548 views

              

                  அன்று அஸ்வினின் புதிய இல்லத்தில் விழா முடிந்தபின் ஏலம் தொடங்க வீட்டின் அமைப்பையும், அதில் நிறைந்திருந்த பல நுணுக்கங்களையும் கண்டு வியந்தனர் வந்திருந்த அனைவரும். அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு வீடு விற்பனையாக அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

இரு நாட்கள் கழித்து, காலையிலேயே அஸ்வினை அழைத்த அசோக், சைந்தவியை கூட்டிக் கொண்டு அவன் கூறுமிடத்திற்கு வருமாறு கூற, அவனும் அங்கு சென்றான் அவளோடே. அங்கு அந்த கண்ணாடி கடையின் முதலாளி கட்டி வைக்கப்பட்டிருக்க, இவர்கள் சென்றதும் அவரை மிரட்டி உண்மையை கூறுமாறு பணித்தான் அசோக்.

அவர், “என்ன மன்னிச்சிடுங்க தம்பி. அதிக காசுக்கு ஆசைப்பட்டு நான்தான் தப்பு பண்ணிட்டேன்.” என்க, அஸ்வினுக்கு எதுவும் புரியவில்லை. “அது வந்து அஸ்வின். இவனும் இந்த தொழிலுக்கு புதுசு. சைந்தவியும், தீபக்கும் வந்து அவ்வளவு பெரிய ஆர்டர் குடுக்கும் போது இவனுக்கும் சந்தோஷமா தான் இருந்திருக்கு.

ஆனா அந்த பொருளோட மதிப்பை பார்த்ததும் இவனுக்குள்ள கெட்ட எண்ணம் வந்திருச்சு. இதே மாதிரி லோக்கல் மாடல்ல செஞ்சு குடுத்தா என்னனு இவன் கூட இருந்தவங்க தூண்டி விட, இவனும் பணத்துக்கு ஆசைப்பட்டு அப்படி பண்ணிருக்கான். சப்போஸ் நீங்க அவன் டெலிவரி பண்றப்ப கண்டுபிடிச்சிட்டா, ஆர்டர் மாறிடுச்சுனு சொல்லி திரும்ப தரதா பிளான் வைச்சு நல்ல கண்ணாடில்லாம் பதுக்கிட்டானுங்க.

ஆனா உங்களுக்கு சந்தேகம் வராதது நல்லதா போச்சுனு நினைச்சு இருந்தா திடீர்னு சைந்தவி வந்து விசாரிக்கவும் என்ன பண்றதுனு புரியாம கடை பையனை விட்டு அது மாதிரி சொல்ல சொல்லிருக்கான்.” இதுதான் நடந்தது என்றான் அசோக். “ஓ. அதுக்குள்ள நீ அவசரப்பட்டு அசோக்கிட்ட சண்டை போட்டுட்ட” என்றான் அஸ்வின் சைந்தவியிடம்.

அதற்கு “சாரிண்ணா.” என்றாள் சைந்தவி இருவரிடமும். அசோக் உடனே, “பரவாயில்ல மா. நீ இதை பத்தி பேசுலன்னா யாருக்கும் சந்தேகமே வந்திருக்காதுல்ல.” என்றவன், “நீங்க ஒரு கம்ப்ளைண்ட் குடுங்க அஸ்வின். இவன்கிட்ட நஷ்ட ஈடு வாங்கிடலாம்.” என்றான் அஸ்வினிடம்.

சரி என்றவன் அதற்குரிய வேலைகளை செய்து தர. பிறகு அங்கிருந்து கிளம்பினர். அதன்பிறகு சஞ்சனாவின் மருத்துவமனைக்கு சென்றான் அசோக். அவள் முகம் குழப்ப ரேகைகளை சூழ்ந்திருக்க ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள்.

“என்ன மேடம் இன்னும் தெளிவாகலயா.?” எனக் கேட்டுக் கொண்டே அருகில் சென்று அமர்ந்தவன், அவளது கைகளை எடுத்து மெதுவாக விரலுக்கு சொடக்கு எடுத்து விட்டான். “விடுங்க மித்து. எப்ப பார்த்தாலும் உங்களுக்கு விளையாட்டு தான்.” என உளறி விட, அசோக்கோ, “அது யாரு மித்து” என புரியாமல் கேட்டான்.

“அது ஒன்னுமில்ல. நீங்க என்ன விசயமா வந்தீங்க. அதை சொல்லுங்க.” என்றாள் சஞ்சனா. “சொல்லலாம் தான். ஆனா இங்க முடியாதே. நீ என் கூட வந்தா.” என இழுத்தான் அசோக். “இப்படியே தினமும் வெளில போய்ட்டு இருந்தா சீக்கிரமே என்னையை வேலையை விட்டு அனுப்பிடுவாங்க.” என்றாள் சஞ்சனா.

அசோக், “ஆல்ரெடி அனுப்பிட்டாங்களே.” என சிரித்தவாறே கையில் ஒரு காகிதத்தை விசிற, அதை பிடுங்கி பார்த்தால் அதில் அவளுக்கு ஒரு மாதம் விடுமுறை வழங்கியதற்கான ஆணை இருந்தது. “உங்களை யாரு இந்த வேலையெல்லாம் பண்ண சொன்னா. இப்ப எதுக்கு எனக்கு லீவ். உங்களுக்கு என்ன. இப்ப உங்க கூட வரனும் அவ்ளோதானே. போலாம் வாங்க.” என எழுந்தாள் சஞ்சனா.

அவளை மீண்டும் அமர வைத்தவன், “ஹேய் இருமா. ரிலாக்ஸ். அக்கா கல்யாணத்துக்கு வேலை செய்ய தங்கச்சி ஒரு மாசம் கூட லீவ் போட மாட்டியா?” எனக் கேட்டதில் விசயம் பிடிபடவே சஞ்சனாக்கு சில நிமிடங்கள் ஆனது. “என்ன சொல்றீங்க. நிஜமா சந்துக்காவுக்கு கல்யாணமா? விளையாடாதீங்க” என்றவளின் குரல் உள்ளே சென்றிருக்க கண்களில் நீரே வந்து விட்டது.

“இதுல போய் விளையாடுவனா. நிஜமாதான். நீ வா நான் தெளிவா சொல்றேன்.” என்ற அசோக்.. அவளது விழி நீரை சுண்டி விட்டு அழைத்து சென்றான். நேராக இருவரும் சென்றது சத்யாவின் இல்லத்திற்கு தான். சத்யா அலுவலகம் சென்றிருக்க உதய் வீட்டில் தான் இருந்தான்.

அசோக், “இப்ப நாம ஒரு கேம் ஆடப்போறோம். சரியா?”என்றவன் தனது திட்டத்தை விவரிக்க சஞ்சனா, “அதெல்லாம் முடியாது. நான் எப்ப உங்களை கல்யாணம் பண்ணிக்கறேனு சொன்னேன்.” என்றாள் சஞ்சனா.

“நீ இப்ப நடிக்கற. சரியா. நீ என்னை கல்யாணம் பண்றதை அப்பறம் பார்க்கலாம். இப்ப உங்க அக்காவும், மாமாவும் கல்யாணம் பண்ணிக்கனுமா வேணாமா?” என அழுத்தி அசோக் கேட்க அரை மனதாக தலையாட்டினாள்.

அதன்படியே சத்யா வந்ததும் சஞ்சனா அங்கே வர, “ஹேய் சஞ்சு. நீ எப்ப வந்த? எப்படி இருக்க? என்ன திடீர்னு இந்த பக்கம்? அசோக்கை பார்க்க வந்தீயா?” என கேள்விகளை அடுக்கி கொண்டே போக, “ஹலோ மாம்ஸ். ரிலாக்ஸ். ஒவ்வொரு கேள்வியா கேளுங்க. நான் நல்லா இருக்கேன். உங்களை பார்க்கதான் இங்க வந்தேன். நீங்க ப்ரீயா மாம்ஸ்?” எனக் கேட்டாள் சஞ்சனா.

“ம்ம் சொல்லுடா. என்ன?” என சத்யா கேட்க, “நானும் அசோக்கும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்” என சாதாரணமாக கூறினாள் சஞ்சனா. “ஹேய். சொல்லவே இல்ல. சூப்பர்டா. பைனலா அசோக்குக்கு ஓகே சொல்லிட்ட போல. கங்கிராட்ஸ்.” என்றான் அவனும் சாதாரணமாகவே.

“ஆமாம் மாமா. இந்த மாசமே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம். அதுக்கு உங்க சப்போர்ட் வேணும்.” என்றாள் சஞ்சனா. அவளது பேச்சு வித்தியாசமாக இருப்பதை அறிந்தாலும் காட்டிக் கொள்ளாமல், “ம்ம் நான் என்ன ஹெல்ப் பண்ணனும். அசோக் வீட்ல பேசனுமா?” எனக் கேட்டான்.

உள்ளிருந்து இதை கேட்டுக் கொண்டிருந்த அசோக்கிற்கு பகீரென்றது. அவனது தாயின் முகம் வந்து போக, சஞ்சனா சம்மதமே கூறினாலும் அடுத்து அவனது வீட்டில் சம்மதம் வாங்குவதை நினைத்துதான்.

“அதெல்லாம் அவர் பார்த்துப்பாரு. நீங்களும் அக்காவும் தான் பிரச்சனையே. ஏதோ கொஞ்ச நாள் சண்டைல்ல இருந்தீங்க. இப்பதான் எல்லாம் நார்மல் ஆகிடுச்சுல்ல. அப்பறம் என்ன? ஏன் இன்னும் அக்காவை கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க. அவ வெளில வந்தாதானே எங்க கல்யாணம் பத்தி நான் வீட்ல பேச முடியும்.” என்றாள் கோபமாகவே.

“ஓ. ஆனா நானும் உங்கக்காவும் கல்யாணம் பண்ணி பத்து வருஷமே ஆகப்போகுதே. மறுபடி பண்ணிக்கனுமா என்ன?” என்றான் சத்யா கூலாக. “கல்யாணம் ஆகிடுச்சுனு நீங்களாதான் சொல்லிக்கறீங்க. எல்லாருக்கும் தெரிய வேண்டாமா? அதுக்குதான்.” என்றாள் சஞ்சனா.

“இவ்வளவு தானே. நீ என்ன பண்ற. உன் அக்காகிட்ட போய் இது உன் வீடு இல்ல. நீ மாமா வீட்டுக்கு போன்னு சொல்ற. அவ இங்க வந்துட்டா. உங்க பிராப்ளம் சால்வ் தானே. என்ன சொல்ற?” என யோசனை கூறினான் சத்யா.

“அதெப்படி நான் போய் அக்காகிட்ட சொல்றது. நீங்க கூப்பிட்டா கூட வருவா. அதோட அப்பறம் அக்காவுக்கு கல்யாணம் ஆகி நீங்க பிரிஞ்சு இருந்ததெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சு. அக்கா பாவம்ல.” என சஞ்சனா திணற, “அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கும் தனியா இருக்கறது கஷ்டமா தானே இருக்கு. சோ நீயே கூட்டிட்டு வந்திடு. ஓகேவாடா.” என்றவாறே அறைக்கு சென்று விட, சஞ்சனாவோ விக்கித்து நின்றாள்.

அவன் சென்றதும், “என்னடா இவன் இப்படி பேசிட்டு போறான். அப்படில்லாம் சந்திரிகாவை வர விட மாட்டான். முறையா தான் கூட்டிட்டு வருவானு நீதானே சொன்ன.” என்றான் அசோக் உதய்யிடம்.

“அதான் எனக்கும் ஒன்னும் புரியலடா. அவங்க வீட்டு ஆளுங்க மேல உள்ள கோபத்துல இப்படி மாறிட்டானோ. அப்ப கூட இவன் போய் கூப்பிட்டாதானே நல்லா இருக்கும். தானா வந்து இருக்க சொன்னா அவ பாவம்ல.” என யோசனையாக கூறினான் உதய்.

“பேசாம போய் கல்யாணம் பண்ணிக்கோங்கனே கேட்டு இருக்கலாம். உன் பேச்சை கேட்டேன் பாரு.” என திட்டிக் கொண்டே கோபமாக சென்றாள் சஞ்சனா. அவள் வீட்டிற்கு செல்வதற்குள் சந்திரிகாவிற்கு விசயம் சென்று விட, “நான் உனக்கு தடங்கலா இருக்கேனா சஞ்சு.” என அவள் வேறு கேட்டு வைக்க, அசோக்கின் மீது கொலை வெறியே வந்தது சஞ்சனாவிற்கு.

“அய்யோ. அக்கா அப்படில்லாம் இல்ல. சும்மா விளையாட்டுக்கு பண்ணேன். மாமா அப்படியே நம்பிட்டாரு போல.” என்றவள் அறைக்கே ஓடி விட்டாள். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நண்பர்கள் இருவரும் சாவகாசமாக தூங்கி கொண்டிருக்க சத்யா வந்து எழுப்பினான் இருவரையும்.

அவன் கிளம்பி இருப்பதை கண்டதும், “என்னடா இன்னைக்கும் ஏதாவது வொர்க் இருக்கா?”  என தூக்கத்தினூடே கேட்க, “ஆமாடா. முக்கியமான வேலை. எனக்கு மட்டும் இல்லை. உங்களுக்கும் தான். சீக்கிரம் கிளம்புங்க.” என போர்வையை உருவி துரத்தினான் சத்யா.

பிறகு இருவரும் கிளம்பி வர சத்யா காரை எடுத்தான். “அப்படி என்ன முக்கியமான வேலைடா. ஏதாவது பிரச்சனையா?” என அசோக் கேட்க, “ஆமாடா ஒரு பெரிய பிராப்ளம். நான் மட்டும் சமாளிக்க முடியுமானு தெரியல. அதான் உங்களையும் கூட்டிட்டு போறேன்.” என்றான் சத்யா.

“ஓ. கவலைப்படாதடா. எதுனாலும் பாத்துக்கலாம்.” என்றதோடு அமைதியாகவே வர, அவர்களது மகிழுந்து சந்திரிகாவின் வீட்டு வாசலில் வந்து நின்றது. “இங்க எதுக்குடா வந்திருக்கோம்?” என உதய் கேட்க, “அது நேத்து சஞ்சனா ஒரு விசயம் சொன்னாடா. நானும் நிறைய முறை யோசிச்சு பார்த்தேன். சரி நம்ம அசோக்காக எது வேணும்னாலும் பண்ணலாம்னு தோணுச்சி. அதான்.” என இழுத்து கூறினான் சத்யா.

“என்னடா சந்திரிகாவை அங்க கூட்டிட்டு போறதை பத்தியா?” என அசோக் ஒருவித ஆர்வத்துடன் கேட்டு வைக்க, சத்யா, “அது பத்தியும் சொன்னுச்சு. ஆனா அதுக்கு காரணம் உன்னையை கல்யாணம் பண்ணிக்க தானு சொன்னா. அதனால சந்திரிகா எங்க இருந்தா என்ன. சஞ்சனாவை உனக்கு பேசி முடிச்சா சரிதானே? அதுக்குதான் இங்க வந்திருக்கோம்.” என அசோக்கை பார்த்து கூற, அவன் நொந்து போனான்.

“டேய். இவன் எனக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டான்டா. நேத்தே அவ செம கடுப்புல போனா. இன்னைக்கு என்ன அவ கையாலயே கொல்ல பிளான் பண்ணிட்டானு நினைக்கறேன்.            நான் பேசாம இப்படியே எஸ்கேப் ஆகறேன்டா.” என உதய்யிடம் பேசிக் கொண்டிருக்க, “வா சகலை எதுனாலும் நாம உள்ளயே போய் பேசிக்கலாம்.” என அசோக்கை சத்யா அழைத்து செல்ல, உதய் சிரித்தவாறே அவர்களை பின் தொடர்ந்தான் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்