Loading

என் ஆயுள் நீயே 23

பிரணவ் அலுவலகம் கிளம்பிவிட்டது தெரிந்த பின்னரே, மெதுவாக எழுந்து தயாராகத் துவங்கினாள் அஷ்மிதா.

அவளது மனம் இருவேறு காரணங்களுக்காக வருத்தம் கொண்டிருந்தது.

ஒன்று பிரணவ்விடம் பேசாமல் இருப்பது. மற்றொன்று அவளது காதல். இதுவரை உரியவனிடம் சொல்லியதில்லை. காட்டிக் கொண்டதுமில்லை. ஏற்கனவே தங்கையின் காதலால் துவண்டிருப்பவனிடம் எப்படி காதலை சொல்வதென்கிற தயக்கம் அவளுக்கு. நனியிதழுக்கு திருமணமாகாமல் உதயன் செய்துக்கொள்ளப் போவதில்லை என அறிந்திருந்ததால், நனியின் காதல் முதலில் கை சேரட்டுமென்று உதயனுக்காக அவனின் மனம் ஒரே நேரத்தில் பலவற்றிலிருந்து அல்லாடுவதை தவிர்ப்பதற்காக தன் காதலை வெளிப்படுத்தாது காத்திருக்கிறாள்.

இன்று தன் காதல் ஒரு முடிவுக்கு வருமென்று தெரியாது, நேற்று இன்பா சொல்லிய செய்தியில் நேசம் கொண்ட நெஞ்சம் உதயனின் முடிவு என்னவாக இருக்குமென்ற தவிப்பு வேறு அவளை படுத்தி வைத்தது.

உதயன் தான் முதன் முதலில் அஷ்மிதாவுக்கு புலனம் வழி தகவல் அனுப்பி பேசியது. தங்கையின் காதலுக்காக. தன் காதலை பிரணவ்விடம் சொல்லாததற்குரிய காரணத்தை நனியிதழ் சொல்லியதும் உதயன் மனதில் எழுந்த திட்டம் ஒன்றே ஒன்று தான்… காதல் திருமணமாக வாய்ப்பில்லை என்ற நிலையில் பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக மாற்ற வேண்டுமென்பதே! அதற்கு பிரணவ் பக்கம் தெரிந்த நபர் தொடர்பில் இருக்க வேண்டுமென்று நினைத்தே, நனியிதழ் மூலமாக அஷ்மிதாவை முன்பே தெரிந்திருக்கும் நிலையில் அவளை தொடர்பு கொண்டு, தொடர்பிலிருந்தான்.

ஒரு காதலை இணைக்க ஒன்றிணைந்தவர்கள் தற்போது வாழ்விலும் ஒன்றிணைய இருக்கின்றனர். அதற்கு முழு முதல் காரணம் அஷ்மியின் காதல் மட்டுமே! அவளின் அந்த சொல்லாத காதல் தான் உதயனை அவள்பால் சாய்த்தது.

இன்பா தான் தினமும் நனியிதழை கல்லூரிக்கு அழைத்து வருவான். ஒரே துறை என்பதால், அவர்கள் துறையிருக்கும் கல்லூரியின் பின் கேட்டின் வழி இன்பா வந்து செல்வான். அந்த கேட்டிற்கும், அவர்களது துறை கட்டிடத்திற்கு சில அடிகள் தான் தூரம். அங்கிருக்கும் மரத்தடியில் தான் ரீமா, அஷ்மி அமர்ந்திருப்பர். அஷ்மி தன்னுடைய சீனியரின் அண்ணன் என்கிற முறையில் பேசி பழக, தன்னைவிட பலவருட சிறியவளாக இருந்தபோதும் இன்பாவுக்கு அஷ்மியுடன் நட்பு மலர்ந்தது.

ரீமா, நனியிதழ் கூட இருவருக்குமான நட்பு எப்படி சாத்தியமென்று ஆச்சரியம் கொண்டதுண்டு. அந்த ஆச்சரியம் ரீமாவுக்கு இன்னும் அவர்கள் நட்பு தொடர்வதில் அதிகரித்தது தான் மிட்சம்.

நனியிதழ் தன் காதல் பக்கத்திற்காக அவர்களின் நட்பு முறிவதை ஏற்கவில்லை. அவர்கள் இணைப்பில் இன்றளவில் இருக்கின்றனர் என்று தெரிந்தபோதும் ஒருநாளும் அஷ்மி பற்றிக் கேட்டுக்கொண்டதில்லை.

இன்பாவுடன் இருக்கும் தருணங்களில் அஷ்மி அழைத்தால் கூட அமைதியாக எழுந்து சென்றுவிடுவாள்.

அஷ்மியின் நினைவு பிரணவ்வையும் நினைவுபடுத்துமென தங்கையின் மன அமைதிக்காக இன்பாவும் அஷ்மி குறித்து நனியிதழிடம் எதுவும் பேசிடமாட்டான். அதற்காக இன்பா தன் நட்பை விலக்கி வைக்கவெல்லாம் இல்லை. தினமும் இருவரின் பேச்சும் இருக்கும்.

அஷ்மிதாவுக்கு இன்பாவின் காதல் தெரியும்.

குமரி முதல்முறை உதயன், தனு திருமணம் குறித்து பேசிட, தனு வந்து காதல் சொல்லியதை அஷ்மியிடம் சொல்லி புலம்பி தள்ளியிருந்தான்.

“எப்படி மச்சி? அண்ணாக்குன்னு பேசி வச்சது அவளுக்குத் தெரியும். அப்படியிருந்தும் எம்மேல காதல்ன்னு வந்து நிக்கிறா. அறைஞ்சிடலான்னு தோணுச்சு” என்றான்.

அஷ்மி உதயனுக்கு ஏற்கனவே பேசி வைத்திருக்கின்றனர் என்ற செய்தியில் பாதி உயிராகியிருக்க, இன்பாவிடம் என்ன பதில் பேசுவதென்று தெரியாது அழைப்பை வைத்திருந்தாள்.

தன்னுடைய காதல் சொல்லாமலே முடிவுக்கு வந்து விட்டதென்று அஷ்மிதா ஆழமான வருத்தத்தில் துவண்டிருந்த நாட்கள் அவை. இன்பாவிடம் கூட சரியாக பேசாது இருந்தாள்.

இரு மாதங்களுக்கு பின்னர் அவளுக்கு அழைத்த இன்பா,

“மேடம் இப்போலாம் பேசுறதே இல்லை. நினைவிருக்கேனா நான்?” எனக் கேட்டான்.

“ம்ப்ச்… மச்சி” என்ற அஷ்மி, “மீட் பண்ணலாமா?” எனக் கேட்டாள்.

“பண்ணலாமே! நானும் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான்.

“நான் வரவா, நீ வரியா?”

“நானே வரேன். நீ தனியா வந்து போகணும்” என்ற இன்பா, அடுத்த நாள் திருச்செந்தூர் கடற்கரையில் அவள் முன் நின்றிருந்தான்.

“என்ன சொல்லனும்?” வந்ததிலிருந்து எதுவும் பேசாது, கடலை வெறித்தவாறு தன்னருகில் அமர்ந்திருக்கும் தோழியின் முகம் பார்த்து வினவினான் இன்பா.

“சீனியர் எப்படியிருக்காங்க?”

“நல்லாயிருக்கான்னு சொல்ல முடியல” என்ற இன்பா, “அண்ணா உன் நெம்பர் கேட்டார். கொடுத்திருக்கேன்” என்றான்.

“ம்ம்” என்ற அஷ்மி, “நேத்து தான் மெசேஜ் பண்ணார். அண்ணாக்கு கல்யாணப் பேச்செடுத்தா சொல்ல சொல்லியிருக்கார்” என்றாள்.

நனியிதழ் படிப்பு முடித்து ஒரு வருடம் வரையிலும், காதல் வலியிலிருந்து மீண்டுவிடுவாளென இருந்த உதயன், அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்த பின்னரே எப்படியும் பிரணவ் உடன் தங்கையை சேர்த்து வைக்க வேண்டுமென்று, அஷ்மி கல்லூரி முடித்த சில மாதங்களில் அவளை தொடர்பு கொண்டிருந்தான்.

அந்த தருணம் தான் அது.

“தனு உன்னை விரும்புறாங்க ரைட்?” என்றாள்.

“ம்ம்…” என்ற இன்பா, “எனக்கும் அவளை பிடிக்கும்” என்றான்.

கண்கள் ஒளிர இன்பாவின் முகம் பார்த்த அஷ்மிதா, “பிடிக்கும் மீன்ஸ்?” என்றாள்.

“அண்ணாக்கு துரோகம் செய்யுற மாதிரி ஆகாதா?” எனக் கேட்டான்.

இன்பா அவ்வாறு கேட்டதிலே அவனின் மனம் புரிந்துவிட்டது.

“உன் அண்ணாவுக்கு தனு மேல…”

“அப்படியெல்லாம் இல்லை. ஆனால் வீட்டுல சொன்னா அக்செப்ட் பண்ணிப்பார்” என அவள் கேட்டு முடிக்கும் முன் வேகமாக பதில் சொல்லியிருந்தான்.

“நீ விரும்புறன்னு தெரிஞ்சாலும் அக்செப்ட் பண்ணிப்பாரா?”

“அதுக்கு முதலில் அவருக்குத் தெரியணுமே” என்ற இன்பா, “கண்டிப்பா அண்ணா எனக்காகத்தான் பார்ப்பாங்க” என்றவன்,

“அம் இன் லவ் வித் உதய்… உதயச்செல்வன்” என்ற அஷ்மியின் வார்த்தையில் விழிகள் விரிய அவளை உறைந்து நோக்கினான்.

“ஒன்றரை வருஷம் ஆகுது.” தன் கால் நனைத்த அலையை பார்த்துக் கூறினாள்.

“இவ்ளோ நாள் சொல்லவே இல்லை?” புருவம் உயர்த்தி இறக்கினான்.

“சொல்லக்கூடாதுன்னு இல்லை. எப்படி சொல்றது தெரியாம சொல்லல. இப்போ சொல்லியே ஆகணும் தோணுச்சு” என்றாள்.

“அண்ணாகிட்ட சொல்லலையா?”

“எப்படி மச்சி சொல்றது? அவங்க சீனியர் நினைத்து வருத்தத்தில் இருக்காங்க. இப்போ எப்படி சொல்ல முடியும்?” என்ற அஷ்மிதா, “சீனியர் கல்யாணம் முடிஞ்சு, அவங்க கல்யாணப் பேச்சு நடக்கும் போது தான் சொல்லனும். எப்படியும் தனுவை நீ விரும்புறதை சொல்லிடுவ, இப்போதைக்கு என் லவ்வுக்கு வில்லி யாருமில்லை. குறுக்க வந்த தனுவுக்கும் நீயிருக்க, சோ நான் கொஞ்சம் வெயிட் பண்றேன். அவங்க கமிட்மென்ட் எல்லாம் முடிக்கட்டும். அப்புறம் சொல்லிக்கலாம்” என்றாள். இன்பாவிடம் சொல்லியதும் அவளுக்கே ஒரு தெளிவு. அந்த தெளிவில் தான் இத்தனை வருடங்கள் கடத்தியிருந்தாள்.

ஆனால் நேற்று வந்தனா விடயம் இன்பா சொல்லியதிலிருந்து அவளுள் அலைக்கழிப்பு.

‘தனக்காக உயிரை விடத் துணிந்த பெண்ணென்று சம்மதம் சொல்லிடுவாங்களோ?’ வந்தனா உதயனுக்காக விஷம் அருந்தியது வரை மட்டும் இன்பா சொல்லி அறிந்திருந்த அஷ்மிக்கு அவ்வளவு வலி.

இதயத்தில் பொத்தி வைத்திருக்கும் நேசம் துடிப்புகள் பெறாது மரித்து விடுமோ என அஞ்சியவள், உதயன் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும் என்று தைரியமாக காதலை சொல்லிவிட முடிவு செய்த நொடி, அவனே அவளுக்கு அழைத்திருந்தான்.

நம்ப முடியாது தன்னைத்தானே கொட்டி பார்த்தவள், வலி கொடுக்கவே நிகழ் உரைக்க அழைப்பை ஏற்றாள்.

உதயனுக்கு வந்தனா மூலம் அழுத்தம் கூடியிருக்க, நனியின் திருமணத்தை விரைந்து முடிக்க வேறு திட்டம் எதற்கோ தன்னை அழைக்கிறான் என்று நினைத்து தான் ஹலோ சொன்னாள்.

ஆனால் அவனோ காதலைத் தாண்டி திருமணமென்று சொல்ல, உயிரில் மின்னல் தாக்க உறைந்து நின்றாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அஷ்மிதா உதயனை மூன்றாம் ஆண்டு படிக்கும் போது தான் முதல்முறை நேரில் பார்த்தாள். பார்த்ததும் அவளுள் ரசனையான ஈர்ப்பு. நெஞ்சத்தில் காதலாக வேர்ப்பிடிக்குமென்று அவளே அக்கணம் நினைத்திருக்கவில்லை.

வேர்பிடித்த காதல் இன்று அவளின் மனதில், பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனமாகவே மாறியுள்ள தருணம் அவளே எதிர்பார்க்காத வகையில் அவளவனுடன் அவளின் மனம் இணைந்துள்ளது.

“இப்போவே சொல்லனுமாமே!’ அலைபேசியை நெற்றி முட்டி சிரித்துக்கொண்ட அஷ்மிதா, “உதய்” என்று புன்னகைத்தவளாக கைகள் விரித்து சுழன்று மெத்தையில் கவிழ்ந்து விழுந்தாள். எழுந்து அமர்ந்தாள். அலைப்பேசியை பார்த்து சிரித்தாள்.

அவளின் காதல் அறிந்த ஒரே நபர் இன்பா மட்டுமே! சந்தோஷத்தின் கணம் தாங்காது அவனிடம் பகிர்ந்துகொள்ள செய்தி அனுப்பினாள்.

“மச்சி… கடல் உப்பு காத்து தென்றல் வீசுது…” என்று பல சந்தோஷ இமோஜிகளுடன் அனுப்பி வைக்க, அடுத்த சில நிமிடங்களில் இன்பா அழைக்க, அவளின் மகிழ்வு உதயன் உரிமையாய் அதட்டி பேசியதில் இரட்டிப்பாகியது.

உதயன் பெற்றோரிடம் சொல்லென்று சொல்லிவிட்டான். பெண்ணவள் தான் எப்படி சொல்வதென்று தவித்துவிட்டாள்.

“லவ் பண்றேன் சொல்லவே இல்லை. ஸ்ட்ரெயிட்டா மேரேஜ்க்கு போயாச்சு?” என்று முனகிய அஷ்மிதா, “எப்படி சொல்றது?” என்று சிந்தித்தாள்.

அவளுக்கு பிரணவ் தான் பெற்றோர் இடத்திலிருந்து அனைத்தும் செய்ய வேண்டுமென்கிற ஆசை. நனியிதழுக்கு முன்பு தற்போது உதயனுக்கு திருமணமென்றால் அவளின் ஆசை நிறைவேறாதே என்று அச்சம் எழுந்தது.

உடனடியாக உதயனுக்கு அழைத்து விட்டாள்.

முதல் முறை முழுதாக ஒலி முடிந்தும் அவன் ஏற்கவில்லை.

திரும்ப அழைப்போமா வேண்டாமா என்று அவள் மனதிற்குள் சடுகுடு ஆடிக் கொண்டிருக்க, உதயன் அழைத்திருந்தான்.

“சொல்லியாச்சா?”

“ஹான்…”

எடுத்ததும் உதயன் கேட்டதில் அவள் தான் அதிர்ந்தாள்.

“என்ன?”

முன்பிருந்த மென்மை அவன் குரலிலில்லை என்று தெரிந்தது.

“கோபமா இருக்கீங்களா?”

அவள் அவ்வாறு கேட்டதும், கண்களை இறுக மூடித் திறந்தான்.

உண்மையில் அந்நேரம் உதயன் மிகுந்த கோபத்தில் தான் இருந்தான். ஆனால் அதனை யாரிடமும் காட்டிட முடியாத அழுத்தம், அவனை இறுக்கமாக மாற்றியிருந்தது.

“நான் அப்புறம் பேசட்டுமா?”

“ம்ப்ச்… பேசுடி! ஒரு மாதிரி ஹெவியா இருக்கு” என்றான். நனியிதழிடம் கூட தன்னுடைய உணர்வுகளை காட்டிக்கொள்ளாதவன், தன்னவளிடம் வார்த்தையால் வெளிப்படையாய் காட்டினான்.

உதயனிடம் இத்தனை உரிமையை அவள் எதிர்பார்க்கவில்லை. மனதில் அவளை எண்ணத் தோன்றியதும், அவள் தான் இனி அனைத்துமென்று நினைத்துவிட்டான். அதனை குடும்பத்தாரிடமும் சொல்லிவிட்டான். பிறகு விலகி நிற்க வேண்டிய அவசியமென்ன. வார்த்தையிலும் உரிமையைக் காட்டிட முனைந்துவிட்டான்.

உதயன் அமைதி, அழுத்தமென்று அறிந்திருந்தவளுக்கு, அவனது இந்த அதிரடியை உள்வாங்கிடவே வேகம் போதவில்லை.

“வீட்டுல சொல்லிட்டேன். அத்தை கொஞ்சம் பிரச்சினை பண்ணிட்டாங்க. அந்த பிரஷர்ல உன்கிட்ட ஸ்ட்ரெஸ் பண்ணி பேசிட்டேன்” என்றான்.

“இப்போ ஓகேவா?”

“ஓகே தான் நினைக்கிறேன். நீ பேசு ஓகே ஆகிடும்” என்றவனின் பேச்சில் அவள் தான் திக்குமுக்காடிப் போனாள்.

“என்னால தாங்க முடியல?”

“என்னையா?” உதயனிடம் விஷமப் புன்னகை.

புரியாது திருதிருத்தவள் புரிந்ததும்,

“அச்சோ… அதில்லை. உங்க இந்த ஸ்பீட்” என்றாள். உதயனிடம் ஆர்ப்பாட்டமான சிரிப்பு.

“எதில்லை…?”

அவளிடம் மௌனம். வெட்கம் கொண்டாளோ?

“இங்க எனக்கு அவ்ளோ பிரஷர் கொடுக்குறாங்க” என்றான்.

“புரியுது” என்ற அஷ்மிதா, “நான் இப்போவே வீட்டில் சொல்லணுமா?” எனக் கேட்டாள்.

உதயனிடம் ஆழ்ந்த அமைதி.

 

என் ஆயுள் நீயே 24

“அண்ணி…”

ஆர்யன் அழைத்ததில் நனியிதழை விட, எழிலுக்குத்தான் பெரும் அதிர்வு.

‘மொத்தமா முடிச்சி விட்ருவான் போல.’ வாய்க்குள் முனகிய எழில், வேகமாக அவனிடம் நடந்து சென்று…

“என்னடா? என்ன நினைச்சிட்டு இருக்க?” எனக் கேட்டு,

“உன்னைத்தான்னு மொக்க போடாதே” என்றாள்.

“நான் அப்படி சொல்லலையே” என்று புருவம் நெளித்த ஆர்யன், “சொல்லணும் எதிப்பார்க்குரியோ?” என்றான், உதட்டின் ஓரம் சுளித்த புன்னகையோடு.

“பிளீஸ்… பெரியண்ணாக்கு கூட பயமில்லை. அக்கான்னா லைட்டா பயம். ஏதும் போட்டுக் கொடுத்திடாத” என்று உதடு அசையாது கெஞ்சினாள்.

“பயமா? உனக்கா?” எனக் கேட்ட ஆர்யன், “அண்ணி” என மீண்டும் அழைத்தான்.

இப்போதுதான் அவனின் விளிப்பை நன்கு கவனித்து நெற்றி சுருக்கி அவனை பார்த்தாள் நனியிதழ்.

“பிரணவ்ஸ் பிரதர்” என்று கையைலிருந்த நனியின் அலைபேசியை அவளை நோக்கி நீட்டினான்.

பிரணவ் சந்திக்க வேண்டுமென்று அனுப்பிய தகவல், திரையில் அறிவிப்பாக எம்பிக் குதித்து ஒளிர, நனியிதழ் அலைப்பேசியை விட்டுச் சென்றதால், மின்னிய அலைப்பேசியை ஆர்யன் பார்க்க நேர்ந்தது. பிரணவ் பெயர் ‘மை லவ்’ என்று வந்தாலும், புலனத்தின் தகவலென்று அவனது முகப்பு படம் சிறு வட்டமாக ஒளிர்ந்ததில் தெரிந்த தன் அண்ணனின் நிழலுறுவில் நொடியில் நனியிதழ் யாரென்று கிரகித்து உரிமையாய் அண்ணியென்று அழைத்துவிட்டான்.

எழிலுக்கோ தன்னுடைய அக்கா என்பதால் அண்ணியென அழைக்கிறானென்று பயந்து வந்தது.

“இது நல்லாயில்லா ஆரி. அக்கா என்ன நினைப்பாங்க. திரும்பத் திரும்ப அண்ணி சொல்ற நீ?” என்று பற்களைக் கடித்தாள்.

“உனக்கு கோபப்படக்கூடத் தெரியலடி” என்று அவளின் நெற்றியில் தட்டிய ஆர்யன், “நீ எனக்கு யாருமே இல்லைன்னாலும் அவங்க எனக்கு அண்ணி தான்” என்றான்.

“புரியல.”

“இப்போ புரியும்” என்ற ஆர்யன், அதற்குள் தங்கள் அருகில் வந்துவிட்ட நனியிடம் அலைபேசியை கொடுத்தான்.

நனியிதழ் ஆர்யனின் முகத்தை பார்த்தபடி தயக்கமாக வாங்கிட,

“எனக்கு டூ டேஸ் முன்னால் தான் தெரியும். அஷ்மி சொன்னாங்க. இப்போ மொபைல் ஸ்க்ரீனில் அண்ணா பிக் பார்த்து தான் நீங்கன்னு தெரியும்” என்றான்.

“ம்ம்…” ஓசையின்றி வந்த அவளின் குரல் அளவிலேயே, அவளின் நிலை புரிய,

“என்ன காரணம் வேணாலும் இருக்கட்டும் ஒருமுறை சொல்லுங்க. ஹீ லவ்ஸ் யூ டூ…” என்றான். அழுத்தமாக.

நனியிதழ் அவன் சொல்லியதை நம்பாது பார்க்க… ஒற்றை கண்ணில் நீர் துளிர்த்து இறங்கியது.

“ட்ரஸ்ட் மீ” என்று தன் கழுத்தில் இரு விரல் பிடித்துக் கூறிய ஆர்யன், “உங்களுக்கு ஒரு காரணம் இருக்காப்போல… அண்ணாக்கும் ஒரு காரணமிருக்கலாமே” என்றான்.

“எதுவா வேணாலும் இருக்கட்டும். இதுக்கும் மேல முடியாது. முடியல. மறக்க முடிவு பண்ணிட்டேன்” என்று கன்னம் துடைத்து திரும்பி நடந்தாள்.

“நீங்க முடிவு பண்ணிட்டா மட்டும் மறக்க முடியுமா?” ஆர்யன் கேட்டதில் நனியின் நடை நின்றது.

“அப்படி மறக்கணும் நினைச்சிருந்தால் இந்த நாலு வருஷத்தில் முடிந்திருக்குமே” என்றான்.

இருவருக்குமிடையே என்ன நடக்கிறதென்று புரியாது விழி விரித்து நின்றிருந்த எழில்,

“எதுக்குடா இப்போ அக்காவை அழ வைக்கிற நீ?” எனக் கேட்டாள்.

“லைஃப் லாங் அழுதக்கூடாதே” என்றான்.

“அண்ணி ஒருமுறை எனக்காக” என்ற ஆர்யனை நின்ற இடத்திலிருந்து திரும்பி பார்த்த நனி, “முடியல… பிளீஸ்” என்று சொல்லி வேகமாகச் சென்றுவிட்டாள்.

“என்னடா நடக்குது?”

“நீ என்னை லவ் பண்றேன் சொல்லு சொல்றேன்.”

“நீ எதுவும் சொல்லத் தேவையில்லை.”

“நீ சொல்லலனாலும் எனக்குத்தான் தெரியுமே!” குறும்பாய் கண்கள் சிமிட்டினான்.

“என்ன தெரியும்?” எகிறிக்கொண்டுக் கேட்டாள்.

அவளின் நெற்றிப் பொட்டில் ஒற்றை விரல் வைத்து பின் தள்ளியவன்,

“உனக்கும் என்னை பிடிக்கும். லவ் இருக்கு” என்றான்.

“அதெல்லாம் இல்லை.”

“அப்படியா… அப்போ ஓகே” என்று அவன் விலகி நடக்க,

“என்ன ஓகே?” என்று ஓடிவந்து அவன் வழி மறைத்து வினவினாள்.

“நீதான் லவ் பண்ணலையே. அப்போ என்னை லவ் பன்ற பொண்ணுக்கு ஓகே சொல்றேன். சிவில் டிபார்ட்ல ஒரு பொண்ணு நேத்து ப்ரொபோஸ் பண்ணாள்” என்றான்.

எழில் அவனை தீயாய் முறைத்தாள்.

“என்ன?”

“அண்ணா ஓகே சொல்லணும்.” மெதுவாகக் கூறினாள்.

“உனக்கு என்னை பிடிச்சிருக்கு ரைட்?” எனக் கேட்டான்.

அவளின் தலை ஆமென்று அசைந்தது.

“சப்போஸ் உன் அண்ணா நோ சொல்லிட்டா… நான் வேண்டாமா? வேண்டாம் சொல்லிடுவியா?” என்றான்.

“அண்ணா அப்படி சொல்லமாட்டாங்க. ஆனால், அண்ணா சொல்றதுதான் எனக்கும்” என்று சொல்லியவளின் இமை நனைந்து உருண்ட கண்ணீர் அவனுக்கான நேசத்தை சொல்லிட…

“வெயிட் பண்றேன்” என்று நகர்ந்தான்.

“உனக்கு புரியுது தானே?” என மீண்டும் அவன் குறுக்கே ஓடிவந்து வினவினாள்.

“புரியுது” என்ற ஆர்யன், “அவர் வேணாம் சொன்னா விட்டுடுவியா?” எனக் கேட்டான். அவனுள் மெல்லிய வலி.

“ம்ஹூம்…” என்று இருபக்கமும் தலையை ஆட்டியவள், “அண்ணாவை சம்மதிக்க வைக்க ட்ரை பண்ணுவேன்” என்றாள். அவனை பாராது.

அவளைத் தீண்டாது நெற்றி முட்டி நின்ற ஆர்யன், “அழாதடி” என்றான். பனித்த விழிகளுடன்.

“அண்ணா நோ சொல்லமாட்டாங்க தானே?” அவனிடமே கேட்டாள்.

“மாட்டாங்க…” என்ற ஆர்யனிடம், “நீ ஒன்ஸ் பேசுறியா?” என்றாள்.

“இப்போ உன் அண்ணா வேற ஒரு சூழலில் இருக்காங்க. சீக்கிரமே ரெண்டு பேரும் ரிலேட்டிவ் ஆகிடுவோம். அப்போ உரிமையா என் மாமாகிட்ட உங்க தங்கச்சியை கொடுங்கன்னு கேட்கிறேன்” என்றவனின் பேச்சு சுத்தமாக அவளுக்கு விளங்கவில்லை.

“எனக்கு ஒண்ணுமே புரியல!”

“உன் அக்காவும் என் அண்ணாவும் லவ் பண்றாங்க.” சிரிப்புடன் கூறினான்.

“நிஜமாவா?” அகல கண்கள் விரித்த எழில், “அக்காவா? நம்ப முடியல” என்றாள்.

தனக்கு தெரிந்த அளவில் எல்லாம் சொல்லிய ஆர்யன், “நாம் வெயிட் பண்ணிதான் ஆகணும்” என்றான்.

“ம்ம்… யாருமே என்கிட்ட சொல்லல” என்று வருந்தினாள்.

“நீ சின்னப் பொண்ணுன்னு உன்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம்” என்ற ஆர்யன், “நீ எனக்கு சின்னப் பொண்ணுலாம் இல்லை” என்றான்.

அவனின் உட்பொருள் புரிந்து, புஜத்திலே கிள்ளினாள்.

“அடியேய்… விடுடி” என்ற ஆர்யன், “என் மாமா இன்னும் நம்ம லவ்வுக்கு ஓகே சொல்லல” என்றான்.

“அச்சோ ஆமா” என்று தலையில் தட்டிக்கொண்ட எழில், “நான் இன்னும் உனக்கு சரி சொல்லல… ஓகேவா?” எனக் கேட்டு, “கீப் டிஸ்டன்ஸ்” என்றாள்.

பொங்கி வந்த சிரிப்பை அடக்கிய ஆர்யன், “நீ ஃபர்ஸ்ட் தள்ளி நில்லுடி. மனுஷனை படுத்துற” என்க, அவனை காதல் ஊற்றெடுக்க மென்மையாக பார்த்தாள் அவனது எழில்.
__________________________

கல்லூரியிலிருந்து புறப்பட்ட நனியிதழ் வீட்டிற்கு செல்லாது கடற்கரைக்குச் சென்று, அலைகளை வெறித்தபடி அமர்ந்துவிட்டாள்.

“ஹீ லவ்ஸ் யூ டூ…” அவங்களும் உங்களை விரும்புறாங்க என ஆர்யன் சொன்னது அவளின் நெஞ்சத்தை இன்னும் அதிர வைத்துக் கொண்டிருந்தது.

“இப்போ இதை நான் நம்பனுமா?” அப்படியே கால்களைக் கட்டிக்கொண்டு தலை கவிழ்த்து கண்ணீர் சிந்தினாள்.

‘வேண்டாம் நனி வேண்டாம். அழ வைக்கும் இந்த காதலே வேண்டாம். அவங்க வேணாம் சொல்லி சொல்லுவாங்க. திரும்ப வந்தா ஓகே சொல்லணுமா? அப்போ என் மனசு? அதிலிருக்கும் காதல்? அனுபவிக்கும் வலி? இதெல்லாம் ஒண்ணுமே இல்லையா?’

மனதோடு வெகுவாகப் போராடினாள்.

“லவ் பண்றவங்க ஏன் ஒருமுறை கூட சொல்லல?”

‘நீ ஏன் சொல்லல?’

அவளுக்கான கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டது மனம்.

“என்ன காரணமிருக்கும்?” பதில் அவனிடம் மட்டுமே!

அலைபேசியை எடுத்து பிரணவ் என்ன அனுப்பியிருக்கிறான் என்று பார்த்தாள்.

“வாண்ட் டூ மீட் யூ” என்றிருந்த செய்தியை விரலால் வருடியவள், “எதுக்காம்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

பதிலேதும் அனுப்பிடத் தோன்றவில்லை.

இப்போது தான் ஒருவித தெளிவில் இருக்கின்றாள். அவள் அனுபவிக்கும் இந்த காதல் வலியால், அவளைவிட அதிக வேதனை அவளின் செல்வாவிற்குத்தான். அதற்காகவே தன் காதலை தூரம் வைத்திட முடிவு செய்து மூன்ற நாட்களாகிறது.

எல்லாம் முடிந்து விட்டதென்று அவளிருக்க… மீண்டும் தொடங்கும் புள்ளியாய் ஆர்யன் சொல்லியது. பிரணவ் குறுந்தகவல்.

முற்று வைத்த புள்ளி அருகே மற்றொரு புள்ளி வைத்து ஆரம்பிக்க அவளின் மனம் உந்தியபோதும்,

“என்னை பிடிக்கலன்னு சொல்லு” என்று அவனே கேட்டது அவளின் செவி நிறைத்து இளகும் இதயத்தை இறுக வைத்தது.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலை தான் அவளுக்கு.

ஆர்ப்பரிக்கும் கடலின் சத்தத்தை தாண்டி கத்த வேண்டும் போலிருந்தது.

வீட்டிற்கு செல்லும் எண்ணமின்றி அமர்ந்திருந்தவளை கலைத்தது, பிரணவ்வின் அழைப்பைத் தாங்கி வந்த அலைபேசி ஒலி.
_________________________

இதுநாள் வரை கண் பார்த்து நடந்துகொள்வதாக எண்ணி தவறாக நினைத்து தூரமிருந்ததெல்லாம் போதுமென நினைத்த பிரணவ், நேரில் சந்தித்து அனைத்தும் பேசி முடித்திட வேண்டுமென சந்திக்கக் கேட்டு தகவல் அனுப்பி, அவள் பார்ப்பதற்காக காத்திருந்தான்.

நிமிடங்கள் பல நீள, அவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது.

வேலைகளுக்கு நடுவில் கூட தன் செய்தியை அவள் பார்த்துவிட்டாளா என்று நொடிக்கு ஒரு தரம் அலைபேசியை எடுத்து புலனம் திறந்து பார்வையிட்டான்.

வெகு நேரம் அவனை காக்க வைத்தே, குறி நீல நிறம் காட்டிட, அவள் பதிலை எதிர்பார்த்து ஏமாந்து போனான்.

நனியிதழ் பதல் அனுப்பததிலேயே அவள் கோபமாக இருக்கின்றாள் என்பதை புரிந்து கொண்டான்.

“கிவ் மீ வன் சான்ஸ்” என்று மீண்டும் அனுப்பினான்.

எப்போதும் அவனருகில் அவள் கொள்ளும் சிறு நடுக்கம் அவனுக்கு சுவாரஸ்யம் அளித்திட, அவளிடம் அதட்டலாகத்தான் நடந்துகொள்வான். முதல்முறை கெஞ்சுதலாக கேட்கிறான். பெண்ணவள் இறங்கிவர தயாராக இல்லை போலும்.

இம்முறை அவன் அனுப்பியதை பார்க்கவே இல்லை.

பொறுத்துப் பார்த்த பிரணவ் அவளுக்கு அழைத்துவிட்டான்.

“அட்டென்ட் பண்ணாமல் மட்டும் இருக்கட்டும். நேரா வீட்டுக்கே போயிடுறேன்” என்று முணுமுணுத்தவாறு, அவள் அழைப்பை எடுப்பதற்காக காத்திருந்தான்.

ஆர்யன் தன்னை கண்டு கொண்டு பேசியதிலேயே, தான் அவனை காதலிப்பது அஷ்மியின் மூலமாக பிரணவ்வுக்கும் தெரிந்து விட்டதென்று அறிந்த நனியிதழ்,

‘உண்மை தெரிந்து அழைக்கிறான். என்ன பேசுவான்? ஆர்யன் சொல்லியதுபோன்று என் காதல் தெரிந்து அவனது காதலை கூறப்போகிறானா? இல்லை என் காதல் தெரிந்து மீண்டும் இது ஒத்துவராது என்று சொல்லப் போகிறானா?’ என தனக்குள் பலவாறு உழன்று, அழைப்பு முடியும் தருவாயில்… இறுதி ஓசையில் ஏற்று செவிமடுத்தாள்.

“ஹலோ…”

*தேடலில் நீளும் நேசம் யாவும் நெஞ்சம் சேர தவமிருக்க… காதலித்த இதயத்தில் தான் எத்தனை விந்தையான எண்ணங்கள்?*

 

Epi 25 and 26

என் ஆயுள் நீயே 25 ம 26

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
36
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்