694 views

 

             நான் அனுவுக்கு புரிய வைக்கிறேன் என தீபக் சொன்னதும் அஸ்வினுக்கு எதுவும் புரியவில்லை. “எதுனாலடா அப்படி சொல்ற? ஒருவேளை நான் சந்திரிகாவை காதலிச்சதாலயா?எனக் கேட்டான் அஸ்வின்.

எப்படியாவது அனுவிடம் பேசிக் கொள்ளலாம் என நினைத்தவன், தீபக் அதையே சொல்லும்போது ஏனோ அவ்வளவு உவப்பாக இல்லை. அதனாலே காரணம் கற்பித்தான். அதற்கு தீபக், “ஹேய். லூசாடா நீ. நீ பண்ணதை லவ்வுன்னு யாருமே ஒத்துக்கல. நீ இன்னும் அதை விடலயாஎன்றான்.

அப்பறம் ஏன் நீ இதை வேணாம்னு சொன்ன?எனக் கேட்டான் அஸ்வின். “அதுவந்து.” என இழுத்தவன், “இல்லடா உங்களோட ஸ்டேட்டஸ் வேற. எங்களோட ஸ்டேட்டஸ் வேற. இதெல்லாம் ஒத்து வராதுடா. அவ சின்ன பொண்ணுடா. அவளுக்கு இதெல்லாம் தெரியாதில்ல.” என்றான் தீபக்.

அப்ப இவ்வளவு நாள் நீயும், நானும் ஸ்டேட்டஸ் பார்த்துதான் பழகிட்டு இருக்கோமா?என்றான் அஸ்வின் கோபமாக. “இது ஃப்ரண்ஷிப்டா. இதுக்கு ஸ்டேட்டஸ், மதம், ஜாதி எதுவுமே தேவையில்லை. ஆனா கல்யாணம்னு வந்துட்டா இது எல்லாமே பிரச்சனை தான்.

நமக்கு அது தப்பா இல்லன்னாலும் நம்மள சுத்தி இருக்கறவங்களுக்கு அதுதான் முக்கியமா தெரியும். இவ்வளவு ஏன் உனக்கு ஏதோ ப்ராளம் இருக்க போய்தான் வசதி கம்மியா இருக்கற வீட்ல கல்யாணம் பண்றனு கூட பேசுவாங்க. உனக்கு இதெல்லாம் பரவால்லாமா இருக்கலாம். ஆனா என்னால தாங்கிக்க முடியாதுடா.” என்றான் தீபக்.

சரிடா. நீ சொல்றது எல்லாத்தையும் யோசிச்சு இரண்டு நாள்ல அடுத்து என்ன பண்ணலாம்னு பேசிக்கலாம். அதுவரை நீ அனுகிட்ட எதுவும் கேட்றாத ப்ளீஸ்எனக் கூறி அவனை அனுப்பி வைத்தான்.

ஆனால் இரு நாட்களிலே ஆருவின் மூலம் அவனது பெற்றோருக்கு தெரிந்து அவர்கள் தீபக்கிடம் பேசியதோடு அவனை அழைத்துக் கொண்டு ஊருக்கே சென்று அவன் பெற்றோரிடம் சம்மதமும் வாங்கி விட்டனர். அடுத்த இரு நாட்களில் அஸ்வினின் பிறந்தநாள் வருவதால் அதில் வைத்து அறிமுகம் செய்து விடலாம் என முடிவு செய்தனர்.

அது அனுவிற்கும் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என அஸ்வின் கூறிவிட்டான். ஆனாலும் தீபக், “நீ அனுவோட காதலை பார்த்துட்டு உன் லைப்ல ரிஸ்க் எடுக்கறயோனு தோணுதுடாஎனக் கேட்டே விட்டான்.

அப்படில்லாம் இல்லடா. நீங்க எல்லாரும் சொல்ற மாதிரி சந்திரிகாவை நான் பெரிசா காதலிக்கலாம் இல்ல. ஆனா அதுல இருந்தே வெளில வர நான் எவ்ளோ கஷ்டப்பட்டேனு எனக்குதான் தெரியும். அப்படி இருக்கப்ப அனு என்னை ரொம்ப உண்மையா காதலிக்கறா. இது நடக்கலன்னா அவ எவ்ளோ வேதனைப்படுவான்னு எனக்கு தெரியும்.

அதோட யாரையோ தெரியாத ஒருத்தரை நான் கல்யாணம் பண்றதை விட அனு என்னோட பெஸ்ட் ப்ரண்டு. என்னை பத்தி எல்லாமே தெரிஞ்சவ. அவ என் லைஃப் பார்ட்னரா வந்தா என்னோட வாழ்க்கை நிச்சயம் சந்தோஷமா இருக்கும். கண்டிப்பா சீக்கிரமே எனக்கு அனு மேல காதல் வரும். அவ வர வைப்பா. அதனால நீ எதை பத்தியும் கவலைப்படாத.” என தீபக்கிற்கு சமாதானம் சொன்னான் அஸ்வின்.

அதன் பிறகு தீபக்கின் முகம் மலர்ச்சியாக மகிழ்ச்சியாக பணிகளை கவனிக்க சென்றான். இதையெல்லாம் யோசித்துக் கொண்டு பால்கனியில் அஸ்வின் நின்றிருக்க அவனது அருகில் நிழலாடியது. திரும்பி பார்த்தால் அனுதான் நின்று கொண்டிருந்தாள்.

அவளை கண்டதும் சட்டென முகம் மாற அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான். அவனருகில் மண்டியிட்டு அமர்ந்தவள் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் எதுவும் பேசவில்லை. தேவையற்ற பேச்சுக்கள் இருவருக்குள்ளும் வேதனை தந்ததால் அந்த மௌனம் இருவருக்கும் தேவையாக இருந்தது.

பிறகு அனுவே ஆரம்பித்தாள். “சாரி கிருஷ்ணா.” என்றுவிட்டு அவன் முகம் பார்க்க, அவன் எதுவும் பேசவில்லை. “நான் அப்படி பேசி இருக்க கூடாது. ஏதோ கோபத்தில தான் வார்த்தையை விட்டுட்டேன். மன்னிக்க மாட்டிங்களா?என இறங்கி வந்து கேட்க, அதற்கு மேலும் அஸ்வினால் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை.

முதலில் இருந்தே அவள் மீது கோபம் இல்லை. தன்னால் அவள் அவளை தவறாக நினைத்து விட்டாளே என்ற வேதனை தான் இருந்தது. “சரி விடு அனு. உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சேனே தவிர உன் மனசு எப்படி பீல் பண்ணும்னு எனக்கு தோணவே இல்லை.

நீ சொல்றதும் சரிதான். எனக்கு கொஞ்சம் டைம் குடு அனு. உன்னையை எனக்கு பிடிக்கும். ஆனா நீ சொல்ற மாதிரி சின்சியர் லவ் வர கொஞ்ச நாள் ஆகலாம். அதுக்கப்பறம் எதுனாலும் பேசிக்கலாம்.” என்றான் அஸ்வின்.

பரவால்ல கிருஷ்ணா. நீ என்ன லவ் பண்ணலனாலும் எனக்கு கவலையில்லை. ஒருத்தர் காதல் போதுமானது வாழ்க்கைக்கு. உனக்கே அது பிரச்சனை இல்லங்கறப்ப எனக்கு என்ன. இது புரிய தான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. சாரி.” என்றாள் அனு.

ஆனால் அஸ்வினோ வாழ்க்கையில் விளையாட முடியாது. பொறுத்திருந்தே திருமணம் செய்து கொள்ளலாம். அதற்குள் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வை தொடங்கலாம் எனக் கூறி விட்டான். அவனது மனதை புரிந்து கொண்ட அனுவும், அவனது மனமாற்றத்திற்காக சற்று காத்திருக்கலாம் என முடிவு செய்து விட்டாள்.

               அன்று, அனைத்து பள்ளிகளிலும் புதிதாக கட்டப்பட்டிருந்த சுகாதார வளாகத்திற்கு திறப்பு விழா. பொதுவாக ஒரு பள்ளியை தேர்ந்தெடுத்து அதன் மைதானத்தில் விழா மேடை அமைக்கப்பட்டு, மற்ற அனைத்து பள்ளிகளின் நிர்வாகிகள் அதில் கலந்து கொள்ள அங்கு வைத்து அனைவருக்கும் சாவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அசோக் மீண்டும் பணிக்கு வந்திருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை அவனே கவனித்துக் கொண்டிருந்தான். அந்த தொகுதியின் எம்.பி ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்க அதனால் பாதுகாப்பு பலமாக இருந்தது. விழா தொடங்கியதும் முதலில் அனைவரையும் வரவேற்று பேச பிறகு சத்யாவை பேச அழைத்தனர்.

கருநீல நிறத்தில் கோட் அணிந்து, அழகாக சிரித்தபடி மைக் முன் நின்றவன் கீழே முதல் வரிசையில் அதே கருநீலத்தில் மைசூர் சில்க் புடவை அணிந்து பாந்தமாக அமர்ந்திருந்தவளை பார்த்தபடி பேச ஆரம்பித்தான். அருகில் அமர்ந்திருந்த தரணிக்கு, தோழியை நினைத்து மகிழ்வாக இருந்தது.

சத்யா,”விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கங்கள். அரசாங்க பள்ளிகளையும் தனியார் பள்ளிகள் அளவிற்கு உள்கட்டமைப்பை உயர்த்த வேண்டும் என்பதே எனது கனவு. தனியார் பள்ளிகளை விட தரத்தில் உயர்ந்திருந்தாலும் மாணவர்களின் உடல்நலனும், சவுகரியங்களும் முக்கிய காரணிகளாக ஆகிவிட்டது.

அதற்கான மாற்றத்தின் முதல்படிதான் இந்த சுகாதார வளாகம். வெறும் அரசாங்க நிதியினால் மட்டுமே இது சாத்தியமாகவில்லை. பல நல்ல உள்ளங்கள் கொடுத்துள்ள நன்கொடையும் முக்கிய காரணமே. இதுபோன்ற சிறு முயற்சிகள் மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர ஊக்குவிக்கும்.

இது தவிர இன்னும் ஏதேனும் சிறந்த யோசனைகள் இருந்தால் தனிப்பட்ட முறையில் எனை சந்தித்து கூறலாம். இந்த பள்ளிகளின் நிர்வாகிகளும், மாணவ மணிகளும் இதை பயன்படுத்துவதை பொறுத்து மற்ற பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

இந்த திட்டத்திற்கு லாபத்திற்கும் அப்பாற்பட்டு எனக்கு உதவியாக இருந்த இரு நிறுவனங்களை இங்கு எம்.பி மூலம் கௌரவப்படுத்த விழைகிறேன்.” என்றவன் காண்ட்ராக்டில் இருந்த இரு நிறுவன முதலாளிகளையும் மேடைக்கு அழைக்க.. அவர்களை எம்.பி சால்வை அணிவித்து கௌரவம் செய்தார்.

அதன்பிறகு,”மற்றுமொரு முக்கிய நபரை இந்த மேடையில் அறிமுகப்படுத்த வேண்டும். தனது திறமையின் மூலம் இந்த கட்டிடத்தை அழகாக மாற்றியதூரிகை ஆர்க்கின் நிறுவனர் சூர்ய சந்திரிகா அவர்களை அழைக்கிறேன்.

மற்றொருமொரு முக்கிய விசயம் என்னவென்றால் இதற்கான செலவுகளை தனது நிறுவனத்தின் சார்பாகவே ஏற்று இந்த பணிகளை செய்து கொடுத்துள்ளார். இதற்காக உளமார எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.” எனவும் பலத்த கரவொலியோடு மேடைக்கு வந்தாள் சந்திரிகா.

அவளுக்கு கரம் கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தவனின் கரங்கள் சற்று நேரம் அவளோடே தங்கிவிட அதற்குள் பல கேமிராக்கள் படம் பிடித்துக் கொண்டன. பிறகு, எம்.பி அந்த சுகாதார வளாகத்தை திறந்து வைக்க நவீன வசதிகளோடு அமைந்திருந்த அந்த சுகாதார வளாகம் ஒருபுறம் வாஷ்பேசின்கள் இருக்க, அணையாடையை எரிக்கும் எந்திரமும் வைக்கப்பட்டிருந்தது.

அதை சுற்றி தோட்டம் போன்ற அமைப்பு இருக்க வீணாகும் தண்ணீர் அந்த இடத்தில் சேகரமாக வழி செய்யப்பட்டிருந்தது. வளாக அமைப்பு அனைவருக்கும் பிடித்திருக்க, இதை போலவே சுகாதாரமாக கையாண்டு தூய்மையாக வைத்திருப்போம் என பள்ளிகள் சார்பில் உறுதிமொழி கொடுத்தனர்.

பிறகு பேசிய எம்.பி,அரசாங்க அதிகாரிகள் தம்பி சத்யாவை போல பொறுப்புடனும், சமூக அக்கறையாகவும் திகழ்ந்தால் நாட்டின் வளர்ச்சி மேம்படும் என்பதில் யாதொரு ஐயமும் இல்லைஎன சத்யாவை பாராட்டி சென்றார்.

அதன்பிறகு விழா இனிதே முடிய, சந்திரிகா கிளம்பிய சற்று நேரத்திலே வேறு ஒரு காரில் வந்த சத்யா அவளை அழைத்துக் கொண்டான். இருவரும் இணைந்து அவர்களின் புதிய இல்லத்திற்கு செல்ல, தோட்ட பகுதியில் இரு சேர்கள் போடப்பட்டு சிறிய குடில் போன்ற அமைப்பு இருந்தது.

சந்திரிகா வியந்து போய் அதனை பார்க்க அவளை அழைத்து போய் நாற்காலி ஒன்றில் அமரவைத்தான் சத்யா. பிறகு, அவளது பின்னிருந்து அணைத்தபடி அவளது விரல்களை எடுத்தவன் அதை வருடிவிட்டு மெல்லிய இரு இதயங்கள் ஒன்றிணைந்தவாறு வடிவமைக்கப்பட்டு இருந்த ஒரு மோதிரத்தை அணிவித்தான்.

அவள் ஆச்சர்யமாக பார்த்து,என்ன இன்னைக்கு ஐயா ரொம்ப சந்தொஷமா இருக்கீங்க போல. கிப்ட்டெல்லாம் பலமா இருக்கு.” எனக் கேட்டாள். “பின்ன இருக்காதா. ஒன் மந்த் முன்னாடி வரை இந்த புராஜக்ட் சக்ஸஸ் ஆகும்னு எனக்கு நம்பிக்கையே இல்ல. கடைசி நேரத்துல இதுக்கு எஸ்ட்ரா பண்ட்லாம் அலார்ட் பண்ண முடியாது.

கட்டிட வேலையோட ஸ்டாப் பண்ணிடுங்கன்னு மேலிடத்துல இருந்து பிரஷர். என்ன பண்றதுனு புரியாம இருந்தப்ப மொத்த செலவையும் நீ எடுத்துக்கறேனு சொன்னது எவ்வளவு பெரிய ரிலீஃப் தெரியுமா? அதுக்கு இதுவே சின்ன பரிசுதான்.” எனவும், அவனை பார்த்து முறுவலித்தவள்,

இதுல என்ன இருக்கு சத்யா. உங்களோட சக்ஸஸ் எனக்கும் சக்ஸஸ்தான்.” என்றாள் சந்திரிகா. “ம்ம். அப்பறம் மேடம்க்கு வீடு பிடிச்சிருக்கானு சொல்லவே இல்ல.” எனக் கேட்டான். “எனக்கு பிடிச்ச மாதிரியே கட்டிட்டு அப்பறம் என்ன கேள்வி. ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா எப்ப இதெல்லாம் பண்ணீங்க?” என்றாள் சந்திரிகா.

உனக்கு நியாபகம் இருக்கா சூர்யா, அன்னைக்கு ஒருநாள் நாம பேசிட்டு இருக்கும் போது எனக்கு பாரதி பாட்டு சொன்னியே.” எனக் கூறவும்,

காணி நிலம் வேண்டும்பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய்நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்அந்தக்
காணி நிலத்தினிடையேஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும்அங்கு
கேணியருகினிலேதென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டுதென்னைமரம்
பக்கத்திலே வேணும்நல்ல
முத்துச் சுடர்போலேநிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசைசற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவேநன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

என மீண்டும் அந்த பாடல் வரிகளை அவனுக்கு நினைவூட்டினாள் சந்திரிகா.

ஆமாடா. அப்ப இருந்து இது மாதிரி நமக்கே நமக்குன்னு ஒரு வீடு கட்டனும்னு ஆசை. நமக்குள்ள பிரச்சனை வந்து பிரிஞ்சப்ப கூட இதை உன் நியாபகமா கட்டி இங்க இருக்கனும்னு நினைச்சேன். சென்னை டிரான்ஸ்பர் வந்தப்ப இந்த இடம் விலைக்கு கிடைச்சது. வீடு மட்டும் நான் கட்டிட்டு கொஞ்சம் தோட்டத்தை சேன்ஜ் பண்ணேன். இப்போ,

பாட்டுக் கலந்திடவேஅங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்எங்கள்
கூட்டுக் களியினிலேகவிதைகள்
கொண்டுதர வேணும்அந்தக்
காட்டு வெளியினிலேஅம்மா! நின்றன் காவலுற வேணும்.

இந்த ஆசையும் நிறைவேறி என்னோட தேவதையும் என்கூட இருக்கா. நான் ரொம்ப ஹேப்பி.” என அவளை அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். ஆனால் சந்திரிகாவின் தந்தையோ அங்கு தொலைக்காட்சியில் விழாவின் போது இரு கரங்களும் இணைந்த நிலையில் காட்சி அளித்து எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்து கோபமாகி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

இது தெரியாமல் தானே அவளை தானே வீட்டில் விடுவதாக கூறி அழைத்து வந்து கொண்டிருந்தான் சத்யா. சற்று நேரத்தில் நேரப்போகும் கலவரம் பற்றி தெரியாமல் தன்னவன் தோள் சாய்ந்து அந்த ஏகாந்த வேளையினை ரசித்துக் கொண்டிருந்தாள் சந்திரிகா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்