605 views

            சத்யா தனி வீட்டை பற்றி பேசவும் அதிர்ந்து அவன் முகம் பார்த்தனர் இருவரும். சத்யா, “என்ன அப்படி பார்க்கறீங்க. இன்னும் ஒரு மாசத்துல உனக்கு கல்யாணம்.” என அசோக்கை பார்த்து கூறியவன் உதய்யை பார்த்து, “மூனே மாசத்துல உனக்கு கல்யாணம். அப்ப இதே மாதிரி பிரைவசி எதிர்பார்த்து தனியா போற பிளான்ல இருக்கீங்க. அதானே.” என்றபோதுதான் இருவருக்கும் அவர்களின் தவறு புரிந்தது.

அசோக், “டேய். அப்படில்லாம் இல்ல. இந்த ஆங்கிள்ல நாங்க யோசிக்கல. இவ்வளவு வருஷம் கழிச்சு உன் காதல் கைகூடியிருக்கு. அது எப்பவும் உனக்கு நிலைச்சு நிற்கனும். எப்பவும் சந்துக்கு அவங்க மட்டும்தான் உனக்கு முக்கியம்னு தோணனும். அதுக்காக தான்.” என்றான்.

சூர்யா, “இல்ல. அசோக். எனக்கு சூர்யாவை விட நீங்கதான் ரொம்பவே முக்கியம். என்னோட எல்லா கஷ்டத்துலயும் என் கூட நின்ன அற்புதமான ப்ரண்ட்ஸ்டா நீங்க. நாம முடிவு பண்ண மாதிரி எப்பவும் ஒன்னாதான் இருக்கனும்.” என்றபோது சந்திரிகா உள்ளே வந்தாள்.

அவள் ஏதாவது தவறாக எண்ணி விடுவாளோ என நினைத்து அவளை அதிர்ந்து பார்க்க, அவளோ இலகுவாக, “என்ன இன்னும் பேசி முடியலையா உங்களுக்கு. சத்யா சொன்னதை தான் நானும் சொல்றேன்.

எனக்கும், அவருக்கும் எப்பவும் நீங்கதான் பர்ஸ்ட் முக்கியம். இதெல்லாம் நினைச்சு குழப்பிக்காம சீக்கிரமா கிளம்பி கீழ வந்து சேருங்க.” என்றவள் சத்யாவிடம், “தேங்காய் சட்னில ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் போட்டேன். சரியா இருக்கும்தானே.” என அக்கரையாக கேட்டாள்.

“நீ பண்ணா சரியாதான் இருக்கும்டா.” என சத்யா கூறவும், சந்திரிகா சிரிப்போடு கீழே இறங்கி சென்று விட உதய்யோ அவள் கேட்டதில் அதிர்ச்சியாகி, “ஆமா. சந்தும்மாக்கு சமைக்க தெரியுமாடா? சட்னில மிளகாய் தூள் போட்ருக்கா. நீயும் அப்படிதானு சொல்ற.” என்றான்.

“மச்சி. எனக்கும் அதே டவுட்தான்டா. இவன் காதலுக்கு இன்னைக்கு நம்ப வயிறுதான் பலியா. சரி நான் குளிச்சிட்டு வரேன்.” என்றவாறே அசோக் கீழே இறங்கி சென்றான். உதய்யும் கிளம்ப, சத்யா தனது வேலையில் கவனமானான். சற்று நேரத்தில் மூவரும் தயாராகி டைனிங் டேபிளுக்கு வர அங்கு சஞ்சனாவும், தேனருவியும் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

“ஹேய். சஞ்சு. நீ எப்ப வந்த? என்கிட்ட சொல்லவே இல்ல?” என அசோக் அவள் புறமாக அடியெடுத்து வைக்க, உதய்யோ “அருவி” என்றவாறே அவளருகில் செல்ல, இருவருக்கும் இடையில் சந்திரிகா வந்து, “முதல்ல சாப்பிடுங்க. அப்பறமா பேசலாம்” எனவும் இருவரும் அமர்ந்தனர்.

சத்யாவும் வந்து அமர, “மாம்ஸ் இன்னைக்கு அக்கா ஸ்பெஷலா சமைச்சிருக்கா. நிறைய ஐட்டம்ஸ் என்னென்ன தெரியுமா, துவரம்பருப்பு இட்லி, வெந்தயத்துல வெண்பொங்கல், மிளகாய்பொடி தேங்காய் சட்னி” என்க,

தேனருவி இடைமறித்து “மீதி நான் சொல்றேன் “வெல்லம் போட்டு காரச்சட்னி, மிளகு கேசரி. பேரே வேற லெவல்ல இருக்குல்லனா.” என பெருமையாக கூற, அசோக், உதய்யின் முகம் போன போக்கை கண்டு சத்யாவிற்கு சிரிப்பு வந்தது.

“ஏண்டா சந்திரிகாவுக்கு சமைக்க தெரியுமானு கேட்டியே. நம்ப நிலைமையை யோசிச்சியா. எவனாவது மிளகுல கேசரி பண்ணுவாங்களா. இதையும் பெருமையா சொல்றா பாரு நான் கட்டிக்க போறவ.” என நொந்து கொண்டான் உதய்.

“வெந்தயத்துல வெண்பொங்கல் நீ கேள்வியாவது பட்டுருக்கியாடா? அன்னைக்கே சைந்தவி சொல்லுச்சு. நான்தான் நம்பல. மூனு பேருக்கும் சமையல்ல ஏ, பி, சி, டி கூட தெரியாது போலடா.” என்றான் அசோக்.

“ஏ, பி, சி, டி தெரியலன்னா பரவால்லடா. அது கூட பாரீன் லாங்குவேஜ். சமையல்ல ஆனா, ஆவன்னாவே தெரியல பாரேன்.” என உதய் சீரியசாக கூற, “ஜோக் அடிக்கற நேரத்தை பாரு. நாளைல இருந்து காலைல நேரமா எழுந்து சமையல் டிப்பார்ட்மெண்டை கைப்பத்துனா தான் உசிர் வாழ முடியும். சொல்லிட்டேன்.” என்றான் அசோக்.

“என்ன ரெண்டு பேரும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்க. சாப்பிடுங்க.” என சஞ்சனா கூறவும் தட்டை பார்த்தால் நிஜமாகவே இட்லி மஞ்சளும், சிகப்பும் கலந்த நிறத்தில் இருந்தது. சட்னி சிவப்பாகவே தெரிய, “மச்சி. இதை சாப்பிட்டு தான் ஆகனுமா?” என்றான் உதய் சத்யாவிடம்.

சத்யா, “உன் தங்கை எவ்வளவு ஆசையா சமைச்சிருக்கா. பேசாம சாப்பிடுடா.” என்றதும், வேறு வழியின்றி எடுத்து உண்ண அதன் ருசியில் மெய்மறந்து போனான். அசோக்கும் தான். பிறகு மளமளவென சாப்பிட ஆரம்பிக்க சத்யா அவர்களையும் அமர சொல்லவும், அனைவரும் இணைந்து உணவருந்தினர்.

சந்திரிகா செய்த அத்தனை பதார்த்தங்களும், அருமையாகவும், வித்தியாச சுவையிலும் இருக்க வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டனர் அனைவரும். “நான் கூட பயந்தே போயிட்டேன். ஆனா எல்லாமே நல்லா இருக்கு.” என்றான் அசோக்.

உதய்யும் அதை ஆமோதிக்க, உணவருந்தி முடித்ததும் சந்திரிகா மட்டும் கிச்சனில் இருக்க அசோக், சஞ்சனாவிடமும், உதய், தேனருவியிடமும் பேசிக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த சத்யா, சந்திரிகாவிடம், “ரூம்ல ரெஸ்ட் எடுக்கறேனு சொல்லிட்டு இங்க என்ன பண்ற?” எனக் கேட்க, “இல்ல சத்யா லஞ்ச்க்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்” என்றாள். “இப்பதான் டிபனே முடிஞ்சது அதுக்குள்ள லன்ச்சா. இன்னைக்கு நாளை புல்லா சமைச்சே முடிச்சர்லாம்னு இருக்கியா. மதியம் ஆர்டர் பண்ணிக்கலாம். நீ வா.” என்றான் சத்யா.

“இல்ல சத்யா டெய்லி முடியாட்டியும் சண்டே மட்டுமாது நல்லா சமைச்சு ருசிச்சு சாப்பிடனும். அதான் நானே பண்றனே. ஏன் காலைல நல்லா இல்லையா?” எனக் கேட்டாள் சந்திரிகா. “அதெல்லாம் சூப்பரா இருந்தது. ஆமா நீ ஏன் அவனுங்கள அப்படி பயமுறுத்தி விட்ட. எனக்கே சஞ்சு சொன்ன மெனுவெல்லாம் பார்த்து ஒரு நிமிஷம் பக்குனு ஆகிடுச்சு.” என்றான்.

“இல்ல சத்யா. அவங்க ரூம்ல ரொம்ப சென்டியா பேசிட்டு இருந்தாங்களா? அதான் மூட் சேன்ஜ் பண்றதுக்காக அப்படி சொன்னேன். இவளுங்க ரெண்டு பேருக்கும் சமையல் சுத்தமா தெரியாதா? அதான் யூஸ் பண்ணிக்கிட்டேன்.” என கண்ணடித்து சிரித்தாள்.

“ஆனா இட்லி எப்படி கலர் மாறுச்சு.” என சத்யா சீரியசாக கேட்க, “அதுல கொஞ்சம் சிகப்பரிசி கலந்திருந்தேன். சட்னிலயும் வர மிளகாய் போடவும் ரெட் கலர் ஆகிடுச்சு. அப்பறம் பொங்கல் வரகுல பண்ணது. மிளகாய் சட்னில லைட்டா கொஞ்சம் வெல்லம் போட்டா நல்லா இருக்கும். அவ்ளோதான் சீக்ரெட்.” என்றாள் சந்திரிகா.

“ஹேய். நீ எப்ப இதெல்லாம் கத்துக்கிட்ட?” என சத்யா ஆச்சர்யமாக கேட்க, கனடால்ல இருக்கும்போதுதான். அங்க நம்ப ஊர் ஃபுட் கிடைக்கும்தான். ஆனா காஸ்ட்லி. ஆன்ட்டி பெரும்பாலும் இது மாதிரி வித்தியாசமா சமைப்பாங்க. அவங்க கிட்ட கத்துக்கிட்டேன். ஆனா எனக்கு சமைக்க தெரியும்னு தரணிக்கு கூட தெரியாது.” என்றாள் சந்திரிகா.

“குட். நீ ஒரு வித்தியாசமான பொண்ணுடி.” என்றவன் அவளுடன் இழைய, அவளும் இழைந்து கொடுத்தவள், “சரி என்ன லன்ச்.” என்றாள் சந்திரிகா. சத்யா, “எதுனாலும் இன்னைக்கு சேர்ந்து பண்ணலாம்.” என்றதும், மளமளவென தேவையான பொருட்களை எடுத்து வைத்தாள்.

சத்யா வெங்காயம் வெட்ட சந்திரிகா அடுப்பில் ஏதோ செய்ய மற்ற நால்வரும் உள்ளே வந்து, அவர்களும் சில உதவிகளை செய்தனர். அனைவரும் பேசி சிரித்தபடியே பகிர்ந்து வேலைகளை செய்ய அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. பிறகு உணவருந்தும் நேரத்தில் சரியாக அஸ்வின், அனு, தீபக், தரணி, சைந்தவி நால்வரும் அங்கு வந்தனர்.

“இவங்களும் வராங்கன்னு சொல்லவே இல்ல.” எனக் கேட்டான் சத்யா சந்திரிகாவிடம். “அப்பறம் கல்யாணம் ஆனதுக்கு விருந்து குடுக்க வேணாமா? உங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லல.” என்றாள்.

அனைவரும் இணைந்து மதிய உணவை உண்டுவிட்டு எல்லோரும் விளையாடுகிறேன் பேர்வழி என பொழுதை கழிக்க, அந்த நாள் அனைவருக்கும் இன்பமாக கழிந்தது. அடுத்து வந்த ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஓரிருவர் வராவிட்டாலும் இது தொடர்ந்தது.

சரியாக ஒரு மாதம் கழித்து, ஒரு சுபயோக சுபதினத்தில் அசோக்கின் ஊரில் உள்ள ஒரு சிவன் கோவிலில் வைத்து எளிமையாக அசோக், சஞ்சனாவின் திருமணம் நடந்தது. அந்த கோவிலில் திருமணம் செய்வதாக பங்கஜம் வேண்டுதல் வைத்திருப்பதாக கூறவும், திருமணம் அங்கு எளிமையாக செய்துவிட்டு சென்னையில் ஒரு வரவேற்பு வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர்.

அதன்படியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு எளிமையான அலங்காரத்தில் அழகு பூஷிதையாக இருந்த சஞ்சனாவின் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து, நெற்றியில் குங்குமமிட்டு தன்னவளாக ஆக்கிக் கொண்டான் அசோகமித்திரன். அன்று ஊருக்கு வந்து போன பிறகு இந்த திருமணத்திற்கு தான் வந்திருந்தான் தரணி. அலைபேசியிலும் அளவாகவே பேச மிருணாதான் தவித்து போனாள்.

இன்று அதனால் அவனோடு இயல்பாக பேச, அவனும் அதில் மகிழ்ந்து அவளது வேலைகளை இவனும் பகிர்ந்து கொள்ள மிருணாவின் மனம் அமைதியுற்றது. அவளது படிப்பை பற்றியும் அக்கறையாக விசாரிக்க, இதையெல்லாம் கண்ட தனவேலின் மனமும் நிறைந்தது.

அதன்பிறகு சடங்குகள் முறைப்படி நடக்க, ஒரு வாரம் கழித்தே வரவேற்பு இருந்ததால் இருவரையும் அங்கு விட்டு விட்டு மற்றவர்கள் சென்னைக்கு திரும்பினர். அந்த ஒரு வாரத்தில் பங்கஜத்துடனும் இயல்பாக பேசி அவருடனான உறவை வளர்த்துக் கொண்டாள் சஞ்சனா.

ஒரு வாரம் கழித்து அசோக்கின் வீட்டினர் அனைவரும் சென்னை வர, சந்திரிகாவை போலவே சஞ்சனாவிற்கும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் சக்கரவர்த்தி. இடைப்பட்ட காலத்தில் சக்கரவர்த்தி குணமாகவே இருந்தாலும் யாரும் அவரிடம் இயல்பாக பேசவில்லை.

அவரும் அதை எதிர்பாராதவராக தன்னுடைய கடமைகளை செய்து வந்தார். ஆனால் இந்த நேரத்தில் மல்லிகா அவரை விட்டுக் கொடுக்காமல் அவருக்கு ஆதரவாக நடந்து கொண்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம். தனது இரு பேத்திகளின் வாழ்வும் செம்மையுற்றதை கண்டு தாத்தா, பாட்டி பூரித்திருந்தனர்.

அசோக் திருமணத்திற்கு தேனருவியின் வீட்டினரும் வந்திருக்க, தேனருவியின் தாயும், மல்லிகாவும் ஏற்கனவே தோழிகள் என தெரிந்தது. தனது பழைய நட்பை கண்ட மல்லிகாவும் மகிழ்ச்சியுற தங்களது நட்பை புதுப்பித்து கொண்டனர்.

திருமணம் முடிந்ததும் சத்யாவின் வீட்டிலேயே சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்திருக்க, கீர்த்தி சஞ்சனாவிற்கு அலங்காரம் எல்லாம் செய்தாள். பால் எடுத்துக் கொண்டு தனது அறைக்கு நாணம் புரட்டிப் போட வந்தவளை கண்டு ஆச்சரயப்பட்டான் அசோக்.

“பார்றா. என் பொண்டாட்டிக்கு வெட்கப்படலாம் கூட தெரியுமா?” என அசோக் கிண்டல் செய்ய, “போங்க மித்து. ஒரு மாதிரி இருக்கு” என சிணுங்கினாள் சஞ்சனா. “ஹேய் ரிலாக்ஸ்டா. என்கிட்ட என்ன வெட்கம். நீ எப்பவும் போலவே இரு சரியா.” என்றவன் அவளோடு புதிதாக சில கதைகளை பேசி அவளது சம்மதத்தோடு அவளோடு கலந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்