618 views

       அன்று அருகில் உள்ள கன்சால் வனப்பகுதிக்கு உள்ளே சென்று பணிபுரிய வேண்டி இருந்ததால் தேனருவியை அலுவலகத்தை பார்த்துக் கொள்ள கூறி விட்டு உதய் கிளம்பினான்.அவளோ, தானும் உடன் வருவதாக கூற அதை மறுத்தவன் தனியாகவே சென்றான்.

அன்று நாள் முழுவதும் அவன் இல்லாமல் தனியாக வேலைகளை பார்த்தவள், இடையிடையே அவனுக்கு அழைப்பு விடுக்கவும் மறக்கவில்லை. ஆனால் வனப்பகுதியில் சிக்னல் இல்லாத காரணத்தால் அவனுக்கு அழைப்பு செல்லவில்லை. மாலை நேரம் ஆகியும் அவன் திரும்ப வராமல் இருக்க, ஒருவேளை நேரமானதால் வீட்டிற்கு சென்றிருப்பான் என நினைத்து தானும் வீட்டிற்கு கிளம்பினாள் தேனருவி.

அப்போதும் அழைப்பு செல்லாமலிருக்க எதற்கும் வீட்டிற்கே சென்று பார்த்து விடலாம் என நினைத்து அவனது வீட்டிற்கு சென்றாள். அங்கும் அவன் வராமல் இருக்கவும் ஒரு பயம் தொற்றிக் கொள்ள விரைந்து தனது வீட்டை அடைந்தாள்.

அங்கே, அவளது தாத்தாஹெட் ஆபிஸிற்கு தகவல் சொன்னியாமா?” எனக் கேட்க, அப்போதுதான் நினைவு வந்து அவளது உயரதிகாரிக்கு அழைத்தாள். அவரோ, “பொதுவா இந்த மாதிரி போறப்ப முன்ன பின்ன ஆகறது சகஜம் தான்மா. எப்படியும் நாளைக்கு வந்திருவாரு. அப்படி வரலன்னா மேற்கொண்டு என்ன பண்றதுனு பார்க்கலாம்.” என்றார்.

நாளைக்கா அப்ப நைட் எங்க ஸ்டே பண்ணுவாரு. வேற ஏதாவது பிரச்சனைன்னா என்ன பண்றது.” எனக் கேட்டாள் தேனருவி. “நீ புதுசா ஜாயின் பண்ணி இருக்கறதால நீ பயப்படறன்னு நினைக்கறேன். உதய் வந்ததும் உனக்கு டிரக்கிங் பிராக்டிஸ் குடுக்க சொல்லனும். அப்பதான் இதெல்லாம் தெரியும்.

நாம வனத்துக்கு நடுவுல மரக்குடில்கள் அமைச்சிருப்போம். அங்க தங்கிக்குவாங்க. நீ கவலைப்படாத.” என பொறுமையாகவே கூறிவிட்டு ஃபோனை வைத்து விட்டார். அவர் கூறியதை அறிந்த தாத்தாவும், “அப்ப பயப்பட ஒன்னுமில்ல போலடா. என்ன இந்த மாதிரி லேட் ஆகும்னு உதய் சொல்லிட்டு போயிருக்கலாம். சரி வா.” என்றவாறே உள்ளே அழைத்து சென்றார்.

ஆனால் தேனருவிக்கோ ஏதோ தவறாக நடக்க போவது போல தோன்றிக் கொண்டே இருக்க இருப்பே கொள்ளவில்லை. அப்படியும், இப்படியுமாக அன்றைய இரவு கழிய மறுநாள் மதியம் வரையிலும் உதய் வந்தபாடில்லை.

அதன்பிறகே ஹெட் ஆபிஸில் உதய்யை தேடிப் போகலாம் என முடிவு செய்து, ஒரு நான்கு பேரை தயார் செய்ய தானும் வருவதாக கூறி அவர்களுடன் சென்றாள் தேனருவி. ஆனால் இவர்கள் வனப்பகுதிக்கு அருகே செல்லும்போதே வழியில் யாரோ மயங்கி கிடப்பதை போல இருக்க இறங்கி பார்த்தால் அது உதய்தான்.

ஒரு நிமிடம் தேனருவிக்கு உலகமே நின்று விட அவனருகில் சென்று கண்ணீருடன் அவனை எழுப்பினாள். அவன் எழாமல் இருக்கவும் உடன் வந்தவர்கள் அவனை தூக்கி சென்று உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே மருத்துவர்பயப்படுவது போல ஏதும் இல்லை. சீக்கிரமா கண் விழித்து விடுவார்.”  எனக்கூறியும் அவன் எழும் வரை இவளது அழுகை நிற்கவில்லை.

உதய் கண் விழித்ததும் எழுந்து அமர, வேகமாக அவனருகில் சென்றவள், அவனை கட்டிக் கொண்டு, “ஆர் யூ ஓகே சீனியர்? நான் ரொம்ப பயந்துட்டேன். என்னை விட்டுட்டு எங்கையும் போயிடாதீங்க ப்ளீஸ்.” என்றாள். அவளை கண்டதும் புன்னகைக்க முயன்றவன் அவளது பேச்சிலும், செயலிலும் வாயடைத்து போய் இருக்க அவளை விலக்கினான்.

அப்போதும் பாசத்தில் தான் இவ்வாறு செய்கிறாள் என நினைத்து,எனக்கு ஒன்னும் இல்லமா. நான் நல்லாதான் இருக்கேன்.” என சாதாரணமாகவே பேச, அவனது எண்ணத்தை பொய்யாக்கியது அவளது வார்த்தைகள்.

நான் அப்பவே சொன்னேன்ல. என்னையும் கூட்டிட்டு போக சொல்லி. இனிமே தனியா எங்கவாது போனீங்க அவ்ளோதான். எது நடந்தாலும் ரெண்டு பேருக்கும் சேர்ந்தே நடக்கட்டும். நீங்க கூட இல்லாதப்ப தான் உங்களை நான் எவ்ளோ லவ் பண்றேனு தெரியுது.” என உணர்ச்சி வேகத்தில் பேசிக் கொண்டிருந்தாள் தேனருவி.

ஹேய். கொஞ்சம் நிறுத்து. என்ன பேசறோம்னு தெரிஞ்சுதான பேசறீயா?” என கோபமாக உதய் கேட்டான். “என்னாச்சு சீனியர். நான் எதும் தப்பா பேசலையே. இவ்ளோ நாள் உங்களுக்கும் எனக்கும் இருக்கற உறவை இப்பதான் நான் புரிஞ்சுகிட்டேன். அதைத்தான் சொன்னேன். உங்களுக்கும் என்னை பிடிக்கும்தானே?” என தவிப்பாக கேட்டாள் தேனருவி.

அவன் பதில் சொல்வதற்குள் அவளது வீட்டினர் அங்கு வந்துவிட எதையும் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே பேசினான். ஆனால் அவள் புறம் திரும்பாமலே. தேனருவியின் தந்தை, “எப்படிப்பா உனக்கு அடிபட்டுச்சு.” எனக் கேட்க அங்கு நடந்ததை விவரித்தான்.

எப்போதும் வனத்திற்குள் ஏதேனும் சட்ட விரோதமான செயல்கள் நடக்கின்றனவா என்பதை கண்காணிக்க குறிப்பிட்ட இடைவெளியில் வனத்திற்குள் செல்வது வனத்துறையினர் செய்வதே.

கன்சால் வனப்பகுதியில் மான்கள் மிக பிரபலம் என்பதால் அதை வேட்டையாடுவதற்காக சில நபர்கள் வனத்திற்குள் சட்டவிரோதமாக செல்வதுண்டு. உதய் சென்றபோதும் சிலர் வேட்டைக்காக அங்கு இருப்பதை அறிந்தவன் அவர்களை மிரட்டி வெளியேற சொன்னான்.

ஆனால் அவர்களோ இவனை அடித்ததோடு, மயக்கமுற செய்து ஒரு இடத்தில் கட்டிப் போட்டுவிட்டு ஒருவனை மட்டும் காவலுக்கு வைத்துவிட்டு எங்கோ சென்று விட்டனர். விடியும் நேரத்தில் மயக்கம் தெளிந்தவன் கட்டை அவிழ்த்ததோடு காவலுக்கு இருந்தவனையும் அடித்து விட்டான்.

பிறகு அந்த இடத்தை நோட்டம் விட்டபோதுதான் அவர்கள் சாதாரண வேட்டையர்கள் அல்லாமல் தீவிரவாதிகள் என தெரிந்தது. பயங்கரவாத செயலுக்கு தேவையான சில பொருட்கள் அங்கே இருக்க, விரைவாக சென்று காவலர்களுக்கு தகவல் கொடுத்து கூட்டி வர வேண்டும் என புறப்பட்டான்.

ஆனால் அவர்கள் அடித்ததாலும், நேற்றிலிருந்து உணவில்லாமல் இருந்ததாலும் காட்டின் சீதோஷ்ண நிலையாலும் உடல் தொய்வுற்று மயங்கி விழுந்து விட்டான். இதைக் கூறிய போதுதான் அவர்கள் நினைவுக்கு வர, உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தான்.

அதன்படியே காவல்துறை அவர்களை கைது செய்தது. அதன்பிறகு இரு நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு பிறகே வீட்டிற்கு வந்தான். ஆனால் தேனருவியிடம் பேசுவது நின்று போனது. இதை அவள் உணர்ந்தாலும் உடல்நிலை சரியான பிறகு பேசிக் கொள்ளலாம் என நினைத்து அமைதியாகவே இருந்தாள்.

வீட்டிற்கு வந்தபோது,அவளே பாவம் சின்னப்பெண். பாசத்தையும், காதலையும் நினைத்து குழப்பி கொள்கிறாள். நாமும் கோபப்படக் கூடாது.’ என நினைத்துக் கொண்டவனுக்கு சந்திரிகாவின் நினைவும் சேர்ந்தே வந்தது.

அவளும் இப்படி பிடிவாதம் பிடித்துதான், சத்யாவின் வாழ்விற்குள் வந்தாள். ஆனாலும் சத்யாவிற்கு அவள் மீது காதல் இருந்தது உண்மையே. ஆனால் தனக்கு அதே போன்ற எவ்வித உணர்வும் எழுந்ததில்லையே.’ என எண்ணியவனுக்கு தெரியவில்லை, சத்யாவின் வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வுகளுக்கு பின்பு காதல், திருமணம் இதுபோன்ற எண்ணங்களில் மனம் மரத்து போயிருக்கிறது என.

பொறுமையாகவே தேனருவியிடம் தனது மனதை எடுத்துக்கூற அவளோ,இல்ல சீனியர். எனக்கும் உங்க மேல இதுநாள் வரை அந்த மாதிரி எண்ணம் வரலதான். ஆனா இப்ப தோணுதே. அது மாதிரி இப்ப இல்லன்னாலும் என்னைக்காவது என் மேல காதல் இருக்குன்னு நீங்களும் உணர்வீங்க. அதுவரை நான் வெயிட் பண்றேன்.என்றவள் தொடர்ந்து,

அதோட நீங்க சொன்ன மாதிரி நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல.. நான் சரின்னு சொன்னா இப்பவே வீட்ல கல்யாணம் பண்ணி வைக்கற அளவு பெரிய பொண்ணுதான்.” என்றாள். “ஆனா வீட்ல நீ சொல்ற பையனை பண்ணி வைக்க மாட்டாங்க தெரியும்ல.” என்றான் உதய் இடக்காக.

அப்படில்லாம் இல்லயே. எங்க வீட்ல என் இஷ்டப்படிதான் எல்லாமே பண்ணுவாங்க. ஆனா நீங்க ஓகே சொன்ன பிறகுதான் நான் வீட்ல பேசுவேன். அதுவரை நான் வெயிட் பண்றேன் சீனியர்.” என்றாள் தேனருவி. “அப்படி ஒருநாள் வந்தாதானே நீ சொல்றதுக்கு. வீணா மனசுல ஆசையை வளர்த்துக்காத. அவ்வளவுதான் சொல்வேன்.” எனக் கூறிவிட்டு கிளம்பினான் உதய்.

மேலும் ஆறு மாதங்களுக்கு மேல் அங்கு இருந்தாலும் தேனருவியிடமும், அவளது வீட்டினரிடமும் எப்போதும் போலவே இயல்பாக பழகி வந்தான். அவளும் அன்றைய நாளுக்கு பிறகு காதலை பற்றி பேச்சே எடுக்கவில்லை. அவனாக மனம் மாறினால் கூறட்டும் என்றே காத்திருந்தாள்.

ஆனால் திடீரென ஒருநாள்தேனு டிரான்ஸ்பர் கிடைச்சிருச்சு. நான் ஊருக்கு போறேன்.” என உதய் கூறவும் அவளால் தாங்க முடியவில்லை. “நீங்க எப்போ டிரான்ஸ்பர் அப்ளை பண்ணீங்க. என்கிட்ட சொல்லவே இல்லையே?” எனக் கேட்க, “முன்னாடியே அப்ளை பண்ணது. இப்பதான் கிடைச்சிருக்கு.

எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? என் ப்ரண்ட்ஸ் கூட எங்க ஊர்ல இருக்க போறேனே.” என்றான் உதய் மகிழ்வாக. தேனருவி, “அப்ப என்னை விட்டுட்டு போறது உங்களுக்கு வருத்தமா இல்லையா?” எனக் கேட்டு விட,இதுல வருத்தப்பட என்ன இருக்கு. ஆனா உங்க எல்லாரையும் கொஞ்சம் மிஸ் பண்ணுவேன்.” என்றான் எதார்த்தமாக.

அப்போது இத்தனை நாட்கள் தன் மீதான எண்ணம் மாறவே இல்லையா அவனுக்குஎன தேனருவிக்கு தோன்ற எதையோ இழக்க போவது போல வலித்தது. இருப்பினும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், “ஆனா நான் சொன்னதை மறந்துடாதீங்க ப்ளீஸ்.” என்றாள்.

ஹேய். இன்னுமா நீ அதெல்லாம் நினைச்சிட்டே இருக்க. இவ்வளவு நாள்ல மறந்திருப்பனு நினைச்சேன். சரி விடு நான் போனதும் என் நியாபகமே வராது. நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்க. மேரேஜ்க்கு கண்டிப்பா கூப்பிடனும்.” எனக் கூறியவன் அங்கிருந்து கிளம்பி சென்னை வந்து விட்டான்.

இதையெல்லாம் கூறி முடித்தவன், “இதுதான் நடந்தது. எனக்கு இஷ்டம் இல்லனு நான் தெளிவா சொல்லிட்டேன். அப்படியும் திரும்ப திரும்ப வந்து டிஸ்டர்ப் பண்ணா நல்லாவா இருக்கு. அதான் கோபத்துல கத்திட்டேன். நான் அங்க இருந்து வந்ததுல இருந்து இவ கூட காண்டாக்ட்ல கூட இல்ல.

இங்க இருக்கேனு எப்படியோ தெரிஞ்சுகிட்டு இப்ப என் ஆபிஸ்க்கே டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்திருக்கா. இத்தனை நாள்ல எல்லாத்தையும் மறந்துட்டு ஒழுங்கா இருப்பானு நினைச்சேன்.” என பொரிந்தான் உதய்.

அவனை அமைதிப்படுத்திய அசோக், “சரிடா. கோபப்படாத. இத்தனை நாள்ல நீயும் ஒரு கல்யாணம் பண்ணியிருந்தா அவங்க வெயிட் பண்ணியிருக்க மாட்டாங்க. யாரையோ கல்யாணம் பண்றதை விட உன்னையே பண்ணிக்கலாம்னு தோணியிருக்கும்.

லவ் யாருக்கு எப்ப வரும்னு தெரியாதுடா. அவங்க உன்னை லவ் பண்றதுக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதுக்காக கோபப்படாத.” என்றான். அப்போது சந்திரிகா, சத்யாவிடம், “எனக்கு என்னவோ இரண்டு பேரும் எதையோ மறைக்கறாங்கன்னு தோணுதுங்க. உண்மையிலே உதய்க்கு விருப்பம் இல்லாம இவ்வளவு தூரம் தேடி வந்திருப்பாளா இந்த பொண்ணு.” என அவனது காதில் ஓதினாள்.

அவளை அமைதியாக இருக்குமாறு கூறிய சத்யா,சரி. சரி. எதுனாலும் நாளைக்கு பேசி முடிவு பண்ணிக்கலாம்.” என்றவன் தேனருவியிடம், “எங்கையும் ஓடி போக மாட்டான்மா. நீ டென்ஷனாகாத. நான் அவனை விசாரிக்கறேன் சரியா. இப்ப டைம் ஆச்சு. வீட்டுக்கு கிளம்பு. தனியாவா தங்கியிருக்க?” எனக் கேட்டான்.

இல்லண்ணா. வீட்ல எல்லாருமே இங்கதான் இருக்காங்க. வீடே சென்னைக்கு ஷிப்ட் பண்ணிட்டோம்.” என்றாள் தேனருவி. அந்த தகவல் உதய்க்கு புதிதாக இருக்க, “ஏன் என்னாச்சு?” எனக் கேட்டான் அவளிடம்.

இப்பதானே டைம் ஆச்சுனு சொன்னேன். நீ ஒன்னு பண்ணு. அவங்க ஸ்கூட்டி இங்கையே இருக்கட்டும். நீ போய் டிராப் பண்ணிட்டு வந்திடு. அப்படியே என்ன ஆச்சுன்னும் கேட்டுடு. சரியா?என்றான் சத்யா உதய்யிடம்.

எது நானா?” என தயங்கிவனை வற்புறுத்தி அசோக்கும், சத்யாவும் அவனை அனுப்பியே வைத்து விட்டனர். பிறகு அசோக், “சரிடா. நானும் நம்ப வீட்டுக்கே கிளம்பறேன். அங்க யாரும் இல்லல்ல.” என்று கிளம்பி விட்டான்.

தரணி, சஞ்சனாவையும், சைந்தவியையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட, சமையல்கார அம்மாள், “நான் போய் படுக்கறேன்மா. ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க.” என கீழே இறங்கினார்.

அப்போது சந்திரிகா, “என்ன சத்யா இவங்க எல்லாரும் துணைக்கு இருக்காங்கன்னு அம்மா தைரியமா கிளம்புனாங்க. இவங்க என்னனா ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லி போய்ட்டாங்க. நாம அப்ப தனியா தான் இருக்கனுமா?எனக் கேட்டாள்.

அடியே எல்லாரும் நாம ரெண்டு பேரும் தனியா இருக்கதான் விட்டுட்டு போறாங்க. நீ என்னடான்னா போற எல்லாரையும் கூப்பிட்டுருவ போல. உதய் கஷ்டப்பட்டு டெகரேட் பண்ணி இருக்கான். வேஸ்ட் ஆகிட கூடாது. வா.” என அறையினுள் இழுத்து தாளிட்டான்.

அப்போது சந்திரிகாவின் கைப்பேசி சிணுங்க, சஞ்சனாதான் அழைத்தாள். அவள் கூறியதை கேட்டவள் சரி என்று அலைபேசியை அணைத்து விட்டு, “சத்யா. இருங்க ஒரு நிமிஷம். அம்மா பால் எடுத்துட்டு வர சொன்னாங்க. நான் மறந்துட்டேன்.” என்றாள் சந்திரிகா.

அதற்கு சத்யா, “கண்டிப்பா வேணுமா?” எனக் கேட்க, “அச்சோ. சம்பிரதாயம்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணனும். தோ உடனே வந்தடறேன். என கீழே சென்று எடுத்து வந்தாள். அதுவரையிலும் திருமண புடவையை மாற்றாமல் அதிலேயே இருந்தவளுக்கு அப்போதுதான் உடை மாற்றவில்லை என நினைவுக்கு வர, அவளை அறிந்தவன் ஒரு புடவையை அவளிடம் கொடுத்து மாற்றி வர சொன்னான்.

அதன்பிறகு அறையின் பால்கனியில் இருந்த ஊஞ்சலில் சத்யா அமர உடை மாற்றி விட்டு வந்தவள் அவனருகே அமர்ந்தாள். அன்றைய தினம் பௌர்ணமியாக இருக்க பால்நிலவு பிரகாசமாக வானில் உலா வந்து கொண்டிருந்தது.

வா சூர்யா. பார்த்தியா நிலா எவ்ளோ அழகா இருக்குல்ல.” என சத்யா கூற, “ஏதோ அவ்வளவு அவசரமா உள்ள கூட்டிட்டு வந்தீங்க. இப்ப சாவகாசமா இங்க உட்கார்ந்து நிலா பார்த்துட்டு இருக்கீங்க..” என்றாள் சந்திரிகா.

ஹேய். நீ என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க. உன்கூட உட்கார்ந்து நிலாவை ரசிக்கனும், விடிய விடிய நிறைய கதை பேசனும். உன் மடில படுத்து தூங்கனும். இப்படி நிறைய கனவு இருக்கு. வெறும் பெட்டை ஷேர் பண்றது மட்டும் பர்ஸ்ட் நைட் இல்ல.

இவ்வளவு நாள் இப்படி ஒரு நாள் வராமலே போய்டுமோனு எவ்ளோ பயந்திருக்கேன் தெரியுமா. இப்ப நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் தேவதை என் கூட இருக்கற இந்த சுகமே போதும்.” எனக் கூறிக் கொண்டே அவளது மடியில் படுத்தான் சத்யா.

அப்படில்லாம் இல்ல சத்யா. நான் சும்மாதான் கேட்டேன். நீங்க சொல்றது உண்மைதான். நீங்க இல்லாத டைம்ல எத்தனையோ இப்படி ஒரு வாழ்க்கை வாழனுமானு கூட யோசிச்சிருக்கேன். ஆனா அதையும் தாண்டி ஏதோ ஒரு நம்பிக்கை அதுதான் இருக்க வைச்சது.” என்றாள் சந்திரிகா அவனது தலையை கோதியபடியே.

ஆமா சூர்யா. நானும் கூட நினைச்சிருக்கேன். ஆனா உன்னைய மறந்து போன நாட்கள்ல கூட எனக்குள்ள நீ உறைஞ்சு போய் இருந்திருக்க. என்னோட உயிரா அதுதான் இப்ப நம்பளை சேர்த்து வைச்சிருக்குனு நினைக்கிறேன்.” என்றான் சத்யா.

ஆமா சத்யா. நீங்களும் என்னுள் உறைந்த என்னுயிரே தான். உண்மைக்காதல் எத்தனை வருஷம் ஆனாலும் தோற்காதுனு சொல்வாங்க. நம்ப விசயத்துல அது உண்மையாகிடுச்சுல.” என்றாள் சந்திரிகா.

ஆமா. சூர்யா. லவ் யூ சோ மச்.” என்றவன் அவள் முகத்தை வளைத்து நெற்றியில் முத்தத்தை பதித்தான். அவளும்லவ் யூ டூ. சத்யா.” என்றவாறே அவளும் முத்தம் குடுத்தாள்.

சரி இங்க ரொம்ப பனி பெய்யுது. வா உள்ள போகலாம்என எழுந்தவனிடம்அப்ப தூக்கிட்டு போங்க.” என இதழ் மடித்து கொஞ்சியவளை சிரித்தவாறே தூக்கி கொண்டு உள்ளே வந்தான்.

பிறகு சற்று நேரம் வெவ்வேறு விசயங்களை பேசி சிரிக்க வைத்த சத்யா, இயல்பாக அவளை தன்னோடே ஒன்ற வைக்க அவளும் அவனோடு கலந்தாள். அங்கு அழகாக ஒரு காதல் சங்கமம் உருவானது. அதே நேரம் தேனருவியோடு அவளது வீட்டிற்கு சென்ற உதய் அவர்களை பார்த்து அதிர்ச்சியாகி கொண்டிருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்