341 views

 

அடுத்த ஒரு வாரம் எந்த வித பரபரப்பும் இன்றி அனைவருக்கும் இயல்பாகவே சென்றது. அஸ்வின் அலுவலகத்தில் சைந்தவி சேர்ந்தது அவளுக்கு உதவியதோ இல்லையோ, அவர்களுக்கு நன்றாகவே உதவியது.

ஒவ்வொரு விசயத்திலும் சைந்தவியின் யோசனைகள் வேறு மாதிரி இருக்க, அனைவரிடமும் தோழமையுடன் பழகுவதால் சைட்டில் அனைவருக்கும் அவளை பிடித்தும் போனது. தீபக்கும், சைந்தவியும் இணைந்து அந்த புராஜக்ட்டின் அனைத்து வேலைகளையும் எடுத்துக் கொள்ள அஸ்வின் சற்று நிம்மதியாக இருந்தான்.

தரணி அவ்வபோது வந்து ஏதாவது குறிப்புகள் கொடுத்துவிட்டு கிளம்பி விடுவான். தங்கை இங்கு இருப்பது அவனுக்கும் உதவியாக இருக்க பகலில் மற்ற வேலைகளை பார்ப்பவன், இரவில் ஒரு மணி நேரம் தங்கையுடன் சேர்ந்து இந்த வீட்டிற்கான வேலைகளை வடிவமைத்து கொடுப்பான்.

சந்திரிகாவிற்கும் சுகாதார வளாக பணிகள் தொடங்கி விட்டதால் தினமும் ஐந்து பள்ளிகளுக்கு சென்று அங்கு மேற்பார்வை செய்து விட்டு வருவாள். அந்த வாரம் முழுவதும் வேறு பணிகள் சத்யாவை ஆக்கரமித்து கொள்ள சந்திரிகாவை பார்க்க நேரவில்லை.

அசோக் மீண்டும் அந்த போதை பொருட்கள் சம்பந்தப்பட்ட வழக்கு வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, சஞ்சனா வழக்கம் போல மருத்துவமனைக்கு சென்று வந்து கொண்டிருந்தாள். உதய் அந்த வாரம் முழுதும் நன்றாக ஓய்வெடுத்தான்.

உதய் இருப்பதால் அசோக்கும், சத்யாவின் வீட்டிலேயே தங்கி விட, இரவானால் மூவரும் நன்றாக பேசி சிரித்து உறவை கொண்டாடினர். ஆருத்ராவின் புண்ணியத்தில் அஸ்வினின் காதல் தோல்வி அனுவிற்கு தெரிய வர, அவளுக்கு அஸ்வினை நினைத்து வருத்தமாக இருந்தாலும் தனது காதலை நினைத்து மகிழ்வாகவும் இருந்தது.

அன்று, கல்லூரியை விட்டு வெளியே வந்த அனுவிற்கு கண்ணில் அஸ்வின் கார்தான் பட்டது. “ஐ அஸ்வின்.” என்றபடி மகிழ்வோடு ஓடி வர ஏமாற்றாமல் அஸ்வினே அமர்ந்திருந்தான் ஓட்டுநர் இருக்கையில். “உங்க அண்ணனுக்கு ஒரு முக்கியமான வேலை அதான் நான் வந்தேன்” என்று அஸ்வின் கூற, “இதுக்கு ஏன் விளக்கம்லாம் குடுக்கறீங்க.” என்றாள் அனு.

பாட்டு கூட போடாமல் அமைதியாக காரை இயக்கி கொண்டிருந்த அஸ்வினை பார்த்தால் பாவமாக இருந்தது அனுவிற்கு. எதையும் தெரிந்தது போல காட்டிக் கொள்ள வேண்டாம் என ஆரு கூறி விட்டதால் மெதுவாக பாடலை போட்டாள் அனு.

இருவிழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது.
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்.

என பாடல் ஒலிக்க, சட்டென அதை அணைத்து விட்டாள் அனு. “ஏன் அனு நிறுத்தீட்ட. நல்ல பாட்டு தானே.” என அஸ்வின் கேட்டான். “ரொம்ப சோகமா இருக்கு. வேற சிடி போடறேன்.” என இன்னொரு சிடியை போட,

உயிரே உயிரே பிரியாதே.
உயிரை தூக்கி எறியாதே. உன்னை
பிரிந்தால் உலகே கிடையாதே..!!

என ஒலிக்க, வேறு பாடலை போட்டால் அதுவும் சோக பாடலாகவே இருக்க. ‘லவ் பெயிலியர் சாங்கா தேடி போய் வாங்கியிருப்பான் போலவே. இவனை என்ன பண்றது’ என யோசித்தவள், பிளேயரை ஆஃப் செய்து விட்டு, “ஏன் அஸ்வின் உங்களுக்கு என்ன பிரச்சனை? கப்பல் ஏதாவது மூழ்கிடுச்சா.?” என்றாள் தெரியாதது போல.

“அப்படில்லாம் ஒன்னுமில்லையே. ஏன் இப்படி கேட்கற.” என்றான் அஸ்வின். “பின்ன ஏன் இப்படி சோக பாட்டா கேட்டுகிட்டு, மூஞ்ச இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சிட்டு இருக்கீங்க.” என்றாள்.

சில நொடி கழித்தே அவள் சொன்னது புரிய ஓரமாக காரை நிறுத்தியவன், அவளை பார்த்து, “என்ன சொன்ன. குரங்கு மாதிரி இருக்கனா?” என்றான் கோபமாக. அவன் முகத்தை திருப்பி கண்ணாடியில் காட்ட, ஷேவ் பண்ணாமல், கலைந்த தலையோடு, சோகம் அப்பியவாறுதான் இருந்தது முகம்.

“பின்ன என்ன. அஸ்வின்னா எப்படி இருப்பாரு. ஷேவ் பண்ணி அழகா தலை வாரி, எப்பவும் ஒரு சிரிப்போட, முகத்துல ஒரு தேஜஸ் தெரியும். இப்ப அப்படியா இருக்கு.” எனக் கேட்டாள். அவனுக்கே தெரியும் அப்படி இல்லையென்று. சந்திரிகாவின் மீதான காதலை கூட ஒருவாறு மாற்றிக் கொண்டவனால்,

வேறு ஒருவனை மனதில் நினைத்த பெண்ணை தான் கட்டாயப்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஏதோ போலவே சுற்றிக் கொண்டிருந்தான். ஆனாலும் அதற்காக குரங்கு என்பதா என நினைத்தவன், அதை அவளிடம் கேட்கவும் செய்தான்.

“ஆமா. அப்படிதான் சொல்வேன். நீங்க இப்படி இருக்கற வரை. அப்படிதான் சொல்வேன். சரியான சிடுமூஞ்சி குரங்கு ஆகிட்டிங்க.” என்றாள் அனு. “சரி விடு. நாளைல இருந்து உன்னை பிக்கப் பண்ண எமர்ஜென்ஸினா கூட வரல. இந்த குரங்கு மூஞ்சை நீ ஒன்னும் பார்க்க வேணாம்.” என்ற அஸ்வின் காரை எடுத்து விட அனுதான் திகைத்து போனாள்.

தான் ஒன்று நினைத்தால் இது வேற டிராக் ஆகிடுச்சே என நொந்தவள் “அது எப்படி. நாளைல இருந்து நீங்கதான் என்னை ரெகுலரா பிக்கப் பண்ணிக்கனும்.” என்றாள் அனு. “நீதானை பார்க்க பிடிக்கலன்னு சொன்ன.” என அஸ்வின் கூற, “நான் எப்ப பிடிக்கலன்னு சொன்னேன். அப்படி இருந்தா இன்னும் பிடிக்கும்னு சொன்னேன்.” என்றவள் தொடர்ந்து,

“என்னாச்சு அஸ்வின். ஏதாவது பிராப்ளமா. என்கிட்ட சொல்ல தோணுனா சொல்லுங்க.” எனக் கேட்டாள். “அதெல்லாம் ஒன்னுமில்ல. நான் பாத்துக்கறேன். நீ நெக்ஸ்ட் வீக் எக்ஸாம்னு சொன்னல்ல. ஒழுங்கா படிக்கற வேலையை பாரு.” என்றான் கண்டிப்பாக. பிறகு அவளை இறக்கி விட கண்டிப்பாக நாளையும் வர வேண்டும் என்ற கட்டளையோடு இறங்கி கொண்டாள் அனு.

          அசோக் தனது அலுவலகத்தில் இருக்க அன்று சத்யாவின் வீட்டுக்கு திருட வந்தவனை அழைத்துக் கொண்டு வந்தார் சண்முகம். அசோக்கை பார்த்ததும், “சார் நீங்களா? நான் அதுக்கப்பறம் திருடறதை லாம் விட்டுட்டேன் சார். இப்ப ஏன் சார் இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க.” எனக் கேட்டான் அவன்.

“ஓ அப்ப நீங்க இதுக்கு முன்னாடி திருடறதை தான் தொழிலா வைச்சிருந்தீங்க. அப்ப இது என்னடா.?” எனக் கேட்டவன், சில புகைப்படங்களை அவனிடம் காட்டினான். அதில் ஆட்டோ ஓட்டுநராக இருந்தான் அந்த திருடன். “ஆமாங்க இது பகல்ல, அந்த வேலை ராத்திரி தொழிலுங்க.” என சாதாரணமாக சொன்னவன் அருகில் வந்த அசோக்,

ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டு “ஏண்டா, உனக்கு போலீஸ்காரனை பார்த்தா காதுல பூ வைச்சிருக்கற மாதிரி தெரியுதா?” என்றவன், “உன்னை பத்தி விசாரிக்காமலா உன்னை இங்க அழைச்சிட்டு வர சொல்லி இருப்பேன். ஏதோ அன்னைக்கு ஜாலியா பேசுனா அதை நம்பிட்டு உன்னை அப்படியே விட்டுருவேனு நினைச்சியா?” எனக் கேட்டான் அசோக்.

“உன்னை அன்னைக்கு சும்மா விட்டதே ஆதாரத்தோட உன்னை பிடிக்கதான்டா.” என அசோக் கூறியதில் மிரண்டு போன திருடன் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க, “அடி வாங்காம உண்மையை சொல்லிட்டனா உன்னை அப்படியே விட்டுட்டு போயிட்டே இருப்பேன். இல்ல சொல்ல மாட்டேனு அடம் பிடிச்சா, என் டிரீட்மெண்ட் வேற மாதிரி இருக்கும்.” என்றான் அசோக்.

அப்போதும் அவன் சொன்னதையே சொல்ல அசோக் தனது பாணியில் விசாரிக்க ஆரம்பித்தான். இறுதியில் அவன் உண்மையை கூற, அதிலிருந்து அவனால் எதையும் யூகிக்கவே முடியவில்லை.

அவன் கூறியது இதுதான். “சத்யாவை கொல்லாமல் அவனை கொலை செய்ய போவதை போல பயமுறுத்தனும்னு எனக்கு சொன்னாங்க சார். அப்படி மாட்டிக்கிட்டனா, திருடன்னு சொல்லி தப்பிக்க சொன்னாங்க. அதைதான் பண்ணேன்.” என்றான்.

“யார் உன்னை இதெல்லாம் பண்ண சொன்னது.” என அசோக் கேட்டதற்கு, முதலில் தயங்கியவன் அவன் கோபத்தை பார்த்து,சக்கரவர்த்தி ஐயாதான்ங்க” என்றான். எந்த சக்கரவர்த்தி என விசாரித்த போதுதான் அவர் சந்திரிகா, சஞ்சனாவின் தந்தை என்பதே அவனுக்கு தெரியவந்தது.

‘ஆனால் அவர் எதற்காக சத்யாவை மிரட்ட வேண்டும். சமீப காலமாக இருவரும் சந்திக்க கூட இல்லையே.’ என யோசித்தவனுக்கு எதுவும் புரியவில்லை. யாரிடமும் தன்னிடம் கூறியதை பற்றி கூற வேண்டாம் என அவனை எச்சரித்து அனுப்பியவன் நேராக கிளம்பி வீட்டுக்கு சென்றான்.

இருநாட்கள் கழித்து சத்யா கையில் ஒரு உறையோடு வீட்டுக்கு வர, என்னவென்று விசாரித்த உதய்யிடம் நீட்டினான். அதே நேரம் அசோக்கும் வர, பிரித்து பார்த்தால் வனச்சரக சென்னை அலுவலகத்திற்கு அவனை மாற்றியதற்கான உத்தரவு இருந்தது.

“ஹேய். என்னடா இது. என்னைய நீலகிரி இல்ல தேனி போடறதா தானே பேசிட்டு இருந்தாங்க. சென்னைக்கு எப்படி?” என ஆச்சர்யமாக கேட்டான் உதய். “என்னடா. நான் இருக்கும் போது நீ அதுக்கெல்லாம் பீல் பண்ணலாமா? இனிமேலாது நாம ஒன்னா இருக்கலாம்னு தான் ரெக்கமண்ட் பண்ணி இதை வாங்கினேன்” என்றவனை முறைத்தான் உதய்.

“எப்ப இருந்துடா இப்படி மாறின? அது என்ன நம்ம இஷ்டத்துக்கு ரூல்ஸ்ஸ மாத்தரது. இதெல்லாம் எனக்கு பிடிக்காதுனு தெரியும்ல” என்றான் கோபமாக. “டேய் இருடா. எமோஷனல் ஆகாத. நான் அதுக்காக மட்டும் பண்ணல. தேனில இருந்து எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இங்க வேலை பார்த்துட்டு இருக்காரு.

ரொம்ப நாளா ஊர் பக்கம் டிரான்ஸ்பர் வந்தா கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ண சொன்னாரு. அததான் உனக்கும் சேர்த்து நான் யூஸ் பண்ணிகிட்டேன் அவ்ளோதான். அப்பறமும் நீ மியாவாக்கி காடுகள் பத்தி தெரியும்ல?” எனவும் உதய் தலையாட்டினான்.

‘இப்ப நம்ப மாநகராட்சி சார்பா சென்னை முழுக்க இது போல உருவாக்க திட்டம் போயிட்டு இருக்கு. இதுல உன் பங்கும் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதான். உனக்கு பிடிக்கலன்னா இதை கேன்சல் பண்ணிக்கலாம்.” என்றான் சத்யா. மியாவாக்கி அப்படீன்னா என்னடா?” என அசோக் கேட்க, உதய் அவனுக்கு விளக்கினான்.

“பொதுவா நகரங்களுக்கு நடுவுல இருக்கிற காலி இடங்கள்ள அடர்ந்த வனங்கள உருவாக்கிறது தான் இந்த திட்டத்தோட அடிப்படை அம்சம். முதன்முதலா இதை ஜப்பான் நாட்ல தான் கண்டுபிடிச்சாங்க. இப்ப பரவலா எல்லா நாடுகளும் சுற்றுச்சூழலை காப்பாத்த இந்த திட்டத்தை முன்னெடுக்கறாங்க.

நகரத்தோட பெருகி வர கட்டிடங்கள் அப்பறம் வளர்ச்சி காரணமா மரங்கள் அழிஞ்சு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுது. மழைப்பொழிவும் குறைஞ்சிடுது. அதை மீட்டெடுக்க கொஞ்சமா கிடைக்கற இடத்துலயும் சீக்கிரமா வளரக்கூடிய நாட்டு மரங்கள், பூச்செடிகள் அப்பறம் மூலிகை செடிகளை நட்டு பராமரிக்கறது மூலமா நகரங்களுக்கு நடுவிலும் அடர்ந்த வனங்களை உருவாக்க முடியும்.” என உதய் கூற, அசோக் அந்த திட்டத்தை மிகவும் பாராட்டினான்.

“சோ. இது மூலமா ஒரு பொதுநல யோசனை” எனவும், சத்யா, “ஆமாடா, சுயநலத்தில் ஒரு பொதுநலம். பொதுநலத்தில் ஒரு சுயநலம்.” எனக் கூற, உதய் அதற்கு பின் மறுப்பு கூறவில்லை. இங்கேயே வேலை என்பதால் விடுமுறையை ரத்து செய்து விட்டு அலுவலகம் செல்ல தயாரானான்.

அப்போது அவனை தனியாக கூட்டிச் சென்று உதய்யிடம் பேசிய அசோக், “இது பத்தி என்கிட்ட தாண்டா சத்யா முதல்ல சொன்னான். நான் உடனே ஒத்துக்கிட்டேன். அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு” என்றான். உதய் கேள்வியாக பார்க்க, “ஆமாடா. சத்யாவோட உயிருக்கு ஆபத்து இருக்கு.” என்ற அசோக் அந்த திருடனாக வந்தவனை விசாரித்ததை பற்றி கூறினான்.

“அவன் யாரு இதுக்கெல்லாம் காரணம்னு சொன்னானா?” என உதய் கேட்க, “ம்ம். சக்கரவர்த்தி. இன்னொன்னு தெரியுமா? அவர்தான் சஞ்சனாவோட அப்பா. ஆனா மிரட்டதான் பார்த்துருக்காங்க. சத்யாவை அவங்க ஏன் மிரட்டனும்னு எனக்கு ஒன்னும் புரியல.” என பேசிக் கொண்டே போக உதய்யின் முகம் கோபத்தில் சிவந்தது.

“அப்ப சஞ்சனா சந்திரிகாவோட தங்கச்சியா?” என சம்பந்தமில்லாமல் கேட்டான். “ஆமாடா. உனக்கு எப்படி தெரியும் சந்திரிகாவை?” என அசோக் கேட்க. சட்டென சுதாரித்தவன், “ம்ம் கேள்விப்பட்டுருக்கேன். ஓகே விடு. நாமதான் இருக்கோம்ல பாத்துக்கலாம் விடு.” என அவனை அனுப்பி வைத்தான்.

‘சக்கரவர்த்தி, நீ இன்னும் திருந்தலயா? சத்யாகிட்ட நெருங்கி பாரு இனிமே. உனக்கு இருக்கு.’ என மனதிற்குள் கருவினான். உதய். அடுத்த வாரத்தில் ஒருநாள் உதய் சத்யாவின் அலுவலகத்திற்கு வந்திருக்க, அதே நேரம் சத்யாவுடன் மீட்டிங்கில் இருந்தாள் சந்திரிகா. சத்யாவுக்காக வெளியில் காத்திருந்தான் உதய். என்ன நடக்க போகிறதோ!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *