2,574 views
அடுத்து வந்த இரு மாதங்கள் அனைவருக்கும் சிறப்பாகவே சென்றது. சந்திரிகாவும், சஞ்சனாவும் இணைந்து அவர்களது வீட்டை இல்லமாக்கி கொண்டிருந்தனர். விடுமுறை நாட்களில் அவர்களோடு தேனருவியும் இணைந்து கொள்ள இவ்வளவு நாட்கள் பட்ட துன்பமெல்லாம் மறந்து நண்பர்கள் மூவருக்கும் அழகான வாழ்க்கையாகி போனது.
அஸ்வினின் முதல் வீடு அதிக லாபத்தை தந்ததோடு, மேலும் சில ஆர்டர்களுக்கும் வழிவகுக்க சந்திரிகாவின் நிறுவனத்தோடு நிரந்தர ஒப்பந்தம் போடப்பட்டு அடுத்த வேலையை துவங்கி இருந்தனர்.
தீபக்கும், சைந்தவியும் வழக்கம்போல வேலை பார்க்க, அஸ்வின் வேலையோடு சேர்த்து தனது காதல் மனைவியை கொஞ்சுவதிலும் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்தான். அனு என்னதான் சிறுவயதில் உரிமையாக இருந்தாலும் மருமகளாக தன்னை பொருத்திக் கொள்ள சற்றே சிரமப்பட ஆருத்ராவும், சரஸ்வதியும் பொறுமையாக வீட்டுப்பழக்கங்களை சொல்லிக் கொடுத்தனர்.
தரணியும், மிருணாவும் அலைபேசியின் உதவியோடு தங்களின் காதலை வளர்த்து வந்தனர். சந்திரிகா அஸ்வினின் புராஜக்ட்டுக்கு மாறிவிட, தங்களது அலுவலக வேலைகளை அபி, தான்யாவின் துணையோடு தரணி செய்து கொண்டிருந்தான்.
உதய்யின் விருப்பப்படி எளிமையான முறையில் கோவிலில் திருமணமும், அதன்பிறகு ஆசிரமத்தின் பின்புறத்தில் உள்ள இடத்தில் பந்தல் போடப்பட்டு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உதய்யின் திருமணம் பற்றிய விருப்பத்தை தேனருவியின் வீட்டில் கூறியபோது எதுவும் கூறி விடுவார்களோ என சத்யா கூட பயந்தான். ஆனால் அவர்களோ அதை இயல்பாக எடுத்துக் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தனர்.
ஆனால் திருமணம் முடிந்ததும், தங்கள் பக்க சுற்றத்திற்காக ஒரு வரவேற்பு வைத்துக் கொள்வதாக மட்டும் கூறி இருந்தனர். அது அனைவருக்குமே சரியென பட, இருநாட்கள் கழித்து வரவேற்பு வைத்துக் கொள்வதாக முடிவு செய்திருந்தனர்.
அன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் வடபழனி முருகன் கோவிலில், அடர் சிவப்பு நிறப்புடவையில் அழகாக அலங்கரிங்கப்பட்டு சர்வபூஷிதையாக மணமேடைக்கு வந்தாள் தேனருவி.
ஏற்கனவே அங்கு, அவளுக்கு இணையான அழகில், கம்பீரமாக அமர்ந்து மந்திரங்களை கூறிக் கொண்டிருந்த உதய், இவள் வந்ததும் இயல்பாக புன்னகைக்க, அவளுக்கு இருந்த சிறு படபடப்பும் குறைந்து மகிழ்வோடு அவனருகில் அமர்ந்து சடங்குகளை செய்தாள்.
“பங்கு, நமக்கெல்லாம் கல்யாணம் முடியறவரை எவ்ளோ டென்ஷனா இருந்தது. இவன் என்னடான்னா சாதாரணமா தேனுகிட்ட பேசிக்கிட்டே கல்யாணம் பண்றான்.” என்றான் அசோக். “அவனை பத்தி தெரியாததா என்ன? எப்பவும் மிஸ்டர் கூல் தானே. அதான்.” என்றான் சத்யா.
அசோக், “ஆமாடா. எனக்கு தெரிஞ்சு அவன் அதிகமா கோபப்பட்டது உன் விசயத்துலதான் நினைக்கறேன்.” என்றபோது சந்திரிகாவும் உடனிருக்க, சங்கடமாக அவளது முகம் பார்த்தான்.
சந்திரிகாவோ, “கோபப்படலான்னா தான் தப்பா போயிருக்கும். எங்க வாழ்க்கைல்ல அவரால தான் நிறைய நல்ல விசயம் நடந்திருக்கு. அவரோட கோபம்தான் இவர் வாழ்க்கைல சாதிக்க ஒரு தூண்டுகோலா இருந்தது.” என உதய்க்கு ஆதரவாக பேச சத்யாவோ மௌனமாக சிரித்து கொண்டிருந்தான்.
பிறகு சத்யாவே அவளை சமாதானம் செய்து அனுப்பி விட்டு, “டேய் மத்த விசயத்துல எப்படியோ இந்த அண்ணன், தம்பிங்களை குறை சொன்னா பொண்ணுங்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. பாத்து ஜாக்கிரதையா இரு என்ன.” எனக் கூறி சென்றான். அசோக், ‘நான் இப்ப என்ன சொன்னேனு இதுங்க ரெண்டும் இப்படி பேசிட்டு போகுது.’ என குழம்பியவன் சஞ்சனாவிற்கு அருகில் சென்று நின்று கொண்டான்.
சந்திரிகாவை தொடர்ந்து சென்றவனோ, அவளிடம் ஒரு டைரியை கொடுக்க அது அவளுடையது தான். “உங்க அம்மாகிட்ட கேட்டு இருந்தியாமே. நேத்தே குடுத்தாங்க நான் மறந்துட்டேன்.” என்றான் சத்யா. சந்திரிகா, “ம்ம் ஆமாங்க. இதுல கொஞ்சம் டீடைல்ஸ் இருக்கு.” என்றவாறே வாங்கி பார்க்க, முதல் பக்கத்தில்,
நெஞ்சே நெஞ்சே நெருங்கி விடு…
நினைவில் நீயே கலந்துவிடு…
உயிரே உயிரே உருகிவிடு…
உயிரில் உணர்வாய் நிறைந்து விடு…
என்ற சந்திரிகாவின் சத்யாவின் பிரிவின் போது எழுதிய வரிகளுக்கு கீழே,
நெஞ்சோடு நெருங்கி…
நினைவு இப்போது நிஜமாகி…
உயிராக உனக்கெனவே உருகி…
உன் உணர்வாகி நிறைந்து விட்டேன்…
என்றும் உன் அன்பு காதலனாக நான்...
என்ற சத்யாவின் வரிகளை கண்டவள், கண்களில் சிறு துளி நீரோடு அவன் தோள் சாய, பிறகு இவனும் சமாதானம் செய்து உள்ளே அழைத்து வந்தான். சடங்குகளை முடித்து, நல்ல நேரத்தில் மூன்று முடிச்சு போட்டு, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மெட்டி அணிவித்து, தேனருவியுடன் திருமண பந்தத்தில் இணைந்தான் உதய்.
பிறகு அனைவரும் சென்று சாமி கும்பிட்டு விட்டு ஆசிரமத்திற்கு வர மதியம் ஆகி விட, இவர்கள் வந்ததும் பந்தி பரிமாற ஆரம்பித்தனர். பொதுவாக ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு இறுதியாக உணவு அளிப்பார்கள். ஆனால் உதய்யோ, முதல் பந்தியில் ஆசிரமத்தில் இருந்த அனைவரும் உணவருந்துமாறு கூற அவர்களோடு இணைந்து உதய்யையும், தேனருவியையும் அமர செய்தனர்.
அவர்களை எல்லோரும் விழுந்து விழுந்து கவனிக்க, அடுத்த பந்தியில் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அமர உதய்யும், தேனுமே அனைவருக்கும் பரிமாறினர். அதற்கு பிறகு தேனருவியின் வீட்டு முறைப்படி மணமக்கள் உதய் வீட்டுக்கு சென்றபின் அங்கிருந்து தேனருவியின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கேயே அவனுக்கு இரவு சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மற்றவர்களையும் இருக்குமாறு கூற உதய்யை மட்டும் அங்கு விட்டுவிட்டு மற்றவர்கள் மறுநாள் வருவதாக கூறி கிளம்பி விட்டனர். ஆனால் அடுத்தநாள் வரவேற்புக்கு வேலை பார்க்க வேண்டும் என தேனருவியின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியில் சென்று அவர்களுக்கு தனிமை கொடுத்தனர்.
நண்பர்களும் வராமல் இருக்க மாலை வரை பெரிதாக தெரியாமல் அவளிடம் பேசி, சிரித்து, விளையாடி கொண்டிருந்தவன் மாலையில், “எங்க அருவி. வீட்ல யாரும் வரல. இவனுங்களும் என்ன பண்றாங்க.” என்றான் உதய்.
“அட மக்கு புருஷா. எல்லாரும் நமக்கு பிரைவசி குடுக்கறாங்களாம். புரியல.” என்றாள் தேனருவி. “ஹேய். யாரை பார்த்து மக்குனு சொல்ற. நாங்கள்ளாம் யுனிவர்சிட்டி.” என உதய் ஆரம்பிக்க. “அங்கு கோல்டு தான். ஆனா இங்கதான் கொஞ்சம் மக்கு.” என அவனை வம்பிழுத்தாள் தேனருவி.
அதற்கு அவன், “யாரு மக்குனு இப்ப தெரியும் பாருடி.” என்றவாறே அவளை தூக்கியவன் தங்களது அறைக்குள் நுழைந்தான். சற்று நேரத்தில் இருவரும் மீண்டும் குளித்து சிரித்தவாறே வெளியில் வர, தேனருவியின் வீட்டினரும் உள்ளே வந்தனர்.
மகள் மருமகனோடு பேசி சிரித்துக் கொண்டே வருவதை கண்ட அவள் அன்னையின் மனம் பூரிப்பில் திளைக்க வீட்டினரிடமும் அதே மகிழ்ச்சி தெரிந்தது. அடுத்த நாள் அனைவரும் மண்டபத்திற்கு சென்று அங்கிருந்து வரவேற்பு விழாவிற்கு உதய், தேனருவியை தயார் செய்தனர்.
கதிரவன் ஓய்வு கொள்ள தொடங்கும் அந்த அழகான மாலை வேளையில், மண்டபம் முழுதும் பல வித வண்ண விளக்குகளால் ஜொலிக்க, உறவினர்களும், நண்பர்களும் இணைய இன்னிசை நிகழ்ச்சியோடு விழா ஆரம்பமானது.
அழகான ஒரு ஆகாய வண்ண டிசைனர் புடவை தேனருவின் மேனியை தழுவி இருக்க, கார்குழலை அழகாக பின்னி அலங்காரங்கள் செய்து, மிதமான ஒப்பனைகளோடு தேவதையென தேனருவி மேடையில் நின்றாள்.
அவளுக்கு இணையான வண்ணத்தில் கோட்சூட் அணிந்து அவளை ரசித்தபடியே அருகில் நின்றிருந்தான் உதய். மற்ற நண்பர்கள் சிலர் பரிமாறும் இடத்திலும், சிலர் வரவேற்கும் இடத்திலும் நின்றிருக்க, சஞ்சனாவும், அசோக்கும் அவர்களோடு மேடையில் இருந்தனர்.
சொந்தங்களும், சுற்றங்களும் வாழ்த்துக்களோடு, பரிசுகளையும் அளித்து செல்ல அந்த அருமையான தருணங்கள் புகைப்படங்களாகி கொண்டிருந்தன. அழகிய பாடல்களோடு கச்சேரி நடந்து கொண்டிருக்க “நீங்க நல்லா பாடுவீங்களாமே. எங்க மேரேஜ்ல மட்டும் பாடல.” எனக் கேட்டாள் தேனருவி சஞ்சனாவிடம்.
“நான் பாடக்கூடாதாம். உங்க அண்ணா ஆர்டர்.” என சஞ்சனா, அசோக்கை பார்த்து கூற, “இல்லம்மா. இவ ஸ்டேஜ்ல மட்டும் இல்ல. எல்லா நேரமும் பாடுவான்னு கல்யாணம் பண்ண அப்பறம்தான் எனக்கே தெரிஞ்சது. சமைக்கும் போது பாடறா, குளிக்கும் போது பாடறா, ரூம்ல துணி மடிக்கும் போது கூட பாடறா, அதான் இன்னைக்கு ஒரு நாளாவது நல்ல சிங்கர் பாடறதை கேட்டுக்கலாமேன்னு.” என இழுத்தான் அசோக்.
“பேசாம சூப்பர் சிங்கர்க்கு அனுப்பிடலாமாண்ணா.” என தேனருவி கேட்க, “அங்க நல்லா பாடுனாதானே எடுப்பாங்க. அப்பறம் எப்படி.?” என அசோக் யோசிப்பதை கண்ட சஞ்சனா, “என் பாட்டை கேட்டு பின்னாடியே சுத்துனதெல்லாம் மறந்து போச்சா. வீட்டுக்கு வாங்க. பேசிக்கறேன்.” என்றபடியே முறைத்தாள்.
“ஜஸ்ட் ஃபார் ஃபன்மா. நோ வயலன்ஸ்.” என அவளிடம் கூறிக் கொண்டு இருக்கும்போதே மூன்று ஜோடிகள் மேடையில் ஏறினர். “யாருடா இவங்க. உங்க ஆபிஸ் மெட்ஸா.” என அசோக் கேட்க, “இல்லண்ணா.” என்றாள் தேனருவி.
அந்த ஆண்கள் மூவரும் நெருங்கி உதய்யை கட்டிக் கொண்டு, “மச்சி அடையாளமே தெரியலடா. முருங்கைக்காய் மாதிரி கை கால் வைச்சிருப்பான். இப்ப பாரு பெரிய ஆள் ஆயிட்ட.” என ஒருவன் கூறினான். “நம்பளும் அப்படிதான்டா. ரொம்ப நாள் கழிச்சு பார்க்கறதால அப்படி இருக்கு.” என்றான் மற்றொருவன்.
அருகில் வந்ததும் அவர்களை அடையாளம் கண்டு கொண்ட உதய், “டேய் மச்சி எப்படிடா இருக்கீங்க? எவ்ளோ நாள் ஆச்சு.” என நலம் விசாரித்தான். பிறகு தேனருவியிடம், “இவங்கள்ளாம் என்னோட காலேஜ் ப்ரண்ட்ஸ் அருவி. இவன் அன்பு, இவன் ஆதவ், அவன் எழில். நாங்க ரொம்ப குளோஸ் தெரியுமா?” என்றவன் அந்த பெண்களை கண்டதும், “எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சாடா?” எனக் கேட்டான் உதய்.
அதற்குள் சத்யாவும், சந்திரிகாவும், கீர்த்தியும் மேடைக்கு வந்திருக்க சந்திரிகா, “ஹேய். திவ்யா. எப்படி இருக்க?” என ஒரு பெண்ணை கட்டிக் கொள்ள, அவளோ, “ஒன்னும் வேணாம் போ. இவ்வளவு நாள் ஒரு ஃபோன் பண்ணீயா? மறந்துட்ட இல்ல?” என அழுகையோடே கூறினாள்.
“இல்ல திவி. உன்னை போய் மறப்பனா. சூழ்நிலை அப்படி. சாரி.” என்றவள் “எழில் அண்ணா. நான் உங்ககிட்ட திவியை நல்லா பார்த்துக்க சொல்லிட்டு தானே வந்தேன். பாருங்க அழறா.” எனக் கூற அவளை ஆச்சர்யமாக பார்த்தாள் திவ்யா.
எழில், “அப்படி முழிக்காத. என் தங்கச்சிக்கு சீக்கிரமாவே என் மனசு புரிஞ்சிருச்சு. அவ்ளோ பிரச்சனையிலும் நீ தனியா இருக்க கூடாதுன்னு யோசிச்சு என்கிட்ட சொல்லிட்டு போச்சு. அதத்தான் சொல்றா.” என்றான் திவ்யாவிடம்.
“ஓ அப்ப உன் காதலும் சக்ஸஸா டா.” என சத்யா கேட்க, “ஆமா பங்கு. எப்படியோ சரி பண்ணி கல்யாணம் பண்ணிட்டேன்.” என்றான் எழில். அன்பும், ஆதவ்வும் அவர்களது இணையையும் அறிமுகப்படுத்த நீண்ட நாட்களுக்கு பிறகு நட்புக்களை பார்த்த மகிழ்ச்சி அனைவரது மனங்களையும் இணைத்தது.
அப்போது அசோக், மைக்கை வாங்கி,
குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்– அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் – அட ஆமா
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது..
என பாட, சத்யா தொடர்ந்து..
நிலவு வளரும் வளர்ந்து தளரும் அன்பிலேது தேய்பிறை
அன்புக்கொரு எல்லையில்லை கண்ணம்மா
மலர்கள் உதிர கிளையில் குதிக்கும் குருவிக்கென்றும் விடுமுறை
கொள்ளை இன்பம் நட்பில் உண்டு கண்ணம்மா
என சந்திரிகாவை பார்த்துக் கொண்டே பாடினான்.பிறகு உதய் வந்து,
வானில் திரண்ட மேகத்தின் மின்னல் வானைப் பிரிக்காது
எங்கள் இடையில் யார் வந்த போதும் நெஞ்சம் பிரியாது
ஜென்மம் நூறு என்றான போதும் சேர்ந்து பிறப்போமே
தரையில் வானம் விழுகின்ற போதும் துயரம் மறப்போமே
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..
என பாடி முடிக்க, அதற்கு அனைவரும் இணைந்து ஒரு பக்கம் ஆட்டம் வேறு போட அனைவருக்கும் அது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. அதற்கு பிறகு மூன்று இணைகளும் ஒரே வீட்டில் தங்களது வாழ்வினை சிறப்பாக வாழ தொடங்கினர்.
சரியாக ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, ஒரு சுபமுகூர்த்த நன்னாளில் சென்னையின் பிரபலமான அந்த திருமண மண்டபம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இன்று தரணிக்கும், மிருணாவிற்கும் திருமணம். மிருணா படிப்பை முடித்த கையோடு அரசாங்க தேர்வு எழுதி வேலையையும் பெற்றிருந்தாள்.
நண்பர்கள் மூவரும் அவளுக்கு பல்வேறு குறிப்புகள் கொடுத்ததோடு சிறப்பாக வழிநடத்த அவளுக்கு தேர்வு மிகவும் எளிதானது. சொந்த ஊரில் போஸ்டிங் போட மாட்டார்கள் என்பதால் சென்னையை அவள் தெரிவு செய்திருக்க அங்கேயே பணி நியமனம் கிடைத்திருந்தது. அதற்குள் தரணியின் பெற்றோரும் இந்தியா வந்து விட்டனர்.
அதன்பிறகு தாமதம் செய்யாமல் விரைவாக திருமண ஏற்பாடுகளை செய்தனர். சைந்தவிக்கு பிறகு தரணிக்கு செய்யலாம் என பேச்சு வந்தபோது, அவள் தீபக்கை விரும்புவதாக பட்டென கூறி விட்டாள். “ஏண்டி. இதை கூட இப்படி எல்லார் முன்னாடியும் தான் சொல்வியா. ஒரு வெட்கம், நாணம், அடக்கம் இதெல்லாம் வராது.” எனக் கேட்டாள் சஞ்சனா.
“எப்படி நீ எங்க அண்ணாவை மாசக்கணக்கா அலைய வைச்சியே அப்படியா. எனக்கு ரூபனை பிடிச்சிருக்கு. அவருக்கும் அப்படிதான். சோ கல்யாண பேச்சு எடுத்ததும் தோணுச்சு சொல்லிட்டேன். ஆனா கல்யாணம் இப்ப வேணாம்பா. இன்னும் ஒன் இயராது போகட்டும்.” என்றாள் சைந்தவி.
“அப்படி சொல்லுமா. என் செல்ல தங்கச்சி.” என அவளுக்கு ஹைபை குடுத்த அசோக் சஞ்சனாவின் முறைப்பில் அடங்கி விட்டான். அதன்படியே முடிவு செய்யப்பட்டு தரணியின் திருமணம் நடந்து கொண்டிருந்தது. சந்திரிகா தனது ஏழு மாத மேடிட்ட வயிற்றோடு வந்தவர்களை கவனிக்க சத்யாவோ அவள் பின்னாலே அலைந்து கொண்டிருந்தான்.
அஸ்வினும், அனுவும் தனது ஆறுமாத கைக்குழந்தையோடு வந்திருக்க, அவனது குடும்பத்தினர் அனைவரும் கூட வந்திருந்தனர். தான்யாவின் குழந்தைக்கு ஒரு வயது கடந்திருக்க ஆளாளுக்கு தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தனர்.
அபிநய்யும் தனது மனைவியோடும், இரு வயதான தனது மகளோடும் வந்திருந்தான். தீக்ஷிதா இப்போதெல்லாம் நேரில் பார்க்கும்போது சந்திரிகாவை விட்டு விலகுவதே இல்லை. அவளுக்கும் சமீபத்தில் ஒரு தம்பி பிறந்திருக்க கீர்த்தி மட்டும் வரமுடியவில்லை.
அவளுக்கு துணையாக சந்திரிகாவின் தாத்தா, பாட்டியும் வீட்டில் இருந்தனர். தனது மகள் உண்டானதிற்கு பிறகு, சக்கரவர்த்தி நேரடியாக சத்யாவிடம் பல முறை மன்னிப்பை வேண்ட அவனும் சந்திரிகாவின் மகிழ்ச்சிக்காக ஓரளவு இயல்பாக பேச ஆரம்பித்திருந்தான்.
மிருணாவின் தாய்க்கு தரணியின் வசதியையும், குணத்தையும் பார்த்து பெருமை தாங்கவில்லை. ஊர்மக்கள் பலரையும் ஒரு பேருந்து நிறைய தங்களது செலவில் திருமணத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.
சைந்தவி, தீபக்கோடு இணைந்து பரிமாறும் இடத்தில் இருக்க, அனு அவளருகில் வந்து, “என்ன அண்ணியாரே, எங்க அண்ணாவை விட்டுட்டு ஒரு நிமிஷம் கூட இருக்கறதில்ல போல.” என்றாள். அப்போது அங்கு அஸ்வின் அனுவை தேடிக் கொண்டு வர, “ஆமா நாத்தனாரே. எங்க அண்ணா மாதிரியே. அங்க பாருங்க.” என சிரித்தாள்.
முகூர்த்த நேரம் நெருங்கி வர மாப்பிள்ளை, பெண்ணை அழைத்து வர சொல்லி சடங்குகளை தொடங்கினார் ஐயர். தரணி, மிருணாவின் மேல் வைத்த கண்ணை அகற்றாமல் இருக்க, வெட்கச் சிரிப்பில் அவளது கன்னங்கள் செம்மையானது.
மங்கல நாணை அணிவித்து, மெட்டியிட்டு தனது இல்லாளாக மிருணாவை மாற்றிக் கொண்டான் தரணி. கூடியிருந்த அனைவரும் அட்சதையிட்டு மணமக்களை வாழ்த்த அவர்களின் ஆசிகளோடு தங்களது வாழ்வை தொடங்கினான் தரணி. நண்பர்கள் அனைவரும் இணைந்து தரணி, மிருணாவோடே ஒரு பேருந்து எடுத்து இரு நாட்கள் பயணமாக தேனிக்கு கிளம்பினர்.
பல்வேறு சங்கடங்களும், தொல்லைகளும் வந்தாலும் தங்களது நட்பின் மீது நம்பிக்கை வைத்து எந்த சூழலிலும் வாழ்வின் இலட்சியத்தை விட்டுக் கொடுக்காமல் அழகான காதலை அன்போடு உறவாக்கிய இவர்கள் அனைவரும் இதே இன்பத்தோடு இன்னும் பல்லாண்டு நலமோடு வாழ வாழ்த்தி விடைபெறுவோம்.