542 views

                ஞாயிற்றுக் கிழமை இரவு ஏழு மணி, சென்னையின் மையப்பகுதியில் அமைந்திருந்த அந்த மண்டபம் பல்வேறு அலங்காரங்களால் ஜொலித்து கொண்டிருந்தது. நகரின் முக்கிய நபர்கள் அனைவரும் அங்கு கூடி இருக்க, நிரம்பி வழிந்தது சுற்றத்தாரின் வருகையால்.

ஊரின் முக்கிய தொழிலதிபர் மகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் திருமணம் என்றால் சும்மாவா. ஒருபுறம் அரசு அலுவலர்களும், இன்னொரு புறம் தனியார் முதலாளிகளும் இணைந்து அந்த வைபவம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

மேடையில் மெஜந்தா நிற லெஹங்காவில், அழகுக்கலை பெண்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு, அதோடு கன்னங்களில் வெட்கச்சிவப்பு நிறைந்திருக்க, புன்னகை முகத்தோடு நின்றிருந்தாள் சூர்ய சந்திரிகா.

அவளுக்கு இணையான வண்ணத்தில் கோட்சூட் அணிந்து ஆணழகனாக அருகில் நின்றிருந்தான் சத்யேந்திரன். மற்ற தோழமைகள் அனைவரும் அங்கே குழுமியிருக்க வரவேற்பு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. சந்திரிகாவின் தோழி தான்யாவிற்கும், மேனேஜர் அபிநய்க்கும் இரு வாரங்கள் முன்புதான் சந்திரிகாவின் காதல் கதை தரணியின் மூலமாக தெரிய வந்தது.

அபிக்கு அவர்களது இத்தனை வருட காதல் ஆச்சர்யத்தை அளிக்க, தான்யாவோ, தனது தோழியை பற்றி எல்லாமே தெரியும் என்ற இறுமாப்பில் இருந்து அவள் காதலிப்பதை கூட கண்டு கொள்ள முடியாமல் இருந்திருக்கிறேனே என தன்னையே நொந்து கொண்டாள்.

முதலில் கூட பரவால்லயில்லை. ஆனால் சத்யா வந்த பிறகு கூட அது தெரியவில்லையே என கவலை கொண்டாள். அதை சந்திரிகாவிடம் பகிர, “அதனால என்ன தான்யா. நீ என்ன விட வேலையில அவ்வளவு சின்சியரா இருந்திருக்க. விடு போனஸ் டபுளா குடுக்கறேன்.” என்றாள் கிண்டலாக.

அதற்கு தான்யா முகம் வாடி விட, “அப்ப நீ என்ன உன் பி.ஏவா தான் நினைச்சிருக்க. ப்ரண்ட்னா சொல்லியிருப்பல்ல. இப்ப கூட தரணி சார் சொல்லுலன்னா தெரிஞ்சே இருக்காது.” என்றாள்.

“ஹேய். நான் சும்மா கிண்டல் பண்ணேன்பா. நீ தப்பா எடுத்துக்காத. சொல்லக்கூடாதுனு இல்ல. சொல்ற சந்தர்பம் அமையல. இப்ப தெரிஞ்சிருச்சுல. ப்ரீயா விடு.” என சமாதானம் செய்து விட்டாள். அன்றிலிருந்து ஆபிஸ் வேலைகளை எல்லாம் அபியிடம் விட்டுவிட்டு சந்திரிகாவின் திருமண வேலைகளில் தன்னை புகுத்தி கொண்டாள்.

சந்திரிகாவின் தந்தை ஆடம்பரமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது சத்யாவிற்கு அவ்வளவு பிடித்தமாக இல்லை எனினும் சந்திரிகாவின் மகிழ்விற்காக அமைதியாக இருந்து கொண்டான்.

சஞ்சனா அழகிய லேவண்டர் நிற லெஹிங்காவில் இருக்க அசோக்கின் கண்களோ அவளையே சுற்றி கொண்டு இருந்தது. அடுத்த ஒரு வாரத்தில் திருமணம் வைத்திருந்தாலும் அஸ்வினின் வீட்டினர் அனைவரும் வரவேற்புக்கு வந்திருந்தனர்.

அசோக்கின் வீட்டினர் அனைவரும் வர வேண்டும் என சந்திரிகாவும், சத்யாவும் கேட்டு கொண்டதால் அவர்களும் அனைவரும் வந்திருந்தனர். தரணி மிருணாவிடம் தனியாக பேசும் சந்தர்பத்தை எதிர்நோக்கி கொண்டிருந்தான். ஆனால் அது தெரிந்தும் அவனை கண்டு கொள்ளாமல் இருந்தாள் மிருணா.

தீபக், சைந்தவி, அஸ்வின், அனு நால்வரும் பரிமாறும் இடத்தில் மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர். சந்தன நிற லாங் பிராக் அணிந்து அம்சமாக இருந்த சைந்தவியை கண்டு தீபக்கின் மனம் முதன்முறையாக அவளை வேறு கோணத்தில் யோசிக்க அவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு.

பிரபல இசைக்கலைஞரின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, மேடையின் மறுபுறம் அது சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தனது அக்காவின் திருமணத்தில் சஞ்சனாவின் பாட்டு இல்லாமல் இருக்குமா? மைக்கை வாங்கியவள்,

சூடி தந்த சுடர்க்கொடியே
சுபவேளை நீ வருக
தேடிக் கொண்ட திரவியமே
தேன் மாலை போல வருக

மின்னும் அம்பு விழி சந்திர பிம்பம்
பொன்னொளி வீச மங்கை மைதிலி
இவள் செம்மலர் பாதத் தண்டைகள்
ஆட சங்கம் சூழ வருக
ஸ்ரீரங்கன் தாளை அடைய வளர் திங்களாகி வருக..

என தொடங்க கூடவே வந்த அசோக் தொடர்ந்து,

கோகுலத்து ராதை வந்தாளோ
இந்த கல்யாண தேரிலே.
மிதிலை நகர் சீதை வந்தாளோ
எங்கள் வீட்டோடு வாழவே..!!

அந்த தென்மதுரை மீனாள்
விளக்கேற்ற வந்தாள்
சீதனமாய் கையில் தாய்ப்பாசம்
கொண்டு வந்தாள்..!!

என பாடினான். பிறகு சஞ்சனா,

வெள்ளிப்பனி முற்றத்தில்
வெட்கம் எனும் தோட்டத்தில்
மல்லிகை பூத்ததோ
புது மல்லிகை பூத்ததோ

மாடக் குயில் சத்தத்தில்
மஞ்சள் முகம் நாணத்தில்
மங்கலம் வந்ததோ……
தினம் மங்கலம் வந்ததோ.. !! என பாட,

இனி எங்கள் நெஞ்சக் கூடத்தில்
தீபத் திருவிழா
எங்கள் வானில் வெளிச்சம் வீசுதே
சின்ன வெண்ணிலா

எங்கள் அன்புக்கு நண்பன் பண்புக்கு
தென்றல் சந்தனம் பூசுதோ
எங்கள் வீட்டுக்குள் வீசும் தென்றலாய்
ஒரு தேவதை வந்ததோ ….….

என பாடி அசோக் முடிக்க.. அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன்பின்பு, சைந்தவியும், சஞ்சனாவும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட தோழமைகள் எல்லோரும் மேடைக்கு சந்திரிகாவையும், சத்யாவையும் கூட்டி வந்து ஆட வைக்க கொண்டாட்டமாக இருந்தது.

பிறகு வந்திருந்த விருந்தினர்கள் விருந்துண்டு கிளம்பிய போதே சற்று ஓய்வு கிடைத்து. சத்யாவும், சந்திரிகாவும் அமர்ந்தனர். நெருங்கிய சுற்றங்கள் மட்டுமே இருக்க அந்த நேரம் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

அதிலிருந்து சற்று வாட்ட சாட்டமாக, அழகிய புடவையில் ஒரு பெண் இறங்கி கம்பீரமாக நடந்து மண்டபத்திற்குள் வந்தாள். அவளை அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் நேராக நடந்து மேடையில் நின்றிருந்த உதய்யை பார்த்து “ஹாய் சீனியர்.” என சைகையில் கூறி கையில் இருந்த பூங்கொத்தை சத்யா, சந்திரிகாவிடம் அளித்து, “வாழ்த்துகள் அண்ணா. அண்ணி.” என வாழ்த்த அவர்களும் அதை ஏற்று கொண்டனர். யார் என்று தெரியாமலே.

“நீங்க?” என சந்திரிகா கேட்க, “முதல்ல கல்யாணம் நல்லபடியா முடியட்டும். நான் இங்கதான் இருப்பேன். பொறுமையா தெரிஞ்சுக்கோங்க.” என்றவள், மீண்டும் உதய்யிடம், “பாய் சீனியர். பார்க்கலாம்.” என கூறிவிட்டு கீழே இறங்கி விட உதய்தான் அதிர்ச்சியில் நின்றிருந்தான்.

அவள் வந்த வேகத்தில் கிளம்பிவிட உதய்யிடம் பேசியதை வைத்து உதய்க்கு தெரிந்த பெண் போல பொறுமையாக கேட்டுக் கொள்ளலாம் என அனைவரும் அமைதியாக இருந்தனர்.

அதன்பிறகு தோழமைகள் அனைவரும் பேசி சிரித்து விளையாடியபடியே சத்யா- சந்திரிகாவுடன் இணைந்து உணவருந்தி முடிக்க, அதை கேமிரா கண்கள் அழகாக படம் பிடித்து கொண்டன.

அடுத்ததாக தூங்க விடாமல் புகைப்பட கலைஞர் தனது பணியை தொடங்கி விட இருவரும் அதில் தங்களது கவனத்தை செலுத்தினர். சந்திரிகாவின் வீட்டினர் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.

அவளது வாழ்வு சீரானது ஒரு மகிழ்ச்சி என்றால் தங்கள் வீட்டு பையன் திரும்ப கிடைத்தது ஒரு மகிழ்ச்சியாக இருந்தது. கீர்த்தி, தனது தோழியின் வாழ்வு சீரானதை கண்டு கணவனுடன் பழையபடி பேச ஆரம்பித்திருந்தாள்.

அதன்பிறகு அனைவரும் உறங்கவே நள்ளிரவாகி விட, காலை முகூர்த்திற்கு நெருங்கிய சொந்தங்களும் முக்கிய சுற்றங்களும் மட்டும் இருக்க முதலில் சத்யா தயாராகி வந்தான்.

அவன் மணமேடையில் அமர கீழே ஆசிரமத்தில் இருந்த அனைவரும் அமர்ந்திருந்ததை கண்டு அவனுக்கு எதுவும் புரியவில்லை. திருமணம் முடிந்ததும் ஆசிரமத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்தான் தான்.

ஆனால் திருமணத்திற்கு யாரையும் அழைக்கவில்லை. அவர்களை யாராவது இங்கு ஏதாவது சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற பயத்திலேயே அவன் அதை செய்யவில்லை.

உதய்யை அழைத்து விவரம் கேட்க, அவனோ “எல்லாம் சந்தும்மா வேலைதான்டா. கண்டிப்பா எல்லாரும் கல்யாணத்துக்கு வரனும்னு பிடிவாதம் பிடிச்சு வரவச்சுருச்சு. இவங்க முன்னாடி தான் எங்க கல்யாணம் நடக்கனும்னு சொல்லிடுச்சு.” என்றான்.

அதே நேரம் மணப்பெண்ணை அழைத்து வர அரக்கு நிற தூய பட்டுப்புடவையில், நீண்ட சரமான பின்னலில் மலர்களும், அணிகலன்களும் அணிவகுக்க, உடைக்கு பொருத்தமாக ஆபரணங்கள் அணிந்து, அழகான அலங்காரத்தில் தேவதை போல நடந்து வந்தாள் சந்திரிகா.

அவளை பட்டு வேட்டி, சட்டையில் அழகாக அமர்ந்திருந்த சத்யா காதலுடன் பெருமையாக பார்க்க அந்த கண்களில் தெரிந்த காதலில் கர்வத்துடன் கன்னங்களில் வெட்கச்சிவப்போடு வந்து அமர்ந்தாள் சந்திரிகா. ஆசிரமத்தில் இருந்தவர்களை காட்டி, “எதுக்கு சூர்யா இதெல்லாம் பண்ற? நாம முடிஞ்சதும் போகலாமே?” எனக் கேட்டான் சத்யா.

“நல்லா இருக்கு நீங்க சொல்றது. நாம போய் பார்க்கறது எப்ப வேணா பண்ணலாம். ஆனா எல்லாரும் கல்யாணத்தை பார்க்கனும்னு ஆசைப்பட மாட்டாங்களா? அவங்க தேவைகளை நிறைவேற்றினா மட்டும் போதாது. அவங்ளோட உணர்வுகளுக்கும் மரியாதை குடுக்கனும்ல சத்யா.” என்றாள் சந்திரிகா.

“இது அவங்களுக்காகவா இல்ல எனக்காகவா?” எனக் கேட்டான் சத்யா. அவள் பதில் சொல்வதற்குள், “நீங்க அப்பறமா உங்க டிஸ்கஷன வைச்சுண்டா நன்னா இருக்கும். நாழி ஆயிடுத்து. மந்திரத்தை சொல்றேளா?” என்றார் ஐயர். அதைக்கேட்டு மேடையில் இருந்த அனைவரும் சிரிக்க, அதன்பின்பு சடங்குகளில் கவனமானவர்கள் அதை சிறப்பாக செய்தனர்.

அப்போதும் சத்யா கீழே கவனிக்க மறக்கவில்லை. ஆனால் அவனே எதிர்பாராத விதமாக, சக்கரவர்த்தி ஆசிரமத்தில் இருந்த அனைவருக்கும் குளிர்பானம் கொடுத்ததோடு அவர்களிடம் சிரித்தும் பேசிக் கொண்டிருந்தார்.

அதனால் சத்யாவின் மனம் ஒரு நிலைக்கு வர அதன்பிறகு சடங்குகளை ஆர்வமாக செய்தான். சத்யாவிற்கு பெற்றோராக தரணியின் பெற்றோரே நின்று சடங்குகளை செய்ய சுரேந்திரன் மச்சான் முறையை சிறப்பாக செய்தான்.

இளையவர்களில் ஆண்கள் அனைவரும் வேட்டி சட்டையில் ஒரே நிற சட்டை அணிந்திருக்க பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக புடவை உடுத்தி இருந்தனர். தங்களது இணைகளை புடவையில் பார்த்து ரசித்தபடியே திருமணத்தையும் கண்டு களித்தனர் தோழர்கள்.

நேற்றிரவு வந்த பெண், காலையில் திருமணத்திற்கும் வந்திருக்க சைந்தவி அவளிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து வேகமாக அங்கு வந்த உதய், “சைந்தவி. இங்க என்ன பண்ற. அங்க அம்மா கூப்பிடறாங்க பாரு.” என்றான்.

“ஒன்னும் இல்லண்ணா. இவங்க உங்க ஃப்ரண்டானு கேட்டுகிட்டு இருந்தேன்” என்ற சைந்தவியிடம், “ஃப்ரண்ட்லாம் இல்ல. கூட வேலை பார்த்தாங்க. நீ போ.” என அனுப்பி வைத்தான்.

“ஏன் சீனியர். என்னை யாருன்னு சொல்ல வேண்டியது தானே.” என அந்த பெண் கேட்க, “நான்தான் சொன்னனே பார்க்கல.” என முகத்தில் அடித்தாற் போல பேசிவிட்டு மேடைக்கு சென்றான். ஒரு நொடி முகம் வாடியவள் பின்பு உடனே இயல்பாகி மலர்ச்சியாகிவிட்டாள் அவள்.

சடங்குகள் முடிந்து ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க மங்கல நாணை அணிவித்து முறைப்படி மனைவியாக்கி கொண்டான் சத்யா. அந்த நொடியில் அவள் கண்களில் இருந்து விழுந்து இரு துளி கண்ணீரையும் தனது விரல்களால் துடைத்தவன் அவளை கண்டு சிரிக்க அவளும் புன்னகைத்தாள்.

“தான்தான் மூன்றாவது முடிச்சு போடுவேன்” என பிடிவாதம் பிடித்து சைந்தவி அதை செய்தாள். பிறகு திருமணத்திற்கு பிறகாக சடங்குகள் நடக்க சந்திரிகாவின் கால் விரலில் மெட்டி அணிவித்தான் சத்யா.

பிறகு மற்ற சம்பிரதாயங்கள் முடிந்து அனைவரும் உணவருந்தி, புகைப்படங்கள் எல்லாம் எடுத்து முடிக்க சந்திரிகா மறுவீட்டு முறைகளை மண்டபத்திலே முடிக்க சொன்னாள். “அதெல்லாம் பொறுமையா பண்ணிக்கலாம்மா? இப்ப எதுக்கு?” என பாட்டி கேட்க,

“இல்ல பாட்டி இரண்டு மூனு முறை வரதுக்கெல்லாம் அவருக்கு நேரம் இருக்காது. இங்கேயே பண்ணிக்கலாம்.” எனவும் அதுவும் அங்கேயே வைத்து பால், பழம் அருந்தி மணமகன் அறைக்கும், மணமகள் அறைக்கும் மாறி மாறி சென்று வந்தனர்.

பிறகு, “மல்லிகா. நீ முதல்ல போய் எல்லா ஏற்பாட்டையும் பண்ணு. நான் அவங்களை அழைச்சிட்டு வரேன்.” என சக்கரவர்த்தி கூற, சந்திரிகாவோ, “எங்கப்பா?” எனக் கேட்டாள். “நம்ப வீட்டுக்கு தான்மா.” என அவர் கூற, “இல்லப்பா. நாங்க எங்க வீட்டுக்குதான் போறோம்.” என்றாள் உறுதியாக.

“ம்ம். சரிம்மா. மாப்பிள்ளை வீட்டுக்கு போயிட்டு அப்பறம் அங்க போய்க்கலாம்.” என்றார் சக்கரவர்த்தி. “இல்லப்பா. நீங்க எப்ப வேணா எங்க வீட்டுக்கு வரலாம். ஆனா நாங்க அங்க வர மாட்டோம்.” என சந்திரிகா கூற, அனைவரும் திகைத்து நின்றனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்