349 views

 

                   அதிகாலை வேளையில் சத்யாவின் அறைக்குள் கத்தியுடன் ஒரு உருவம் நுழைந்தது. கத்தியை எடுத்து சத்யாவை குத்த கையை ஓங்கும் நேரம் பார்த்து சரியாக அறையின் விளக்குகள் ஒளிர்ந்தன. வெளிச்சத்தை கண்டதும் அங்கிருந்து அந்த உருவம் தப்ப முயல, மற்றொருவன் வந்து அவனை பிடித்தான்.

குத்த வந்தவன் முகமூடி அணிந்திருக்க, மற்றொருவன் அதை கழட்ட போராடினான். அப்போது எழுந்த சத்தத்தில் கண்முழித்த சத்யா ஒரு நிமிடம் நடப்பது புரியாமல் முழித்து, பின்பு அவனும் வந்தவனை அடிக்க போனான். இருவரும் வளைத்து பிடிக்கவும் புதிதாக வந்தவன் தடுமாற, அப்படியே அவனை அங்கு கட்டி வைத்தான் சத்யா.

பிறகு மற்றொருவனை பார்த்தவன், “டேய் மச்சி. நீ எப்படா வந்த?” எனக் கேட்டான். “இப்பதான்டா. நான் உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு யாருக்கும் தெரியாம உன் ரூமை கண்டுபிடிச்சு வந்தா, இவன் எனக்கே சர்ப்ரைஸ் குடுக்கற மாதிரி முன்னாடி போயிட்டு இருக்கான்.

சரி என்னதான் பண்றானு பார்க்கலாம்னு பின்னாடியே ஃபாலோ பண்ணி வந்தா டக்குனு கத்தியை எடுத்துட்டான். எனக்கே ஒரு நிமிஷம் பயமாகிடுச்சு. அப்பறம்தான் அவனை பிடிக்க போனேன். அதுக்குள்ள நீயே எழுந்துட்ட.” என்றான் மற்றொருவன். முகமூடியை விளக்கி வந்தவன் யாரென்று பார்த்த இருவருக்கும் அவனை அடையாளமே தெரியவில்லை.

யாரென்று அடித்துக் கேட்டும் பதில் வராமல் இருக்க, “சரி விடு மச்சி. காலைல அசோக்கிட்ட விட்டா அவன் பாத்துக்குவான். நீ வா.” எனக் கூறிய சத்யா அவனை அழைத்து சென்றான். “உன்ன காலைல பிக் பண்ண போறேனு அசோக் சொன்னான்டா. நீ என்னடான்னா இப்படி நடு ராத்திரில வந்து இருக்க?” எனக் கேட்டான் சத்யா.

“இந்த உதய்யோட என்ட்ரீல ஒரு திரில் இருக்க வேணாமா? அதான்.” என்றவன் சத்யா முறைப்பதை பார்த்து, “கூல் மச்சி அதெல்லாம் ஒன்னுமில்லடா. திடீர்னு காலைல வர பிளைட் கேன்சல்னு சொல்லிட்டாங்க. அப்பறம் செக் பண்ணேன். ஈவ்னிங் பிளைட்லயே டிக்கெட் கிடைச்சது. சரி போய் சொல்லிக்கலாம்னு வந்துட்டேன். நல்ல வேளையா நான் வந்ததும் நல்லதா போச்சுல.” என்றான் உதய் சத்யாவின் ஆருயிர் நண்பன்.

பிறகு சிறிது நேரம் பழைய கதைகளை பேசிய நண்பர்கள் இருவரும் அப்படியே தூங்கி போயினர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறையாக இருக்க, பணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் நன்றாக இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது சத்யாவின் அலைபேசி ஒலிக்க எடுத்தால் அசோக் தான் மறுமுனையில் பேசினான்.

“பங்கு. ஏர்போர்ட்ல இருக்கேன்டா. உதய் வர வேண்டிய பிளைட் கேன்சல் ஆகிடுச்சாம். அவன் ஏதாவது இன்பார்ம் பண்ணானா?” எனக் கேட்டான். “ம்ம். தெரியும்டா. நீ வீட்டுக்கு வா பேசிக்கலாம்.” என தூக்க கலக்கத்திலே சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டான்.

அசோக் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது, உதய்யும், சத்யாவும் உறங்கி கொண்டிருக்க, உதய்யை பார்த்து அதிர்ச்சியானவன், கோபத்தில் ஒரு பக்கெட் தண்ணீரை கொண்டு வந்து இருவர் மீதும் ஊற்றினான்.

அடித்து பிடித்து இருவரும் எழுந்து பார்க்க எதிரில் வாளியுடன் நின்றிருந்த அசோக்கை பார்த்ததும் உதய், “மச்சி. அசோக் எவ்வளவு பொறுப்பா இருக்கான் பாரேன். இப்பதான் மழை வந்தது. உடனே தண்ணீ பிடிக்க வாளியோட வந்துட்டான்.” என கிண்டலடிக்க, அதை கேட்ட அசோக், வாளியாலே உதயை அடிக்க வர, “நோ வயலன்ஸ் மச்சி.” என எழுந்து ஓடினான் உதய்.

சத்யாவை பார்த்த அசோக், “நீ கூட சொல்ல மாட்டீயாடா?” என அவனையும் அடிக்க வர, அவனும் எழுந்து ஓட ஆரம்பிக்க, “டேய் நில்லுங்கடா.” என இருவரையும் துரத்தினான் அசோக். இறுதியில் மூவரும் வீடு முழுக்க ஓடி களைத்து போய் ஆளுக்கொரு பக்கம் சோபாவில் அமர்ந்தனர்.

அப்போதுதான் ஹாலில் கட்டிப் போடப்பட்ட நிலையிலே தூங்கிக் கொண்டிருந்தவனை அசோக் பார்த்தான். “இவன் யார்டா. எதுக்கு கட்டி போட்டு வைச்சிருக்கீங்க?” எனக் கேட்டான் அசோக். “உண்மையில நீ இவனை தான்டா அடிக்கனும். இவன் பண்ண கலவரத்துல தான் இங்க வந்ததை உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.” என்ற உதய் இரவு நடந்ததை அசோக்கிற்கு விளக்கமாக கூறினான்.

அதற்குள் அவன் கண் முழித்து விட, “சார். தெரியாம பண்ணீட்டேன் சார். விட்ருங்க சார்.” என இரவு படித்த பல்லவியையே படிக்க, அவனை ஒரு அறை விட்டான் உதய். “முதல்ல நீ யார்னு சொல்லுடா. எதுக்காக சத்யாவை கொல்ல வந்த. கலெக்டர் மேலையே கை வைக்கிற அளவுக்கு தில்லு வந்திடுச்சா உங்களுக்குலாம்.” எனக் கேட்டான்.

“சார். சார். அவரு கலெக்டர்னு எனக்கு தெரியாது சார்.” எனவும், “ஓ. அப்ப ஒரு ஏ.சி.பி யோட ப்ரண்டு மேல கை வைப்பியா.” எனக் கேட்டான் அசோக். “யார் சார் ஏ.சி.பி?” என அவன் கேட்க, “மச்சி உன்னையும் தெரியலயாண்டா.” என்ற உதய், “அப்ப ஒரு பாரஸ்ட் ஆபிஸர் ப்ரண்டை கொல்ல பார்க்கிற.” என்றான் உதய்.

‘அடக்கடவுளே. ஒரே நேரத்தில ஒரு கலெக்டர், ஒரு ஏ.சி.பி, ஒரு பாரஸ்ட் ஆபிஸர்கிட்ட மாட்டி விட்டுட்டியே.’ என நொந்து கொண்டான் அவன். “டேய். நிறுத்துங்கடா. சும்மா காமெடி பண்ணிக்கிட்டு.” என்ற சத்யா, “உன்ன அனுப்பிச்சது யாரு?” எனக் கேட்டான்.

சடாரென அவன் காலில் விழுந்தவன், “ஐயா என்ன மன்னிச்சிடுங்க. நான் ஒரு திருடன். உங்க வீடுன்னு தெரியாம உள்ள வந்துட்டேன். அதுக்காக ஜெயிலுக்குலாம் அனுப்பிடாதீங்க.” என்றான் அவன்.

“திருடன்னா கத்தியோட ஏன் சத்யாவை கொல்ல போன?” என உதய் கேட்க, “நான் கொல்லலாம் போகலங்க. என் கத்தியை கூட பாருங்க. அது வெங்காயம் கூட வெட்டாது. இவர் தூங்கிட்டு தான் இருக்காறான்னு செக் பண்ணதான் பக்கத்துல போனேன். ஒரு சேப்ட்டிக்கு தான் கத்தியை எடுத்துட்டு வந்தேன்.” எனவும், “நடுராத்திரில தூங்காம என்ன தாயமா விளையாடுவாங்க.” என எரிச்சலாக கேட்டான் அசோக்.

“தாயம் இல்லைங்க அய்யா. அது என்னவோ பஜ்ஜியாமே. வீட்டுல திட்றாங்கன்னு போர்வைக்குள்ள மறச்சே விளையாடுறாங்க. இல்லனா ஏதோ மூஞ்சி புக்காம் அதை படிக்கறாங்க. போன வாரம் ஒரு ஊட்டுக்கு திருட போனப்ப அந்த வீட்டு பையன் இந்த மாதிரி விளையாடிட்டு இருந்து என்ன மாட்டி விட்டுட்டானுங்க.” என்றான் சோகமாக..

“போன வாரம் மாட்டினியா. அதுக்குள்ள போலீஸ் விட்டுட்டாங்களா?”  என உதய் கேட்க, “போலீஸ்ல இல்லங்க அந்த வீட்டுல மாட்டிக்கிட்டேன். உடனே நானு. நீ ஏன் தம்பி இந்த நேரத்துல ஃபோன்ல என்ன பண்ணிட்டு இருந்தனு அவன்கிட்ட கேட்க, உடனே குடும்பம் பூரா அவனை திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த கேப்ல நான் எஸ்கேப் ஆகி ஓடி வந்துட்டேன்.” என்றதில் அனைவரும் சிரித்து விட்டனர்.

“நீ பொழச்சுக்குவடா.” என்ற அசோக், ஒரு செக்யூரிட்டி போலீஸை அழைத்து, அவனது வீட்டில் விட்டு விட்டு அட்ரஸ் நோட் செய்து வருமாறு கூறி அவனை அவரோடு அனுப்பி வைத்தான். “எப்ப கூப்பிட்டாலும் ஸ்டேஷனுக்கு வரனும். இனிமே இந்த வேலைல்லாம் பண்ணாத. அப்பறமா வந்து என்ன பாரு.” என அந்த திருடனுக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தனர்.

பிறகு அனைவரும் வெளியே கிளம்பியவர்கள் அன்றைய நாள் முழுதும் சென்னையின் முக்கிய இடங்களை சுற்றி பார்த்து விட்டு, இறுதியாக பெசன்ட் நகர் பீச்சுக்கு வந்தனர். அதே நேரத்தில் சந்திரிகா, சஞ்சனா, தரணி, சைந்தவி நால்வரும் அதே பீச்சில் மற்றொரு புறத்தில் இருந்தனர்.

ஆனால் சற்று நேரத்திலே சத்யாவை சந்திரிகா பார்த்து விட்டாள். ஆனால் அவனுடன் இருந்தவர்கள் சற்று தொலைவில் திரும்பி நின்றதால் அவளால் அவர்களை காண முடியவில்லை. அவள் பார்வை சென்ற இடத்தில் பார்த்த சஞ்சனா சத்யாவை கண்டதும், “அக்கா. மாம்ஸ்ஸூம் வந்திருக்கார் போல. வா போய் பேசலாம்.” என அழைத்தாள்.

“அவர் யார்க்கூடவோ வந்திருக்காரு. இப்ப நாம ஏன் டிஸ்டர்ப் பண்ணனும். இங்கையே இருக்கலாம்.” என்றாள் சந்திரிகா. ஆனால் யார்க்கூட வந்திருப்பாரு. என நினைத்த சஞ்சனாவிற்கு திரும்பி நின்றிருந்தாலும் அசோக்கை அடையாளம் தெரிய, “அசோக்தான் கா. சரி இரு நான் போய் கூட்டிட்டு வரேன்.” என அவர்களிடம் சென்றாள்.

“ஹாய் அசோக். எப்படி இருக்கீங்க.” என்றவாறே சென்றவள் சத்யாவிடம், “சார். நல்லாயிருக்கீங்களா? இவங்க யாரு உங்க ஃப்ரண்டா?” எனக் கேட்டாள் உதய்யை காட்டி.  உதய் சஞ்சனாவை இதுவரை பார்த்ததில்லை என்பதால், அவன் யாரென்ற வண்ணம் பார்த்து வைக்க, அசோக்தான் அவளை உதய்க்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“ஷீ இஸ் டாக்டர் சஞ்சனா. மை ஃப்ரண்ட்.” என கூறியவன், ஆமா சஞ்சனா. இவன் எங்களோட ஃப்ரண்ட். இதுவரைக்கும் நார்த்ல இருந்தான். இப்ப இங்க டிரான்ஸ்பர் ஆகிருக்கு. ஹி இஸ் ய பாரஸ்ட் ஆபிஸர்.” என உதய்யை அறிமுகம் செய்தான் அசோக்.

இதை பார்த்துக் கொண்டிருந்த சத்யாவோ. ‘ஓ சாதாரணமா பேர் சொல்லி கூப்பிடற அளவுக்கு இவங்க பிரண்ட்ஷிப் டெவலப் ஆகிடுச்சா’ என நினைத்தான்.

அப்போது உதய், “கீயை மறந்து வைச்சிட்டு வந்துட்டேன்டா. நீங்க பேசிட்டு இருங்க. நான் எடுத்துட்டு வரேன்.” என அங்கிருந்து நகர்ந்தான். பிறகு அவர்களிடம் பேசிக் கொண்டே இவர்கள் இருக்குமிடத்திற்கு அழைத்து வந்தாள் சஞ்சனா.

மரியாதைக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிய சந்திரிகா மற்றபடி அமைதியாகவே இருக்க, ‘ஓ இன்னும் மேடம்க்கு கோபம் போகல போல.’ என நினைத்துக் கொண்டான் சத்யா. சற்று நேரத்தில் அவர்கள் கிளம்பிவிட, அனைவரும் சென்ற பிறகே அங்கு வந்து சேர்ந்தான் உதய். இதனால் உதய்யும், சந்திரிகாவும் பார்த்துக் கொள்ள முடியாமல் போனது.

“ஏண்டா இவ்வளவு நேரம். அவங்க கிளம்பிட்டாங்க.” என்றான் அசோக். “வர்ற வழில பழைய கொலிக் ஒருத்தரை பார்த்தேன்டா. அதான் லேட் ஆகிடுச்சு.” என்ற உதய், “சரி வாங்க போகலாம்” என அழைத்து சென்றான்.

சத்யா முன்னே நடக்க, “நீ ஏண்டா சலிச்சுக்கற. அவங்க அவ்ளோ முக்கியமானவங்களா?” என அசோக்கிடம் கேட்டான் உதய். “ஹேய். அவதான்டா. நான் சொன்ன பொண்ணு. அவங்க அக்கா, ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் உனக்கு காட்டலாம்னு பார்த்தேன். ஆனா நீ வர லேட்டாகவும் அவங்க கிளம்பிட்டாங்க.” என்றான் மெதுவாக.

“ஓ சஞ்சனா தான் நீ லவ் பண்ற பொண்ணா. பார்க்க நல்ல பொண்ணாதான் தெரியறாங்க. ஆமா இது சத்யாவுக்கு தெரியுமா. அவன் என்ன சொல்றான்.” எனக் கேட்டான் உதய். “அவனுக்கு பிடிக்கலடா. லவ் பண்றேனு இல்ல.அவ மேல ஒரு இண்டர்ஸ்ட் இருக்குனு தெரிஞ்சதுக்கே இதெல்லாம் விட்டுட்டு உருப்படற வழியை பாருனு திட்றான். லவ் பண்றேனு சொன்னா அவ்ளோதான்.” என்றான் அசோக்.

“ஏண்டா அவனுக்கே பிடிக்கலயாமா?” என உதய் கேட்க, “அவன் சொல்ற ரீசன் கொஞ்சம் கடுப்பாதான் இருக்குடா. அவ நல்ல பொண்ணுதானாம். ஆனா பணக்கார பொண்ணாம். அதனால வேணாம்னு சொல்றான்” என்றான் அசோக். “ஓ. அவன் சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு. எதுக்கும் அதையும் நீ கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்றது நல்லதுதான்.” என்றவன் சத்யாவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

‘உதய் தனது காதலுக்கு நிச்சயம் சப்போர்ட் செய்வான். அவன் மூலமாக சத்யாவின் மனதையும் மாற்றி விடலாம்’ என எண்ணிக் கொண்டிருந்த அசோக்கிற்கு அவனின் வார்த்தைகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தவும் அதையே யோசித்துக் கொண்டு நடந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *