169 views

 தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே

கை கோர்த்து போக இந்த சாலை போதாதே

என் எண்ண விண்களம் நான் சொல்லவே

கைபேசி மின்களம் போதாதடி

   “ஹலோ சாக்ஷி” என அவள் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான். 

    “ஹாய். விஜய்”  என்றாள் அவள் சிறுப்புன்னகையோடு. ஆகாய நிற குர்தாவும் அடர் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள் அவள். ஃபெதர் கட் செய்த கூந்தலை சிறு கிளிப்பில் அடக்கியிருந்தாள். அஞ்சனம் தீட்டியிருந்த விழிகளும் அவளிடமிருந்து கிளம்பிய மிதமான பெர்ஃப்யூம் வாசனையும் அவனை போதையேற்றிக் கொண்டிருந்தது. அவளும் அவனை விரும்பிகிறாள் என்ற தைரியத்தில் லஞ்சையே இன்றி அவளை பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். 

உன் அழகை பருக என் கண்கள் போதாதடி

என் நிலையை எழுத வானங்கள் போதாதடி

          அவள் அழகை ரசித்த வண்ணம் அமர்ந்திருந்தவனை கலைத்தது அவளின் குரல், “ஏதோ பேசணும்னு சொன்னீங்க?” இதுவரை இருந்த மாயவலை அறுபட,

         “ஆமாம், அதுக்கு முன்னாடி காஃபி ஆர்டர் பண்ணிடலாமா? ” என அவளிடம் வினவியப்படி வெயிட்டரை அழைத்து அவர்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்தான். 

     ஆர்டர் செய்த காஃபி வர, அதை அருந்திய வண்ணம், “நேத்து  நீ உன் ஃபிரண்டோட தானே ஆக்ரா போன?” என வினவினான், 

“ஆமாம் சீமாக்கூட தான் போனேன்”

“அவங்க எங்கே? அவங்க எப்போ போனாங்க? “

“அவ ஈவினிங்கே அவளோட பாய் ப்ரண்ட் கூட போய்ட்டா.” 

யோசனையோடு ஆட்காட்டி விரலால் காஃபி கோப்பையை தட்டிக்கொண்டு, “சீமா உனக்கு எப்போயிருந்து பழக்கம்?” என காஃபி கோப்பையில் பார்வை பதித்த வண்ணம் விஜய் கேட்க, 

“டெல்லி வந்ததுல இருந்தே தெரியும். அவ என்னோட கிளாஸ் ப்ரண்ட். ஏன் அவளை பத்தி கேட்கிறீங்க? ” என  கோபமாக கேட்டாள் சாக்ஷி, 

அவளின் முகத்தை பார்த்தவன் அவளின் கோபத்தின் காரணம் புரிந்தது, வேறு பெண்ணை பற்றி விசாரித்ததில் வந்த பொசசிவ்ணெஸ் என்று. 

புன்னகையில் உதடுகள் நெளிய, “சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான்” என்றான் அவளை சீண்டும் பொருட்டு, 

“அவ கமிட்டடு. அவளுக்கு பாய் ப்ரண்ட் இருக்கு” என்றாள் பட்டென்று, 

“ஆஹான்” என்றான் விரிந்த புன்னகையோடு. 

பிறகு சீரியிசான குரலில், “நேத்து என்ன நடந்தது?  நீ ஏன் நைட் ஃபுல்லா தாஜ் மஹால்க்கிட்ட இருந்தாய்? ” என விஜய் கேட்க, சுனந்தாவிடம் கூறியதையே விஜயிடம் கூறினாள். 

“அப்போ இவ குடிச்ச தண்ணீர்ல தான் ஏதாவது கலந்திருக்கணும்” என யோசித்தவன் , ஒரு வேளை சீமா அதில் மயக்க மருந்தை கலந்திருப்பாளோனு என்று தான் எண்ண தோன்றியது. ஏனென்றால் அந்த மூதாட்டிக்கு தண்ணீர் தந்ததை அவள் விஜய்யிடம் கூறவில்லை. தாகத்திற்கு தண்ணீர் குடித்ததாகவும் பிறகு என்ன நடந்தது என்பது நினைவு இல்லை விழித்து பார்த்தப்போது காலை மூன்று மணியாகிவிட்டது என்று மட்டும் தான் சொன்னாள். 

அவனின் யோசனை படிந்த முகத்தை கண்டு அவனை அவள் கேள்வியாக நோக்கினாள்,” இல்லை சாக்ஷி, சீமா உன் க்ளோஸ் ப்ரண்ட்னு சொல்ற நேத்து ஆன்ட்டி உன்னை காணோம்னு பதட்டமா இருந்தாங்க அப்போ அவங்க கூட உன் ஃப்ரண்ட் இல்லை. இன்னைக்கு மார்னிங் ஆன்ட்டி உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் போதுகூட அந்த பொண்ணு இல்லை அதான்…..” என விஜய் சந்தேகமாக இழுக்க, 

“சீமா வீட்டுல அவ லவ் பண்ணுவது தெரியாது. அவ என்கூட தான் ரிட்டன் வந்ததாக அவங்க வீட்டுல நினைச்சிட்டு இருக்காங்க. என்னை காணோம்னு அவங்க வீட்டுல தெரியாது. சீமா நீங்க சொல்ற மாதிரி எங்கம்மாக்கூட சேர்ந்து பதட்டமா என்னை தேட ஆரம்பிச்சிருந்தா அவ வீட்டுல மாட்டிருப்பா. அவ நேத்து ஃபுல்லா எனக்கு கால் ட்ரை பண்ணிட்டே இருந்தாள். அவ லவ்வர் சஞ்சய்யும் என்னை நேத்து நைட் புல்லா தேடிருக்காரு. அவ நேத்து என்னை தனியா விட்டுட்டு போவதுக்கு அவ்வளவு யோசிச்சா நான் தான் அவளை போகசொன்னேன். எதனால் உங்களுக்கு அவ மேல டவுட்? “

“நீ குடிச்ச தண்ணீர்ல ஏதோ கலந்திருக்கும் நினைக்கிறேன். அது நீ கொண்டுப்போன வாட்டர்னு சொல்ற அதான்….. “

“சீமா கிளம்பின பிறகு கொஞ்ச நேரத்துல நானும் கிளிம்பிட்டேன். அப்போ ஒரு பாட்டி மயக்கப்போட்டு விழுந்துட்டாங்க. அவங்களுக்கு தண்ணீர் கொடுத்தேன்.” என அவள் கூற, அந்த மூதாட்டி தான் அதில் மயக்க மருந்தை கலந்திருப்பார் என புரிந்துக் கொண்டான்.

          ஒரு வேளை நகை பணத்திற்காக அவ்வாறு செய்திருப்பார்களோ என தோன்ற அவளிடமே கேட்டான், “உன்னோட நகை பணம் ஏதாவது மிஸ்ஸாச்சா?”

சிறிது யோசித்தவள், மறுப்பாக தலையசைத்தப்படி”இல்லை” என்றாள்.

வேறு என்னவாக இருக்கும் என யோசித்தவனுக்கு மனதில் தோன்றிய விஷயம் நடுக்கத்தை தந்தது. ஆனால் அவ்வாறு ஏதும் தப்பாக நடந்திருந்தால் இவள் இப்படி இயல்பாக இருந்திருக்க மாட்டாள் என உணர்ந்தபிறகே சற்று நிம்மதியானான். 

அப்படி என்றால் அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என புரியாது குழப்பினான். நேற்று நடந்தவற்றை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும் ஆனால் வேறு வழியில் என்று நினைத்தவன், அதன்பிறகு அவளிடம் பொதுப்படையாக பேசிவிட்டு ஃபிளாட்டிற்கு கிளம்பினான். 

தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தான் ஜெய், ஒரு தனியார் பள்ளியை கடக்கையில் அவனின் வண்டியின் வேகம் குறைந்தது.

        அந்த பள்ளியின் ஆண்டு விழாப் போலும் மின்விளக்குகளின் ஒளியில் மிளிர்ந்துக் கொண்டிருந்தது அந்த பள்ளி. அவனின் நினைவுகள் பண்ணிரெண்டு ஆண்டு முன் பயணித்தது. 

அவர்களின் பள்ளி ஆண்டுவிழா அன்று…. 

“இதுவரை அமைதியாக சிறப்பு விருந்தினரின் உரையை கேட்டுக்கொண்டிருந்த மாணவ செல்வங்களே இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நடனப்போட்டி ஆரம்பமாகப்போகிறது” என ஒரு ஆசிரியர் ஒலிவாங்கியில் கூற அங்கே ஆரவாரமான கரவோசங்கள் கிளம்பியது. 

“பாய்ஸ் யாரும் விசிலடிக்ககூடாது” என கண்டிப்பான குரலில் அவர் கூறிவிட்டு நடனமாடயிருந்த மாணவர்களின் பெயரை அறிவித்தார்.

“முதலாவதாக வந்து ஆடப்போவது விஜய் அன்ட் ராகுல் ஃபரம் ட்டுவல்த் பயோ மேத்ஸ் “. 

         ராகுலும் விஜயும் மேடையேறிய அடுத்த நொடி விசில் சத்தம் காதைக்கிழித்தது. 

ஆசிரியர்கள் விசிலடிப்பது யாரென அறிந்துக் கொள்ள கண்களை சுழலவிட்டனர்.  யாரென கண்டுக்கொண்ட நொடி அதிர்ந்து மீண்டும் அவசரமாக ஒலிவாங்கியை நெருங்கினார் உடற்கல்வி ஆசிரியர் .

கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து வாய்க்குள்விட்டபடி விசிலை பறக்கவிட்டுக்கொண்டிருந்தாள் அக்ஷி.

“ஏய். விசிலடிக்காதே, இப்போ தானே மைக்ல சொன்னாங்க விசிலடிக்ககூடாதுனு. ” என ஜெய் அவளை அதட்ட, 

“டேய் எரும, பாய்ஸை தான் விசிலடிக்ககூடாதுனு சொன்னாங்க. நாங்க அடிக்கலாம்” என அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே, 

         “பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் யாரும் விசிலடிக்காதீங்க” என அந்த ஆசிரியர் ஒலிவாங்கியில் அறிவிக்க, அக்ஷியை பார்த்து நக்கலாக சிரித்தான் ஜெய். 

        “டேய் முதல்ல பசங்களை மட்டும் தானடா இந்த மண்டையன் விசிலடிக்கக்கூடாதுனு சொன்னான்”

“பொண்ணுங்களுக்கு விசிலடிக்க தெரியாதுனு நினைச்சு சொல்லிருப்பான். நீ விசிலடிக்கிறதப் பார்த்து கொடுத்தாங்க பாரு ஒரு ஷாக் லுக்…. ஹா… ஹா…. ” என  உரக்க சிரிக்கத் தொடங்கினான் ஜெய். 

        “சரி சரி ஆட்டத்தை கவனி” என அவன் தலையில் தட்டினாள் அக்ஷி. 

தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து

நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து

        என பாடல் தொடங்கவும் மேலும் கரவோசங்களும் கூச்சகளும் கிளம்பியது. அந்த பாடலில் வரும் விஜய் மற்றும் ராகவா லாரன்ஸ் போல் நேர்த்தியாக நடனமாடிக்கொண்டிருந்தனர் விஜய்யும் ராகுலும். 

அக்ஷி மீண்டும் விசிலடிக்க எண்ணி கைவிரலை வாய்க்கு அருகில் கொண்டு செல்ல பதறி அவளின் கையை இறுக்கப் பற்றிக்கொண்டான் ஜெய். 

           “அந்த ராகுல் நாயை செருப்பால அடிக்கணும் அவன் தானே உனக்கு விசிலடிக்க சொல்லி தந்தான்” என பொறிந்த வண்ணம், 

         “ஏய் ஸ்டேஜ் சைட்ல உட்கார்ந்திருக்க ப்ரின்ஸிபால் நம்மளை தான் முறைச்சு பார்த்திட்டிருக்கார் நீ திருப்பி விசிலடிச்சு மாட்டிக்காதே ” என அடிக்குரலில் எச்சரித்தான் ஜெய். 

ஒண்ணு ரெண்டு மூனு எண்ணுவதற்குள்ளே

ஓடி போகும் காலம் நிற்காதே

சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே

சூரியனை தொட்டுவிடலாம் அதாலே

           “சரி விசிலடிக்கல கையை விடு” என ஜெய்யின் கையில் சிறைப்பட்டிருந்த தனது கையை விடுவிக்க போராடினாள். விசிலடிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் அவளின் கையை விடுவித்துவிட்டு மேடையில் கவனமானான் ஜெய். 

வானம் கிடுகிடுங்க பூமி நடு நடுங்க எழுந்து ஆடலாம் தோழா

தேகம் துடி துடிக்க ரத்தம் அனல் அடிக்க வெற்றி சூடலாம் வாடா

          இரண்டு நிமிடத்தில் ஜெய்யை அழைத்தவள் அவன் காதில் ஏதோ ஓதினாள் அவனும் அவள் கூறியதற்கு சம்மதம் தெரிவிக்க இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து மர்ம புன்னகையை பரிமாறிக்கொண்டனர். 

         நடனமாடி முடித்ததும் தோள் மேல் கைப்போட்டு  பேசியப்படி இவர்களின் அருகில் வந்தனர் விஜய்யும் ராகுலும்.  ஜெய்யும் அக்ஷியும் ஒருவரை ஒருவர் முறைத்தப்படி நின்றிருக்க, அவர்களிடம் என்னவானது என விசாரித்தனர் இருவரும். 

         அக்ஷி ஜெய்யை பார்த்து கண்சிமிட்டிவிட்டு, “ராகுல், இவன் சொன்னான் தெரியுமா ? விஜய் தான் நல்லா ஆடினான்னு சொன்னான்.”

         “அவன் கரெக்ட்டா தானே சொன்னான்” என பெருந்தன்மையாக ஆமோதித்தான் ராகுல். 

        “இவ என்ன சொன்னா தெரியுமா? ராகுல் தான் நல்லா ஆடினான்னு சொன்னாள்” என ஜெய் கூற, 

“அவ கரெக்ட்டா தான் சொல்லிருக்கா ராகுல் தான் நல்லா ஆடினான்” என கூறினான் விஜய்.

“டேய் விஜய் நேத்து பிராக்ட்டிஸ் பண்ணும்போது ராகுல் நல்லாவே ஆட மாட்டேங்கிறான். ஏன்டா அவனை சேர்த்தேன்னு இருக்குனு சொன்ன தானே? இப்போ அவன் தான் நல்லா ஆடினான்னு சொல்ற? ” என ஜெய் பத்த வைக்க, 

“விஜய் அப்படியா சொன்னான்?. ராகுல் என்ன சொன்னான் தெரியுமா? பெயரு தான் விஜய்னு வைச்சிருக்கான் ஆனால் டான்ஸ் வடிவேலு மாதிரி காமெடியா ஆடுகிறான்னு சொன்னான்” என தூபம் போட்டாள் அக்ஷி. 

(பத்தவச்சிட்டயே பரட்டை) 

அவர்கள் கொழுத்திப்போட்ட வெடி சிறப்பாக வேலை செய்ய, தன்னை எப்படி அப்படி கூறலாம் என சண்டைப் போட தொடங்கினர் விஜய்யும் ராகுலும். 

         “I want more emotion” என்ற ரீதியில் அவர்களை சிரிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர் அக்ஷியும் ஜெய்யும். 

           அப்பொழுது நடனப்போட்டி முதல் பரிசை விஜய்யும் ராகுலும் வாங்கியதாக ஒலிவாங்கியில் அறிவிக்க, 

“நீ தானே நல்லா ஆடின நீயே போய் வாங்கிக்கோ” என முறுக்கிக் கொண்டான் ராகுல். 

“நான் வடிவேலு மாதிரி காமெடியா ஆடுகிறேன்னு சொன்னல்ல? போங்க பிரபு தேவா நீங்களே போய் வாங்கிக்கோங்க” என தன் பங்கிற்கு முறுக்கிக் கொண்டான் விஜய். 

இவர்கள் இருவரும் சண்டையில் மும்மரமாய் இருக்க அக்ஷியும் ஜெய்யும் மேடை ஏறி ராகுலும் விஜய்யும் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறி அவர்களின் பரிசை வாங்கிக் கொண்டு பந்தாவாக மேடையில் நின்று போஷ் கொடுத்தனர். அப்பொழுது தான் ராகுலுக்கும் விஜய்யிற்கும் அர்த்தமாயிற்று இவர்கள் பத்த வைத்ததன் காரணம். “அட பக்கிகளா?” என அவர்களை பரிதாபமாக பார்த்த வண்ணம் நின்றிருந்தனர் இருவரும்.

         ஜெய்யின் நினைவுகளை கலைக்கும் வண்ணம் ஒலித்தது ஹாரன் ஒலி. அதன் பிறகே உணர்ந்தான் அந்த பள்ளியின் முன்னால் காரை நிறுத்திவிட்டதை. 

         காரை ஸ்டார்ட் செய்து தன் வீட்டை நோக்கி செலுத்தினான். வீட்டை அடைந்ததும் அன்னையிடம் தலைவலி என உரைத்தவன் இரவு உணவை மறுத்துவிட்டு பாலை மட்டும் பருகிவிட்டு தன் அறைக்கு சென்றான். உடைமாற்றிவிட்டு மெத்தையில் விழுந்தவனின் நினைவுகளை ஆக்கிரமித்திருந்தாள் அக்ஷி. 

சிறுது நேரத்தில் செல்போன் அலற அதை எடுத்துப் பார்த்தான். கபிலன் தான் அழைத்துக்கொண்டிருந்தான்.  

செல்போனை உயிர்பித்து செவிக்கு கொடுத்தவனை திகைக்க வைத்தது கபிலனின் பதட்டமான குரல். 

“சார்….சார்…. என் பிள்ளை மாடிப்படில இருந்து கால் தடுக்கி விழுந்துட்டாளாம். R S ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்க. நான் ஊருக்கு கிளம்பட்டா சார்? ” என கண்ணீருடன் கேட்க, 

“என்ன கிளம்பட்டானு ஒரு கேள்வி? இந்த சமயத்தில் நீ அங்க இருப்பது எவ்வளவு முக்கியம்?   இப்போ நீ எங்கயிருக்க? ” என அவனிடம் வினவியவன் மடிக்கணினியை திறந்து இணையதளத்தில் புகுந்தான். 

“இல்ல சார் நீங்க சொன்ன அந்த வேலை….. ” என தயக்கமாக இழுத்தான். 

“ஆமாம் அது பெரிய கலெக்டர் வேலை. மூடிட்டு ஊருக்கு கிளம்பு மேன். இனி அந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்.  நீ இப்போ எங்கே இருக்கனு கேட்டேன்?” என அவனிடம் வினவியவனின் விரல்கள் மடிக்கணினியில் நர்த்தனமாடியது. 

“ரயில்வே ஸ்டேஷன் போயிட்டு இருக்கேன் சார்”

“பக்கத்தில ஏதாவது நெட் சென்டர் இருந்தா போ கபிலா” என ஜெய் கட்டளையிட, எதற்கு என கேள்வி கேட்காது சற்று தொலைவிலிருந்த நெட் சென்டரினுள் நுழைந்தான். 

“போயிட்டேன் சார்”

“அங்க இருக்கிறவங்கக்கிட்ட போனைக் கொடு” என ஜெய் உரைக்க அந்த கடை பையனிடன் தன் அலைப்பேசியை நீட்டினான் கபிலன். 

         ஜெய் அவனிடம் ஏதோ கூற, ஜெய்யிடம் “அச்சா சாப், டீக்கே சாப்” என மொழிந்தவன் இரண்டு நிமிடத்தில் ஒரு பிரின்ட்டெடுத்த காகிதத்தையும் கபிலனின் அலைப்பேசியையும் அவனிடம் நீட்டினான். 

அலைப்பேசியை செவிக்கு கொடுத்தவன், அது என்ன காகிதம் என்பதை அறியாமல்  “சார்? ” கேள்வியாக இழுத்தான் 

“உன் கையில இருப்பது ஃபிளைட் டிக்கெட் இன்னும் அரைமணிநேரத்தில் உனக்கு ஃபிளைட் உடனே நீ ஒரு டாக்ஸி பிடிச்சு ஏர்ப்போர்ட் போ. ஹாஸ்பிடல் பில்லும் நான் பே பண்ணிட்டேன். உன் அகௌன்டிற்கும் முப்பதாயிரம் டிரான்ஸ்பர் பண்ணிருக்கேன். பணம் பத்தலனா கேளு. உன் பொண்ணுக்கு ஒன்னுமாகாது. நாளைக்கு வந்து நான் பார்க்கிறேன். Be brave”  என ஜெய் கூற,  உடைந்து அழுதான் கபிலன். 

“சார் நீ என் தெய்வம் சார் ” என தழுதழுத்த குரலில் அவன் கூற, கபிலனை தேற்றி அனுப்பி வைத்தான் ஜெய். 

மடிக்கணினியை அணைத்து அருகிலிருந்த மேஜையில் வைத்தவனின் பார்வையில் விழுந்தது மேஜை மீதிருந்த ஃப்ரேம் செய்யப்பட்ட புகைப்படம் அதை கையில் எடுத்தவனின் விழிகள் கலங்கியது. அந்த புகைப்படத்தில் ஆரப்பாட்டமாக புன்னகைத்துக்கொண்டிருந்தனர் விஜய்யும் ராகுலும் ஜெய்யும் அக்ஷியும்.

மெத்தையில் படுத்து சுழன்றுக்கொண்டிருந்த காத்தாடியை வெறித்துக் கொண்டிருந்தான் விஜய். 

அவன் எண்ணகள் அனைத்தும் சாக்ஷியை சுற்றி சுழன்றுக்கொண்டிருந்தது. “தன்னை ஏன் ஆக்ரா செல்லவிடாமல் தடுக்க வேண்டும்? ” “அந்த மூதாட்டி எதற்காக மயக்க மருந்தை கலக்க வேண்டும்? ” என யோசித்தவனுக்கு விடை தான் கிடைத்தபாடில்லை. 

 கண்களுக்கு தெரியாத எதிரி ஒருவன் இருப்பதை புரிந்துக் கொண்டான். அந்த கண்களுக்கு தெரியாத எதிரி குறி வைப்பது தன்னையா? அல்லது சாக்ஷியையா? என யோசித்தவனுக்கு சாக்ஷியை குறி வைப்பதை போல் தான் தோன்றியது. 

எதற்காக அவன் சாக்ஷியை குறிவைக்க வேண்டும்?? என்ன பகை அவனுக்கு? யாரவன்? அவனின் நோக்கம் என்ன? என்பது தெரிய வேண்டும் என்றால் சாக்ஷியின் பின்புலம் பற்றி அறிய வேண்டும். என முடிவு செய்தவன் அதற்கான பணியில் இறங்கினான். 

ஒரு தனியார் டிடெக்ட்டிவ் ஏஜென்சிக்கு தொடர்புக்கொண்ட விஜய் சாக்ஷியை பற்றி விவரங்களை சேகரித்து தரும்ப்படிக் கேட்டான். அவர்கள் ஒரு வாரத்தில் அவளைப்பற்றிய முழுவிவரத்தையும் தருவதாக கூறினர். 

ஏனோ இந்த செயலுக்கு ஜெய்யின் உதவியை நாட அவனுக்கு மனம் வரவில்லை. அவனின் மனதில் தோன்றிய சந்தேகங்களையும் அவன் டிடெக்ட்டிவ் ஏஜென்சியை தொடர்புக் கொண்டதையும் அவனிடம் மறைத்துவிட்டான். 

(இப்போதான்டா நீ கரெக்ட்டா இருக்க. இப்படிதான் இருக்கணும். அதைவிட்டு எல்லாவிஷயத்தையும் ஜெய்கிட்ட ஒலிபரப்பிட்டு….. )

மறுநாள் காலையில் வழக்கம் போல் ஜாக்கிங் சென்றான். அங்கு சாக்ஷியும் சீமாவும் கதைப்பேசிய வண்ணம் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அவர்களின் அருகில் சென்று தன் ஓட்டத்தை நிறுத்தினான். அவனை கண்ட சாக்ஷி புன்னகையுடன் காலை வணக்கத்தை மொழிந்துவிட்டு அருகிலிருந்த தோழியை அறிமுகம் செய்து வைத்தாள். அப்பொழுது அவர்கள் அருகில் ஒரு இளைஞன் வர கேள்வியாக அவனை நோக்கினான் விஜய். 

 விஜய்யின் பார்வையை உணர்ந்த சாக்ஷி.  ” இது சஞ்சய் சீமாவோட பாய்ஃப்ரண்ட்” என்றாள். அவனிடம் சிறுப்புன்னகையோடு “ஹாய்”, என்றான்.

சீமா சாக்ஷியை அன்று தனியே விட்டு சென்றதற்காக மன்னிப்பு கேட்டவள் சாக்ஷியை பத்திரமாக அழைத்து வந்ததற்கு விஜய்யிடம் நன்றியும் கூறினாள். சிறுப்புன்னகையோடு அவளின் நன்றியை ஏற்றுக்கொண்டான் விஜய். சிறுது நேரத்தில் சஞ்சய் சீமாவை அழைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். சாக்ஷி அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தவள் விஜயையும் அமரும்ப்படி உரைத்தாள். 

“சீமா வீட்டுல ரொம்ப ஸ்ரிக்ட் அதனால டெய்லி அவ பாய் ப்ரண்ட்டா இப்படி தான் மீட் பண்ணுவா. அவ சஞ்சய்க்கிட்ட பேசிட்டு வருகிற வரைக்கும் நான் இந்த ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்து பாட்டுகேட்டிட்டு இருப்பேன்.  என் கூட வருகிறாள் என்பதால தான் அவளை வெளிய விடுகிறாங்க இல்லனா அவளை வீட்டு வாசல்ப்படி தாண்ட விடமாட்டாங்க”

“நீ அவங்க காதலுக்கு சப்போர்ட்டா? ” என விஜய் கிண்டலாக கேட்க, சிறுப்புன்னகையோடு அமோதிப்பாய் தலையசைத்தாள் சாக்ஷி. 

“ஊரான் காதலை ஊட்டி வளர்த்தால் தான் காதல் தன்னாலே வளருமாம்” என கண்சிமிட்டி உரைத்தாள் சாக்ஷி. 

விஜய்யிற்கு அப்பொழுது ஏனோ அக்ஷியின் நினைவு வந்தது. 

ஒரு நாள் விஜய் ராகுல் ஜெய் மற்றும் அக்ஷி நால்வரும் திரையரங்கிற்கு சென்றிருந்தனர் அவர்களின் முன்னால் இருந்த இருக்கையில் ஒரு காதல் ஜோடி அமர்ந்திருந்தது. சற்று எல்லைமீறிய செயல்களை செய்த வண்ணம் அமர்ந்திருந்தனர் அவர்கள். 

அவர்களை கண்ட அக்ஷி ஜெய்யிடம்,  “டேய் எனக்கு கப்பில்ஸ பார்த்தாலே கடுப்பாகுதுடா” என்க

“நீ சிங்கிளா இருந்தா அடுத்தவன் யாரும் கமிட்டாக கூடாதா? ” என ராகுல் நக்கலாக கேட்க அவனை முறைத்தவள் ஜெய்யிடம்,” டேய் இன்டர்வல் அப்புறம் அவங்க சேர்ந்து உட்காரக்கூடாது. அதுக்கு ஏதாவது ஐடியா கொடுடா” என்க, 

உடனே ஜெய்,” அதெல்லாம் ஒரு பெரிய விஷயமா இதுவரைக்கும் நாம எத்தனை காதலை பிரிச்சிவிட்டிருப்போம். இது சப்ப மேட்டர்” என மொழிந்தப்படி அவள் காதில் ஏதோ ஓதினான். 

அவளும் அவன் கூறியதை கேட்டு குதுகலித்த வண்ணம் ஜெய்யிற்கு ஹை-ஃபை கொடுத்தாள். 

இவர்களின் கிசுகிசுப்பை கண்ட விஜய்,  “ரைட்டு இதுகா பெருசா ஏதோ பிளான் பண்ணிருச்சுங்க.” என  முன்னால் வரிசையில் அமர்ந்திருந்த காதலர்களை பரிதாபமாக பார்த்த வண்ணம் ராகுல் காதில் முணுமுணுத்தான். 

இடைவேளையில் எழுந்து வெளியே சென்ற காதலர்களை பின்தொடர்ந்து சென்றனர் ஜெய்யும் அக்ஷியும்.  இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை காண ஆவலாக அவர்களை பின் தொடர்ந்தனர் ராகுலும் விஜய்யும். 

திரையரங்க கேன்டீனில் பாப்கார்ன் வாங்கிய அந்த ஜோடி அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர். அவர்களின் அருகில் சென்ற அக்ஷி அந்த பையனை நோக்கி அவனின் காதலியை சுட்டிக்காட்டி,  “யாரு இவ? ” என கோபமாக கேட்க, 

குழப்பமான அந்த காதலன், “என் லவ்வர்” என்றான். 

“அப்போ நான் யாரு? ” என அவனின் சட்டையை பிடித்துவிட்டாள் அக்ஷி. 

அவளின் செய்கையில் அதிர்ந்த அந்த பையன், “அதே தான் நானும் கேட்கிறேன் யாருமா நீ? ” என வினவினான் பரிதாபமாக. 

“என்னை பார்த்து யாருனு கேட்டுவிட்டாயே பரத். நீதானே என்னை மதிய ஷோக்கு வர சொன்ன உனக்காக நான் கொஞ்சம் சீக்கிரம் வந்தேன். வந்துபார்த்தால் நீ எவகூடயோ உட்கார்ந்திருக்க. இவ யாருனு கேட்டா நீ என்னையே யாருனு கேட்கிற” என போலியாக கண்ணீர் வடிக்க அதிர்ந்து போய் அவளை பார்த்தான் அந்த காதலன். அவள் அவனின் பெயரை சரியாக சொன்னது தான் அவனின் அதிர்ச்சிக்கு காரணம். 

அவன் பாப்கார்ன் வாங்க சென்றபோது அவனை இந்த பெயர் சொல்லி தான் அழைத்தாள் அவனின் காதலி.  அப்படி தான் அவனின் பெயரை தெரிந்துக்கொண்டாள் அக்ஷி. 

“பரவாயில்லை பரத் நீ இவகூட சந்தோஷமாயிரு” என வராத கண்ணீரை துடைத்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்து தூண் மறைவில் நின்றிருந்த ஜெய்யின் அருகில் சென்றாள் அக்ஷி. 

அக்ஷி சென்றதும் அந்த காதலி கோபமாக எழுந்து விறுவிறுவென திரையரங்கைவிட்டு வெளியே செல்ல அவளை பின்த்தொடர்ந்து கெஞ்சியப்படி சென்றான் அந்த காதலன். அவர்களின் சண்டையை கண்டு குதுகலித்த வண்ணம் ஹை-ஃபை கொடுத்துக் கொண்டனர் அக்ஷியும் ஜெய்யும். 

“கையை கொடு” என அக்ஷியின் கையைப் பற்றி ராகுல் குலுக்க குழப்பமாக அவனை நோக்கினான் விஜய். 

“நீ பிரிச்சிவிட்ட ஐம்பதாவது காதல் இது” என ராகுல் கூற, 

“கவுன்டிங்ல கன்னு (Gun) மாதிரி இருக்கடா” என ஆர்ப்பாட்டமாய் சிரித்தாள் அக்ஷி. 

“அடுத்தவங்க காதலை பிரிக்கிற பார் உனக்கெல்லாம் இந்த ஜென்மத்தில் லவ்வே செட்டாகுது” என கடுப்பாக விஜய் கூற, 

“அந்த கருமத்தை யாருடா பண்ணுவா அசிங்கமா” என கூறி மீண்டும் ஜெய்யிற்கு ஹை-ஃபை கொடுத்தாள் அவள். 

யாரிடம் காதலை கருமம் என்றாளோ அவனிடமே பின் நாளில் காதல் யாசகம் கேட்கும் படி ஆனது தான் விதியின் சதி. 

“உனக்கு லவ் பிடிக்குமா? ” என விஜய் கேட்க அவனை விசித்திரமாக நோக்கினாள் சாக்ஷி. 

“உலகத்தில காதல் பிடிக்காதவங்க யாரா இருக்காங்களா? ” என சாக்ஷி கூற சுவாரஸ்யம் குடியேறியது அவன் கண்களில். 

“அப்போ நான்…… ” என அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க அவர்களின் அருகில் சீமா வர, “போகலாமா? ” என சாக்ஷி  சீமாவிடம் கேட்ட வண்ணம் எழுந்தாள்.

“ஓகே விஜய் பார்க்கலாம்” என சிறுப்புன்னகையோடு அவனிடம் விடைப்பெற்று சென்றாள் சாக்ஷி. 

கேட்க வந்ததை கேட்க முடியவில்லையே என எரிச்சலான விஜய் “ச்சே” என எரிச்சலோடு புல்தரையை காலால் உதைத்தான். 

சீமாவுடன் நடந்து சென்ற சாக்ஷி எதிலிருந்தோ தப்பித்த உணர்வுடன் “ஹப்பாடா ” என பெருமூச்சுவிட , “க்யா ஹூவா? “(என்னாச்சு?)  என சீமா கேட்க, “குச் நஹி” (ஒன்றுமில்லை)  என்றாள். அதற்கு மேல் சீமாவும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. 

ஃபிளாட்டிற்கு சென்ற சாக்ஷி குளித்து தயாராகி சுனந்தா செய்து வைத்த உணவை உண்டுவிட்டு பள்ளிக்கு சென்றாள். 

மதிய உணவு இடைவேளையில் ஷ்யாமிடம் அலைப்பேசியில் பேசியவண்ணம் கிரவ்ண்ட் அருகில் இருந்த மரத்தடியில் நின்றிருந்தாள். ஓடியாடி விளைக்கொண்டிருந்த குழந்தைகளை பார்த்த வண்ணம் தம்பியிடம் அலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்தாள். 

அப்பொழுது ஒரு ஐந்து வயது குழந்தை கிழே விழுந்துவிட பதறிய சாக்ஷி அந்த குழந்தையின் அருகில் ஓடினாள். அவள் செல்வதற்குள் அந்த குழந்தையை எழுப்பி அழுதுக்கொண்டிருந்த அந்த குழந்தையை சமாதானம் செய்துக்கொண்டிருந்தாள் ஒருத்தி. 

சமாதானம் செய்து கொண்டிருந்தவளிடம் குழந்தையை வாங்கினாள் சாக்ஷி. சாக்ஷியை கண்டதும் சிணுங்களுடன் அதன் காலில் ஏற்பட்ட சிறுசிராய்ப்பை காட்டியது அந்த குட்டி தேவதை. 

“அச்சோ சுஜானா காலுல அடிப்பட்டுச்சா? வலிக்கிறதா? மிஸ் அந்த இடத்தில் கிஸ் பண்ணா வலி சரிப்போய்விடும்” என ஆங்கிலத்தில் கூறியப்படி அதன் பிஞ்சு பாதத்தில் முத்தமிட்டாள் சாக்ஷி. 

“வலி போய்விட்டது” என கூறி சிரித்தது அந்த சின்ன சிட்டு.

அவர்களின் செய்கையை பார்த்த வண்ணம் புன்னகையுடன் நின்றிருந்தாள் அந்த குழந்தையை தூக்கிவிட்டவள். 

சாக்ஷியின் செய்கையை கண்கள் மின்ன பார்த்த வண்ணம் அங்கே வந்தான் விஜய். 

அந்த குழந்தையை வகுப்பறைக்கு செல்லும்படி பணித்தவள் அங்கே நின்றிருந்த புதியவளிடம் நன்றி உரைத்தாள். அப்பொழுது தான் கண்டாள் அவள் அருகில் நின்றிருந்த விஜயை. 

ஜோடியாக நின்றிருந்த இருவரையும் திகைப்பாக நோக்கிய சாக்ஷி, சிறுபுன்னகையோடு விஜய்யிடம் “ஹாய்” என்றாள். 

“லன்ச் சாப்பிடாச்சா?” என விஜய் இயல்பாக சாக்ஷியிடம் பேச ஏற்கனவே விஜய்க்கு இவளை தெரியுமா?  என குழப்பமாக அவர்களை நோக்கிக் கொண்டிருந்தாள் அக்ஷயா. 

அக்ஷயாவின் பார்வையை உணர்ந்த விஜய். “சாக்ஷி இவங்க எங்க எம். டி அக்ஷயா” என அக்ஷயாவை சாக்ஷிக்கு அறிமுகம் செய்து வைத்தவன், “மேம் இவங்க சாக்ஷி என்னோட ஃப்ரண்ட்” என சாக்ஷியை அக்ஷயாவிற்கு அறிமுகம் செய்யவும் மறக்கவில்லை. பெண்கள் இருவரும் சிறுபுன்னகையோடு”ஹலோ” “ஹாய்”-ஐ பரிமாறிக்கொண்டனர். 

உணவு இடைவேளை முடிந்தற்கான அறிகுறியாக பெல்லடிக்க, “எனக்கு கிளாஸ் இருக்கு. பார்க்கலாம் பை விஜய் பை அக்ஷூ ” என அவர்களிடம் விடைப்பெற்று சென்றாள் சாக்ஷி. 

அவளை பார்வையால் தொடர்ந்துக்கொண்டிருந்தான் விஜய். அவனின் பார்வை அக்ஷயாவிற்கு அவனின் மனதை உணர்த்த அவனிடமே அதை குறித்து விசாரித்தாள், “அவங்க உங்களுக்கு ஃப்ரண்டு தானே”

“ஆமாம். இப்போதைக்கு ஃப்ரண்ட். கூடிய சீக்கிரம் என் கேர்ள் ப்ரண்ட்” என புன்னகையுடன் அவளிடம் கூறிவிட்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டான் விஜய். அதிர்ச்சியாக அவனை பார்த்த வண்ணம் நின்றிருந்தாள் அக்ஷயா. 

அன்று இரவு பிளாட்டிற்கு வந்தவன் குளித்து முடித்து சார்ட்ஸ் டீ-சர்ட் அணிந்து தலையை துவட்டிய வண்ணம் ஹாலுக்கு வந்தான்.  ஃபேன் காற்றுக்கு படபடத்து கொண்டிருந்த மாத நாட்காட்டி அவன் கவனத்தை ஈர்க்க அதன் அருகில் சென்றான்.  அதில் தெரிந்த ஒரு தேதியை கண்டவன் ஏதோ தோன்ற ஜெய்யிற்கு அழைத்தான். 

அலுவலக்கத்திலிருந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த ஜெய். அலைப்பேசி இசைக்கவும் அழைப்பை ஏற்க ஸ்டேரிங்கில் இருந்த பொத்தானை அழுத்தினான். அவனின் கைப்பேசியை காரின் ப்ளூடூத்தோடு கனெக்ட் செய்திருந்தான். 

அவன் அழைப்பை ஏற்றவுடன், “ஜெய் இந்த வெள்ளிக்கிழமை டெல்லி வாடா” என்றான் எடுத்த எடுப்பிலே.

சாலையில் கவனத்தை பதித்த வண்ணம், ” எதுக்குடா? ” என வினவினான் ஜெய். 

“வருகிற வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 17”

“அன்னைக்கு என்ன ஸ்பெஷல்? “

ஒரு நொடி தன் நினைவுகளில் மூழக்கியவன், “அது எனக்கு ஸ்பெஷல் தான். அன்னைக்கு தான் சாக்ஷிகிட்ட என் காதலை சொல்லலாம்னு இருக்கேன். அப்போ சப்போர்ட்டுக்கு நீ என் பக்கத்தில இருக்கணும்” 

அது ஸ்பெஷலான நாள் என விஜய் சொல்ல அன்று அவளுக்கு பிறந்த நாள் போலும் என நினைத்துக் கொண்டான் ஜெய்.  ஆனால் அந்த நாளை காதல் சொல்ல தேர்ந்ததெடுத்தன் காரணத்தை அவன் மட்டுமே அறிவான். 

அவர்களின் காதலுக்கு முற்றும் போடும் நேரம் நெருங்கிவிட்டது என எண்ணிய ஜெய்யின் உதடு மர்மமாய் புன்னகைத்தது. 

“சரிடா வெள்ளிக்கிழமை மதிய ஃபிளைட்க்கு கிளம்பி வரேன்” என கூறியவன் மேலும் சிலநிமிடம் அவனோடு பொதுப்படையாக பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான். 

“My dear Vijay your love going to be end soon” என குறோதமாக முணுமுணுத்தவன் அக்ஷிக்கு பிடித்த பாடலை காரில் ஒலிக்கவிட்டபடி வீட்டை நோக்கி சென்றான். 

 மறுநாள் மாலையில் பாரத் இன்டர்நேஷனல் பள்ளிக்கு எதிரே இருந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்தான் விஜய்.  காஃபி கோப்பையில் கண்ப்பதித்த வண்ணம் அமர்ந்திருந்தவனின் முன்னால் நிழலாட நிமிர்ந்து பார்த்தான் அங்கே புன்னகையோடு நின்றிருந்தாள் சாக்ஷி. 

“ஹே வாட் ஏ சர்ப்ரைஸ். நீ எங்க இங்க? “

விஜயிடம் பேச முன்னர் போல் அவள் தயக்கம் கொள்ளவில்லை. அவளை தேடி ஆக்ரா வந்த அன்று அவன் துடித்த துடிப்பு அவள் மனதை மாற்றியிருந்தது. அவன் மீது நன்மதிப்பை விதைத்திருந்தது. 

“ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு போகலாம்னு ஸ்கூட்டி எடுத்தேன் அப்போ நீங்க இங்கே உட்கார்ந்து இருப்பதை பார்த்தேன் அதான் வந்தேன். ஏன் வரகூடாதா? ” என வினவிய வண்ணம் அவன் எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். 

“தாராளமாக வரலாம்” என்றான் விரிந்த புன்னகையோடு. 

“இங்க என்ன பண்ணுகிறீங்க? “

“டீ பிரேக் அதான் காஃபி குடிக்க வந்தேன்.”

“ஓகே. ஓகே.” 

அவளிடம் பேச்சை வளர்க்க எண்ணியவன் “அப்புறம் இன்னைக்கும் உன் ட்ரீட் தானா?” என கேட்க, 

“ஹலோ பாஸ் நான் உங்களுக்கு ஒரு வாரம் காஃபி வாங்கி கொடுத்தேன். நீங்க இன்னைக்கு ஒரு நாள் எனக்கு வாங்கி தரமாட்டீங்களா?”  என அவனிடம் எதிர் கேள்விக் கேட்டாள் சாக்ஷி. 

” It’s my pleasure. இன்னைக்கு ஒரு நாள் என்ன?  இந்த வாரம் ஃபுல்லா காஃபி வாங்கி தர நான் ரெடி தான்” என்றான் புன்னகையுடன். 

“I accept this deal” என்றாள் சாக்ஷி புன்னகையுடன். பேரரை அழைத்து அவளுக்கு காஃபி வரவழைத்தவன். அவளிடம் பேசிய வண்ணம் காஃபியுடன் அவள் அழகையும் பருகினான்.

அன்று இரவு படுக்கையில் விழுந்தவளின் அலைப்பேசியில் குறுந்தகவல் ஒலிக்கேட்க அதை எடுத்து பார்த்தாள் சாக்ஷி. விஜயிடமிருந்து ‘குட் நைட்’ என குறுந்தகவல் வந்திருந்தது. 

புன்னகையுடன் அவனுக்கு “குட் நைட்” அனுப்பிவிட்டு தூங்கிப்போனாள். 

அவளின் காலையும் அவனின் “குட் மார்னிங்” குறுஞ்செய்தியுடன் தான் விடிந்தது. அவர்களின் நட்பு கைப்பேசியிலும் காஃபி ஷாப்பிலும் வளர்ந்தது. 

அன்று தொடர்பு கொண்ட தனியார் டிடெக்ட்டிவ் ஏஜென்சிக்கு அழைத்தான் விஜய். சாக்ஷியை பற்றிய விவரம் கேட்க இரண்டு நாளில் தருவதாக கூறினர். அதாவது விஜய் அவளிடம் காதல் சொல்லப்போகும் நாளில் தருவதாக கூறினர். முடிந்த அளவுக்கு சீக்கிரம் தரும்படி கூறி அழைப்பை துண்டித்தான். 

அன்று ஜெய்யிற்கு அழைத்தவன் ஒரு நாள் முன் வரும்படி கேட்டுக்கொண்டான். அவனிடம் சரியென உரைத்தவன் தன் காரியத்தரசியை அழைத்து செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டான். 

வியாழக்கிழமை…… 

தனது ஸ்கூட்டியை ஜெய்யின் வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள் தீக்ஷிதா,  ஜெய்யின் காதலி. 

“ஹே தீக்ஷி, வாடா” – என அன்பாக வரவேற்றார் ஜெய்யின் அன்னை அன்பரசி. 

“ஹாய் அத்தை எப்படியிருக்கீங்க?”,என ஓடிச்சென்று அன்பரசியை கட்டிக் கொண்டாள் தீக்ஷி. 

“நல்லாயிருக்கேன்டா தீச்சுமா, நீ எப்படியிருக்க? ” என அவள் கன்னம்ப் பற்றி வாஞ்சையாக வினவினார் அன்பரசி. 

“நான் நல்லாயிருக்கேன் அத்தை, ஜெய்யை தேடி ஆஃபீஸ் போனேன் அவங்க இன்னைக்கு வரலனு சொன்னாங்க அதான் அத்தை.  ஜெய் எங்கே? அத்தை”

“ஆஃபீஸ் விஷயமாக எங்கயோ போகிறானாம், அதான் அவன் டிரஸை பேக் பண்ணிக்கிட்டிருக்கான்”

“ஓ, சரி அத்தை,  நான் போய் ஜெய்யை பார்க்கிறேன்”

“சரிடா, மேல அவன் ரூம்ல தான் இருக்கான் போய் பாரு, நான் உங்களுக்கு லன்ச் ப்ரிப்பேர் பண்ணுகிறேன்” என சமையலறைக்குள் புகுந்துக் கொண்டார் அன்பரசி. 

மாடியில் ஜெய்யின் அறையில் வார்ட் ரோபை குடைந்து உடைகளை தேர்வு செய்துக் கொண்டிருந்தான் ஜெய். 

பூனைப் போல் மெல்ல நடந்து அவனை பின்னிருந்து அணைத்து, “ஹலோ மாம்ஸ் எங்கயோ கிளம்பிட்ட மாதிரி தெரியுது.” என செல்லம்க் கொஞ்சியவாறு வினவினாள் தீக்ஷிதா. 

காதலுடன் திரும்பி அவள் இடையில் கைப்போட்டு அணைத்தவாறு, “ஹே தீக்ஷூ!, நீ எங்கடா இங்க? என்ன இந்த மாமன் மேல தீடீர் பாசம். என்னை தேடி வீடு வரைக்கும் வந்திருக்க?” என அவள் மூக்கோடு மூக்கை உரசியபடி வினவினான் ஜெய். 

“இந்த மாமன் மேல எனக்கு பாசமெல்லாம் நிறைய இருக்கு ஆனால் இந்த மாமாக்கு தான் என் மேல காதலே இல்லை”- என வருத்தமான குரலில் தீக்ஷி கூற, 

அவளை மேலும் தன்னோடு இறுக்கியணைத்தவன், “ஹே தீக்ஷூ, நீ மட்டும் ம்-னு சொல்லு எனக்கு உன்மேல எவ்வளவு காதல் இருக்குனு இப்போ காட்டுகிறேன்” என தாபமாக அவள் இதழ் நோக்கி குனிந்தான் ஜெய். 

அவனை தள்ளிவிட்டு நான்கடி தள்ளி நின்றவள். “வ்வவ்வே, போடா கேடி” என அவனை நோக்கி பழிப்புக் காட்டினாள். 

“ச்சே, உஷாராகிட்டாளே” என ஜெய் சோகமாக கூற, 

செல்லமாக அவன் முதுகில் ஒரு அடி வைத்துவிட்டு, புன்னகையுடன் அவனுக்கு உடைகளை எடுத்து வைக்க உதவினாள். 

“சரி சொல்லுங்க, என்கிட்ட சொல்லாமல் எங்கே கிளம்பிட்டீங்க? “

டிரஸ்ஸிங் டேபிளில் இருந்த பெர்ஃப்யூமை எடுத்துக் கொண்டிருந்தவன், “டெல்லி போகிறேன், விஜய் சாக்ஷினு ஒரு பொண்ணை லவ் பண்ணுகிறானாம். அவளை ப்ரப்போஸ் பண்ணப் போகிறானாம். அப்போ நான் அவன்க்கூட இருக்கணுமாம் அதான் போகிறேன்” என்று கூறியபடி லேப்டாப் மற்றும் சார்ஜரை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். 

“என்ன சொன்னாய்? ” என கோபமாக தீக்ஷிதாவின் குரல் வந்த பின்பே அவன் உளறியதை உணர்ந்து அவசரமாக நாக்கை கடித்தான். 

“இல்ல தீக்ஷூ ஆஃபீஸ் விஷயமாக மும்பை போகிறேன்”

(அடபாவி தெளிவாக உண்மையை உளறிட்டு மொக்கையாக மழுப்புகிறான் பாரு) 

“நான் ஒன்னும் செவிடு இல்ல,  நீ சொன்னது தெளிவாக என் காதுல விழுந்தது” என தீக்ஷிதா கத்த, 

“ஷ்… கத்தாத அம்மாவுக்கு நான் டெல்லி போவது தெரியாது”. என அவளை அடக்க முயற்சி செய்தான். 

“நீ டெல்லி போகக்கூடாது” என அவன் ட்ராலியை பிடித்துக் கொண்டு விட மறுத்தாள் தீக்ஷி. 

“விளையாடாதே தீக்ஷி ஃப்ளைட்டுக்கு நேரமாகிறது” என அவளிடமிருந்து ட்ராலியை கைப்பற்ற முயற்சி செய்தான். 

“நான் தரமாட்டேன், நீ போகக்கூடாது”,என கத்திய வண்ணம் அவன் ட்ராலியில் அடுக்கிவைத்திருந்த உடைகளை களைத்து அறை முழுவதும் வீசினாள். 

“தீக்ஷி” என இறைந்த வண்ணம் அவளை அடிக்க கை ஓங்கியிருந்தான் ஜெய். 

“அடிடா அடி, உனக்கு என்னைக்குமே விஜய் தான் ஒசத்தி, உனக்கு என் மேலயும் அக்ஷி மேலயும் துளிகூட பாசமே இல்லை.” என தேம்பி தேம்பி அழுத வண்ணம் மொழிந்தாள் அவள். 

“எனக்கு அக்ஷி மேல பாசம் இல்லையா? ” என நிதானமாக கேட்டான் ஜெய். 

“ஆமாம். அவ மேல உனக்கு பாசம் இருந்திருந்தால் இப்படி அவ இடத்துக்கு வேறொருத்தி வருவதை பார்த்துக்கிட்டிருக்க மாட்ட. அவன் ப்ரப்போஸ் பண்ணப் போகிறானாம் அதுக்கு இவரு ஹெல்ப் பண்ணப் போகிறாராம்.”

“அவனுக்கு ஹெல்ப் பண்ணப்போகிறேன்னு உன்கிட்ட சொன்னேனா? “

“அப்புறம் எதுக்கு பெட்டியக்கட்டிட்டு கிளம்புனா?”

“அந்த சாக்ஷி நம்ம அக்ஷி ப்ளேஸ்க்கு வராமல் தடுக்க, புரியல? விஜய் காதலுக்கு குழித் தோண்ட அதுவும் அவன்கூட இருந்தே”

“ஜெய்” என ஆச்சரியம் ஆனந்தம் போட்டிப்போட அவனை நெருங்கினாள் தீக்ஷி. 

“ஆமாம் தீக்ஷி, நான் இப்போ டெல்லி போவது சப்போர்ட்டிங் கேரக்டரா இல்ல வில்லனா” 

“லவ் யூ ஜெய்” ,என அவனை கட்டிக் கொண்டு முத்த மழைப் பொழிந்தாள் தீக்ஷி.

நிதானமாக அவளை விலக்கியவன், “நீ எப்படி தீக்ஷூ அப்படி நினைக்கலாம்?  அப்போ என்னை நீ புரிந்துக் கொண்டது அவ்வளவு தானா? உனக்கு தெரியாதா அக்ஷி மேல நான் எவ்வளவு பாசம் வைத்திருக்கேன்னு”

அக்ஷி மேல் ஜெய்க் கொண்ட கண்மூடித்தனமான பாசம் தீக்ஷிக்கு தெரியுமாதலால் அமைதியானாள். 

“தெரியும் ஜெய். சாரி ஜெய். ஏதோ கோபத்தில அப்படி பேசிட்டேன் மன்னிச்சிடுங்க.” என அவன் கன்னம்ப்பற்றி மன்னிப்பு வேண்டினாள். 

இரண்டு நிமிடம் மௌனத்தில் கடக்க, 

“ஜெய் விஜய் எப்போ சாக்ஷியை லவ் பண்ணதை உன்கிட்ட சொன்னான்?”

“இரண்டு மாசம் முன்னாடி “

“அந்த சாக்ஷி எப்படி இருப்பா?  அக்ஷியை விட அழகா?  ஏன் கேட்கிறேன்னா ஐம்பது தடவைக்கு மேல் காதல் சொன்ன நம்ம அக்ஷி மேல அவனுக்கு வராத காதல் சாக்ஷி மேல வந்திருக்கே அதான்”

“நானும் அதை தெரிந்துக்கொள்ள தான் அவ போட்டோ கேட்டேன், ஆனால் விஜய் அவளை நேர்ல தான் காட்டுவேன்னு சொல்லிட்டான்”

“சரி, என்ன பிளான்?”

“எதுக்கு? “

“விஜய் லவ்க்கு சங்கு ஊத”

தன் திட்டத்தை தீக்ஷியிடம் விளக்கினான். 

“இந்த பிளான் வொர்க் அவுட் ஆகுமா? “

“நிச்சயமா வொர்க் அவுட் ஆகும். அப்படி ஆகலனாலும் என்கிட்ட வேறு ஒரு பிளான் இருக்கு. எப்படியும் அந்த சாக்ஷியை நம்ம அக்ஷி ப்ளேஸ்க்கு வரவிடமாட்டேன் சாக்ஷியை மட்டும் இல்ல எவளையும் அந்த ப்ளேஸ்க்கு வரவிடமாட்டேன்.” என தீர்க்கமாக உரைத்தான் ஜெய். 

மதிய உணவை முடித்துக் கொண்டு, ஒரு மணிநேரத்தில் கிளம்பி விமான நிலையத்தை அடைந்தான்.மூன்று மணிநேர பயணத்திற்கு பின் டெல்லி மாநகரம் சேர்ந்தான். 

அவனை வரவேற்க வெகு ஆவலாக விமான நிலையத்தில் காத்திருந்தான் விஜய். 

ஜெய்யை கண்ட அடுத்த நொடி ஓடிச்சென்று அவனை இறுக்க கட்டிக்கொண்டான் விஜய். 

இருவரின் விழிகளிலும் மெல்லிய நீர்படலம். 

“எப்படி இருக்க விஜய்?” என தழுதழுத்த குரலில் ஜெய் வினவ, 

“இத்தனை நாளா உன்னை பார்க்காமல் நான் நல்லாயில்லடா” என விஜய் கண்களை துடைத்தபடி கூற, 

“நாளைக்கு சாக்ஷிக்கிட்ட சொல்ல வேண்டிய டயலாக்கை இப்போ ஏன்டா என்கிட்ட சொல்ற? “என கிண்டல் செய்தான் ஜெய். 

“ப்ச், போடா” என செல்லமாக அவன் முதுகில் அடித்துவிட்டு அவன் தோளில் கைப்போட்டபடி அழைத்து சென்றான். 

பார்க்கிங் ஏரியாவில் இருந்த தனது ராயல் என்ஃபில்டில் ஜெய்யை ஏற்றிக் கொண்டு தன் ஃபிளாட்டை நோக்கி பறந்தான். 

மலர்ந்த முகத்துடன் ஃபிளாட்டின் கதவை திறந்தான் விஜய், “உன் சாக்ஷியும் இந்த அப்பார்ட்மண்டல தானே இருக்காங்க?” என கேட்ட வண்ணம் உள்ளே நுழைந்தான் ஜெய். 

“ஆமாம்டா A Block Plat no. 105” என மொழிந்த வண்ணம் சமையலறைக்குள் புகுந்தான் விஜய். 

“அங்க எங்கடா போகிற? காஃபி போடவா?”

“ம், ஆமாம்டா”, அதெல்லாம் வேணாம்டா இப்படி உட்கார்” என ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து விஜயை அருகில் அமர்த்தினான். 

ஒரு நிமிடம் அங்கே மௌனம் ஆட்சி செய்ய, “வீட்டில அம்மா, அப்பா எப்படியிருக்காங்க ஜெய்?” என கனத்த குரலில் வினவினான். 

“எல்லாரும் நல்லாயிருக்காங்க”

“ரஸ்மி ராகுல்? “

“சிறப்பா இருக்காங்க”

“அம்மாக்கு நீ டெல்லி தான் போகிறனு தெரியுமா?”

“இல்ல விஜய் நான் ஆஃபீஸ் விஷயமாக மும்பை போகிறேன்னு பொய் சொல்லிட்டு வந்திருக்கேன்.”

“ஓ… சரி, ஆஃபீஸ் வொர்க் எப்படி போகுது? “

“ம், நல்ல போகுது விஜய்”. என ஜெய் கூறிக் கொண்டிருக்கும் போதே விஜய் கைப்பேசி சினுங்கியது. 

சாக்ஷி அழைத்துக் கொண்டிருந்தாள். விஜய் மெல்ல ஜெய்யை ஏறிட, “பேசு, நான் குளிச்சிட்டு வரேன்” என சைகையில் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டான் ஜெய். 

“பேசுடா இன்னைக்கு மட்டும் தான் அவக்கூட உன்னால பேச முடியும். நாளையிருந்து அவ எப்படி பேசுகிறாள்னு நான் பார்க்கிறேன்” என மனதில் கறுவிக்கொண்டு  குளியலறைக்குள் புகுந்தான் ஜெய். 

“ஹே சாக்ஷி சாரிமா இப்போ காஃபி ஷாப் வரமுடியாது”-விஜய்

” பரவாயில்ல  விஜய்”- சாக்ஷி

“நாளைக்கு நாம பிளான் பண்ண மாதிரியே லன்ச்க்கு போகலாம்”. 

“ம், ஓகே”

“நாளை உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு”-விஜய். 

“என்ன சர்ப்ரைஸ் ? “- என ஆவலாக அவள் கேட்க

“சர்ப்ரைஸ் என்னனு சொல்லிட்டா அது எப்படி சர்ப்ரைஸாகும்?”

“சரி நாளைக்கே தெரிந்து கொள்கிறேன் அது என்னனு”

“ஓகே..பை…” என தொடர்பைத் துண்டித்துவிட்டு மாலை சிற்றுண்டி தயாரிக்க சமையலறைக்குள் சென்றான். 

அரைமணி நேரத்தில் சூடான வெங்காய பக்கோடாவும் இஞ்சி கலந்த சுவையான டீயும் தயாரித்துவிட்டு ஜெய்யை அழைத்தான். 

“எதுக்குடா நீ சமைச்ச நாம வெளிய எங்கயாவது காஃபி ஷாப்ல போய் சாப்பிட்டிருக்கலாம்ல” என கூறிய வண்ணம் டைனிங் டேபிளில் அமர்ந்தான் ஜெய். 

“ஹோட்டல் புட் நான் சமைக்கிற டேஸ்ட் வருமா? “

“நிச்சயமாக வராதுடா” என சப்புக்கொட்டிய வண்ணம் விஜய் செய்த வெங்காய பக்கோடாவை காலி செய்யத் தொடங்கினான் ஜெய். 

“மூனு வருஷம் அப்புறம் உன்னை நேர்ல பார்க்கிறேன் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு தெரியுமா? ” என மலர்ந்த முகத்துடன் காஃபியை உறிஞ்சிய வண்ணம் உரைத்தான் விஜய். 

“தெரியும்டா, சரி சாப்பிட்டு முடிச்சதும் உன் சாக்ஷி ஃபிளாட் வரைக்கும் போய்விட்டு வரலாமா? ” என ஜெய் கேட்க, 

“இன்னைக்கு வேணாம்டா நாளைக்கு அவளை பார்க்கலாம்” என உடனே மறுத்தான் விஜய். 

“இல்லடா இன்னைக்கு அவங்க வீட்லப்போய் பார்த்தால் அவங்க அம்மாவையும் பார்க்கலாம் அதான்”

“நாளைக்கு அவ ஓகே சொன்னதும் அவ வீட்டுக்கு போகலாம் அப்போ சுனோ ஆன்ட்டியை உனக்கு இன்ட்ரோ கொடுக்கிறேன்”

“சரி” என அரை மனதாக தலையசைத்தான் ஜெய். 

விஜயும் ஜெய்யும் பல கதைகள் கதைத்தப்படி நேரத்தை கடத்தினர். 

“சரி நாளைக்கு என்ன பிளான்?  எப்படி ப்ரப்போஸ் பண்ணப்போகிற? ” என ஜெய் கேட்க, 

“அதை நாளைக்கு நேர்ல பார்த்து தெரிந்துக்கொள்” என்றான் விஜய் புன்னகையுடன். 

“ஏதாவது சர்ப்ரைஸ் கிப்ட் வாங்குடா. நாளைக்கு ப்ரப்போஸ் பண்ணும் போது கொடு” என கூறியவுடன் அன்றொரு நாள் சாக்ஷிக்காக வாங்கிய மோதிரம் ஞாபகம் வர, அங்கிருந்த மேஜை இழுப்பறையிருந்து எடுத்து அதை ஜெய்யிடம் காட்டினான். 

அந்த பிளாட்டினத்தாளான மோதிரத்தை பார்த்ததும் திகைத்தான் ஜெய். அவன் திகைப்பிற்கு காரணம் கிட்டதட்ட இதே போல் அமைப்புடைய ஒரு மோதிரத்தை தங்கத்தில் அணிந்திருப்பாள் அக்ஷி. அந்த மோதிரத்தை அவள் வாங்கியபோது உடன் இருந்து அவளை கேலி செய்தது அவன் நினைவில் பசுமையாக இருந்தது. 

முயன்று தன்னை சமன்ப்படுத்திக் கொண்டான் ஜெய்.

 மோதிரம் நன்றாக இருப்பதாக கூறி விஜயிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த அறைக்குள் சென்றுவிட்டான். 

இரவு உணவை ஹோட்டலில் ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைத்து உண்டனர். 

“இந்த மாதிரி கதை பேசிட்டே ஒரே பெட்ல தூங்கி மூனுவருஷமாச்சுலடா ஜெய்” என அருகில் படுத்திருந்த ஜெய்யிடம் கேட்டான் விஜய். 

ஆமோதிப்பாய் தலையசைத்த ஜெய்யின் மனதில் சில நினைவுகள் மேல் எழும்பி ரணத்தை தந்தது. 

அவன் கண்களில் வலிகள் பிரதிபலிக்க, விஜயை நோக்கினான். அவனின் மனநிலை அறிந்து மௌனம் காத்தான் விஜய் அவனின் இந்த வலிக்கு காரணமானவன் அவன் (விஜய்) அல்லவா.

அந்த விடியலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் காணப்பட்டனர். விஜய் மிகவும் பதட்டமாக காணப்பட்டான். ஜெய் இறுக்கமாக காணப்பட்டான். 

சாக்ஷியின் இன்னதென வரையருக்க முடியாத உணர்வில் தவித்தாள். ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என அவள் உள்ளுணர்வு உரக்க உரைத்தது. 

 அடர்நீல நிற சட்டையணிந்து கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தான் விஜய்.

மெரூன் நிறத்தில் அடர்நீல நிற கட்டமிட்ட சட்டையணிந்து அவனை பார்த்தவண்ணம் கட்டிலில் அமர்ந்திருந்த ஜெய், “டேய் நானும் மார்னிங்ல இருந்து பார்த்திட்டிருக்கேன் இதோட ஐந்து சர்ட் மாத்திட்ட அரைமணி நேரமா கண்ணாடி முன்னாடி நின்னு தலைசீவிட்டிருக்க” என காண்டாக 

“டேய் இன்னைக்கு சாக்ஷிகிட்ட காதலை சொல்லப் போகிறேன் சோ ஷ்பெசலா ரெடியாக வேணாமா? ” என வினவிய வண்ணம் டிரஸிங் டேபிளில் இருந்த பார்க் அவென்யூ பெர்ஃப்யூமை சட்டையில் தெளித்தான். 

கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்த ஜெய், “சரிடா முடிந்ததா கிளம்பலாமா? நீ கிளம்புகிற வேகத்தைப் பார்த்தா டின்னர்க்கு தான் போவோம் போல” என சலித்த வண்ணம் கட்டிலிலிருந்து எழ, 

“போகலாம்டா” என விஜய் கூற இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர். 

வாசலை நோக்கி ஜெய் நகர, “ஜெய் ஒரு நிமிஷம்” என விஜய் நிறுத்த ‘இன்னும் என்ன’ என்ற ரீதியில் அவனை நோக்கினான் ஜெய். 

“சாமி கும்பிட்டுட்டு வந்திடுகிறேன்”, என ஹாலை ஒட்டியிருந்த பூஜையறைக்குள் நுழைந்தான் விஜய். 

“ஊத்த போகிற லவ்வுக்கு ஊது பத்தியெல்லாம் ஏத்துகிறானே” என சன்னக்குரலில் முணுமுணுத்தான் ஜெய்.

ஜெய்யின் கைப்பேசி கினுகினுத்தது, தீக்ஷிதா அழைத்துக் கொண்டிருந்தாள். 

ஆள்காட்டி விரலில் பைக் கீயை வைத்து சுற்றியப்படி “போகலாமா? ” என கேட்ட வண்ணம் ஜெய்யின் அருகில் வந்தான் விஜய். 

“விஜய் டூ மினிட்ஷ், ஒரு முக்கியமான கால், பேசிட்டு வந்திடுகிறேன்” என பால்கனி நோக்கி செல்ல,

“யாரு தீக்ஷி தானே லைன்ல?” என விஜய் கேட்க, 

ஆமோதிப்பாய் தலையசைத்துவிட்டு கைப்பேசியை உயிர்ப்பித்து செவிக்கு கொடுத்தான் ஜெய். 

“சொல்லு தீக்ஷி”

“சாக்ஷியை மீட் பண்ணியாச்சா? “

“இல்ல இப்போ தான் ரெஸ்ட்டாரண்ட்க்கு கிளம்பிட்டிருக்கோம்”.

“ஒகே ஜெய். ஒரு மணி நேரம் அப்புறம் கால் பண்ணுகிறேன். அங்கே என்ன நடந்ததுனு சொல்லுங்க”

“ம், சரிமா” என தொடர்பைத் துண்டித்துவிட்டு விஜயுடன் கிளம்பினான். 

பைக் பார்க்கிங்கில், “விஜய் சாக்ஷிக்கு கால் பண்ணி வர சொல்லு இங்கயிருந்தே ஒன்னா போகலாம்.” என கூற, 

“இல்லடா அவளுக்கு ஏதோ முக்கியமான வொர்க் இருக்காம். மார்னிங் கால் பண்ணப்பவே சொன்னாள், அங்க வந்து ஜாயின் பண்ணிப்பாள் நாம கிளம்பலாம்” என கூறிய வண்ணம் பைக்கை கிளப்பினான் விஜய். 

பத்து நிமிட பயணத்திற்கு பின் சாகர் ரத்னா ரெஸ்ட்டாரண்ட்டை அடைந்தனர். அது ஒரு உயர்தர தென்னிந்திய உணவகம். 

உள்ளே சென்று விஜய் பதிவு செய்திருந்த மேஜையில் அமர்ந்தனர். 

வாசலை நோக்கிய வண்ணம் விஜய் அமர்ந்திருக்க அவனுக்கு நேராக இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் ஜெய். 

சாக்ஷி வரவிற்காக காத்திருக்க தொடங்கினர் இருவரும், பத்து நிமிடம் பொறுத்த ஜெய், “டேய் சாக்ஷி எப்போ வருவாங்கனு கால் பண்ணி கேளு” என கூற, விஜய் கைப்பேசி எடுத்து சாக்ஷியை அழைத்தான். 

அவளிடம் பேசி முடித்தவன், “பார்க்கிங்ல இருக்கிறாளாம், இரண்டு நிமிஷத்தில வரேன்னு சொன்னா” என்றான். 

இரண்டு நிமிடத்தில் உள்ளே வந்த சாக்ஷி விஜயை தேட, அவள் தேடலை உணர்ந்த விஜய் அவளை நோக்கி கையசைக்க, சிறுப்புன்னகையுடன் அவர்களை நெருங்கினாள்.

அவளுக்கு ஜெய்யின் முதுகு புறம் மட்டுமே தெரிந்தது வெகு மும்முரமாக மெனு கார்டை ஆராய்ந்துக் கொண்டிருந்தான் ஜெய். 

சாக்ஷி அருகில் வர, “ஜெய் சாக்ஷி வந்தாச்சு” என அவள் வரவை உணர்த்தினான் விஜய். 

“ஓ வந்துட்டாங்களா மகாராணி” என அசுவாரஸ்யாக திரும்பி பார்த்த ஜெய் அவளை கண்ட நொடி திகைப்பில் எழுந்து நின்றவன். அடுத்த நொடி அவள் செவிப்பறை கிழியும் வண்ணம் விட்டான் ஒரு அறை. 

தீயென அவளை முறைத்தப்படி ரௌத்திரமாக நின்றிருந்தான் ஜெய். 

ஜெய்யின் செயலில் அதிர்ச்சியடைந்த விஜய், “ஜெய் நீ …” என ஏதோ சொல்ல வாயெடுக்க. கை நீட்டி அவன் பேச்சை தடுத்த ஜெய் அவளின் மறுக்கன்னத்திலும் ஒரு அறைவிட்டான். 

கன்னத்தில் கை வைத்தப்படி கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள் சாக்ஷி. 

“நீ என்ன சொல்லப்போகிறனு எனக்கு தெரியும் விஜய் இது அவ இல்ல அவளை மாதிரி இருக்க வோறொருத்தினு தானே சொல்லப்போகிற, ஒரே மாதிரி ஏழு பேர் இருக்க, இது ஒன்னும் சினிமாவோ நாவலோ கிடையாது வாழ்க்கை.”

அவளை முறைத்துக் கொண்டு நின்றாலும் ஜெய்யின் கண்கள் அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் கலங்கியிருந்தது.

“உன்னை உருகி உருகி நேசிச்சவளை உனக்கு வேணும்னா அடையாளம் தெரியாமல் இருக்கலாம் என்னோடு இருபத்திமூனு வருஷம் கூடவே இருந்த என் உயிர் நட்பை எனக்கு அடையாளம் தெரியும்.” என ஜெய் கூற, அதிர்ச்சியாக அவளை நோக்கினான் விஜய். 

அவளை நோக்கி, ” நாங்க என்ன பாவம் பண்ணோம் உன்னை மனுஷிய மதிக்காத இவனுக்காக எங்க எல்லாரையும் மூனு வருஷமா அழ வைத்துவிட்டாயே” என விஜயை சுட்டிக்காட்டி அதங்கமாக கேட்ட வண்ணம் மீண்டும் ஒரு அறைவிட்டான். 

“இவ ஐம்பது தடவைக்கு மேல் காதல் சொன்னப்ப உனக்கு இவ மேல வராத காதல் இப்போ எப்படி அண்ணா வந்தது” என கோபமாக கேட்டுவிட்டு அங்கிருந்து நகர எத்தினான் ஜெய். 

ஜெய்யின் கைப்பற்றி தடுத்தாள் அவள். “சுஜி” என்ற அவளின் அழைப்பிலே ஜெய் கூறியது உண்மை என உணர்ந்துக்கொண்டான் விஜய். 

“சுஜி!  நட்பே, சாரிடா நில்லுடா” என அவள் தடுக்க, 

அவளை முறைத்த வண்ணம், “ஏய் உன் மேல கொலை காண்டுல இருக்கேன். நான் இருக்கிற கோபத்தில உன்னை கொன்னாலும் கொன்னுடுவேன் சோ கையைவிடு, நாளைக்கு நானே வந்து உன்னை மீட் பண்ணுகிறேன்” என பல்லை கடித்தப்படி மொழிந்தான் அனைவராலும் ஜெய் என்றும், அவளால் சுஜி என்றும் அழைக்கப்படும் சுஜய். சுஜய் பிரபாகர், விஜயின் உடன் பிறந்த சகோதரன். 

சுஜய் அங்கிருந்து வெளியேறிய அடுத்த நொடி அவளும் அங்கிருந்து கிளம்ப எத்தினாள், “அக்ஷூ” என சன்ன குரலில் விஜய் அழைக்க உணர்ச்சியற்ற பார்வை விஜய் மீது வீசிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் அவள். 

ரெஸ்ட்டாரண்ட்விட்டு வெளியே வந்த ஜெய்யின் கைப்பேசி சினுங்கியது, தீக்ஷிதா அழைத்துக் கொண்டிருந்தாள். 

கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தவன் இடதுகையால் தலைக்கோதி ஒரு பெருமூச்சுடன் தன்னை சமன்ப்படுத்திக் கொண்டு செல்லை உயிர்ப்பித்தான். 

“ஹலோ ஜெய்” என எதிர்பார்ப்போடு அவள் குரல் ஒலிக்க, 

“தீக்ஷூ,…. தீக்ஷூமா” என குரல் அடைக்க வார்த்தைகள் வராமல் தவித்தான் ஜெய். 

“ஜெய் என்னாச்சுப்பா, ஏன் உங்க வாய்ஸ் ஒரு மாதிரியிருக்கு? Are you alright?” என பதட்டம் தொற்றிக்கொண்டது தீக்ஷிதா குரலில். 

“Am alright, நம்ம அக்ஷி…. “

“அக்ஷியா??? “

“ஹான்… நான் நம்ம அக்ஷியை பார்த்தேன் தீக்ஷி”என திக்கித்தினறி ஒரு வழியாக கூறினான். 

“நம்ம அக்ஷியா?  என் அக்கா அக்ஷிதாவையா? ” 

“ஆமாம் தீக்ஷி. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?  என்கிட்ட இருந்து அவளை பிரிச்சிட்டயேனு கடவுள்க்கிட்ட இந்த மூனு வருஷம் நான் சண்டப்போடாத நாள் இல்ல. அந்த கடவுள் என் அக்ஷியை திருப்பிக் கொடுத்துட்டார்” என கூறிய வண்ணம் உடைந்து அழுதான். 

“ஜெய் எனக்கு புரியல நம்ம அக்ஷி எப்படி?  அவ தான் மூனு வருஷத்துக்கு முன்னாடி ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாளே?. நீங்க சாக்ஷியை மீட் பண்ண தானே போனீங்க அங்க அக்ஷி எப்படி?  ஒரு வேளை அந்த சாக்ஷி பார்க்க நம்ம அக்ஷி மாதிரி இருக்காங்களா? அதான் நீங்க இப்படி சொல்ரீ்ங்களா? “

“இல்ல… இல்ல… அது சாக்ஷி இல்ல என்னோட அக்ஷிதான் எனக்கு தெரியும்” என வெறிப்பிடித்தவன் போல் கத்தினான். 

“அப்போ நம்ம அக்ஷி சாகலயா? ” என அழுகையும் ஆனந்தமும் போட்டிப்போட வினவினாள் தீக்ஷி. 

“ஆமாம் தீக்ஷி” என அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே அவன் முன் வந்து நின்றாள் இத்தனை நாள் விஜயினால் சாக்ஷி என கூறப்பட்டு வந்த அக்ஷிதா. 

“சுஜி” என தயங்கி தயங்கி அவள் அழைக்க, அவளை முறைத்தான் ஜெய்.

 அந்த பக்கமிருந்த தீக்ஷியின் செவியில் இவளின் ‘சுஜி’ என்ற அழைப்பு எட்ட, ஜெய் கூறியது உண்மை என்பதை உணர்ந்துக்கொண்டாள். 

“ஜெய் அக்ஷிகிட்ட போனை கொடுங்க நான் பேசனும்” என தீக்ஷி கூற, மௌனமாக கைப்பேசியை அக்ஷியிடம் நீட்டினான் ஜெய். 

“அக்ஷி…. அழகி” என தழுதழுத்த குரலில் தீக்ஷிதா அழைக்க, 

“தீச்சுக்குட்டி… தீச்சுமா…. எப்படிடா இருக்க? ” என குரல் கம்ம வினவினாள் அக்ஷிதா. 

“நல்லாயிருக்கேன் தங்கம். நீ?” என அழுகையின் இடையில் வெளிவந்தது தீக்ஷியின் குரல். 

“நல்லாயிருக்கேன்டா தீச்சுகுட்டி”

“எங்களை எல்லாம் மறந்துட்டயா அக்ஷி?”

“இல்லடா”

“அப்புறம் ஏன் இத்தனை நாள் எங்களை பிரிந்திருந்த? “

“…………”

“எனக்கு இப்போவே உன்னைப் பார்க்கணும் போல இருக்கு அக்ஷி.”

“எனக்கும் தான்டி”

“அப்போ நான் டெல்லிக்கு கிளம்பி வரவா? சசிப்பா, சந்தும்மாவை கூப்பிட்டு வரவா?” என ஆவலே வடிவாக தீக்ஷி கேட்க, மௌனமே பதிலாகளித்தாள் அக்ஷி. 

“அக்ஷி லைன்ல இருக்கயா? ஹலோ… ஹலோ… “

“ஹான் இரு சுஜிக்கிட்ட போனைக் கொடுக்கிறேன்” என அவளையே கோபமாக பார்த்துக்கொண்டிருந்த சுஜயிடம் கைப்பேசியை நீட்டினாள். 

“ஜெய், நான் சசிப்பாவை சந்தும்மாவை கூப்பிட்டு டெல்லி வரவா? “

“வேணாம் தீக்ஷி நானே நாளைக்கு அக்ஷியை கூப்பிட்டு நம்ம ஊருக்கு வரேன், அதுவரை அக்ஷிப் பற்றி சசி மாமாக்கிட்டயும் சந்திரா அத்தைக்கிட்ட சொல்லாதே.”

“ம் சரி, ஜெய்… அக்ஷி வருவாள்ல??? அவ வரலனு சொன்னால்? “

அக்ஷியை முறைத்த வண்ணம், ” அவ வருவாள், அப்படி அவ வரலனு சொன்னால் அவ காலை உடைத்தாவது கூடகூட்டிட்டு வருவேன்” என தீர்க்கமாக உரைத்துவிட்டு அலைப்பேசி அணைத்து சட்டை பாக்கெட்டில் போட்டான். 

அவனை பாவமாக பார்த்தப்படி நின்றிருந்த அக்ஷியிடம், 

“நான் தீக்ஷிக்கிட்ட சொன்னது காதுல விழுந்ததுல. நாளை ஊருக்கு போகிறோம். புரிந்ததா? வரல அது இதுனு பிரச்சனை பண்ண தொலைச்சிடுவேன் தொலைச்சு” என சுட்டு விரல் நீட்டி மிரட்டிவிட்டு நகர்ந்தான் ஜெய். 

அந்த உணவுவிடுதியிலிருந்து வெளியே வந்த விஜய் நேராக நேருப்பூங்காவிற்கு சென்றான். 

அக்ஷியை முதன்முதலில் பார்த்த தருணத்தை தன் நினைவடுக்கில் தேடி அதில் மூழ்கிப்போனான். அவள் அவனிடம் காதல் சொன்ன ஒவ்வொரு தருணத்தையும் நினைவுக்கூர்ந்தான். அன்றொரு நாள் கடற்கரையில் அவள் காதல் சொன்னதும் அன்று விஜயின் பேச்சும் ஜெய்யின் கோபமும் அவனின் நினைவிலாடியது. கடைசியாக அவள் காதல் யாசகம் கேட்டதும் அதற்கு தான் சொன்ன பதிலும் அந்த பதில் கேட்டு அவள் வடித்த கண்ணீரும் இன்று அவன் இதயத்தை சுட்டது. 

அவளின் பிரிவையும் அன்று அவன் உணர்ந்த வலியையும் இப்பொழுதும் உணர்ந்தான். 

சாக்ஷி தான் தன் அக்ஷி என்பதில் மகிழ்வதா?  இல்லை அவளை அடையாளம் காண இயலாத தன் துர்தஷ்ட நிலையை நினைத்து வேதனைக் கொள்வதா?  என புரியாமல் தவித்தான். 

அக்ஷியின் மரணத்தை சுஜயின் மனம் ஏற்கவில்லை ஆனால் விஜய் மனம் ஏற்றுக்கொண்டது.  மாண்டவள் மீழ்வதில்லை என்ற எண்ணம் தான் அவளை வோறொருத்தியாக நினைக்கத் தோன்றியது. ஜெய்யின் மனம் அவளின் மரணத்தை ஏற்கததால் அவளை கண்டதும் கண்டுக்கொண்டான் அவள் அக்ஷி என்று.  சுஜயை கண்டதும் அவள் கண்ணில் தோன்றிய பாசமே அவனுக்கு அவனின் நட்பை அடையாளம் காட்டிவிட்டது. 

“இவ ஐம்பது தடவைக்கு மேல் காதல் சொன்னப்ப உனக்கு இவ மேல வராத காதல் இப்போ எப்படி அண்ணா வந்தது” 

ஜெய் அங்கிருந்து செல்லும்போது அவனை பார்த்து கேட்ட கேள்வி அவனை கொல்லாமல் கொன்றது. 

நேராக தன் ஃபிளாட்டிற்கு சென்ற அக்ஷி தலைவலி என சுனந்தாவிடம் கூறிவிட்டு தன் அறைக்கு சென்று முடங்கிக் கொண்டாள். 

டெல்லி மாநகரில் எங்கெங்கோ சுற்றி திரிந்த ஜெய் மாலை மங்கிய பிறகு விஜயின் ஃபிளாட்டிற்கு வந்தான். 

விஜயை தேடி கண்களை சுழலவிட்டவனின் கண்களில் படுக்கையறை கட்டிலில் உடையைக்கூட மாற்றாது உறங்கிக் கொண்டிருந்த விஜய் தென்ப்பட்டான். மௌனமாக அங்கிருந்து வெளியேறி அக்ஷியை தேடி அவள் ஃபிளாட்டிற்கு சென்றான். 

-தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    3 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.