569 views
அசோக் அவ்வாறு கூறுவான் என எதிர்பாராத சஞ்சனா அவனை அதிர்ச்சியோடு காண அவனோ அறைக்கு வெளியில் அனைவரும் நின்றிருப்பதை கண்டு துணுக்குற்றான். நொடியில் தன்னை சமன்படுத்தி கொண்டவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு நேராக சக்கரவர்த்தியிடம் சென்றான்.
“நான் கூட உங்ககிட்ட எப்படி சொல்றதுனு யோசிச்சிட்டு இருந்தேன். நீங்களே கேட்டது நல்லதா போச்சு. உங்க பொண்ணு சொன்ன மாதிரி அவளுக்கு சீக்கிரமா கல்யாண ஏற்பாடு பண்ணுங்க. அவ்ளோ சீக்கிரம் எந்த மாப்பிள்ளையை பார்க்கலாம்னு யோசிக்கலாம் வேண்டாம். அது நான்தான் சரியா?” என்றான் அசோக்.
“நீ என்ன சொல்ல வர எனக்கு ஒன்னும் புரியல.” என்றார் சக்கரவர்த்தி. “அதாங்க. உங்க பொண்ணு நீங்க காட்ற இடத்துல கழுத்தை நீட்டுவாளாமே. அதனால நீங்க என்னை கை காட்டுங்க. முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா உங்களையே வந்து கேட்டிருப்பேன். இவ்ளோ நாளா அவ பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம்.” என அசோக் வெகுவாக சலித்துக் கொள்ள,
உதய்தான் அவனிடம் வந்து, “டேய். என்னடா பண்ற?” எனக் கேட்டான். “என்ன என்னடா பண்ண சொல்ற. எனக்கு அவளை பிடிச்சிருக்கு. அவளுக்கும் அப்படிதான். ஆனா வெட்டியா பிடிவாதம் பிடிச்சு, இதோ இவங்க அப்பா ஒரு பாரீன் மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்துவாரு. அவன் லைஃப்ப யோசிச்சு பார்ப்பாங்களா யாராவது.
சோ. இவர் பார்த்த மாப்பிள்ளையே நான்தானா ப்ராப்ளம் சால்வ் தானே. அதத்தான் சொல்லிட்டு இருக்கேன்.” என்றான் அழுத்தமாக. சக்கரவர்த்தி ஏதோ பேச வர, “இப்ப என்ன நான் ஏதாவது சாதிச்சு காட்டினா தான் பொண்ணு தருவீங்களா. ஆல்ரெடி சிவில் எக்ஸாமே பாஸ் பண்ணீட்டேன். இனிமேல் எதுனாலும் ஈசிதான் சொல்லுங்க. என்ன பண்ணனும்.” என்றான் அசோக்.
மீண்டும் அவர் ஏதோ பேச வர, அவரை இடைமறித்தவன் “நீங்க சத்யா லவ்வ பிரிக்க இவ்வளவு லாம் முயற்சி பண்ணனும்னே இல்ல. சத்யாவையும், சந்துவையும் கூப்பிட்டு எதுனாலும் படிப்பு தான் முக்கியம். நல்லா படிச்சு வேலைக்கு போங்க. அதுவரை இதே மாதிரி காதலிச்சா நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேனு சொல்லிருந்தாலே போதுமே.
உண்மையிலேயே அவங்க காதலிச்சா சேர போறாங்க. ஒருவேளை நீங்க நினைச்ச மாதிரி ஈர்ப்புன்னா அவங்களே பிரிஞ்சிடுவாங்க. அத ஏன் எந்த பெத்தவங்களும் செய்யவே மாட்றீங்க. ஏன்னா. உங்களுக்கு உங்க பிள்ளைங்க சந்தோஷத்தை விட ஸ்டேட்டஸூம், கவுரவுமும் தானே முக்கியம்.
அதுனால சத்யா விசயத்துல நீங்க பண்ண எதையும் நான் மன்னிக்கவே மாட்டேன். அதே நேரம் உங்க பொண்ணுங்கறதால சஞ்சனாவை கல்யாணம் பண்ணாமலும் விட மாட்டேன்.” என பேசிக் கொண்டே போக, “கொஞ்சம் நிறுத்தறீங்களா?” என சட்டென்று குரலை உயர்த்தினான் சத்யா.
உடனே சக்கரவர்த்தி “ஒரு நிமிஷம் மாப்பிள்ளை.” என்றவர் அசோக்கிடம், “மாப்பிள்ளை. நான் பேச வந்தது. ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னா வைச்சுக்கலாமா? இல்ல தனித்தனியா பண்ணனும்னு கேட்கதான்.” என்று அவர் அந்தர்பல்டி அடிக்க அனைவரும் வியந்து அவரை நோக்க, “நான் பண்ண தப்பை நான் உணர்ந்துட்டேன்.
தேவை இல்லாம மாப்பிள்ளைக்கு நான் நிறைய கஷ்டம் குடுத்துட்டேன். அதை அவரோ இல்ல நீங்க எல்லாரும் மன்னிக்கறதோ உங்க விருப்பம். ஆனா நடந்ததை பேசி நேரத்தை வீணடிக்கறதுக்கு பதிலா அடுத்து என்ன பண்றதுனு யோசிக்கலாமே பிளீஸ்” என்றார் சக்கரவர்த்தி.
பிறகு சத்யாவின் அருகே வந்த அசோக், “என்னடா. இவரை நம்பலாமா?” என மெதுவாக கேட்க, “வேற வழி. கல்யாணம் முடியற வரை சைலண்டா இருப்போம். அப்பறம் பாத்துக்கலாம். சரி அதெல்லாம் இருக்கட்டும். இதே வாய் உங்கம்மா கிட்ட இப்படி பேசுமா. மிருணாவை எப்படி சமாளிக்கறதுனு யோசிச்சியா?” எனக் கேட்டான் சத்யா.
“ஏண்டா. ஒரு மனுசனுக்கு ரெஸ்ட் வேண்டாமா. நீ பேசாம அங்கங்க கோர்த்து விட்டுட்டே இருக்க. முதல்ல இங்க முடிப்போம். அப்பறம்தான் அங்க ஸ்டார்ட் பண்ணனும். அதுக்கு உங்க எல்லாரோட ஹெல்ப்பும் வேணும்.” என்றான் அசோக்.
பிறகு அனைவரும் அமர்ந்து பேச, “முறைப்படி கல்யாணம் இன்னும் நடக்காததால கல்யாணமே பண்ணிடலாம் தம்பி.” என சந்திரமதியம்மாள் கூற அனைவருக்கும் அதுவே சரியாகப்பட்டது. முதலில் சத்யா சந்திரிகா திருமணம் வைத்துக் கொள்ளலாம். பிறகு ஒரு மூன்று மாதங்கள் கழித்து சஞ்சனாவிற்கும் செய்து விடலாம் என முடிவு செய்தனர்.
அந்த முறைகளை எல்லாம் சந்திரிகா வீட்டினரின் விருப்பப்படி செய்ய கூறிவிட்டான் சத்யா. அதன்பிறகு அனைவரும் விடைபெற்று வெளியில் வர அசோக்கோ அதன்பிறகு சஞ்சனாவை திரும்பியும் பார்க்கவில்லை.
அந்த அதிகாலை வேளையில் மார்கழி மாத பனிக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலையின் வாசத்தோடு வீசிக் கொண்டிருக்க, அந்த ஏகாந்த சூழலை ரசித்தபடி அவர்கள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். சந்திரிகா, தரணி, சைந்தவி, சஞ்சனா, அசோக், அஸ்வின், அனு, தீபக் அனைவரும் அந்த காரில் இருக்க, தரணி தான் காரை இயக்கி கொண்டிருந்தான்.
அசோக்கின் இல்லத்திற்கு செல்வதற்காக அனைவரும் சென்று கொண்டிருந்தனர். அனைவரது மனங்களும் அந்த சூழலை ரசித்தபடி அவரவர் மனதையும் பின்னோக்கி செலுத்தி ஒரு வாரமாக நடந்ததை அசை போட்டு கொண்டிருந்தனர்.
அன்று சந்திரிகாவின் வீட்டில் மார்கழி போய் தை மாதத்தில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர். அப்ப மேரேஜ்க்கு முன்னாடி எல்லாரும் எங்கையாவது டூர் போய்ட்டு வரலாமா? என சைந்தவி கேட்க, அவளை முறைத்தாள் சஞ்சனா. ‘ஏன் இதுவரை பண்ணதெல்லாம் போதாதா’ என்ற ரீதியில்.
“பார்க்கலாமா. அதை அப்பறம் முடிவு பண்ணலாம்” என சத்யா கூறிவிட மூவரும் அங்கிருந்து கிளம்பினர். இதற்கிடையில் அனுவிற்கு செமஸ்டர் தேர்விற்காக படிக்க விடுமுறை வரவும், அவளை ஒருநாள் வீட்டிற்கு அழைத்திருந்தார் சரஸ்வதி.
அன்று அஸ்வினும் வீட்டில் இருக்க ஆருத்ரா அனுவிடம், “உனக்கு நிஜமாலும் இந்த கல்யாணத்துல விருப்பமா?” எனக் கேட்டாள். “என்னக்கா. இப்படி கேட்கறீங்க. நான்தான் முதல்ல அஸ்வினை காதலிச்சேனு உங்களுக்கு தெரியும்ல?” என பதில் கேள்வி கேட்டாள் அனு.
“அப்பறம் ஏன் இப்படி ரெண்டு பேரும் மூஞ்ச தூக்கி வைச்சிட்டு இருக்கீங்க. ஒரு கல்யாண சந்தோஷமே இல்லயே?” என ஆரு கேட்க, “எங்க அவர்தான் என் மேல கோபமா இருக்காரே” என வருத்தமாக கூறினாள் அனு.
“உன் மேல தானே கோபம். அப்ப நீதான் சரி பண்ணனும். மேல தான் இருக்கான் போய் பேசு. அத்தைகிட்ட நான் சொல்லிக்கறேன்.” என அனுப்பி வைத்தாள் ஆரு. மேலே சென்று பார்த்தால் அவன் பால்கனியில் அமர்ந்து வெளியே லேசாக பெய்த மழையை ரசித்துக் கொண்டிருந்தான் அஸ்வின்.
அவனை ரசித்துக் கொண்டே பின்புறம் திரும்பி நின்று, “என் மேல கோபம் போகலயா அஸ்வின். ஏதோ கோபத்துல பேசிட்டேன். அதுக்காக எப்பவும் என்கிட்ட பேச மாட்டீங்களா?” என் கேட்டாள். அவன் பதில் ஏதும் கூறாமல் இருக்க இவள் மீண்டும் ஏதோ பேச தொடங்க, “ஹேய். நீ எப்ப என் ரூம்க்கு வந்த?” என அஸ்வினின் குரல் கேட்டது.
திரும்பி பார்த்தால் அவனது காதுகளில் ஹெட்போன் மாட்டியிருந்தான். குளிருக்காக ஜாக்கெட் தலை வரை போட்டிருந்ததால் அவன் பாடல் கேட்பது இவளுக்கு தெரியவில்லை. ‘அப்ப நாம பேசுனது கேட்டுருக்காதோ’ என நினைத்தவள், “ஏன் வரக் கூடாதா? இது என்ன கவர்னர் மாளிகையா? பர்மிஷன் கேட்டு வரதுக்கு.” என்றாள்.
அஸ்வின், “சரி சொல்லு. எதுக்கு வந்த?” எனக் கேட்க, “அது வந்து. சும்மா ஒரு ஐ லவ் யூ சொல்லிட்டு போலாம்னு வந்தேன். லவ் யூ மாமா.” என்றவள் உடனே வெளியேற அஸ்வின்தான் திகைத்து நின்றான். சில நொடிகளில் தன்னை சமன்படுத்தி கொண்டு வெளியே வர மீண்டும் அறைக்கு வந்தாள் அனு.
“இப்ப என்ன?” என அஸ்வின் கடுப்பாக கேட்க, “இல்ல மாமா. வெளில மழை பெய்யுதுனு அத்தை சூடா பஜ்ஜி செஞ்சாங்களாம். அதான் குடுத்துட்டு வர சொன்னாங்க.” என்றாள் அனு. அதை வாங்கி கொண்டு கதவை சாற்ற போக, அதற்குள் உள்ளே நுழைந்தவள் “நீங்க சாப்பிட்டதும் தட்டை வாங்கிட்டு வர சொன்னாங்க அதான்.” என அங்கிருந்த நாற்காலியில் கால்மடித்து அமர்ந்து விட்டாள்.
“நீ வெளில போனாதான் நான் சாப்பிடுவேன்.” என அஸ்வின் கூறவும், “ஓ. சரி” என்றவள் ஒரு பஜ்ஜியை எடுத்து சாப்பிட போக, “ஹேய். அது என் பஜ்ஜி. நீ போறியா என்ன?” என கத்தினான் அஸ்வின். பஜ்ஜியை வைத்தவள், அவனருகே வந்து அமர்ந்து, “இப்ப நான் என்ன பண்ணேனு என் மேல கோபமா இருக்கீங்க?” எனக் கேட்டாள்.
“நீ எப்படி என்ன அப்படி நினைக்கலாம்?” என நேரடியாகவே கேட்க, “நீங்கதான் இந்த மேரேஜ் புரபசல எடுத்தீங்கன்னு எனக்கு தெரியாது. வீட்ல பேசி முடிவு பண்ணிட்டாங்கன்னு தான் நினைச்சேன். அது மட்டுமில்லாம நீங்களே கொஞ்ச நாளா லவ் பெயிலியர் ஆன மாதிரி சுத்திட்டு இருந்தீங்க.
சோ வீட்ல கம்பெல் பண்றாங்கன்னு நினைச்சா நீங்க ஹேப்பியா இருக்கீங்க. அதான் கோபத்துல அப்படி பேசிட்டேன். இதை பொறுமையா கேட்டிருந்தா கண்டிப்பா விளக்கம் சொல்லியிருப்பீங்க. நான் கோபப்பட்டதால தான் சாரி கேக்கறேன்.” என்றாள் அவளும் நேரடியாகவே.
ஒரு பெருமூச்சு விட்ட அஸ்வின், “கரெக்ட் தான் அனு. சந்திரிகா என் லைஃப்ல இல்லன்னப்ப எனக்கு கஷ்டமா தான் இருந்தது. இனிமே கல்யாணமே பண்ணிக்க கூடாதுனு தான் நினைச்சேன். ஒரு ஃப்ரண்டா தான் உன்கிட்டயும் பழகினேன். ஆனா நீ என்ன லவ் பண்றது தெரிஞ்சப்ப எனக்கே அதிர்ச்சிதான்.
அதே நேரம் அம்மா என் கல்யாணத்தை பத்தி கவலைப்படறப்ப எனக்கு எதுவும் புரியல. ஒரு விசயம் தோணுச்சு. அது சரியா தப்பானு லாம் நினைக்கல. எப்படியும் கல்யாணமே பண்ணிக்காம இருக்க முடியாது. நான் பட்ட கஷ்டத்தை நீ படக்கூடாதுனு நினைச்சேன். எனக்கு உன்னைய பிடிக்கும்.
தெரியாத யாரோ ஒருத்தவங்களோட லைஃபை ஷேர் பண்றதுக்கு நீயா இருந்தா பெட்டரா இருக்கும்னு நினைச்சு செல்பிஷா தான் யோசிச்சேன். அதே நேரம் உனக்கு என்னையை பிடிச்சிருக்கறதால எதுவும் ப்ராப்ளம் இல்லனு நினைச்சிட்டேன். இதை பத்தி உன்கிட்ட முன்னாடியே பேசி இருந்தா எந்த குழப்பமும் வந்திருக்காது சாரி.” என்றான் அஸ்வினும் தான் செய்த தவறை உணர்ந்து.
“சரி விடுங்க. போதும். ரொம்ப சென்டியா இருக்கு. இப்ப பிரச்சனைல்லாம் சால்வ் தானே. அது போதும்.” என்றபடி பஜ்ஜியை எடுக்க, “ஏண்டி இவ்ளோ நேரம் பேசுனது நானு பஜ்ஜி உனக்கா?” என பிடுங்க வர, அவளோ பஜ்ஜியை பாதிவரை கடிக்க மீதியை தனதாக்கி கொண்டான் அஸ்வின்.
பிறகு இருவரும் சிரித்தபடி இறங்கி வர அதை பார்த்த கஸ்தூரி தனது மகனின் வாழ்வு வளமானதை அறிந்த மனம் மகிழ்ந்தார். “என்ன ஆரு. பிரச்சனைல்லாம் சரி ஆகிடுச்சு போல.” என கஸ்தூரி கேட்க, “உறவுகளுக்குள்ள பிரச்சனை வந்ததுனா எப்பவுமே வெளிப்படையா பேசிட்டா அந்த சண்டை உடனே தீர்ந்திடும் அத்தை.
அதை விட்டுட்டு அவங்க தப்பா நினைப்பாங்க. அவங்களே பேசட்டும். அப்படின்னு ஈகோவே பார்க்க கூடாது. இப்ப ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினாங்க. பிரச்சனை தீர்ந்தது. சரி வாங்க. நாம போய் நல்ல நாள பார்ப்போம். கல்யாணத்துக்கு.” என தனது அத்தையை அழைத்து சென்றாள் ஆரு.
அடுத்தநாள் அஸ்வின் அனுவையும் அலுவலகத்திற்கு அழைத்து சென்றிருக்க, வேலை விசயமாக சந்திரிகாவும் அன்று அங்கு வந்திருந்தாள். அவளும் இருவரும் இணைந்ததை அறிந்து வாழ்த்துக்களை கூறியதோடு தனக்கும் திருமணம் முடிவாகி இருப்பதை கூறிட அவர்களும் மகிழ்ந்தனர்.
அப்போதுதான் சந்திரிகாவிற்கு அந்த யோசனை தோன்றியது. உடனே சத்யாவிற்கு ஃபோன் செய்து கூற அவன் ஒரு மணி நேரத்தில் கூப்பிடுவதாக கூறி அழைப்பை துண்டித்தான்.
மறுமுறை அவன் அழைத்தபோது “எல்லாம் பிளான் பண்ணியாச்சு சூர்யா. ரெண்டு நாள்ல கிளம்பற மாதிரி இருக்கும். மொத்தமா நாலு நாள். நீ அவங்ககிட்டயும் சொல்லிடு. நான் சண்டே மார்னிங் வந்து ஜாயின் பண்ணிக்கறேன்.” என்றதில் அவள் முகம் வாடியது.
“சாரிடா. எல்லாரும் போயிட்டா நல்லா இருக்காது. உதய்க்கும் முக்கியமான வேலை இருக்காம். நாங்க ரெண்டு பேரும் ஒன்னா வந்திடுவோம். முக்கியமா நீ போனாதான் சரி வரும் அதான்.” என சமாதானம் செய்திட சந்திரிகாவும் சரியென்றாள்.
திட்டம் என்னவென்றால் எல்லோரும் ஒரு ட்ரிப் போல கிளம்பி அசோக் வீட்டிற்கு செல்வதே, அவனது இல்லம் தேனி அருகே இருப்பதால் சுற்றி பார்க்கவும் முடியும். அதோடு அங்கே அவனது திருமணம் குறித்து பேசி சம்மதம் வாங்க வேண்டும். என்றே முடிவு செய்திருந்தான் சத்யா.
சைந்தவியிடம் கூறியபோது, “நான் சொன்னப்ப எல்லாரும் கண்டுக்கல. இப்ப சந்திரிகா அக்கா சொன்னதும் சத்யா மாமா பிளானே போட்டுட்டாரா” என கிண்டல் செய்தாள். அதன்படியே உதய், சத்யாவை தவிர மற்ற அனைவரும் தேனியை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றனர்.