649 views

 

                       “எனது மகனின் திருமண அறிவிப்பே அந்த மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி” என தெய்வ விநாயகம் கூறவும் அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்.

“எனது உற்ற நண்பரும், எங்கள் குடும்பத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட நண்பர் சதாசிவத்தின் மகள் அனுப்பிரியாவே எங்கள் வீட்டின் வருங்கால மருமகள்.” என அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு காதில் விழாத வண்ணம் கேட் அருகில் அவள் சென்றிருக்க திடீரென யாரோ அவளது கையை பிடித்தனர்.

வேறு யாருமல்ல காவ்யாவே தான். “அங்க பங்ஷன் நடந்துட்டு இருக்கு. நீ எங்க போற. வா என்னோட” என்ற காவ்யா அனு மறுக்க மறுக்க அவளை விழா மேடைக்கு கூட்டி வந்தாள். அவள் வந்ததும், “இவள்தான் எங்கள் வீட்டின் இரண்டாவது மருமகள். உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி.” என்றவர்,

அனுவிடம், “இங்க வாடா.” என அழைத்து அஸ்வினின் அருகில் நிற்க வைத்ததோடு, அவன் கையில் ஒரு மோதிரத்தையும் குடுக்க, அவன் அனுவிற்கு போட்டான். மறுபுறம் சரஸ்வதி அனுவிடம் ஒரு மோதிரத்தை குடுக்க, அவளோ நடப்பது எதுவும் புரியாமல் பொம்மை போல அவர்கள் சொல்வதை செய்து முடித்தாள்.

ஆனால் அங்கிருந்த பல பேர் முகத்தில் பொறாமை அப்பட்டமாக தெரிந்தது. “தங்களில் யாரோ ஒருவரின் பெண்ணை மணமுடித்திருந்தால் கூட பரவாயில்லை. இது யாரோ மிடில் கிளாஸ் போல, பெரியவனுக்கு கூட கொஞ்சம் பெரிய இடமாத்தான் பார்த்தாங்க. சின்னவனுக்கு அதை விட குறைந்த வசதியில சம்பந்தம் பேசியிருக்காங்க.” என சிலர் பேசியது சதாசிவம் காதுகளில் கூட விழுந்தது.

ஆனால் என்ன செய்வது. தனது நண்பன் தன் பெண்ணை கேட்கும்போது முடியாது எனக் கூற மனம் வரவில்லை. அதனால் தான் அனுவிடம் கூட கேட்காமல் இந்த ஏற்பாட்டிற்கு சம்மதித்தார். ஆனால் மகளின் அதிர்ச்சியான முகம் ஏதோ தவறு செய்து விட்டோமோ என அவரை எண்ண வைத்தது.

ஆனால் அஸ்வின் முகம் மகிழ்ச்சியாக இருந்ததை உணர்ந்தவர் மகளிடம் பேசி புரிய வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார். அதன்பிறகு, மற்றவர்கள் கிளம்ப ஆரம்பிக்க, நண்பர்கள் குழுவும், அஸ்வின் மற்றும் அனுவின் வீட்டினரே அங்கு இருந்தனர்.

அனுவிடம் தனியாக பேச வேண்டும் என அஸ்வின் கூற, அதுவரை அமைதியாக இருந்த நமது பட்டாளம் ஓவென கூச்சலிட, சத்யாவும் அங்கு வந்து சேர்ந்தான். சத்யாவை பார்த்ததும், “அட நம்ப கலெக்டர் சாரா?” எனக் கேட்டபடி அவரை வரவேற்க, அவனும் அதை ஏற்றுக் கொண்டு தோழமைகளிடம், “என்ன சத்தம். நான் வரப்ப.” எனக் கேட்டான்.

“அது வந்து, மாப்பிள்ளைக்கு பொண்ணுக்கிட்ட தனியா பேசனுமாம்.” என இழுத்தாள் சைந்தவி. “இதுல என்ன இருக்கு. நீங்க போய் பேசிட்டு வாங்க அஸ்வின்.” என அவர்களை அனுப்பி வைத்தவன், “நாங்க அவங்களுக்கு துணைக்கு இருக்கோம் அங்கிள்..” எனக் கூறி அனைவரையும் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான்.

அஸ்வினையும், அனுவையும் ஒரு மூலையில் விட்டவன் மற்றவர்களை நடுவில் அமர வைத்துவிட்டு சந்திரிகாவின் கையை பிடித்து தண்ணீர் டேங்க் பக்கம் நடந்தான் சத்யா. “ஓ. இதுக்கு பேர்தான் ‘பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கறதா?’ நடத்துங்க மாம்ஸ்.” என கிண்டலடித்தாள் சஞ்சனா.

“அது என்னடி. டின்னர்ல பாயாசம்லாம் வைக்கலயே. அதோட அண்ணா இன்னும் சாப்பிடவே இல்ல. அதுக்குள்ள எப்படி பாயாசம்னு சொல்ற.” என அதி முக்கியமாக. அதை பார்த்த தீபக் தலையில் அடித்துக் கொண்டு, “ஏய் சாப்பாட்டு ராமி. அது பழமொழி. எப்ப பாரு சாப்பாட்லயே இரு.” என வாரினான்.

ஓவென்றவள் அந்த பழமொழிக்கும் அர்த்தம் கேட்டு விட்டே ஓய்ந்தாள். அசோக்கோ தனது முக்கிய பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தான். அதாங்க சஞ்சனாவை சைட் அடிக்கறது. தீபக்கும், சைந்தவியும் வாயடித்துக் கொண்டிருக்க, தரணியும் ஏதோ ஃபோன் வந்ததென கீழே சென்று விட உதய்தான் தனித்து விடப்பட்டான்.

சில நிமிடங்களிலே அதை புரிந்து கொண்ட சைந்தவி, அவனையும் தங்களது பேச்சில் கலந்து கொள்ள செய்ய, அதை பார்த்த தீபக் மனதிற்குள் அவளை மெச்சிக் கொண்டான். இதுதான் சைந்தவி. விளையாட்டு குணம் அதிகமாக இருந்தாலும் காரியத்தில் கண்ணாக இருப்பாள். சுற்றிலும் நடப்பதை அழகாக புரிந்து கொள்வதில் கெட்டிக்காரி.

இந்தப்புறம் சத்யா, சந்திரிகாவின் மடியில் படுத்துக் கொண்டு, “உன் பேர்தான்டி சூர்யா. ஆனா அந்த நிலாக்கும், உனக்கும் வித்யாசமே இல்ல.” என கதை அளந்து கொண்டிருந்தான். அவளோ யாரேனும் வந்து விடுவார்களோ என பயந்து எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்க, “மாமா இங்க இருக்கப்ப யாரைடி தேடற என் பொண்டாட்டி” என்றான்.

பின்பு அவனே, “அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க. சைந்தவி பாத்துப்பா. ஆமா உன் தங்கச்சிக்கு அசோக்கை பிடிக்குமா?” எனக் கேட்டான். “ஏன் கேட்கறீங்க. அவங்க ப்ரண்ட்லியாதானே பழகறாங்க.” என்றாள் சந்திரிகா. “போச்சு போ. உனக்கு விசயமே தெரியாதா? அசோக், சஞ்சனாவை லவ் பண்றான். சைந்தவியே கண்டுபிடிச்சிட்டா. உனக்கு தெரியலயா?” என்றான் சத்யா.

“இல்ல சத்யா. நான் நம்ப பிரச்சனைல சஞ்சுவை கவனிக்காம விட்டுட்டேன். சஞ்சுவும் லவ் பண்றாளா?” எனக் கேட்டாள். “அது தெரியாம தானே நம்ப பையன் அவ பின்னாடியே சுத்தறான்.” எனவும், “சஞ்சுவுக்கு அசோக்கை பிடிக்காதுங்க.” என்றாள் சந்திரிகா.

“ஏன் அப்படி சொல்ற. சஞ்சுக்கு வேற ஏதாவது அஃபேர் இருக்கா?” எனக் கேட்டான். “சை சை அதெல்லாம் இல்ல. பொதுவாவே அவளுக்கு சின்ன வயசுல நடந்த சில கசப்பான நிகழ்வுகளால போலிஸ்னாவே பிடிக்காது. அசோக்கிட்ட இவ்வளவு இயல்பா இருக்கறதே எனக்கு ஆச்சர்யம்தான்” என்றாள் சந்திரிகா.

“ஆனா எனக்கு அப்படி தோணல சூர்யா. சஞ்சுக்கு அசோக்கை பிடிச்சிருக்கு. நீ சொன்ன மாதிரி ஏதோ ஒன்னு அவளை தடுக்குது. சரி பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு. சஞ்சனாக்கு பிடிக்கலன்னா கண்டிப்பா நான் அவளை போர்ஸ் பண்ண மாட்டேன். அசோக்கும் அப்படிதான். சோ நீ கவலைப்படாத.” என வாக்குறுதியும் அளித்ததில் சந்திரிகா பெருமையாக உணர்ந்தாள்.

அந்தப்புறம் அனு எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்க அஸ்வின், “சாரி அனு. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுக்கனும்னு தான் உன்கிட்ட எதுவும் சொல்லல.” என்றான். அவள் அமைதியையே கடைபிடிக்க, “உனக்கு என்னை பிடிக்கும்தானே அனு.” எனக் கேட்கும் போது ஏனோ ஒரு பரிதவிப்பு வந்தது.

“சோ. இதெல்லாம் எனக்காக. எனக்கு உங்கள பிடிக்கும். நான் உங்களை லவ் பண்றேன். இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு நீங்க என்னை கேட்காம இவ்வளவு பெரிய முடிவு எடுத்துட்டீங்க அப்படிதானே.” என்றாள். அவனோ அவள் என்ன சொல்ல வருகிறாள் என புரியாமல், “ஆமா அனு.” என சொல்லி வைக்க,

“அதத்தான் நானும் சொல்றேன். உங்களுக்கு என்ன பத்தின அபிப்ராயம் என்ன? நீங்க என்ன லவ் பண்ணல. வேற ஒரு பொண்ணை தான் லவ் பண்றீங்க.  அப்பறம் என்ன பரிதாபத்துல எனக்கு வாழ்க்கை குடுக்கறீங்களா? உங்களுக்கு தனியா பிஸினஸ் பண்ற, ஸ்டேட்டஸ்ல உங்களுக்கு ஈக்குவலான பொண்ணு தான் கல்யாணம் பண்ணிக்க வேணும்.

இதை என்கிட்டயே சொல்லி இருக்கீங்க. அப்பறம் ஏன் இந்த மிடில் கிளாஸ்ல, இன்னும் படிப்பை கூட முடிக்காத என்னை செலக்ட் பண்ணீங்க. உனக்காகதான் என் முடிவை மாத்திக்கிட்டேனு சொன்னா கெட்ட கோவம் வரும். என்னை பாத்துக்க எனக்கு தெரியும்.” எனப் பேசிக் கொண்டே போக, அஸ்வினோ அதிர்ந்து நின்றான்.

சந்திரிகாவின் மீது உள்ள விருப்பத்தால் அவளை மனதில் வைத்து விளையாட்டாக சொன்னதெல்லாம் இப்படி பூமராங் எடுக்கும் என நினைத்திருந்தால் அவன் இவளிடம் உளரியே இருக்க மாட்டானே.

“இல்ல அனு. அப்படில்லாம் இல்ல. ப்ளீஸ். நான் அந்த பொண்ணை லவ்லாம் பண்ணல. ஏதோ ஒரு கிரஷ் அவ்ளோதான். அதுல ஏதோ விளையாட்டா சொன்னதெல்லாம் நீ பெரிசா எடுத்துக்காத. எனக்கு உன்னை பிடிக்காம இருக்குமா?” என்றான் அஸ்வின்.

அப்போதுதான் கோபத்தில் அந்த தவறை செய்தாள் அனு. “சோ. நீங்க லவ் பண்ண பொண்ணு உங்களுக்கு கிடைக்கல. அதுனால ஆப்ஷனால என்னை செலக்ட் பண்ணியிருக்கிங்க அப்படிதானே?” என வாயை விட்டாள். அதுவரையில் பொறுமையாக பேசிக் கொண்டிருந்த அஸ்வினுக்கு அந்த வார்த்தைகளை கேட்டதும் எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை.

“வாயை மூடுடி. என்ன திட்றேனு உன்னையை ஏன் கேவலப்படுத்திக்கற. என்ன சொன்ன? உன்னை ஆப்ஷன்ல வைச்சு கல்யாணம் பண்ணிக்க நினைச்சனா. ஆமா நான் லவ் பண்ணேன் தான். ஆனா அது லவ்வே இல்லனு நல்லா புரிஞ்சு என் மனசையும் மாத்திக்கிட்டேன்.

நீ என்ன லவ் பண்றனு தெரிஞ்சப்ப எனக்கே முதல்ல அதிர்ச்சியாதான் இருந்தது. ஆனா அதுக்கப்பறம் யோசிச்சு பார்த்தப்ப தான் உன் கூட இருந்த நாட்கள்ள நான் எவ்வளவு ரிலாக்ஸா இருந்துருக்கேனு பீல் பண்ணேன். என்னோட லவ் பெயிலியர் பத்தி உனக்கு தெரியும்.

ஆனாலும் நீ அதை பத்தி என்கிட்ட பேசாமலேயே என்னையை சந்தோஷமா வைச்சுக்க எவ்வளவு முயற்சி பண்ண. அதெல்லாம் பார்த்து பார்த்து, கொஞ்ச கொஞ்சமா உன்மேல ஒரு ஈர்ப்பு வந்திருச்சு. கண்டிப்பா அது லவ்வா மாறும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

அந்த நம்பிக்கை உனக்கு இல்லனா, நீ ஆப்ஷனா இருக்கனு தோணுச்சுனா, இப்பவே இந்த கல்யாண பேச்சை நான் நிறுத்திடுறேன். போடி.” என்றவன், அவளின் பதிலை எதிர்பார்க்காமல் கோபமாக இறங்கி கீழே சென்றான்.

அவன் மட்டும் தனியாக செல்வதை பார்த்த சஞ்சனா, அனுவிடம் வர, அவளோ அதிர்ச்சியோடு அழுகையும் வர அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி போய் நின்றிருந்தாள்.

அவளை ஆதரவாக அணைத்துக் கொண்ட சஞ்சனா, “என்னாச்சு மா. ஏதாவது சண்டையா உங்களுக்குள்ள?” எனக் கேட்டாள். இல்லையென தலையாட்டவும், “சரி வா கீழ போகலாம். முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வச்சுக்க.” என்றவாறே அழைத்து செல்ல, மற்றவர்களும் இறங்கி சென்றனர்.

சந்திரிகாவின் தந்தைக்கும் இந்த விழாவிற்கு அழைப்பு வந்திருந்தது. கடைசி நேரத்தில் ஒரு வேலை வந்துவிட, அவரால் அங்கே போக முடியாமல் போய்விட்டது. அது இவர்களுக்கு வசதியாக இருந்தாலும், அடுத்த நாளே அங்கு நடந்த அனைத்தும் அவரது கவனத்திற்கு வந்தது.

‘கடைசி வரை எதுவானாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். சந்திரிகா மனதை மாற்றுவது என் பொறுப்பு.’  என எனக்கு நம்பிக்கை கொடுத்து விட்டு வேறொரு பெண்ணோடு நிச்சயமே செய்து விட்டானே.

இவனை நம்பி வந்த மற்ற சில வரன்களையும் தட்டிக் கழித்தாயிற்று. இப்போது அவன் வேறு வந்து நிற்கிறான். இப்போது என்ன செய்வது என அவரது மூளை வேகமாக யோசனை செய்ய தொடங்கியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்