510 views

          அன்று காலையிலே தரணி ஃபோனை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, சைந்தவி வந்து, “என்ன சார் பலமான சிந்தனை போல.” எனக் கேட்டாள். “அதெல்லாம் இல்லம்மா. மிருணாகிட்ட என்னோட நம்பர் இல்லையோ?” என கேட்டான் தரணி.

“உன் நம்பர் இல்லாம இருக்குமா. ஏன்?” என்றவாறே அவனது அலைபேசியில் இருந்து மிருணாவின் எண்ணிற்கு அழைத்தாள். அவளோ முதல் ரிங்கிலே எடுத்து சைந்தவியின் குரல் கேட்டதும், “சொல்லுங்க அண்ணி. எப்படி இருக்கீங்க.” எனக் கேட்க ஃபோன் லௌட் ஸ்பீக்கரில் இருந்ததால் அதை தரணியும் கேட்டான்.

‘அப்ப எதுக்கு அப்படி சொன்னா’ என யோசித்துக் கொண்டிருக்க, சைந்தவி பேசி விட்டு வைத்தவள், என்னவென்று தரணியை கேட்டாள். “நான் கொஞ்ச நேரம் முன்னாடி ஃபோன் பண்ணப்ப ராங் நம்பர்னு சொன்னா. இப்ப மட்டும் இல்ல. எப்ப பண்ணாலும் அப்படிதான் சொல்றா. அதான் நம்பர் இல்லையோனு நினைச்சேன்” என்றான் தரணி.

அதற்கு சிரித்த சைந்தவி, “அண்ணா நம்பர் இல்லன்னா யாருன்னு தானே கேட்பாங்க. நீ பேசுனதும் ராங் கால்னு எப்படி சொல்வாங்க. எனக்கென்னவோ மிருணா உன் மேல செம கோவமா இருக்குனு தோணுது. எப்படி சமாளிக்க போறீயோ.” என கலவரப்படுத்தினாள் சைந்தவி.

“ஏன். நான் என்ன பண்ணேன்?” என தரணி கேட்க, “நீதானே எல்லாம் பண்ண. இப்ப வரை மிருணாக்கு உன்ன பிடிச்சிருக்கான்னு கூட கேட்கல. ஆனா கல்யாணமே பேசி வைச்சாச்சு. அந்த கோபம் இருக்காதா?” என்றாள் சைந்தவி.

அதைக் கேட்டு தரணி யோசனையில் ஆழ, சைந்தவி தனது அறைக்கு சென்றாள். ஆனால் மறுநாளே சந்திரிகாவிடம் கூறிவிட்டு கிளம்பி தேனிக்கு சென்று விட்டான். இவனை கண்டதும் மிருணாவின் பெற்றோர் வரவேற்று உபசரித்தாலும், திடிரென வந்ததில் ஏதேனும் பிரச்சனையோ என கவலையும் கொண்டனர்.

அது எதையும் கண்டு கொள்ளாமல் மிருணாவை பற்றி விசாரிக்க இவன் சென்ற நேரம் அவள் கல்லூரியில் இருந்தாள். அங்கு சென்று அவளை பார்ப்பதாக கூறி கிளம்ப, தனவேல்தான் “என்னாச்சு மாப்பிள்ளை. ஏதாவது அவசரமா சொல்லனுமா?” என மையமாக கேட்டார்.

அதன்பிறகே அவரின் கவலை புரிய, “அச்சோ அங்கிள் அதெல்லாம் ஒன்னும் இல்ல. நைட்ல இருந்து மிருணா நியாபகமா இருந்தது. அதான். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க. நான் மிருணாவை பார்க்கலாம்தானே.” என்றான் தரணி.

“அதெல்லாம் பார்க்கலாம். ஆனா மதியம் பாப்பா வீட்டுக்கு வந்திரும். நீங்க சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா வீட்லயே பார்த்துட்டு போகலாம்ல?” என்றார் தனவேல்.

அவனுக்கு அது சரியெனப்பட சற்று நேரம் அவர்களோடு அமர்ந்து பேசிவிட்டு, உணவருந்திய பின் மிருணாவின் அறையிலே சென்று படுத்து உறங்கி விட்டான். வழக்கம் போல மிருணா கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு வந்தபோது வரவேற்பறையில் யாரும் இல்லை.

பின்பக்கம் சென்று முகம் கழுவி விட்டு தனது அறைக்கு வந்தவள் ஏதோ நினைவில் இருந்தவள் தரணியை பார்க்காமல் கட்டிலில் அமர அதே நேரம் சரியாக கண் விழித்தான் தரணி.

இவளை கண்டதும் எழுந்து அவளுக்கு பின்புறமாக அமர்ந்து, “என்ன மேடம் ஏதோ யோசனைல்ல இருக்கீங்க. எந்த கோட்டையை பிடிக்க?” எனக் கேட்க, அவளோ அவனது குரல் கேட்டதும் பதறி எழுந்தவள் பிறகு சாதாரணமாக, “எப்பவும் நைட்தானே வருவீங்க.. இன்னைக்கு என்ன பகல்லயே என்ட்ரி.” எனக் கேட்டாள்.

அவளது கூற்றில் அதிர்ந்தவன், ‘நான் எப்ப இங்க வந்தேன். என்ன உளர்றா.’ என யோசித்துக் கொண்டே அவளை பார்க்க, “என்ன எதுவும் பேச மாட்றீங்க. நைட் கனவுல வந்தா மணிக்கணக்குல பேசுவீங்க. பகல்ல வந்ததால சைலண்ட்டா.” என்றாள் மிருணா.

அதன்பிறகே அவளது மனம் புரிய, “ஓ கனவுல மட்டும்தான் பேசுவீங்களா. இல்ல கனவுல வந்து பேச மட்டும்தான் செய்யறேன். வேற எதுவும் செய்யலனு கவலையா இருக்கியா?” என கிண்டல் செய்தவாறே அவளை வளைத்து இழுக்க அவனது மடியில் விழுந்தவளுக்கு அப்போது தான் அது கனவல்ல நிஜம் என புரிந்தது.

பதறி எழுந்தவள், “நீங்க எதுக்கு இங்க வந்தீங்க. அதுவும் என் ரூம்ல என்ன பண்றீங்க?” என்றாள் மிருணா. அதற்கு, “எப்ப வந்தீங்க. சாப்பிட்டீங்களா. அப்படீன்னு விசாரிக்காம ஏன் வந்தேனு கேட்கறீயே என் வருங்கால பொண்டாட்டி” என்றான் தரணி.

மிருணா, “அது யாராவது பார்த்தா தப்பா ஆகிடும். முதல்ல வெளில போங்க.” என்க, தரணியோ, “நீ இனிமே நான் ஃபோன் பண்ணா பேசறேனு சொல்லு. நான் போறேன். அப்பறம் இவ்ளோ கஷ்டப்பட்டு வந்ததுக்கு மாமாக்கு ஏதாவது குடுக்கனும். அப்பதான்.” என அவளை வம்பிழுத்தான்.

அவள் “இப்ப குடுக்கறேன் பாருங்க.” என அவனை அடிப்பதற்கு எதையோ தேட, அதற்குள் வெளியில் அவளது தந்தையின் பேச்சுக்குரல் கேட்க முற்றத்தில் சென்று நல்லப்பிள்ளையாக அமர்ந்து கொண்டான்.

தனவேல் உள்ளே வந்தபோது, ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருக்க, “எழுந்துட்டீங்களா மாப்பிள்ளை. இன்னுமா மிருணா வரல.” எனக் கேட்க, “வந்தாச்சு மாமா. உள்ள இருக்கா. என்னை பார்த்துட்டு உள்ள போயாச்சு. என்றான் சோகமாக.

“எது உங்களை பார்த்துட்டு கண்டுக்காம போச்சா.” என்றவர் மிருணாவை அழைக்க அவள் வெளியில் வந்தாள். “என்னம்மா மாப்பிள்ளை வந்திருக்காரு. நீ பேசவே இல்லையாமே ஏண்டா.” என அவர் கேட்க, “இல்லப்பா. டிரஸ் மாத்திட்டு வர போனேன்.” என அவரிடம் கூறியவள் அவனை முறைத்தாள்.

“சரி சரி பேசிட்டு இருங்க. இதோ வந்தடறேன்.” என அவள் சமையலறைக்குள் சென்று விட, “அதான் பேசிட்டு தானே வந்தீங்க. அப்பறம் என்ன?” என்றாள் மிருணா.

அதற்கு அவளது கைகளை பிடித்து சமையலறை பக்கம் அழைத்து வர, உள்ளே தனவேல், “பரவால்ல செண்பகம். நான் கூட பாரீன்ல வளர்ந்தவரு. எப்படி பழகுவாறோன்னு நினைச்சேன். ஆனா மிருணா வந்தும் கூட முற்றத்திலேயே இருக்காரு.

நம்ப பொண்ணும் சும்மா சொல்லக் கூடாது. நான் வரவரைக்கும் வெளிலயே வரலயே. அதான் சின்னஞ்சிறுசுக கொஞ்ச நேரம் தனியா பேசட்டும்னு இங்க வந்துட்டேன்.” என்றார் தனவேல்.

அதை தரணி மிருணாவிற்கு சுட்டிக்காட்ட என்னதான் தன் மீது அன்பும், ஆசையும் இருந்தாலும் தனது பெற்றோரின் மனதை பற்றியும் யோசிக்கும் அவனது குணத்தை எண்ணி அவள் வியக்க அப்போது செண்பகம் பேசினார்.

“ஆமாங்க குணம்லாம் நல்ல குணம்தான். இல்லன்னா அவ நினைப்பு வந்ததும் இங்க கிளம்பி வருவாரா? ஆனாலும் கல்யாணத்துக்கு இன்னும் வருஷமே இருக்கப்ப இப்படி பார்க்க வரது நல்லா இருக்காதுல்ல.” என ஒரு தாயாக தன் மனதில் தோன்றியதை பகிர்ந்து கொண்டார்.

“இப்பதானே முதல் முறை வராரு. அடிக்கடி வர மாதிரி இருந்தா மிருணாகிட்ட சொல்லி சொல்லலாம்” என்றார் தனவேல். இப்போது மிருணா தரணியை பார்க்க, அவனும் புரிந்து கொண்டவனாக தலையாட்டி அவளை அழைத்துக் கொண்டு பின்பக்கம் சென்றான்.

மல்லிகை பந்தலின் அருகே அவளை அமர வைத்தவன் “என்னை உனக்கு நிஜமாவே பிடிச்சிருக்கா மிருணா.” எனக் கேட்டதற்கு அவள் அமைதியாகவே இருந்தாள்.

அவனே தொடர்ந்து, “என்னடா இவனுக்கு இப்பதான் கேட்க தோணுதான்னு நினைக்காத. முன்னாடியே கேட்டு இருக்கனும். திடீர்னு சைந்தவி அப்படி பண்ணுவான்னு நானுமே யோசிக்கல.

அதே சமயம், இன்னொரு பக்கம் யோசிச்சு பார்த்தா அரேன்ஜ் மேரேஜா பண்றதுதான் நல்லதுனு தோணுச்சு. அதுனால தான் நான் எதுவும் சொல்லல. ஆனா உனக்கும் கல்யாணத்தை பத்தி ஆசைகள் இருந்திருக்கும்ல. அதைப்பத்தி கேட்காம நானா முடிவு பண்ணியிருக்க கூடாது.

என் மேல கோபம் எதும் இல்லன்னு தான் சரியா போய்டும்னு நினைச்சேன். எதுனாலும் நீ சொல்லு. அதுக்கேத்த மாதிரி என்னை மாத்திக்கறேன். இல்ல விருப்பம் இல்லனா மேரேஜ் கூட கேன்சல் பண்ணிக்கலாம்.” என நீளமாக பேச அவளோ அவனை முறைத்தாள்.

“நான் நிஜமாதான் சொல்றேன். நீ யோசிச்சு முடிவு பண்ணு. உன் மேல எந்த கெட்ட பேரும் வராத மாதிரி பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு.” என்றவனை மேலும் பேச விடாமல் தனது கரங்களால் அவனது இதழ்களை மூடியவள் அவனை இறுக்கமாக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

அதை அவன் உணரும் முன்பே அவள் விலகி வீட்டினுள் சென்று விட்டாள். நடந்ததை உணரவே சில நிமிடங்கள் பிடிக்க மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றான் தரணி. பிறகு அனைவருடனும் இணைந்து உணவருந்தி விட்டு விடைபெற்று அங்கிருந்து கிளம்பினான்.

சத்யா திருமணம் முடிந்து இரு வாரங்கள் தோட்ட வீட்டில் இருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ஆட்சியர் வீட்டிற்கு வந்து விட்டனர். அன்று விடுமுறை தினம் என்பதால் உதய்யும், அசோக்கும் உறங்கி கொண்டிருந்தனர்.

அவர்கள் எழுந்தபோது நெய் வாசம் மணமணக்க யாரு சமைக்கறாங்க என நினைத்துக் கொண்டே சமையலறைக்கு வந்தால் சந்திரிகாதான் அங்கு நின்றிருந்தாள். “சந்தும்மா. நீ எப்ப வந்த? என்ன பண்ற?” என உதய் கேட்க “இப்பதாண்ணா எழுந்துட்டீங்களா. டீயா, காபியா. இல்ல ரெப்ரஷ் ஆகிட்டு வந்தீங்கன்னா சாப்ட்றலாம். டிபனும் ரெடி ஆகிடுச்சு.” என்றாள் சந்திரிகா.

“நீ ஏன் இதெல்லாம் பண்ணிட்டு இருக்க. டெய்லி சமையல்காரம்மா வருவாங்க.  சண்டே மட்டும் அவங்களுக்கு லீவ். நாங்களே ஏதாவது பண்ணிப்போம். நீ தள்ளு. இன்னைக்கு லீவ் தானே ரெஸ்ட் எடுக்காம அதுவும் உன்னை வேலை செய்ய விட்டுட்டு அவன் எங்க போனான்.” என்றான் உதய்.

“ஹலோ. ஹலோ வெயிட். என்ன இப்ப இது என் வீடு இல்லயா. தனியா இருக்க போர் அடிக்குதுனு நான்தான் இங்க கூட்டிட்டு வந்தேன். அப்பறம் சண்டேக்காக வரல. இனிமே இங்கயே இருக்கலாம்னு முடிவு பண்ணிதான் வந்தோம். அவருக்கு ரூம் கிளீன் பண்ற வேலை குடுத்துருக்கேன். நீங்க போய் குளிச்சிட்டு வாங்க. இது என் ஆர்டர்.” என்ற சந்திரிகா தனது வேலையில் கவனமானாள்.

சத்யாவின் அறைக்கு சென்ற இருவரும், “டேய் என்னடா. சந்திரிகா ஏதேதோ சொல்லுது. லீவும் போடல. நீங்க கொஞ்ச நாள் டிஸ்டர்ப் இல்லாம இருப்பீங்கன்னு தானே அங்க இருக்க சொன்னோம். அதுக்குள்ள இங்க கூட்டிட்டு வந்துட்ட.” என்றான் அவனிடம் உதய்.

“ஹேய் கொஞ்ச நாள்னா என்ன ஆறு மாசமா அதான் இருபது நாள் ஆச்சுல்ல. அப்பறம் என்ன அதோட எவ்வளவு நாள் தான் அவ்வளவு தூரத்துல இருந்து ஆபிஸ் வர முடியும். இப்ப நாங்க இங்க இருக்கறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றான் சத்யா.

“இல்லடா. உங்களுக்கு பிரைவசி இருக்காதுனு யோசிக்கறான் அதான். வேற ஒன்னும் இல்ல.” என அசோக் கூற, “ம்ம். அப்ப இன்னும் மூனு மாசத்துக்கு அப்பறம் இரண்டு பேரும் தங்கறதுக்கு வேற வீடு பாத்துட்டீங்களா? இல்ல உங்க குவாட்டர்ஸ்கு போக போறீங்களா?” என சத்யா கேட்க, அவனது கூற்றில் அதிர்ந்த இருவரும் அவனை பார்த்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்