைவரும் அவனின் முகம் பார்த்தே ஆளுக்கொரு இடத்தில் நின்றிருக்க, குமரியும் மௌனமாக இருந்தார்.

அவருக்கே உதயன் சோர்ந்த முகம் என்னவோ போலிருக்க, தானும் பேசி இப்போது அவனது மனதை வருந்தச் செய்திட வேண்டாமென நினைத்தார்.

அவராக பேச்சினை ஆரம்பிக்கப் போவதில்லை என்றறிந்து, தானே துவங்கினான் உதயன்.

தன் தம்பியை ஒரு பார்வை பார்த்த உதயன், “என்ன அத்தை பேசணும்?” எனக் கேட்டான்.

தயங்கிய குமரி, “இப்போ பேசுறது சரி வருமா தெரியலங்க” என்றார்.

“இப்போவே எல்லாம் முடுச்சிடலாம் அத்தை. ஒரு முடிவுக்கு வந்துட்டா உங்களுக்கும் நிம்மதிதானே!” என்றான்.

“ம்ம்…” என்ற குமரி, “நீங்க எப்போ தான் கல்யாணம் பண்ணலாம் இருக்கீங்க தம்பி?” எனக் கேட்டார்.

உதயன் நீங்க கேட்க வேண்டியதையெல்லாம் கேட்டு முடியுங்கள் எனும் பாவனைக் காட்டிட, குமரி தொடர்ந்தார்.

“தனுக்கு மட்டுமில்ல உங்களுக்கும் வயசாவுதே! அடுத்து இன்பா இருக்கான். முதலில் நனிக்கு பண்ணனும் நினைக்கிறது சரிதான். அதுக்கு தான் அவள் ஒத்து வரமாட்டேங்கிறாளே! அடுத்து என்னன்னு பார்க்கணுமே” என்ற குமரி… உதயனின் விழிகள் காட்டிய கூர்மையில், “நனிக்கு இதுதான் மாப்பிள்ளைன்னு நீங்க பார்த்து அழுத்தமா சொன்னா அவள் என்ன வேணாம்ன்னா சொல்லப்போறாள். முடிவு பண்ணி நாமலா செய்ய வேண்டியது தான்” என்றார்.

“இப்போ உங்களுக்கு என்ன அவசரம்?”

தெரிந்துகொண்டே கேட்கிறான். கடுப்பாக வந்தது. ஆனால் அவனிடம் காட்டிட முடியாதே!

“இப்படிக் கேட்டா என்ன சொல்ல?” என்ற குமரி, “நனியை பார்த்தா தனு வாழ்க்கை வீணாகுதே! அவளும் இந்த வீட்டுப் பொண்ணு தானே?” என்றார்.

“தனுவும் இந்த வீட்டுப் பொண்ணு தான். யாரும் இல்லைன்னு சொல்லலையே” என்ற உதயன், “தனுவுக்கு கல்யாணம் நடக்கணும். அதுதானே உங்க கவலை?” என்று வினவினான்.

“ஆமாம் ப்பா…”

“ம்ம்… ஏற்பாடு பண்ணிடலாம்” என்று நிறுத்திய உதயன், “மாப்பிள்ளை இன்பா” என்றான்.

“உதயா!” குமரியிடம் அப்படியொரு அதிர்வு.

லட்சுமி பாட்டியை தவிர்த்து மற்ற பெண்கள் இருவருக்கும் இன்பா, தனு விஷயம் தெரியுமென்பதால் நடப்பதை பார்த்தபடி எவ்வித முகபாவனையும் காட்டாது அமைதியாக நின்றனர் என்றால், மூத்த ஆண்கள் மூவரும், உதயனின் இந்த முடிவுக்கு பின்னால் வலுவான காரணமிருக்குமென்று அமைதி காத்தனர். கஜமுகனே உதயன் சொல்லியதற்கு மறுப்பு எதுவும் கூறாதிருக்க, குமரி என்ன ஆட்டம் ஆடப் போகிறாளோ என்று லட்சுமி பாட்டி தான் பயந்து பார்த்தார்.

“என்ன அத்தை இன்பா உங்களுக்கு ஓகே தானே?” குமரிக்கு அதிர்வில் என்ன பேச வேண்டுமென்றே தெரியவில்லை.

“உதயா?”

“இன்பாவும் உங்க அண்ணன் மகன் தான் அத்தை. நம்ம வீட்டில், தொழிலில் எல்லாம் சம உரிமை அவனுக்கும் இருக்கே” என்றான்.

“ஆனால், நான் உங்களை…” எதுவும் சொல்ல முடியாது நிறுத்தினார் குமரி. எது சொன்னாலும் மற்றொரு அண்ணனான கஜேந்திரனை விட்டுக் கொடுத்ததுபோல ஆகிவிடுமே.

என்ன தான் உதயன் மருமகனாக வர வேண்டுமென்கிற ஆசை இருந்தாலும், அவரிடமும் அன்பு பாசம் உள்ளதே! தன் உறவுக்குள்ளே அவரால் வேற்றுமை பார்த்திட முடியவில்லை.

மனதில் எழும் ஆதங்கத்தை வெளிக்காட்டிடவும் முடியவில்லை.

“இத்தனை வருஷமா தனுவும் உங்களைத்தானே நினைச்சிட்டு” என்று அவர் முடிக்கும் முன்பு உதயன் கண் காட்டிட, “இத்தனை வருஷம் மாமா கல்யாணம் வேண்டாம் சொன்னதுக்கு நனி மட்டுமே காரணமில்லை. நானும் தான்” என்றாள் தன்யா.

“என்ன சொல்ற நீ?” உதயனிடம் காட்ட முடியாத மொத்த கோபத்தையும் மகளிடம் பார்வையில் காட்டினார் குமரி.

“நான் இன்பா மாமாவை விரும்புறேன்.”

“தனு…” குமரி அடிக்க கையை ஓங்கிட, “ம்மா” என்ற உதயனின் சத்தத்தில், தனுவிற்கு அருகில் நின்றிருந்த கங்கா குறுக்கே வந்து குமரியை தடுத்திருந்தார்.

“இதென்ன பழக்கம் குமரி? பெத்த பொண்ணை கை நீட்டி அடிக்கிறது. உன்னை நானும் உன் அம்மாவும் ஒத்த சொல்லு அதட்டி பேசியிருப்போமா?” என கடிந்தார் கஜமுகன்.

“பின்ன என்னப்பா, காதல்ன்னு எவ்ளோ தைரியமா சொல்றா?” என்று ஆத்திரம் கொண்டார் குமரி.

“அவ யாரோ ஒருத்தனை விரும்புறேன் சொல்லலையே குமரி?” இளங்கோவன் கேட்க, “அவள் இன்பாவை விரும்புறேன் சொன்னது தான் உன் ஆத்திரத்துக்கு காரணமா?” என சரியாக வினவினார்.

அவரின் அக்கேள்வியில், இதே அவள் உதயனை விரும்புகிறேன் என்று சொல்லியிருந்தால் இந்த ஆத்திரமும், கோபமும் வந்திருக்காது தானே என்ற மறை கேள்வி பொதிந்திருந்தது.

“என் பையனும் உங்க இன்னொரு அண்ணன் மகன் தான் அண்ணி. நான் கேட்டால் எனக்கு மருமகளா உங்க பொண்ணை அனுப்பி வைக்க மாட்டீங்களா?” காமாட்சி வார்த்தையால் கிடுக்கிப்பிடி போட்டார்.

குமரியே வாய் பேசிட முடியாது திணறி நின்றார்.

“தனு மட்டுமில்லை எனக்கும் கூட விருப்பம்” என்றான் இன்பா.

இன்பாவும் உடைத்துப் பேசிட, குமரியால் பதில் கொடுக்க முடியவில்லை. உதயாவுக்காக மற்றவர்களை வேறுபடுத்தி பார்க்கவும் அவரின் மனம் இடமளிக்கவில்லை.

அதுவரை அமைதியாக இருந்த கஜேந்திரன்,

“இதுக்கு மேல உன் ஆசை தான் முக்கியமா குமரி? நானும் உனக்கொரு அண்ணன் தான்” என்றார்.

அதில் குமரி பதறிவிட்டார்.

“அச்சோ அண்ணா, உதயன் தான் அவளுக்கு ஜோடின்னு பல வருஷமா கனவு கண்டுட்டேன். அது இல்லைங்கிறப்போ ஏமாத்தமா இருக்கு” என்று வேகமாக சொல்லிய குமரி, “உன்னாலே விட்டுக் கொடுக்க முடியலையே. நேசிக்கிற ரெண்டு மனசை எப்படி விட்டுக் கொடுக்க சொல்ல முடியும்?” எனக் கேட்டார் கஜேந்திரன்.

“இப்போ நான் என்ன பண்ணனும்?” ஒருவித உணர்வற்ற குரலில் கேட்டார் குமரி.

“நிறைஞ்ச மனசோட சந்தோஷமா அவங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கும் நீங்க சம்மதம் சொல்லுங்க” என்றான் உதயன்.

“அவங்க வரட்டும். பேசிட்டு சொல்றேன்.” இனி தன் விருப்பம் சபை ஏறாது எனத் தெரிந்தும், குமரி ஏமாற்றத்தில் வீம்பு காண்பித்தார். அதற்கு தன் கணவரை காரணம் காட்டினார்.

“நீ அப்படியே உன் புருஷனை கேட்டு தான் எல்லாம் செய்யுற பாரு.” லட்சுமி நொடித்தார்.

“மாமாக்கு முன்னவே தெரியும். சொல்லிட்டேன். நீங்க உங்க முடிவை மட்டும் சொல்லுங்க” என உதயன் கேட்க, “இனி என் ஆசைக்கு என்ன மதிப்பிருக்கு. நான் வேணாம் சொன்னாலும் நடக்கத்தானே போகுது. நானே சரி சொல்லி என் மரியாதையை காப்பாத்திக்கிறேன்” என்றார் குமரி. இருப்பினும் அவரின் ஏமாற்றம் கோபமாக உள்ளுக்குள் உருமாறிதான் இருந்தது.

அவர் எதோ ஆதாங்கத்தில் பேசுகிறார் என்று யாரும் அவரின் பேச்சினை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

“இப்ப மட்டும் என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்திடுமா என்ன?” என்று நீட்டி முழங்கினார்.

“என்ன சொல்ல வர இப்போ?” லட்சுமி பாட்டி வினவ, “மொத நனி மட்டும் தான் குறுக்க இருந்தாள். இப்போ இன்பாவுக்கு மூத்தவங்களுமில்ல இருக்காங்க” என்றார்.

“அந்த கவலை வேண்டாம் அத்தை” என்ற உதயன், “பொண்ணு பேரு அஷ்மிதா. பட்டுவை பொண்ணு பார்க்க வந்த பிரணவ்வோட தங்கச்சி. பேசுங்க தாத்தா” என்றான். கஜமுகனை பார்த்து.

“ஹோ… அப்போ என் பொண்ணுங்கிறதால தான் கல்யாணம் வேணாம் இருந்தீங்களா? நான் கூட தங்கச்சி பாசம் நினைச்சேன்” என்று ஒரு மாதிரி இழுத்து ராகம் போல் குமரி பேச, அவரின் அப்பேச்சு அவனின் பாசத்தையே எடைபோட்டு பார்ப்பது போலிருந்தது.

சட்டென்று கசங்கி சீரானான். தங்கைக்காக திருமணம் வேண்டாமென்று இருந்தாலும், அதில் முக்கிய காரணம் தனுவின் காதலுக்காகவும் தான். யாரையும் குறைத்து வைத்து முடிவுகள் எடுப்பவனில்லையே. அங்கு அவனின் பாசம் கேள்வியாக்கப்பட ஒருவித அழுத்தம் மனதில் சூழ்ந்தது. அனைத்தும் அவனின் உறவுகள். எதோ ஆதங்கத்தில் கேட்கத் தெரியாது கேட்கிறார். அழுத்தத்தில் அவனும் கோபத்தைக் காட்டினால், அங்கு விரிசல் உறவுகளுக்குள் தான். எளிதாக கட்டுக்குள் மனதை அடக்கி வைத்தான்.

“அச்சோ அம்மா. நான் இன்பா மாமாவை விரும்பும் போது மாமா எப்படி எனக்கு ஓகே சொல்லுவாங்க” என்று முன் வந்த தன்யாவை, “நீ பேசாதடி” என்று விரல் நீட்டி அடக்கினார்.

“எது நடக்கணுமோ அதுதான் நடக்கும். நீங்களோ நானோ ஆசைப்படுறோம் அப்படிங்கிறதுக்காக இங்க எல்லாம் நடக்கிறதில்லை” என்ற உதயன், “எனக்கு பிடிச்சிருக்கு. உங்க எல்லாருக்கும் ஓகேன்னா அவங்க வீட்டுல பேசுங்க” என்று மாடியேற அடி வைத்து நகர்ந்தான்.

எனக்கு பிடிச்சிருக்கு என்று உதயன் வெளிப்படையாகக் கேட்பது முதல்முறை. அப்பெண் யாராக இருந்தாலும் அவனுக்கு விருப்பமானது, அவனுடைய கரத்தில் சேர்த்திட வேண்டுமென்று அக்கணம் அனைவரும் ஒன்று போல் ஒருவரின் முகம் பார்த்து மற்றவர் நினைக்க,

“ஒரு நிமிஷம்” என்று குமரி, உதயனை நிறுத்தியிருந்தார்.

“அந்த பொண்ணு உங்க மனசில் இருந்ததால் தான் தனுவை…”

“அத்தை” என்று அழுத்தமாக உச்சரித்த உதயன், “முதல் முறையா இன்னைக்கு தான் அஷ்மிதாகிட்ட அஞ்சு நிமிஷமாவது நான் பேசியிருக்கேன் சொன்னா நம்புவீங்களா நீங்க?” எனக் கேட்டான்.

“அதெப்படிப்பா பார்த்து பேசவே செய்யாத பொண்ணு மேல விருப்பம்?”

“இப்போ உங்களுக்கு என்னத் தெரியணும்?”

“இங்கிருந்து திருச்செந்தூர் எப்படி கைக்கு எட்டுச்சு தெரியணும்” என்றார்.

உதயன் வார்த்தையை விட்டுவிடுவோமோ எனும் விளிம்பில் கை விரல்கள் குவித்து விறைத்து நின்றான்.

“இங்க யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம். நீங்க போங்க” என்று மகனின் முகம் பார்த்து இளங்கோவன் சொல்ல, “என்னண்ணா தப்பிக்க வைக்கிற மாதிரி இருக்கு. இதே தனுவே வெளியிருந்து ஒரு பையனை விரும்புறேன் சொல்லியிருந்தா இப்போ மாதிரி அமைதியா ஏத்துக்கிட்டு இருந்திருப்பீங்களா?” என்றார்.

“வெளி ஆளும், நம் கண் பார்த்து நாம் வளர்த்த நம்ம பிள்ளையும் ஒண்ணாடி?” லட்சுமி மகளின் குமட்டில் இடித்தார்.

“அப்போ சரி… அவங்க தங்கச்சிக்காக அந்தப் பையனை கூட்டிட்டு வந்தாங்களா? இல்லை இவங்களுக்காக, தங்கச்சிக்கு பையன் பார்த்தாங்களா?” என்றார்.

என்ன தான் மகளின் விருப்பத்திற்கு சரியென்றிருந்தாலும், அவரின் ஆசை நிறைவேறாத கோபம் அவரை அப்படியெல்லாம் பேச வைத்தது.

உதயன் நனியின் மீது கொண்டுள்ள பாசத்தை பகடையாக உருட்டினார் குமரி. அங்கு அவனது அன்பை கேள்வியாக்கினார்.

“எனக்காகன்னே வச்சிக்கோங்களேன்.” பட்டென்று சொல்லியிருந்தான்.

அவனின் அழுத்தமும், பொறுமையும் கூட ஓர் எல்லை வரை தான். இதற்கும் மேல் எப்படி அமைதியாக இருக்க முடியும்.

அவனின் நேரடியான அதிரடி பதிலில் குமரி தான் வாயடைத்துப் போனார்.

உதயனின் அலைப்பேசி ஒலித்தது. அழைத்தது அஷ்மிதா.

 

 

என் ஆயுள் நீயே 26

“அவங்க தங்கச்சிக்காக அந்தப் பையனை கூட்டிட்டு வந்தாங்களா? இல்லை இவங்களுக்காக, தங்கச்சிக்கு பையன் பார்த்தாங்களா?”

குமரி தன் ஏமாற்றத்தை தீர்த்துக்கொள்ள, தன்னுடைய மனதை பதம் பார்க்கிறோம் என்பதை உணராது வேண்டுமென பேசிக் கொண்டிருக்கிறார் என புரிந்த போதும், உதயனால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை.

அப்போதும் பொங்கும் கோபத்தை வெளிக்காட்டிடாது தான் பேச முயன்றான்.

“எனக்காகன்னே வச்சுக்கோங்க. ஆமாம் நான் விரும்புற பொண்ணை கட்டிக்கத்தான், பட்டுவுக்கு அவளோட அண்ணாவை பேசி முடிக்க நினைச்சேன் போதுமா?” என்று வெடித்து சிதறிய உதயன், “கேட்க வேறெதுவும் இருக்கா?” எனக் கேட்டு, “எனக்கு வேறெந்த விருப்பமும் இல்லங்கிற நிலையில் தனு இன்பாவை விரும்புறது தெரிஞ்சிருந்தால் அப்பவும் இந்த மாதிரி பேசியிருப்பீங்களா நீங்க?” என்றான்.

“நான் சொல்லாத முன் தனு, இன்பா விருப்பம் தெரிந்து ஏத்துக்கிட்டு அமைதியாதானே இருந்தீங்க?”

குமரியால் இதற்கு வாய் திறக்க முடியவில்லை.

அந்நேரம் தான் அஷ்மிதா உதயனுக்கு அழைத்தாள். சத்தம் கேட்கவே எடுத்து பார்த்து அலைபேசியை பையில் போட்டுக்கொண்டவன்,

“இப்போ உங்களுக்கு என்ன கோபம் அத்தை?” என்ற உதயன், “எனக்கோ, தனுவுக்கோ தனிப்பட்ட விருப்பம் இல்லைங்கிற சூழ்நிலையில் கூட அவளை கட்டிக்க நான் சம்மதம் சொல்லியிருக்க மாட்டேன். நனி, எழில் கூடத்தானே அவளும் வளர்ந்தாள். என்னால் எப்படி முடியும்?” எனக் கேட்டு, அதிர்ந்து நின்ற குமரியை கண்டுகொள்ளாது விடுவிடுவென சென்றுவிட்டான்.

ஒற்றை வரி குமரியின் மனதை சுழன்றடித்து விட்டான். இனி இது குறித்து ஒரு வார்த்தை அவரால் பேசிட முடியுமா?

தன் வார்த்தைகள் யாவும் தன்னையே திருப்பித் தாக்குவதைப் போல் உணர்ந்தவர், முற்றத்து தூணில் சாய்ந்து அமர்ந்தார்.

“இவருக்கு வேணும் தான்.” காமாட்சி முணுமுணுக்க…

“பிள்ளைங்க மனசு தான் முக்கியம் குமரி. அவங்க ஆசைப்பட்டது நடந்தால் தானே சந்தோஷமா இருப்பாங்க. அதில் தானே நம்ம சந்தோஷமும் அடங்கியிருக்கு” என்று கங்கா குமரியின் அருகில் அமர்ந்து கரம் பற்றிக் கூறினார்.

“ஆதங்கத்தில் பேசினாலும் தெரிஞ்சு தான் பேசினேன். மன்னிச்சிக்கோங்க” என்ற குமரி, “நான் தூக்கி வளர்த்த முதல் குழந்தை உதயா. அதிகம் ஆசைப்பட்டுட்டேன். அதுக்காக இன்பாவை விட்டுக்கொடுத்தோ, கீழவோ வச்சு பார்க்கல. என் பொண்ணு கண்ணு முன்ன நம்ம வீட்டுல வாழ்ந்தால் எனக்கு அதுவே போதும்” என்று கஜேந்திரனை பார்த்துக் கொண்டே சொல்லியவர், எழுந்து சென்றுவிட்டார்.

அறைக்குள் வந்த உதயனுக்கு தன்னைப்போல் அதீத அழுத்தம் உண்டாகியிருந்தது. குமரி அதிகம் பேசுவாரென்று அவன் எதிர்பார்த்தது தான். ஆனால் இந்தளவிற்கு வார்த்தைகளை விடுவாரென்று எண்ணவில்லை. தன்னைப்பற்றி தெரிந்தும் அவர் பேசிய பேச்சுக்கள் அவனையும் கோபம் கொள்ள வைத்திருந்தது. அந்த தாக்கத்திலே அஷ்மிக்கு அழைத்து பேசியவன், அவள் இப்போதே சொல்ல வேண்டுமா எனக் கேட்க, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான்.

“உதய்…”

“இங்க எல்லாரும் என்னை பெரியவனா பார்த்து, மரியாதை கொடுக்கிறேன்னு எட்ட நிக்க வச்சிருக்க ஃபீல். உன்கிட்ட தான் நான் நானா இருக்கணும். எனக்கு நீ வேணும். என் பக்கத்துல” என்ற உதயன், “உன் ஆசையும் புரியுது. சின்ன பிளே பண்ணுவோமா?” எனக் கேட்டான்.

“என்னது?”

“நாளைக்கு இங்கிருந்து வருவாங்க” என்று உதயன் சொல்ல,

“நீங்க வரமாட்டிங்களா?” என வேகமாகக் கேட்டிருந்தாள்.

மேல் பற்களால் கீழுதட்டை அழுந்த கடித்து மெல்ல விடுத்த உதயனின் கண்களில் அத்தனை வெட்கம். பேரழகின் உச்சம் தொட்டது அவனின் முகம்.

அவனின் அமைதியில் தான், தான் கேட்டதில் தனக்குள் அவனை பார்க்க வேண்டுமென்கிற ஆவலும் பொதிந்துள்ளது என்பது விளங்கி, அவனின் செயலை பிரதிபலித்து கண்கள் மூடி திறந்தாள்.

“உதய்…”

“வரணுமா?”

“பார்க்க வேணாமா?”

“பார்க்கலையா?”

“ரொம்ப நாளாச்சு!”

“ஆறு நாள் ரொம்ப நாளா?”

உதயன் கேட்டதில் அஷ்மிதாவின் உதடுகள் பிளந்து விழிகள் அகல விரிந்தன.

ஆறு நாட்களுக்கு முன்பு தான் அவனை பார்ப்பதற்காக அத்தீஸ்வரம், அவனது இறால் பண்ணை வரை வந்து சென்றிருந்தாள். அதனைத்தான் உதயன் குறிப்பிட்டான்.

“என்ன பதிலை காணோம்?” அவளின் தற்போதைய தோற்றத்தை அவதானித்து இளநகை பூத்தான்.

“உங்களுக்கு எப்படி?” அதிர்ச்சியோடு வினவினாள்.

“ஒரு பொண்ணு நம்மளையே சுத்தி வரும்போது உணர முடியாதா என்ன?” என்ற உதயன், “உன்னோட விருப்பம் நீ சொல்லலனாலும், எனக்கு உன்னால் தான் தெரிஞ்சது” என்றான்.

“எப்படி?”

“இப்போ சொல்ல முடியாது” என்ற உதயன், “சொல்லாமலே கட்டி இழுத்துட்ட. கட்டிக்கவும் போற” என்றான்.

அஷ்மிதாவின் பாத விரல்கள் தரை கவிழ்ந்தது. அவளின் கையில் அலைபேசி இறுக்கம் கொண்டது. அணிந்திருந்த ஸ்கர்ட்டில் மற்றொரு கை அழுத்தம் கொடுத்து பிடித்தது.

“உதய்…” நெஞ்சம் முட்டிய மூச்சுக்காற்றின் தவிப்பாய் ஒலித்தது அவளின் குரல்.

அவளின் இவ்வழைப்பில் மட்டும் அவனது இதயத்தில் மத்தள இசையும், இடியின் ஓசையும் ஒருங்கே எழும்புகிறது. அவனை தவிப்புக்குள்ளாக்குகிறது. விரும்பி உணர்ந்தான்.

“அஷ்மிதா!” அத்தனை கரகரப்பாக வெளிவந்த அவனது அழைப்பில் திக்குமுக்காடிப் போனாள்.

“பிளீஸ்…”, அஷ்மி.

தொண்டையை செருமி தன்னிலை மீட்டவன்,

“விஷயத்துக்கு வருவோமா?” என்றான்.

“ம்ம்… சொல்லுங்க.”

உதயன் சொல்ல அவள் சிறு அதிர்வோடு கேட்டுக்கொண்டாள்.

“இது அவங்களை கார்னர் பன்ற மாதிரி ஆகாதா?” எனக் கேட்டாள்.

“அப்படியே இருக்கட்டும். வேற வழியில்லை. சேர்த்து வைப்போம். அவங்க வாழ ஆரம்பிச்சிடுவாங்க. அவங்களுக்குள்ள இருக்க லவ் அடுத்த கட்டத்துக்கு அவங்களை நகர்த்திடும்?” என்றான்.

“புரியுது. கொஞ்சம் வெயிட் பண்ணலாமே?” என்றாள்.

“இனி பிரணவ்வே வந்து லவ் சொன்னாலும், பட்டு அவ்ளோ சீக்கிரம் அக்செப்ட் பண்ணமாட்டாள். ரெண்டு பேரும் தெளிவா பேசிக்காம எதுவும் சரியாகாது. அவங்க பேச வைக்கவே, அவங்களை ஒண்ணு சேர்க்க வேண்டியது அவசியம்” என்று இருக்கும் சூழலை உதயன் விளக்கமாக எடுத்து சொல்ல, அஷ்மிதாவுக்கும் அதுவே சரியெனப்பட ஒப்புக்கொண்டாள்.

“பேசிட்டு மெசேஜ் பண்ணு” என்றான்.

“கால் பண்ணா பேச மாட்டிங்களா?”

“பேசமாட்டேன் சொல்லவே இல்லையே!” மின்னலென அவனது ஒற்றை புருவம் ஏறி இறங்கியது.

“ஹான்… பேசிட்டாலும்.” உதடு சுளித்தாள்.

“ஏன் பேசலையா?”

“நிறைய பேசினீங்களே” என்ற அஷ்மிதா, “இந்த நாலு வருஷத்தில் நீங்களா எனக்கு மெசேஜ் பண்ணது திரீ டைம்ஸ். அதுவும் எனி அப்டேட்? இதுதான்” என்றாள்.

“அப்போ வேறென்ன பேசியிருக்கணும்?” எனக் கேட்டான். அவளின் ஏக்கங்கள் புரிந்த போதும். கள்வனாக.

“நத்திங்” என்ற அஷ்மியால் கேட்காமலும் இருக்க முடியவில்லை. அவனுக்கு அவளின் மனம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, எல்லாம் தெரிந்தும், தன்னை கவனித்தும் அவன் ஒன்றும் அறியாதவன் போலிருந்தது என்னவோ போலிருந்தது.

“என்னை தெரிஞ்சும் சைலண்ட்டா இருந்திருக்கீங்க?” என்றாள்.

“நீ சொன்னியா அஷ்மிதா?” அதீத எதிர்பார்ப்பு அவனது மொழியில் தென்பட்டதோ? அவளுக்கு அப்படித்தான் தோன்றியது.

“அது…” வெகுவாகத் தடுமாறினாள்.

“இப்பவும் நீ சொல்லல” என்றான்.

“உதய்…”

“சுருட்டாதடி” என்ற உதயன், “என் பக்கம் வா. கவனிச்சிக்கிறேன்” என்று வைத்துவிட்டான்.

அவனது தவிப்புகள் அவளிடம் கூடிப்போனது.

தன்னவளிடம் பேசிய இதத்தை முழுதாய் உள்வாங்கியவனாக கண்கள் மூடி அமர்ந்திருந்தான் உதயன்.

அஷ்மியின் காதல் தெரிந்த போதும், ஒருநாளும் காதல் கொண்டு அவளை நினைத்தது இல்லை. ஆனால் அவள் தான் தனக்கென்று அவளின் காதல் கொண்டே முடிவெடுத்த போதும், ஒரு நாளில் எப்படி இத்தனை தவிப்புகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள். அவனுக்கே தன்னைக் குறித்து அத்தனை ஆச்சரியம்.

அவள் மீது தனக்கும் நேசம் மனதோடு அமிழப்பட்டு இருந்திருக்கிறது. நானாக நினைத்திட இயல்பாகக் காட்டிக்கொள்கிறது என்பதை புரிந்துகொண்டான்.

எதையும் நேர்கொண்டு வெளிப்படையாக செய்து தான் பழக்கம். அதுவே அவனை காதலிலும் வெளிப்படையாக இருக்கச் செய்கிறது. அவனவளிடம் மட்டும் மற்றவர்கள் பார்க்காத உதயனை பார்க்க, நடக்க வைக்கிறது.

உதயன் அவளிடம் அதிகம் பேசுவதும் அவனுள் ஆச்சரியமே!

‘எட்ட நின்னே பக்கம் வரவச்சிட்டாள்.’ மென்மையாக முணுமுணுத்துக் கொண்டான்.

“பட்டுக்கிட்ட சொல்லணும்” என்றவனாக நனியிதழுக்கு அழைக்க, இன்பா அறைக்குள் வந்தான்.

உதயன் அலைபேசியை காதில் வைத்தவாறு நின்றிருக்க, இன்பா மெத்தையில் சென்று உம்மென்று அமர்ந்தான்.

“வரேன் செல்வா!”

அழைப்பை ஏற்றதும் தகவல் சொல்லியவளாக வைத்திருந்தாள்.

‘இப்போ என்னாச்சு?’ உதயன் தங்கையின் குரல் மாற்றத்திலேயே எதோ சரியில்லையெனக் கண்டுகொண்டான்.

‘வரட்டும் கேட்போம்.’ மனதில் நினைத்தவன் தம்பியின் அருகில் சென்று அமர்ந்தான்.

“அதான் எல்லாம் ஓகே ஆச்சே… அப்புறமும் ஏன் உம்முன்னு இருக்க?” இன்பாவின் தோளில் கரம் பதித்தான்.

“சொல்லவே இல்லை.”

“இதுதான் கோபமா?” என்ற உதயன், “உன் ஃப்ரண்ட் கிட்டவே இன்னைக்குதான் சொன்னேன். எனக்கே இன்னைக்குதான் புரிஞ்சிதுன்னும் சொல்லலாம்” என்றான். சிறு முறுவலோடு.

“எப்படி?”

“தெரியலடா… ஆனால் அவள் இங்க வந்து ரொம்ப நாளாகுது போல” என்று கண்கள் மூடி விரல்கள் குவித்து இதயப்பகுதியை மெல்லக் குத்தினான் உதயன்.

“வாவ் அண்ணா… ஃபிளஷ் ஆகுறீங்க நீங்க” என்று தன் அண்ணனின் முகம் காட்டிய ஜாலத்தில் ஆர்ப்பரித்த இன்பா, அவனை தோளோடு அணைத்துக் கட்டிக்கொண்டவனாக சாய்ந்தாடினான்.

“அடேய்… விடுடா” என்று சிரித்த உதயன், “இன்னும் பட்டுகிட்ட சொல்லல. என்ன சொல்லுவாள் தெரியல” என்றான்.

“என்ன சொல்லுவாங்க மேடம்?” என்று இழுத்த இன்பா, “எங்களை மாதிரி ஷாக் தான் ஆவாங்க பிளஸ் எங்களைவிட அதிக ஷாக் ஆகலாம். பொண்ணு அஷ்மின்னு தெரிஞ்சா” என்றான்.

“ம்ம்” என்ற உதயன், “அப்பா, தாத்தாகிட்ட கொஞ்சம் பேசணும் வா” என்று கீழே அழைத்துச் சென்றான்.

குமரி சென்றிருக்க, அனைவரும் கூடத்தில் ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்திருந்தனர்.

“அத்தை இல்லையா?” கேட்ட உதயன், காமாட்சி “போயிட்டாங்க” என்று சொல்லியதும், “உங்களுக்கு எதும் வருத்தமா?” என அனைவரிடமும் பொதுவாக வினவினான்.

“வருத்தமெல்லாம் இல்லைப்பா. நீங்க எது பண்ணாலும் சரியாதான் இருக்கும்” என்றார் கஜமுகன்.

“அப்போ என்னை எதுவும் சொல்லமாட்டிங்க ரைட்?” என பார்த்தான் உதயன்.

“என்ன கேட்கணும்?” கஜேந்திரன் புரியாது கேட்க, மகனை கண்டு கொண்டவராக இளங்கோவன் உள்ளுக்குள் சிரித்தார்.

“என்ன கேட்கணுமா?” என்ற உதயன், “நான் ஒரு பொண்ணை விரும்புறேன் சொன்னேன்” என்றான்.

“ஆமா… இப்போ அதுக்கு என்ன? நாளைக்கு நேரில் போய் பேசலாம் இருக்கோம்” என்றார்.

“அவ்ளோதானா?”

“ஆமாங்க… அவ்ளோதான். உங்களுக்குப் பிடிச்சிருக்கு. வேறென்ன?” என்று இப்போதும் புரியாது கேட்டார் கஜேந்திரன்.

“அப்பா உங்களுக்கு? தாத்தா உங்களுக்கும் அவ்ளோதானா? அம்மா, சித்தி, பாட்டி உங்களுக்கு?” என்று அனைவரிடமும் கேட்டான்.

இன்பா பொங்கி வந்த சிரிப்பை தன் அண்ணனின் முதுகு பின் ஒளிந்து மறைத்தான்.

 

Epi 27 and 28

என் ஆயுள் நீயே 27 ம 28

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
27
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்