என் ஆயுள் நீயே 1
காரிருள் விலகிய, பாதியிரவு கடந்த கருமையும் வெண்மையும் கலந்த நேரம்.
ஆந்தையின் அலறளும், இரவுப் பூச்சிகளின் ரீங்காரமும் சில்லென்ற காற்றில் பேரிரைச்சலாய் ஒலித்துக் கொண்டிருந்தது.
எங்கும் கும்மிருட்டு. அச்சமும் அச்சம் கொள்ளும் இருளான இருள்.
கிராமத்து கடலோர பண்ணைப்பகுதி அது.
தென்னந்தோப்பினை கடந்து, உப்பு வயல்களின் வரப்பின் மீது கால் வைத்த உதயனின் கண்கள், கருமை பூசிய அவ்விடத்தை பார்வையால் அலசியது.
குளிர் காற்று வேறு மேனியை நடுங்கச் செய்திட, தான் தேடும் நபர் எங்கென்று விழிகளை சுழட்டியவனுக்கு, அத்தனை அச்சம். அந்நபர் தன் கண்ணில் பட்டுவிட வேண்டுமென்று. அவனின் உயிராயிற்றே அவர்!
“பட்டு” என்று அவனின் அதரங்கள் பிரிந்து உச்சரித்திட, வேட்டியின் ஒரு முனை நுனியை தூக்கி பிடித்து வரப்பில் நடக்கத் துவங்கினான்.
பரந்த பண்ணை முழுவதும் தேடிவிட்டான், தேடி வந்த ஆள் எங்குமில்லை. பார்க்காது விட்ட ஒரே இடம் கடலோரப் பகுதி. அங்கு தவறான எண்ணத்தில் சென்றிருக்க வாய்ப்பில்லை எனும் அதீத நம்பிக்கை இருந்தபோதும் மனதில் ஒருவித அலைப்புறுதல்.
“தன் எண்ணம் சரியாக இருக்காது” என்று வாய்விட்டே சொல்லிக் கொண்ட உதயனுக்கு, அங்கு செல்லவே கால்கள் தயக்கம் கொண்டன.
சென்று பார்க்கத்தான் வேண்டும். அழுகையோடு பார்த்தது இன்னும் வலியாகிறது அவனுள்.
“டேய் எங்கடாம்மா இருக்க?” என்ற உதயனுக்கு கண்கள் கலங்கியது. எத்தனை இனிமையாய் தொடங்கிய நாள். இப்படியானதற்கு காரணம் தெரியாது, பதில் வழங்க வேண்டிய நபரைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.
உப்பளம் கடந்து கடல் மணலில் கால்கள் புதைய அடி வைத்து கடல் நீர் பட்டுத் தெறிக்கும் பாறைகளின் அருகே வரவர அவனின் இதயத் துடிப்பு, அவனுக்கே கேட்டது. இதயம் பதைப்பில் வெளியே எம்பி குதித்திடுமோ எனும் நிலையில் அவன்.
கலங்கிய கண்ணின் திரையில் வரிவடிவம். இமைகளை சிமிட்டி பார்வையைக் கூர்மையாக்கினான்.
பெரிய கரும்பாறை உச்சியில், ஒரு உருவம் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது.
அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சினை ஆசுவாசமாக வெளியேற்றினான். இடையில் கைகளைக் குற்றி வானோக்கி முகம் உயர்த்தியிருந்தவனின் உதடு குவிந்திருக்க, கண்ணின் ஓரம் நீர் கசிந்தது.
“பட்டு” என்று இதழ் பிரித்த உதயன் வேக எட்டுக்கள் வைத்து அருகில் சென்றான்.
அலைகள் உயர்ந்து பாறை மோதி விளையாடிட, உடல் நனைவதை கூட உணராது கால்களைக் கட்டிக்கொண்டு, மடியில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள் நனியிதழ்.
அருகில் சென்ற உதயன், அவளின் தோளில் கை வைத்த அடுத்த கணம், அவனின் இடையில் கையைச் சுற்றி, வயிற்றில் முகம் அழுந்த, அவனிடம் ஆறுதலாய் ஒண்டினாள்.
“பட்டு…”
“அண்ணா பிளீஸ்… முடியல!”
தங்கையின் நிழல் மீது எறும்பு ஊர்ந்தாலும் துடித்து விடும் உதயனுக்கு, தங்கையின் வலி நிறைந்த வார்த்தைகள் உயிரை உறைய வைத்தது.
ஒரு கரத்தை நனியிதழின் தோள் சுற்றி அரவணைத்த உதயன், மற்றொரு கரத்தை அவளின் தலையில் வைத்து அழுத்தம் கொடுத்தான்.
“நான் என்னடா பண்ணனும்?”
மெல்ல அவனிலிருந்து பிரிந்து, முகம் பார்த்தாள்.
சொல்ல முடியா வலி அவளின் முகத்தில். உதடு துடிக்க, வார்த்தைகளற்று சகோதரனின் முகம் பார்த்தவள்,
“கஷ்டப்படுத்துறனா செல்வா?” எனக் கேட்டாள்.
தங்கையின் தலும்பிய குரலில் முற்றிலும் உடைந்து உள்ளுக்குள் கதறினான் உதயச்செல்வன்.
மனதில் சகோதரியின் நிலை குறித்து அத்தனை வலிகள் நிரம்பியிருந்த போதும், அவளின் கேள்விக்கு இல்லையென்று இடவலமாக தலையசைத்திருந்தான்.
“பொய் சொல்றீங்க” என்ற தங்கையின் கன்னங்கள் இரண்டையும் தன்னிரு உள்ளங்கையில் தாங்கி, நெற்றி முட்டிய உதயன், “நிஜமா இல்லைடா பட்டு” என்றான்.
பொய் என்று அவளுக்கும் தெரியும். அவனுக்கும், தான் இல்லையென்றதை உண்மையென அவள் நம்பவில்லையென்று தெரியும். இருந்தாலும் அவளால் கேட்காது இருக்க முடியவில்லை. அவனால் உண்மையை சொல்ல முடியவில்லை.
“நான் பேசட்டுமா பட்டு?”
“வேண்டா அண்ணா.” பட்டென்று மொழிந்திருந்தாள்.
“வேறென்ன செய்யப்போற?”
“தெரியல.”
“ம்ம்” என்ற உதயன், அவளருகில் அமர்ந்தான். வாகாய் அண்ணனின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.
“என்ன சொன்னான்?” அத்தனை கடுப்போடு வெளிவந்தது உதயனின் கேள்வி.
“முதல் முறையவிட, இது ரொம்பவே வலிக்குது செல்வா” என்ற நனியிதழின் முகம் பார்த்த உதயன், அவளின் வலி போக்கும் வழியறியாது தவித்தான்.
எப்போதும் அண்ணா அண்ணா என்று அத்தனை அன்போடு அழைக்கும் நனியிதழ், தான் நெகிழும் நொடிகளில், தன்னால் முடியாத நிலையில், வருத்தம் கொள்ளும் வேளையில், உடைந்து நிற்கும் தருணங்களில் மட்டுமே வலி நிறைந்து செல்வா என்று அழைத்திடுவாள்.
தங்கையின் செல்வா என்றழைப்பு எத்தனைக்கு எத்தனை பிடிக்குமோ, அதே அளவிற்கு அவள் அவ்வாறு கூப்பிட்டுவிடக் கூடாதென இறைவனிடம் தினமும் வேண்டிக்கொள்வான்.
உதயச்செல்வனின் உயிர் நனியிதழ். அவனின் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவனது தங்கைக்காகவே நகர்கிறது. பெரும் சொந்தம் உள்ளபோதும், அவனின் உலகம் உடன்பிறந்தவள். அவளுக்கு அடுத்து தான், பெற்றோரும்.
முதல்முறை அவள் செல்வா என்று அழைத்த கலங்கிய ஒலி, இந்த நொடியும் அவனது செவிகளில் எதிரொலித்தது.
நான்கு வருடங்களுக்கு முன்பு,
நனியிதழின் கல்லூரிப் படிப்பின் இறுதிநாள்.
அன்றும் இப்படித்தான் கலங்கி துடித்தாள்.
அன்றும், இன்றும் அவளின் வலிக்கு ஒரே காரணம் காதல். முதல் வலியிலிருந்து மீண்டு வந்துவிட்டாள் என்று நினைத்திருக்க, நீ இன்னும் அவனிலிருந்து மீளவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலிக்க உணர்த்தியது இன்று அரங்கேறிய நிகழ்வு.
அதில் பெண்ணவள் மொத்தமாக துவண்டு உருக்குலைந்துப் போக, அண்ணனவன் ஒன்றும் செய்திட முடியாது, தங்கையின் கண்ணீரில் தன் ஜீவன் வற்ற வருந்துகிறான்.
பெரும் உயரத்தில், அதீத செல்வ செழிப்போடு இருந்து என்ன பயன்? உடன் பிறந்தவளின் கண்ணீர் போக்க முடியவில்லை. வேறெதுவும் என்றால் பணம் கொடுத்து வாங்கி கொடுத்துவிடலாம்.
இது காதலாயிற்றே!
அன்பை விலை கொடுத்து பெற முடியுமா? தானாக துளிர்க்க வேண்டிய நேசத்தை, பிடுங்கிக் கொள்ளத்தான் முடியுமா?
தங்கையின் மனம் விரும்பும் முன்னே, அவளின் எண்ணத்திற்கு உயிர் கொடுப்பவன். அவள் உயிராகக் கேட்கும் ஒன்றை கரம் சேர்த்திட முடியாது வதை கொள்கிறான்.
உதயச்செல்வன்… கன்னியாகுமரிக்கு அருகே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகத்தீஸ்வரம் ஊர். பெரிய குடும்பம். உறுப்பினர்களில் மட்டுமல்ல, அங்கு கஜமுகன் என்கிற பெயர் அத்தனை பிரபலம். உதயனின் தாத்தா. ஆளுமையான, மிகவும் பிரபலமான நபர். அவர் வழி தொட்டு மகன் இளங்கோவன். தற்போது அவர்களின் வாரிசு உதயன்.
உப்பளம், கடல் உணவு உயிரினங்கள் ஏற்றுமதி, இறால் வளர்ப்பு பண்ணைகள், தேங்காய் மண்டி, வீட்டு அலங்காரத்திற்காக கடல் பொருட்களான கிளிஞ்சல்கள், சங்குகள் கொண்டு தயாரிக்கப்படும் தொழிற்சாலை ஆகியவை இவர்களின் குடும்பத் தொழில். சொந்தமாக, நாடுகள் பல சுற்றும் இரண்டு சரக்கு கப்பல்கள் உள்ளன.
தற்போது இவை யாவும் உதயச்செல்வனின் பொறுப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவனுக்கு உதவியாக, இளங்கோவனின் தம்பி ஜெயந்தனின் மகன் எழிலின்பன்.
இளங்கோவனும், ஜெயந்தனும் தங்கள் பணியை தேங்காய் மண்டி மற்றும் தென்னையை மூலமாகக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் தயாரிக்கும் ஆலையோடு நிறுத்திக் கொண்டனர். இளையவர்களின் வளர்ச்சிக்கு வழிவிட்டு விரும்பியே விலகி நின்றனர்.
உதயன் தன்னுடைய தாத்தா மற்றும் அப்பாக்களின் பெயரை முந்திவிட்டான் என்று சொல்வது மிகையாகாது.
அழுத்தமானவன். அவனின் மென்மை பக்கம் அறிந்தவர்கள், அவனது தங்கைகள். உடன் பிறந்த நனியிதழ். சித்தப்பாவின் மகள் எழிலினி. எழிலின்பனின் உடன் பிறந்தவள்.
இன்பனிடம் கூட உதயன் அழுத்தம் தான். குடும்பத்தின் தலைமை பொறுப்பில் இருப்பதாலோ என்னவோ அளந்து தான் பேசுவான்.
இயல்பிலேயே அதிகம் பேசிடாதவன் உதயன். யாராக இருப்பினும் கேட்டதற்கு பதில். அதுவும் தான் நினைத்தால் மட்டுமே வழங்குவான். பார்வையாலே தன் பேச்சினை புரிய வைத்திடுவான்.
உதயன் தன் குடும்பத் தொழிலுக்கு ஏற்ப கால்நடை மேலாண்மையில் பட்டம் பயின்றான். இறுதி வருடப் படிப்பின் போது, எதிராளியால் தொழிலில் பெரும் அடி ஏற்பட, மேலெழும்ப முடியாத நிலை. உதயன் தான் களமிறங்கி ஆறு மாதத்தில் சரிவில் விழ இருந்த தங்களின் தொழிலை தூக்கி நிறுத்தினான். அன்று முதல் அவனது கைகளில் தொழிலின் பாதை வளர்ச்சி தான்.
அத்தனை இளம் வயதில், அனுபவம் வாய்ந்த தாங்களே திணறிய நிலையில் பிரச்சினையின் மூலத்தை அறிந்து தீர்த்து வைத்திட்ட உதயச்செல்வனின் மீது வீட்டின் மூத்த ஆண்கள் மூவருக்கும் தானாக மரியாதை வந்துவிட்டிருந்தது.
தொழிலில் முதல் அனுபவமே பாடமாக அமைந்திட, அத்தனை எளிதாக யாரையும் நம்பிடமாட்டான். தொழிலில் அவன் நம்பி பொறுப்புகளை கொடுக்கும் ஒரு நபர், அவனது தம்பி எழிலின்பன் மட்டுமே. அவனிடமும் அளவுக்கு அதிகமாக பேசிடமாட்டான்.
தொழிலில் முனைப்பாக இருந்தவனிடம் இயல்பாகவே இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அது எதிராளிக்கு அவனை நெருங்க அச்சத்தைக் கொடுக்க, இதுதான் சரியென தானாக தக்கவைத்துக் கொண்டான்.
வீட்டிலிருப்போரும் அவனின் ஆளுமையில் தன்னைப்போல் மரியாதை கொடுக்க ஆரம்பித்திட, அவனுடைய நெகிழ்வு, பேச்சு யாவும் குறைந்துவிட்டது.
தங்கையிடம் மட்டும் அதிகமாக பேசுவான். சத்தமின்றி நீண்டு சிரித்திடுவான். அவையும் கடந்த மூன்று வருடங்களாக தங்கையின் சோகம் கண்டு அவனிடம் மறைந்து போனது.
எது நடந்தாலும் சரிசெய்து தனக்கு துணை நிற்கும் அண்ணன் உடனிருப்பதால், மனதின் வருத்தத்தை ஒதுக்கி வைத்து, பொங்கி வரும் அழுகையை கட்டுக்குள் வைத்தபடி பேச்சின்றி அமைதியாக கண்மூடி இருந்தாள் நனியிதழ்.
“இன்னும் நீ, நான் கேட்டதுக்கு பதில் சொல்லல.” சில நிமிடங்களுக்குப் பின்னர் உதயனின் குரல் ஒலித்தது.
மெல்ல அவனின் தோள் சாய்த்திருந்த தலையை நிமிர்த்தியவள், இருளின் தூரப் புள்ளியாய் ஒளிரும் கலங்கரை விளக்கின் வெளிச்சத்தை வெறித்தாள்.
“அவங்களுக்கு கல்யாணம் செய்துக்கிறதுல விருப்பம் இல்லையாம். மேரேஜ் லைப்லாம் ரொம்ப போர் அண்ட் கமிட்மென்ட் பிரஷராம். இப்போ மைண்ட் முழுக்க பிஸ்னஸில் தான் இருக்காம். அவங்க அம்மா எமோஷனலா பிளாக் பன்றாங்களாம்” என்று நிறுத்தினாள்.
“சோ?” என்று கேள்வியாக தங்கையை நோக்கிய உதயன், நனியிதழ் முகம் கவிழ்த்த…
“உனக்கு விருப்பமில்லன்னு சொல்ல சொன்னாங்களாக்கும்” என்றான்.
நனியிதழின் தலை மெல்ல ஆமென்று ஆடியது. பாறை மோதும் அலை நீருக்குப் போட்டியாய், அவளின் கண்கள் சுரக்கும் உப்பு நீரும் கன்னம் வழிந்தது.
தங்கையின் கண்ணீரை பார்க்க பார்க்க உதயனுக்கு ஆவி துடித்தது.
‘காதலை மறந்து…’ என நினைத்த மனதை ஒரு கணம் நிறுத்தி, ‘காதலை விலக்கி’ என மாற்றி, ‘தன் பாதையில் தெளிவாக சென்று கொண்டிருந்தவளை மீண்டும் காதலின் வலிக்கு உட்படுத்திவிட்டோமே! அவளின் அழுகைக்கு தானே காரணமாகிவிட்டோமே!’ என்று உள்ளம் மருகினான் உதயச்செல்வன்.
தங்கையின் காதல் ஒருதலை நேசமாக மடிந்திடக் கூடாதென நினைத்து, காதலாக சேர்ந்திடாவிட்டால் என்ன? திருமணத்தில் இணைத்து வைப்போம் என்று எண்ணியே காய்கள் நகர்த்தினான். அது ஆட்டம் ஆடப்படாமலே கலைக்கப்படுமென்று உதயனும் எதிர்பார்க்கவில்லை.
தங்கை விரும்பும் பையனின் குணம், பின்புலம் என எல்லாம் ஆராய்ந்து பார்த்தவன், அவனின் மனதையும் தெரிந்துகொண்டு அடி வைத்திருக்க வேண்டுமோ?
*ரத்தமானவளின் துயர் போக்கிட
ஜீவனானவன் செய்திட்ட செயல்
வலிக்கு நிவாரணியாகது
மேலும் வலிக்கூட்டும் ரணமாகியது
யார் செய்த பிழையோ?*
என் ஆயுள் நீயே 2
இரவு உணவு நேரத்திற்குப் பின்..
தோட்டத்து கல்மேடையில் அமர்ந்து, தன்னுடைய கணவர் விஜயனிடம் ஆற்றமாட்டாது புலம்பிக் கொண்டிருந்தார் விமலராணி.
“என்னதான் சமாதானம் செய்து கொண்டாலும், ஏமாற்றத்தை தாங்கிக்க முடியலங்க” என்றார் விமலா.
“ரொம்ப அழுத்தம் கொடுத்துக்காத விமலா” என்ற விஜயன் மனைவியின் கரம் பற்றி ஆறுதல் அளித்தார்.
“மனசு ஆறவே மாட்டேங்குதுங்க” என்ற விமலா, “தரகர் போட்டோ காட்டியதும் பிரணவ் பக்கத்துல அந்தப் பொண்ணை கல்யாண கோலத்துல நிக்க வச்சு பார்த்துட்டேன். அப்படியொரு பொருத்தம். கற்பனையே மனசுக்கு நிறைவா இருந்துச்சு. ரொம்பவே ஆசைப்பட்டுட்டேன். மருமகள் நினைச்சு தான் பார்க்கவே வந்தேன். விருப்பமில்லைன்னு இப்படி பட்டுன்னு சொல்லும் எதிர்பார்க்கலங்க. இப்போ வெறும் கற்பனையா ஆகிடுச்சு” என்றார். இதயத்தின் வருத்தம் அவரின் பேச்சில் தெரிந்தது.
“என்ன நடக்கணுமோ அதுதான் நடக்கும் விமலா” என்ற விஜயன், “பிரணவ்வுக்கு அந்தப் பொண்ணு இல்லையோ என்னவோ!” என்றார்.
“என்னவோ பார்த்ததும் பிடிச்சு போச்சு. அமைதியான அழகு. இனி வேறெந்தப் பொண்ணு பார்த்தாலும் அவளுக்கு மேல உசத்தியா இருக்கணும்ன்னு தான் தோணும்” என்றார். விமலாவுக்கு அந்த பெண்ணை அத்தனை பிடித்திருந்தது. திருமணமே வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்த மகன் கூட, அவளின் புகைப்படம் பார்த்ததும், பேசுங்க என்று தன் விருப்பம் சொல்லிட, அவனுக்கு பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது என்று அகம் மகிழ்ந்து போனார். மகனின் தகிடுதத்தம் அறியாது.
“நாம் ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? பொண்ணுக்கு விருப்பம் இருக்கணுமே” என்ற விஜயன், “அந்தப் பொண்ணுக்கு பிரணவ்வை பிடிக்கலையே! நாம் என்ன செய்யறது?” என்றார்.
“அப்படி என்ன குறையை கண்டாளாம் அவள். என் மகன் மாதிரி ஒருத்தன் தேடினாலும் கிடைக்குமா?” கணவரிடம் தன் கோபத்தைக் காட்டினார் விமலா.
அதுவரை அந்தப்பெண் அமையவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தவர் தற்போது வெகுண்டு இருந்தார். எந்த தாய்க்குத்தான் தன் மகனை வேண்டாம் என்று சொல்லிய பெண்ணை பிடிக்கும்.
“சரி விடுங்க. அவளை விட அழகான அறிவான பெண்ணை பார்ப்போம்” என்று எழுந்து உள்ளே சென்ற விமலா,
அங்கு கூடத்து இருக்கையில் அமர்ந்திருந்த மகனின் அருகில் சென்று அமர்ந்தார்.
அப்போதுதான் பிரணவ் தன் தாத்தா ராகவன் ஆறுதலாக பேசிச் சென்றிருக்க… ஆசுவாசமாக மூச்சினை இழுத்து வெளியேற்றினான்.
அதற்குள் அன்னை வரவும் சடுதியில் முகத்தை அதி தீவிரமாக ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பதைப்போல வைத்துக் கொண்டான்.
“விடு பிரணவ்… உலகத்துல இவள் ஒருத்தி மட்டும் தான் பொண்ணா?” என்று கோபமாகக் கேட்ட விமலா, “இருந்தாலும் பட்டு புடவையில அவ்ளோ அம்சமா இருந்தாள். பார்க்கவே அம்மன் சிலையாட்டம்” என்றார்.
அவரின் முகம் காட்டிய பாவனையில் ஒரு கணம், பிரணவ் தன் முன் கடல் காற்று முகத்தில் மோத, புடவை முனை பறக்காது இழுத்துப் பிடித்து நின்றிருந்த நனியிதழின் தோற்றத்தை அகத்தில் நிறுத்திப் பார்த்தான்.
‘அழகா தான் இருக்காள். இவ்வளவு அழகா… இத்தனை நாள் தெரியாமப்போச்சே!’ தன்னைப்போல் நினைத்தான். மனதில் இன்னதென்று விளங்கா ரசனை.
‘தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன பண்ணியிருப்ப?’ மனதின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.
‘கல்யாணம் பண்ணியிருப்பியோ?’ இதயம் தொடுத்த கேள்வியில் வேகமாக தலையை உதறிக் கொண்டான்.
என்னயிருந்தாலும் விமலாவால் அப்பெண்ணை விட்டுக்கொடுக்க முடியவில்லை.
மகனுக்கு என்று பார்த்த முதல் பெண்ணே, வீட்டில் அனைவருக்கும் பிடித்துப் போயிருக்க, அந்த சம்மந்தம் தடைபட்டது அவருக்கு அதீத வருத்தம்.
“எவ்வளவு லட்சணமா இருந்து என்ன பயன். இப்படி அறிவு கம்மியா இருக்குதே” என்றார்.
‘எதே அறிவு கம்மியா!’ பிரணவ் தன் தாய் என்ன சொல்கிறார் என்று புரியாது பார்த்தான்.
அவனுக்குத்தான் நனியிதழ் பற்றி முழுதாக தெரியுமே! படிக்கும் காலத்தில் அனைத்திலும் கெட்டி அவள். அவனே அவளை பல தருணங்களில் வியந்து பார்த்திருக்கிறான். அன்னை இப்படி சொல்லவும் அவனாலே ஏற்க முடியவில்லை.
“ஏன் மாம் அப்படி சொல்றீங்க?” எனக் கேட்டான்.
“வேறென்ன சொல்றது பிரணவ்? உன்னை வேணாம் சொல்ற பொண்ணு முட்டாளா தான் இருக்கும்” என்றார்.
“அவங்களுக்கு என்ன காரணமோ? உங்க மகன் அப்படிங்கிறதுக்காக, என்னை எல்லாருக்கும் பிடிக்கணும் கட்டாயம் இல்லையேம்மா” என்றான்.
பிரணவ் முகத்தையே விமலா கூர்ந்து நோக்கினார்.
“என்ன மாம்?”
“இவ்ளோ சப்போர்ட் பன்ற? பொண்ணை ரொம்ப பிடிச்சிருச்சோ?” எனக் கேட்டார்.
ஒரு நொடி பிரணவ்வின் இதயம் நின்று துடித்தது.
“அப்படிலாம் இல்லை மாம்.” சீரற்று வெளிவந்த அவனது குரல் அவனுக்கே வித்தியாசமாகப்பட்டது.
அதுவரை வராத சோகத்தை வரவழைத்தவன் முகம் அக்கணம் உண்மையிலேயே ஆழ்ந்த சோகத்தைக் காட்டியது.
“வேணும்னா இன்னொரு முறை பேசி பார்க்கட்டுமா பிரணவ்!” விமலா மகனின் சோர்ந்த முகம் காண பிடிக்காது, நனியிதழ் வேண்டாமென்று சொல்லிய கோபம் இருந்தபோதும், மகனுக்காகக் கேட்டார்.
“வேண்டாம் மாம். பிடிக்கலன்னு சொன்ன பிறகு திரும்ப போய் கேட்கிறது, கம்பள் பண்ற மாதிரி இருக்கும்” என்ற பிரணவ் எழுந்து தனதறைக்குச் சென்றுவிட்டான்.
கண்ணாடி முன்பு சென்று நின்ற பிரணவ்வுக்கு நனியிதழின் நினைவு தான்.
ஒரே கல்லூரி. வேறு வேறு துறை. நண்பர்களா என்று கேட்டால், அப்படி சொல்லிட முடியாது. ஆனால் அவனது நட்பு வட்டாரத்தில் அவளும் அடக்கம். கல்லூரி விழா குழுவில் பழக்கம். வெளி கல்லூரிகளுக்கு போட்டிக்கென செல்லும் போது, குழு தலைவன் எனும் அடிப்படையில் அவன் தான் பொறுப்பு. பெண்கள் பலர் இருந்தாலும், அவனது நெருங்கியத் தோழி ரீமாவிற்கு அடுத்து, நனியிதழிடம் இயல்பாய் பேசிடுவான்.
ரீமாவும் நனியும் ஒரே துறை. ரீமா, பிரணவ்வுக்கு பள்ளித் தோழி. அது கல்லூரியிலும் தொடர்ந்தது. ரீமா இருவருக்கும் பொதுவான நட்பாக இருந்திட, இருவரும் நட்பு கொண்டிருந்தனர். பார்க்கும் நேரம் மட்டும் சிறு புன்னகை, தேவையான பேச்சுக்கள். அவ்வளவே அவர்களது நட்பு.
அருகில் அமர்ந்திருக்கிறான். இயல்பாய் கரம் பிடித்திருக்கிறான். ஏன் ஒரு முறை நடனப் பயிற்சியின் போது, நனிக்கு காலில் சுளுக்கு உண்டாக, எவ்வித தயக்கமும் இல்லாது, அவளின் பாதம் பிடித்து ஆராய்ந்து பார்த்திருக்கிறான். அவ்விடத்தில் யார் இருந்தாலும் அதை செய்திருப்பான். ஆனால் இன்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று அவனை அலைக்கழித்தது. என்னவென்று புரியவில்லை.
பிரணவ் சொந்த ஊர் திருச்செந்தூர். படித்தது கன்னியாகுமரி. விஜயன் கட்டுமானத் தொழில். விமலா கல்லூரி பேராசிரியர். கடந்த வருடம் உடல் நிலை சரியில்லாது ஒரு மாதம் படுக்கையில் இருந்தவரை பிரணவ் விருப்ப ஓய்வு பெற வைத்திட்டான். தாத்தா ராகவன் மிலிட்டரியில் இருந்தவர்.
விஜயன் சிறிய அளவில் தொடங்கிய கட்டுமானம் சார்ந்த தொழிலில், இன்று அவரது பிரணவ் குரூப்ஸ் ஆஃப் கம்பெனி வெகுபிரபலம். பிரணவ் கன்ஸ்ட்ரக்ஷன் என்று ஆரம்பத்தில் சிறிதளவு தொடங்கிய கம்பெனி. இன்று அதன் கீழ், கட்டுமானத்துறைக்கு தேவையான அனைத்து விதமான மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, கட்டிடங்கள் கட்டிய பின்னர் அதனை முழுமையாக்கும் ஹார்ட்வேர்ஸ் சம்மந்தப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி இறக்குமதி, யாவும் அடக்கம். சிறிய நிறுவனம் இன்று பல கிளைகள் கொண்டு, குழுமமாக உயர்ந்து உள்ளது.
பிரணவ் விருப்பப்பட்டு மென்பொருள் சம்மந்தமாக படித்தான். அவனுக்கு கட்டிடத் துறையில் பயிற்சி மற்றும் அனுபவம் இல்லையென்றாலும், மேல்நிலை படிப்பில் தொழில் மேலாண்மை எடுத்து படித்ததால், தந்தைக்கும் தொழிலில் உதவிக்கொண்டு, தனக்கு விருப்பமான மென்பொருள் நிறுவனம் தொடங்கி, கடந்த நான்கு வருடங்களாக வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறான்.
தன்னுடைய முயற்சியில் தொடங்கிய ‘தி ஓசன் ஐடி டெக்’ பல கிளைகள் பரப்ப வேண்டும் என்பது அவனது ஆசை. தற்போது இதன் கீழ் செயலிகள் உருவாக்கம் தொழிலை தொடங்கியிருக்கிறான். இரண்டிலும் வெளிநாடு வரை அவனது அலுவலகம் போட்டிபோட வேண்டும் எனும் கனவு. அதற்கு அவன் அவனாக இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் எனும் எண்ணம்.
கனவுக்கு தன்னுடைய திருமணம் எனும் கடமை தடையாக இருந்திடக் கூடாது என நினைக்கிறான். அதனால் தான் கல்லூரி காலங்களில் பெண்களிடம் பேசினாலும், பழகினாலும் காதல் ஒன்றை மட்டும் எட்ட வைத்திருந்தான். தன்னுடைய எண்ணத்தை திசை திருப்பும் எதுவும் வேண்டாம் என்பதில் படிக்கும் காலத்திலேயே உறுதியாக இருந்தான்.
அதனால் தான் என்னவோ அவனை உயிராக நேசித்தவளின் காதலையும் உணர தவறிவிட்டான். இன்று தானாக கை சேர வந்திட்டதையும் அறியாது நழுவவிட்டு விட்டான்.
‘என்கிட்ட பொண்ணு போட்டோ காட்டின மாதிரி, இதழ் கிட்டவும் என்னோட போட்டோ காட்டியிருப்பாங்க தானே? அப்போ நான் தெரிஞ்சு தான் எனக்கு ஓகே சொன்னாளா? அவளுக்கு என்னை மேரேஜ் பண்ணிக்க விருப்பமா? எனக்காக, நான் கேட்டேன்னு நோ சொன்னாளா? நான் கேட்டதுக்கு அவளும் விருப்பம் இல்லைங்கிற மாதிரி தானே சொன்னா?’ மனமும் மூளையும் ஒன்றாக குழப்பியடித்தன.
அவனுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது. பையன் அவன் என்ற பின்னர் தான் அவள் பெண் பார்க்கும் படலத்திற்கே ஒப்புக் கொண்டாள் என்று.
“பிரணவ் ஜஸ்ட் காம் டவுன் மேன்” என்று கண்ணாடி முன்பிருந்த மேசையில் இரு கைகளையும் ஊன்றி தலை தாழ்த்தினான்.
“பிரணவ் தேவையில்லாம எதுவும் திங்க் பண்ணாத. நீ நினைச்ச மாதிரி மேரேஜ் பிளான் ஸ்டாப் ஆகிடுச்சு. அவ்ளோதான். இதை வச்சே இன்னும் கொஞ்ச நாளுக்கு தப்பிச்சிடலாம்” என்று சொல்லிக் கொண்டவன், மெல்ல தலையை மட்டும் உயர்த்தி, கண்ணாடியில் தன் முகம் பார்த்தான்.
கடல் நீல நிறத்தில், கத்தரிப்பூ கரையிட்ட புடவையில் அளவான அலங்காரத்தோடு மிதமான புன்னகையில், கருவிழிகள் பந்தாட தன் முகம் ஏறிட்ட நனியிதழின் உருவம் அவன் பிம்பத்திற்கு அருகில் கண்ணாடியில் தெரிந்திட, வேகமாக தன்னைப்போல் திரும்பி பார்த்தான்.
உண்மையிலேயே அவள் தன் பின்னால் வந்து நின்றாளோ எனும் மாயம்.
“ஊஃப்.” கைகள் இடைக் குற்றி, இதழ் குவித்து ஊதினான்.
“ரொம்ப டிஸ்டர்ப் பன்றாளே!” கீழ் உதட்டை அழுந்த கடித்து விடுவித்தான்.
“பிரணவ்… உனக்கு மேரேஜில் இன்ட்ரெஸ்ட் இல்லை. அவள் கிட்ட கேட்ட, அவளும் ஓகே சொல்லிட்டாள். சப்போஸ் உன்மேல இன்ட்ரெஸ்ட் இருந்திருந்தா, அவள் நோ சொல்லியிருக்க வாய்ப்பில்லை. தேவையில்லாம குழம்பி, டைம் வேஸ்ட் பண்ணாத” என்ற பிரணவ், அலைபேசியை எடுத்து நனியிதழ் எண்ணுக்கு “தேங்க்ஸ்” என தகவல் அனுப்பி வைத்தான்.
அவனை அளவுக்கு அதிகமாக பிடித்ததால் தான், அவனது வேண்டுகோளை நிராகரிக்க முடியாது, அவனுக்காகவே அவனை நிராகரித்தாள் என்று அவன் அறியவில்லை.
அவள் பார்த்துவிட்டாளா என்று சில நிமிடங்கள், அலைபேசி திரையையே பார்த்து நின்றவன், இரண்டு குறி நீல நிறமாக மாறாது போகவே, அலைபேசியை ஓரமாக வைத்து மெத்தையில் கவிழ்ந்து படுத்து உறக்கத்தை தழுவினான்.
அங்கு ஒரு ஜீவனை உயிரற்றக் கூடாக கதற வைத்துவிட்டோம் என்று அறியாது நிம்மதியாக துயில் கொண்டிருந்தான் குரு பிரணவ்.
Epi 3 and 4
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
9
+1
+1