532 views

              சந்திரிகா வீட்டிற்கு வர மாட்டேன் என்றதும் அனைவரும் அதிர்ச்சியாகி அவளை பார்க்க சத்யா உதவிக்கு வந்தான். “என்ன சூர்யா, ஏதேதோ பேசிட்டு இருக்க?” எனக் கேட்டான் சத்யா.

சந்திரிகா, “நீங்க சும்மாயிருங்க சத்யா. நான் யாரும் வேணாம்னு சொல்லலயே. நாம அங்க போக வேண்டாம்னு தானே சொல்றேன்.” எனவும், சுற்றிலும் எல்லாரும் அவர்களை பார்ப்பதை உணர்ந்து அறைக்கு கூட்டிச் சென்றான் சத்யா.

என்னாச்சு சூர்யா. ஏன் இப்படி?” எனக் கேட்க,எனக்காக இன்னும் எவ்வளவு நாள்தான் நீங்க எல்லா கஷ்டத்தையும் பொறுத்துக்குவீங்க. உங்களுக்கு அங்க வரது சந்தோஷத்தை குடுக்கறதில்ல. அதுனால தானே நியூ இயர் அன்னைக்கு கூட வரல. அதனால நீங்க கஷ்டப்பட வேண்டாம்.” என்றாள் சந்திரிகா.

சத்யா, “நான் கஷ்டப்படறேனு உனக்கு யார் சொன்னா. இப்பவும் அங்க இருக்கறவங்க மேல கோபம் இருக்கு. எனக்கு இந்த உறவுகள் எல்லாம் சின்ன வயசிலயே கிடைச்சிருக்க கூடாதானு கோபம். இவங்க எல்லாரும் கூட இருந்திருந்தா எங்க அப்பாம்மா என் கூட இப்ப வர இருந்திருப்பாங்களோனு ஒரு எண்ணம்.

ஆனா இதுக்காக நீ உன் குடும்பத்தை விட்டு வெளில வரனும்னு நான் யோசிச்சதே இல்லமா. அத்தையை யோசிச்சு பாரு. அவங்களுக்கே எவ்வளவு கஷ்டமா இருக்கும். இன்னும் கொஞ்ச நாள்ல சஞ்சனாக்கு கல்யாணம் நடக்கனும். அப்ப நீ அங்க இல்லன்னா அவ வருத்தப்பட மாட்டாளா?

தீக்ஷிதா உன்னை எவ்வளவு மிஸ் பண்ணுவா. கீர்த்தியும் கூட. ஒருத்தர் பண்ற தப்புக்காக இத்தனை பேரை தண்டிக்க கூடாது சூர்யா. இப்பவும் சொல்றேன். உங்க வீட்ல எல்லாரையும் உடனே என்னால ஏத்துக்க முடியாதுதான். ஆனா அதுக்கு இது எப்பவும் தீர்வாகாது.

இனிமேல் என்ன ஏதோ விஷேஷ நாள்ல அங்க போவமா. அதுக்கு ஏன் இவ்வளவு கோபம். எனக்கு எந்த கஷ்டமும் இல்லடா. ப்ளீஸ்.” என சமாதானம் செய்தான். அதன்பிறகு சற்றே சமாதானம் ஆனவள், “ஆனா அங்க உங்களை யாராவது தப்பா நடத்துனா உடனே நான் கிளம்பிடுவேன்.” என்றாள் சந்திரிகா.

சூர்யா. நான் பேச வேண்டிய டயலாக்கெல்லாம் நீ பேசிட்டு இருக்க பாரு. அப்படினாலும் நாம ஏன் கிளம்பனும். மாமா அவங்களை ஒருவழி பண்ணிடறேன். ஓகேவா?” என்றதில் இன்னும் இலகுவானவள் சிரித்த முகத்தோடு வெளியே வந்தாள்.

அதன்பிறகு சந்திரிகாவின் வீட்டிற்கே முதலில் செல்வதாக முடிவாக காரில் ஏறி அனைவரும் கிளம்பினர். அப்போது உதய்யோடு வேலை செய்வதாக கூறிய பெண்ணும் தனது இருசக்கர வாகனத்தில் அவர்களோடே அந்த வீட்டுக்கு வர மற்றவர்கள் உள்ளே சென்றதும் உதய் அவளை நிறுத்தினான்.

ஹேய் நீ இங்க என்ன பண்ற? நேத்து வேற கதை தானே சொன்ன?எனக் கேட்டான் அவளிடம். நேற்று அவளை வரவேற்பில் பார்த்ததும் அவளோடே வெளியில் வந்தவன், “இங்க எதுக்கு வந்திருக்க?” எனக்கேட்டான் உதய். அதற்கு அவளோ ஒரு காகிதத்தை அவனிடம் நீட்ட, அதில் உதய் பணிபுரியும் அதே வனச்சரக அலுவலகத்தில் அவளும் பணிமாறுதல் வாங்கியதற்கான உத்தரவு இருந்தது.

உதய் புரியாமல் அவளை பார்க்க,என்ன சீனியர் ஷாக்காயிட்டிங்களா. எஸ் இந்த வீக்கே நானும் உங்க ஆபிஸ்ல உங்களுக்கு ஜூனியரா சேரப்போறேன். ஒரு பாரஸ்ட் ஆபிஸர் கலெக்டர் கல்யாணத்துக்கு வரது ஒன்னும் தப்பில்லயே.” என்றவாறே ஓடி விட்டாள்.

அந்த நினைவில் இப்போது வீட்டிற்கு வர வேண்டிய காரணம் என்ன என்பதையே உதய் கேட்டுக் கொண்டிருந்தான். அதே நேரம் உள்ளே அவனை காணாமல் அசோக் அவனை தேடி வெளியே வந்தான். அவனை கண்டதும் அவள், “ஹாய் அண்ணா. எப்படி இருக்கீங்க?” என பரவசமாக கேட்க, “நீங்க. யாருன்னு தெரியலயே சிஸ்டர்.” என்றான் அசோக்.

ஆம் தேனருவி. பாரஸ்ட் ஆபிஸர். இப்ப இவரோட ஜூனியர் இங்க ஜாயின் பண்ணியிருக்கேன். என்னை உங்களுக்கு தெரியாது. ஆனா உங்களை எனக்கு நல்லாவே தெரியும். மிஸ்டர். அசோகமித்திரன் .பி.எஸ்.” என்றாள் அவள்.

யாருடா இவங்க. என்னை பத்தில்லாம் தெரிஞ்சு வைச்சிருக்காங்க. உன் ப்ரண்ட்டா?” என அசோக் உதய்யிடம் கேட்க தேனருவி முந்தி கொண்டு, “இல்லனா அவரோட லவ்வர்.” என்றாள் உதய்யை பார்த்து கண்ணடித்து.

உதய் பதில் சொல்வதற்குள் அசோக்கை தேடி சஞ்சனாவும், சைந்தவியும் வெளியே வர இதை கேட்டு விட்டனர். சைந்தவி ஓடி வந்து, “அண்ணா. எப்ப இருந்து, சொல்லவே இல்ல. அண்ணி சூப்பர்.” என்றாள் உதய்யிடம்.

உதய் தேனருவியை முறைக்க, சைந்தவியோ அவள் கையைப்பிடித்து,நீங்க வாங்க அண்ணி.” என உரிமையாக அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, மற்றவர்களும் பின்தொடர்ந்தனர்.

உள்ளே பால், பழம் கொடுக்கும் சம்பிரதாயம் நடந்து கொண்டிருக்க, சைந்தவி சந்திரிகாவிடம் சென்றுஅக்கா. இவங்க யாரு தெரியுமா? உதய் அண்ணாவோட.” என இழுத்தாள். அதற்குள் உதய் வந்துவிட, “அதெல்லாம் ஒன்னுமில்ல சந்தும்மா. ஏதோ விளையாடறாங்க. நீ சூர்யாவை கவனி.” என்றான்.

ஏதோ இருக்கிறது என ஏதோ தோன்றினாலும் பிறகு கேட்டுக் கொள்ளலாம்என நினைத்து சந்திரிகா அமைதியாக, அங்கிருந்த சம்பிரதாயங்களை முடித்தனர். பிறகு அங்கிருந்து கிளம்பி சத்யாவின் வீட்டிற்கு கிளம்ப, கலெக்டர் இல்லத்திற்கு தான் செல்கிறோம் என நினைத்தனர் சந்திரிகாவின் வீட்டினர். ஆனால் சத்யா அழைத்து சென்றது அவனது சொந்த வீட்டிற்கே.

தனது மகளுக்காக அவளது விருப்பப்படி தனியாக வீடு கட்டிக் கொடுத்திருக்கும் மருமகனை நினைத்து சக்கரவர்த்தியின் மனம் பெருமை கொண்டது. முறைப்படி அங்கே பால்காய்ச்சி, சந்திரிகா விளக்கேற்றி, அவளது வாழ்வு வளமாக இறைவனை வேண்டிக் கொண்டாள்.

மதிய உணவை அங்கேயே கொண்டு வருமாறு சத்யா ஆர்டர் செய்திருக்க, அனைவரும் இணைந்து உணவருந்தி முடித்தனர். பின்பு, மற்ற ஏற்பாடுகளை இளையவர்களை பார்த்துக் கொள்ள கூறிவிட்டு துணைக்கு சமையல் கார அம்மாவை மட்டும் அங்கு விட்டுவிட்டு பெரியவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.

தரணி, சைந்தவி, உதய், அசோக் மட்டும் அவர்களுடன் இருக்க, அப்போதும் தேனருவி அங்குதான் இருந்தாள். சைந்தவிதான் இன்று முழுதும் அவர்களோடே இருக்குமாறு கேட்டுக் கொண்டதால். அவள் சத்யாவின் இல்லத்திற்கும் வந்திருப்பாள் என்பதை அறியாத உதய், சத்யாவின் அறையை அலங்காரம் செய்து கொண்டிருந்தான்.

அதை அறிந்த தேனருவி, அந்த அறைக்குள் நுழைந்து அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். யாரோ பார்ப்பது போல இருக்கவும், திரும்பி பார்த்த உதய், தேனருவி நிற்பதை கண்டு அவளை முறைத்தவன், “உனக்கு என்னதான் வேணும். எதுக்கு இப்ப என் பின்னாடியே சுத்திட்டு இருக்க?என கோபமாகவே கேட்டான்.

அதற்கு, “எனக்கு என்ன வேணும்னு நிஜமாகவே உங்களுக்கு தெரியாதா சீனியர்?எனக் கேட்டாள் தேனருவி. “இங்க பாரு சும்மா உன் டைமை வேஸ்ட் பண்ணி என்னோட நிம்மதியை கெடுக்காத போ.” என உதய் கத்தவும், சத்தம் கேட்டு அனைவருமே மேலே வந்து விட்டனர்.

அசோக்தான் முதலில், “டேய். என்னாச்சு உனக்கு. நானும் பார்க்கறேன். நீ இவங்களை பார்த்தா கோபப்பட்டுட்டே இருக்க. உனக்கும் இவங்களுக்கும் ஏதாவது சண்டையா?” எனக் கேட்டான். உதய் அமைதியாக இருக்கவும், சந்திரிகா, தேனருவியிடம், “நீயாவது சொல்லும்மா. இங்க என்ன நடக்குது.” எனக் கேட்டாள்.

அண்ணி. நான் இவரை லவ் பண்றேன். இப்ப இல்ல இரண்டு வருஷமா. இவருக்கும் என்னை பிடிக்கும். ஆனா இப்ப பிடிக்காத மாதிரி நடந்துக்கிறாரு. நீங்கதான் இவருக்கு புரிய வைக்கனும்.” என்றாள் தேனருவி சந்திரிகாவிடம்.

அண்ணா. இவ என்னன்னவோ சொல்றா. இதெல்லாம் உண்மையா. ஏன் எங்ககிட்டலாம் நீங்க ஒன்னுமே சொல்லல. நீங்க இவ்வளவு நாள் நார்த்ல தானே இருந்தீங்க. அங்க இருந்தே பழக்கமா?” என சந்திரிகா கேட்க, அதற்கு உதய்இவ சொல்ற மாதிரில்லாம் ஒன்னுமே இல்லம்மா.” என்றவன் நடந்ததை கூற, தேனருவி இடையிடையே மறித்து அவளும் கூறினாள்.

இரண்டரை வருடங்களுக்கு முன்பு, கோதுமை களஞ்சியமான பஞ்சாப்பில் வனச்சரக அலுவலராக இருந்தான் உதய். அழகான ஒரு காலை வேளையில் அந்த அலுவலகத்திற்கு வந்தாள் தேனருவி.

சாதாரண உடையில் வந்திருக்கவும், அவளை பார்த்து, “சொல்லுங்க உங்களுக்கு என்ன உதவி வேணும்.” எனக் கேட்டான் உதய். அலுவலர் என்றால் ஏதோ வயதானவராக இருப்பார் என நினைத்து வந்தவள் இவ்வளவு இளைய வயதுடையவனை எதிர்பார்க்கவில்லை.

அவனோடு சற்று விளையாடி பார்க்க நினைத்தவள்,அது வந்து சார். எங்க வீட்டுக்கு பக்கத்தில தினமும் ராத்திரி ஒரு சிறுத்தை வருது. நீங்கதான் அதை எப்படியாவது பிடிக்கனும்என்றாள் ஆங்கிலத்தில்.

சிறுத்தையா?” எனக் கேட்டவன், “ஓகே. நீங்க கூடவே வந்து லொக்கேஷனை காட்டுங்க.” என அவளையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு அவள் கூறிய இடத்திற்கு சென்றான்.

அங்கு சென்று பார்த்தால் இங்கு நெற்கதிர்கள் தலைசாய்த்த வயல்களை போல அழகான ஒரு கோதுமை வயல் தோட்டத்தின் நடுவே பழைய காலத்து பாணியில் கட்டப்பட்டு இருந்த ஒரு மாளிகை இருந்தது.

இங்க எப்படி சிறுத்தை வர முடியும்?எனக் கேட்டுக் கொண்டே உதய் கீழே இறங்க, மறுபுறம் அவளும் இறங்க, வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு பெரியவர், “அட என்னம்மா அதுக்குள்ள வந்துட்ட. யாரு இவரு?” எனக் கேட்டார்.

தாத்தா. இவர்தான் நம்ப பாரஸ்ட் ஆபிஸர். நீங்கதானே தனியா எப்படிம்மா வேலைக்கு போவன்னு பீல் பண்ணிங்க. அதான் இவரை கூட்டிட்டு வந்தேன். இவருக்கு கீழதான் வேலை செய்ய போறேன்.” என்றாள் தேனருவி.

உதய் தான் என்ன நடக்கிறது என புரியாமல் நின்றிருக்க, அதற்குள் வீட்டிற்குள் இருந்து சிறார்களும், பெரியவர்களுமாக பத்து பேருக்கு மேல் வர எல்லோரும் தேனருவியை சூழ்ந்து கொண்டு, “உன் வண்டி என்னாச்சுமா. கீழ விழுந்துட்டியா. இவர்தான் கூட்டிட்டு வந்தாரா?” என நலம் விசாரித்தனர்.

பிறகே அவள் அவனிடம் பொய் சொல்லி அழைத்து வந்திருக்கிறாள் என்பது புரிய ஆனாலும் அவளது குடும்பத்தினரின் பாசப்பிணைப்பை கண்டு அவள் மீது ஒரு சுவாரஸ்யமே வந்தது.

தேனருவி குடும்பத்தினர் தமிழ்நாட்டினரே. வேலை காரணமாக பஞ்சாப்பிற்கு இடம் பெயர்ந்தவர்கள். பிறகு அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டனர். அனைவரும் ஒரே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். அவர்களின் செல்லப்பெண்ணே தேனருவி.

அவளும் அரசுத்தேர்வு எழுதி வன அலுவலர் பதவிக்கு தேர்வாக வெளியூர் அனுப்ப மனமில்லாததால் தனது செல்வாக்கை வைத்து பக்கத்திலே போஸ்டிங் வாங்கி கொடுத்தார் அவளது பெரியப்பா. அவளது பாட்டிக்கோ, தனது பேத்தி வேலைக்கு போனால் பாதுகாப்பாக இருக்குமோ என்னவோ என பயந்து கொண்டிருந்தார்.

ஆனால் உதய்யை கண்டதும் ஒரு சிறு நிம்மதி பரவ பிறகு உதய்யை வீட்டிற்குள் அழைத்து உபசரித்தனர். அன்றிலிருந்து உதய் அந்த வீட்டில் ஒருவனாக, தேனருவிக்கு நல்லதொரு தோழனாக மாறிப்போனான். உதய் வளர்ந்த சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட அந்த வாழ்வியலை வெகுவாக ரசித்தான் உதய்.

உதய்யை பற்றி ஓரளவு அந்த பொழுதுகளில் அறிந்து கொண்டவளுக்கு அப்போதே அசோக், சத்யா பற்றியெல்லாம் கூறி இருந்தான். அதனால் தான் அசோக்கை கண்டதும் உரிமையோடு பேசினாள். எப்போதுமே உதய்யைசீனியர்என்றே அழைப்பாள் தேனருவி.

ஆறு மாதங்களுக்கு மேல் அழகாக சென்று கொண்டிருந்த அந்த உறவில் தேனருவிக்கு அவளே அறியாமல் உதய் மீது ஒரு நேசம் வந்ததை இருவருமே முதலில் அறியவில்லை. அதனால் எப்போதும் போல இருவரும் நட்பாகவே பழகி வந்தனர். அந்த நாள் வரும்வரை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்