562 views

 

                மறுநாள் விடிவதற்கு முன்பே அனைவரும் பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தனர். அருகிலுள்ள சுற்றுலாத் தலமான போடி மெட்டுக்கு செல்வதற்காக. பங்கஜமும் காலையிலே எழுந்து அவர்களுக்கு தேவையான உணவை தயாரித்து தந்திருக்க மிருணாவையும் உடன் அழைத்துக் கொண்டு கிளம்பினர்.

போடி மெட்டு, தேனி மாவட்டத்தின் ஒரு அழகான சுற்றுலா தலமாகும்.. அதிகாலை வேளையிலே இவர்கள் கிளம்பியதால் செல்லும் வழி முழுக்க மேகக் கூட்டங்கள் பரவி வெண்மலையாக காட்சியளித்தது. ஆங்காங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு நேராக புலியூர் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

ஹய்யோ. சூப்பரா இருக்கு இந்த பிளேஸ்.” என சைந்தவி குதூகலிக்க ஆண்களோ நீருக்குள் பாய்ந்தனர். சில பல நிமிடங்களை அங்கு செலவிட்டு ஆனந்தமடைந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர். அங்கிருந்த ஒரு மலை வாழ் கிராமத்திற்குள் அழைத்து சென்றான் அசோக்.

அவர்கள், இவர்களை அன்போடு வரவேற்று திணை, தேன் மற்றும் பழ வகைகளை கொடுத்து உபசரிக்க, அவர்களுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் பிடித்திருந்தது. கிளம்பும் போது ஏலக்காய், மிளகு போன்ற அங்கு விளைந்த பொருட்களை அவர்கள் கொடுக்க, இவர்கள் அதற்கு பணம் கொடுத்தே வாங்கி கொண்டனர்.

பிறகு தேயிலை தோட்டங்கள் நிரம்பிய பகுதிக்கு சென்று அங்கே ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு நடந்து செல்ல மிகவும் அற்புதமாக இருந்தது. ஒருபுறம் தேயிலை தோட்டங்களாக இருக்க சற்று தள்ளி மற்றொரு இடத்தில் காபி பயிர்களை பயிரிட்டிருந்தனர்.

அதையெல்லாம் கண்டு ரசித்துக் கொண்டே செல்ல, சற்று பின்தங்கிய அஸ்வின் அனுவையும் தன்னோடு வைத்துக் கொண்டு அவளோடு கரம் கோர்த்து நடந்து வந்தான். அசோக்கும், சஞ்சனாவும் ஒரு புறம் சேர்ந்து கொள்ள தீபக், சைந்தவியோடு ஏதோ பேசிக் கொண்டே வந்தான்.

சந்திரிகாவுக்கு ஏதோ ஃபோன் வரவும் அவள் பேசிக் கொண்டே சற்று முன்னேறி சென்றாள். இறுதியாக தரணியும், மிருணாவும் இணைந்து நடந்து கொண்டிருக்க மிருணாவிற்கு தான் எதுவும் புரியாமல் ஏதோ யோசனையில் வந்து கொண்டிருந்தாள்.

என்ன மிரு. ஏதோ பலமான சிந்தனை போல.” எனக் கேட்டான் தரணி.

ம்ம் அதெல்லாம் ஒன்னுமில்ல. நீங்க எல்லாரும் எதுக்கு திடீர்னு இங்க வந்திருக்கீங்கனு யோசிச்சேன்.” என்றாள் மிருணா. தரணி, “ஏன் வரக்கூடாதா?” எனக் கேட்க, “இல்ல மாமா படிக்க ஆரம்பிச்சதுல இருந்து ஏதாவது திருவிழா இல்ல யார் வீட்லயாவது விசேஷம்னா மட்டும் தான் வரும்.

அப்பறம் என்கிட்ட கூட சத்யா, உதய்னு ரெண்டு பேருதான் ஃப்ரண்ட்ஸ்னு சொல்லிருக்காங்க. ஆனா இப்ப இவ்ளோ பேர கூட்டிட்டு வந்திருக்காங்க. அப்பவும் அவங்க ரெண்டு பேர் வரலயே. அதான் யோசிச்சேன்.” என்றாள் மிருணா.

அவங்க மூலமாதான் நாங்க எல்லாரும் அசோக்குக்கு ஃப்ரண்ட்ஸ் ஆனோம். அது ஒரு பெரிய கதைஎன்றவன் தங்களுக்கிடையே உள்ள நட்பு பற்றி கூறினான். அதைக் கேட்ட பின் அவள்,அசோக் மாமா, சஞ்சனா அக்காவை லவ் பண்றாங்களா?” எனக் கேட்டாள் மிருணா.

அவளது குரலில் என்ன இருந்தது என்பதை தரணியால் கணிக்க முடியவில்லை. ஆனால் இவன் பதிலுக்கு, “நீ உங்க மாமாவை காதலிக்கறீயா?” எனக் கேட்டான். “நான் கேள்வி கேட்டா திருப்பி கேள்வியா? இதுக்கு ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?” எனக் கேட்டாள் மிருணா.

ஏனோ அது தரணிக்கு உவப்பானதாக இல்லை என்பதை அவனது முகமே காட்டிக் கொடுத்தது. அவனது முகம் வாடியதை கண்டதும்,சஞ்சனா. உங்களுக்கு குளோஸ் ஃப்ரண்ட் இல்ல.” என்றாள். தரணி, “ஆமா. என்னோட இன்னொரு சிஸ்டர் மாதிரி.” என்றான்.

அவளுக்காக தான் கவலைப்படுகிறானோ என நினைத்தவள்,நான் மாமாவை லவ் லாம் பண்ணல. ஆனா சின்ன வயசில இருந்தே வீட்ல அப்படிதான் பேசி வைச்சிருக்காங்க. என்ன காரணமோ தெரியல மாமாக்கு அந்த மாதிரி என் மேல விருப்பமே வரல. இதை நான் சொன்னாலும் கல்யாணம் ஆனா சரியா போய்டும்னு சொல்றாங்க.” என்றாள் மிருணா.

உன்ன பிடிக்காமலாம் இல்ல கூடவே இருந்ததால ஒரு சிஸ்டர் பீல் தானே இருக்கும். அதுனால கல்யாணம் வேண்டாம்னு நினைச்சிருப்பாரு புரோ. சரி உனக்கு அப்ப அவர் மேல விருப்பம் இருக்கா?” எனக் கேட்டான் தரணி.

என் விருப்பத்தை சொன்னா மட்டும் என்ன நடக்க போகுது. எது நடக்குதோ அதை ஏத்துக்கிட்டு வாழ பழகிக்கனும்.” என்ற மிருணா விறுவிறுவென மேலே நடக்க அவளின் பதிலில் தரணிதான் குழம்பி நின்றான்.

ஆனால் அங்கிருந்து வருவதற்குள் தரணி அசோக்கிடம், மிருணா கேட்டதை கூறி விட்டான். பிறகு அனைவரும் வீடு வந்து சேர களைப்பாக இருந்ததால் சீக்கிரமாகவே உறங்க சென்றனர்.

அடுத்த நாள் காலை வெள்ளிக்கிழமை அதே போல நேரமாகவே எழுந்து கிளம்பி தேனியின் மற்றொரு சிறப்பான மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு சென்றனர். அதன் முகப்பிலே இருந்த மங்கள கண்ணகி கோவிலுக்கு முதலில் செல்ல,இவங்க மதுரையை எரித்ததாக சொல்ற கண்ணகியா?” எனக் கேட்டான் அஸ்வின்.

ஆமா ப்ரோ. அதே கண்ணகிக்கு இங்க கோவில் கட்டியிருக்காங்க. ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. இவங்க அதற்கப்பறம் தெய்வமா ஆகிட்டதா ஒரு நம்பிக்கை இருக்கு.” என அந்த கோவிலில் சிறப்புகளை அசோக் அனைவருக்கும் விளக்க, சாமி கும்பிட்டு வெளியே வந்தனர்.

பிறகு அங்கிருந்து மலையேற்றமாகவே அந்த வன உயிரின சரணாலயத்தை சுற்றி பார்த்தனர். அப்போது அசோக் மிருணாவிடம் தானும் சஞ்சனாவும் காதலிப்பதை நேரடியாகவே கூறி விட்டான்.

நீங்க இங்க வந்ததுல இருந்தே எனக்கு அந்த சந்தேகம் இருந்தது மாமா. முதல் நாள் ராத்திரி நீங்களும், அக்காவும் பேசினதை கேட்டு கன்பார்ம் பண்ணிட்டேன். வாழ்த்துகள்.” என்றாள்.

உனக்கு எதுவும் கஷ்டமா இல்லையா. மிருணா?” என சஞ்சனா கேட்க,இதுல கஷ்டப்பட என்ன இருக்குக்கா. எனக்கு மாமா மேல அந்த மாதிரி எண்ணம் எப்பவும் வந்ததில்ல. அதோட இந்த போலீஸ்காரங்களோட குடும்பம் பண்றதெல்லாம் போர்ப்பா. இப்பவே ஆறு மாசத்துக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வருவாங்க.” என சலித்துக் கொண்டவள்,ஆனா, அத்தையையும், அப்பாம்மாவை நினைச்சு தான் கஷ்டமா இருக்கு.” என்றாள் மிருணா.

அவளை மென்மையாக அணைத்துக் கொண்ட சந்திரிகா, “அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். விடுஎன சமாதானம் கூறினாள். தரணிக்கு நேற்றிலிருந்து ஏற்பட்ட குழப்பம் சற்றே விலக மனதிற்கு சற்று இதமாகவே இருந்தது.

இருந்தாலும் மிருணாவிடம் தனியாக பேசும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது, “நீ வேற யாரையாவது லவ் பண்றீயா மிரு.” எனக் கேட்டு வைக்க, அவள் அவனை ஒரு மாதிரி பார்த்தாள். “இதெல்லாம் நீங்க ஏன் கேட்கறீங்க. பண்றேனு சொன்னா கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களா? இல்லனு சொன்னா மாப்பிள்ளை பார்க்க போறீங்களா?” என வெடுக்கென கேட்டாள்.

பண்றேனு சொன்னா என்ன பண்றதுனு தெரியல. ஆனா இல்லனு சொன்னா உன்ன லவ் பண்றதா சொல்லனும்னு நினைச்சேன்.” என தரணி கூற, பின்னால் இருந்துஓகோ.” என கோரசாக சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் மொத்த பேரும் இவர்களை பார்த்து நின்றிருந்தனர். “அண்ணா. நீ இப்படில்லாம் கூட பேசுவியா?” என சைந்தவி கேட்க,கடைசில நீயும் மாட்டிக்கிட்டியா?” என்றான் அஸ்வின்.

அசோக் என்ன செய்வதென்று பார்த்திருக்க, சந்திரிகாவோ குழப்பமாக நின்றிருந்த மிருணாவை தான் பார்த்தாள். அவளை தனியே அழைத்து சென்ற சந்திரிகா, “என்னாச்சும்மா. ஏன் டல்லாகிட்ட?” எனக் கேட்க,அவர் அப்படி கேட்பாருன்னு நினைக்கவே இல்லக்கா.” என்றாள்.

உன் மனசுல வேற யாராவது இருக்காங்களா?” என சந்திரிகாவும் கேட்கஅதெல்லாம் எதுவும் இல்லக்கா. வீட்ல என்ன சொல்றாங்களோ அதுதான் அக்கா. நானே இப்ப மாமா விசயத்துல என்ன நடக்கும்னு யோசனைல்ல இருக்கேன்.” என்றதில் அவளது பயத்தை புரிந்து கொண்டாள் சந்திரிகா.

இத்தனை வருடங்களாக அசோக்குக்கும், தனக்கும் திருமணம் என நினைத்து கொண்டிருக்கும் பெற்றோர்கள் அசோக்கின் இந்த முடிவை எவ்வாறு எடுத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் இருப்பவளை தரணியின் பேச்சு இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டதுஎன நினைத்தவள்,

சரிடா. ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ பொறுமையா யோசிச்சு தரணியை உனக்கு பிடிச்சிருக்கா. இல்லையானு சொல்லு. உன்னை யாரும் கட்டாயப்படுத்த மாட்டோம். அதே நேரம் அசோக் பிரச்சனையை நீ மனசுல வைச்சுக்காத. சரியா.” என அவளுக்கு ஆறுதல் சொன்னவள் தரணியையும் கடிந்து கொண்டாள்.

அதன்பிறகு அங்கேயே சற்று நேரம் சுற்றி விட்டு வீட்டிற்கு வர இரவாகிவிட்டது. வீட்டில் வந்து பார்த்தால் சத்யாவும், உதய்யும் வந்திருக்க சந்திரிகாவிற்கு ஆனந்தமாகி போனது.

முகம் கொள்ளா புன்னகையோடு, “என்ன அதிசயம் கலெக்டர் சார் ஒரு நாள் முன்னாடி வந்துட்டாரு?” எனக் கேட்க, “அது என் செல்ல பொண்டாட்டியை பார்க்காம இருக்க முடியலனு மனசு சொல்லுச்சா. அதான் கிளம்பி வந்துட்டேன்.” என்றான் சத்யா அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

பிறகு இரவு உணவிற்கு பிறகு, பங்கஜம் வந்துநாளைக்கு காலைல எங்க குல தெய்வ கோவில்ல பூஜை இருக்குப்பா. நீங்க எல்லாரும் கண்டிப்பா கலந்துக்கனும். சீக்கிரமா தூங்குங்க.” எனக் கூறி செல்ல அசோக் தனது அன்னையை பின்தொடர்ந்தான்.

அம்மா. உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்மா.” என்றான் அசோக். “எதுனாலும் நாளைக்கு கோவிலுக்கு போய்ட்டு வந்து பேசிக்கலாம்டா. நீ போய் தூங்கு. அப்பதான் நேரமா எழுந்துக்க முடியும்.” என்றார் பங்கஜம்.

அம்மா. என்னம்மா. அதான் முக்கியம்னு சொல்றேன்ல.” என்றும் கூட அவர் அவனுடன் பேசாமல் சென்று விட எப்படி தனது காதலை பற்றி கூறுவது என தெரியாமல் திகைத்து போனான் அசோக். மறுநாள் காலையில் வீடே அல்லோகலப்பட்டது.

அசோக்கின் உறவினர்கள் சிலரும் வீட்டிற்கு வந்திருக்க, “ம்மா. பூஜைக்கு எதுக்கும்மா இவ்வளவு பேரு?” எனக் கேட்டான் அசோக். “நீ ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறைதான் வீட்டுப்பக்கம் வர. நம்ப பழக்கம்லாம் உனக்கு என்ன தெரியுது. பேசாம போய் ரெடி ஆகற. இந்தா இதை போட்டுக்க.” என புது துணிமணிகளை கொடுக்க,எதுக்கும்மா புது டிரஸ்லாம்.” எனக் கேட்டான் அசோக்.

சும்மா சும்மா கேள்வி கேட்காம போய் கிளம்புடா.” என அவனை பத்தி விட, வேஷ்டி மேல் மெரூன் நிறத்தில் சட்டை போட்டு அம்சமாக ரெடி ஆகி வந்தான் அசோக். கோவிலுக்கு என்பதால் எல்லோரையும் மிருணாவின் தந்தை வேஷ்டி கட்ட சொல்ல அதன்படியே ஆண்கள் அனைவரும் கட்டியிருக்க பெண்கள் அனைவரும் பட்டுப்புடவை கட்டி தயாராகி கொண்டிருந்தனர்.

பிறகு அனைவரும் கிளம்பி அசோக்கின் குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு வந்து சேர சொந்தங்கள் எல்லோரும் சேர அதுவே ஐம்பது பேர்களுக்கு மேல் ஆனது. சற்று நேரத்தில் பொங்கல் வைத்து பூஜை செய்திட, அதன்பிறகு கோவில் மண்டபத்திற்கு அனைவரையும் கூட்டி வந்தார் பங்கஜம்.

அசோக், “அம்மா. அதான் பூஜை முடிஞ்சதில்லஅப்பறம் கிளம்பாம ஏன் இங்க வரோம். யாருக்காவது பங்சன் நடக்குதா?” எனக் கேட்க, அதை கேட்ட உறவினர் ஒருவர், “என்னக்கா. தம்பிக்கிட்ட ஏதும் சொல்லலயா? இன்னைக்கு தம்பிக்கு தானே பொண்ணு உறுதி பண்றீங்க.” எனக் கேட்டு வைக்க, அசோக்கோ அதிர்ச்சி ஆனான்.

பங்கஜம், “அவன் சும்மா கிண்டல் பண்றானுங்க. நீங்க போங்க.” என்றவர், “ஆமாடா உனக்குதான் பங்சனு. ஆறு மாசத்துக்கு ஒருமுறை வர அதான் இப்பவே உறுதியாவது பண்ணிட்டு அப்பறம் கல்யாணத்தை வச்சுக்கலாம்னு உங்க மாமாகிட்ட சொல்லி ஏற்பாடெல்லாம் பண்ணியாச்சு.” என்றார் அசோக்கிடம்.

இப்ப என்ன அவசரம். அதோட மார்கழில்ல யாராவது நல்ல காரியம் பண்ணுவாங்களா?” எனக் கேட்டான் அசோக். “அதெல்லாம் நான் கேட்டுட்டேன் டா. அதுனால தான் நிச்சயம் பண்ணல. நாம இரண்டு குடும்பத்துல பேசி வைச்சிருக்கறத இப்ப ஊரறிய பேசி முடிவு பண்றோம் அவ்ளோதான்.

நீ சும்மா ஏதாவது காரணம் கண்டுபிடிக்காம வந்து சபையில உட்காரு. நான் போய் மிருணாவை பார்க்கறேன்.” என்று அவர் வேறு புறம் சென்றுவிட, அசோக்தான் என்ன செய்வதென தெரியாமல் நண்பர்களிடம் விசயத்தை பகிர, அவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

சஞ்சனாவோ எதையோ பறி கொடுத்தது போல சோகத்தில் இருக்க, அசோக்கோ தவித்து கொண்டிருக்க, தரணியோ இதை எப்படி தடுப்பது என்ற யோசனையில் இருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்