137 views

காதல் தான் எந்நாளும்

ஒரு வார்த்தைக்குள் வராதது..

காலங்கள் சென்றாலும் அந்த

வானம் போல் விழாதது..

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சற்று உற்சாகமாக காணப்பட்டான் விஜய். 

சாக்ஷி மற்றும் சுனந்தாவிடம் விடைப்பெற்றவன் தன் ஃபிளாட்டிற்கு சென்றான். இரவு உணவுற்கு பின் சமையலறையை சுத்தம் செய்துவிட்டு ஒன்பது மணியளவில் ஜெய்யின் எண்ணிற்கு அழைத்தான். 

“ஹலோ ஜெய்…… “

“என்னடா காலையில் நான் போன் பண்ணும்போது எடுக்கல மிஸ்ட் கால் பார்த்து திருப்பி நீயும் கால் பண்ணல?  பயங்கர பிஸியோ? ” என கோபமாக வினவ, 

“இல்லடா மார்னிங் நான் உனக்கு கால் பண்ணும் போது ராகுல் எடுத்தான் என் குரலை கேட்டதும் கோபமாக போனை வைத்துவிட்டான். மறுபடியும் நான் கால் பண்ணா என் மேல இருக்க கோபத்தை உன் மேல இல்ல ரஸ்மி மேல காட்டிவிடுவானோனு பயந்து தான் கால் பண்ணல” என்றான் விஜய் கம்மிய குரலில். 

“ஓ…..”

“அங்க எதுவும் பிரச்சனையில்லயே? “

“இல்லை”

“ராகுல் ரஸ்மி அங்க தான் இருக்காங்ளா? “

“இல்லை மார்னிங்கே கிளம்பி அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க “

“என்னாலயா? “

“இல்லடா, அவன் ஆபிஸ்ல ஏதோ அவசர வேலைனு சொன்னான்.  சரி நீ சொல்லு காலைல சாக்ஷியை பார்க்கலனு ஃபீல் பண்ணிட்டிருந்தயே பார்த்தாயா? ” என நேக்காக பேச்சை மாற்றினான் ஜெய்.

“ஈவினிங் சாக்ஷியையும் அவ அம்மாவையும் மீட் பண்ணேன்டா”

ஏற்கனவே அறிந்த விஷயம் என்றாலும் குரலில் போலி ஆச்சரியத்தை வரவழைத்துக் கொண்டு “அப்படியா? ” என்று புதிதாய் கேட்பதைப் போல் பாவனை செய்தான். 

“ஆமாம்” என கூறி சாக்ஷி சந்திப்பு முதல் சுனந்தா வருகை, அவர்களோடு காஃபி அருந்தியது, அவர் அவனை வீட்டிற்கு அழைத்தது என அனைத்தையும் கூறி முடித்தான். 

“அவங்க பையன் அப்ராட்ல இருக்காங்க போல பையன் கால் பண்ணுவான் லேட்டாகுதுனு சொன்னாங்க” 

“அப்போ சாக்ஷிக்கு அம்மாவும் அண்ணனும் மட்டும் தானா? ” என ஜெய் கேட்க, 

“அப்படி தான் நினைக்கிறேன் என்றான் விஜய்.

(அடபாவி விஜய் அவனே சாக்ஷியை சாய்க்க சமயம் பார்த்திட்டிருக்கான் அவன்கிட்ட போய் அவ ஹிஸ்டரியும் ஜாக்ரபியும் சொல்லிட்டிருக்கயேடா… சோ ஷாட்… பசு எது? பாம்பு எது?-னு வித்யாசம் தெரியாத பச்ச மண்ணாயிருக்கயேடா) 

“அப்போ அவளை தூக்குறதுல எந்த பிரச்சினையும் வராது. ” என ஜெய் கூற,  சரியாக அந்த நேரம் செல் போன் சிக்னல் சதி செய்ய,  அவன் கூறியவை விஜய் செவிக்கு எட்டவில்லை. 

“என்னடா ?சரியாக கேட்கல “

“அப்போ அவளை ஒத்துக்க வைக்கிறது எந்த பிரச்சினையும் வராதுனு  சொன்னேன்டா”

“ஆமாம்டா”

மேலும் இரண்டு நிமிடம் பேசிவிட்டு உறங்கச் சென்றான். 

ஞாயிற்றுக்கிழமை…….!!!! (உலகத்தில நிறையப் பேருக்கு பிடித்த வார்த்தை)

விஜய் விழி திறந்து கைப்பேசியில் நேரம் பார்த்தான் காலை ஒன்பது மணியென காட்ட மெல்ல எழுந்து காலை கடனை முடித்து பல்த்துலக்கி காலை உணவிற்கு ப்ரட்டும் பட்டரும் உண்டவன். குளித்து கிளம்பி திரையரங்கிற்கு சென்றான். அங்கே ஓடிக்கொண்டிருந்த தமிழ் படத்திற்கு டிக்கெட் பெற்றவன் படம் பார்க்க சென்றான்.

“நாட்டுக்கு எப்படி வரி முக்கியமோ அதே மாதிரி நமக்கு ஞாயிற்றுக்கிழமை கறி முக்கியம்” என்ற வாக்கியத்திற்கு கட்டுப்பட்டு மதிய உணவை ஒரு அசைவ உணவகத்தில் முடித்தவன் தன் ஃபிளாட்டிற்கு புறப்பட்டான். 

எல்லா தனிக்கட்டையோட சன்டே ரொட்டின் இதுவாகதான் இருக்கும் அதற்கு விஜய் மட்டும் விதிவிலக்கு அல்ல. 

தன் பைக்கை பார்க் செய்துவிட்டு A பிளாக்கை நெருங்கும் வேளையில் அவனின் எதிரே வந்தார் சுனந்தா. சிறுபுன்னகையோடு அவரை கடந்துவிட தான் எண்ணினான். ஆனால் அவனை நிறுத்து பேசலானார் சுனந்தா. 

“என்ன விஜய் ஆபிஸ் போய்ட்டு வருகிறாயா?”

“சன்டே வொர்க் இல்லை ஆன்ட்டி. சும்மா வெளியப் போய்ட்டு வருகிறேன். நீங்க? “

“நான் கடைக்கு போய் வரேன்.”

“அவங்க எங்க ஆன்ட்டி?.”

“அவ வீட்டில தான் இருக்காப்பா. அவளுக்கு வெளிய சுத்துவதே பிடிக்காது.அதுக்காக அவளை நீ லேஸினு நினைத்துவிடாதே காலையில ஆறுமணிக்கு மேல தூங்க மாட்ட. அதிகம் பேச மாட்டாள்.நல்ல சுறுசுறுப்பான பொண்ணு”,என மகளின் புகழ் பாடினார் அவர். 

அவர் கூறியதை கேட்டதும் விஜயின் மனம் சாக்ஷியையும் அக்ஷியையும் ஒப்பிட்டு பார்த்தது.  அக்ஷிக்கு ஊர் சுற்றுவது மிகவும் பிடித்தமான ஒன்று. விடுமுறை தினங்களில் அவளை வீட்டிலே பார்க்க முடியாது.அவள் காலையில் விழிக்கும் நேரமே எட்டு மணிதான் அதுவும் சில நேரம் ஜெய்யின் சுப்புரபாதத்தில் ஏழு மணிக்கு எழுவாள். வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பாள் மிகவும் கலகலப்பானவள். 

“வா விஜய் First floor-ல தான் நம்ம பிளாட் வந்து காஃபி குடிச்சிட்டு போ” என இயல்பாக அவர் வீட்டிற்கு அழைக்க, 

“இல்லை ஆன்ட்டி இன்னொரு நாள் வருகிறேன்” என நாசூக்காக மறுத்தான் விஜய். 

“அட நம்ம பிளாக்கிட்ட வந்துட்டுக்கு பிளாட்டுக்கு வரலனா எப்படி. சும்மா வா” என அவன் மறுப்பை சட்டை செய்யாது அழைத்துக்கொண்டு பிளாட்டிற்கு சென்றார் சுனந்தா. 

அழைப்பு மணியை அழுத்த “வரேன்மா” என்ற குரலோடு கதவை திறந்தாள் சாக்ஷி. சுனந்தாவுடன் நின்ற விஜயை கண்டவள் திகைத்து அன்னையை நோக்கினாள். பின் ” வாங்க விஜய்” என்ற வரவேற்புடன் சமையலறையில் புகுந்துக் கொண்டாள். 

ஹாலில் இருந்த சோபாவை சுட்டிக்காட்டிய சுனந்தா, “உட்கார்ப்பா. காஃபி கொண்டு வருகிறேன்”,என கூறிக்கொண்டிருக்கும் போதே காஃபி கோப்பையோடு அங்கே பிரசன்னமானாள் சாக்ஷி. 

சிறுப்புன்னகையோடு அதைப்பெற்றுக் கொண்டு குடிக்கலானான். 

சுனந்தா கேள்விகள் கேட்க அவருக்கு காஃபி அருந்திய வண்ணம் பதிலளித்துக்கொண்டிருந்தான் விஜய். வெறும் பார்வையாளராக நின்றிருந்தாள் சாக்ஷி. 

“ஓகே ஆன்ட்டி, அப்போ நான் கிளம்புகிறேன்” என விடைப்பெற எத்தியவன், “இன்னும் ஒரு வாரத்துக்கு ஈவினிங் காஃபி வாங்கி கொடுக்கணும்னு நான் சொன்ன டீலை மறந்துவிடாதீங்க. நாளைக்கு ஈவினிங் காஃபி ஷாப்ல மீட் பண்ணலாம் பை” என சாக்ஷியிடம் கூறியவன். அவர்களிடம் விடைப்பெற்று தன் ஃபிளாட்டிற்கு சென்றான். 

அவன் சென்றதும் சுனந்தாவை தீர்க்கமாக பார்த்தப்படி நின்றிருந்தாள் சாக்ஷி. அவளின் பார்வையை உணர்ந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தார் சுனந்தா. 

“சுனோம்மா” என்ற அவளின் அழைப்பு அவரை நிறுத்த, ” என்னம்மா? ” என நிதானமாக அவளின் அருகில் வந்தார் அவர். 

“இப்போ எதுக்கு அவனை இங்க கூட்டிட்டு வந்தீங்க? ” என அவள் கேட்க, 

“தெரிஞ்ச பையன்னு அப்புறம் உன் ஃபிரண்ட்டுனு ஒரு வாய் காஃபி சாப்பிட கூட்டிட்டு வந்தேன்” என்றார் அவர். 

‘அதுமட்டும் தான் காரணமா? ‘ என்பதைப் போல் அவரை நோக்கியவள். “பொய் சொல்லாதீங்கமா. உங்களுக்கு பொய் சொல்ல வரல. நீங்க எதை நினைத்து அவனை கூட்டிட்டு வந்தீங்களோ அது நடக்காது. இந்த பாழாப்போன காதலால் நான் இழந்தது எவ்வளவுனு உங்களுக்கு தெரியும் அப்படியிருந்தும்….. 

மறுபடியும் நம்பி ஏமாற எனக்கு சக்தி இல்லமா. நான் உங்களுக்கு பாரமாக இருக்கேன்னு நீங்க நினைச்சிங்கனா தயவு செய்து சொல்லிடுங்க. நான் எங்கேயாவது போய் விடுகிறேன்” என கண்ணீருடன் கூறியவள் தன் அறைக்குள் சென்று மறைந்தாள். 

அவளின் கண்ணீர் அவரை வருத்த மெல்ல அவளின் அறைக்கு சென்றார். கட்டில் படுத்து அழுதுக்கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்தவர் அவளின் தலையை மெல்ல கோதினார். 

“நான் உன்னை பாரமாக நினைப்பேனா கண்ணம்மா?” என வினவியவரின் குரல் அடைத்தது. 

“நீயும் எல்லாரையும் மாதிரி சந்தோஷமாக இருக்கனும் ஆசைப்பட்டேன் அதான். உன்னை கடைசி வரை என் பெண்ணாக கூடவே வைத்திருப்பதில் எனக்கு ஒரு சிரமமும் இல்லை” என மகளுக்காக வேதனையை முழுங்கிக்கொண்டு உரைத்தார். 

தலையணையிலிருந்து அவர் மடிக்கு தன் தலையை மாற்றியவள்,  “சாரிமா” என்றாள் மெல்லிய குரலில். 

நாட்கள் வேகமாக நகர்ந்தது. 

ஜெய், விஜய் மற்றும் சாக்ஷியை பின்தொடர ஏற்பாடு செய்திருந்த கபிலன் தன் பணியை செவ்வன செய்து அவர்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் ஜெய்யிற்கு அனுப்பிக்கொண்டிருந்தான். 

விஜய் சாக்ஷி நட்பு முதல்ப்படியிலே தான் இருந்தது. 

அதற்கு காரணம் விஜய் பத்து வார்த்தை பேசினால் ஒரு வார்த்தை தான் பேசுவாள் சாக்ஷி. தன்னைப்பற்றி அனைத்தையும் அவளிடம் கூறியிருந்தான் ஒரு விஷயத்தை தவிர்த்து… அக்ஷியைப்பற்றி……அவன் மேல் அவள் கொண்ட காதலையும் அவளை அவன் நிராகரித்ததையும் மறைத்திருந்தான். 

ஆனால் அவனால் அவளைப்பற்றி எந்த விஷயத்தையும் அறிந்துக்கொள்ள முடியவில்லை. சாக்ஷி தன்னைப்பற்றி அவனிடம் எதையும் கூற தயாராய் இல்லை. 

இதிலே அவளின் மனதை அவன் அறிந்திருக்க வேண்டும்… ஆனால் அறியாதது அவன் தவறா? அல்லது விதியின் பவரா? 

சனிக்கிழமை………… 

மாலை….. 

அதே காஃபி ஷாப்…..

விஜய்யும் சாக்ஷியும் மௌனமாக காஃபி அருந்திக்கொண்டிருந்தனர். 

“நாளைக்கு ஸ்கூல் ஹாலிடேவா? “

“ம்…. “

“நாளைக்கு என்ன பிளான்? “

“நாளைக்கு நானும் என் ஃப்ரண்ட் சீமாவும் ஆக்ரா போகிறோம்”

“இதுவரைக்கும் ஆக்ரா போனது இல்லையா? “

“இரண்டு மூனு தடவைப்போயிருக்கேன்.  நாளைக்கு பௌர்ணமி. முழுநிலா வெளிச்சத்தில தாஜ் மஹால் பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை.அதான் நானும் சீமாவும் போகிறோம்” என்றாள் கண்கள் மின்ன, 

“That’s Amazing, எனக்கும் முழுநிலா வெளிச்சத்தில யமுனா நதியில் பிம்பமாக தெரிகிற தாஜ் மஹால்லை பார்க்கனும்னு ரொம்ப ஆசை”

(டேய் டேய் அவக்கூட போக ஆசைப்படுறனு நேர சொல்லு எதுக்கு கங்கா யமுனா சரஸ்வதினு கதை விடுற) 

“ஓ அப்படியா? ” என உரைத்தவள், மறந்தும் தங்களுடன் அவனை அழைக்கவில்லை. 

“தத்தி தத்தி ஒரு வார்த்தை நீங்களும் வரீங்களானு கேட்கிறாளா பார்” என மனதில் அவளை திட்டியவன்,  ” சரி அவ கூப்பிடல என்ன நாம போகலாம்” என தனக்குள் கூறிக் கொண்டான். 

“சரி அப்போ நான் கிளம்புகிறேன்” என அவனிடம் விடைப்பெற்று சென்றாள் அவள். 

அவளிடம் விடைப்பெற்றவன் அருகிலிருந்த நகைக்கடைக்கு சென்றான். 

விஜய்யை பின்த்தொடர்ந்த கபிலன், விஜய் நகைக்கடையில் நுழைந்ததை ஜெய்யிற்கு தெரிவித்தான். திடீரென நகை வாங்க அவசியம் என்ன வந்தது என குழம்பிப்போனான் ஜெய். 

பிளாட்டினம் பிரிவில் அமர்ந்திருந்த விஜய் இரண்டு இதயம் இணைந்ததை போல் இருந்த மோதிரத்தை கையில் வைத்து ரசித்துக்கொண்டிருந்தான். 

அதை பில் போட்டு வாங்கியவன் புன்னகையுடன் தன் பிளாட்டிற்கு சென்றான். 

ஃபிளாட்டிற்கு வந்தவன் ஜெய்யை அழைத்தான். மறுநாள் சாக்ஷி ஆக்ரா செல்லவிருப்பதை கூறியவன் தானும் அங்கே செல்லப்போவாதாகவும் அந்த பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் தாஜ் மஹால் யமுனா நதிக்கரையில் வைத்து அவளிடம் காதல் செல்லயிருப்பதாக கூறினான். 

நிலைமை கைமிறிப்போனதைப் போல் உணர்ந்தான் ஜெய். 

சட்டென சுதாரித்தவன், “அங்க வைத்து காதலை சொல்ல போகிறாயா?  ஏன்டா உனக்கு வேற இடமே கிடைக்கவில்லையா?  அது ஒரு சமாதி… அது மட்டுமில்லை ஷாஜகான்க்கு மொத்தம் ஆறு பொண்டாட்டியாம் அதுல மூனாவது தான் மும்தாஜாம் அப்படி இருக்கும் போது ஷாஜகான் மும்தாஜ் மேல வைத்த காதல் எப்படி உண்மையானதா இருக்கும்” என்றான். 

குழப்பமான மனநிலைக்கு தள்ளப்பட்டான் விஜய். 

“நீ காதலை சொல்லும்போது நான் உன்கூட இருக்கணும்னு சொன்னா. இப்போ லவ் சொல்ல ரெடியாகிட்ட.? எல்லாரையும் மாதிரி தான் நீயும் பிகர் வந்த கூட இருப்பவர்களை கழட்டிவிட்டுவிட வேண்டியது” என ஜெய் பொறிய,

“டேய் சாரிடா, நான் இப்போ கால் பண்ணதே அவகிட்ட லவ் சொல்ல போகிறேன்டா மார்னிங் பிளைட் பிடித்து நாளைக்கு டெல்லி வாடானு கூப்பிட தான். ஆனால் நீ சொன்னது அப்புறம் தான் புரிஞ்சிட்டேன் ஒரு சமாதியில் என் காதல் பிறக்ககூடாதுனு முடிவுப் பண்ணிட்டேன் சோ நான் அவக்கிட்ட நாளைக்கு காதலை சொல்லவில்லை. இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம். அந்த கடவுள் என் காதலை சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவாருனு எனக்கு நம்பிக்கை இருக்கு ” என்றான் தீர்க்கமான குரலில்.

அப்படி ஒரு வாய்ப்பை  கடவுள் அமைத்து தராமலேப்போனால்????? 

“ஒரு சமாதியில் உன் காதல் பிறக்கக்கூடாதா?  ஏற்கனவே எங்க அக்ஷி காதலை சமாதிக்கட்டிட்டு அந்த சமாதியில் தானேடா உன் காதலை ஆரம்பிக்க போகிற” என வேதனையாய் நினைத்த ஜெய்.  விஜய் இப்பொழுது அவளிடம் காதலை சொல்லப்போவதில்லை என்ற நிம்மதியோடு மேலும் சிலநிமிடம் அவனோடு பொதுப்படையாக பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான். 

தன் அறையில் உலாத்திக்கொண்டிருந்த ஜெய், “இவன் இவ்வளவு ஃபாஸ்ட்டா இருப்பான்னு எதிர்ப்பார்க்கல. இப்போ எப்படியா நிலைமையை சமாளித்தாயிற்று. அடுத்த அடி அவன் எடுத்து வைப்பதற்குள் நாம ஏதாவது பண்ணவேண்டும்” என முடிவெடுத்தவன் கபிலனுக்கு அழைத்தான்.

 அவனிடம் சில கட்டளைகளை பிறப்பித்தவன், மறுநாளை ஆவலாக எதிர்ப்பார்த்த வண்ணம் உறங்கச்சென்றான். 

காலையில் செல்போன் அலறலில் விழித்திறந்தான் விஜய். செல்போனை செவிக்குக் கொடுத்தவன் அந்த பக்கம் சொன்ன செய்தியைக் கேட்டு திகைத்தவன் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே இருப்பதாக உரைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தான். 

அடுத்த அரைமணி நேரத்தில் சம்பவயிடத்திலிருந்தான் விஜய். 

“என்னாச்சு மேடம்? ” என பதட்டமாக கைப்பேசியை நோண்டிய வண்ணம் நின்றிருந்த அக்ஷயாவிடம் வினவினான் விஜய். 

“விஜய் வந்துட்டீங்களா?  உங்களுக்கு தான் போன் ட்ரை பண்ணிட்டிருந்தேன். இந்த சைட்ல வொர்க் முடிகிற ஸ்டேஜ்ல இருக்கு. இப்போ வந்து இந்த பில்டிங் பாதி அவங்க இடத்துல இருக்குனு சொல்லிப் பிரச்சினை பண்ணுகிறாங்க” என்றாள் அவள். 

“மேம், நீங்க டென்சனாகாதீங்க நான் லாயரை வரச்சொல்கிறேன் ” என உரைத்தவன் ஸ்டார் பில்டர்ஸின் லிக்ல் அட்வைசரை தொடர்புக் கொண்டான். 

மாலை கடந்த பிறகும் அந்த பிரச்னைக்கு தீர்வுக்கிடைக்கவில்லை. “விஜய் இன்னைக்கு சன்டே கோர்ட் வேற ஹாலிடே. பேப்பர்ஸ் எல்லாம் நமக்கு சாதகமாக தான் இருக்கு சோ நீங்க கவலைப்படாதீங்க. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பில்ட்டிங் ஓபனிங் பங்க்ஷன் வைத்துவிடலாம்.” என அந்த வக்கீல் உரைக்க, நிம்மதிப் பெருமூச்சு வெளியிட்டான் அவன். 

“தேங்க்ஸ் விஜய். இப்போதான் எனக்கு நிம்மதியாக இருக்கு” என்றாள் அக்ஷயா நிம்மதி கலந்த குரலில். அக்ஷயாவிடம் அவன் விடைப்பெற்று சென்றான். 

ஃபிளாட்டை அடையையில் நேரம் பத்தை கடந்திருந்தது. வழியிலே உணவகத்தில் இரவு உணவை முடித்ததால் பிளாட்டை அடைந்ததும் உடைமாற்றிவிட்டு மெத்தையில் விழுந்தான். 

இரவு பதினோரு மணியளவில் காலிங் பெல் ஒலியில் தூக்கம் கலைய, கண்களை கசக்கிய வண்ணம் வாசலுக்கு சென்றான்.”இந்த நேரத்தில் யார்? ” என எண்ணியவன், பீப் ஹோல் வழியே வாசலைப் பார்த்தான் கண்ணீருடன் நின்றிருந்தார் சுனந்தா. 

பட்டென கதவை திறந்தவன், ” என்னாச்சு ஆன்ட்டி? ” என வினவ, 

“என் பொண்ணை காணோம்ப்பா” என்றார் கண்ணீருடன். 

அவர் கூறியதை கேட்டவன் உறைந்து உடைந்துப்போனான். 

தான் இன்று ஆக்ரா சென்றிருந்தால் அவள் காணாமல் போயிருக்கமாட்டாளே என நினைத்தவன் இன்று ஆக்ரா செல்லாததற்கு தன்னை தானே வெறுத்தான். 

அவன் ஆக்ரா செல்ல இயலாததிற்கு பின்னால் இருந்த சதியை பாவம் அவன் அறியாமல் போனான். 

நேற்று…… 

கபிலனுக்கு அழைத்த ஜெய், “கபிலா…இன்னும் கொஞ்ச நேரத்தில ஒருத்தர் வந்து உன்கிட்ட சில டாக்குமெண்ட்ஸ் கொடுப்பார். அதை வாங்கிட்டு உன் ஆளுங்கள்ல சக்திவேல் இருக்கிறான்ல அவன்க்கிட்ட கொடுத்து நாளைக்கு திரிலோக்பூர்ல ஸ்டார் பில்டர்ஸ் கட்டிட்டு இருக்கிற சைட்டுக்கு போக சொல்லு. அங்க போய் நான் சொல்ற மாதிரி பண்ண சொல்லு…” என உரைத்தவன் மறுநாள் அவர்கள் செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டான். 

ஜெய்யின் திட்டப்படி திரிலோக்பூருக்கு சென்ற சக்திவேலும் அவனது ஆட்களும் ஜெய் கொடுத்தனுப்பிய போலி ஆவணங்களை காட்டி அந்த கட்டிடம் தங்களின் இடத்தில் இருப்பதாக கூறி பிரச்சினையை தொடங்கினர். 

அவர்களின் நோக்கம் விஜயை ஆக்ரா செல்லவிடாமல் தடுப்பது மட்டுமே… அவர்களின் திட்டப்படி விஜயை ஆக்ரா செல்லவிடாமல் தடுத்தாயிற்று.

 “கடவுளே அவளுக்கு எதுவும் ஆகியிருக்ககூடாது. என் சாக்ஷியை என்கிட்ட சேர்த்துவிடு ப்ளீஸ்” என கடவுளிடம் கோரிக்கை விடுத்தவன். 

“ஆன்ட்டி அவ நம்பருக்கு கால் பண்ணிப் பார்த்தீங்களா? ” என அவன் கேட்க

“கால் பண்ணேன் லைன் கிடைக்கல. அவளும் சீமாவும் ஆக்ரா போனாங்கள். சீமா வீட்டுக்கு வந்துவிட்டாள் ஆனால் என் பொண்ணு வரல. சீமாக்கிட்ட அவ எங்கேனு கேட்டேன் சீமா அவ பாய் ப்ரண்ட் கூட வந்தாளாம். என் பொண்ணு ஏழு மணிக்கே கிளம்பிட்டானு சொல்றா மணி பன்னிரண்டாகப் போகிறது ஆனால் இன்னும் அவ வீட்டுக்கு வரல. அவள் மொபைல்க்கு கால் பண்ணால் சுவிட்ச் ஆப்னு வருது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு தம்பி.” என்றார் கண்ணீருடன். 

அவரை உள்ளே அழைத்து தண்ணீர் பருக கொடுத்தவன், “ஆன்ட்டி பயப்படாதீங்க நான் போய் அவளை தேடிப்பார்க்கிறேன்.” என குரலடைக்க உரைத்தவன், உடைமாற்றிக் கொண்டு பைக் சாவியை கையில் எடுத்தவன் கடும் குளிரிலிருந்து தன்னை காக்கும் பொருட்டு ஜெர்கின் அணிந்துக்கொண்டான். 

“விஜய் நானும் வரேன்ப்பா” என சுனந்தா கூற, 

“ஆன்ட்டி…. இந்த குளிர்லயா?  நீங்க பேசாமல் உங்க பிளாட்டுக்குப் போங்க. ஆன்ட்டி நீங்க அவ போனுக்கு கால் ட்ரைப்பண்ணிட்டேயிருங்க லைன் கிடைச்சா எனக்கு கால் பண்ணுங்க. அவ நம்பர் கொடுங்க நானும் ட்ரைப்பண்ணிப் பார்க்கிறேன்” என உரைத்தவன் சுனந்தாவிடமிருந்து அவரின் அலைப்பேசி எண்ணையும் சாக்ஷியின் எண்ணையும் பெற்று தன் அலைப்பேசியில் பதிவேற்றினான். 

“ம்…சரிப்பா…. அவளுக்கு ஒன்னுமாகிருக்காதுல தம்பி?” என அவர் பதைபதைப்பாய் கேட்க, 

ஆறுதலாக அவரின் கையைப்பற்றியவன், “நிச்சயமாக அவளுக்கு எதுவும் ஆகியிருக்காது ஆன்ட்டி” என கூறிவிட்டு தன் பிளாட்டை பூட்டிவிட்டு பைக்கை கிளப்பிக்கொண்டு சென்றான்.

சிறுது தூரம் சென்றவன் பைக்கை நிறுத்திவிட்டு மௌனமாய் கண்ணீர் வடித்தான். 

அருகிலிருந்த சின்ன பிள்ளையார் கோயிலை கண்டவன்,  “கடவுளே ப்ளீஸ் அவளை என்கிட்ட இருந்து பிரித்த மாதிரி இவளையும் பிரிச்சிடாதே” என கண்ணீர் மல்க வேண்டியவன். ஆக்ரா நோக்கி வண்டியை விரட்டினான். 

தாஜ்மஹால்!!!!.. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.காதலின் அடையாளம், கட்டிடக் கலையின் மகத்துவம், உலக அதிசயங்களில் ஒன்று என மனிதப் படைப்பின் பிரமாண்டமாக திகழ்கிறது தாஜ்மஹால். இஸ்லாம், பாரசீகம் மற்றும் இந்திய கட்டிடக்கலைகளின் கலவையில் உருவான தாஜ்மஹால், தொடர்ந்து 22 ஆண்டுகள் கட்டப்பட்டது. அதில் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றினர் என்பது வரலாறு.

தாஜ்மஹால் பலருக்கும் இது காதல் சின்னம்… சிலருக்கு இது பளிங்குக் கல்லறை. 

மற்ற நாட்களில் மாலை ஆறு முப்பது மணிக்கே பார்வையாளர் நேரம் முடிந்துவிடும் ஆனால் பௌர்ணமி தினங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நேரம் கோட்ப்பாடு இல்லை இரவு நேரங்களிலும் சுற்றுலா பயணிகளை தாஜ்மஹாலை பார்வையிட அனுமதிப்பர்.

பகல் மூன்றுமணியளவில் அந்த சுற்றுலா ஸ்தலத்தை அடைந்தனர் சாக்ஷியும் சீமாவும் அவர்களுக்காக அங்கே காத்திருந்தான் சீமாவின் காதலன் சஞ்சய். அன்று விடுமுறை தினம் என்பதால் சற்று கூட்டமாகவே காணப்பட்டது. 

நுழைவு சீட்டை சஞ்சய் வாங்கிக்கொண்டு வர உள்ளே சென்றனர் மூவரும். சீமாவும் சஞ்சயும் கைகள் கோர்த்தப்படி நடந்துவர அவர்களுக்கு தனிமைக் கொடுக்க விரும்பியவள் அவர்களிடம் கூறிவிட்டு சற்று பின் தங்கி நிதானமாக அந்த மார்பிள் மாளிகையை ரசிக்கத்தொடங்கினாள். 

நீலநிற ஜீன்ஸ் கேப்பும் கருப்பு நிற குளிர் கண்ணாடியும் அணிந்த கபிலன் அவளை நுழைவு வாயிலில் இருந்து அவள் அறியாவண்ணம் பின்த்தொடந்து கொண்டிருந்தான். ஜெய் தான் அவளை பின்த்தொடரும்ப்படி உத்தரவு பிறப்பித்திருந்தான். 

விஜயை கலங்கவிட சமயம் பார்த்துக்கொண்டிருந்த ஜெய்யிற்கு சாக்ஷியின் இந்த ஆக்ரா பயணம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. 

ஆறுமணியளவில் சாக்ஷியின் அருகில் வந்த சீமா, ” சஞ்சு அவனோட பைக்ல வரச்சொல்லி கூப்பிடுகிறான்” என்றாள் தயங்கி தயங்கி. 

“மனசுக்கு பிடிச்சவங்களோட லாங் ரைடு போவதும் தனி சுகம் தான். என்ஜாய் சீமா ” என சீமாவை பார்த்து கண்சிமிட்டியப்படி கூறினாள் சாக்ஷி. 

வெட்கத்தில் முகம் சிவந்தாள் சீமா.

“ஆனால், உன்னை எப்படி தனியா விட்டுட்டு போவது? சரி நீயும் கிளம்பு உன்னை பஸ் ஏத்திவிட்டுட்டு நாங்க கிளம்புகிறோம்” என்றாள் அவளை தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல். 

“தனியாவா? சுத்திப்பார் எத்தனை பேர் இருக்காங்கனு. நான் இன்னைக்கு வந்ததே நைட் வியூவ் பார்க்கத்தான். சோ நான் இப்போ கிளம்பல. நான் ஏழு மணிக்கு கிளம்பிக்கிறேன். நீ ஜாலியா உன்னவரோட போ” 

மனமேயின்றி ஆயிரம் ஜாக்கிரதை கூறிவிட்டு சஞ்சயோடு சென்றாள் சீமா. 

வழியிலிருந்த  பெட்ரோல் வங்கியில் தனது பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பியவன் மணிக்கட்டை திருப்பி நேரம்ப் பார்த்தான் நேரம் நள்ளிரவு இரண்டு மணியென காட்டியது. 

சுனந்தாவிடம் வாங்கிய சாக்ஷியின் எண்ணிற்கு தொடர்புக் கொண்டான் “சுவிட்ச் ஆப்” என பதில் வர, “ச்ச…. ” என இயலாமையில் கோபமாக தரையை உதைத்தான். 

தலையை கோதியப்படி சுனந்தாவின் எண்ணை டயல் செய்தான். முதல் ரீங்கிளே அழைப்பை ஏற்றவர், “என் பொண்ணு கிடைச்சிட்டாளா தம்பி” என தவிப்பும் எதிர்ப்பார்ப்பும் கலந்த குரலில் கேட்க, கண்கள் பனித்தது அவனுக்கு. 

தொண்டை குழி ஏறி இறங்க, “இல்லை ஆன்ட்டி. அவளுக்கு லைன் கிடைத்ததானு கேட்க கால் பண்ணேன்” என்றான் வேதனை நிறைந்த குரலில்.

“இல்லை விஜய் ‘சுவிட்ச் ஆப்’னு தான் வருது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு தம்பி. எதுக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கட்டா? “

“வேண்டாம் ஆன்ட்டி.எதுக்கு போலீஸ் கேசுனு. நான் தெரிஞ்சவங்கக்கிட்ட செல்லித்தேட சொல்றேன். இந்நேரம் நீங்க வெளிய போவது பாதுகாப்பில்லை”

அவருக்கு நம்பிக்கை கூறி அழைப்பைத் துண்டித்தவன் நேரத்தை கவனித்தில்க்கொள்ளாது ஜெய்யிற்கு அழைத்தான். 

கைப்பேசியை கையில் வைத்தப்படி அதை வெறித்துக்கொண்டிருந்த ஜெய், “உன் போனுக்காக தான் மிக ஆவலாக காத்திருக்கேன் மை டியர் விஜய்” என எண்ணிய வண்ணம், “ஹலோ” என்றான் போலியான தூக்கம் கலந்த குரலில். 

“ஜெய்,… ஜெய் சாக்ஷியை காணோம்டா” என  படபடப்பாக விஜய் கூற, 

போலி அதிர்ச்சியுடன், “என்னடா சொல்ற? ” என்றான். 

அனைத்தையும் விஜய் அவசரமாக கூற, “இப்போ நீ எங்கயிருக்க?” என கேட்டான் ஜெய். 

“ஆக்ரா போயிட்டிருக்கேன்டா”

“சரிடா. எந்த இடத்தில் இருக்க? ” என ஜெய் கேட்க, சுற்றும் முற்றும் நோக்கியவன் அங்கிருந்த பலகையை பார்த்துவிட்டு, “ஃபர்ஹா-ல (Farah) டா”. என்றான். 

“அப்போ NH44 வழியாக தான் வந்தாயா?”

“ஆமாம்டா”

போலியான தயக்கத்தோடு, “விஜய்….. NH44-ல ஒரு பஸ் ஆக்சிடெண்ட்னு நியூஸ்ல பார்த்தேன். ஒரு வேளை சாக்ஷி அந்த பஸ்ல…. ” என இழுக்க, 

“நோ…… ” வாய்விட்டு சத்தமாக அலறினான் விஜய். அந்த இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு கேட்டது அவன் குரல். 

“இல்லை இருக்காது… என் சாக்ஷிக்கு எதுவுமாகிருக்காது” என பிதற்றத் தொடங்க, அவனின் வேதனை குளிர் தென்றாலாய் இருந்தது ஜெய்யிற்கு.

 குறோதத்துடன் புன்னகைத்தவன்,”விஜய் ரிலாக்ஸ்…ரிலாக்ஸ்… நான் அவங்களுக்கு ஏதாவது ஆகிருக்கும்னு சொல்லல அந்த ஆக்சிடெண்ட் நடந்த இடத்துக்கு போனனா ஏதாவது தகவல் கிடைக்கும் இல்லையா அதான் சொல்றேன்.” என்றான் அவனை சமாதானம் செய்யும் குரலில். 

“டேய் அவளுக்கு எதுவும் ஆகிருக்காதுல…ஹான்?  I need her. Without her I can’t survive in this world da” விஜய் அழுகையோடு புலம்ப, 

‘அவ இல்லாமல் உன்னால இந்த உலகத்தில வாழமுடியாதா? அந்த அளவுக்கு அவளை நேசிக்கிறயா?  உன்னை இன்னும் கதற விட என் மனசு துடிக்குடா ஆனால் உன் மேல நான் வைத்த பாழாய்ப்போன பாசம் உன் கதறலை கேட்டு உனக்கு கஷ்டப்படுத்துகிறேன்னு என்னை கொல்லுது. ஏன்டா விஜய் எங்க அக்ஷி விஷயத்துல தப்புப்பண்ண? ‘ மனதோடு அவனிடம் பேசியவன். 

“விஜய் கேளு அவளுக்கு ஒன்னுமாகிருக்காது நீ நிதானமாயிரு முதலில். அந்த ஆக்சிடெண்ட் ஜோன்க்கு போய் பாரு. அங்க அவ இல்லைனா கண்டிப்பா தாஜ்மஹால் கிட்ட தான் இருப்பா. இன்னைக்கு பௌர்ணமி தானே சோ அங்க டைமிங் கிடையாது. இன்னும் சுற்றுலா பயணிகள் அங்க இருப்பாங்க. நான் எனக்கு தெரிஞ்சவங்கக்கிட்ட செல்லித்தேட சொல்றேன். நாளைக்கு ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு இல்லனா நானே வந்துவிடுவேன்” 

அந்த விபத்து நடந்த இடத்திற்கு பைக்கை விரட்டினான் விஜய். 

விஜய்யின் அழைப்பைத் துண்டித்த ஜெய் கபிலனுக்கு அழைத்தான். 

ஜெய் கூறியப்படி அவளை பின்த் தொடர்ந்துக் கொண்டிருந்தான் கபிலன். சீமா அவளிடம் விடைப்பெற்று சென்ற அரைமணிநேரத்தில் சாக்ஷியும் கிளம்ப முற்ப்பட்டாள். 

அவள் நுழைவு வாசலை நெருங்கும் வேளையில் அவள் முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணி மயங்கி சரிய அவரை தாங்கிப் பிடித்தாள் சாக்ஷி. அந்த இடம் சற்று மறைவாக இருந்ததால் அங்கே கூட்டம் கூடவில்லை. தன் கைப்பையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவர் முகத்தில் தெளித்து மயக்கத்தை தெளிய வைக்க முயன்றாள்.

 மெல்ல விழித் திறந்தவர்,  “பானி பானி” என ஈன ஸ்வரத்தில் முனக கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை அவர் வாயில் சரித்தாள். அந்த நேரம் சரியாக அவள் கைப்பேசி சினுங்க அங்கிருந்து கவனம் கலைந்து அழைப்பை ஏற்று பேசத்தொடங்கினாள். அதுதான் அவள் செய்த தவறு. 

தண்ணீர் பாட்டிலை கையில் வைத்திருந்த மூதாட்டி அவளின் கவனம் இங்கே இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு ஏதோ ஒன்றை அதில் கலந்தார். சீமாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்தவள் தான் இங்கிருந்து வீட்டிற்கு செல்ல கிளம்பிவிட்டாதா கூறி தொடர்பைத் துண்டித்தாள். அவளின் தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்த மூதாட்டி நன்றி உரைத்துவிட்டு தளர்ந்த நடையுடன் அங்கிருந்து நகர்ந்தார். 

கபிலன் தான் அவளின் தண்ணீர் பாட்டிலில் மயக்க மருந்தை கலக்க அந்த மூதாட்டியை ஏற்பாடு செய்திருந்தான். 

அந்த மூதாட்டி சென்றதும் சாக்ஷி சற்று தாகமாக உணர கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை வாயில் சரித்தாள். அடுத்த நிமிடம் தலை சுற்ற கண்கள் இருட்ட மயக்க நிலையை அடைந்தாள் சாக்ஷி. அது சற்று மறைவான இடம் என்பதால் யார் பார்வையிலும் அவள் விழவில்லை. சற்று இடைவெளி விட்டு நின்றிருந்த கபிலன் அவள் மயக்க நிலைக்கு சென்றதும் ஜெய்யிற்கு அழைத்தான். 

“சார் நீங்க சொன்னதை செஞ்சிட்டேன். நான் கிளம்பட்டா? “

“ஏய் எங்க கிளம்புகிற? “

“வீட்டுக்கு தான் சார்”

“அந்த பொண்ணை விஜய் வர வரைக்கும் பத்திரமா பார்த்துக்கோ.” என ஜெய் கூற குழப்பமாக தலையை சொறிந்தான் கபிலன். 

(ஜெய் நல்லவனா?  கெட்டவனா? ஒரே குழப்பமாக இருக்கே) 

“என்னோட நோக்கம் விஜயை கதறவிடுவது தான் அந்த பொண்ணை கஷ்டப்படுத்துவது இல்லை. வெறிபிடிச்ச மனித மிருகங்கள் இருக்கிற பூமி இது. இப்போ நீ கிளம்பிட்டா நாளைக்கு அந்த பொண்ணு முழுசா இருக்கமாட்டா. அந்த இடத்தில் எங்க அக்ஷியோ ரஸ்மியோ இருந்தால் எந்தளவு பாதுகாப்பா இருக்கனும்னு நினைப்பேனோ அதே அளவு அந்த பொண்ணும் பாதுகாப்பா இருக்கணும் புரியுதா?”

“ஹான் புரியுது சார்” என்றான் குழப்பம் நீங்கா குரலில்.

” நான் பிறந்ததுல இருந்து கெட்டவன் இல்லை சுழ்நிலையால கெட்டவனா மாறுனவன் அதுவும் விஜய்க்கு மட்டும் தான் நான் கெட்டவன். அந்த பொண்ணு மேல துரும்புக்கூட படக்கூடாது துரும்பென்ன ஒரு தப்பான பார்வைக்கூட படக்கூடாது புரிஞ்சதா? ” 

“சரி சார் அந்த பொண்ணை பத்திரமா பார்த்துகிறேன்” என உரைத்தவன். அவளின் கைப்பையிலிருந்த கைப்பேசியை எடுத்து அணைத்து வைத்தான். அவளுக்கு சற்று இடைவெளிவிட்டு காவலாக அமர்ந்துக் கொண்டான். 

அதிகாலை மூன்று மணி……

கபிலனின் கைப்பேசி அலற, ஜெய் தான் அழைப்பான் என்பதை உணர்ந்து கொண்டு உயிர்ப்பித்து செவிக்கு கொடுத்தான், “சார்”

“அந்த பொண்ணுக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சா? “

“இல்ல சார் “

“எப்ப தெளியும்? “

“இன்னும் அரைமணிநேரத்தில் தெளிஞ்சிடும் சார்”

“அவளுக்கு மயக்கம் தெளிவதுக்கு ஐந்து நிமிஷத்துக்கு முன்னாடி அந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளிப்போய்விடு. விஜய் வர வரைக்கும் அங்க இரு. புரிஞ்சதா? “

“சரி சார்” என உரைத்தவன் அழைப்பை துண்டித்தான். 

அந்த விபத்துப் பகுதிக்கு சென்ற விஜய் அங்கிருப்பவர்களிடம் விசாரிக்க விபத்துக்குள்ளானவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்பட அரசு மருத்துவமனைக்கு பைக்கை விரட்டினான். 

மயக்கம் தெளிந்த சாக்ஷி மெல்ல கண் திறந்து சுற்றுமுற்றும் நோக்கினாள் இன்னும் அந்த சுற்றுலா ஸ்தலத்திலே இருப்பதை உணர்ந்து மணிக்கட்டை திருப்பி நேரம்ப் பார்த்தாள் மூன்று முப்பது என காட்ட பதறி தன்னை அவசரமாக ஆராய்ந்தாள் எந்த ஒரு சின்ன பாதிப்பும் இன்றி பத்திரமாக இருப்பதை உணர்ந்த பிறகே சற்று நிம்மதியாக மூச்சுவிட்டாள். 

தன் கைப்பேசியை தேடி எடுக்க அணைந்திருப்பதை பார்த்தவள் “சார்ஜ் இல்லையோ?” என சிந்தித்த வண்ணம் கைப்பேசியை உயிர்ப்பிக்க முயன்றாள். கைப்பேசி உயிர்ப்பெற உடனடியாக சுனந்தாவிற்கு அழைத்தாள். 

சாக்ஷியின் எண்ணை கண்டதும் உடனே அழைப்பை ஏற்றவர், “கண்ணம்மா கண்ணம்மா எங்கயிருக்கடா? ” என உயிர்த்துடிக்க கண்ணீருடன் பதட்டமான குரலில் கேட்க, 

“சுனோம்மா நான் இன்னும் ஆக்ரால தான் இருக்கேன். நேத்து நைட் தண்ணீர் குடிச்சேன் அப்புறம் என்னாச்சுனு தெரியல எழுந்து டைம் பார்த்தேன் மூன்று முப்பதுனு காட்டுச்சு. மொபைல் எப்படி சுவிட்ச் ஆப்பானதுனு தெரியல” என்றாள் பயந்த குரலில். 

தினமும் நாளிதழ்களில் படிக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் கண்முன்னே விரிய, “கண்ணம்மா… கண்ணம்மா… உனக்கு…. உனக்கு… ஒன்னும் இல்லையே” என அவர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு திக்கி தினறி கேட்க, 

“இல்லம்மா எனக்கு ஒன்னுமில்லை” என்றாள் சமாதான குரலில். 

“விஜய் உன்னை தேடி ஆக்ரா வந்தானே. இரு அவனுக்கு கால் பண்ணி அங்க வர சொல்றேன்” என உரைத்தவர் அவளின் பதிலுக்கு காத்திருக்காது தொடர்பைத் துண்டித்து விஜய்யின் எண்ணை அழுத்தினார். 

அரசுமருத்துவமனை வளாகத்தை அடைந்த விஜயின் போன் சினுங்க அவசரமாக அதை உயிர்ப்பித்து செவிக்கு கொடுத்தான், “ஹலோ… ” என எதிர்பார்ப்புடன் ஒலித்தது அவன் குரலில். சாக்ஷிக் கிடைத்துவிட்டாள் என்ற செய்தி தன்னை வந்து சேராத என்ற எதிர்பார்ப்பு. அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் வந்தது அந்த அழைப்பு. சுனந்தா சாக்ஷி தாஜ் மஹால் அருகிலிருப்பதாய் கூற நொடி நேரம் தாமதிக்காமல் அவளை காண விரைந்தான். 

அங்கே சென்று நுழைவு சீட்டை பெற்றவன் உள்ளே ஓடினான். அழகாய் கம்பீரமாய் நின்ற அந்த காதல் சின்னம் அவன் கண்களில் படவில்லை கருத்தில் பதியவில்லை அவன் விழிகள் அவளை மட்டும் தேடி அலைந்தது. யமுனை நதிக்கரையில் நின்று அந்த பளிங்கு மாளிகை பார்த்துக்கொண்டிருந்தவளின் அருகில் சென்றவன் நொடியும் தாமதிக்காது அவளை இறுக்க அணைத்துக்கொண்டான். 

சாக்ஷி அவன் அணைப்பில் அதிர்ந்து நின்றாள். விஜயின் உடல் மெலிதாய் நடுங்கியது அது குளிரிலா அல்லது அவளை காணாமல் தவித்த தவிப்பிலா என்பதை அவன் மட்டுமே அறிவான். 

“உன்னை காணாமல் தவிச்சிட்டேன்டி. சத்தியமா சொல்றேன் என் உயிரே என் கையில் இல்லை. உன்னை இழந்துவிடுவேனோனு நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும் குட்டிம்மா” என அவளை அணைத்தப்படி புலம்பியவனின் கண்களில் மெல்லிய நீர்படலம். 

“உனக்கு ஏதாவது ஆகிருந்தால் என் உயிரும் அடுத்த நிமிஷம் போயிருக்கும்” அத்தனை நேரம் அவனின் அணைப்பில் உருகியிருந்தவள் அவனின் இந்த வார்த்தையில் உடலும் உள்ளமும் இறுக மெல்ல அவனிடமிருந்து விலகினாள். 

அவளின் விலகலில் தான் உணர்ந்தான் இத்தனை நேரம் அவளை அணைத்தப்படி தன் காதலை பிதற்றிக்கொண்டிருந்ததை. 

அவளின் முகத்தில் கோபத்தின் சாயலை உணர்ந்தவன், “சாரி உன்னை காணவில்லை என்ற பதட்டத்தில் அன்ட் உன்னை பார்த்த சந்தோஷத்தில் அப்படி ரியாக்ட் பண்ணிட்டேன். தப்பான இன்டன்ஷன்ல உன்னை ஹக் பண்ணல உன்னை திரும்பி முழுசா பார்த்த சந்தோஷத்தில…..ஐ’ம் சாரி” என இடது கையால் தலையை அழுந்த கோதிக்கொண்டு அவன் உரைக்க, அவனை முறைத்து பார்த்தவள் விறுவிறுவென முன்னால் நடந்தாள். 

அவளை தொடர்ந்து வேக எட்டுகளை போட்டவன், “ஹே அதான் சாரி சொல்லிட்டேன்ல இப்போ எதுக்கு கோவிச்சிட்டு போகிற?” என அவளின் கைப்பற்றி நிறுத்த, 

“சுனோம்மா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க நான் போகணும்” என்றாள் தரையை வெறித்தப்படி.அவனின் ஒருமைப் பேச்சுகளை அவள் கண்டுக்கொண்டதாய் தெரியவில்லை. 

“ஓகே போகலாம். ஒரு அரை மணிநேரத்திற்கு அப்புறம் இங்கிருந்து கிளம்பலாம்” என அவன் கூற கேள்வியாக அவனை ஏறிட்டாள். 

“நான் ஆக்ராக்கு இப்போ தான் முதல் தடவை வந்திருக்கேன். இன்னும் இந்த தாஜ் மஹால சுற்றிப் பார்க்கல. வா பார்த்திட்டுப் போகலாம்” என அவள் கைப்பிடித்தப்படி யமுனை நதிக்கரையிலிருந்து நகர்ந்து தாஜ் மஹாலின் உள்ளே சென்றான். 

அவன் கையில் சிறைப்பட்டிருந்த கையை அவள் உறுவிக்கொள்ளவில்லை. அவன் கைச்சிறையில் மிக பாதுகாப்பாய் உணர்ந்தாள். பலகதைகள் அவளிடம் பேசிய வண்ணம் தாஜ் மஹாலை சுற்றிப்பார்த்தான் விஜய். நேற்று பார்த்ததைவிட இன்று புதிதாய் தெரிவதை போல் உணர்ந்தாள் அவள். எதனால்? அவன் அருகாமையினாலா? 

புலராத காலை தனிலே

நிலவோடு பேசும் மழையில்

நனையாத நிழலை போலெ

எங்கும் எங்கும் காதல்

அவர்கள் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வரும்ப்பொழுது நேரம் அதிகாலை ஐந்து மணியை நெருங்கியிருந்தது. 

தனது பைக்கின் அருகில் வந்ததும் தான் அணிந்திருந்த ஜெர்கினை கழட்டி சாக்ஷியிடம் கொடுத்து போட்டுக்கொள்ளும்படி உரைத்தான். அவள் மறுக்கவே, ” பைக்ல போகும் போது போகிற ஸ்பீடுக்கு குளிரும் அடம் பண்ணாம கோட்டுக்கோ” என அவன் வலியுறுத்த,

“இல்லை, ஐ கேன் மேனேஜ்” என மீண்டும் மறுக்க, தோளை குலுக்கிய வண்ணம் தனது பைக்கில் ஏறி அமர்ந்தான். சாக்ஷியை ஒரு பார்வை பார்க்க தயங்கி தயங்கி அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள். பின்னால் பிடிமானத்திற்கு கம்பி இல்லாதை உணர்ந்தவள் சீட்டை பிடித்த வண்ணம் அமர்ந்துக்கொண்டாள். 

வண்டியை ஸ்டார்ட் செய்தவன், “பின்னாடி கம்பியில்லையே எதை பிடிச்சு உட்கார்ந்திருக்க?” என கேட்க, 

“சீட்டை பிடிச்சு” என்றாள் கம்மிய குரலில். 

“ஹைவே-ல போகும் போது ஸ்பீடா போவேன்  கிழே விழுந்துவிட போகிற சோ என் தோளை பிடிச்சு உட்காரு” என அவன் அதட்டும் குரலில் கூற,  பட்டும் படாமல்  அவன் தோளை பிடித்தவண்ணம் அமர்ந்துக்கொண்டாள். 

‘மனசுக்கு பிடிச்சவங்களோட லாங் ரைடு போவதும் தனி சுகம் தான்’என நேற்று சீமாவிடம் சொன்னது அவளின் நினைவில் வந்து இம்சித்தது. 

அந்த புலராத காலை பொழுதை ரசித்தவண்ணம் பைக்கை கிளப்பினான் விஜய். 

“எனக்கு பைக்ல லாங் ரைடு போவது ரொம்ப பிடிக்கும்” என அவளிடம் உரைத்தவன்,’அதுவும் உன்னை மாதிரி மனசுக்கு பிடிச்சவளோட போவது இன்னும் ரொம்ப பிடிக்கும்’ என மனதில் நினைத்துக் கொண்டான். 

அவனின் பேச்சுக்கு “ம்” கொட்டியப்படி வந்தாள் அவள். 

“நான் சென்னையில் வொர்க் பண்ணப்ப ஊருக்கு போகும் போது பெரும்பாலும் பைக்ல தான் போவேன் 250km, நைட் நேரம், அந்த ஜிலுஜிலு காத்த ரசிச்சிட்டே ஹை ஸ்பீடுல போவேன். எங்க அம்மா பைக்ல ஊருக்கு வந்தாலே திட்டுவாங்க.அவங்களுக்கு பயம் ஏதாவது ஆகிடுமோனு. ஒரு தடவை அப்படி போகும் போது லைட்டா ஸ்கிட்டாகிடுச்சு அதனால எங்க அம்மா ஒரு வாரம் என்கிட்ட பேசல. அதுல இருந்து நான் பைக்ல லாங்கா போவதை தவிர்த்திட்டேன்.” என கூறியவனின் குரல் வருத்ததில் தோய்ந்தது. 

அன்னையின் ஒரு வார மௌனத்தை தாங்காத தான் இப்பொழுது மூன்று அண்டுகளாக பேசாமல் விலகி இருப்பதை நினைத்தவனின் மனம் கணத்தது. அன்னையின் மடிக்கும் தலைக்கோதலுக்கும் ஏங்கியது அவன் மனம்.அவனின் வருத்த குரலை உணர்ந்தாலும் அவனை தேற்ற முயற்சிக்கவில்லை அவள். 

சிறுது இடைவெளி விட்ட வண்ணம் அவர்களை காரில் பின்தொடர்ந்தான் கபிலன். 

பிரதான சாலையில் பைக் பறக்கத் தொடங்கியது. குளிரின் தாக்கத்தில் பற்கள் தந்தியடிக்க நடுங்கத்தொடங்கினாள் சாக்ஷி. அவன் முதுகிற்கு பின்னால் மறைந்து அமர்ந்தப்படி எதிர்வரும் காற்றிலிருந்து தன்னை காத்துக்கொள்ள விளைந்தாள். குளிரின் தாக்கத்தை தாங்க இயலாது. அவன் முதுகில் முகம் புதைத்தப்படி அமர்ந்துக்கொண்டாள். இரண்டு நிமிடத்தில் அவளிடம் நடுக்கத்தை உணர்ந்த விஜய் சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு அவளை இறங்கும்படி பணித்தான். 

குளிரில் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி நின்றவளை கண்டவன் முறைத்த வண்ணம் ஜெர்கினை கழட்டி அவளிடன் நீட்டினான். 

அவள் மீண்டும் மறுக்க, “என்னை திட்ட வைக்காதே ஒழுங்கா போட்டுக்கோ” என அவன் கோபமாக கூற, 

“இல்லை  பின்னாடி உட்கார்ந்திருக்க எனக்கே இப்படி குளிரினால் உங்களுக்கு அதை விட அதிகமாக குளிருமே அதான் சொல்றேன் இந்த ஜெர்கினை நீங்களே போட்டுக்கோங்க” என்றாள் அவள். 

அவளின் அக்கறை பனிச்சாரலாய் வீச, ” என்னால இந்த குளிரை தாங்க முடியும் நீ வொரி பண்ணிக்காம போட்டுக்கோ” என அவன் மென்மையாக உரைக்க அவன் கையிலிருந்த ஜெர்கினை வாங்கி அணிந்துக்கொண்டாள். 

அருகிலிருந்த டீக்கடைக்கு அவளை அழைத்து சென்று சூடான டீயை வாங்கி அவளிடம் நீட்டினான். மறுக்க தோன்றிய மனதை அடக்கி சிறுப்புன்னகையோடு டீயை பெற்றுக்கொண்டு குடிக்கலானாள். 

அவளின் அருகாமையை ரசித்த வண்ணம் நிதானமாக வண்டியை செலுத்தினான் விஜய். அவனின் அருகாமையில் தடுமாறி தான் போனாள் அவள். 

எங்கே உனை  கூட்டி செல்ல 

சொல்வாய் எந்தன் காதில் மெல்ல 

என் பெண்மையும் இளைப்பாரவே 

உன் மார்பிலே இடம் போதுமே… 

ஏன் இன்று இடைவெளி குறைகின்றதே…. 

மெதுவாக இதயங்கள் இணைகின்றதே… 

என் கை விரல்  உன் கை விரல் கேட்கின்றதே ….

காலை எட்டு மணியளவில் டெல்லி மாநகரை அடைந்தனர். அவர்களுக்காக பார்க்கிங் அருகிலே காத்திருந்தார் சுனந்தா. 

சாக்ஷியை கண்ட நொடி, “கண்ணம்மா” என்ற கதறலோடு ஒடி வந்து அவளை அணைத்துக்கொண்டார் சுனந்தா. 

“சுனோம்மா. எனக்கு ஒன்னுமில்லை” என அவரை தேற்ற முயன்றாள் சாக்ஷி. 

அவர்களின் அருகில் வந்த விஜய், “ஆன்ட்டி எல்லாரும் பார்க்கிறாங்க, கன்ட்ரோல் யுவர்செல்ப்.” என அவரின் கையை அழுத்த கண்களை துடைத்துக்கொண்டு சாக்ஷியையும் விஜயையும் ஃபிளாட்டிற்கு அழைத்துச்சென்றார். 

சாக்ஷியை சோபாவில் அமர்த்தி கையணைப்பில் வைத்திருந்தவரின் கண்கள் விடாது கண்ணீரை சொரிந்தது. “உன்னை காணாமல் தவிச்சிட்டேன் என் உயிரே போயிடுச்சு கண்ணம்மா” என அவள் கன்னம் வருடியவரின் விரல்கள் நடுங்கியது. பலமணிநேர தவிப்பு அல்லவா அவரது தவிப்பு. 

பத்திரமாக மகள் வீடு வந்து சேர்ந்ததே தான் செய்த புண்ணியம் என நினைத்தப்படி கடவுளுக்கு நன்றியுரைத்தார் சுனந்தா. 

பகலிலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த நாட்டில் முழு இரவு காணாமல் போன மகள் எந்த ஒரு சேதாரம் இல்லாமல் வந்தது அவருக்கு பெரும் நிம்மதியாக இருந்தது. 

அவளின் மேல் எந்த கயவர்களின் நிழல் படாமல் காக்க கபிலன்ப் பட்ட பாட்டை அவன் மட்டுமே அறிவான். 

நேற்று இரவு ஜெய்யின் உத்தரவின் பேரில் அவளுக்கு பாதுகாப்பாக அமர்ந்திருந்தான். அவன் சற்று அசந்த நேரம் இரு குடிகார மிருகங்கள் அவளை நெருங்க முயல்வதை கண்டவன் கண்கள் சிவக்க அவர்களை நெருங்கி இருவரின் உயிர் நாடியில் விட்டான் ஒரு உதை. கபிலனின் ஜிம் பாடி அடியில் தாக்கு பிடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பித்து ஓடினர் அந்த கயவர்கள். 

அப்பொழுது தான் ஜெய் அங்கே அவளுக்கு காவலாக இருக்க சொன்னதன் காரணத்தை உணர்ந்தான். 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்ததன் காரணம் தொழில் நுட்ப வளர்ச்சியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்காததும் தான். 

ஒரு ஆண்டிற்கு சராசரியாக ஆயிரம் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் மெத்தப் போகான சட்டங்கள் தான். மன்னர்காலத்தில் தருவதைப்போல் கடுமையான தண்டனைகள் கொடுத்தால் மட்டுமே இதைப் போன்ற குற்றங்களை குறைக்க முடியும். கருவறை தவிர வேறு பாதுகாப்பான இல்லாது போனது பெண்களுக்கு. 

திரௌபதியின் மானம் காக்க சேலை தந்தான் கண்ணன் என சொல்கிறது புராணம் இங்கே கயவர்களால் துகிலுருக்கப்படும் ஒவ்வொரு பெண்களும் திரௌபதி தான் ஆனால் ஏன் எந்த கடவுளும் அவர்களின் மானம் காக்க விளையவில்லை????. 

“சாரிமா” மன்னிப்புக் கோரியவள் அவரின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டாள். விஜய் அங்கிருப்பதை கருத்தில் கொள்ளாது தனி உலகில் சஞ்சரித்திருந்தனர் அந்த தாயும் சேயும். 

மனதில் கடவுளுக்கு நன்றி தெரிவித்தப்படி மடியில் படுத்திருந்த மகளின் தலையை கோதிக்கொண்டிருந்தார் சுனந்தா. அவர்களின் மோன நிலையை கலைக்க விரும்பாது மௌனமாக நின்றிருந்தான் விஜய். 

ஐந்து நிமிடத்தில் அவர்களின் மோன நிலையை கலைத்தது சுனந்தாவின் கைப்பேசி, அதை கையில் எடுத்தவர் மடியிலிருந்த மகளை எழுப்பி, “ஷ்யாம் தான் கால் பண்றான் பேசு” என அவளிடம் கைப்பேசியை நீட்டினார். 

“அவன்கிட்ட ஏன்மா சொன்னீங்க? கடல் கடந்து இருக்கிறவனை ஏன்மா டென்சன் பண்ணீங்க.” என அன்னையை வைத வண்ணம் அழைப்பை ஏற்றாள். 

அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ மௌனமாக அன்னையை ஏறிட்ட வண்ணம் ஸ்பீக்கர் மோடில் போட்டாள்.

“ஹலோ அம்மா கேட்குதா??? …. நான் ஏர்ப்போர்ட் வந்துட்டேன். அக்காக்கு ஒன்னும் ஆகிருக்காது நீங்க பயப்படாதீங்க” என படபடத்தான் சுனந்தாவின் மகன். 

“ஹலோ, டேய் ஷ்யாம் எனக்கு ஒன்னுமில்லடா நான் சேஃபா வந்துட்டேன்டா”

“அக்கா…. அக்கா…. உனக்கு…. எதுவும் இல்லை தானே? ” என உடைந்து ஒலித்தது ஷ்யாமின் குரல். 

“ஐயாம் ஆல்ரைட்-டா தம்பிமா” 

“தேங்க் காட். எனக்கு அம்மா கால் பண்ணதுல இருந்து எனக்கு உயிரே கைல இல்ல.நான் இந்தியா வரேன் உன்னை பார்த்தா தான் அக்கா என் மனசு நிம்மதியா இருக்கும்” என தழுதழுத்து ஒலித்தது அந்த பாசமான தம்பியின் குரல். 

“நோ வே. ஒழுங்கா டிக்கெட்டா கேன்சல் பண்ணிட்டு காலேஜ் போகிற வழியை பாரு” என கண்டிப்பான குரலில் அவள் உரைக்க, “அக்கா ப்ளீஸ்” என அவளிடம் கெஞ்சத் தொடங்கினான் அவன். 

“முடியாது. பைனல் எக்ஸாம் டைம்ல லீவ் எடுக்கணும்னு சொல்ற? ஒழுங்கா எக்ஸாம் முடிச்சிட்டு வா.” என அவனை அதட்டிவிட்டு ஸ்பீக்கர் மோடிலிருந்து ஹேண்ட் செட் மோடிற்கு மாற்றிவிட்டு அன்னையிடம் கைப்பேசியை நீட்டினாள்.

“ஹலோ” என கைப்பேசியை செவிக்கு கொடுத்த வண்ணம் அங்கிருந்த அறைக்குள் சென்று மறைந்தார் சுனந்தா. 

சோபாவின் அருகிலே நின்றிருந்த விஜயை கண்டவள், “ஏன் நிற்கிறீங்க உட்காருங்க நான் காஃபி போடுகிறேன்” என உரைத்த வண்ணம் சமையலறைக்குள் நுழைந்தாள் சாக்ஷி. “இல்ல சாக்ஷி காபி வேண்டாம் வாட்டர் மட்டும் கொடுங்க போதும்” என கூற, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள் சாக்ஷி. 

“போன்ல யாரு தம்பியா? எங்க இருக்காங்க? “

“ஆமாம் தம்பி தான். அப்ராட்ல மாஸ்டர்ஸ் பண்றான்.”

“ஓ… உன் மேல ரொம்ப பாசம்னு நினைக்கிறேன்” 

“ம், ரொம்ப”

“ஒகே நான் கிளம்புகிறேன். ஆபிஸ் போகனும் லேட்டாகுது. ஆன்ட்டிகிட்ட சொல்லீரு. பை” என அவளிடம் விடைப்பெற்று தன் பிளாட்டிற்கு சென்றான். 

அலுவலகத்திற்கு தயாராகி வந்தவன் உணவுண்ண நேரமின்றி பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தான். 

பள்ளிக்கு விடுமுறை கூறிவிட்டு சுனந்தா தந்த காலை உணவை உண்டுவிட்டு தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள் சாக்ஷி. கண்களை மூடி உறங்க முயன்றவளின் நினைவில் விஜய்யின் அணைப்பும் பிதற்றலும் வந்து இம்சித்தது. 

அலுவலகத்திற்குள் புகுந்த விஜய்யை அன்றைய வேலைகள் இழுத்துக் கொண்டது.  பத்து மணியளவில் அக்ஷயா அறைக்கு அழைக்க அனுமதிப் பெற்று உள்ளே சென்றான். 

சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவள், “விஜய் அந்த திரிலோக்பூர் சைட் பிராப்ளம்…” என ஆரம்பிக்க, அப்பொழுது தான் உணர்ந்தான் லாயரை சந்திக்க மறந்ததை. 

ஆள்காட்டி விரலால் நெற்றியை தேய்தவன், “சாரி மேம், அவர் காலையில் வர சொல்லீருந்தாரு நான் மறந்துட்டேன். இப்போ போய் பார்த்திட்டு வந்துவிடுகிறேன்” என்க, 

“தேவையில்லை விஜய். அவரே கால் பண்ணாரு. பிராப்ளம் பண்ணவங்க காம்ப்ரமைஸாகிட்டாங்களாம்” என அக்ஷயா கூற குழப்பமாக அவளை நோக்கினான் விஜய். 

‘எதற்காக பிரச்சினை செய்ய வேண்டும்? எதற்காக ஒரே நாளில் பின் வாங்க வேண்டும்?’ என யோசித்த வண்ணம் நின்றிருந்தான் அவன். 

அவன் யோசனையை கலைப்பதைப்போல் ஒலித்தது அவனின் கைப்பேசி, ஜெய் தான் அழைத்துக்கொண்டிருந்தான். யோசிப்பதை நிறுத்திவிட்டு, “எக்ஸ்கியூஸ் மீ” என அக்ஷயாவிடம் அனுமதிப் பெற்று அங்கிருந்து நகர்ந்து அவன் அறைக்கு சென்று ஜெய்யிடம் பேசத்தொடங்கினான். 

“ஹலோ விஜய், சாக்ஷி கிடைச்சிட்டாளா? ” என ஏதும் அறியாதது போல் அவன் வினவ, 

“சாரி ஜெய் உனக்கு கால் பண்ண மறந்துவிட்டேன், சாக்ஷிக்கு ஒன்னுமில்லைடா அவ ஆக்ரால தான் இருந்தா.” என தொடங்கி அங்கு நடந்தவற்றை விவரித்தான். 

“என்னடா சொல்ற? நீ ஹக் பண்ணப்ப அவ கோவப்படலயா? “

“இல்லைடா”

“குட்டிம்மா, தவிச்சிட்டேன்டி துடிச்சிட்டேன்டினு டயலாக் பேசுனதுக்கும் எதுவும் சொல்லலயா? “

“இல்லைடா”

“சம்திங் ஃபிஸ்ஸி” 

எந்த ஒரு பெண்ணும் அந்நிய ஆடவன் தொடுகையை ஏற்க மாட்டாள் எதிர்வினை இன்றி அவள் இருந்தாள் என்றால் விஜயை அவள் விரும்புகிறாளோ? என யோசித்தவனுக்கு ஆம் என்பதே பதிலாக கிடைத்தது. 

இது இன்னும் நமக்கு நல்லது தான் அவனை நல்லா கதறவிடலாம்… 

“விஜய்,ஐ திங் அவ உன்னை லவ் பண்றா”

“எப்படி சொல்ற? “

“எந்த ஒரு பெண்ணும் ஒரு பையன் ஹக் பண்ணா கண்டிப்பா கோபமாக ரியாக்ட் பண்ணுவா இவ எதுவும் சொல்லலனு சொல்ற அப்போ கண்டிப்பா அவ உன்னை லவ் பண்ணுகிறாள்”

“யாஹூ…..” என குதுகலித்தவன், “அப்போ நான் அவளுக்கு ப்ரப்போஸ் பண்ணால் என் காதலுக்கு ஓகே சொல்வாளா? “

“கண்டிப்பா ஓகே சொல்வா”

(நான் சொல்றேன் கண்டிப்பா ஓகே சொல்லமாட்டா) 

ஜெய்யின் வார்த்தைகளை கேட்டதும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தான் விஜய். அப்பொழுது அவன் அறையின் கதவு மெலிதாக தட்டபட, “ஓகே ஜெய் நான் ஈவினிங் கால் பண்றேன்” என தொடர்பைத் துண்டித்துவிட்டு,”கமின்” என குரல் கொடுத்தான். 

அக்ஷயா தான் வந்திருந்தாள், “விஜய் நான் பெர்சனல் வொர்க்கா வெளியே போகிறேன். ஆபிஸை பார்த்துக்கோங்க” என உரைத்தவள் கைப்பேசியை செவிக்கு கொடுத்த வண்ணம் காரில் ஏறிப் பறந்தாள். 

அவளின் பரபரப்பு வித்தியாசமாக தோன்ற அவள் சென்ற திசையில் பார்த்தப்படி நின்றிருந்தான் விஜய். 

நேற்று இரவு முழுவதும் தூங்காததினால் சற்று அகதியாக உணர்ந்தான் விஜய். 

திரிலோக்பூர் சைட் பிரச்சினை செய்தவர்களின்  பின்வாங்கள் குறித்து அறிய எண்ணி லாயருக்கு கால் செய்தான்.  அவரிடம் எந்த தகவலும் சரியாக கிடைக்காமல் போக, அவன் மனதில் சிறு சந்தேகம் முளைவிட்டது. 

அந்த பிரச்சனைக்கும் சாக்ஷியின் நேற்றைய நிலைக்கும் ஏதோ தொடர்ப்பிருப்பதாக அவன் உள்ளுணர்வு உணர்த்த அப்பொழுதான் உணர்ந்தான் சாக்ஷியிடம் நேற்று என்ன நடந்தது என்று விசாரிக்க மறந்ததை. 

தன்னை தானே திட்டிக்கொண்டவன், சாக்ஷியிடம் அதைப் பற்றி விசாரிக்க எண்ணி அவள் எண்களை அழுத்தினான். 

விஜய்யின் எண்களை கண்டதும் முதலில் திகைத்த சாக்ஷி தன்னை சமன்ப்படுத்திக் கொண்டு அழைப்பை ஏற்றாள். 

“ஹலோ சாக்ஷி நான் விஜய் பேசுகிறேன்”

“சொல்லுங்க விஜய்”

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சதும் காஃபி ஷாப்ல வெயிட் பண்றயா? “

“நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகவில்லை”

“அப்போ  ஐந்து மணிக்கு காஃபி ஷாப் வந்திடு”

“எதுக்கு? “

“அதான் சொன்னேனே உன்கிட்ட பேசணும்னு”

“சரி” என கூறி அழைப்பைத் துண்டித்தவள் அவன் எதை குறித்து பேச போகிறான் என்பதை அறியாது குழப்பினாள். 

மாலை சரியாக ஐந்து மணிக்கு அந்த காஃபி ஷாப்பிற்குள் நுழைந்தான் விஜய். அவனுக்கு முன்னதாகவே வந்து அங்கே காத்திருந்தாள் சாக்ஷி. 

-தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *