687 views

 

         அன்றைய இரவு சத்யாவிற்கும், சந்திரிகாவிற்கும் உறங்கா இரவாகி போனது. இருவரும் அலைபேசியின் உதவியோடு பழைய கதைகளை பேசி மகிழ, நீண்ட நாட்களுக்கு பின் இருவரிடத்திலும் நிம்மதி விரவிக் கிடந்தது. ஆனால் காலையில் சத்யா கிளம்பி அலுவலுக்கு சென்று விட. சந்துவோ பத்து மணியாகியும் உறங்கி கொண்டிருந்தாள்.

அவளின் நிலையை உணர்ந்த தரணியும், சைந்தவியை அழைத்துக் கொண்டு பணிக்கு சென்று விட, சஞ்சனாவும் மருத்துவமனைக்கு சென்று விட்டாள். கீர்த்தி, சந்திரிகா சகஜமாக இன்னும் பேசவில்லை என்றாலும் இப்போதெல்லாம் முகத்தை திருப்புவதில்லை என்பதால் அவளின் அறைக்கதவை தட்டினாள்.

கதவை திறந்த சந்திரிகா தூக்க கலக்கத்தில் மீண்டும் சென்று படுத்துக் கொள்ள,என்னாச்சு சந்து உடம்பு ஏதாவது சரியில்லயா?” என கேட்டபடி மெத்தையில் அமர புரண்டு அவள் மடி மீது படுத்த சந்திரிகா, “ப்ளீஸ் கீர்த்தி. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறனே.” எனக் கொஞ்ச சட்டென கண்களில் நீர் கோர்த்து விட்டது கீர்த்திக்கு.

எத்தனை வருடங்கள் ஆகி விட்டது இவளின் உரிமையான பேச்சை கேட்டு என நினைத்து. தூங்கி கொண்டிருந்த சந்திரிகாவின் கன்னத்தில் கண்ணீர்த்துளிகள் விழுகவும் பதறி போய் எழுந்தாள். “ஹேய். கீர்த்தி. இப்ப என்னாச்சுனு இப்படி அழுகற?எனக் கேட்டாள் சந்திரிகா.

போடி பேசாத. நான் என்ன தப்பு பண்ணேன். எனக்கு எதுவுமே தெரியாது. ஆனா இத்தனை நாளா என்கிட்ட பேசி இருப்பியா நீ.” எனக் கேட்டாள் கீர்த்தி. “சாரிடி. ஏதோ கோபம். யார்க்கிட்டயும் பேச பிடிக்கல. அவ்ளோ தான். சரி விடு. இனிமே பழையபடி பேசுவேன். கொஞ்சம் சிரியேன்.” எனக் கூறி சிரிக்கவும் வைத்தாள்.

பிறகு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு இருவரும் சிரித்து பேசியபடியே இறங்கி வர, மற்ற அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர். அதோடு இல்லாமல் தனது பாட்டியிடம் சென்றவள்,பாட்டி இன்னைக்கு நீங்களே எனக்கு ஊட்டி விடுறீங்களா?” எனக் கேட்க, அவருக்கு மயக்கம் வராத குறைதான்.

இதோ உடனே எடுத்துட்டு வரேன் கண்ணு. நீ வா.” என அழைத்துவிட்டு உள்ளே செல்ல, தாத்தாவிடம் சென்று, “சாரி தாத்தா.” என்க, அவர்பரவால்ல விடுறா. ஏதோ கெட்ட நேரம். நீ போய் சாப்பிடு.” என அனுப்பி வைத்தவர் இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என சிந்தனையில் ஆழ்ந்தார்.

பிறகு அலுவலகம் கிளம்பி சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த போது அவளது அண்ணன் வந்திருக்க அவனிடமும் கூட இயல்பாகவே பேசினாள். அவளிடம் சுரேந்திரன்,அண்ணன் மேல கோபம் போயிடுச்சாடா. அப்பா பண்றது தப்புன்னு தெரிஞ்சும் நான் அவருக்கு சப்போர்ட் பண்ணியிருக்க கூடாது.

அந்த நேரத்துல தப்பான ஒருத்தரால உன் வாழ்க்கை வீணாகிட கூடாதுன்னு மட்டும் தான் தோணுச்சு. உன் தேர்வு தப்பாகாதுனு நம்பிக்கை இல்லாம போயிடுச்சு.” என்றான். “சரி விடுண்ணா. இனிமேல் ஆக வேண்டியதை பார்க்கலாம்.” என்றவள் அத்தோடு தீக்ஷிதாவிடம் விளையாட சென்று விட்டாள்.

இரவு சக்கரவர்த்தி வரும்போது ஹாலில் அனைவரும் அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருக்க, அதை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் அவரது அறைக்கு சென்று விட்டார். அங்கு யாருமே அவரை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திரிகாவுடன் பொழுதை கழிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

            அன்று அலுவலகத்திற்கு சென்ற அசோக்கிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது உளவுத்துறை மூலம் இருநூறு கிலோ அளவில் போதை பொருட்கள் கைமாற போவதாக தகவல் வந்திருந்தது.

அது மட்டுமில்லாமல் இன்றிலிருந்து போதை பொருள் தொடர்பான வழக்கில் இருந்து அசோக் விடுவிக்கப்பட்டு புதிதாக குமரன் என்பவருக்கு அந்த வழக்கு கொடுக்கப்பட்டது. நீண்ட நாட்களாக விசாரணை செய்தும் சரியான குற்றவாளியை கண்டு பிடிக்காமல் தாமதம் செய்வதாக காரணம் சொல்லப்பட்டது.

அனைத்திற்கும் அமைதியாக இருந்தவன் மீட்டிங் ஹாலை விட்டு வெளியேற கமிஷ்னரே சற்று திகைத்து போனார். நிச்சயம் அவன் ஏதாவது பிரச்சனை செய்வான். அதன் மூலம் ஒரு மெமோவாவது குடுத்து விட வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தவருக்கு அது வருத்தம் தான்.

அதை விட அசோக் அவரது கேபினுக்கு வந்து ஒரு கடிதத்தை நீட்ட,இதுக்கெல்லாம் ராஜினாமா லெட்டர் குடுத்தீங்கன்னா எங்கையும் வேலை பார்க்க முடியாது அசோக்.” என்றார் வேகமாக..

அச்சோ சார் அப்படில்லாம் இல்ல. அது லீவ் லெட்டர். நீங்க வந்தவுடனே இந்த கேஸ் எல்லாம் என் தலையில கட்டவும் என்னால ஊரை கூட சரியா சுத்தி பார்க்க முடியல. இப்பதான் என்னை நீங்களே இவ்ளோ ஃப்ரீ ஆக்கிட்டிங்களே. சோ ஒரு பத்து நாள் லீவ் குடுத்தா நானும் ஜாலியா ரெஸ்ட் எடுத்துட்டு வருவேன்.” என்றான் அசோக்.

ஓகே கேரி ஆன்.” என்றவர் அசோக் வெளியில் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு யாருக்கோ ஃபோன் செய்து நடந்ததை கூற மறுமுனையில், “ஹேய் அதுக்குன்னு நீ அசால்டா இருந்தராத. எதுக்கும் அவனை ஃபாலோ பண்ண ஒரு ஆள் போடு.” என பதில் வரவும் கமிஷ்னரும் அதை செயல்படுத்தினார்.

அங்கிருந்து கிளம்பிய அசோக் நேராக சென்றது சஞ்சனாவின் மருத்துவமனைக்கு தான். அந்த நேரத்தில் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை சஞ்சனாவின் திகைத்த முகமே அவனுக்கு உணர்த்தியது.

கண நேரத்தில் அதை மாற்றிக் கொண்ட சஞ்சனா, என்னாச்சு சார். ஏதாவது கேஸ் விசயமா பார்க்க வந்தீங்களா?எனக் கேட்டாள். அசோக், சாராகி விட்டதை குறித்துக் கொண்டவன்,ம்ம் ஆமா. முக்கியமான கேஸ் தான் மேடம். என்னோட அழகான இதயத்தை ஒரு பொண்ணுகிட்ட குடுக்கலாம்னு நினைச்சேன்.

ஆனா அவகிட்ட ரெஸ்பான்ஸே இல்ல. எப்படி இதை டீல் பண்றதுன்னு ஒரு கவுன்சிலிங் கிடைக்குமா? ஏன்னா, நீங்க மனசு பத்தி நல்லா படிச்ச டாக்டர். உங்களுக்கு இதை பத்தி நல்லா தெரியும்ல மேடம் அதான்.” என்றான் சிரித்தபடி.

எனக்கு அதை பத்தில்லாம் எதுவும் தெரியாது. நீங்க முதல்ல கிளம்புங்க. டியூட்டி டைமை இப்படி வேஸ்ட் பண்றீங்களே? இதெல்லாம் தப்பு இல்லையா?” என்றாள் சஞ்சனா. “சாரி மேடம். நான் டியூட்டில இல்ல லீவ்ல தான் இருக்கேன். இப்பதான் லீவ் சொல்லிட்டு வந்தேன். அதான் யூனிபார்ம். உங்களுக்கு ஓகே இல்லனா சேன்ஞ் பண்ணிடலாம்.” என்றான் அசோக்.

ஓகே டியர் நாளைக்கு வரேன். நீ சொன்ன மாதிரி கேஷூவல்லயே. பாய்.” என அவளது கன்னத்தில் தட்டியவன் கிளம்பி சென்று விட, இவள்தான் சில நிமிடங்கள் சிலையாகி போனாள்.

            தரணியும், சைந்தவியும் புது வீடு கட்டும் சைட்டில் இருக்க, வீடு அழகாக எழுப்பப்பட்டு கொண்டிருந்தது. வீட்டில் பதிப்பதற்கு பெல்ஜியம் கண்ணாடிகள் வேண்டும் என்பது சைந்தவியின் எண்ணமாக இருக்க, தீபக்கோ இப்போது இங்கேயே அதே தரத்தில் கிடைப்பதால் அதையே வாங்கி கொள்ளலாம் எனக் கூறிக் கொண்டிருந்தான்.

இது ஒரு பக்கம் இருக்க தரணியும், அஸ்வினும் மற்றொரு புறம் நின்று சந்திரிகாவும், சத்யாவும் சேர்ந்த கதையை பேசிக் கொண்டிருந்தனர். “அப்பறம் என்ன ப்ரோ. சந்துவும் சீக்கிரம் செட்டிலாகிடுவா போல. நீங்க எப்ப கல்யாண சாப்பாடு போட போறீங்க.” என்றான் அஸ்வினிடம் தரணி.

சீக்கிரமாவே போட்றலாம் ப்ரோ.” என்றவன்,எல்லாரையும் பத்தி கவலைப்படுறீங்க. நீங்க எப்ப பண்றதா ஐடியா.” எனக் கேட்டான் அஸ்வின். “அடுத்தவங்கள மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கதான் ஜாலியா இருக்கும். நம்ப இன்னும் கொஞ்ச நாள் ஃப்ரீயா இருக்கலாம்னு தோணுது.” என்றவன் அவர்களிடம் விடைபெற்று அலுவலகத்திற்கு கிளம்பினான்.

இங்கோ இன்னும் தீபக், சைந்தவி ஒரு முடிவுக்கு வராமல் வாதிட்டு கொண்டிருக்க, “ஹேய். ஹேய். இரண்டு பேரும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க. இப்ப என்ன கிளம்பி போய் லோக்கல்ல. ஒரு ரவுண்ட் பாத்துட்டு வாங்க. செட் ஆகாதுன்னா இம்போர்ட் பண்ணிக்கலாம். ஓகே.” என தீர்வு சொல்லி இருவரையும் வெளியே அனுப்பினான்.

பைக்கிலே போகலாம் என்று தீபக்கோடு கிளம்பிய சைந்தவி சிறிது தூரம் வந்ததுமே ஒரு கடையில் நிறுத்த சொல்ல, ஏனென்று கேட்டான் தீபக். “இந்த கடையில ஜிகிர்தண்டா மதுரைல கிடைக்கற மாதிரியே இருக்குமாம். குடிச்சிட்டு போலாமா ரூபன்.” எனக் கேட்டாள் சைந்தவி.

சரியென்று இறங்கி குடித்து விட்டு கிளம்ப மீண்டும் அதே போல மற்றொரு கடை முன் நிறுத்த,இந்த பாட்டி சூப்பரா பணியாரம் சுடுவாங்க. ஒரே ஒரு பிளேட்.” என்றவள் அதை ருசித்து விட்டு வண்டியில் ஏறினாள். பின்பு இதே போல இந்த கடையில் இது பிரபலம், அந்த கடையில் அது பிரபலம் என பலவித உணவுகளை ருசித்துக் கொண்டே செல்ல கண்ணாடி பார்த்த பாடில்லை.

இவ நிஜமாலும் கண்ணாடி பார்க்க தான் நம்மளோட வந்தாளா? இல்ல நம்ப பர்ஸை காலி பண்ண பிளான் பண்ண வந்தாளா? ஒரு வேளை ஏதாவது பேய் கீது பிடிச்சிருச்சா. வெஜ், நான் வெஜ்னு கலந்து கட்டி அடிக்கறாளேஎன புலம்பிக் கொண்டிருந்தான் தீபக் மனதிற்குள் தான். கடைசி வரை வந்த வேலையையே பார்க்காமல் ஊர் சுற்றி விட்டு, “அச்சோ டைம் ஆச்சு. நாம நாளைக்கு வரலாமா?எனக் கேட்டாள் சைந்தவி.

எம்மா தாயே, வண்டில ஏறு. உங்க வீட்லயே விட்டுறேன். நாளைக்கு அந்த அஸ்வினையே கூட்டிட்டு போ. இன்னைக்கே என் பர்ஸ் காலி.” என்றவன் வீட்டில் விட்டு விட்டு உடனே கிளம்பி விட்டான். அவனை நினைத்து சிரித்தபடியே சைந்தவியும் வீட்டுக்குள் நுழைந்து சந்திரிகாவோடு அமர்ந்து கொண்டாள்.

          அந்த ஏகாந்தம் வீசும் மாலைப்பொழுதில் அஸ்வினின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. நகரின் ஆகப் பெரும் செல்வந்தர்களும், முக்கிய நபர்களும் அந்த வீட்டில் குழுமியிருக்க, அரசாங்க அலுவலர்களும் சிலர் வந்திருந்தனர். இதற்கெல்லாம் காரணம் அஸ்வின்தான்.

ஆம் அவனுக்கு இன்று பிறந்தநாள். அதை சிறப்பாக கொண்டாடுவதற்காக அவனது குடும்பத்தினர் பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அஸ்வினின் அழைப்பை ஏற்று நண்பர் பட்டாளங்கள் அனைவரும் வந்து விட்டனர். சத்யாவை தவிர.

அஸ்வினின் சொந்த பந்தங்களையும் விழாவிற்கு அழைத்திருந்த படியால், அதோடு அனுவின் பெற்றோரை கூட விடாமல் வரவழைத்திருந்தனர். ஒருபுறம் பஃபே முறையில் உணவு பரிமாற தயாராக இருக்க, மறுபுறம் மெல்லிசை கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் அஸ்வின் அந்த பெரிய கேக்கினை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாட வந்திருந்த அனைவரும் வாழ்த்துக்களோடு தங்களது பரிசினையும் அளித்தனர். ஆனால் அனு மட்டும் எந்த ஒரு பரிசையும் அளிக்கவில்லை.

கொண்டாட்டம் முடிந்து அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க அஸ்வினின் தந்தை, “லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன். என்னுடைய அழைப்பினை ஏற்று இங்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த அழகிய தருணத்திலே மற்றொருமொரு அழகான நிகழ்வையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல் கொண்டுள்ளேன்.

அது வேறு ஒன்றுமில்லை. என்னுடைய மகனின் திருமண அறிவிப்பு தான் அது.” எனக் கூறவும் அவையில் பலத்த கரவொலி கிளம்பியது. அங்கிருந்த அனைவரும் ஒருவித எதிர்பார்ப்பில். மணப்பெண் யாராக இருக்கும் என ஆவலோடு எதிர்பார்க்க அனு மட்டும் அதை அதிர்ச்சியோடு பார்த்தாள். கண்களில் குளம் கட்டிவிட யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து வெளியேறி கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்