Loading

என் ஆயுள் நீயே 15

முதல் நாள் இருந்ததற்கு நேர் மாறாக, அத்தனை பொலிவுடன் இருந்தான் பிரணவ்.

நேற்றைய நிகழ்வு தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று காட்டிக்கொள்ள நினைத்தானோ?

அவனது எண்ணங்கள், குழப்பங்கள், கற்பனைகள் யாவும் அவனுள் மட்டுமே.

அன்றும் சரி, இன்றும் சரி அவன் உண்மையை அறிய முற்படவே இல்லை. அவன் கண்ணால் பார்த்தது நிஜமென்று இன்றளவிலும் ஸ்திரமாக இருக்கின்றான்.

அந்த உறுதியானால் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டான்.

காதலுக்காக காதலியின் விருப்பத்தை நிறைவேற்றும் காதலனாக நடந்துகொண்ட பிரணவ்வுக்கு, அவளின் காதலே அவன் தானென்று தெரியாமல் போனது விதியின் செயலோ அல்லது, காதல் என்றாலே வலி சுமந்து தான் இணைய வேண்டும் என்ற நியதியின் பலனோ!

அவளின் மகிழ்வுக்காக தான் வலி சுமக்கலாம் என்று நினைத்துவிட்டான். ஆனால் சுமைக்கான பலன் என்னவோ அர்த்தமற்றது. மனதில் நினைக்கும் எண்ணங்களுக்கு வார்த்தை வடிவம் கொடுத்திருந்தால் இங்கு யாவும் சுபமாக முடிந்திருக்கும்.

பிரணவ் கீழே வர, அஷ்மி உணவு உண்டு கொண்டிருந்தாள். அவன் அருகில் வந்து அமர்ந்தும் கூட, அவள் அவனை பார்க்கவில்லை.

“குட் மார்னிங் டா!” சொல்லிய பிரணவ் தட்டினை எடுத்து வைக்க, விமலா உணவினை பரிமாறினார். ஆனால் அஷ்மி அவனுக்கு பதில் கொடுக்கவில்லை.

உண்டு முடித்தவள், பிரணவ் “அஷ்மி” என்றழைத்ததைக் கூட காதில் வாங்காது, “பைய் டாட்” என்று கூடத்தில் அமர்ந்திருந்த விஜயனிடம் சொல்லிக்கொண்டு அலுவலகம் புறப்பட்டிருந்தாள்.

“ரெண்டு பேருக்கும் சண்டையா பிரணவ்?” விமலா கேட்க, “இல்லை மாம். எதோ கோபமா இருக்காப்போல” என்று சொல்லியவனுக்கும் காரணம் தெரியவில்லை.

அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த அஷ்மிக்கு கண்கள் கலங்கியது. வாழ்வில் முதல்முறை தனக்கு தாயுமானவனாக இருப்பவனிடம் பாராமுகம் காட்டியிருக்கிறாள். மனம் கலங்கியதே தவிர தன் செயலில் வருத்தம் கொள்ளவில்லை.

பிரணவ் நிச்சயம் இப்படி செய்வானென்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அந்நேரம் ஆர்யனின் அழைப்பு.

ப்ளூடூத் இணைப்புடன் பொருத்தியவள், “சொல்லுடா” என்றாள்.

“அஷ்மி, ஆர் யூ ஓகே?” குரல் வைத்தே அறிந்திருந்தான். அவள் சரியில்லை என்று.

“யா… அம் ஓகே!”

“பொய்…”

“ம்ப்ச்” என்று சலிப்படைந்தவள், “கோபம் கோபமா வருதுடா. இருக்கும் கோபத்துக்கு எதையாவது தூக்கிப்போட்டு உடைக்கணும் தோணுது. கண்ணு முன்னாடி வர எல்லாரையும் திட்டணும் போல வருது” என்றாள்.

“அக்கா…”

“முடியலடா” என்ற அஷ்மி அழுதேவிட்டாள்.

“உருகி உருகி லவ் பண்ணா இந்த ஆம்பளைக்கெல்லாம் புரியாதுல. இதே வேணாம் வேணாம் சொல்லுற பொண்ணுங்க பின்னாடி நா* மாதிரி அலைவாங்க” என்றாள்.

“இப்போ யாரை திட்டுறீங்க?”

அவளுக்கு அதீத அழுத்தம். நேற்றைய நாளுக்காக உதயன் மட்டுமல்ல, அஷ்மியும் நான்கு வருடங்களாகக் காத்திருந்தாள். அந்த காத்திருப்பின் அழுத்தம். எல்லாம் நெருங்கி வந்து சரிசெய்திட முடியாத அழுத்தம் அவளுள்.

யாரிடமாவது சொல்லிவிட்டால் தேவலாம் எனும் நிலை. தன் தம்பியிடம் அனைத்தும் சொல்லிவிட்டாள். ஒரே மூச்சாக.

“அஷ்மி…” என்று அதிர்ச்சி அடைந்த ஆர்யன், “அண்ணா என்ன லூசா?” என்று கேட்டான்.

“கண்டிப்பா… அதிலென்ன சந்தேகம்” என்ற அஷ்மியிடம், “அண்ணியும் லூசு தான்” என்றான் ஆர்யன்.

“யாருடா அண்ணி?” இருக்கும் வேதனையில் சட்டென்று அவன் கூறிய உறவுமுறை அவளுக்கு பிடிபடவில்லை.

“ம்க்கும்… அண்ணனை லவ் பண்றாங்களே அவங்க தான்” என்றான்.

“ஆமான்டா… உங்களை மாதிரி லூசுங்களை லவ் பண்ணியே பொண்ணுங்களும் லூசு ஆகிடுறாங்க.” அத்தனை கடுகடுப்பு அவளிடம்.

“சும்மா கத்தாதீங்க” என்ற ஆர்யன், “உருகி உருகி லவ் பண்ணா மட்டும் போதுமா? அதை எப்போவாவது அண்ணாகிட்ட சொல்லியிருக்காங்களா?” என்று அவனும் பதிலுக்கு சத்தமாகக் கேட்டிருந்தான்.

….

“என்ன பதிலே காணும்?” என்ற ஆர்யன், “லவ் பண்ணதும், இவள் நம்மள லவ் பண்றான்னு தானா மேசெஞ்சர் பாஸ் ஆகுமா என்ன?” எனக் கேட்டான்.

“ஆரி…”

“ஆன்ஸர் மீ அஷ்.”

“இப்போ என்னடா சொல்லவர நீ?”

“அவங்களை பர்ஸ்ட் லவ்வை சொல்ல சொல்லுங்க. அட்லீஸ்ட் அண்ணாக்கு உணரவாவது வச்சிருக்காங்களா? சின்ன பார்வை?” என்றவன், “இப்படி எதுவுமே இல்லாம, அவரா புரிஞ்சிக்கணும் நினைக்கிறது பைத்தியக்காரத்தனமில்லையா?” என்றான்.

“அவங்க சொல்லாம இருக்க எதோ வேலிட் ரீசன் இருக்கு ஆரி.”

“இருக்கட்டும் அஷ். அப்போ அண்ணாக்கு விருப்பமில்லைன்னா நோ தானே சொல்ல முடியும்?” எனக் கேட்டான்.

“அண்ணாக்கும் லவ் இருக்குடா!”

“எப்படி சொல்றீங்க?”

“தோணுது” என்ற அஷ்மி, “அப்புறம் எதுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லி பொண்ணு பார்க்கும் வரை போகணும்?” என்றாள். அவளால் கோபத்தை குறைத்துக்கொள்ளவே முடியவில்லை.

அவளுக்கு பிரணவ் மனம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனி வாழ்நாளில் பார்த்தே விடக் கூடாது என்கிற அவனின் திண்ணமான முடிவு, அவளை புகைப்படத்தில் கண்டதும் காணாமல் போயிருந்தது. ஒரே ஒருமுறை அவளை நேரில் காணும் வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொண்டான். இதனை அவனாக சொல்லாது அறிய வாய்ப்பில்லை தான்.

இருந்து இருந்து இந்த நாளை தானாக ஏற்படுத்தியது போல உருவாக்கியிருக்க… இப்படி ஒன்றுமில்லாது போனதே எனும் ஆதங்கம் அஷ்மியிடம். அதிலும் இப்போது என்ன மாதிரி தவித்துக் கொண்டிருப்பாலென்று நனியின் நிலையை நினைத்துப் பார்க்கவே அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

“இப்போ வேணாம் சொன்னது அண்ணா இல்லை” என்றான் ஆர்யன்.

“சீனியர் நோ சொல்ல வாய்ப்பே இல்லைடா. அண்ணா தான் நடுவுல பிளே பண்ணியிருக்கான். இவன் வேணாம் சொல்ல சொல்லி கேட்டிருக்கணும். அவங்களும் சரின்னு சொல்லியிருக்கணும்” என்றாள்.

“அப்படியே இருக்கட்டும் அஷ்மி… அண்ணாக்கு விருப்பமில்லை. வேணாம் சொல்லும்போது கட்டாயப்படுத்தவா முடியும்?” என்றான்.

“இப்போ உன் லவ்வை அந்தப்பொண்ணு அக்செப்ட் பண்ணலன்னா அப்படியே விட்ருவியா நீ?” எனக் கேட்டாள். புரிந்து கொள்ளாமல் பேசுகிறானே என்று ஆயாசமாக வந்தது அவளுக்கு.

அலுவலகம் வந்தும் காரிலிருந்து இறங்காது தம்பியிடம் விவாதம் நடத்திக் கொண்டிருந்தாள்.

“விட்டு தான் ஆகணும். இதுக்காக பின்னாடியே சுத்தவா முடியும். அப்படி சுத்தினால் வேற பேர் வச்சி அசிங்கப்படுத்திடமாட்டிங்க?” என்ற ஆர்யன், “விருப்பத்தை சொல்ல உரிமை இருக்க மாதிரி, வேணாம் சொல்ல எதிரில் இருக்கவங்களுக்கும் உரிமை இருக்கே. சொல்ற வரை தான் உன்னோட விருப்பம். சொல்லிட்ட பிறகு, எதிரில் இருக்கவங்க கையில் தான் இருக்கு உன்னோட விருப்பத்தோட லைஃப்” என்றான்.

“ரொம்ப அனுபவப்பட்டவன் மாதிரி பேசாத ஆரி” என்ற அஷ்மி, “அவங்க பாவம்டா” என்றான்.

“நீங்க எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்றீங்க?” என்றவன், “கிடைத்த சான்ஸ் மிஸ் பண்ணது அவங்க ரெண்டு பேரோட மிஸ்டேக். இதில் நீங்களோ நானோ இனி பண்றதுக்கு ஒண்ணுமில்லை” என்றான்.

……

“அண்ணாக்கு தான் மேரேஜில் இன்ட்ரெஸ்ட் இல்லையே!”

“உனக்கு புரியலடா… அண்ணா இன்னும் கொஞ்ச நாளில் மாம் சொல்றாங்கன்னு வேறொரு பொண்ணு கூட கல்யாணம் பண்ணிப்பான். அவனோட பிடிவாதமெல்லாம் மாம் கண்ணீரை பார்க்கும் வரை தான். அண்ணாக்காக கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் அப்படின்னு இப்போ இருக்க மாம், இன்னும் கொஞ்ச நாள் போனால் இறுக்கிப் பிடிப்பாங்க. அண்ணா முடியாதுன்னு சொன்னாலும் கண்டிப்பா ஒத்துப்பான். அப்போ இவனையே நினைச்சிட்டு இத்தனை வருஷமா காத்திருக்க சீனியர் பாவமில்லையாடா?” அவளது குரலில் அவ்வளவு வேதனை.

“எப்படியும் மாம் அண்ணாவை இப்படியே விட்டுடமாட்டாங்க. அண்ணாவும் ஒத்துக்கும் நாள் வரும் தானே? அதுக்கெதுக்கு இப்போ இவ்ளோ டிராமா நடுவில். சீனியர்க்கே ஓகே சொல்லியிருக்கலாமே” என்றாள்.

“நீங்க எமோஷ்னலி பிளாக் ஆகியிருக்கீங்க” என்ற ஆர்யன், “பர்ஸ்ட் சொல்லனும் அஷ். அவங்க சொல்லவே தயாரா இல்லைங்கிற அப்போ அண்ணாவை நாம் அக்யூஸ் பண்ண முடியாது. அவங்க சொன்னால், அண்ணா எஸ் சொல்ல வாய்ப்பிருக்கு. அட்லீஸ்ட் நம்மள லவ் பன்ற பொண்ணு அப்படின்னு கன்சிடர் பண்ணவாவது தோணும்” என்றான்.

“ம்… பட் இது அவங்க லவ். நான் சொல்றது சரி வருமாடா?”

“நான் உங்களை சொல்ல சொல்லலையே! அண்ணியையே ஒருமுறை சொல்ல சொல்லுங்க” என்றான்.

ஆர்யன் பேசியதில் அவளிடமும் ஒரு தெளிவு.

“பட் அதுக்கு வாய்ப்பில்லைடா.” வருத்தமாகக் கூறினாள்.

“அப்போ நீங்களோ நானோ நடுவில் ஒன்னும் பண்ண முடியாது” என்ற ஆர்யன், “அவங்க லவ் அவங்க தான் எதும் செய்யணும். நாம வேடிக்கை பார்க்கலாம். சப்போர்ட் பண்ணலாம். அவங்களுக்காக பேசிட முடியாது. அது சரியும் வராது. என்னோட காதலை நான் அனுபவித்து உணர்வுபூர்வமா சொல்றதுக்கும், பக்கமிருந்து பார்த்திட்டு சும்மா கதை மாதிரி இன்னொருத்தர் சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு” என்றான்.

“டேய் தம்பி… எப்புட்ரா!”

“அனுபவம் தான். வேறென்ன” என்ற ஆர்யன், “அவளோட பதில் நோ’தான்னு தோணுதுக்கா” என்றான்.

“லவ் சொல்லிட்டியாடா?” அதிர்ச்சியாக வினவினாள்.

“ம்ம்… கண்டிப்பா அவள் அண்ணாகிட்ட சொல்லியிருப்பாள்” என்றவன், “எந்த அண்ணன் தங்கச்சியை ஒரு பையன் லவ் பன்றான்னு தெரிஞ்சா அக்செப்ட் பண்ணிப்பான்” என்றான்.

“சீனியரோட அண்ணா இருக்காரே!” சொல்லும் போதே அஷ்மியின் முகத்தில் அப்படியொரு கனிவு. இவ்வளவு நேரம் கோபத்தில் ஜிவுஜிவுத்த முகமா எனும் விதமாக சடுதியில் மாறியிருந்தது.

“அண்ணியோட அண்ணாலாம் நூத்துல ஒருத்தர் அஷ்மி” என்றார்.

“உன் அண்ணன் ஓகே சொல்ல வாய்ப்பே இல்லையாம். இதுல நீ வேற இன்னும் பெயர் கூட தெரியாத சீனியரை வார்த்தைக்கு வார்த்தை அண்ணி அண்ணி சொல்லிட்டு இருக்க” என்றாள்.

“அண்ணா உங்களுக்கு எவ்ளோ முக்கியம் தெரியும். நீங்களே அவங்களுக்காக சப்போர்ட் பண்ணி அண்ணாவை இவ்ளோ பேசும் போது, அண்ணி அண்ணாவை எவ்ளோ நேசிக்கணும். சோ, நான் ஃபிக்ஸ் ஆகிட்டேன். அவங்க தான் எனக்கு அண்ணின்னு” என்றான்.

“ம்ம்” என்ற அஷ்மி, “என்னாலும் வேற யாரையும் அண்ணா பக்கத்தில் நிக்க வச்சு யோசிக்கக்கூட முடியாது ஆரி” என்றாள்.

“பார்ப்போம்… இல்லைன்னா வேறெதுவும் பிளான் பண்ணுவோம்” என்றான்.

“சரிடா!”

“இப்போ நார்மல் ஆகிட்டிங்களா நீங்க?”

“ஓகே தான்.”

கண்ணாடி தட்டும் ஓசையில் காரின் சன்னல் கதவினை இறக்கிய அஷ்மி, பிரணவ் என்றதும், “ஆபிஸ் வந்துட்டேன் ஆரி. அப்புறம் பேசலாம்” என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு, பிரணவ்வை முறைத்துக் கொண்டு காரிலிருந்து இறங்கினாள்.

“ஆரி’யா கால் பண்ணான்? எனக்கு அவன் கால் செய்து டூ டேஸ் ஆச்சு” என்ற பிரணவ்வை கண்டுகொள்ளாத அஷ்மி அலுவலகத்தின் உள்ளே சென்றாள்.

‘என்னாச்சு இவளுக்கு?’

பிரணவ் யோசித்துக்கொண்டு நிற்க,

“சார் மூவ் பிளீஸ்” என்றாள் ரீமா.

“ஹான்” என்று பிரணவ், திரும்பி விலகி வழிவிட, “தேங்க்ஸ் சார்” என்று அவளும் அவனிடம் ஒன்றும் பேசாது உள்ளே சென்றுவிட்டாள்.

‘இவளுமா?’ என நினைத்த பிரணவ்வுக்கு இருவரும் தன் மீது எதோ கோபத்தில் இருக்கின்றனர் என்று மட்டும் புரிந்தது. காரணம் தான் தெரியவில்லை.

 

என் ஆயுள் நீயே 16

வண்டியை செலுத்திய வேகத்தில் உதயனின் கோபம் ககேந்திரனுக்குத் தெரிந்தது.

“என்னாச்சுப்பா? எதுக்கு இவ்ளோ கோபம், வேகம்?”

உதயனுக்கு தன் குடும்பத்தாரிடம் மறைக்க வேண்டிய அவசியமில்லை.

கஜேந்திரனிடம் சொல்லிவிட்டான்.

நேற்று முதல் முறையாக வந்தனா தன்னை சந்தித்ததையும், சொல்ல நினைத்ததையும், அவள் கூறுவதற்குள் தடுத்து, தான் வந்துவிட்டதையும்.

“ஆனால் இப்படியொரு காரியம் பண்ணுவாள் எதிர்பார்க்கல சித்தப்பா” என்றான். வேதனையாக.

என்னயிருந்தாலும் அவனுக்காக அல்லவா அவள் இப்படியொரு செயலை செய்து வைத்திருக்கிறாள்.

மகனின் கோபம் புரிகிறது. ஆனால் இந்த வேகம். அவனது முகத்தில் தெரியும் தவிப்பு. காரணம் விளங்காது மனதில் தோன்றியதை யோசிக்காது கேட்டுவிட்டார்.

“உங்களுக்காக இப்படியொரு காரியம் பண்ணிட்டால் அப்படின்னதும் மனசு தடுமாறுதுங்களா?”

“சித்தப்பா” என்ற அதிர்வோடு வண்டியை நிறுத்திவிட்டான்.

“ஒரு உயிர்… மனிதாபிமானம். அவ்வளவு தான்.” ஸ்டியரிங்கை அழுந்த பற்றியவனாக தாடை இறுகக் கூறினான்.

“மன்னிச்சிடுங்க.” உடனே எவ்வித தயக்கமின்றி மன்னிப்பைக் கேட்டிருந்தார்.

அங்கு அவர்களுக்கு வயது முக்கியமில்லை. உதயன் என்பவன் மட்டுமே முக்கியம். அவருக்கு மட்டுமில்லை, இவ்விடத்தில் கஜமுகன் இருந்திருந்தாலும் தயக்கமில்லாது மன்னிப்பைக் கேட்டிருப்பார்.

மருத்துவமனை வந்ததும் வரவேற்பில் விசாரித்து, வந்தனாவிற்கு சிகிச்சை அளிக்கும் இடம் வந்தான்.

படுக்கையில் அமர்ந்திருந்த வந்தனாவிடம், சிகிச்சை அளிக்க ஒத்துழுப்பைக் கொடுக்க மருத்துவர் மற்றும் செவிலியர் வேண்டிக் கொண்டிருந்தனர்.

யாரின் பேச்சினையும் காதில் வாங்கிக்கொள்ளாது, வந்தானா முகத்தை தாழ்த்தி இறுகி அமர்ந்திருந்தாள்.

உதயன் மற்றும் கஜேந்திரன் உள்ளே செல்ல,

“வாங்க மிஸ்டர்.உதயன்” என்ற மருத்துவரின் குரலில் வந்தனா முகம் உயர்த்தி பார்த்தாள்.

மருத்துவர் உதயன் குடும்பத்திற்கு நன்கு பழக்க்கமானவர் என்பதால், “ஃபர்ஸ்ட் எய்டு பண்ணியாச்சு. அடுத்தகட்ட ட்ரீட்மென்ட்க்கு கோ ஆப்பரேட் பண்ணமாட்ராங்க” என்றார்.

உதயன் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, கால்களை சற்று அகட்டி நிமிர்ந்து நின்று வந்தனாவை கூர்மையாய் நோக்கினான்.

உதயனின் அப்பார்வை அவளின் முதுகை சில்லிட வைத்தது.

“இப்போ ட்ரீட் பண்ணுங்க டாக்டர்” என்ற உதயன், “பிளாக் மெயில் பண்ணி காதலை வரவழைக்க முடியாது” என்று ஒருவித வெறுப்பான முகபாவம் காட்டி அறையைவிட்டு வெளியில் வந்து நின்று கொண்டான்.

உண்மையில் இதுவும் கட்டாயப்படுத்தும் நோக்கம் தான்.

மருதனுக்கு மகள் என்றாள் அதீத பாசம். அந்த பாசத்தின் அளவை, தன்னுடைய பரம எதிரியாக நினைக்கும், உதயன் வீட்டு படியேறிச் சென்று அவர் நின்றதிலே தெரிந்து கொள்ளலாம்.

சாதாரணமாக ஏற்பாடு செய்திருக்கும் மாப்பிள்ளை மீது பிடித்தமில்லை, தனக்கு உதயனை பிடித்திருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் மருதன் ஒப்புக் கொள்ளமாட்டரென்று வந்தனாவுக்கு நன்கு தெரியும்.

அதைவிட தந்தை பணிந்து செல்லுமிடம் தன்மீதான அன்பு என்று தெரியும். அதை வைத்து மருதன் மட்டுமல்லாது உதயனையும் வளைக்க நினைத்துவிட்டாள்.

நேற்று உதயன் அவள் சொல்ல வருவதைக்கூட கேட்காது சென்றது அவளுக்கு வலி கொடுத்தது நிஜம். ஊருக்குள் கெத்தாக கம்பீரமாக வலம் வரும் உதயன் மீது தானாக ஒரு பிடித்தம். அது காதலா என்றால் அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அதனை அவனிடம் சொல்லிட பயம். மருதனுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான். அதனால் அமைதியாக இருந்தால். சாதாரண விருப்பத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத வயதில்லை. ஈர்ப்பின் அளவு கூடிப்போக காதலாக உருவகம் கொண்டுவிட்டாள். காதல் என்ற ஒன்று நீ நினைக்கும் முன்பு உன் மனம் உணரும் என்பது ஏனோ தெரியவில்லை.

வந்தனா உதயன் மீது விருப்பம்கொள்ள முக்கிய பங்கு அவளது தோழிகளுக்கும் உண்டு.

தோழிகளுடன் வரும்போது போகும்போது உதயன் தென்பட்டால், “உரிமை இருந்தும் எட்ட நிக்கிற. எங்களுக்கு வெறும் சைட் மட்டும் தான் கொடுத்து வச்சிருக்கு. இப்படியொரு பையன்னா… பகையாவது, சண்டையாவதுன்னு நானெல்லாம் எப்பாவோ என்னத்தையும் செய்து இந்நேரம் கையால் தாலி வாங்கியிருப்பேன்” என்று வந்தனாவை, அவளின் விருப்பம் தெரிந்து வெறுப்பேற்ற, அவளின் மனதில் தோழிகளிடம் மூக்கு உடைபடக் கூடாதென்று நினைத்தவளுக்கு உதயனை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் தான்.

விளையாட்டாய் பேசும் பேச்சுக்களுக்கு அர்த்தம் கொண்டு ஒவ்வொன்றும் செய்ய நினைத்தால் வேதனை நமக்குத்தான். அவளுக்கு அது புரியவில்லை.

விளையாட்டு வினையாகுமென்று அவளது தோழிகளும் அறியவில்லை. சிறு சிறு விளையாட்டுப் பேச்சுக்கள் தான், பெரும் அனர்த்தங்களுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

திடீரென மருதன் திருமணமென்று சொல்லியதோடு, மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், நாளை வருகின்றனர் என்றதும் வந்தானாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

இதுநாள் வரை தற்செயலாகக் கடக்க நேர்கையில் கூட தன் முகம் பார்த்திராத உதயனிடம் காதலை சொல்ல வந்தவளுக்கு, அவன் தன்னை கண்டுகொண்டு பேசவே விடாது சென்றுவிட்டது மனத்தாங்கல் தான்.

அந்த மனத்தாங்கல் எப்படியும் உதயனை மணம் முடிக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஆழ விதைக்க, எதைப்பற்றியும் யோசியாது விடியலில் தென்னைமரத்தில் கூண்டு கட்டும் கரு வண்டிற்காக மருதன் வாங்கி வைத்திருந்த மருந்தினை எடுத்துக் குடித்துவிட்டாள். அதுவும் காப்பாற்றக் கூடிய அளவினை கணக்கிட்டு குடித்திருக்க, மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி அளிக்கும்வரை அமைதியாக இருந்தவள் அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

சகுந்தலா அழுது கரைய, மருதன் நெஞ்சில் அடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ஒற்றை மகள். அதீத பாசம் அவருக்கு. அவளின் செயலில் கடிந்துகொள்ளவும் வரவில்லை அவருக்கு.

“ஏன்டி இப்படியொரு காரியம் பண்ண. அந்த மனுஷன் என்னடி பாவம் பண்ணார். உன்மேல உசுரே வச்சிருக்கார். எப்படி நிலைக்குலைஞ்சி உட்கார்ந்திருக்கிறார் பாருடி” என்று சகுந்துலா அழ,

“எனக்கு உதயன் மாமாவை தான் கட்டிக்கணும்” என்றாள். விறைத்துக் கொண்டு.

“அவனுக்காகவா சாகத் துணிஞ்ச?” மருதன் கேட்க, “ஆமா. கட்டினா அவரைத்தான் கட்டுவேன்” என்றாள் அடமாக.

“அவன் வாசலை நான் மிதிக்கணுமா?” மருதனிடம் அவ்வளவு கோபம்.

“ஒருநாளும் இது நடக்காது.”

“அப்போ நானும் வைத்தியம் பார்க்க சம்மதிக்கமாட்டேன். செத்துப்போறேன்” என்றாள்.

“உன்னை இப்படி வாரிக்கொடுக்கவா அந்த மனுஷன் அம்புட்டு பாசம் காட்டி வளர்த்தாரு?” சகுந்தலா அழ, “எனக்கு பிடிச்சதை செய்து வச்சு பாசத்தைக் காட்டுங்க” என்றாள் வெடுக்கென்று.

“உன் முடிவு இதுதானா?”, மருதன்.

“ஆமா. அவரை கட்டிவச்சா வாழுறேன். இல்லை இப்போ இங்கவே சாவுறேன்” என்றாள். சற்றும் அசரவில்லை அவள்.

அவளுக்குத் தெரியும், மருதன் எத்தனைக்கு எத்தனை கோபக்காரரோ, அவ்வளவுக்கு அவள் மீது பாசம் கொண்டவர். அந்த தைரியத்தில் தான் அவரை இழுத்துப் பிடிக்கிறாள்.

“நேரமாகுது. விஷம் இரத்தத்தில் பரவினால் ஆபத்து” என்று மருத்துவர் சொல்ல, அடுத்து மருதன் எதுவும் யோசிக்கவில்லை கஜமுகன் வீட்டை நோக்கிப் புறப்பட்டிருந்தார்.

தன் மகள் இவ்வளவு அழுத்தமாக தன்னை எதிர்த்து நிற்கிறாள் என்றால், உதயனுக்கும் விருப்பமென்று அவராக நினைத்து சலம்பல் செய்திருந்தார்.

உதயன் பின்னாலே மருத்துவமனை வந்து சேர்ந்த மருதன், உதயன் மகளிடம் சொல்லியதைக் கேட்டு அதிர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

உதயன் சொல்லிய ஒற்றை வரியில், முழுதாய் அனைத்தையும் கண்டுகொண்டார்.

உதயன் மறுத்த பின்னர் தன் மகள் செய்து வைத்திருக்கும் செயல், அவருக்கு தலையிறக்கமாக இருந்தது.

உதயனின் வீட்டில் அத்தனை ஆட்டம் ஆடியவர், உண்மை தெரிந்த பின்னர், தனக்கு முன்னால் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருப்பவனின் முகம் பார்க்க முடியாது சிறுத்து தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்.

உதயன் சிறியவனாக இருந்தாலும், ஊரிலும் தொழில் செய்யும் இடத்திலும் அவனின் மதிப்பும் மரியாதையும் அறிந்திருப்பவருக்கு, அவனை பேசிய வார்த்தைகள் நினைத்து தற்போது குன்றலாக இருந்தது.

தான் அவ்வளவு பேசியும், தன்மீது தவறில்லை என்ற நிலையிலும், உதயன் இங்கு வந்து நிற்பதற்கான காரணம், அவரின் மகள் உயிர் பிழைக்க வேண்டுமென்ற காரணம் மட்டுமே அல்லவா.

எப்போதும் அவர்களைத் தொழிலில் அடிக்க, மருதன் பலவற்றை செய்வார். அவற்றையெல்லாம் சேதாரமின்றி உதயன் முறியடிப்பானேத் தவிர்த்து, ஒருபோதும் அவர் செய்ததை அவன் திருப்பி செய்ததில்லை. ஏன் செய்ய நினைத்துமில்லை. அதில் மருதனுக்கு எதிரி என்பதை தாண்டி உதயன் மீது உயர்வு. இன்று அவரின் பார்வையில் அவன் இன்னும் உயர்ந்து தெரிந்தான்.

மகளின் நாடகம் புரிந்து மனதில் வருத்தம் கொண்டார்.

சிகிச்சை முடிந்து வெளியில் வந்த மருத்துவர், “இனி பயப்பட ஒன்றுமில்லை” என்று சொல்லிச் செல்ல,

“போகலாம் சித்தப்பா” என்று உதயன் முன் நடந்தான்.

உதயன் இங்கு வந்தது, தன்னை காரணமாக வைத்து ஒரு உயிர் துடித்திடக் கூடாது என்பதற்காக மட்டுமே! வந்த காரியம் நடந்தேற கிளம்பிவிட்டான்.

உதயனே ஒன்றும் பேசாது கிளம்பிட, மகனைப் பின்பற்றி கஜேந்திரனும் சென்றுவிட்டார்.

இருவரில் ஒருவர் எதும் கோபமாக பேசியிருந்தால் கூட மருதனின் மனம் ஆறுதல் கொண்டிருக்குமோ? இப்போது இன்னும் நொந்துப்போனார்.

“இப்போ உங்க பொண்ணு நல்லாயிருக்காங்க” என்று செவிலி வந்து சொல்லியும், மருதன் மகளைக் காண செல்லாது அசையாது அமர்ந்திருந்தார்.

கணவரின் நிலை புரிந்த சகுந்தலா மட்டும் வந்தனாவை காண அறைக்குள் சென்றார்.

உதயன் வீட்டிற்கு வர, விஷயமறிந்து குமரி அங்கு கத்திக் கொண்டிருந்தார். உதயன் எப்படி செல்லலாமென்று.

ஜெயந்தன் அடக்கியும் குமரி வாயினை மூடவில்லை.

என்னதான் குமரிக்கு மருதன் சொல்லியது போல உதயனுக்கு வந்தனா மீது விருப்பமெல்லாம் இருக்காது என்று மற்றவர்கள் போன்று நம்பிக்கை இருந்தாலும், புள்ளி அளவு உண்மையாக இருந்துவிட்டால் தன் மகளின் வாழ்வு என்ற பயம்.

அதிலும் உதயன் அங்கு சென்றது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வந்தனா மீது அப்படியொரு எண்ணம் இல்லையெனும் போது எதற்காக உதயன் செல்ல வேண்டும் எனும் கேள்வி அவரிடம்.

“எவ்ளோ திமிரு கண்டு என்னத்தையும் செய்து வச்சா நம்ம புள்ளை எதுக்கு அங்க போகணும்?”

“இவள் தம்பி வராம வாய் மூடமாட்டாள்.” காமாட்சி கங்காவிடம் முணுமுணுத்தார்.

“இப்படி பறந்து கட்டி ஓடினா. ஊர் கண்டதும் பேசுமே. அதுக்கு நாமே வழி வைக்கணுமா? எதுக்கு போகணும்? ஊர் பேசணும்?” குமரி கையை ஆட்டி, வார்த்தையை இழுத்துப் பேச, உதயன் வண்டி சத்தம் கேட்டு மற்றவர்கள் வேலையாக இருப்பதைப்போல காட்டிக்கொண்டனர்.

“போகாம?” குமரி பேசியதைக் கேட்டுக்கொண்டே உள் வந்தான் உதயன்.

“அது வந்து தம்பி…” குமரி உதயன் ஒற்றை வார்த்தைக்கு தடுமாறினார்.

“பகையா இருந்தாலும் உரிமைப்பட்ட உறவாச்சே. விட முடியுமா?” கேட்ட உதயன் மேலேறிச் சென்றுவிட்டான்.

குமரி நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தார்.

உதயன் சொல்லிய உரிமைப்பட்ட உறவு என்பதில் அவரின் மனம் ஆட்டம் கண்டதென்றால், கங்காவிற்கு நெஞ்சம் குளிர்ந்தது. அவருக்கு இருக்கும் ஒரே பிறந்த வீட்டு உறவாயிற்றே! தன் இறுதிநாள் வரை பகையோடு போய்விடுமோ என்று கங்கா வருந்தாத நாளில்லை. உதயன் சொல்லியது, எப்படியும் வெட்டி நிற்கும் உறவை இணைத்து விடுவான் என்று அகமகிழ்ந்தார்.

“ஆஸ்பத்திரியில என்னாச்சு? உங்க மகன் சொல்லிட்டுப் போறத பார்த்தா என் மகளை நட்டாத்தில் விட்டுடுவீங்க போல. புதுசா தாய் மாமா உறவு கொண்டாடிட்டு போறாங்க” என்றார் குமரி.

ஜெயலட்சுமி தலையில் அடித்துக் கொண்டார். மகளின் வாயை மூட முடியாதென்று அறிந்து அவர் வாய் திறக்கவே இல்லை.

“நீயா எதையும் நினைச்சு பேசக்கூடாது குமரி” என்று ஆரம்பித்த கஜேந்திரன், இளங்கோவனின் செருமலில் அனைத்தும் கூறினார்.

அப்போது தான் குமரியின் மனம் தெளிந்தது. ஆனால் அவர் கொண்டிருக்கும் முடிவை செயல்படுத்த தீவிரமாகினார்.

Epi 17 and 18

என் ஆயுள் நீயே 17 ம 18

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
19
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்