என் ஆயுள் நீயே 13
கண்கள் மூடி தனது எண்ண அலைகளில் மூழ்கியிருந்த உதயன், அடுத்து என்ன என்ற பெரும் வினாவில் சுழன்று கொண்டிருக்க, அவனது அலைப்பேசி இசைத்தது.
இன்பா தான் அழைத்திருந்தான்.
“அண்ணா வந்துட்டிங்களா?” என்ற இன்பா, “நனியை ரூமில் காணோம்” என்றான் பதட்டமாக.
“என்னோட தான் இருக்காள்” என்ற உதயனின் பதிலில் ஆசுவாசம் கொண்ட இன்பா, “பயந்துட்டேன்” என்று மூச்சினை இழுத்துவிட்டான்.
அமைதியான இடத்தில், இன்பாவின் குரல் நனியிதழுக்கும் கேட்டது.
“இதோ வரோம்” என்ற உதயன் அழைப்பை அணைத்து அலைபேசியை சட்டை பையில் போட்டவனாக தங்கையை ஏறிட்டுப் பார்த்தான்.
“போலாம் அண்ணா!” எழுந்து முன் சென்றாள்.
உதயனிடம் சரி செய்யும் மார்க்கம் எதுவுமில்லை. ஆனால் தங்கையின் வாழ்வை நேர் செய்திட வேண்டுமென்ற எண்ணம் மட்டும் தீவிரம் கொண்டது.
“எல்லாருக்கும் என்னால் கஷ்டம் செல்வா!”
தோட்டத்து கதவினை உதயன் மூடிட, அதீத வருத்தத்தில் கூறினாள் நனியிதழ்.
“யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லை. நீ நார்மலா இருந்தாலே போதும். இனியாவது நினைவிலே வாழாம பழசை தூக்கிப்போட்டுட்டு, மூவ் ஆன் பண்ணப்பாரு” என்றான் இன்பா. அவனிடம் கோபமில்லை. கிடைக்காத ஒன்றிற்காக தங்கை மறுகுகிறாளே எனும் ஆற்றாமை.
அதிலும் அத்தனை ஆசையாக அன்றைய நாளினை எதிர்பார்த்திருந்த தங்கையின் ஒளிவீசிய முகம், அந்த நாள் முடிவதற்கு முன்பு கலையிழந்ததை கண்டு நெஞ்சம் வினவினான்.
பிரணவ்வை அழைத்துவர ஊரின் தலை வாசலுக்கு சென்ற இன்பா, நனியிதழின் கரம் பிடித்து அவளின் ஒட்டு மொத்த வருத்தத்தையும் போக்கவிருப்பவன் என்று எத்தனைக்கு எத்தனை மரியாதையாய் பிரணவ்வை பார்த்தானோ… அத்தனைக்கும் ஈடாய் இக்கணம் அவனின் மீது கோபம் கொண்டிருந்தான்.
வருத்தம் போக்க வேண்டியவன், பல மடங்கு அதிகமாக கொடுத்துச் சென்ற கோபம்.
“என்னடா கோபம் உனக்கு?” உதயன் அதட்டல் போல வினவ, “ஏன் உங்களுக்கு இல்லையா?” எனக் கேட்டான் இன்பா.
“என்னைக்கா இருந்தாலும் இந்த வீட்டு மாப்பிள்ளை அவங்க. நினைப்பிருக்கட்டும்.” அப்படியொரு அழுத்தமாக மொழிந்திருந்தான் உதயன்.
“வேணாம் சொல்ல சொன்னவங்க, வேணும்ன்னு வருவாங்களோ?” என்றான் இன்பா.
நனியிதழ் “அண்ணா” என்று இன்பாவின் அருகில் வர, “நீயிப்படி இருக்காதடா. அதுதான் என்னவோ பண்ணுது” என்றான்.
“நான்தான் வரேன் சொன்னனே. எதுக்கு இங்க நிக்கிற?” உதயன் கேட்டான்.
“ரூமுக்கு போனேன். நனியில்லை. தேடினேன். மொட்டைமாடியில் பார்த்தேன். ஆளில்லை. பயம் வந்திருச்சு. அங்கிருந்தே கால் பண்ணும்போது தான், கீழ உங்க வண்டி நின்னுத தெரிஞ்சுது. வந்துட்டிங்கன்னு புரிஞ்சுது. நீங்க உப்பளம் வரப்புல வரது தெரிஞ்சுது. கீழ வந்தேன்” என்றான்.
“ம்ம்” என்ற உதயன், உள்ளே நுழைய.
“எனக்கு குமரி அத்தை என்ன கட்டம் கட்டுவாங்களோன்னு இருக்கு” என்றான் இன்பா.
நடையை நிறுத்தி ஒரு கணம் தன் தம்பியை அழுத்தமாகப் பார்த்த உதயன், “இங்க வாய் திறந்து கேட்காம எதுவும் கிடைக்காது. மனசுல பேசுறது எதிரில் இருப்பவங்களுக்கு கேட்கணும் நினைப்பது முட்டாள் தனம். பார்வையாலே எல்லாம் எல்லாருக்கும் புரிஞ்சிடும் அப்படின்னா, மொழி எதுக்கு? பட்டு விடயத்தில் பிரணவ் செய்றததை வேறு விதமாக நீ செஞ்சிட்டு இருக்க. நீ செய்யுறது மட்டும் சரியா?” என்று அதே அழுத்தத்துடன் கேட்டுவிட்டு சென்றுவிட்டான்.
இதுநாள் வரை தனது விஷயம் அண்ணனுக்குத் தெரியாதென இன்பா நினைத்திருக்க… இக்கணம் உன்னையும் நானறிவேன் எனும் விதமாக அவன் பேசிச் சென்றதில் நிலைகுலைந்துப் போனான் இன்பா.
“அப்போ அண்ணா கல்யாணத்துக்கு நோ சொல்றது எனக்காகவா?”
இன்பா அதிர்ந்து கேட்டிருக்க, அவனருகில் நின்றிருந்த நனியிதழ்,
“உங்களுக்காக எப்படி சொல்றீங்க?” எனக் கேட்டாள். அவளும் இதுநாள் வரை தன் திருமணத்திற்காக என்றல்லவா நினைத்திருக்கிறாள்.
இன்பா காரணம் சொல்ல…
நனியிதழ் அதிர்வில் விழி விரித்தாள்.
“நான் லவ் பண்றது அவ்ளோ ஷாக்கிங்கா உனக்கு?”
இன்பா கேட்டிட இல்லையென தலையசைத்த நனியிதழ், “எனக்கு குமரி அத்தையை நினைச்சு பயம் வருது” என்றாள்.
“இன்னும் நானே தெளிவா ஒரு முடிவெடுக்கல. பார்ப்போம். என்னால குடும்பம் உடையாது. அப்படி ஒரு சூழ்நிலை வந்தா, காதலை தூக்கிப்போடத் தயங்கமாட்டேன்” என்றான்.
இன்பா சாதாரணமாக, தன் எண்ணத்தைக் கூறினான். ஆனால் நனியிதழுக்கு சுருக்கென்றது.
இன்பாவைப்போல் இல்லாமல், அவள் சுயநலமாக அல்லவா இந்த நான்கு வருடங்களும் இருக்கின்றாள். குடும்பம் முக்கியமென்று நினைத்திருந்தால், கிடைக்காத ஒன்றிற்காக காத்திருந்து அனைவரையும் வதைத்திருக்கமாட்டாளே!
“இன்னும் என்ன?”
உதயனின் குரலில் இருவரும் வேகமாக தத்தம் அறைக்குள் நுழைந்திருந்தனர்.
நினைத்ததற்கு ஏற்றதுபோல் விடியல் அத்தனை இதமாக இல்லை. ஆனால் காரணம் இவர்கள் எதிர்பார்த்தது போன்று குமரி அல்ல. இவர்களின் சிந்தையிலே இல்லாத ஒருவரால், விடியல் பெரும் பரபரப்பானது.
______________________
“அவங்களுக்கும் எனக்கும் ஒத்தும் வரும் தோணல. அப்புறம் உங்க விருப்பம்.”
நனியிதழின் குரல் காதில் எதிரொலித்துக் கொண்டிருக்க, பால்கனி கம்பியை பிடித்திருந்த பிரணவ்வின் கைகளில் இறுக்கம் கூடியது.
கடக்க முயல்கிறான். முடியவில்லை. கடந்துவிட்டான் என்று நினைத்திருந்த எண்ணம், அவளை கண்டதும் பொய்யாய்ப் போனது.
“அவ்ளோ வீக்கா நீ?” தன்னிடமே கேட்டுக்கொண்டான்.
தான் அனுப்பிய நன்றியை பார்த்துவிட்டாளா என்று நிமிடத்திற்கு ஒருமுறை அலைப்பேசியை எடுத்து பார்வையிட்டான்.
விடியல் தொடங்கிவிடும். இன்னும் உறக்கம் வராது இருள் வானை வெறித்துக்கொண்டு நின்றிருக்கிறான்.
“இனி அவங்களே வந்தாலும் இந்தப் பொண்ணு வேணாம் பிரணவ். வேற பார்ப்போம்.”
அன்னை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு திருமண குறித்து பேச்சினைத் துவங்கமாட்டாரென்று பிரணவ் நினைத்ததற்கு மாறாக, பெண் பார்க்க உதயன் வீடு சென்று வந்த சில மணி நேரங்களுக்கு புலம்பித் தள்ளிய விமலா, இரவு உணவு முடித்து பிரணவ் மேலே வந்த சில நிமிடங்களில் அறைக்குள் வந்து இவ்வாறு சொல்லவும், அன்னையை மலைத்துப் பார்த்தான்.
“மாம் பிளீஸ்…” சட்டென்று கத்தியேவிட்டான்.
இவர்கள் இதை விடவே மாட்டார்களா? திருமணம் செய்துகொள்ளாமல் வாழவே முடியாதா? ஆயசாமாக நினைத்தான்.
கொண்ட நேசம் நெஞ்சம் சேர்ந்திருந்தால், இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றியிருக்காதோ? கிடைக்கப்பெறாத ஒன்றின் ஏக்கம் அவனை திருமணத்தையே வெறுக்க வைத்தது.
“பிரணவ் என்னப்பா?”
“மாம் பிளீஸ்… மேரேஜ் மேரேஜ் அப்படிங்கிறதை கொஞ்சநாள் நிறுத்துங்க. முடியல மாம்” என்று நெத்தியை தேய்த்துக் கொண்டான்.
“இன்னும் எத்தனை நாளுக்குப்பா?”
“அம் ஜஸ்ட் டுவென்டி சிக்ஸ் தான் மாம். என்ன அவசரம்?”
“உனக்கில்லைடா. அஷ்மிக்கு” என்றார்.
“அவளுக்கென்ன? எனக்கு முன்ன பன்றதுன்னா பண்ணுங்க” என்றான்.
“அதுக்கு அவள் ஒத்துக்கணுமே! நீதான் அப்பா ஸ்தானத்தில் நிக்கனும் ஆசைப்படுறாள். சம்பிரதாய்த்துக்கு தனியா நிக்க முடியாது. நீ உன் பொண்டாட்டியோட நின்னு தான் தாரவார்த்து கொடுக்க முடியும். அதுக்கு முதலில் உனக்கு கல்யாணம் ஆகணும்.”
“மாம் போதும். இதையே எத்தனைவாட்டி சொல்லுவீங்க?” என்ற பிரணவ், “ஒரு பொண்ணை பார்க்கப் போயி, அவள் என்னை வேணாம்னு சொல்லி அந்த நாள் இன்னும் முடியல. அதுக்குள்ள வேற பொண்ணு பார்க்கலாம் சாதாரணமா சொல்றீங்க. எனக்கு அது ஹர்ட் ஆகியிருக்குமா? இருக்காதா? யோசிக்கவே மாட்டிங்களா?” என்றான். முகத்தில் கடுமையை காட்டி.
தான் அவர்களுக்கு புரிய வைக்க மென்மையாக முயற்சித்தால், அவர்கள் பக்கம் தன்னை வளைக்கத்தான் பார்ப்பார்கள் என்று பொய் கோபத்தை முகத்தில் அணிந்து கொண்டான்.
பிரணவ் ஒன்றை நினைத்துப்பேச, விமலா வேறு விதமாக அர்த்தம் கொண்டுவிட்டார்.
அவனுக்கு நனியிதழை அதிகப்படியாக பிடித்துவிட்டதாலே, அவளின் நிராகரிப்பில் கவலை கொண்டு தன்னிடம் கோபமாக வெளிப்படுத்துகிறான் என நினைத்தார்.
அதற்கு அழுத்தமாக வலு சேர்த்தது. அவன் பார்த்ததும் நனியின் படத்தை தனக்கு அனுப்பிக் கொண்டது.
பார்த்ததும் மனதில் ஏற்பட்ட பிடித்தம். வேண்டாம் என்கிற மறுப்பில் கவலை கொள்கிறான். வெளிவர அவகாசம் கொடுப்போம் என நினைத்தார் விமலா.
“சரிப்பா… உன் இஷ்டம். இனி கல்யாணம் பத்தி பேசல. ஆனால் முழுசா இல்லை. கொஞ்ச நாளுக்கு. நீ இதிலிருந்து வெளிவர வரை மட்டும். இதையே காரணமா வச்சு கல்யாணமே பண்ணிக்காம இருந்திடலாம் நினைக்காதே” என்று வெளியேறிவிட்டார்.
பிரணவ் தான் விவரிக்க முடியாத தோற்றத்தில் நின்றிருந்தான். அவன் ஒன்று நினைத்து காய்கள் நகர்த்த, அவனுக்கு அன்னையென்று காட்டிச் சென்றிருந்தார் விமலா.
‘இதை வச்சு சமாளிக்க முடியாது போலிருக்கே.’ தலையை சலிப்பாக ஆட்டிக்கொண்டான்.
‘இதுக்கெல்லாம் ஒரேவழி அஷ்மிக்கு கல்யாணம் செய்யணும். அஷ்மி மேரேஜ் ஸ்டார்ட் பண்ணா, எப்படியும் சிக்ஸ் மந்த்ஸ் ஓடிடும்.’
மெத்தையில் சென்று விழுந்தவனுக்கு, கோபம் முழுக்க நனியிதழ் மீதுதான்.
காரணம் அவன் மனம் மட்டுமே அறிந்தது.
‘நீ கொஞ்சம் ஸ்டெடியா இருந்திருக்கலாம். மொத்தமா கவிழ்ந்து, எழ முடியாம தத்தளிக்கிற.’ தன்னைத்தானே நிந்தித்தான்.
‘வீட்டுல சொல்ல முடியாம எனக்கு ஓகே சொன்னவளுக்கு நான் நல்லது தான் பண்ணியிருக்கேன்.’ நினைத்த பிரணவ் அலைப்பேசியில் தகவல் வந்ததற்கு அடையாளமாக சத்தம் வர எடுத்து பார்த்தான்.
அவன் அனுப்பிய நன்றிக்கு “இட்ஸ் ஓகே” என்று பதில் அனுப்பியிருந்தாள் நனியிதழ்.
“உனக்கு ஓகேவா தான் இருக்கும்.” கோபமாக முணுமுணத்தான். அலைபேசியை வேகமாக தூக்கி எறிந்தான். அதன் நல்ல நேரம் மெத்தையிலே விழுந்தது.
________________________
இன்பா சொல்லிச் சென்றதில், அவனைப்போல் தான் ஏனில்லை என்ற எண்ணத்தில் தவித்த நனியிதழ், உறக்கம் வராது அறைக்குள்ளே நடந்து கொண்டிருந்தாள்.
அவள் இதயம் கொண்டிருக்கும் ரணத்திற்கு, அவளால் நிம்மதியாக உறக்கம் கொள்ளத்தான் முடியுமா?
‘இதிலிருந்து வெளிவர வேண்டும்.’
நான்கு வருடங்களாக எடுக்க நினைக்காத முடிவை இன்று எடுக்கத் துணிந்தாள்.
ஆம்… தன்னுடைய காதலிலிருந்து, பிரணவ் மீதான நினைவிலிருந்து மொத்தமாக வெளிவர நினைத்துவிட்டாள்.
அது அவளுக்கு மட்டுமல்ல பலருக்கு நல்லது என்றெண்ணி முடிவு செய்துவிட்டாள். முடியுமா என்று தான் தெரியவில்லை.
ஒன்றை நாம் ஒதுக்க நினைத்தால் தான், நம் நினைவிலே தங்கிவிடும். நம்மையேச் சுற்றி வரும். இதையும் அவள் அனுபவிக்க வேண்டுமென்று உள்ளதோ!
முகத்தை அழுந்த தேய்த்தாள். பெருமூச்சு ஒன்று வெளிப்பட, இதயத்தை இரும்பு கதவு கொண்டு பூட்டினாள்.
இந்த நொடி முதல் பிரணவ்வின் எண்ணத்தை ஒதுக்கி வைக்க முயன்றுவிட்டாள்.
உறக்கம் வராது மெத்தையில் அமர்ந்தாள். மனதை திசை திருப்ப, அலைப்பேசியை கையிலெடுத்தாள்.
திரையில் முதலில் எம்பி குதித்தது பிரணவ்வின் தகவல் தான்.
ஏனோ ஓடி ஒளிந்து தன் மனதை மீண்டும் ஏமாற்றிகொள்ள நினைக்கவில்லை அவள். நேருக்கு நேர் மோதி பார்த்திட நினைத்துவிட்டால். வேண்டாம் வேண்டாம் என்பதற்கு ஒருமுறை எதிர்த்து நின்றுவிட்டால் எளிதாக கடந்துவிடலாம்.
பிரணவ்வின் நினைவை மறக்க, அவன் மீதான காதலை துறக்க, அவனை விட்டு விலகுவதைவிட எதிர்க்கொள்ளத் தயாராகிவிட்டாள்.
அதன் முதல் அடியாக, அவன் அனுப்பிய நன்றிக்கு பதில் அனுப்பியிருந்தாள்.
இனி எப்போதும் தன்னுடைய காதல் அவனுக்குத் தெரிந்துவிடக் கூடாதென்று உறுதி கொண்டாள்.
அவளின் நேசத்தை அவள் சொல்லாவிட்டால் என்ன? காலம் கடந்தாலும் சேர வேண்டிய இலக்கினை அடைந்து தானே ஆக வேண்டும். அது எதுவாக இருப்பினும்.
இனி வேண்டாமென்று நனியிதழ் முடிவெடுத்து, இனியெப்போதும் தெரிய வேண்டாமென்று நினைத்த அவளின் காதல், விலக்கி வைத்த பின்னர் அவளவன் அறிய நேர்ந்திட்டது.
என் ஆயுள் நீயே 14
கிட்டத்தட்ட விடியும் வேளையில் தான் கண் அயர்ந்தான் உதயன்.
இதுநாள் வரை தங்கையின் ஆசையை நிறைவேற்றி வைப்பதற்காக, தன் திருமணம் குறித்து, குமரி பலமுறை வீட்டில் பிரச்சினைகளை எழுப்பினாலும், நனியிதழின் திருமணத்தின் பின்னரே தன் திருமணமென்று அமைதியாகக் கடந்து வந்தான்.
ஆனால் இனியும் குமரி அமைதியாக இருக்கமாட்டாரென்று தெரியும். பெண் பார்க்கும் படலத்தின் போது தானில்லாததால் அவர் மேற்கொண்டு எதுவும் பேசாது விட்டாரென்று, வீடு நுழைந்ததும் செவி நுழைந்த அவரின் குரல் வைத்தே கண்டு கொண்டிருந்தான்.
வீடு அமைதியாக அவர் தற்போது மௌனித்து இருக்கிறார். நாளையே கூட என் மகளுக்கு வழி சொல்லென்று வந்து நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எப்படியாவது அனைத்தும் நேர் செய்திட வேண்டும் என்ற எண்ணம். நனியிதழுக்காக பார்க்கும் அதே மனம் தான் இன்பாவின் விடயத்திலும்.
இன்பா தனக்காக பார்க்கின்றான் என்று தெரியும். இருப்பினும் இளையவர்களின் விருப்பமே உதயனுக்கு முக்கியம். குமரிக்கு இவ்விடயம் தெரிந்தால் அவ்வளவுதான். ஏற்கனவே தன் மகளின் திருமணத்திற்கு நனியிதழ் குறுக்கே இடைஞ்சலாக இருப்பதாக அவரது எண்ணம். இதில் அவரது மகளின் விருப்பமும் ஆசையும் தெரிந்தால் அவ்வளவு தான்.
உதயனுக்கு தனு மீது மட்டுமல்ல, வேறெந்த பெண்ணின் மீதும் விருப்பமென்பதில்லை. வீட்டில் பார்த்து யாரென்று கை காட்டினாலும் சம்மதம் தான். அப்படித்தான் தனுவும்.
இதுவரை யாரும் தனு குறித்து அவனிடம் நேரடியாக பேசியதில்லை. குமரி மட்டும் உனக்கு என் மகள் தான். உனக்காகத்தான் அவள் காத்திருக்கிறாள் என்று உதயன் படிப்பை முடித்ததிலிருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சொல்லிடுவார்.
அதையெல்லாம் உதயன் கண்டு கொண்டதே இல்லை. நனியிதழ், எழில் உடனே தன்யாவும் இருப்பதால், வேறு விதமாக உதயன் தன்யாவை பார்த்ததுமில்லை. தனு மீது அப்படியொரு விருப்பமில்லை என்றாலும், வீட்டில் உள்ளவர்களின் தேர்வு எனும் நிலையில் ஏற்கும் விதமாக அமைதியாக இருந்தவனுக்கு, தனுவின் மனம் தெரிந்திட, சம்மந்தப்பட்டவர்கள் சொல்வதற்காக, குமரி திருமணப் பேச்சினை எடுக்கும் போதெல்லாம் மௌனமாக இருந்துவிடுகிறான்.
இப்போது குமரியை சமாளிப்பதை விட, அமிழ்ந்து போயிருந்த தங்கையின் ரணத்தை தானே கீறிவிட்டதைப் போலாகியதை எப்படி சரி செய்வதென்கிற எண்ணம் தான்.
குடும்பத்தில் சச்சரவு எழாது அனைத்தையும் எப்படி சரி செய்வதென்று உறக்கத்திலும் உதயனின் மண்டைக்குள் பலதும் ஓடியது. அதனால் ஆழ்ந்த உறக்கமில்லை.
மூன்று மாடி கொண்ட பெரிய வீடு அது. தரை தளத்தில் நின்று எத்தனை சத்தமாக பேசினாலும், உதயனின் அறை இருக்கும் இரண்டாம் மேல் தளத்தில் அத்தனை எளிதாகக் கேட்டிடாது. அப்படியிருக்கும் அமைப்பில், யாரோ கத்தி கூச்சலிட்டு கலாட்டா செய்யும் சத்தம் செவி நுழைய மெல்ல இமைகள் பிரித்த உதயன், எழுந்து வந்து என்னவென்று மேலிருந்த எட்டிப் பார்த்தான்.
வீட்டின் மையமான முற்றத்தில் நின்று மருதன் அதீத ஆக்ரோஷமாக இளங்கோவனிடம் கத்திக் கொண்டிருந்தார்.
‘நேற்று வந்தனா தன்னிடம் வந்து பேசியது தெரிந்துவிட்டது போல்.’ வந்தனா செய்து வைத்த காரியம் அறியாது, உதயன் இவ்வாறு தான் நினைத்தான்.
கங்கா கைகளை பிசைந்துகொண்டு பதட்டமாக நின்றிருந்தார். இத்தனை வயதாகியும் யாருக்கு பார்ப்பதென்று தெரியாது தவித்தார்.
கஜமுகன் மருதனை அடக்கும் வழி தெரியாது அமைதியாக நின்றிருக்க, கஜேந்திரன் வேட்டியை மடித்துக் கட்டி, அவருக்கு சரிக்கு சரி அதட்டிக் கொண்டிருந்தார். இருவருக்கும் நடுவில் இளங்கோவன் தடுமாறினார்.
முதல் தளத்தில் இன்பா நிற்பது தெரிய, “என்னன்னு பாரு இன்பா” என்று குரல் கொடுத்தான் உதயன்.
சத்தம் கேட்டு அப்போது தான் கண்களை தேய்த்தபடி தூக்கம் முழுதாய் விலகாது கொட்டாவி விட்டபடி வந்து நின்ற இன்பா, உதயன் குரலுக்கு மொத்த உறக்கத்தையும் விரட்டியவனாக, கீழே விரைந்தான்.
இன்பா வந்து தன் தந்தையர் இருவரையும் விலக்கிவிட்டு மருதனின் முன் நின்று, “முதலில் விஷயம் என்னன்னு சொல்லிட்டு கத்துங்க” என்றான். அமைதியாகத்தான் கூறினான்.
ஆனால் மருதனுக்கோ ஆத்திரம். மகள் செய்து வைத்திருக்கும் வேலையில் அதீத சினம். மகளிடம் காட்டிட முடியாது இங்கு வந்து குதித்துக் கொண்டிருக்கிறார்.
சாலையில் கடக்கும் போது கூட இவ்வீட்டின் வாசலில் கூட தன்னுடைய நிழல் பட்டுவிடக் கூடாதென அந்தப்பக்கம் தள்ளி ஒதுங்கி செல்லும் ஆள். இன்று நடு கூடத்தில் சலம்பிக் கொண்டிருந்தார்.
“என்னடா பெரியவங்க மரியாதை இல்லாம துள்ளுற?” எகிறினார். அவருக்கு யாரிடம் எப்படி தன் இயலாமையால் உண்டான கோபத்தை காண்பிக்க வேண்டுமென்று தெரியவில்லை.
“யாரு துள்ளுறது? வீடேறி வந்து குதிச்சிட்டு இருக்கிறது நீங்க தான்” என்று முறைத்து வைத்தான் இன்பா.
“இன்பா நீ செத்த அமைதியா இருய்யா” என்று பேரனை அடக்கிய கஜமுகன், “என்ன பிரச்சினைன்னு சொன்னாதானே தெரியும் மருதா” என்றார்.
“இவன் கிட்ட என்னப்பா தன்மையா பேசிக்கிட்டு… மொத இவனை வீட்டைவிட்டு வெளியில் போகச் சொல்லுங்க” என்றார் கஜேந்திரன்.
“நீ வேற ஏன்டா… அமைதியா இருடா” என்று தன் தம்பியை பிடித்து நிறுத்திய இளங்கோவன், “சத்தம் போட வேணாம் மருதா… நேரா விஷயத்தை சொல்லு” என்றார்.
ஆள் மாற்றி ஆள் கேட்டும் மருதன் அய்யனார் கணக்காக விறைத்து நின்றார். கையில் அரிவாள் மட்டும் தான் இல்லை.
“என்னன்னு சொன்னாதானே தெரியும்ண்ணா.” கங்கா பரிதவிப்பாய் வினவினார்.
அவர் பிறந்த வீடென்று சென்று முப்பது வருடங்கள் ஆகிறது. அண்ணன் உறவென்ற பாசம் இருந்த போதும், உரிமையாய் உறவாட வழியின்றி போனது. பார்த்தாலும், மருதன் முறுக்கிக்கொண்டு கடந்துவிடுவார். கங்கா அண்ணன் என்கிற உறவை மட்டுமே பார்க்க, மருதனோ இளங்கோவனின் மனைவியென்று தங்கையையும் ஒதுக்கி வைத்தார்.
அவ்வவ்போது பொதுயிடங்களில் பார்த்துக்கொள்வது தான்.
பல வருடங்களுக்குப் பின்னர், தன் வீடேறி வந்திருக்கும் உடன் பிறப்பின் வருகை இனிமையானதாக இல்லையென்ற வருத்தம் காங்காவிடம்.
மருதன் அளவிற்கு கஜமுகன் வீட்டு ஆட்களிடம் கோபமில்லை என்றாலும், மருதனை மனதால் தள்ளித்தான் வைத்திருக்கின்றனர். அதற்கு என்றோ நடந்து இத்தனை வருடங்களில் மறந்து போன சிறு பிரச்சினையை பிடித்துக் கொண்டு, இன்றும் மருதன் தொழிலில் குடைச்சல் கொடுப்பது தான் காரணம்.
“இந்த அண்ணாங்கிற உறவு கொண்டாட நான் வரல. எங்க உன் மவன். அவன் வந்தா நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு…” மருதன் முடிக்கும் முன்பு, அவ்வீட்டு ஆண்கள் நால்வரும் மருதனை அடிக்கப் பாய்வதைப் போல முன் வந்து சுற்றி நின்றனர்.
“யாரை மரியாதை இல்லாம பேசுறீங்க” என்று வேட்டியை மடித்துக் கட்டிய இன்பா, “எங்க தாத்தாவே நிமிர்ந்து பாக்குற ஆளு என் அண்ணன். நீங்க மரியாதை இல்லாம பேசுவீங்களா? நீங்க கொடுக்க நினைக்காத மரியாதை உங்களுக்கு திருப்பி கிடைக்கவும் கிடைக்காதுங்கிற அறிவில்லையோ?” என்று காட்டமாக உருத்து விழித்தான்.
“அவன் பெரிய கொம்புன்னா… அது உங்க வீட்டோட. எனக்கில்லை” என்று மருதன் கூற, இன்பா அவரின் சட்டையை பிடித்துவிட்டான்.
“இன்பா.”
உதயன் படிகளில் இறங்கிக் கொண்டிருக்க, தம்பியின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அழுத்தமாக விளித்தான்.
இன்பா அவரின் சட்டையை விடுத்து தள்ளி நிற்க, அப்போதுதான் மருதனுக்கு பின்னால் அவரின் மனைவி சகுந்தலா கண்ணீரோடு நின்றிருப்பது தெரிந்தது.
கங்கா தவிர்த்து வீட்டுப் பெண்கள், என்ன செய்வதென்று தெரியாது நின்றிருந்தனர்.
“என்ன விஷயம் சொல்லுங்க.” நேருக்கு நேர் நின்று மருதனின் முகம் பார்த்து வினவினான்.
உதயனின் நேர்கொண்ட பார்வை மருதனை தடுமாறச் செய்தது.
“எப்போ என் பொண்ணு கழுத்துல தாலி கட்டப்போற?” மருதன் அவ்வாறு கேட்டதும், அனைவரும் அதிர்ந்தனர்.
“நீங்க வீடு மாறி வந்து கேட்கிறீங்க.”
உதயன் சாதாரணமாகத்தான் கூறினான். அவருக்கு கேலி செய்வது போலிருந்ததுவோ.
“என்னடா நடிக்கிறியா?”
“வார்த்தையை பார்த்து பேசு மருதா.” கஜேந்திரன் கத்தினார்.
“உன் மவன் ஆசைகாட்டாம தான் கட்டுனா இவனைத்தான் கட்டுவேன்னு என் மகள் விஷம் குடிச்சி ஆஸ்பத்திரியில படுத்திருக்காளா?” மருதன் ஆத்திரத்தில் வெடிக்க, அனைவரும் ஸ்தம்பித்தனர்.
உதயனுமே இதனை எதிர்பார்க்கவில்லை. நொடியில் அதிர்விலிருந்து தன்னை மீட்டுக் கொண்டான்.
அவனால் நொடியில் தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லிட முடியும். ஆனால் அங்கு ஒருத்தி உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, இங்கு இவரிடம் மல்லுக்கட்ட முடியாதென்று உணர்ந்து, சகுந்தலாவிடம் திரும்பினான்.
“என்னாச்சு?”
மருதன் ஒரு பக்கம் வரம்பற்ற வார்த்தைகள் உபயோகித்துக் கத்திக் கொண்டிருக்க, அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாது மகன் அமைதியாக இருக்கிறானே என்று அனைவரும் நினைத்தாலும், இதில் தங்கள் பிள்ளையின் தவறு இருக்காது என்று முழுதாய் உதயனை நம்பினர். இருக்குமோ எனும் புள்ளி அளவில் கூட, அந்த நினைப்பே அவர்களுக்குள் இல்லை.
இப்போது அவன் விசாரிப்பது கூட மனிதாபிமான அடிப்படையில் அக்கறை என்று தான் நினைத்தனர்.
“உங்க பையனை நீங்க வேணா நம்புங்க. எதுவுமே இல்லாமத்தான் இவ்வளவுக்கு பதறுறானா?” என்ற மருதன், “என் மகளுக்கு மட்டும் எதும் ஆகட்டும். குடும்பத்தையே கொளுத்திடுவேன்” என்று முடிக்கும் முன்பு, “சும்மா இருங்க” என்று உறுமியிருந்தான் உதயன்.
அவனின் அதட்டல் பார்வையில் மருதன் வாய் கப்பென்று மூடிக் கொண்டது. முகத்திற்கு மிக அருகில் வேங்கையின் உறுமலில் நடுங்கிப்போனார்.
“பெரியவங்க… உண்மை தெரியாம கத்திக்கிட்டு இருக்கீங்கன்னு அமைதியா இருக்கேன்” என்ற உதயன், “அவருக்கு தண்ணி கொண்டு வந்து கொடு எழில்” என்றுவிட்டு சகுந்தலாவிடம் மீண்டும் என்னவானதென்று வினவினான்.
“தண்ணி கொடுத்து உறவை புதுப்பிக்கிறீங்களோ?” மருதனிடம் படு நக்கல்.
“தண்ணி வேண்டாமா… விடு எழில்” என்ற உதயன், சகுந்தலாவிடம் “நீங்க சொல்லுங்க” என்றான்.
அழுதுகொண்டே கணவரை பார்த்த சகுந்தலா, “இன்னைக்கு பொண்ணு பார்க்க வரதா இருந்துச்சு. அப்படியே பரிசம் போடுற மாதிரி ஏற்பாடு. பாவி மக, தென்னை மரத்து வண்டுக்கு வாங்கி வச்சிருந்த மருந்தை குடிச்சிப்புட்டாள்” என்று புடவை தலைப்பில் வாய் மூடி விம்மினார்.
“அதுகெதுக்கு நீங்க இங்க வந்து நின்னுட்டு இருக்கீங்க?”
உதயன் இப்படி கேட்டதும் மருதன் மீண்டும் கத்த ஆரம்பித்துவிட்டார்.
“தெரிஞ்சிகிட்டே கேட்டா என்னான்னு சொல்றது. நீ வந்து தாலி கட்டினா தான், வைத்தியம் பண்ண விடுவேன்னு தர்க்கம் பண்ணிகிட்டு இருக்கா. இவ்வளவு உறுதியாக பெத்தவங்களை எதிர்க்கிறான்னா, நீ சப்போர்ட் இல்லாமையா?” என்றார்.
“இவர்கிட்ட பேசுறது வேஸ்ட்” என்று வெளிப்படையாகவேக் கூறிய உதயன்,
“எந்த ஹாஸ்பிடல்?” என்று சகுந்தலாவிடம் கேட்டுக்கொண்டே, “வாங்க சித்தப்பா” என்று கஜேந்திரனை மட்டும் உடன் அழைத்துக்கொண்டு சென்றான்.
“உங்க வீட்டுல சம்மந்தம் வச்சிக்க எனக்கு துளியும் விருப்பமில்லை. ஒத்த புள்ளையா போயிட்டாள்… சாவுடின்னு விட மனசில்லை. கூட பிறந்தவளை ஒதுக்கி வச்சமாறி பெத்ததையும் ஒதுக்கி வச்சிடுறேன்” என்று துண்டினை உதறி தோளில் போட்டவராக மருதன் வெளியேற, உதயன் வண்டி கிளம்பியிருந்தது.
Epi 15 and 16
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
21
+1
+1