583 views

 

               தேனி… தமிழகத்தின் தென் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ள ஒரு அழகான வாழ்விடம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமமே அசோக்கினுடையது.

விடியற்காலை வேளையில் இவர்கள் அந்த ஊரை சென்றடைய அந்த வேளையிலே பெண்கள் எழுந்து வாசலில் அழகிய மாக்கோலங்கள் போட்டு பூசணி பூவை நடுவில் வைத்து அழகுபடுத்தியிருந்தனர். சென்னையின் நெரிசல் நிறைந்த பகுதிகளை பார்த்து வளர்ந்தவர்களுக்கு அந்த ஊரின் பசுமையும், அழகும் புதிய புத்துணர்வை அளித்தது.

அசோக் வீட்டின் முன்பு காரை நிறுத்த அவர்கள் வீட்டிலும் பெரியதாக தெருவை அடைத்தவாறு வண்ணக் கோலம் போடப்பட்டிருந்தது. காரில் இருந்து முதலில் அசோக் இறங்க,அத்தை அவிங்க வந்துட்டாக போல?” என குரல் கொடுத்துக் கொண்டே ஒரு பெண் ஓடி வந்தாள்.

அசோக்கை பார்த்ததும், “மாமா. நல்லாயிருக்கீகலா. இளைச்சு போன மாதிரி தெரியுது. சரியா சாப்பிடறது இல்லையா?” என பொறுப்புடன் நலம் விசாரிக்கவே அவள்தான் மிருணா என அனைவருக்கும் புரிந்தது.

அதெல்லாம் நல்லாத்தான் இருக்கேன். இவங்க எல்லாரும் என்னோட ப்ரண்ட்ஸ்.” என மற்றவர்களை கைகாட்ட அவள் அனைவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். முதலில் அவள் சென்றதும் மற்றவர்கள் பின்தொடர, கடைசியாக சென்ற சைந்தவியை பார்த்து,ஹேய். லக்கேஜ்லாம் யாரு எடுத்துட்டு போவா?” என தரணி குரல் கொடுக்க,

வேற யார் சார். அப்சலூட்லி நீங்களே தான்.” என பழிப்பு காட்டியவள் உள்ளே செல்ல, தரணிதான் தலையில் கைவைத்து சீட்டில் சாய்ந்து கொண்டான். அதற்குள் உள்ளே சென்ற சந்திரிகா,யாருமே லக்கேஜ் எடுத்துட்டு வரலயா. நான் போறேன்.” என எழ, அவளிடம் மிருணா,இருங்கக்கா. நான் போறேன்.” என வேகமாக வெளியில் வந்தாள்.

இந்தாருங்க டிரைவரு. என்ன அதுக்குள்ள அலுப்பா. வாங்க இந்த பெட்டில்லாம் எடுத்து உள்ள வைங்க.” என மிருணாவின் குரல் கேட்க, அதை கேட்டு தரணியோ முழித்தான். அவன் யாரை கூறுகிறாள் என சுற்றிலும் பார்க்க மீண்டும் மிருணாவே, “உங்களை தான் டிரைவர் சார் வாங்க. என்ன சுத்தியும் பார்க்கறீங்க.” என இறக்கி விட்டதோடு,

அவனது தலையில் சில பெட்டிகளை அடுக்கி விட்டு இரு பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அவனை அந்த கோலத்தில் கண்ட சஞ்சனா, “என்னடி உங்க அண்ணன் பொன்னுமணி படத்துல வர கார்த்தி மாதிரி வராரு.” என நக்கலடித்து சிரிக்க சைந்தவியும் சேர்ந்து சிரித்தாள்.

அசோக்கும், அஸ்வினும் வேகமாக சென்று அதை இறக்கிவிட அசோக், “ஹேய் மிருணா. நீதானே லக்கேஜ் எடுத்துட்டு வரேனு போன. அப்பறம் எதுக்கு இவர்கிட்ட குடுத்த?” எனக் கேட்டான். “ஏன் மாமா. இவரு டிரைவர்தானே. அதான் எடுத்துட்டு வர சொன்னேன்.” என மிருணா கூறவும், அனைவரும் சிரிக்க தரணி முகம் ஒரு மாதிரி போனது.

லூசு. இவரும் என் ஃப்ரண்ட்தான். தெரிலன்னா கேட்க வேண்டியதுதானே?” என அசோக் கோபித்து கொள்ள மிருணாவின் முகம் வாடியது. அதைக் கண்ட தரணி,இட்ஸ் ஓகே புரோ. தெரிஞ்சே பண்ணாலும் ஒன்னும் தப்பு இல்ல. அவங்க என்ன வேற ஏதாவது செய்ய சொன்னாங்களா. விடுங்க.” என அசோக்கிடம் கூறியவன்,

மிருணாவிடம், “சாரிங்க.” எனக் கூற,எங்க மாமா என்னை திட்ட எல்லா உரிமையும் இருக்கு. எங்களுக்கு நடுவால நீங்க எதுக்கு வரீங்க.” என வெடுக்கென கேட்டுவிட்டு உள்ளே செல்ல அதைக் கேட்டு சஞ்சனா துணுக்குற்றாள். அப்போது அசோக்கின் அன்னை பங்கஜம் அனைவரையும் வரவேற்று விட்டு அறையை காட்ட அனைவரும் அங்கு சென்றனர்.

சற்று நேரத்தில் தயாராகி வர, வரும் போதே நாட்டுக் கோழியின் ரச வாசனை அந்த முற்றத்தை நிறைத்தது. இவர்கள் வருவதற்குள் மிருணாவின் தந்தையும், தாயும் வந்திருக்க அவர்களும் அனைவரையும் வரவேற்றனர்.

அசோக்கின் வீடும், மிருணாவின் வீடும் எதிரெதிரே தான். இரண்டுமே பாரம்பரிய முறை வீடுகளாக இருந்தாலும் மிருணாவின் வீடு சற்றே பெரியதே. சிறு வயதில் இருந்தே இருவரும் ஒன்றாக பழகி வருவதால் உரிமையோடு சண்டை போடுவதிலிருந்து ஒற்றுமையாக இருப்பது வரை மிருணாவிற்கு எல்லாமே அசோக்தான்.

அதனால்தான் அவனையே வீட்டு மருமகனாகவும் ஆக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் மிருணாவின் தந்தைக்கு. ஆனால் இதை தெரிந்து கொண்டுதான் அசோக் வேலையை காரணம் காட்டி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறான்.
அவனுக்கு எப்போதும் மிருணா ஒரு தோழி போல தான். அவளை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணமே வந்ததில்லை.

உணவருந்தி முடித்ததும் சற்று நேரம் அனைவரும் பேசிக் கொண்டிருக்க,பார்க்க எல்லாரும் நல்ல பிள்ளைங்களா தெரியறீங்க. கூடிய சீக்கிரம் எங்க புள்ளைங்க கல்யாணம் வைக்க போறோம். அதுக்கும் நீங்க எல்லாரும் வரணும்.” என்றார் பங்கஜம்.

நாங்க இப்பவே கல்யாண விசயமா பேசத்தானே வந்திருக்கோம். அப்படீன்னு சொல்லிடவா?என சஞ்சனாவின் காதை கடித்தாள் சைந்தவி. “அம்மா. தாயே. கொஞ்ச நேரம் உன் திருவாயை மூடு.” என அவளை எச்சரித்த சஞ்சனாவின் பார்வையோ அசோக்கின் மீதே இருந்தது.

அசோக்கோ அதை கண்டு கொள்ளாமல்,அதெல்லாம் வருவாங்கம்மா. இவங்க இல்லாம எப்படி கல்யாணம் நடக்கும்?” என்றான் அசோக். இதுவரை திருமணம் என்றாலே பிடி கொடுக்காமல் இருந்தவன், இப்போது மகிழ்வாக பேசியதை கண்டு அவனது வீட்டினர் அனைவருக்கும் நிறைவாக இருந்தது.

பிறகு சாயங்கால வேளையில்அருகில் இருந்த மாந்தோப்பிற்கு அழைத்து சென்றான் அசோக். அஸ்வின்,பரவால்ல புரோ. உங்க ஊர் சூப்பரா இருக்கு.” என்க, அசோக் ஊரை பற்றி கூறிக் கொண்டே வந்தான்

இது மாம்பழங்கள் அதிகம் விளையும் ஒரு பகுதி, ஊரில் பெரும்பாலும் எல்லார்கிட்டயும் ஒரு சின்ன தோப்பாவது இருக்கும். இது மிருணாவோட அப்பாவுது.” என ஒரு தோப்பிற்குள் அழைத்து சென்றான்.

மிருணா, “நம்பளோடதுனு சொல்லுங்க மாமா. எங்க மாமா எப்பவுமே இப்படித்தான்.” என்றவள் மளமளவென ஒரு தாழ்வான மரத்தின் மீது ஏறி, அனைவருக்கும் மாம்பழங்களை பறித்து தந்தாள்.

இது மாம்பழ சீசன் இல்லையே. எப்படி இந்த மரத்துல பழம் இருக்கு.” என தரணி கேட்க,இப்ப மட்டும் இல்ல. வருஷம் பூரா இந்த மரம் காய்க்கும். இது இமாம்பசந்த் அப்படீங்கற ஒரு ஒட்டுரக பயிர் மூலமா வைச்சது.” என விளக்கம் கொடுத்தாள் மிருணா.

பரவால்லயே இதெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்க.” என சந்திரிகா பாராட்ட,அட நீ வேற சந்து. இந்த ஐடியாவை மாமாக்கு குடுத்ததே இந்ந அக்ரி ஆபிசர்தானே.” என்றான் அசோக். “ நீங்க அக்ரி படிக்கறீங்களா?” என அனு கேட்க, “ஆமாக்கா. இப்பதான் பைனல் இயர்.” என்றாள் மிருணா.

இது மட்டுமில்ல வயல்ல ஒரு பகுதி முழுக்க இவளே இயற்கை விவசாயம் பண்றேனு காய்கறி, பூச்செடில்லாம் வளர்க்கறா.” என்றவன் அந்த பகுதிக்கு அழைத்து செல்ல பலவிதமான வண்ண பூச்செடிகளை சுற்றி வண்ணத்துப்பூச்சிகள் பறந்து கொண்டிருக்க அந்த சூழலே மிக அழகாக இருந்தது.

மற்றவர்கள் அதை ரசித்து பார்த்துக் கொண்டிருக்க அசோக் அங்கிருந்த ஆட்களிடம் பேசிக் கொண்டே மீண்டும் தோப்பு பகுதிக்கு வந்தான். அதை கவனித்த சஞ்சனாவும் அங்கிருந்து நழுவி தோப்பிற்கு வர, அப்போது அவன் மட்டும் ஒரு மரத்தின் மீது சாய்ந்து நின்றிருந்தான்.

அசோக். நான் கொஞ்சம் உங்ககிட்ட பேசனும்.” என சஞ்சனா கூற, “என்கிட்ட பேச என்ன இருக்கு. போய் வேலையை பாரு.” என நகர்ந்தான் அசோக். சஞ்சனா அவனது கையை பிடித்து இழுக்க, அதே நேரம்மாமா. இளநீ வெட்டி தர இங்க ஆள் இருக்காங்களா?” என கேட்டுக் கொண்டே அங்கு வந்த மிருணா இவள் அசோக்கின் கையை பிடித்திருப்பதை கண்டு கொண்டாள்.

உடனே சஞ்சனாவின் கையை உதறி விட்டவன், “இதோ பார்க்கறேன்மா.” என அங்கிருந்து சென்று விட்டான். மிருணாவை பார்த்து சஞ்சனாவும் சங்கடத்தில் அங்கிருந்து சென்று விட மிருணாவிற்கு தான் சந்தேகம் வந்தது. பிறகு அனைவரும் வீட்டிற்கே வந்து விட, அவர்களது வீட்டு பெரிய முற்றத்தில் படுக்கை விரிக்கப்பட்டு அனைவரும் உறங்க சென்றனர்.

பௌர்ணமி நிலவு காய்ந்து கொண்டிருக்க முற்றத்தில் அதை பார்த்து ரசித்துக் கொண்டே ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமுமாக படுத்திருக்க, அவர்களோடே தூங்குவதாக மிருணாவும் இருந்து கொண்டாள்.

எல்லாருக்கும் சாரி. இங்க அவ்ளோ நிறைய ரூம்ஸ் இல்ல. அதான்.” என அசோக் தயக்கமாக கூற,அதான் நம்ப வீட்ல கொஞ்ச பேர் இருக்கட்டும்னு சொன்னேன்என்றாள் மிருணா. “என்ன புரோ நீங்க. இது எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா. எங்களுக்கு இதுதான் பிடிச்சிருக்கு. நாம அப்பப்ப லீவுக்கு இங்கையே வந்திடலாம்.” என்றான் தரணி.

ஆமா. ஒரு ஒரு தடவையும் நீயே டிரைவர் வேலை பாருண்ணா.” என சைந்தவி கிண்டலடிக்க, அனைவருக்கும் சிரிப்பு வந்தது. “ஹேய். சைத்தானே. சும்மா இரு. நீ வேறஎன அவளை பொய்யாக மிரட்டியவன், மிருணாவை பார்க்க அவளோ, “சாரி சார். நிஜமா வேணும்னு பண்ணல.” என்றாள்.

தரணி, “அதெல்லாம் ஒன்னுமில்லங்க. அப்பறம் இந்த சார், மோர்லாம் வேணாம். பேர் சொல்லியே கூப்பிடுங்க.” என்றான் தரணி. “அதெப்படிங்க நீங்க என்னையை விட எவ்வளவு பெரியவங்க. உங்களை போய் பேர் சொல்லி கூப்பிட முடியுமா?என்றாள் மிருணா.

அவ்வளவு வயசெல்லாம் இல்ல. உங்க அசோக் மாமாவை விட நான் வயசு கம்மிதான். வேண்ணா அவரையே கேளுங்க. பேசாம அவரை மாதிரியே என்னையும் மாமா இல்லனா மச்சினு கூப்பிடுங்க.” என்ற தரணிக்கு அதன் பொருள் பின்புதான் புரிந்தது.

உடனே அவனே,சரி எனக்கு தூக்கம் வருது.” எனக்கூறி படுத்துவிட, சைந்தவி தான் அவனை ஒரு மாதிரி பார்த்தாள். பிறகு நள்ளிரவில் சஞ்சனா பின்பக்கம் இருந்த துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து நிலவை கண்டு ஏதோ யோசனையில் இருக்க தண்ணீர் குடிக்க எழுந்த அசோக் அவளை கண்டான்.

யாரது. இந்த நேரத்தில இங்க என்ன பண்றீங்க?” என அருகில் சென்றவன் சஞ்சனாவை அங்கே எதிர்பாராமல், “ஹேய். ஏன் இங்க உட்கார்ந்திருக்க தூங்கலயா?” எனக் கேட்டான். சஞ்சனா, “தூக்கம் வரல அசோக் அதான்.” எனவும்,ஒரு நிமிஷம் என உள்ளே சென்றவன் ஒரு மப்ளரை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.

அவள் அதை கட்டாமல் இருக்கவும் அவனே அருகில் வந்து அவளுக்கு கட்டிவிட அவனது இடுப்பை கட்டிக் கொண்டு அழுதாள் சஞ்சனா. “ஹேய். சஞ்சு. எதுக்கு அழுகற. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க. முதல்ல கண்ணை துடை.” என்றவன் அவளை விலக்கி அமரவைத்து விட்டு எதிரே இருந்த மேடையில் அமர்ந்தான்.

சாரி அசோக். எனக்கு உங்களை பிடிக்கும். ஆனா என்னால அதை வெளிப்படுத்த முடியல. அது அப்பா பாசமா, இல்ல அக்காக்கு அப்படி நடந்ததாலயானு எனக்கு தெரியல. என்னால உங்களுக்கு நிறைய கஷ்டம். நீங்க நம்ப கல்யாணத்தை பத்தி பேசுனப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா என்னை நீங்க வெறுக்கறத என்னால ஏத்துக்கவே முடியல.” என்றாள் சஞ்சனா.

நான் உன்னையை வெறுக்கறேனு உன்கிட்ட சொன்னனா?” என பொறுமையாக கேட்டான் அசோக். “ஆமா. என்கிட்ட பேச மாட்றீங்க. எப்ப பார்த்தாலும் முறைச்சிட்டே இருக்கீங்க. உங்களுக்கு என் மேல கோபம்.” என்றாள் சஞ்சனா.

அவளது அருகே வந்தவன்,நீதானே அரென்ஜ் மேரேஜ் பண்ணிக்க ஆசப்பட்ட. அப்பறம் எப்படி முன்னாடியே குளோஸா பேச முடியும். கொஞ்ச கொஞ்சமாதானே பேசனும். அதான் நான் பேசல.” என கண்ணடித்து கூறஅவளோ திகைப்பில் இருந்தாள்.

பிறகு அவனை புரிந்தவள், “அப்ப இத்தனை நாளா நடிச்சீங்களா?” எனக் கேட்டு அவனது மார்பிலே குத்தபின்ன அப்படி கத்தலன்னா உங்கப்பா இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருப்பாரா? எப்படி என்னோட ஐடியா.” என்ற அசோக்.

அதோட உன் மேலயும் எனக்கு கொஞ்சம் கோபம்தான். இதுதான் பிரச்சனைன்னு என்கிட்ட சொல்லியிருந்தா நான் சால்வ் பண்ண மாட்டனா? அவ்ளோதான் என் மேல நம்பிக்கையா?” என வருத்தமாக கேட்கவும், “அப்படில்லாம் இல்ல மித்து சோ சாரி.” என்றாள் உணர்ந்து,

அப்ப அந்த மித்து நான்தானா. ஆமா அதென்ன மித்து?” என அசோக் கேட்க, “உங்க பேர்தான். அசோகமித்திரன். எல்லாருக்கும் அசோக். எனக்கு மித்து. எப்படி!” என்றாள் சஞ்சனா. “பரவால்லயே இந்த டாக்டர்க்கும் மூளை இருக்குப்பா.” என்ற அசோக் அவளை மென்மையாக அணைத்து கொண்டான்.

பிறகு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு இருவரும் அங்கிருந்து வந்து அவரவர் படுக்கையில் நிம்மதியாக உறங்கினர். இவர்களை இரு ஜோடி கண்கள் கண்டு விட்டதையும், நாளை விடியல் என்ன வைத்திருக்கிறது என்பதை உணராமலும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்