515 views

                காரில் செல்லும்போதும் உதய் அமைதியாகவே வர தேனருவியும் அவனிடம் வழி கூறியதோடு வேறு எதுவும் பேசாமல் மௌனமாகவே வந்தாள். சென்னையின் மையப்பகுதியில் பணக்காரர்கள் அதிகமாக வசிக்கும் ஒரு ஏரியாவில் அமைந்திருந்தது தேனருவியின் வீடு.

அவளை இறக்கி விட்டதோடு வேலை முடிந்ததென கிளம்ப எத்தனித்தான் உதய். ஆனால் அதற்கு அவள் விட வேண்டுமே! அவன் காரை நிறுத்தியதுமே அதில் சாவியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி விட்டாள் தேனருவி.

அதில் கடுப்பானவன் வேகமாக இறங்கி, “தேனு சாவியை குடு. நான் கிளம்பனும்.” என்றான். அவளோ, “உள்ள வந்து வாங்கிக்கோங்க சீனியர்.” என்றவாறே கேட்டை திறந்து உள்ளே நுழைய வேகமான எட்டுகளில் அவளை நெருங்கியவன் அவளிடம் இருந்து சாவியை பிடுங்க போனான்.

அவளோ அவனிடம் குடுக்காமல் விளையாட அதற்குள் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். முதலில் வந்த தாத்தா, “என்னம்மா, தம்பியை கையோட கூட்டிட்டே வந்துட்டியா?” எனக் கேட்க, பின்னால் வந்த தேனருவியின் அன்னையோ, “ஏண்டி மாப்பிள்ளையை உள்ள கூட்டிட்டு வராம வாசல்லயே வைச்சு என்ன விளையாட்டு?” என கடிந்து கொண்டார்.

இதற்கெல்லாம் காரணமான உதய்யோ என்ன நடக்கிறது என புரியாமல் ஆச்சர்யத்தில் முழித்து கொண்டிருந்தான். இதுவரையில் வீட்டில் உள்ளவர்களுக்கு எதுவும் தெரியாது என்றுதானே நினைத்துக் கொண்டிருந்தான் உதய். அவனது யோசனையை கண்ட தேனருவியின் தந்தை “உள்ள போய் பேசிக்கலாம். வாங்க.” என வீட்டிற்குள் அழைத்து சென்றார்.

உதய்யை அனைவரும் ஆசையாக உபசரிக்க உதய்தான் எப்படி இதற்கு ரியாக்ட் செய்வதென புரியாமல் இருக்க தேனருவியோ அதைக் கண்டு மௌனமாக ஒரு சின்ன சிரிப்போடு பார்த்திருந்தாள்.

பிறகு அவளே “நான் என் ரூமை காட்டிட்டு வரேன்பா.” என்றவள் உதய்யை தனது அறைக்கு கூட்டி வந்தாள். அதுவரை அமைதியாகவே இருந்தவன் “இப்ப இங்க என்ன நடக்குதுனு சொல்றீயா. நான் சரின்னு சொல்ற வரை யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேனு தானே சொன்ன?” எனக் கேட்டான்.

அதற்கு அவள், “ஆமாம் சீனியர். உங்களுக்கு காதல் வந்தா எனக்கு ஓகே சொல்லிடுவிங்கன்னு அப்படி சொன்னேன். ஆனா என்ன காதலிக்க ஆரம்பிச்சதும் நீங்க இப்படி ஊரை விட்டே வருவீங்கன்னு எனக்கு தெரியாதே!” என்றாள் புருவத்தை உயர்த்தி.

அவளது பேச்சில் ஒரு நிமிடம் யோசித்தவன், உடனே, “நான் உன்ன லவ் பண்றேனு உன்கிட்ட சொன்னனா? ஏதாவது பகல் கனவு கண்டு அதை வீட்ல வேற சொல்லி வைச்சிருக்க.” என்றான் உதய் நக்கலாக.

“பகல் கனவுலாம் இல்ல சீனியர். உங்களோட கனவை இந்த டைரி பூரா எழுதி வைச்சிருந்தீங்களே அதை பார்த்து தான் கன்பார்ம் பண்ணேன்.” என அவனிடம் ஒரு டைரியை காட்டினாள் தேனருவி.

அதைக் கண்டு அதிர்ச்சியானவன் அவளிடம் இருந்து பிடுங்கினான். அது உதய் பஞ்சாப்பில் இருந்தபோது எழுதியது. முதன்முதலாக பஞ்சாப் சென்றதில் இருந்து கிளம்பி வந்தவரை அனைத்தையும் அதில் பதிவு செய்திருந்தான்.

எங்கையோ காணாமல் போய்விட்டது என நினைத்துக் கொண்டிருந்தது இவளிடம் எப்படி கிடைத்தது என குழப்பமாகி அவளை பார்க்க. அவனது எண்ணம் புரிந்தவள் அவனுக்கு விளக்கம் குடுத்தாள்.

“நீங்க இந்த டைரியை எப்படி மிஸ் பண்ணீங்க தெரியுமா? எப்பவும் நாம பழைய புக்கெல்லாம் போட்டு வாங்கிட்டு வருவமே ஒரு கடை அங்கதான். புக்ஸ்ஸோட சேர்த்து இந்த டைரியையும் குடுத்துட்டீங்க. என் நல்ல நேரம் இது என் கைல கிடைச்சிருச்சு” என்றாள் தேனருவி.

நிறைய புத்தகங்கள் படிப்பது உதய்க்கு வாடிக்கையான ஒன்று. இதற்காக எங்கு சென்றாலும் அந்த பகுதியின் நூலகத்தில் உறுப்பினராகி விடுவான். ஆனால் வட இந்தியாவில் நூலகத்தில் தமிழ் புத்தங்கள் கிடைப்பது அரிதான காரணத்தால் மற்ற மொழி புத்தகங்களையே படித்து வந்தான்.

ஒருநாள் இதுபற்றி தேனருவியிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவள் அங்கு ஒரு பழைய புத்தக கடை இருப்பதாகவும், அனைத்து மொழிப்புத்தகங்களும் அங்கு குறைந்த விலையில் கிடைக்கும். நம்மிடம் உள்ள புத்தகங்களையும் அவர்கள் வாங்கி கொள்வார்கள் எனக் கூறி அவனுக்கு அதை அறிமுகப்படுத்தினாள்.

அதன்பிறகு இருவருமே அடிக்கடி அங்கு செல்வது வாடிக்கையாகி போனது. உதய் திடீரென ஊரைக் காலி செய்து வர, அவனது நினைவில் அவளும் சில மாதங்கள் எங்கும் செல்லாமல் பணிக்கு மட்டும் சென்று வந்தாள்.

ஒருநாள் எதார்த்தமாக அந்த கடைக்கு செல்ல அந்த கடைப்பையன் அவளிடம், “சார் குடுத்த புக்ல இந்த டைரியும் இருந்தது. நான் நீங்க வந்தா குடுக்கலாம்னு எடுத்து வச்சிருந்தேன்” எனக் குடுத்தான்.

வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தவள். ஏதாவது அலுவல் சம்பந்தமானதாக இருக்குமோ என நினைத்துதான் பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் அனுதினம் நடக்கும் நிகழ்வுகளையே ஒரு கவிதை போல ரசித்து எழுதியிருந்த உதய்யின் வார்த்தைகளில் ஆர்வம் கொண்டு படிக்கவே செய்து விட்டாள்.

அவள் காதலை கூறிய தருணத்தில் கோபத்தோடே அதை பதிவு செய்திருந்ததை பார்த்ததும் அவளது முகம் வாடியது. ஆனால் அடுத்து வந்த பக்கங்கள் அவளுக்கு ஒருவித உற்சாகத்தை அளித்தது. அதில் உதய்,

சிறு பெண் என்றே
நினைக்கிறேன் நாளும்
பெரியவளாகி எனக்கே
வகுப்புகள் எடுக்கிறாள்

உன்னோடு இருக்கும்
ஒவ்வொரு நாளும்
வாழ்நாளை நீட்டிக்க
கடவுளை பிராத்திக்கிறேன்

நீ சொல்லிய தருணமதில்
உன் மீது வராத காதல்.. உன்
அமைதியான பொழுதுகளில்
எனக்கு வந்தே விட்டது

இது போன்ற கவிதைகளில் அவனது காதலே பறை சாற்றியிருந்தான். பிறகு ஏன் காதலை கூறவில்லை என்ற கேள்விக்கு அடுத்து வந்த பக்கங்கள் பதில் அளித்தன. ‘காதலை சொல்லி விடலாமா என நினைக்கிறேன். ஆனால் அதனால் வரும் பின்விளைவுகளை அறியாதவனா நான். என் தகுதிக்கும், அவளது தகுதிக்கும் எந்த நிலையிலும் ஒத்துவராது.

வேலையில் வேண்டுமானால் நான் அவள் கூறுவது போல சீனியராக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையின் படிகளில் பல மடங்கு உயரத்தில் அவள். நான் ஒரு அனாதை என தெரிய வந்தால் அவளது ஆசை அப்படியே இருக்குமா.

அப்படி இருந்தாலும் அவளது வீட்டில் உள்ளவர்களுக்கு இப்போது உள்ள பாசம்தான் அப்போதும் இருக்குமா. சத்யாவின் விசயத்தில் அவன் அருகே இருந்து அனைத்தையும் பார்த்தவனாயிற்றே. அதோட இதை சம்பந்தப்படுத்துவது தவறுதான்.

ஏனேன்றால் அருவியும், அவளது வீட்டினரும் என் மீது காட்டுவது உண்மையான அன்பு. ஆனால் அதிகமாக ஆசைப்பட்டு உள்ள உறவையும் இழக்க நான் விரும்பவில்லை. இது வேண்டாம்.’ என எழுதியிருந்தான்.

அடுத்து வந்த சில பக்கங்களில், “அருவியோடு இருக்கும் தருணங்களில் எனை மீறி எனது காதலை கூறி விடுவேனோ என பயமாக உள்ளது. சீக்கிரமாக இங்கிருந்து கிளம்பி விட வேண்டும்.” என எழுதியிருந்தான். அதன் பிறகு டைரியின் பக்கங்கள் காலியாக இருந்தது. அதை படித்தவளுக்கு கண்களில் இருந்து நீர் நிற்கவே இல்லை.

அவனுக்கு யாருமில்லை என்ற தகவல் அவளுக்கே புதியது தான். அவனது பெற்றவர்களை பற்றி பெரிதாக அவள் கேட்டுக் கொண்டதில்லை. அவனும் சத்யாவையும், அசோக்கையும் பற்றி பேசிய அளவு மற்றவர்களை பற்றி பேசியதில்லை. இப்போது அதை நினைத்து அவன் மீது வெறுப்பு வரவில்லை. மாறாக அன்பு பெருகியது.

அடுத்த நாளே வீட்டில் உள்ளவர்களிடம் விசயத்தை கூறியதோடு, தான் அவனை தேடிப் போவதாகவும் கூறினாள். அப்போது அவர்கள் தான் அவளை அமைதிப்படுத்தி கூடிய சீக்கிரம் நாமும் தமிழ்நாடு சென்றுவிடலாம். அதற்குள் உதய் வேலை செய்யும் அலுவலகத்தை பார்த்து வைத்துக் கொள்ளுமாறு கூறினர்.

தேனி இல்லை கோவை மாவட்டம் தான் டிரான்ஸ்பர் என அவன் கூறி இருக்கவும், அந்த பகுதிகளில் அவள் தேடினாள். அங்கு அவனை பற்றிய விவரம் இல்லாமல் இருக்க எதற்கும் அவனது ஐடியை போட்டு தேட சென்னையில் இருப்பது தெரிந்தது. அதன்பிறகு தேனருவியின் பெற்றோரோடு, தாத்தா, பாட்டியும் இங்கு வருவதாகவும், மற்றவர்கள் அங்கிருக்கும் தொழிலை பார்த்துக் கொள்வதாகவும் முடிவு செய்தனர்.

“முதல்ல உங்களை பார்த்துட்டு போலாம்னு தான் நினைச்சேன். அப்பறம் எப்படியும் வாழப்போறது இங்கதானே அதான் நானும் இங்கையே டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டேன்.” என்ற தேனருவி. “அதெப்படி நீங்க என்ன அப்படி நினைக்கலாம். நான் அவ்ளோ மோசமானவளா?” எனக் கேட்டாள் தேனருவி.

“அப்படி இல்ல அருவி. சாதாரணமா இருக்கவங்களுக்கே தன்னோட பொண்ணை ஒரு பெரிய இடத்துல கட்டிக் குடுக்கனும்னு தான் ஆசை இருக்கும். அப்படி இருக்கப்ப உங்க வீட்ல யோசிச்சு பாரு. நீயும் எவ்ளோ செல்லமா வளர்ந்த பொண்ணு.

என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்பட்டா நல்லாவா இருக்கும். பணம் காசு இப்ப பிரச்சனை இல்லனாலும், உறவுகள் இல்லாம வாழறது ரொம்பவே கொடுமை. இவ்ளோ பேரோட இருக்கிற உன்னை எப்படி தனியா கூட்டிட்டு வர முடியும். அதான்.” என்றான் சோர்வாக.

அப்போது அறையினுள் வந்த அவளது பாட்டி, “நீ ஏன்யா அப்படி நினைக்கற. நீ எங்க பேத்தியை கட்டிக்கிட்டா நாங்க எல்லாரும் உன் சொந்தமாகிட போறோம் அவ்ளோதானே.” என்றார் அவர்.

அதில் உதய்யின் மனது லேசாகி விட, “என்னை மன்னிச்சிடு அருவி. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.” என்றான். “இட்ஸ் ஓகே சீனியர்.” என்றாள் அவளும். பிறகு சற்று நேரம் அவர்களோடு அளவளாவி விட்டு நடு இரவில் வீட்டிற்கு வந்தான் உதய்.

அடுத்த நாள் காலையில், சத்யாவின் இல்லத்தில், முதலில் கண்விழித்த சந்திரிகா, சத்யாவின் நெற்றியில் இதழ் பதித்து எழ முயல, அவளை மீண்டும் இழுத்து கொண்டன சத்யாவின் கரங்கள். “விடுங்க சத்யா. நேரமாச்சு. கிளம்ப வேண்டாமா?” எனவும், அவளை விடுவித்துவிட்டு தானும் எழுந்தான்.

பிறகு அசோக்கிற்கு ஃபோன் செய்து சில விவரங்களை கூறினான். அங்கு அசோக், உதய்யை எழுப்பி, “என்னடா முகத்துல பல்பு எரியுது. என்ன நடந்துச்சு நேத்து.” எனக் கேட்டான். “அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. நீ போய் சஞ்சனாவுக்கு ஃபோன் பண்ணு.” என்ற உதய் போர்வையை தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டான்.

அவனை கண்டு சிரித்தவன் மேலும் சற்று நேரம் தூங்க விட்டு, “சத்யா வீட்டுக்கு போகனும்டா. எழுந்து ரெடியாகு.” என எழுப்பவும் எழுந்து இருவரும் கிளம்பி வந்தனர். அதற்குள் சஞ்சனாவும் அங்கு வந்திருக்க, “ஏம்மா. காலையிலே இந்தப்பக்கம்?” எனக் கேட்டான் உதய்.

“அது நீங்க அக்கா வீட்டுக்கு தானே போறீங்க. அதான் நானும் உங்களோட ஜாயின் பண்ணிக்கலாம்னு.” என்றாள் சஞ்சனா. “எங்களை விட உங்க வீடு தான் பக்கம். ஆனா. சரி நடத்துங்க நடத்துங்க.” என கிண்டலடித்தவாறே காரில் ஏற, இவளும் சிரித்துக் கொண்டே ஏறினாள். ஆனால் கார் சத்யா வீட்டிற்கு செல்லாமல் வேறு பாதையில் செல்ல, “எங்கடா போற?” எனக் கேட்டான் உதய்.

“இது வேற வழிடா. நீ விட்ட தூக்கத்தை தொடரு.” என சஞ்சனாவை பார்த்துக் கொண்டே கூறவும், அவர்களுக்கு தனிமை தருவதாக நினைத்து தூங்கி விட்டான் உதய். கார் சென்றதோ தேனருவியின் வீட்டிற்கு தான். நேற்று தேனருவி உதய்யை சுற்றி வருவதை கண்ட சத்யா, அவளிடம் பேசி விசயத்தை வாங்கி விட்டான்.

அதன்பிறகு தான் உதய்யை சத்தம் போடுவது போல அவளது வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.  நேற்றிரவே இதை சந்திரிகாவிடமும் கூறி இருந்தான். தேனருவியும், உதய் சமாதானமானதை அவள் மெஸேஜ் செய்திருக்க, இன்றே முறைப்படி பெண் பார்க்க வருவதாக கூறியிருந்தான்.

அதற்காக தான் இப்போது உதய்யை அழைத்துக் கொண்டு அங்கு செல்ல அதே நேரம் சந்திரிகாவை அழைத்து கொண்டு சத்யாவும் அங்கு சென்றிருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்