Loading

                   திடீரென தனது தாய் இவ்வாறு செய்வார் என எதிர்பாராத அசோக், என்ன செய்வதென தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க, சத்யா அருகில் வந்து, “எதுனாலும் வீட்ல போய் பேசிக்கலாம். இப்ப போய் சபைல உட்காரு. அதுதான் மரியாதை.” என அனுப்பி வைத்தான்.

அவன் அனைவருக்கும் நடுநாயகமாக அமர ஒருபுறம் பங்கஜமும், சில உறவினர்களும் இருக்க மறுபுறம் மிருணாவின் இல்லத்தினர் அமர்ந்திருந்தனர். மிருணா அசோக்கின் தோழமைகளோடு ஓரமாக நின்றிருக்க கூட்டத்தில் ஒருவர் பேச ஆரம்பித்தார்.

“என்ன பங்கஜம். திடீர்னு இப்படி ஒரு ஏற்பாடு பண்ணியிருக்க. பிள்ளைங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டீயா?” எனக் கேட்டார். “நம்ப பிள்ளைங்க. நம்ப பேச்சை மீறி என்ன பண்ண போறாங்க. பையனுக்கு அடிக்கடி லீவு கிடைக்கிறது இல்லண்ணா. அதான் ஊரறிய பேசிக்கிட்டா அப்பறம் பொறுமையா கல்யாணம் பண்ணிக்கலாம்னு.” என்றார் பங்கஜம்.

“அப்ப சரி.” என்றவர் மேற்கொண்டு பேசுவதற்குள் வாசலில் கார் வந்து நிற்க, சந்திரிகாவின் வீட்டினர் அதிலிருந்து இறங்கினர். எல்லோரும் திகைப்பாக பார்க்க, சந்திரிகா சென்று, “வாங்கப்பா. வாங்கம்மா.” என அழைத்தாள். அவர்களும் உள்ளே வந்து அமர, “சாரிங்க கொஞ்சம் தாமதமாகிடுச்சு.” என்றார் சக்கரவர்த்தி.

“இல்லல்ல சரியான நேரத்தில்தான் வந்திருக்கிறீங்க. வாங்க.” என அழைத்தவர் பங்கஜமே தான். நடப்பதை கண்டு தோழமைகள் அனைவரும் ஆச்சர்யப்பட, “இங்க என்ன நடக்குது.” என தரணி கேட்டே விட்டான்.

சத்யா, “பேசாம இரு தரணி.” என்றவுடன் அனைவரும் அமைதியாகி அங்கு நடப்பதை கவனித்தனர். “சரிங்கம்மா. உறுதி பத்திரம் வாசிக்கலாமா.” என பெரியவர் ஒருவர் கேட்க, “வாசிங்க.” என்றார் பங்கஜம்.

அசோக்கின் பெற்றோர் பெயர் கூறி இவர்களின் மகனுக்கும், சென்னையை சேர்ந்த சக்கரவர்த்தியின் குமாரத்தி சஞ்சனாவிற்கு திருமணம் செய்வதாக பெரியோர்களின் முன்னிலையில் முடிவு செய்யப்படுகிறது. என படித்தவர், அதன் நகலை சக்கரவர்த்தியிடமும், மிருணாவின் தந்தை தனவேலிடமும் கொடுக்க இருவரும் மகிழ்வோடு அதனை பெற்றுக் கொண்டனர்.

அசோக் நடப்பது புரியாமல் திகைத்து நிற்க, சஞ்சனாவிற்கோ மகிழ்ச்சியில் விழியோரம் நீரே வந்து விட்டது. அவர்களின் காதல் கைகூடியதை கண்டு தோழமைகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பிறகு சம்பிரதாயங்கள் முடிந்து அனைவரும் வீட்டிற்குள் வர வந்தவர்களை வரவேற்றனர் பங்கஜமும், மிருணாவின் தாய் செண்பகமும்.

வீட்டிற்கு வந்ததும் தனது அன்னையை கட்டிக் கொண்ட அசோக், “ரொம்ப தேங்க்ஸ்மா. நான் ரொம்ப பயந்துட்டேன்.” என்க, பங்கஜம்,”உன்னை பத்தி எனக்கு தெரியாதாடா. எல்லாத்துக்கும் உன் ஃப்ரண்ட் தான் காரணம். போய் அவனுக்கு சொல்லு உன் நன்றியை.” என அவனை அனுப்பி வைத்தார்.

சத்யாதான் இதற்கெல்லாம் காரணம் என தெரிந்து பெரியவர்கள் எல்லாரும் வீட்டிற்குள் இருக்க சிறியவர்கள் அனைவரும் தோட்டத்தில் இணைந்தனர். “இது எப்படினு தெரியலன்னா எனக்கு தலையே வெடிச்சிடும். ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்.” என சைந்தவியே ஆரம்பிக்க, “சொல்றேன். சொல்றேன். கூல்” என்ற சத்யா வீட்டில் நடந்ததை நினைவு கூர்ந்தான்.

சனிக்கிழமையும் விடுப்பு எடுத்துவிட்டு காலையில் கிளம்பி மதிய வேளையில் அசோக்கின் வீட்டை அடைந்தனர் சத்யாவும், உதய்யும். அதே நேரம் வீட்டிற்குள்ளிருந்து பங்கஜத்தின் குரல் கேட்டது. “அண்ணா. எப்பவும் போல இப்பவும் அவன் ஏதாவது காரணம் சொல்வாண்ணா. ஆனா இந்த முறை கல்யாணம் நடந்தே ஆகனும். மிருணாதான் இந்த வீட்டுக்கு விளக்கேத்த வரணும் அவ்ளோதான்” என்றார் அழுத்தமாக.

“நீ சொல்றது சரிதான் பங்கஜம். ஆனா மார்கழி போகட்டும். தையில கல்யாணத்தை வைச்சிகிடுவோம். நாங்க என்ன முடியாதுன்னா சொல்ல போறோம்.” என்ற தனவேல் தனது மனைவியை பார்க்க அவரும் சரியென்றார்.

“அது சரிதான். ஆனா நம்ப கோவில்ல வைச்சு பேசி முடிச்சிட்டா. மனசுக்கு ஒரு நிம்மதியா போய்டும். கோவில்ல வைச்சு பேச மார்கழில்லாம் பார்க்க வேண்டாம்னா அவனுக்கும் அடுத்த லீவு எப்பனு தெரியாது.”  என பங்கஜம் கூற அதற்கும் மிருணாவின் பெற்றோர் ஒப்புக் கொள்ளவும்தான் பங்கஜத்திற்கு மூச்சே வந்தது.

முதல்நாள் இரவு அசோக்கையும், சஞ்சனாவையும் தோட்டத்தில் வைத்து பார்த்ததில் இருந்தே மனம் ஒருவித சஞ்சலத்திலே இருந்தது. ஏதோ சரியில்லை என தோன்றினாலும் மிருணாவை விட்டுக் கொடுக்க கூடாது என்ற எண்ணமே பெரிதாக தோன்றியது.

அதற்காகவே தான் அவர்கள் அனைவரும் கிளம்பிய பின், தனது அண்ணனை அழைத்து இதெல்லாம் பேசி விட்டார். நடக்க போகும் விபரீதத்தை உணர்ந்த சத்யா, உதய்யுடன் உள்ளே வர அவனை யாரென்று தெரியாமல் பார்த்தார் பங்கஜம். பிறகு சத்யாவே, “நாங்க அசோக்கோட ஃப்ரண்ட்ஸ் மா. இவன் உதய், நான் சத்யா.” என அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“அடடே வாங்கப்பா. அசோக் உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கான். நீங்க வரதா அவன் சொல்லவே இல்லையே.” என இழுத்தார் பங்கஜம். “இல்லம்மா. நாங்க நாளைக்கு தான் வரதா இருந்தது. அதனால சொல்லியிருக்க மாட்டான். சாரி நீங்க ஏதோ பேசிட்டு இருந்தீங்க.  நாங்க வந்து தொந்தரவு பண்ணிட்டோம்.” என்றான் உதய்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல. எல்லாம் அசோக் கல்யாணத்தை பத்திதான். நாளைக்கே முடிவு பண்ணிடலாம்னு பேசிட்டு இருந்தோம்.” என்றவாறே, அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார் பங்கஜம். “இது அசோக்குக்கும், மிருணாவுக்கும் தெரியுமாம்மா?” எனக் கேட்டான் சத்யா.

“தனியா என்ன கேட்கறது. ஏற்கனவே முடிவு பண்ணது தானே.” என்றார் செண்பகம் அசட்டையாக. “நீங்க அவங்களை பெத்தவங்க. அவங்க வாழ்க்கைல்ல எல்லா முடிவும் எடுக்க உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா நீங்க எடுக்கற முடிவால அவங்க சந்தோஷம் போயிட்டா. அதுக்கப்பறம் அதனால எந்த உபயோகமும் இல்லையே மா.” என்றான் உதய்.

“என்ன தம்பி சொல்றீங்க. என் பொண்ணுக்கும், மருமவனுக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்கலன்னா. அப்படில்லாம் இல்ல தம்பி. நீங்க ஏதோ தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க” என்றார் தனவேல்.

“இல்லங்க பிடிக்கறதுக்கும், கல்யாணம் பண்ணிக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நம்ப வீட்ல நம்ம கூட இருக்கற எல்லார் மேலயும் நமக்கு ஒரு பாசம் இருக்கும். அதுதான் அசோக்குக்கு மிருணா மேல இருக்கே தவிர அவனுக்கு கல்யாணம் பண்ண இஷ்டமில்ல.

நான் நேரடியாகவே சொல்றேன். அசோக் வேற ஒரு பொண்ணை தான் விரும்பறான். மிருணாவை இல்ல.” என்றான் சத்யா. “அதுதான் எப்பவும் இல்லாம புதுசா ப்ரண்ட்ஸ்னு இவ்ளோ பேர கூட்டிட்டு வந்திருக்கானா, காதலிக்கற பொண்ணை மட்டும் தனியா கூட்டிட்டு வர முடியாதுனு.

நேத்து ராத்திரி பார்த்த போதே நான் நிக்க வைச்சு கேட்டு இருக்கனும். நம்ப பையன் அப்படில்லாம் பண்ண மாட்டானு நம்புனது என் தப்பு தான். சரிப்பா. நீ சொல்றதெல்லாம் சரின்னே வச்சுக்கலாம். ஆனா இவனைதான் கல்யாணம் பண்ணிக்க போறோம்னு இந்த மிருணா பொண்ணு ஆசையை வளர்த்து வைச்சிருக்கே, அதுக்கு என்ன பதில் சொல்ல முடியும்” எனக் கேட்டார் பங்கஜம்.

“அசோக்குக்கு மட்டுமில்ல. மிருணாவுக்கும் அசோக்கை கட்டிக்கறதுல உடன்பாடு இல்ல. இதை நானே மிருணாகிட்ட நேரடியாக கேட்டுட்டு தான் சொல்றேன். ஒவ்வொரு முறையும் நீங்க கல்யாணம் பேசறப்ப அவன் மறுக்காததுக்கு காரணமே மிருணாதான். எப்படியாவது அவ படிக்கனும்னு தான் இப்படி தள்ளி போட்டுட்டு வேலை வேலைன்னு அலையறான்.” என்ற சத்யா அசோக்கின் எண்ணத்தையும் கூறினான்.

இது அனைத்துமே தனவேலுக்கு புதிய செய்தி. தனது தங்கையும், மனைவியும் ஒற்றுமையாக இருப்பது கண்டு அவர் பெருமை படாத நாளே இல்லை. இதே பாசம் கடைசி வரை இருக்கட்டும் என்றுதான் இந்த திருமண ஆசைக்கு உடன்பட்டார்.

ஆயினும் வேறொருத்தியை மனதில் நினைத்திருக்கும் மணாளனுக்கு தனது மகளை கொடுக்க எந்த தந்தையின் மனம் ஒப்பும். ‘மகளது வாழ்வை பற்றி யோசிக்க மறந்து விட்டோமே.’ என நினைத்தவர், பங்கஜத்திடம் “அசோக் காதலிக்கறது தெரிஞ்சு தான் இப்ப நீ கல்யாண பேச்சு எடுத்தியா?” எனக் கேட்டார்.

“அப்படி இல்லண்ணா. அவன் காதலிக்கறதுலாம் எனக்கு தெரியாது. அந்த பொண்ணு மேல ஏதோ ஆசை இருக்குமோனு தோணுச்சு. அதான் அவனுக்கு முன்னாடி நாம பேசி முடிச்சிடலாம்னு நினைச்சேன்.” என்றார் பங்கஜம்.

பிறகு சஞ்சனாவை பற்றிய விவரங்களை கூறிய சத்யா, சந்திரிகா வீட்டினரையும் அவர்களிடம் பேச வைத்தான். அவர்களுக்கும் சஞ்சனாவையும், அவளது குடும்பத்தையும் பிடித்திருக்க அசோக்கின் ஆசைப்படியே அவனது திருமணம் நடக்கட்டும் என அவர்களும் முடிவு செய்தனர்.

அப்போது பங்கஜம்தான், “என்கிட்ட எதையுமே மறைச்சதில்லன்னு பெருமை பேசுவான். இப்போ எவ்ளோ பெரிய விசயத்தை மறைச்சிட்டான் பாருங்க அண்ணா. அவன் மட்டும்தான் என்னை அதிர்ச்சி ஆக்குவானா. நாளைக்கு அவனுக்கு இருக்கு.” என்றார் பங்கஜம்.

“நல்ல காரியத்தை தள்ளி போட வேண்டாம். நாம பேசினபடியே அசோக்கோட கல்யாணத்தை பேசி முடிச்சிடலாம்.” என்றார் தனவேல். “இல்லண்ணா. முதல்ல மிருணாவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை முடிச்சிடலாம். அதுக்கு அப்பறம் அசோக் கல்யாணத்தை வைச்சிக்கலாம்” என்றார் பங்கஜம்.

“அவ சின்ன பொண்ணு. இப்பதான் காலேஜ் படிக்கறா. அவ படிச்சு முடிச்சதும் அவளுக்கு பாத்துக்கலாம். அசோக்கும் வயசாகுதில்ல. நீ எதுவும் பேசாத. நாங்க சொல்றதை கேளு. என்ன செண்பகம்?”  தன் மனைவியை கேட்க, “எல்லாமே உங்க இஷ்டம் தானே. இனிமேல நான் சொல்ல என்ன இருக்கு.” என்றார் செண்பகம்.

தனது மகளை பக்கத்திலே வைத்து நன்றாக பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆசையில் அசோக்கை தனது மருமகனாகவே நினைத்து விட்டார். அது நடக்கவில்லை எனும் போது வருத்தம் வருவது இயல்புதானே.

ஆனால் நாளடைவில் அது சரியாகிவிடும் என்பதை உணர்ந்த தனவேல் மீண்டும் சக்கரவர்த்திக்கு அழைத்து பேசியதோடு நாளை கோவிலுக்கு செல்வதை பற்றி முடிவும் எடுத்துக் கொண்டனர். பங்கஜத்தின் வேண்டுகோளுக்கிணங்க யாருக்கும் எதுவும் சொல்லக் கூடாது எனவும் முடிவெடுத்து விட்டனர்.

இது எல்லாமே தோழமைகள் வீட்டிற்கு வருவதற்கு முன்பே நடந்து விட்டதால் மற்றவர்கள் அறியவில்லை. சத்யா நடந்ததை கூறி முடிக்கவும், அசோக், சத்யாவையும், உதய்யையும் கட்டிக் கொண்டு “தேங்க்யூடா” என்றான் மகிழ்வோடு.

“ஏதோ அந்த நேரத்தில நாங்க வீட்டுக்கு வந்ததால தெரிஞ்சது. இல்லன்னா இன்னைக்கு கதையே வேற மாதிரி இருந்திருக்கும்” என்றான் உதய். அப்போது சந்திரிகா, “எல்லாம் சரிதான். ஆனா மிருணா அசோக்கை காதலிக்கலன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள்.

அதற்கு அசோக், “அதை நான் சொல்றேன். ஆரம்பத்தில் உங்க மேலலாம் கோபமா இவன் இருந்தப்பவே சஞ்சனாவை நான் லவ் பண்ணிட்டு இருந்தேன். ஆனா இவனுக்கு அது பிடிக்கவே இல்ல. ஒழுங்கா மிருணாவை கல்யாணம் பண்ணிக்கன்னு மிரட்டிட்டே இருப்பான். அப்பதான் மிருணா படிக்க தான் நான் இப்படி பண்றேனு அவனுக்கு சொன்னேன்.

ஆனா சத்யா நம்பவே இல்ல. மிருணாவுக்கு ஃபோன் பண்ணி குடுன்னு சொல்லி பேசினான். அப்ப மிருணா, “மாமா மேல எனக்கு இருக்கிறது பாசம் தான்னா. அவர் மேல எனக்கு காதல்லாம் இல்லனு சொல்லவும் தான் அப்பறம் என்னோட காதலுக்கே ஓகே சொன்னான்.” என்றான் அசோக்.

அதை நினைத்து சந்திரிகா பெருமிதமாக உணர்ந்தாள். தரணிக்கோ மனது மிகவும் லேசாக இருந்தது. அவன் ஆர்வத்தோடு மிருணாவை காண அவளோ இவனை துளியும் கண்டு கொள்ளவில்லை. எல்லாரும் பேசி முடித்து உள்ளே வந்தபின் முற்றத்தில் அமர உள்ளே விருந்து தயாராகி கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அனைவரும் உணவருந்தலாம் என எழும்போது வாசலில் ஒரு உயர்ரக மகிழுந்து ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்களை கண்டு அனைவரின் விழிகளும் ஆச்சர்யத்தில் விரிந்தன.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்