என் ஆயுள் நீயே 21
பிரணவ் அலுவலகம் செல்லத் தயாராகி கீழே வந்தான். வழக்கமான துள்ளல் அவனிடமில்லை. முகம் ஒருவித அழுத்தத்தில் மூழ்கி காட்சியளித்தது.
“அஷ்மி போயாச்சா?” எனக் கேட்டுக்கொண்டே உணவு மேசை இருக்கையில் அமர்ந்தான்.
“அவ இன்னும் ரூம் விட்டே வெளியில் வரல” என்ற விமலா, “எதுவும் மறைக்கறீங்களா பிரணவ்?” எனக் கேட்டார். எல்லாம் தெரிந்தும்.
“எஸ் மாம்” என்ற பிரணவ், “அம் இன் லவ்…” என்று இடைவெளி விட்டு, “யாருன்னு அப்புறம் சொல்றேன்” என்றான்.
என்னதான் அஷ்மி சொல்லியது உண்மையாக இருக்குமெனத் தோன்றினாலும், ‘தான் கேட்டுக் கொண்டதற்காக நனியிதழ் வேண்டாமென்றாளா? இல்லை உண்மையில் வேறு காரணம் உள்ளதா?’ என்று அறிய நினைத்தான். அதற்காகவே தற்போது பெண் யாரென்று சொல்லாது விடுத்தான்.
அத்தோடு, ‘நனியிதழ் காதலிக்கும் பட்சத்தில் தன்னிடம் இதுநாள் வரை வெளிப்படுத்தாதற்கு காரணம்? பெரும் வினா அவனுள். அதுமட்டுமில்லாது அன்று தான் பார்த்தது உண்மை இல்லையா?’ பெரும் குழப்பம் அவனுள்.
உணவினை மென்று கொண்டே ‘முடியலடி!’ மனதில் சொல்லிக் கொண்டான்.
பிரணவ் காதலிக்கின்றேன் என்று சொல்வானென்று விமலா எதிர்பார்க்கவில்லை. அவன் இப்படி நேரடியாக சொல்லியதே, வாழ்வை அவன் நேர்ப்படுத்திவிடுவான் எனும் நம்பிக்கை அளித்தது.
“லவ் பன்றதால தான் முதலில் கல்யாணத்துக்கு மறுத்தியா பிரணவ்?” ஜெயந்தன் ஆர்வமிகுதியில் கேட்க, விமலா கணவரை முறைத்தார்.
“இவ்ளோ நாள் என்னோட லவ் வன் சைட் நினைச்சிட்டு இருந்தேன். இப்போ தான் அவளும் என்னை லவ் பன்றாள் தெரிஞ்சுது. இதான் ரீசன்” என்ற பிரணவ், “என் லவ். ஆனால் அடுத்து என்ன செய்யனும் தெரியல டாட்” என்று வெளியேறினான்.
ஒரு கையால் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த பிரணவ், மற்றொரு கையால் அலைப்பேசியின் திரையை நீக்குவதும் அணைப்பதுமாக இருந்தான்.
உண்மை தெரிந்த கணம் முதல், தன்னவளிடம் பேசிடத் தவிக்கிறான். இயலவில்லை. என்னவென்று பேசுவான்?
“என்னை பிடிக்கல சொல்லு!” தான் இவ்வார்த்தையை சொல்லும்போது எத்தனை வலியை உள்ளுக்குள் விழுங்கியிருப்பாள்? நினைக்கவே பிரணவ்வின் நெஞ்சம் பாரம் சுமந்தது.
“இதழ்.” அவனது அதரங்கள் பிரிந்து மெல்ல உச்சரிக்க, வண்டியை செலுத்த முடியாது, சாலை ஓரமாக நிறுத்தி, இருக்கையில் பின் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். அவனது கரம் ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்தது.
‘எந்தப் புள்ளியில் எங்கு என் காதலை தவறவிட்டேன்?’ அவனுள் வினா எழும்பிட, பதில் தான் இல்லை.
ரீமா, அஷ்மி மூலமாக நனியிதழ் அறிமுகம் என்றாலும், அன்று நடனத்திற்காக பார்த்தது முதல் அல்ல.
கல்லூரி படிப்பின் முதல் நாள். விடுதி வாசம் என்பதால் முந்தைய நாளே கல்லூரி வளாகத்திற்கு வந்துவிட்டான் பிரணவ்.
ஆண்கள் விடுதி பக்கம் தான் வாகனங்கள் தருப்பிக்கும் இடம்.
பார்க்கிங் வழி முதல் நாள் மாணவர்கள் பொது கூட்டத்திற்கு வேகமாக சென்று கொண்டிருந்த பிரணவ், “அண்ணா” என்ற விளிப்பில் திரும்பிட, பால் கலந்த இளஞ்சிவப்பு நிற உடையில் தேவதையென முன் நின்றிருந்த பெண்ணவளின் சுருங்கிய முகமும், அவள் தன் நெற்றியில் தட்டிக் கொண்ட விதமும் பிரணவ்வின் இதழை மலரச் செய்தது.
அவளுக்கு முன், பிரணவ்விற்கு முதுகுக் காட்டி நின்றிருந்த ஆடவனின் முகம் தெரியவில்லை என்றாலும், அவளின் சிறு சிறு முக அசைவுகளையும் மிட்சமின்றி உள்வாங்கிக் கொண்டிருந்தான் பிரணவ்.
அவளுக்கு முன் நின்றிருந்தவன் அவளின் அண்ணனென அவளின் அழைப்பை வைத்துக் கண்டு கொண்டிருந்த பிரணவ்விற்கு மனதில் மெல்லிய இதம். காரணம் விளங்கா மகிழ்வு.
ஆண் எதோ சொல்லிக் கொண்டிருக்க, சிறுமியென அனைத்திற்கும், சரியெனும் விதமாக இமைகள் படபடக்க தலையசைத்துக் கொண்டிருந்தவளில் மொத்தமாக லயித்துப் போனான் பிரணவ்.
ஏனோ பார்த்த கணம் அவனை தன்னில் விழ வைத்திட்டாள் பெண்ணவள்.
‘எந்த இயர் தெரியல. மனசை அடக்கி வை பிரணவ்.’
நிமிடம் கடக்க, அவள் எப்போது தனித்து வருவாளென்று அங்கேயே நின்றிருந்த பிரணவ்வை ரீமா வந்து இழுத்துச் சென்றாள்.
கல்லூரி கலையரங்கில் தங்களது பணி முடித்து முதல்வர், பேராசிரியர்கள் கிளம்பியதும், மாணவர்களுக்குள் முதல் வருட மாணவர்கள் அறிமுகம் நடைபெற்றது.
துறை அடிப்படையில் வரிசையாக அமர்ந்திருக்க, ரீமாவின் துறை ஆரம்பமாகியது. அதில் ரீமா எழுந்து மேடைக்குச் செல்ல அவளுக்கு அருகில் அமர்ந்திருந்தவளை கண்டுகொண்டான்.
அதரங்கள் குவித்து காற்றினை ஊதியவனின் மனதில் அப்படியொரு ஆசுவாசம்.
‘பார்த்ததும் இப்படி விழுந்துட்டியேடா பிரணவ்.’ இருக்குமிடம் மறந்து சிறு முறுவலோடு ஒற்றை கையால் முகத்தை மூடிக் கொண்டான்.
ரீமாவை அடுத்து அவள் மேடையேற பிரணவ் நிமிர்ந்து அமர்ந்தான்.
கை விரல்களை மற்றைய கை உள்ளங்கையில் மாற்றி மாற்றி வைத்து அழுத்தம் கொடுத்தவளாக முன்னேறிய அவளின் மெல்லிய நடையே அவளது அமைதியான குணத்தை எடுத்துக்காட்ட,
‘ஷீ இஸ் மெல்டிங் யூ’ என்று முணுமுணுத்தான் பிரணவ்.
“நனியிதழ்.”
அவள் பேசிய இரு வரிகளில் அவனுக்கு வேண்டிய அவளது பெயர் மட்டும் அவனின் செவிகளில் சரியாக ஒலித்தது.
“இதழ்.” மென்மையாய் உச்சரித்தவனின் முகமும் புன்னகைத்தது.
அந்த நாள் இன்னும் பசுமையாய் அவனுள் வாசம் வீச,
“ஒருமுறை நீயாவது சொல்லியிருக்கலாமே இதழ்?” என்று அருகில் இல்லாதவளிடம் கேட்டிருந்தான்.
அடுத்த நொடி, “ஐ வான்ட் டூ மீட் யூ” என்று அவனவளுக்கு செய்தி அனுப்பினான்.
*******************
கல்லூரியில் வண்டியை நிறுத்திய நனி, தங்கை போய் வருவதாக சொல்லியதை கவனியாது எதோ சிந்தனையில் நிலைத்திருக்க,
“அக்கா” என்று அவளின் தோள் தொட்டு மீட்டாள் எழில்.
“வந்தனா பேசினதையே நினைச்சிட்டு இருக்கீங்களா?” எனக் கேட்க, இல்லையென தலையசைத்து கண் சிமிட்டிய நனி, “காலேஜ் டேஸ் மெமரிஸ்” என்றாள். வலி நிறைந்த முறுவலோடு.
“அப்போ வாங்க கேன்டீன் போவோம்” என்று எழில் அழைக்க, “கிளாஸ் போகலையா?” என்று ஸ்கூட்டியிலிருந்து இறங்கினாள் நனியிதழ்.
“பாதி ஹவர் முடிஞ்சிப்போச்சு. இப்போ போனாலும் அந்த சமோசா மூக்கன் வெளியில் தான் நிக்க வைக்கப் போறாங்க. அடுத்த ஹவர் போயிக்கலாம்” என்றாள்.
“ம்” என்ற நனியிதழ், “இங்க தான் பர்ஸ்ட் டைம் அவங்களை பார்த்தேன்” என்று வாகனங்கள் தருப்பிக்கும் அவ்விடத்தை ஒருவித ரசனையோடு பார்வையிட்டவள் தன்னைப்போல் கூறியிருந்தாள்.
“யாரை?”
எழில் கேட்டப் பின்னரே தான் உளறியது புரிந்து நாக்கை கடித்து விடுத்த நனியிதழ், “ஃபர்ஸ்ட் டே நான் காலேஜ் வந்த மெமரி” என்று சமாளித்தாள்.
அன்று பிரணவ் மட்டும் நனியிதழை பார்த்து காதலில் விழவில்லை. நனியிதழும் பார்த்ததும், பார்த்த கணம் பிரணவ்விடம் தன் இதயத்தை இடம் பெயர்த்திருந்தாள்.
“ஹோ… சரி வாங்க. கேன்டீனில் சிக்கன் பஃப் செமயா இருக்கும். வாங்கிக் கொடுங்க” என்று தமக்கையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டுச் சென்றாள் எழில்.
நனி ஒரு மேசையில் சென்று அமர, எழில் தனக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு வர, நனியிடம் பேசிக் கொண்டிருந்தான் ஆர்யன்.
எழிலுக்கு மூச்சே நின்றுவிட்டது.
வேகமாக இருவருக்கும் அருகில் வந்த எழில், கையில் உள்ளதை மேசை மீது வைத்து, “அக்கா இவன் சொல்றதை நம்பாதீங்க” எனக்கூறி, “நீயெப்படி இங்க?” என ஆர்யனிடம் கண்களை உருட்டி வினவினாள்.
“என்ன சொல்றதை நம்பக்கூடாது?” நனியிதழ் கேட்க, “என்ன சொன்னாலும்” என்ற எழில், “உதயா அண்ணாகிட்ட சொல்லிட்டேன். கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னாங்க. அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்” என்றாள். ஒருவித படபடப்பு… தன்னை அறியாமலே அவனுக்கு வேண்டிய பதிலை வழங்கிவிட்டோம் என்று அறியாது சொல்லியிருந்தாள்.
ஆர்யன் மலர்ந்து சிரித்தான்.
வெயிட் பண்ண சொன்னாங்க என்றால் என்ன அர்த்தம். இவள் அவனை பிடித்திருக்கிறது என்று சொல்லியிருப்பதாகத்தானே அர்த்தம். சரியாக விளங்கிக் கொண்டான். மனதில் மத்தாப்பூக்கள் தான்.
“எதுக்குடா சிரிக்கிற?” அவனின் தோளிலே அடித்தாள் எழில்.
“இதை என்கிட்ட முன்னவே சொல்லியிருக்கலாமே! நான் வேற எதெதோ நினைச்சு பயந்து, உன் அண்ணனை வில்லன் ரேஞ்சுக்கு நினைச்சிட்டேன்” என்றான்.
“ஏய்!” என்று விரல் நீட்டிய எழில், “அண்ணா ரொம்ப நல்லவங்க” என்றாள்.
“தெரியுது” என்ற ஆர்யனின் பற்கள் தெரியும் அளவான சிரிப்பு மட்டும் மறையவில்லை.
இருவரின் பேச்சும் புரியாது மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் நனியிதழ்.
“ஆமா நான் என்ன உன்கிட்ட சொல்லியிருக்கலாம்?” என்று அவன் சொல்லியதில் முன் பாதி இப்போதுதான் புரிந்தவளாகக் கேட்டாள்.
“நான் உன்கிட்ட சொன்னனே… அதுக்கு உனக்கும் ஓகேன்னு.” இப்போது முகத்தை வெகு தீவிரமாக வைத்துக் கொண்டான்.
வகுப்பு புலனம் குழுவில் எழில் அட்டெனன்ஸ் போட சொல்லி தகவல் அனுப்பவுமே, வகுப்பிலிருந்த ஆர்யன் ஆசிரியர் வராது இருக்கவே, அவளில்லாத வகுப்பில் என்ன செய்வதென்று கேன்டீன் வந்திருந்தான்.
வந்தவன் எழில் ஒரு பெண்ணுடன் வருவதை பார்த்து யாரென்று யோசித்திட, “அக்கா உங்களுக்கு என்ன வேணும்?” என்று எழில் கேட்க, “உன்னை ட்ராப் பண்ணத்தான் வந்தேன். அண்ணா வேற நான் இன்னும் வரலன்னு யோசிப்பாங்க. நீ என்ன வேணுமோ வாங்கிட்டு வா. நான் அண்ணாக்கு மெசேஜ் பண்றேன்” என்று சொல்லவே, ஆர்யனுக்கு அவள் தன்னவளின் தமக்கையென்று தெரிந்தது.
எழில் நகர நனியின் முன் வந்து அமர்ந்தான். எழிலின் நண்பன் ஆர்யன் என்று மட்டுமே அவன் சொல்ல, அடிக்கடி தங்கையின் பேச்சில் ஆரி என்று கேட்டிருப்பதால் இன்முகமாக பேசினாள் நனியிதழ்.
எழில் தான் தவறாக புரிந்துகொண்டு எல்லாம் உளறிவிட்டாள். அப்போதும் ஆர்யன், நனி இருப்பதாலே தான் காதல் சொல்லியதை மறைமுகமாக அவ்வார்த்தையை தவிர்த்தவனாகக் கூறினான்.
“நீயென்ன சொன்ன? நான் என்ன இப்போ பதில் சொன்னேன்?” புரியாது எழில் வினவ,
“என்ன பேசுறீங்க ரெண்டு பேரும்?” எனக் கேட்டாள் நனியிதழ்.
“ஆர்வக்கோலாரு… இப்படித்தான் எதும் உளறும்” என்ற ஆர்யன், எழிலிடம் நன்கு குத்து வாங்கினான்.
இருவரின் விளையாட்டும் ரசனையான சிரிப்பை கொடுக்க,
“நான் கிளம்புறேன். அடிச்சி முடிச்சு கிளாஸ் போங்க” என்று எழுந்து கொண்டாள் நனியிதழ்.
“அக்கா இருங்க” என்ற எழில், “நீயே சாப்பிடு” என்று வாங்கி வந்ததை அவன் முன் நகர்த்தி வைத்துவிட்டு, நான்கடி சென்றிருந்த நனியை நோக்கி நடந்தவளாக, “இவன் என்கிட்ட பேசமாட்டான். இப்போ என்னவோ புதுசா பேசுறான். இவனை நான் டிவோர்ஸ் பண்ணி ரெண்டு வருஷம் ஆகுதுக்கா. அவன் என்ன சொல்லியிருந்தாலும் நம்பாதீங்க” என்றாள். வேகமாக.
எழிலின் பேச்சில் ஆர்யனுக்கு அப்படியொரு மகிழ்வு. அவன் அவளிடம் ரசிப்பதே இம்மாதிரியான பேச்சுக்கள் தானே! எதையும் எளிதாக கடக்கும் அவளின் பேச்சு, அவனுக்கு எப்போதும் விருப்பமான ஒன்று.
சிரித்தவனின் பார்வை மேசையில் பதிய, நனி விட்டுச் சென்ற அலைபேசி தகவல் வந்ததற்கு அடையாளமாக ஒளிர்ந்தது.
செல்லும் நனியதழை “அண்ணி…” என்றழைத்திருந்தான்.
என் ஆயுள் நீயே 22
மருதன் சென்றிட வீடே ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தது.
“இந்த வயசிலும் கொஞ்சம் கூட கூறு இல்லையே இவனுக்கு. அவன் மகள் மனசை மட்டும் பாக்குறான். ஒண்ணு சேரும் மனசுலையும் விருப்பமிருக்கணும் தெரிய வேணாம்.”
மருதனை எண்ணி ஜெயலட்சுமி ஆற்றமாட்டாமல் புலம்பிட…
“முடிஞ்சிப்போச்சு விடுங்கம்மா” என்ற இளங்கோவன், “திரும்ப எதும் வந்தாக்கா பார்த்துக்கலாம்” என்றான்.
ஒருவித மனச்சோர்வோடு குமரியை ஏறிட்ட உதயன் இன்றே இதற்கும் ஒரு முடிவை கொண்டு வர வேண்டுமென நினைத்து இருக்கையில் அமைதியாக அமர்ந்தான்.
குமரிக்கே உதயனின் முகத்தில் தெரிந்த வாட்டம் என்னவோ செய்ய,
“நீங்க வேலையிருந்தா பாருங்க. நாளைக்குக்கூட பேசிக்கலாம்” என்றார் குமரி.
குமரி எப்பவும் அடாவடி தான். பாசத்தைக் கூட அதிகாரமாகத்தான் காட்டுவார். அப்படிப்பட்டவர் தன் முகம் பார்த்து, கொண்ட புரிதல், உதயனுக்கு உதட்டில் முறுவலைத் தோற்றுவித்தது.
தற்போது அவனது சோர்விற்கு காரணமே வேறு. என்ன தான் புகுந்த வீடு, சொந்த வீடாக இருப்பினும் ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டு உறவு காலத்திற்கும் நிலைத்து நிற்பது வரமாயிற்றே. அத்தகைய வரம் தன் அன்னைக்கு முப்பது வருடங்களாக கிட்டவில்லை… என்னளவிளாவது சேர்த்து வைத்துவிட வேண்டுமென்று மருதனின் ஒவ்வொரு அடிக்கும் பதில் கொடுக்காது விட்டுக் கொடுத்தவன், இன்று தன்னாலே அதற்கு மொத்தமாக முடிவு வந்துவிட்டதாக எண்ணி வருந்தினான்.
அவனது மனதின் கசக்கல் முகத்தில் தெள்ளெனத் தெரிய தன் அன்னையை ஏறிட்டுப் பார்ததான்.
மகனின் எண்ணம் தாய் அறியாததா?
“உன்னைவிட வெறொன்னு எனக்கு பெரிசில்ல தம்பி” என்றார் கங்கா.
கங்காவுக்கும் தெரியும்… மருதன் எத்தனையோ இடைஞ்சல்கள் தொழிலில் கொடுக்கும் போதெல்லாம் உதயன் தாய்மாமா என்று ஒதுங்கி சென்றதற்கு காரணம் தானென்று. அதற்காக மகனின் வாழ்வை அடமானம் வைத்திட முடியாதே! ஆயிரம் தவறிழைக்கும் பிள்ளைக்கே அன்னை என்பவள் துணையாக நின்றிடும் போது, அனைவருக்குமென்று பார்த்து குணத்தால் பண்புள்ளவனாக இருக்கும் மகனுக்காக தன்னுடைய ஆசையை விட்டுக்கொடுத்திட மாட்டாரா என்ன?
“அம்மா…” சட்டென்று கலங்கி ஒலித்த உதயனின் தழுதழுப்பான குரலில் மொத்த குடும்பமும் அவனை சூழ்ந்து விட்டது.
உதயனுக்கு அன்னையின் ஆசை, தாய் வீட்டு ஏக்கம் தெரியுமே. மகனாக நிறைவேற்ற முடியவில்லை எனும் வருத்தம். அதைவிட தனக்காக பார்க்கும் அன்னையின் மனம். திடமான அவனை சட்டென்று அசைத்து பார்த்துவிட்டது. அன்னையின் அன்புக்கு நெகிழாதோர் புவிதனில் உண்டோ?
“ஒண்ணுமில்லை.” பதறி அருகில் வந்த வீட்டாரின் பாசத்தில் மீண்ட உதயன், தன்னை சமாளித்து நிமிர்ந்தான்.
கஜமுகன் கரம் உதயனின் தோளில் படிந்திருக்க… மெல்ல தட்டிக் கொடுத்தார்.
“என்னப்பா சட்டுன்னு கலங்கி உசுரை உருவிட்டியே!” கஜேந்திரன் கேட்டிட, இளங்கோவன் தவித்துப் பார்த்தார் மகனை.
இனி மருதனின் உறவு கூடிட வாய்ப்பில்லை. தன்னுடைய அன்னையின் ஆசை தன்னால் முடிவுக்கு வந்துவிட்டதென்ற தளும்பல் அவனின் மன உடைதலுக்கு காரணமென்று உதயன் சொல்லாமலே அனைவருக்கும் புரிந்தது.
இந்த புரிதல் தானே அவர்களின் அன்பின் விளைந்த ஒற்றுமைக்கு காரணம்.
“கொஞ்சம் இருங்க வரேன்” என்று எழுந்து கீழே இருக்கும் ஒரு அறைக்குள் நுழைந்த உதயன், இங்குமங்கும் நடந்தான். இரு நிமிடங்களில் இடைக்குற்றி நின்றவன், தலையை உலுக்கி தன்னை சமன் செய்தான்.
இதுவரை தன்னுடைய உணர்வுகளை இப்படி குடும்பத்தாரின் முன்னிலையில் அவன் காட்டியதே இல்லை. அதற்கு முக்கிய காரணம், தன் முகம் பார்த்து நடக்கும் அவர்களுக்கு, எப்போதும் தன்னால் சிறு வருத்தமும் கொண்டுவிடக் கூடாது என்பதற்காக.
மனம் ஒருவித அலைப்புறுதலில் நிலைகொள்ள முடியாமல் அசைந்தாடியது.
சற்றும் தயங்காது அலைப்பேசியை எடுத்து தன்னவளுக்கு அழைத்துவிட்டான்.
இருவருக்கும் ஐந்தாரு வருடங்களாக ஒருவரையொருவர் தெரியும். அதிலும் கடந்த மூன்று நான்கு வருடங்களாக அவளின் அலைபேசி எண் அவனிடம் உள்ளது. ஒருநாளும் அழைத்து பேசியதில்லை. காரணமின்றி புலனம் தகவல் கூட அனுப்பியதில்லை. எண்ணி ஏழெட்டு முறை புலனத்தில் எழுத்து வடிவில் பேசியிருக்கிறான். பேசிய செய்திகளை எண்ணினால் இருபதுக்கு மேலிருக்காது. அதிலும் இருமுறை மட்டுமே இவனாக குறுஞ்செய்தி அனுப்பியது. இன்று நொடி நேர யோசனை எதுவுமின்றி காரணமுமின்றி, புலனம் அல்லாது குரல் அழைப்பு விடுத்திட்டான்.
ஏனென்று அவனுக்கேத் தெரியவில்லை.
இதுநாள் வரை அவள் மட்டுமே தன் மீது நேசம் வைத்து விருப்பம் கொண்டுள்ளாள் என்று அவன் நினைத்திருக்க, அவனுடைய சிறு செயல்… அவனின் மனதையே அவனுக்குக் காட்டிக் கொடுத்திட்டது.
இதயத்தின் செய்தியில் கண்கள் விரிய, தனக்கு முன்னிருந்த கண்ணாடியை பார்த்தவனின் இதழ்கள் நீண்டு விரிந்தது. அவனது கண்களில் அவனே காணாத ஓர் உணர்வு தெரிய,
அந்தப்பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டு, “ஹலோ” என யாழின் இசையாய் ஒலித்தது அவன் மனதை கொய்துக் கொண்டிருப்பவளின் மெல்லிய குரல்.
முதல் முறை நெஞ்சம் உணரும் புதுவித உணர்வை, கண்ணாடியில் தெரியும் தன் கண்ணுக்குள் தேடி பிடித்த உதயன், மீசை நுனி திருகி, அதரங்கள் மடித்து விடுத்தான்.
“உதய் இருக்கீங்களா?” இருமுறைக்கு மேல் ஹலோ என்றவள் பதிலின்றிப் போகவே, அவனது பெயர் சொல்லி அழைத்தாள்.
எல்லோரும் அழைக்கும் பெயர் தான். இன்று அதன் சுவை உணர்ந்தான்.
சட்டென்று தொண்டையை செறுமி,
“உன் வீட்டில் இப்போ சொல்லிடு. நான் இங்க தாத்தா எல்லார்கிட்டவும் சொல்லப்போறேன்” என்றான்.
ஒருபக்கம் மருதன், ஒருபக்கம் குமரி என இருவரையும் ஒன்றாக பார்த்ததும் உதயன் எடுத்த முடிவு தான் இது.
அவனளவில் அந்நேரம் அவள் மீது தனக்கு காதலில்லை என்ற எண்ணம் இருப்பினும், தனக்காக தன் மனதிற்காக எட்ட நிற்கும் அவளின் காதலுக்கும், தன்னுடைய தங்கையின் மீதான அவள் கொண்டிருக்கும் அக்கறைக்காகவும் மதிப்புக் கொடுக்கவே அவளை திருமணம் செய்யும் எண்ணத்தில் முடிவெடுத்திருந்தான். இன்பா தனு விஷயம் சொல்லும்போது, தான் பெரியவன் எனும் சொல் அவர்களின் திருமணத்திற்கு தடையாக நின்றிடக் கூடாதென நினைத்து அவளை மணம் முடிக்க விருப்பமிருப்பதாக சொல்லிவிட இருந்தான்.
அந்த எண்ணமே அவள் மீது தன்னுடைய மனம் நேசம் கொண்டிருந்ததே காரணமென்று இந்நொடி விளங்கிட, கொஞ்சமும் தடுமாற்றமோ, சிறு யோசனையோ அவனிடமில்லை பட்டென்று அவளிடம் சொல்லிவிட்டான்.
ஆனால் அவன் சொல்லியது அவளுக்குத்தான் விளங்கவில்லை.
“நான் என்ன சொல்லணும்? நீங்க என்ன சொல்லப்போறீங்க?” மெலிதாக ஒலித்த போதும் வார்த்தையில் பிசிறில்லை. சிறு தடுமாற்றம். ஒவ்வொரு வார்த்தையாகக் கோர்த்துக் கேட்டிருந்தாள்.
“நிஜமா தெரியலையா?” கண்ணாடியில் தன் புது பரிமாணத்தை ரசித்தவனாக, அங்கு அவளின் தடுமாற்றத்தை அவதானித்துக் கொண்டு வினவினான்.
“இல்லை தெரியல. என்ன சொல்றீங்க புரியல” என்றாள்.
அழைக்காதவன் அழைத்து சொல்லென்றால் அவளும் என்னவென்று சொல்லுவாள். அதீத படபடப்பு. கையெல்லாம் சில்லிட்டுப் போயிருந்தது.
“நான் என்ன சொல்லப் போறேன்னா?” என்று நிறுத்திய உதயன்,
“பிளீஸ் சொல்லுங்க” என்ற அவளின் தவிப்பை கண்களை மூடி உள்வாங்கி இமைகள் திறந்தான்.
அவன் என்ன சொல்லப் போகிறானென அவளும், எப்படி சொல்வதென்று அவனும் அமைதி காக்க, இருவரின் மூச்சுக் காற்றின் ஓசையும் தவிப்புகளைக் கூட்டியது.
நிமிடம் கரைய,
“உதய்…” என்றாள்.
“உதயனுக்கு அஷ்மிதாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம். அஷ்மிதாவுக்கு உதயனை கல்யாணம் பண்ணிக்க விருப்பம்ன்னா வீட்டுல இப்போ சொல்லலாம்” என்றான்.
“உதய்…” அவளின் இதயம் அணு அணுவாகத் துடிக்க, ஒற்றை ஓசையில் தன்னுடைய மொத்த உணர்வையும் அவனிடம் இடம் பெயர்த்தாள்.
“ஓகேவா?”
“ம்ம்…” அவளுக்கு குரல் கமறியது.
“அழறியா?”
“இல்லை.”
“வேறென்ன?”
“ஃபீல் பண்றேன்.”
“என்னது?”
“உங்களை… நீங்க சொன்னதை!”
“நான் என்ன சொன்னேன்?”
“உதய்…”
மனதில் காதல் இருந்ததாலோ அல்லது தன்னவன் தன்னவள் என்கிற எண்ணம் மனதில் வேர் பிடித்திருந்ததாலோ தயக்கங்களோ தடுமாற்றங்களோ இன்றி பேச்சுக்கள் இயல்பாக வந்தது.
இருப்பினும் அவனிடம் அவளுக்கு எப்போதும் மெல்லிய படபடப்பு தான்.
“ஓகே… ஃபீல் பண்ணி முடிச்சிட்டு. வீட்டுல பேசு. இப்போ எனக்காக எல்லாரும் வெயிட்டிங்” என்று அழைப்பைத் துண்டித்தான்.
கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். முன்னிருந்த மேசையில் கைகள் பதித்து உடல் தாழ்ந்து விழி உயர்த்தி தன் முகம் கண்டவன்,
“நீயா உதய் இது?” எனக் கேட்டான்.
மனம் காதலை உணர்ந்ததற்கு பின்னர், முகம் தனியொரு பொலிவாக காட்சியளிப்பதுப் போலிருந்தது.
“இதுவும் நல்லாதான் இருக்கு” என்று மீசை நுனி திருகியவன், நிமிர்ந்து நின்று சட்டையை இழுத்து விட்டவனாக, வழக்கமான நடையில் வெளியில் சென்றான்.
மூடிய கதவினையே பதட்டத்தோடு பார்த்திருந்தனர் அனைவரும்.
உதயனின் தெளிந்த முகம் கண்ட பின்னரே அனைவரும் நிம்மதியாக மூச்சு விட்டனர்.
இன்பா மட்டும் தன்னுடைய அண்ணனின் முகத்தில் புதிதாக தெரியும் அந்த ஒன்றை கூர்ந்து தேடிக் கொண்டிருந்தான்.
அந்நேரம் அஷ்மிதாவிடமிருந்து “மச்சி” என்று பல சந்தோஷ இமோஜிகளோடு இன்பாவுக்கு தகவல் வந்தது.
சத்தம் வரவே அலைபேசியை எடுத்துப் பார்த்த இன்பா, வேகமாக தன் அண்ணனை ஏறிட்டான்.
ஒற்றை கண்ணடித்த உதயன், இன்பா உணரும் முன்பு,
“நனி இன்னும் வரல கால் பண்ணிப்பாரு” என்றான்.
“ஹான்…” அஷ்மிதா அனுப்பிய தகவலையே நம்ப முடியாது பார்த்த இன்பாவுக்கு உதயன் இப்படி குறும்பாகக் கண்ணடித்தது ஆச்சரியமாக இருந்தது.
“அண்ணா!”
“சொன்னதை செய்டா.” முயன்று அதட்டினான்.
“ஆங்” என்று எட்ட வந்த இன்பா, தங்கைக்கு அழைக்காது, அஷ்மிதாவுக்கு அழைத்தான்.
அஷ்மிதா அழைப்பு ஏற்று ஹலோ சொல்வதற்கு முன்பு,
“ஹேய் நீ சொன்னது நிஜமா? என்னால் நம்பவே முடியல” என்று படபடத்தான் இன்பா.
“சொன்னேன்ல” என்ற இன்பா, “வந்தனா…” என்று நிறுத்தி, “இப்போ தான் அந்தப் பஞ்சாயத்து முடிஞ்சுது. அடுத்து குமரி அத்தை, என் லவ் பஞ்சாயத்து இருக்கு. அதுக்குள்ள… என்னால நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல. ஆனா அண்ணா முகமே நீ சொல்றது உண்மைன்னு சொல்லுது” என்றாள்.
“என்னாலையும் தான். அவங்க கால் வரவும் செம ஷாக் பிளஸ் சர்ப்ரைஸ்…” என்று அஷ்மிதா சொல்ல,
“ஃபீல் பண்ணி முடிச்சாச்சுப் போலவே. அப்போ அங்க பேசு. இவன்கிட்ட வெட்டிக்கதை பேசிட்டு இருக்க” என்ற உதயனின் குரலில் அடித்துப்பிடித்து வேகமாக அழைப்பை முறித்தாள்.
இன்பா தள்ளிச் செல்லவுமே உதயன் தம்பியை அறிந்தவனாக பின் வந்திருந்தான். இன்பா பேசிக் கொண்டிருக்க, அவனே அறியாது அலைப்பேசியை பறித்து பேசியிருந்தான்.
“அண்ணா…”
“நனி இப்போ தான் மெசேஜ் பண்ணா. வா உன் பஞ்சாயத்தை முடிச்சு வைப்போம்.” இன்பாவைப் போலவே பேசி, உள்ளழைத்துச் சென்றான் உதயன்.
Epi 23 and 24
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
27
+1
+1
3
1 Comment