581 views

 

        சந்திரிகாவிற்கும், தனக்கும் திருமணம் ஆகிவிட்டது என சத்யா கூற உதய்யை தவிர மற்றவர்கள் அதிர்ந்து நின்றனர். சமீபத்தில் தான் சந்திரிகாவை திருமணம் செய்து கொண்டதை உதய்யிடம் கூறி இருந்தான் சத்யா. அதனால் அவனுக்கு அந்த செய்தி புதிதில்லை.

அவர்கள் அதிர்ச்சியை பார்த்த சத்யா அன்று நடந்ததை நினைவுபடுத்தினான். ஆரம்ப காலத்தில் சத்யாவிற்கு அவர்களின் காதல் மீது ஒருவித பயம் இருந்து கொண்டே இருந்தது. அவளது பிறந்தநாள் அன்று, இவர்கள் இருவரையும் தனியாக நண்பர்கள் அனைவரும் அனுப்பி வைக்க, முதலில் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு சத்யா, “சூர்யா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வைச்சிருக்கேன். கண்ண மூடேன்என்க, அவளும் மறுக்காமல் செய்தாள். கண்களை திறந்த போது ஒரு மெல்லிய செயின் சிறிய டாலரோடு அவளது கழுத்தில் இருந்தது.

ஹேய். என்ன இது. ரொம்ப அழகா இருக்கு சத்யா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா உங்களுக்கு ஏது இவ்ளோ காசு.” எனக் கேட்டாள் சந்திரிகா. “ஏன் இவ்ளோ மெலிசா வாங்கியிருக்கனு கேட்காம எப்படி வாங்கினனு கேட்கற பாரு. இந்த அக்கறை தாண்டி உன்ன மேல மேல காதலிச்சிட்டே இருக்கனும்னு தோணுது.” என்றான் சத்யா நெகிழ்வாக.

பரிசோட மதிப்பு அதை குடுங்கறவங்களோட மனசை பொறுத்தது சத்யா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குஊர் உலகமே பார்க்க, எனக்கு நீங்க தாலி கட்ற வரை இதுதான் எனக்கு தாலி. எப்பவும் இதை நான் கழட்டவே மாட்டேன்.” என்றாள் சந்திரிகா உறுதியாக.

ஆமா எப்படி வாங்கினிங்க. அதை சொல்லவே இல்ல.” எனக் கேட்க, “பார்ட் டைம்ல வேலைக்கு போறேன். அந்த காசுல வாங்கினது.” என்றான் சத்யா. “இனிமேல் இதெல்லாம் பண்ணாதீங்க சத்யா. கிடைக்கற நேரத்துல நீங்க படிக்கறதுல தான் கான்சென்ரேட் பண்ணணும். இதெல்லாம் விட உங்க இலட்சியத்துல ஜெயிக்கறப்ப தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.” என்றாள் சந்திரிகா.

நீ என் கூட இருக்கிற வரை நான் எதுல வேணா ஜெயிப்பேன். ஏன்னா நீதான் என்னோட லக்கி சார்ம்.” என்றான் சத்யா. அதற்கு பதில் ஏதும் கூறாதவள், “என்னோட பிறந்த நாளுக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.” என்றவள் அவனை கூட்டிச் சென்ற இடம் பதிவுத்துறை அலுவலகம்.

இங்க ஏன் வந்திருக்கோம்?” என சத்யா கேட்க, “ஒரு முக்கியமானவங்களோட மேரேஜ். அதான் கையழுத்து போட வந்திருக்கோம்.” என்ற சந்திரிகா அவனை உள்ளே அழைத்து சென்றாள்.

சத்யாவும், ‘சந்திரிகாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் யாருக்கோ திருமணம் போலும். சாட்சி கையழுத்திட வந்திருக்கிறோம்என நினைத்து உள்ளே சென்றான். உள்ளே சென்ற போது ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்து, “அடுத்தது நம்ப டோக்கன் தான்மா. கரெக்ட் டைமுக்கு வந்துட்டீங்க. வாங்க.” எனக் கூறி அழைத்து சென்றார்

அந்த பெண்மணியின் மகளை சந்திரிகாதான் படிக்க வைக்கிறாள். வசதியில்லையென அவர்கள் வீட்டுக்கு அந்த சிறுமியை வேலைக்கு அனுப்பலாம் என முடிவு செய்த போது அதை தெரிந்து கொண்ட சந்திரிகா, அருகில் உள்ள அரசாங்க பள்ளியில் சேர்த்து விட்டதோடு, அவளுக்கு தேவையான சிறு சிறு உதவிகளை தனது பாக்கெட் மணியில் இருந்தே தந்து கொண்டிருந்தாள்.

அது மட்டுமில்லாமல் அவர்களது பகுதிக்கு சென்று அவ்வபோது பாடம் சொல்லி தருவது போன்ற உதவிகளையும் செய்து வந்ததால் இவளுக்கொரு உதவி எனக் கேட்டதும் அவர் உடனே செய்வதாக ஒப்புக் கொண்டார்.

இவங்கதான் பொண்ணு மாப்பிள்ளையா? சரி சரி நேரமாகுது. கையெழுத்தை போடுங்க.” என பதிவாளர் இவர்களை பார்த்து சொல்லவும், சத்யா எதுவும் புரியாமல் முழித்தான். ஆனால் சந்திரிகா பிறகு சொல்கிறேன். கையெழுத்து இடுமாறு கண்ணை காட்ட, அவளுக்கு இசைந்து கையெழுத்திட அவளும் கையெழுத்து போட்டாள்.

அந்த பெண்மணியே சாட்சிக்கு நால்வரை அழைத்து வந்திருக்க அவர்கள் முன்னிலையில் இவர்களது பதிவு திருமணம் நடந்தது. பிறகு மாலை மட்டும் மாற்றிக் கொண்டனர். பின்பு வெளியில் வந்தபோது சத்யா,சூர்யாஎன கிசுகிசுப்பான குரலில் அழைத்தது அப்படியே மனதில் பதிந்தது.

அதனால்தான் அன்று தான்யாவோடு இங்கு வந்தபோது பழைய நினைவுகள் சந்திரிகா மனதில் தோன்றி இம்சித்தது. “என்னால நம்பவே முடியல. நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு. ஏண்டி என் மேல இவ்ளோ நம்பிக்கை வைச்சிருக்க.” என்றான் சத்யா.

ஏன்னா. நீங்க எப்பவும் ஹேப்பியா இருக்கனும். இது நடக்குமா. இவ விட்டு போய்டுவாளானு நினைச்சிட்டு இருந்தா, எப்படி படிப்புல நாட்டம் போகும். இனிமேல் என்ன நடந்தாலும் நான் உங்கள விட்டுட்டு போற சூழ்நிலை வந்தாலும் நான் உங்க மனைவிங்கறது மாறாதில்ல. அதுக்குதான்.

அப்பறம் எப்பவும் நான் உங்க கூடவேதான் இருப்பேன். அப்படி இல்லன்னாலும் நீங்க உங்களோட இலட்சியத்துல எப்பவும் வெற்றியடைனும். சரியா?எனக் கேட்டு தலைசாய்த்து சிரிக்க, சுற்றுப்புறத்தையும் மறந்து அவளை தூக்கி தட்டாமாலை சுற்றினான் சத்யா.

பிறகு,ஆமா ஏன் நம்ப ஃப்ரண்ட்ஸ்கிட்ட சொல்லல?” என சத்யா கேட்டதற்கு, இல்ல சத்யா. இதுவரை வீட்டுக்கு எதுவும் தெரியாது. ஆனா நாம இந்த அளவு போயிருக்கோம்னா, கண்டிப்பா அழுத்தி கேட்டா யாராவது சொல்லிடுவாங்க. படிப்பு முடிஞ்சதும் சொல்லிக்கலாம்னு நினைச்சேன். நீங்க என்ன நினைக்கறீங்க?எனக் கேட்டாள் சந்திரிகா.

அதுவும் சரிதான். அவங்களுக்கு தெரிஞ்சு சொல்லலனா. நம்பளால அவங்களுக்கும் கஷ்டம் தான். இப்போதைக்கு யார்க்கிட்டயும் சொல்ல வேண்டாம்.” என சத்யா கூற, அதன்பின் இயல்பாகவே நடந்து கொண்டனர். நடந்ததை சத்யா சொல்லி முடித்ததும், சந்திரிகாவின் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. அடித்தது சக்கரவர்த்தியல்ல மல்லிகா. சந்திரிகாவின் தாயார்.

என்ன தைரியம் இருந்தா இந்த வேலை பண்ணிருப்ப. இதனால வர பின்விளைவுகளை யோசிச்சு பார்த்தியா? பெத்தவங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ற அளவு அப்படி என்னடி கஷ்டத்தை குடுத்துட்டோம் உனக்கு. இந்த மனுஷன் எனக்கு ஒரு நல்ல புருஷனா நடந்துக்காம இருந்துருக்கலாம். ஆனா ஒரு அப்பாவா உங்களுக்கு என்ன குறை வச்சிருக்காரு.

பணம் பணம்னு அலையறதெல்லாம் உங்களுக்கு சேர்த்து வைக்க தானே. காதலிச்சா அதை வீட்ல சொல்லி அவங்க சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ண தைரியம் இருக்கனும். இன்னும் கொஞ்சம் வசதியான இடமா இருந்தா நீ சந்தோஷமா இருப்பனு இவருக்கு நினைப்பு. பணம் மட்டும் சந்தோஷத்தை தராது. நல்ல மனுஷங்க வேணும்னு இவருக்கு புரியல.

ஏதோ இந்த தம்பி நல்லவரா இருக்க போய் உங்கப்பா பண்ண அத்தனையும் மறந்துட்டு நீதான் வேணும்னு வந்து நிக்கறாரு. அதே ஒரு தப்பானவனா இருந்திருந்தா உன் நிலைமை என்னனு யோசிச்சு பாத்தியா. படிக்கற வயசுல காதலிச்ச. அதை கூட நான் தப்பா சொல்லல. ஆனா கல்யாணம் பண்ற வயசா அது.

அவ்ளோ பெரிய ஆளா இருந்திருக்க. இதெல்லாம் விட இத்தனை வருஷம் பெத்தவகிட்ட அதை மறைச்சு இருக்க. உன்னை வளர்த்ததுல எங்கேயோ தப்பு பண்ணிட்டேன்டி.” எனக் கூறி விட்டு அப்படியே சோபாவில் அமர்ந்து அழ ஆரம்பித்தார். தன்னை இதுவரை ஒரு சுடுசொல் கூட கூறியிராத தாய் அடித்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்றிருந்தாள் சந்திரிகா.

தனது மனைவி இந்த விசயத்தில் இவ்வளவு கோபப்படுவாள் என சக்கரவர்த்தியே எதிர்பார்க்கவில்லை என அவரது முகத்திலே தெரிந்தது. சத்யாதான் சுதாரித்து தனது மாமியாரிடம் சென்றவன், “அப்படியெல்லாம் இல்ல அத்தை. நீங்க அவளை ரொம்ப நல்லாதான் வளர்த்திருக்கிங்க.

இல்லனா அவளும் எல்லாரையும் போல என்னை காதலிச்சதை, கல்யாணம் பண்ணிகிட்டதை மறைச்சு இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனா நான் அவளை மறந்த பிறகும் எனக்காக காத்திருந்தது உங்க வளர்ப்புனால தான். அப்படி அவ பண்ணதுக்கு நானும் ஒரு முக்கியமான காரணம்.

எங்க காதலை நம்புனதை விட இந்த ஸ்டேட்டஸை பார்த்து பயம்தான் அதிகமா இருந்தது. அதுக்காக தான் அப்படி நினைச்சிருப்பா. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டமே தவிர, இன்னும் எங்களுக்கு முறையா கல்யாணம் நடக்கல. அதை நீங்க எல்லாரும் தான் எங்களுக்கு பண்ணிக்க வைக்கனும்.” என்றான் சத்யா.

அதன்பின்பு சந்திரிகாவை அருகில் அழைத்தவன் அவரிடம் பேச சொல்ல, அவளும் தன் அன்னையை கட்டிக் கொண்டு,மன்னிச்சிடுங்கம்மா. அப்ப எதுவுமே தப்பா தோணல. ஆனா நான் எதுவும் தப்பு பண்ணலமா. என்னை நம்புங்க.” என அழுகவும், மல்லிகாவும் அவளை மன்னித்து விட்டார்.

இத்தனை கலவரத்திலும் அமைதியாகவே இருந்தது சந்திரிகாவின் தாத்தா தணிகாச்சலம்தான். அவரது மனம் ஏதோ நினைவில் எதையோ யோசித்துக் கொண்டிருந்தது. அங்கு நடந்த நிகழ்வுகள் எதுவும் அவரது மனதில் பதியவில்லை.

அதை அவ்வபோது கவனித்துக் கொண்டிருந்த சந்திரமதியம்மாள் அவரிடம் என்னவென்று கேட்க, அவரோ ஏதுமில்லை என மறுப்பாக தலையசைத்தார். ஆனால் அவரது மனம் இடையராது சிந்தித்து கொண்டே இருந்தது.

சக்கரவர்த்தி எதுவும் பேசாமல் அவரது அறைக்கு செல்ல மற்றொரு நாள் வருகிறோம் எனக் கூறி உதய்யும், சத்யாவும் அங்கிருந்து கிளம்பினர். சக்கரவர்த்தியை பின்தொடர்ந்து அவரது அறைக்கு சென்ற சந்திரிகா அவரிடம், “இப்பவாது உங்க ஜோசியம்லாம் பொய்னு நம்பறீங்களா அப்பா?” எனக் கேட்டாள்.

சக்கரவர்த்தி திடுக்கிட்டு போய் அவளை பார்க்க,என்னப்பா. எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு பார்க்கறீங்களா?என மீண்டும் கேட்டாள். சக்கரவர்த்திக்கு ஜோசியத்தில் அளவிட முடியாத ஒரு ஈர்ப்பு இருந்து வந்தது. பலருக்கும் அது தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டாலும், தனது ஆஸ்தான ஜோதிடரை கேட்காமல் எதுவும் செய்ய மாட்டார்.

அதற்கு காரணமும் இருந்தது. தனது தந்தை கையில் இருந்து தனது கைக்கு தொழில் மாறும்பொழுது ஒரு மிகப்பெரும் நஷ்டத்தை அடைந்து அடுத்து எப்படி மீள்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அந்த சூழ்நிலையில் எதற்கும் ஒருமுறை ஜாதகம் பார்க்கலாம் என நண்பர்கள் அறிவுரை கூற இவரும் பார்க்க சென்றார்.

அவர் சில பரிகாரங்களை கூற, அதோடு சக்கரவர்த்தியும் தனது தொழிலில் யுக்தியை மாற்ற வெற்றி பாதையில் பயணித்தார். ஆனால் மனம் அந்த ஜோசியத்தை ஆழமாக நம்ப ஆரம்பித்து விட்டது. அதிகப்படியான பணம் சேர, அதன் மீதும் ஆர்வம் திரும்பி விட்டது.

இது தொழிலோடு நின்றிருந்தாள் பரவாயில்லை. மகள் வாழ்க்கை வரை வந்தது தான் வம்பாகி போனது. தனது குடும்பத்தினர் அனைவரது ஜாதகத்தையும் அவரிடம் காட்ட ஒவ்வொருவரையும் பற்றி கூறியவர் சந்திரிகாவை அந்த வீட்டின் அதிர்ஷ்டம் என்றார்.

அதோடு இல்லாமல்பதினெட்டு வயதிலேயே இந்த பெண்ணுக்கு திருமணம் கூடி வரும். ஆனால் அந்த திருமணம் நடந்தால் உங்களது சொத்துக்கள் அனைத்தும் போய் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டி வரும். அதுவே இருபத்தி ஐந்து வயதிற்கு மேல் திருமணம் நடந்தால் அது ராஜபோக வாழ்க்கையாக இருக்கும்.” என ஜோசியர் கூற இவரும் அதை நம்பி விட்டார்.

அதனால் தான் சந்திரிகா காதலிக்கிறாள் என தெரிந்ததும் அவர்களை பிரிக்க அவ்வளவு பாடுபட்டார். ஆனால் அவருக்கு விசயம் தெரியும் முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டது விதியின் விளையாட்டோ என்னவோ ஆரம்ப காலத்தில் இருந்தே குழந்தைகள் மேல் தனி அன்பை கொண்டிருந்த சக்கரவர்த்தி தனது காதலுக்கு பின் இப்படி மாறி போனது சந்திரிகாவிற்கு அதிர்ச்சிதான்.

காதல் என வந்து விட்டாலே எல்லா பெற்றோர்களும் இப்படித்தான் போலும் என்ற எண்ணத்தில் எதையும் யோசியாமல் இருந்து விட்டாள். ஆனால் மீண்டும் சத்யாவை சந்தித்து அவர்களது காதல் துளிர்விட்டபோது, எப்படியாவது தந்தையை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யார் மூலம் இதனை அவரிடம் சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அவருக்கு சோதிடத்தில் நாட்டம் இருப்பதை தெரிந்து கொண்டு அந்த சோதிடர் மூலமே அவரை சம்மதிக்க வைக்க வேண்டும் என அவரை சந்திக்க போனாள். அங்கு இதுவரை நடந்த அனைத்து விசயங்களுக்கும் விடை கிடைத்துவிட சந்திரிகாவிற்கு கோபம் வந்துவிட்டது. ஒரு சோதிடரை நம்பிய அளவு கூட தன்னை நம்பவில்லை என்பதே அது.

அதனால் எதையும் அவரிடம் கூற வேண்டாம் என சோதிடரிடம் கூறிவிட்டு வந்தவள் அமைதியாகவே இருந்தாள். இன்று அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டது. இனிமேலாவது சக்கரவர்த்தியின் முடிவு மாறுமா?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்