361 views

 

                அன்று காலையிலே சந்திரிகாவிற்கு கலவையான உணர்வுகள் தோன்றிக் கொண்டிருந்தது. அன்று சண்டை போட்டு விட்டு வந்த பிறகு சத்யாவை பார்க்க இன்றுதான் மீண்டும் அலுவலகத்திற்கு கிளம்புகிறாள்.

‘அதனால்தான் இப்படி தோன்றுகிறதோ.’ என யோசித்துக் கொண்டே கிளம்பியவள், இன்று அவன் என்ன பேசினாலும் கண்டுக் கொள்ள கூடாது. என முடிவெடுத்துக் கொண்டே வீட்டில் இருந்து வந்தாள். நல்லவேளையாக, சத்யா அன்று வேலையை தவிர வேறு எதையும் பேசவே இல்லை.

அவர்களுக்குள் நடந்த பிணக்கை கூட மறந்து விட்டு இயல்பாகவே இருந்தான். இவளும் அதன்பின் இயல்பாக வேலையை கவனித்தாள். சரியாக ஒரு மணி நேரம் அவனுடன் மீட்டிங்கை முடித்து விட்டு அவள் சொல்லிக் கொண்டு கிளம்ப சத்யா, “ஒரு நிமிஷம் மேடம்” என்றான்.

இவள் திரும்பி பார்க்க, “எதையோ மறந்துட்டு போற மாதிரி இல்ல” எனக் கேட்டான். “நானா.” என ஒருமுறை பொருட்களை சரி பார்த்தவள், “இல்லையே சார் எல்லாம் எடுத்துட்டேன்.” எனவும் அவன் தலையசைக்க திரும்பி நடந்தாள்.

வாசல் வரை சென்ற போது தான் நினைவுக்கு வர வேகமாக திரும்ப, அவள் பின்னே வந்து கொண்டிருந்த சத்யா மீது மோதி விழப்போக, “ஹேய் பார்த்து.” என சட்டென அவளை தாங்கி பிடித்தான் சத்யா. ஓரிரு நிமிடங்கள் அப்படியே இருவரும் இருக்க, அப்போது சத்யாவின் கண்களில் தெரிந்த காதலை கண்டு அவள் திகைத்தாள்.

சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டவன் அவளிடம் இருந்து விலகி நிற்க, அதற்கும் காரணம் புரியாமல் பார்த்த சந்திரிகா மறந்து சென்றிருந்த ஸ்வீட் பாக்ஸை அவன் கைகளில் கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.

உதய் அன்று பணிக்கு சேர்வதால் காலையில் நேரமாக சென்றவன் சேர்ந்து விட்டு சத்யாவுடனே வீட்டுக்கு செல்லலாம் என நினைத்து ஆட்சியர் அலுவலகம் வந்தான். அவன் வந்த நேரம், சத்யா ஏதோ மீட்டிங்கில் இருப்பதாக தெரிய அவனது மீட்டிங் ஹாலுக்கு சற்று தள்ளி வெளியே அமர்ந்து செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தான்.

சந்திரிகா பின்னே வந்த சத்யா அவளை அழைத்து, “சொல்ல மறந்துட்டேன். எவ்ரி வீக் எனக்கு வொர்க் டீடெய்ல்ஸ் அப்டேட் பண்ண முடியுமா?” எனக் கேட்டுக் கொண்டே அவளுடன் இணைந்து நடந்தான். “ஷ்யூர் சார் கண்டிப்பா.” எனவும் அவன் அவளிடம் விடைபெற்று முன்னே நடக்க அங்கு அமர்ந்திருந்த உதய்யை அவன் பார்க்கவில்லை.

ஆனால் உதய், சத்யாவை பார்த்து விட்டு எழுந்தவன் அவன் பின்னால் வந்து கொண்டிருந்த சந்திரிகாவை பார்த்து அதிர்ச்சியுற்றான். பார்த்து பல வருடங்கள் ஆன பின்பும், சந்திரிகாவின் முகம் அவன் நினைவில் இருக்க அவளோ அவனை பார்க்காமலே சத்யாவின் நினைவில் கடந்து சென்றாள்.

ஒரு சில நிமிடங்கள் கழித்தே தன்னை மீட்டவன் அவளை பார்க்க, அவள் வெளியே சென்றிருந்தாள். அவளை தேடிக் கொண்டே வெளியில் வந்தான். வெளியே காரில் ஏறிக் கொண்டிருந்த சந்திரிகாவை பார்த்தவன் வேகமாக கார் முன்னே வந்து நின்றான்.

அவனை பார்த்ததும், “யார்ங்க. ஏன் இப்படி கார் முன்னால வந்து நிற்கறீங்க?” என கேட்டுக் கொண்டே காரில் இருந்து இறங்கினாள் சந்திரிகா. உதய்யை பார்த்ததும் முதலில் அடையாளம் தெரியாமல் பார்த்தவள், ஓரிரு நிமிடங்களிலே அவனை கண்டு பிடிக்கவும். “உதய்யண்ணா” என்று அவள் இதழ்கள் முணுமுணுத்தது.

ஆனால் அதற்கு முன்பே உதய், அவளை பார்த்து கோபத்தில் கத்த ஆரம்பித்து விட்டான். “ஏய் சந்திரிகா. நீ எப்படி இங்க? என்ன அவனை நிம்மதியாவே இருக்க விடக் கூடாதுன்னு குடும்பமா சேர்ந்து கங்கனம் கட்டிட்டு இருக்கீங்களா? உங்க கண்ல லாம் படவே வேண்டாம்னு தான் இத்தனை வருஷமா கண் காணாத இடத்துல இருந்தோம்.

இப்ப அவன் இங்க வந்த கொஞ்ச நாள்ள நீ மறுபடி அவனை தேடி வந்துட்டீயா? இந்த தடவை என்ன பிளான் பண்ணி இருக்கீங்க நீயும் உங்க அப்பனும்? ஏற்கனவே பண்ணதெல்லாம் பத்தாதுன்னு இப்ப என்ன பண்றதா இருக்க? அவன் செத்தாதான் உங்களுக்கெல்லாம் நிம்மதியே வருமா?” என கத்தினான் உதய்.

அவன் பேச்சை கேட்ட சந்திரிகாவிற்கு எதுவும் புரியாமல் திகைத்து போய் அவனை பார்க்க, அவன் அதையெல்லாம் கண்டு கொண்டது போலவே தெரியவில்லை. “இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். இனிமேல் நீயோ உன் அப்பனோ சத்யா விசயத்தில தலையீட்டிங்க அப்பறம் அவ்ளோதான்.

சும்மா வந்து சத்யாவை பார்க்கறதெல்லாம் இத்தோட நிறுத்திக்க.” என திட்டியவன் அவள் என்ன கூற வருகிறாள் எனக் கூட கேட்காமல் அங்கிருந்து சென்று விட்டான். அவன் பின்னாலே வேகமாக ஓடியவள், “அண்ணா நில்லுங்கண்ணா.” என்றபடி முன்னே சென்று நின்றாள்.

“நீங்க என் மேல கோபமா இருக்கீங்கன்னு தெரியுது. இப்ப எதுவும் பேச வேண்டாம். நாளைக்கு ஒரு ஐந்து மணிக்கு பீச்சுக்கு வர முடியுமாண்ணா? நானும் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். பிளீஸ்னா. இது சத்யாவுக்கு தெரிய வேண்டாம்.” என கெஞ்சினாள் சந்திரிகா.

“என்ன என்கிட்டயே உன் நாடகத்த ஆரம்பிச்சிட்டியா? இதுக்கெல்லாம் அசர ஆள் நான் இல்லை.”  என்றான் உதய் கோபமாக. “கண்டிப்பா நீங்க வரனும்னா அவ்வளவுதான் சொல்லுவேன். உங்க ஃப்ரண்ட் வாழ்க்கையில நிஜமாலும் உங்களுக்கு அக்கறை இருக்குன்னா நீங்க வருவீங்க” என கூறியவள், அங்கிருந்து கிளம்பினாள்.

‘புதுசா ஏதாவது கதை விட போறாளா? போய்தான் பார்ப்போமே. என்ன சொல்றான்னு’ என எண்ணிக் கொண்டவன் அலுவலகத்திற்குள் நுழைந்தான். அதே நேரம் சத்யாவுக்கு உதய் வந்த விசயம் கூறப்பட அவனும் இவனை தேடிக் கொண்டு எதிரில் வந்தான்.

“ஒன்னுமில்லடா ஒரு ஃபோன் வந்தது. அதான்.” என காரணம் சொன்ன உதய் அவனோடு சென்று, சந்திரிகா அங்கு வருவதற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டு பின்பு இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்.

           அடுத்த நாள் மாலை ஐந்து மணிக்கு பெசன்ட் நகர் பீச்சில் சந்திரிகா காத்துக் கொண்டு இருக்க, அரை மணி நேரம் கழிந்த பின்பும் உதய் வரவில்லை. உதய் வர மாட்டான் என நினைத்து அவள் எழ அதற்குள் அங்கு அவன் வந்து விட்டான்.

“என்னாச்சு கிளம்பிட்டியா? கொஞ்ச நேரம் கூட வெயிட் பண்ற பழக்கம் இன்னமும் வரல.” என்றான் காட்டமாக. “என்னாச்சு அண்ணா உங்களுக்கு. ஏன் என் மேல கோபமா இருக்கிங்க? நேத்தே கேட்கனும்னு தான் நினைச்சேன்.

ஆனா சத்யா முன்னாடி நாம சண்டை போட்டா தேவையில்லாத பிரச்சனை வரும்னு தான் உங்களை தனியா பார்க்க வர சொன்னேன். ஆனா நீங்க இப்பவும் கோபமா பேசறீங்க. எவ்ளோ வருஷம் கழிச்சு உங்களை பார்க்கறேன். நீங்க ரொம்ப மாறீட்டிங்கண்ணா.

ஏதேதோ பேசறீங்க. எனக்கு எதுவும் புரியல. ப்ளீஸ்னா எதுனாலும் புரியற மாதிரி சொல்லுங்க. நான் சத்யாவை சாகடிக்கறனா?’ என்றாள் வருத்தமாக. அவன் பதில் பேச வருவதற்குள் அவனது ஃபோன் ஒலிக்க எடுத்து பார்த்தால் சத்யாதான் அழைத்திருந்தான்.

“மச்சி எங்கடா இருக்க?” என மறுமுனையில் சத்யா கேட்க, “கொஞ்சம் வெளில இருக்கேன்டா. என்னாச்சு?” எனக் கேட்டான் உதய். “என்ன வேலையா இருந்தாலும் அப்படியே விட்டுட்டு, சீக்கிரம் கிளம்பி வாடா. ஒரு எமர்ஜென்ஸி” என்ற சத்யா ஃபோனை வைத்து விட்டான்.

“என்னனு சொல்லுடா.” என கேட்கும்போது மறுமுனை கட் ஆகி இருக்க, உடனே வேகமாக திரும்பி நடந்தான். “அண்ணா. ஏன் எதுமே சொல்லாம போறீங்க. நான் என்ன தப்பு பண்ணேன்?” என சந்திரிகா கத்த. “நீ என்ன தப்பு பண்ணன்னு உன் மனசாட்சியை கேட்டு பாரு புரியும்.” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.

செல்லும்போது சந்திரிகாவின் காரை கடக்க, உள்ளே இருந்த தரணியை கண்டு ஆத்திரமுற்றவன் அதே கோபத்தோடு கிளம்பினான். ஆம் சந்திரிகா தனியே கிளம்ப தானும் வருவதாக கூறி அவளுடன் வந்தான் தரணி. பிறகு சந்திரிகாவும் காரில் ஏற, “என்னாச்சு. ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்டான் தரணி.

“ஒன்னுமில்ல. நீ வண்டியை எடு.” என்றவள் அமைதியாக சீட்டில் சாய்ந்து அமர்ந்தாள். அவளை பார்த்த தரணிக்கு பாவமாக இருந்தது. இவள் மகிழ்ச்சியாக இருக்க இனிமேலாவது ஏதாவது நடக்க வேண்டும் என நினைத்து பெருமூச்சு விட்டவன் காரை கிளப்பினான்.

உதய் அங்கிருந்து அடித்து பிடித்து வீட்டிற்கு வந்து பார்த்தால் சத்யா ஒரு சோபாவிலும், அசோக் ஒரு சோபாவிலும் கண்மூடி அமர்ந்திருந்தனர். தொலைக்காட்சியில்,

விழிமூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் அன்பே அன்பே..!!!

எனப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அதில் கடுப்பானவன் ரிமோட்டை எடுத்து டிவியை அணைக்கவும், பாடல் நின்றதால் இருவரும் கண் திறந்து அவனை பார்த்தனர். “ஏண்டா டிவியை ஆஃப் பண்ண? நல்ல சாங் தானே நீயும் வந்து கேட்காம, போடுறா பாட்டை” என்றான் அசோக்.

கையிலிருந்த ரிமோட்டாலே அவனை அடித்தவன், “ஏதோ எமர்ஜென்ஸின்னு என்னையை வர சொல்லிட்டு நீங்க ஹாயா பாட்டு கேட்கறீங்களா? என்னன்னு சொல்லுடா?” எனக் கேட்டான் உதய் சத்யாவை பார்த்து.

“ஒன்னுமில்லடா நான் கூப்டா உடனே வந்து நிப்பான் உதய்னு இவன்கிட்ட சொன்னேன். ஆனா இவன் நம்பல. அதான் அப்படி கால் பண்ணேன். நான் சொன்ன மாதிரியே எவ்வளவு வேகமா வந்தான் பார்த்தியா. எடுறா ஆயிரத்தை.” என உதய்யிடம் ஆரம்பித்து அசோக்கிடம் முடித்தான்.

“போடா உன்னால எனக்கு ஆயிரம் ரூபா நஷ்டம்.” என.நொந்து கொண்டபடி பணத்தை நீட்ட சிரித்தபடி வாங்கினான் சத்யா. இருவரையும் முறைத்து உதய் பார்க்க, அதை கவனித்த இருவரும் எஸ்கேப் என அறைக்குள் ஓடி விட, உதய்தான் தலையை பிடித்தபடி அமர்ந்து விட்டான்.

             அஸ்வின் தினமும் அனுவை அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தான். ஆனால் அன்றைக்கு பிறகு நீட்டாக ஷேவ் செய்து, அழகாகவே அவள் முன்னால் செல்வான். அது அவளுக்கு ஆனந்தத்தை அளித்தாலும் அவன் கண்களில் இன்னும் அந்த பழைய உயிர்ப்பு வராதது கவலையாக தான் இருந்தது.

ஆனால் அதை புறம் தள்ளி விட்டு அவனோடு இருக்கும் நேரங்களில் கவிதை, நகைச்சுவை கதைகள் என கூறி, அவனது கவனத்தை வேறு பக்கம் திசை திருப்புவாள். போக போக அவளுடன் இருக்கும் நேரங்களில் மனம் லேசானதை போன்ற உணர்வு வருவதை அஸ்வினும் உணர்ந்திருந்தான். அதை அவன் மனம் விரும்பவும் செய்தது.

அன்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு வெளியே இறக்கி விட, “நான் ஒரு புது ரெசிபி பண்ணேன். எப்படி இருக்குனு டேஸ்ட் பண்ணி சொல்றீங்களா?” எனக் கேட்டாள் அனு. “காலேஜ்க்கு எடுத்துட்டு வந்ததை மறந்துட்டியா. இங்க வந்து கேட்கற?” என அஸ்வின் கேட்க, “இல்லல்ல. எடுத்துட்டு வரவே மறந்துட்டேன். உள்ள வாங்களேன்.” என அழைத்து வந்து இனிப்பை ஒரு பவுலில் போட்டு குடுத்தாள்.

“என்னதிது.” என அவன் கேட்க, “பீட்ரூட் அல்வா. சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க?” எனக் கூறினாள் அனு. சாப்பிட்டு பார்த்தவன், “வாவ் ரியலி நைஸ் ரொம்ப நல்லாருக்கு.” என ருசித்து சாப்பிட்டான். “சாப்பிட்டே இருங்க. இப்ப வந்தர்றேன்.” என அவள் கூறி விட்டு உள்ளே சென்றாள்.

அப்போது டீப்பாயின் மீது ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அவளது புத்தகங்கள் கீழே விழப்போக, அதை எடுத்து அடுக்கி வைத்தான். அவளது புத்தகத்தில் இருந்து ஏதோ கீழே விழ, எடுத்து அதனுள்ளே வைக்க போக அது ஒரு கிரீட்டிங் கார்டு. என்னவாக இருக்கும் என திறந்து பார்த்தால்,

லவ் யூ கிருஷ்ணா  என எழுதி உங்கள் பிறந்தநாளுக்கு எனது அன்பு பரிசு. என கையெழுத்திட்டு இருந்தாள் அனு. வேகமாக மற்ற புத்தகங்களை புரட்ட, ஒன்றிலிருந்து அவனது ஃபோட்டோ கிடைத்தது. அதன் மேலும் லவ் யூ அண்ட் மிஸ் யூ கிருஷ்ணா என எழுதியிருக்க அதிர்ந்து போனான் அஸ்வின்.

எடுத்தவற்றை எல்லாம் அதே இடத்தில் மாறாமல் வைத்தவன், “நாளைக்கு பார்க்கலாம் அனு. பாய்.” என்றபடி கிளம்பி விட்டான். சட்டென வெளியில் வந்து பார்க்கும் போது அவனது கார் கிளம்பியிருக்க அவளுக்கு எதுவும் மாறுதலாக தோன்றவில்லை.

           மேலும் இரு நாட்கள் கழிந்திருக்க, சந்திரிகாவிற்கு சத்யாவிடம் இருந்து ஃபோன் வந்தது. என்னவென்று கேட்டதற்கு, “சந்திரிகா. எனக்கு ஒரு ஃபேவர் பண்ண முடியுமா?” எனக் கேட்டான் சத்யா. “ம்ம் சொல்லுங்க சார். என்ன பண்ணனும்?” என சந்திரிகா கேட்க, “வர்ற சண்டே என்கூட ஒரு இடத்துக்கு வரனும். அது என் ஃப்ரண்ட்ஸோட ஒரு மீட்டிங். அதுக்கு நீங்களும் வந்தா நல்லாருக்கும்.” என்றான்.

“உங்க ஃப்ரண்ட்ஸ் வர்ற இடத்துக்கு நான் எதுக்கு?” என சந்திரிகா கேட்க, “அவங்க எல்லாருமே கவர்மெண்ட்ல நல்ல போஸ்டிங்ல இருக்கறவங்க. நம்ப புராஜக்ட் பத்தி பேசனும். நீங்க வந்தா எனக்கு கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும். உங்களுக்கும் ஒரு சேன்ஜ் கிடைக்கும். வில் யூ பிளீஸ் எனக்காக.” என சத்யா கேட்க, சந்திரிகாவும் மறுக்காமல் வருவதாக கூறினாள்.

வரப்போகும் ஞாயிற்றுக்கிழமை அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட பல அதிர்ச்சிகளை அவளுக்கு வைத்திருக்கிறது என அவள் அறியாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *