என் ஆயுள் நீயே 11
“சாரி மிஸ்டர் உதயன். எங்களுக்கும் தெரியும் இது பொய் தகவல் அப்படின்னு. இருந்தாலும் எங்க கடமையை நாங்க செய்யணுமில்லையா?” என்று கேட்ட, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி,
அங்கு ஏற்றுமதிக்கு கொண்டு செல்லத் தயாராக இருக்கும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதிகளவில் வேதியியல் மருந்துகள் பயன்படுத்தவில்லை என்ற அறிக்கையில் கையெழுத்திட்டு உதயனிடம் அளித்தார்.
அமைதியான புன்னகையோடு வந்திருந்த அதிகாரிகளுக்கு விடைகொடுத்தான் உதயச்செல்வன்.
இதற்கு பின்னால் யார் இருக்கின்றாரென்றும் அவனுக்குத் தெரியும். இருந்தும் அவர் போல் பழிவாங்கும் குணம் கொண்டவன் அல்லவே அவன். ஒவ்வொருமுறையும் அவர் செய்யும் சதிகளில் எல்லாம் தங்களை பாதுகாக்கவே முயல்கிறான். அவனின் பொறுமையும் ஒருநாள் கரை உடையும். அன்று அவர் மொத்தமாக வீழ்ந்து போவது உறுதி.
“அடுத்து என்ன சார் பண்ணட்டும்?” மேனேஜர் கேட்க,
“வழக்கம்போலதான். அடுத்து அவர் என்ன பன்றாருன்னு வெயிட் பண்ணுவோம்” என்று அளவாக புன்னகைத்து கிளம்பியிருந்தான்.
கன்னியாகுமரி முக்கிய சாலையிலிருந்து, அகத்தீஸ்வரம் செல்லும் கிளை சாலையில் உதயனின் தார் வண்டி பயணித்திட, யாருமற்ற இடத்தில் சாலையோரம் தனித்து நின்றிருந்த பெண்ணை கண்டதும், உதயனின் நெற்றி சுருங்கி விரிந்தது. அவன் காணாதவன் போல் கடக்க முயல, கை காட்டியிருந்தாள் அவள்.
அதற்கு மேல் யாரோ போன்று செல்ல இருவருக்குமிடையே இருக்கும் உறவுமுறை இடம் கொடுக்கவில்லை.
பெரியவர்களுக்குள் ஆயிரம் இருக்கும். வருங்கால தலைமுறையினர் நமக்கென்ன என்ற எண்ணம் தான் உதயனிடம், அதனால் தான் தொழிலில் பல குடைச்சல்கள் கொடுக்கும் அவளது அப்பாவையே விட்டு வைத்திருக்கிறான்.
இரு குடும்பத்திற்கும் இடையில் முக்கிய உறவாயிற்றே! அதுவுமில்லாது அவர் உதயனின் தாய் மாமா. விட்டுவிடக் கூடிய உறவா அது?
கங்காவின் உடன் பிறந்த அண்ணன் மருதன் அவர். உதயன் பிறப்பதற்கு முன்பே தொழிலில் சிறு பிரச்சினை. என்ன என்று இன்று யாருக்கும், ஏன் அவருக்குமே இதுதான் பிரச்சினைக்குரிய சரியான காரணமென்று சொல்லிட நினைவிலில்லை. இருப்பினும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக மருதன் பகையை தூக்கி சுமந்து கொண்டிருக்கிறார்.
அவருக்கு ஒரே மகள் வந்தனா. இன்பா வயது அவளுக்கு.
சிறு வயது முதல் ஆங்காங்கே பார்த்திருக்கிறான். ஆனால் இதுவரை பேசியதில்லை. இன்று அவளாக வருகிறாள். எதற்கென்று தெரியவில்லை.
யோசனையோடு சாலையோரம் வண்டியை நிறுத்தி கீழிறங்கினான்.
“நான் வந்தனா.” தடுமாறி மொழிந்தாள்.
“எதும் சொல்லணுமா?”
அவளுக்கு தன்னிடம் பேச என்ன இருக்கிறது எனும் எண்ணம் தான் உதயனிடம்.
அதுவும் பகை வீட்டு பிள்ளைகள் இருவர் இப்படி ஊர் எல்லையில் தனித்து நின்று பேசுவதை யாரும் பார்த்தால், தானாக பிரளயம் உருவாக மருதன் ஒருவர் போதும்.
“எனக்கு வீட்டில் பையன் பார்த்து பேசி முடிச்சிட்டாங்க” என்றாள்.
“பையனை பற்றி விசாரிக்கணுமா?”
மூன்று பெண் பிள்ளைகளுடன் வளர்ந்தவனுக்கு, மாமன் மகளான அவளின் வாழ்வும் நன்றாக அமைய வேண்டுமென்ற எண்ணம். அதனாலேயே அவளுக்கு பார்த்திருக்கும் பையன் விடயத்தில் தனேதும் உதவி செய்ய வேண்டுமோ எனக் கேட்டிருந்தான்.
இருப்பினும், இதை ஏன் தன்னிடம் வந்து சொல்ல வேண்டுமென்ற யோசனை அவனிடம். நொடியில் மூளை கிரகித்து விட்டது.
“எனக்கு உங்களை…”
வந்தனா சொல்லுவதற்கு முன்பே கைக்காட்டி தடுத்த உதயன்,
“வீட்டுக்குப்போ. உன் அப்பா, உனக்கு நல்லது தான் செய்வார்” என்று சொல்லி, அடுத்த நொடி கிளம்பிவிட்டான். அவளை முழுதாக சொல்லவே விடவில்லை அவன்.
இதுநாள் வரை அவளை அவன் நேருக்குநேர் பார்த்ததுக்கூட கிடையாது.
‘எப்படி இந்த எண்ணம்? அதுவும் பேசியே இராத தன்மேல்.’ சலிப்பாக தலையை ஆட்டிக்கொண்டான்.
உதயனின் வண்டி மறையும் வரை, கன்னத்தில் நீர் இறங்க பார்த்து நின்றிருந்த வந்தனா, அழுகையோடே வீடு வந்து சேர்ந்தாள்.
________________________
உதயன் வீடு வர, பிரணவ் குடும்பம் சென்றிருந்தனர்.
குமரி நடுவீட்டில் அமர்ந்து நனியிதழை திட்டிக் கொண்டிருந்தார்.
“இருந்து இருந்து இப்போ தான் பையன் பார்த்தாங்க. கல்யாணம் நடக்கும் பார்த்தா, வேணாம் சொல்லிட்டாள். அவள் அண்ண பார்த்த பையனையே வேண்டாம் சொல்லிட்டாளே, இனி வர பையனை எல்லாம் இப்படி எதோ காரணம் சொல்லி தட்டிக் கழிச்சா, அடுத்தடுத்து பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆக வேண்டாமா?” வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு அனைவருக்கும் பிள்ளைகளின் விருப்பம் தான் முக்கியம். அதனால் நனியிதழ் ஒத்துவராது என்றதும், அடுத்து ஒரு வார்த்தை வந்து சென்றவர்கள் குறித்து யாரும் பேசவில்லை. குமரி மட்டும் நனியால் தன் மகளின் வாழ்வு தள்ளிப் போகிறதே என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
அவரை அடக்க நினைத்து யாரும் பேசினால், அடுத்து தனு, உதயன் திருமணம் பற்றி பஞ்சாயத்தை கூட்டிவிடுவாரென்று யாரும் அவரின் பேச்சு கேட்காததுப்போல் தத்தம் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
உதயனின் தலை தெரிந்ததும் வாயினை கப்பென்று மூடிக்கொண்டார் குமரி.
“எப்போ கிளம்பினாங்க?”
“அரைமணி இருக்குமுங்க.”
உதயன் கேட்டிட ஜெயலட்சுமி பாட்டி பதில் வழங்கினார்.
ஆண்கள் யாரும் கூடத்தில் தென்படவில்லை.
“தாத்தா, அப்பா எங்கே?”
“வந்தவங்க என்ன சொன்னாங்க உங்களுக்குத் தெரியணுமா?” என்ற குமரி, “உங்க தங்கச்சி வந்த பையனை வேணாம் சொல்லிட்டாள்” என்றார்.
“ம்ம்…” என்ற உதயன் உள்ளே செல்ல நகர,
“இப்படி அவர் மாப்பிள்ளையெல்லாம் வேணாம் சொல்லிட்டு இருந்தால், எப்போ கல்யாணம் ஆகுறது. எழிலே படிப்பை முடிச்சு கல்யாணத்துக்கு வந்து நின்னுடுவா” என்றார்.
உதயன் திரும்பி ஒரு பார்வை பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை. சென்றுவிட்டான்.
“அப்படி எத்தனை பையன்டி இந்த வீட்டுக்கு பொண்ணு பார்க்கன்னு வந்திட்டானுவ, உனக்கு எதுக்கு அவசரம் தெரியுது. அதுக்காக நனிக்கு பிடிக்காம பண்ணமுடியாது” என்று லட்சுமி பாட்டி குமரியை பேசுவது வீட்டின் அமைதியில் அறைக்குள் முடங்கியிருந்தவர்களுக்கும் நன்கு கேட்டது.
உதயன் தங்கையின் அறையிருக்கும் முதல்தள படிகளில் ஏறிட, அங்கிருக்கும் கூடத்தில் இன்பா அமர்ந்திருந்தான்.
“என்ன இங்க உட்கார்ந்திருக்க?”
உதயன் குரல் கேட்டு விழி திறந்த இன்பா,
“அவளை பார்க்க முடியலண்ணா. எதாவது பண்ணுங்க. அழல… ஆனால் அழுத்தி வைக்கிறது அவளோட முகத்துல தெரியுது” என்று உதயனை கட்டிக்கொண்டான்.
தம்பியின் தோளில் தட்டிய உதயன் என்ன நடந்ததென்று கேட்பதற்கு முன்பே இன்பா நடந்ததைக் கூறினான்.
“அவன் தான் சொல்ல…”
“இன்பா!” முடிக்கும் முன்பு உதயன் அழுத்தமாக தம்பியின் பெயரை உச்சரித்திருந்தான்.
“சாரி…” என்று கட்டுப்போடு சொல்லிய இன்பா, “தனியா பேசிகிட்டப்போ அவங்க தான் எதோ சொல்லியிருக்காங்க. நனியும் பிடிக்கலன்னு சொல்லிட்டாள்” என்றான்.
தங்கையின் வலி தீரப்போகிறதென்று அதிகம் எதிர்பார்த்து விட்டான் போலும், அவனால் இதனை ஏற்கவே முடியவில்லை.
“பிடிக்கல சொன்னாளா?”
இல்லையென்ற இன்பா, நனியிதழ் ஒத்துவராது என்று சொல்லியதைக் கூறிட,
“பிரணவ் பக்கம் என்னியிருக்கு தெரியாம நாம அவசரப்படக் கூடாது இன்பா” என்றான் உதயன்.
“அவங்க யாரையும் லவ் பண்ணல. எப்படியும் வீட்டில் பார்க்கும் பொண்ணை என்னைக்கா இருந்தாலும் கல்யாணம் செய்யத்தானே போறாங்க? அதுக்கு நம்ம நனியையே கட்டிக்கலாம் தானே” என்றான். இன்பாவால் அமைதியடையவே முடியவில்லை. ஆற்றமாட்டாது மனதில் உள்ள வருத்தத்தையெல்லாம் புலம்பலாக அண்ணனிடம் காட்டினான்.
“கோல்ட் ஸ்ட்டோரேஜ் கணக்கு ஆடிட்டர் கேட்டிருந்தார். கொடுத்திட்டு வா” என்றான். உதயனுக்கு தம்பியை திசை திருப்ப தொழில் ஒன்றே வழியெனத் தெரியும்.
“ம்ம்… அப்படியே லாஸ்ட் மந்த் டாக்ஸ் ரிப்போர்ட் வாங்கிட்டு வா” என்றான்.
சரியென்று இன்பா சென்றிட, உதயன் தனியிதழின் அறைக்குள் நுழைந்தான்.
மெத்தையில் சுருண்டு படுத்திருந்தாள். அலங்காரத் தோற்றத்தை கலைக்காது அப்படியே தான் இருந்தாள். அவளின் அதகியப்படியான அலங்காரமே நெற்றியில் பொட்டு, இமை இழைகளுக்கு மை பூசுவதே! இன்று அதையும் தாண்டி தனுவின் கை வண்ணத்தில் முகப்பூச்சுக்கள் உதவியால் மிளிர்ந்த முகம், வதங்கி கண்ணீர் தடத்தோடு காண அண்ணனவன் ஆவி துடித்தது.
அழுது அழுது தானாக உறங்கியிருக்கிறாள் என்பது புரிந்தது.
தங்கையின் அருகில் அமர்ந்த உதயன், அவளின் கன்னத்தில் காய்ந்த கண்ணீர் தடத்தில் கை வைத்து கனிவோடு அவளின் முகம் பார்த்தான்.
எத்தனை அழுத்தமிருந்தாலும் அவனது பட்டுவின் முகம் அவனை இதமாக்கிவிடும். அவனது இதயம் இளைப்பாறும் இடம் தங்கை.
இன்று அவள் இதம் தொலைத்து வேதனை சுமக்க, நீக்கும் அவனறிந்த மார்க்கமும் அடைபட்டுப் போனது.
அடுத்து என்னவென்று சிந்தித்தவனிடம் பெருமூச்சு.
“அண்ணா.” உள் வந்தாள் எழில்.
“பிக்கப் பண்ண இன்பா வந்தானா?”
“ஹம். என்னை ட்ராப் பண்ணிட்டு போயிட்டாங்க” என்ற எழில், “அக்காக்கு பையனை பிடிக்கலையா?” எனக் கேட்டாள் அவன் அருகில் அமர்ந்து.
உதயன் எதுவும் சொல்லவில்லை.
“எக்சாம் எப்போ?” எனக் கேட்டுக்கொண்டே, “அவள் தூங்கட்டும், வா” என சின்னவளை அழைத்துக்கொண்டு, இரண்டாம் தளத்திலிருக்கும் தன்னுடைய அறைக்கு படியேறினான்.
“என்ன சொல்லணும்?”
எழில் தன் பின்னாலே வரவும் கண்டுகொண்டவனாக அறைக்குள் வந்தததும் வினவினான்.
“பர்ஸ்ட் இயரிலிருந்து நல்ல ஃபிரண்ட். பெஸ்ட் ஃபிரண்ட் கூட சொல்லலாம். சடனா லாஸ்ட் இயர் என்கிட்ட பேசாதன்னு சொல்லிட்டான். உங்களுக்குத் தெரியுமே! அப்போ உங்ககிட்ட சொல்லியிருக்கேன். ரீசன் தெரியலன்னாலும், அவனுக்கு எதோ பிடிக்கல விலகியிருக்க நினைக்கிறான் புரிஞ்சு நான் பேசறதை விட்டேன். பட் அவன் எப்பவும் போல அதே கேர், பாண்ட். பேசறது மட்டும் தான் இல்லை. காலேஜில் எனக்கு ஒன்னுன்னா முதல் ஆளா அவன் அங்க இருப்பான். இன்னைக்கு டக்குன்னு முன்ன வந்து நின்னு…” அதுவரை வேகமாக மூச்சுவிடாது சொல்லிக்கொண்டே வந்தவள் டக்கென்று நிறுத்திக்கொண்டாள்.
“ஓகே” என்ற உதயன், அவள் சொல்லாது விட்டது புரிந்த போதும், எதுவும் கேட்காது குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
“அண்ணா இப்போ நான் என்ன பண்ணனும்?” குளியலறை மூடிய கதவுக்கு முன் நின்று கேட்டாள்.
சட்டையை கழட்டி கம்பியில் மாட்டியவன், நீரை அள்ளி முகத்தில் அடித்தான்.
‘இந்த லவ் வாழ்க்கையில ரொம்ப விளையாடும் போலவே!’ மனதில் சலிப்பாக சொல்லிக்கொண்டான்.
“அண்ணா…” கதவில் சாய்ந்து நின்றாள்.
“டோர்ல சாய்ஞ்சிருந்தின்னா தள்ளி நில்லு” என்ற உதயன் கதவினை திறந்து, தூவாலையால் முகத்தை துடைத்தபடி வெளியில் வந்தான்.
பனியனுடன் இருந்தான். கழுத்தில் மெல்லிய தங்கச்சங்கிலி. நனியிதழ் அவனது பிறந்தநாளுக்கு வாங்கிக் கொடுத்தது. செல்வா என்ற பெயர் பதித்து.
அதில் எழிலுக்கு எப்பவும் ஒரு கண். கேட்டால் கொடுப்பானென்று தெரியும். ஆனாலும், நனியிதழ் வாங்கிக் கொடுத்திருக்க, அவனுக்கு அது எத்தனை பிடித்தமாக இருக்குமென்று அறிந்து கேட்காது இருக்கிறாள்.
அன்பால் மட்டுமே பிணைந்த உறவுகள். அதனால் தான் என்னவோ மற்றவரின் வேதனை, பிறருக்கும் வலி கொடுக்கிறது.
“எதாவது சொல்லுங்க மிஸ்டர்.உதய்” என்றாள். சங்கிலியை இழுத்து பிடித்தவளாக.
“நாலு உதை வேணும்னா கொடுக்கலாம்” என்றான்.
தூவாலையை அதற்குரிய இடத்தில் போட்டவன், திரும்பி அங்கிருந்த மேசையில் சாய்ந்து, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.
“நானும் இதேதான் நினைச்சேன். ஏனோ முடியல” என்று அவன் பக்கத்தில் சென்ற எழில், அவனைப்போலவே அவனது புஜத்தில் சாய்ந்து நின்றாள், கைகளைக் கட்டிக்கொண்டு.
“ஐ திங்க்…” என்று இழுத்து, “நானும் அது பண்றேன் தோணுது” என்றாள்.
என் ஆயுள் நீயே 12
“ஐ திங்க்… நானும் அது பண்றேன்” என்ற எழில் உதயனின் முகம் பார்த்தாள்.
“நான் உதைக்கணும் சொன்னது உன்னை” என்ற உதயன், நகர்ந்து சென்று டி சர்ட் எடுத்து அணிந்தவனாக கட்டிலில் சென்று அமர்ந்தான்.
“இப்போ நான் என்ன பண்ணனும்?”
எழிலுக்கும், உதயனுக்கும் எட்டு வருட வித்தியாசம். அவனுக்கு அவள் குழந்தை. அவளும் அவனை தந்தை ஸ்தானத்தில் தான் வைத்திருக்கிறாள். அதனால் தான் காதல் விடயத்தில் கூட அவனிடம் ஆலோசனைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
ஏற்கனவே ஒருத்தியின் காதல் வலியை கண்கூடாக பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு, எழிலுக்கு என்ன பதில் சொல்வதென்று கூட தெரியவில்லை.
அவளுக்கும் அந்தப் பையனை பிடித்திருக்கிறது என்றபோதும், அவனிடம் சொல்லாது தன்னிடம் வந்து என்ன சொல்லட்டுமென அனுமதி கேட்டு நிற்பவளின் காதலுக்கு எதிராக பேசவும் முடியாது மௌனித்து நின்றான்.
சிறியவர்கள் தங்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்காது, பெரியவர்களின் அனுமதி வேண்டி கேட்கும்போது, அவர்களின் விருப்பம் சரியெனும் நிலையில் சம்மதம் வழங்குவதே பெரியவர்களுக்கு அழகு.
அப்படித்தான் நனியிதழின் காதலுக்கு துணை நின்றான். ஆனால் இன்று அவளின் நிலை? சிறிய தங்கைக்கும் அந்த நிலை வந்திடுமோ என்று சிறு அச்சம்.
“என்னண்ணா அமைதியா இருக்கீங்க?” என்ற எழில், “உங்களுக்கு வேணாம் அப்படின்னா எனக்கு வேணாம். விடுங்க” என்று இலகுவாகக் கூறினாள்.
“அடுத்து என்ன பண்ணப்போற?”
தன்னுடைய அமைதியில் தானாக காதல் வேண்டாமென்று சொன்னாலும், இக்கணம் அவளின் மனம் எப்படித் துடிக்குமென்று அறிந்திருந்த உதயன் அவளை மாற்றும் பொருட்டு வேறு பேசினான்.
“நம்ம ஷிப்பிங் எக்ஸ்போர்ட்ஸ் பார்த்துக்கலாம் இருக்கேன். வேலை கிடைக்குமா ஓனர்” எனக் கேட்டாள். உடல் மொழியில் அத்தனை பவ்யம் காட்டி.
“வாலு” என்று கன்னம் கிள்ளியவன், “முறையா அப்ளை பண்ணுங்க. இன்டர்வியூ நல்லா பண்ணீங்கன்னா ஜாப் ஓகே ஆகும்” என்றான்.
“ஹான்… இன்டர்வியூ, எனக்கு?” என்றவள், உதயன் சிரித்ததில்… “சீட் ரெடி பண்ணி வைங்க” என்றாள், மிதப்பாக.
“பண்ணிடலாம்” என்ற உதயன் பேச்சுவாக்கில், அவள் சொல்லிய பையன் குறித்து கேட்டறிந்து கொண்டான்.
தங்கையின் நண்பன் எனும் முறையில் பலமுறை அவனைப்பற்றி அவள் சொல்லிக் கேட்டிருக்கிறான். ஆனால் பின்புலம் எதும் தெரியாது. ஏற்கனவே முன் அனுபவம் ஒன்று இருக்க, சரி சொல்லவும் முடியவில்லை. தங்கையின் ஆசையை அவனால் வேண்டாமென்று தடை செய்யவும் முடியவில்லை.
“சரிடா நீ போ” என்று எழிலை அனுப்பி வைத்த உதயன், முதலில் பெரியவளின் வாழ்விற்கு தீர்வு கண்போமென்று சிந்தையை அதன் வழியில் செலுத்தினான்.
உதயன் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். இருந்த ஒரு வழியும் அடைத்துப் போனது. இனியென்ன எப்படியென்று தெரியவில்லை. ஆனால் தங்கையின் காதலை சேர்த்து வைக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும் ஸ்திரமாக தீவிரம் பெற்றது.
நனியிதழ், பிரணவ் பற்றி சொல்லிய நேரம், “இந்த வயதில் சாதாரணமாக வரும் உணர்வு தான் இது. ஒதுக்கி வைக்க பாரு. அப்பவும் முடியலன்னா அடுத்து என்ன என்று பேசுவோம்” என தன்மையாக எடுத்துக் கூறினான்.
மீண்டும் சில மாதங்களில் நனியிதழ், உதயனின் முன்பு, “ஈசியா கடந்து போற அட்ராக்ஷனா தெரியல” என்றாள்.
அடுத்த இரு நாட்களில் பிரணவ்வின் மொத்த ஜாதகத்தையும் அவன் பிறந்த இடம் முதல்கொண்டு கையில் கொண்டு வந்திட்டான்.
“எனக்கு ஓகே” என்று உதயன் சொல்லியதுடன், “படிப்புக்கு அப்புறம் பார்த்துக்கலாம்” என்றான்.
அண்ணனின் சம்மதம் இருக்கும் போது நிச்சயம் தன் காதல் கைக்கூடிடும் எனும் அதீத நம்பிக்கையில் காதலை உரியவனிடம் கூட வெளிக்காட்டிடாது உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டாள். அவளால் பிரணவ்வின் முகம் பார்த்து சொல்லும் தைரியம் இல்லை என்றும் சொல்லலாம்.
உதயன் பெருமூச்சோடு நனியிதழின் அறைக்குச் சென்றான்.
கதவு திறந்தே இருக்க உள்ளே நுழைந்தான்.
முந்தைய தூக்கம் அவளிடமில்லை. வெறுமனே கண்களை மூடியிருப்பபது உருளும் கருவிழிகளில் தெரிந்தது.
“பட்டு.” மென்மையாய் ஒலித்த தனது அண்ணனின் மெல்லிய குரலுக்கு வேகமாக எழுதமர்ந்தாள்.
அவளின் அருகில் அமர்ந்தவன் பரிவாய் தலை கோதினான்.
உதயனின் நெஞ்சில் சாய்ந்து கொண்ட நனியிதழ்,
“எதுவும் கேட்டிடாத செல்வா” என்றாள்.
அடுத்து உதயன் அதைப்பற்றி அவளிடம் பேச நினைக்கவில்லை. இயல்பானதும் தானாக சொல்வாள் என்று தெரியும்.
“சாப்பிடலாமா?”
உதயன் கேட்டதும் முகம் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.
“பசிக்குது.”
உதயன் தன்னை உண்ண வைப்பதற்காக சொல்கிறான் என்று தெரிந்தும், அவன் அவ்வாறு சொல்லிய பின்னர் அவள் வேண்டாமென்று மறுத்து உட்கார்ந்திடுவாளா?
“வரேன் அண்ணா” என்று எழுந்து குளியலறை சென்றவள், முகம் கழுவி வந்தாள்.
தனக்காக உணர்வுகளை அடக்க முடியாது மறைக்கின்றாள். அண்ணனவனால் தங்கையின் மனம் புரிந்துகொள்ள முடியாதா என்ன?
இருவரும் கீழே வர, கூடத்தில் யாருமில்லை.
“சித்தி.” உணவு மேசை இருக்கையில் நனியிதழை அமர வைத்து தானும் அமர்ந்த உதயன், காமாட்சியை அழைத்தான்.
அவர் அறைக்குள்ளிருந்து வேகமாக வந்தார்.
“யாரும் சாப்பிடலையா?”
“மாமா, அத்தை இப்போ தான் சாப்பிட்டு போனாங்க தம்பி. பெரிய மாமாவும், அவங்களும் சாப்பிட்டாச்சு. அக்கா, அத்தைக்கு மாத்திரை கொடுக்கப் போயிருக்காங்க. நான் எடுத்து வைக்கிறேன்” என்று அவர் சமையலறைக்குள் செல்ல,
“இன்பா” என்று குரல் கொடுத்தான்.
எழிலும், இன்பாவும் சேர்ந்து வந்தனர்.
“இன்னும் சாப்பிடாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்ற உதயன், எழிலுக்கு நனியிதழை கண்காட்டிட, புரிந்தது எனும் விதமாக தமக்கையின் அருகில் அமர்ந்தாள் எழில்.
“இப்போ என்னவாகிப் போச்சுன்னு உம்முன்னு இருக்கீங்க?” என்று எழில் கேட்க, உயிர்ப்பில்லா புன்னகை சிந்திய நனியிதழ், “நான் ஓகே தான் அண்ணா. என்னை யோசிக்காம நீங்க நார்மலா இருங்க” என்று உதயனிடம் திரும்பி கூறினாள்.
உதயன் எழிலை பார்க்க…
“சொதப்பிடுச்சு” என்று முகம் சுருக்கினாள் எழில்.
இன்பா அமர,
“ஃபைல்ஸ் எங்க?” என்றான் உதயன்.
“ஆஃபீஸ் ரூமில் வச்சிட்டேன் அண்ணா” என்ற இன்பா, நனியிதழிடம் பேசுனீங்களா எனும் விதமாக பார்வை மொழி பேசிட, உதயன் கண் மூடி திறந்தான்.
மூவரும் தனக்காக பார்ப்பது நனியிதழுக்கு இன்னும் வேதனையைக் கூட்டியது.
காமாட்சி உணவினை பரிமாற, நால்வரும் பெயருக்கு உண்டு எழுந்தனர்.
“உதயா.” இளங்கோவன் மகனை அழைக்க, உதயன் அவருடன் அலுவலக அறை நோக்கி நகர்ந்தான். உடன் இன்பா.
உள்ளே வந்த உதயன் மீண்டும் வேக எட்டுக்கள் வைத்து நனியிதழிடம் வந்தான்.
“எதுவும் நினைக்காம தூங்கணும். நான் இருக்கேன்” என்று தங்கையின் கன்னம் தட்டிச் சென்றான்.
“என்னாச்சுக்கா… நிஜமா பையனை பிடிக்கலையா?” என எழில் கேட்க, நனியிதழ் எதற்கு இந்த கேள்வி எனும் விதமாக பார்த்தாள்.
பெண் பார்க்கும் நிகழ்வு சாதாரணமான ஒன்று. பிடித்திருந்தால் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். இல்லையென்றால், வேறு பையன் பார்க்க முனைவர். இப்படி அளவுக்கு அதிகமான வருத்தம் சுமந்து அமைதியாக இருக்கமாட்டார்களே! அதுவும் உதயனின் முகம், இந்த சம்மந்தம் கூட வேண்டுமென்று வெகுவாக எதிர்பார்த்ததை காட்டிக் கொடுத்திட்டது.
“அண்ணா பார்த்த பையன். நிச்சயம் பெஸ்ட்டா தான் இருந்திருக்கும். நீங்க நோ சொல்ல சான்ஸ் இல்லையே” என்று எழில் இழுத்தாள்.
தங்களின் முகம் வைத்தே மனதை அறிந்து கேள்வி கேட்கும் தங்கையையே மௌனமாக பார்த்திருந்த நனியிதழ்,
“எல்லா நேரமும் நாம நினைக்கிறது சரியா நடக்கும் எதிர்பார்க்கிறது தப்பு எழில்” என்றாள்.
“புரியலக்கா!”
“நல்லது” என்ற நனியிதழ், “நான் பின்னால் இருக்கேன்” என்று வீட்டின் பின்பக்கத் தோட்டத்திற்கு சென்றுவிட்டாள்.
‘உனக்குத் தெரியாம என்னவோ இருக்கும்போலயே எழிலு.’ நனியிதழ் சென்ற திசையையே பார்த்திருந்தாள் எழில்.
“என்னடி தனியா பராக்கு பார்த்திட்டு நிக்கிற. நேரமாச்சே… போ தூங்கு.” அப்போது வந்த கங்கா, மகளை விரட்டினார்.
“தம்பி முகம் வாட்டமா இருந்துச்சுக்கா. நனி இந்த பையனை வேண்டாம் சொன்னதுல தம்பிக்கு எதும் வருத்தமோ?”
கங்கா மற்றும் காமாட்சி ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண, காமாட்சி தான் கவனித்ததை வைத்துக் கேட்டார்.
“அவங்களுக்கு நனி விருப்பம் தான் காமு எப்பவும் முக்கியம். அவங்க வீட்டுக்கு வரும் போது குமரி சலசலத்துக்கிட்டு இருந்தாளே… அதுல நனி எதும் சோகமா இருந்திருக்கும். தம்பி முகம் வாட்டப்பட்டிருக்கும்” என்றார் கங்கா.
“என்னவோக்கா… இந்த குமரி வந்து நாளைக்கு என்ன கிளப்பிவிடுவான்னு பயந்து வருது” என்றார்.
இருவரும் பேசிக்கொண்டே உணவை முடித்து, எல்லாம் எடுத்து வைத்து, கழுவி சுத்தம் செய்து வர, அன்றைய தொழில் கணக்குகளை பேசி முடித்து ஆண்கள் மூவரும் வெளியில் வந்தனர்.
“இன்னுமா ரெண்டு பேரும் உறங்கப்போகாம இருக்கீங்க?” என்ற இளங்கோவன், “பிடிச்ச மாதிரி வேற இடம் சீக்கிரமே பார்த்திடலாங்க” என்று உதயன் தோளினை தட்டினார்.
‘பிடிச்ச மாதிரியா… இந்த ஜென்மத்தில் அப்போ நடக்காது.’ இன்பா வருத்தமாக மனதில் நினைத்தான்.
“பையனை உங்களுக்கு அதிகத்துக்கும் பிடிச்சிடுச்சா தம்பி?” இளங்கோவன் திடமாக சொல்லியும், உதயன் அமைதியாகவே நின்றிருக்க, கங்கா கேட்டிருந்தார்.
இப்போதும் உதயன் அமைதியாகத்தான் நின்றான்.
“நீங்க இன்னும் ஒருமுறை சொன்னா நனி ஒத்துக்கும்” என்றார்.
இங்கு, அவள் முடிவு அல்லவே. முடிவெடுத்த நபரே அவனாயிற்றே!
“பார்த்துக்கலாம்மா” என்ற உதயன், “இனி இதைப்பற்றி யாரும் பேசக்கூடாது” என்று நகர்ந்திட்டான்.
உதயன் உத்தரவு போலவோ அல்லது அழுத்தமாகவோ சொல்லவில்லை. ஆனால் அவன் கூடாது என்று சொல்லிய பின்னர் மீண்டும் அதைப்பற்றி பேச யாருக்கும் விருப்பமில்லை.
“எதும் மறைக்கிறீங்களாடா?” இளங்கோவன் அவ்வாறு கேட்டதும், இன்பா பதில் சொல்லாது தடுமாறினான்.
“அது வந்து பெரியப்பா…” அவன் வார்த்தையை இழுத்திட, நிறுத்து என்று கை காண்பித்த இளங்கோவன், “நீ உதயாவை மீறி சொல்லமாட்ட தெரியும். ரொம்ப திணறாத” என்றார்.
“சாரி பெரியப்பா!”
“போடா.”
தத்தம் அறைக்குச் சென்றனர்.
இன்பா மாடியேற, உதயன் கீழிறங்கி வந்தான்.
“தெற்கு பக்கம் மீன் பிடிக்கப்போன போட், சுழல்ல மாட்டிக்கிச்சாம் இன்பா. கடல் உள்ளவரை போகணும்” என்றான்.
“நான் அப்பாவை எழுப்புறேன் அண்ணா.”
“வேணாம்” என்று தடுத்த உதயன், “வீட்டில் யாருக்கும் தெரிய வேணாம். பட்டு ரூம் கதவு மூடி தான் இருக்கு. தூங்கிட்டாள் நினைக்கிறேன். பார்த்துக்கோ” என்று வெளியேறியவன், நள்ளிரவு கடந்து முன் விடியலை நெருங்கும் சமயம் தான் வீடு வந்து சேர்ந்தான்.
அநேக நேரங்களில் நடக்கும் நிகழ்வு தான். திடீரென்று கடல் நீரில் சுழல் ஏற்பட்டு படகினை தாடுமாறச் செய்திடும். வீரியம் அதிகமென்றால், படகில் சேதாரம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதிலும் படகிலிருப்பவர்கள் கடலில் விழுந்தால், நீச்சல் தெரிந்திருந்தாலும் இரவு நேரம் நீரின் குளுமையில் எத்தனை நேரத்திற்கு தத்தளித்துக் கொண்டிருக்க முடியும்? இங்கிருந்து அங்கு என்ன நிலையென தவித்து நிற்பதற்கு நேரிலே சென்றுவிடலாமென உள் சென்ற உதயன், அசாம்பாவிதம் எதுவுமில்லை என்றதும், முதல் கட்ட மீன் பிடிப்பு நடக்கும் வரை உடனிருந்துவிட்டு வந்திருந்தான்.
நேராக நனியிதழின் அறைக்குத்தான் சென்றான். ஆளில்லை. இரவு உணவை முடித்துக்கொண்டு அவள் தோட்டத்துப் பக்கம் சென்றது அவனுக்கு தெரியாதே!
வீடு முழுக்கத் தேடியவன், அவளின் எண்ணுக்கு அழைக்க, உணவு மேசையில் அடித்து ஓய்ந்தது.
மொட்டைமாடிச் சென்று பார்த்தான்.
கீழே தோட்டத்தில், கடற்கரை பக்கம் செல்லும் மதில் வாயில் திறந்திருக்க வேகமாக அப்பக்கம் சென்றான்.
அவர்களின் தென்னந்தோப்பு, உப்பளம் கடந்து கடற்கரைக்கு வந்தவனுக்கு உடல் குறுகி பாறையில் அமர்ந்திருந்த தங்கையை கண்ட பின்னர் தான் உயிர் வந்தது.
அதன் பின்னரான நேரம், பிரணவ் மீது காதலால் கசிந்துருகிக் கொண்டிருக்கும் அவளே வேண்டாமென்றதற்கான காரணம் அறிந்து, முந்தைய எண்ண அலைகளில் சுழன்று கொண்டிருந்த உதயன் தன்னுடைய அலைபேசி அழைப்பில் நிகழ் மீண்டான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
22
+1
1
+1
1