Loading

 

            தான் சொல்ல சொல்ல கேட்காமல் ருக்கு தன்னை கூட்டி வருவதை கண்டு சத்யாவின் மீது கோபம் வந்தது அவளுக்கு. ஆம் அவன்தான். இவர்கள் காதலித்த காலத்தில் சத்யாவின் ஆசிரமத்தில்தான் ருக்கு இருந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தாலும், சிறு வயதிலேயே அவரது கணவர் இறந்து விட்டதாலும், நிராதரவான நிலையில் ஆசிரமம் வந்தார்.

அங்குள்ள அனைவரையும் சொந்த பிள்ளைகள் போல அத்தனை ஆதரவாக பார்த்துக் கொள்வார். அதனால் அவரை அங்குள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். யாரிடமும் அவ்வளவாக பழகாத சத்யா கூட அக்கா, அக்கா என அவரிடம் உரிமையாக பழகுவான்.

சந்திரிகாவை முதல்முறை அவரிடம் அறிமுகம் செய்த போதே, தன்னுடைய மனைவி என்றே அறிமுகம் செய்தான். அப்போதும் அவர் “ஏன்பா. இவ்வளவு சீக்கிரம்.” என சந்தேகமாகவே கேட்டார். அவங்க வீட்ல கொஞ்சம் பிரச்சனை. அதான் படிப்பு முடிஞ்சதும் வீட்ல சொல்லிடுவோம் என கதையாக கூற அவரும் நம்பி விட்டார்.

“ஏன் சத்யா இப்படி சொல்றீங்க?” என சந்திரிகா கேட்டதற்கு,” நான் உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்தே, உன்னை என் வைஃபா தான் பார்க்கறேன். அதான் அப்படி சொன்னேன். ஒருவேளை உனக்கு அப்ஜெக்ஷனா?” என சத்யா இழுக்க, “என்ன பண்ணுவீங்க. அவங்ககிட்ட உண்மையை சொல்லுவிங்களா?” என சந்திரிகா கேட்டாள்..

“இல்ல சொன்ன பொய்யை உண்மையாக்கிடலாம். இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்.” என சிரித்தபோது இவளுக்கு பெருமையாக இருந்தது. ‘இப்போது அது அல்லவா சிக்கலாகி இருக்கிறது. சத்யாவை இவர் எப்போது பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என இவருக்கு எப்படி தெரியும்.’ என யோசித்துக் கொண்டே வாகனத்தை செலுத்த, அதற்குள் சத்யாவின் வீடு வந்து விட்டது.

“வா போகலாம்” என ருக்கு அழைக்க, ஏதோ ஒரு வேகத்தில் வந்து விட்டவளுக்கு, இப்போது தயக்கமாக இருந்தது. அது அரசாங்க வீடு என்பதால் தன்னை விட மாட்டார்கள் என மறுத்தவளை வா என கூட்டி சென்றவர், நல்லவேளையாக காவலர்களிடம், “என் பொண்ணு மாதிரிப்பா” என கூறி அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

உள்ளே சென்று சத்யாவை அழைக்க, அசோக்கோடு வெளியில் வந்தான் அவன். முதலில் சந்திரிகாவை கவனிக்காமல், “என்னக்கா. உங்களுக்கு தான் இன்னைக்கு லீவ்னு சொன்னேன்ல. அப்பறம் ஏன் வந்திருக்கிங்க” எனக் கேட்க அவனை ஆச்சர்யமாக பார்த்தான் அசோக்.

அவனிடம் அவர்களாக விடுப்பு எடுத்துக் கொண்டதாக கூறியிருந்ததே அதற்கு காரணம். ஏதோ நினைவில் கூறி இருப்பான் என நினைத்து விட்டவன்., அப்போதுதான் சந்திரிகா இருப்பதை பார்த்தான். அவளை பார்த்ததும், “ஹாய். நீங்க சந்திரிகா தானே. இங்க எங்க.” என அசோக் கேட்டதும்தான் சத்யாவும் அவளை பார்த்தான்.

அவளை கண்டதும் ஏதோ ஒரு உணர்வு தாக்கியது சத்யாவுக்கு. ஆனால் மறு நிமிடமே அதை உதறியவன், “இன்னைக்கு நான் லீவ்ல இருக்கேன். ஆபிஸ்ல சொல்லி இருப்பாங்களே? அப்பறம் ஏன் இங்க வந்திருக்கீங்க?” என்றான் கோபமாக.

அவள் பதில் கூறுவதற்குள், ருக்கு இடைபுகுந்து “தம்பி இருப்பா. நான்தான் பாப்பாவை கூட்டிட்டு வந்தேன். உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு தானே தனியா இருக்கீங்க. அதான் எதுனாலும் பேசி தீர்த்துக்கோங்க. அதுக்குதான்.” எனவும் கோபம் ருக்குவிடம் திரும்பியது சத்யாவுக்கு.

“உங்களுக்கு என்னாச்சுக்கா? யார் இவங்க? எனக்கும் இவங்களுக்கும் என்ன பிரச்சனை இருக்க போகுது. என்ன உளரீங்க?” எனக் கேட்டான் ருக்குவை பார்த்து, “என்னப்பா. எனக்கு தெரியாதா. இதுதானேயா உன் பொஞ்சாதி. அன்னைக்கு கேட்டப்ப கூட ஊர்ல இருக்கான்னு சொன்னீயே. அதான் இன்னைக்கு பார்த்ததும் கூட்டிட்டு வந்தேன்” என விளக்கம் கொடுத்தார்.

இதையெல்லாம் கேட்டு அசோக்கிற்கு தலை சுற்றாத குறைதான். “டேய் இவங்க என்னடா சொல்றாங்க. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா. அதுவும் இவங்க கூடயா?” என்றான் அசோக்.

“நீ வேற சும்மா இருடா” என்றவன், “ஏதோ விளையாட்டுக்கு சொன்னா உடனே நம்பிடறதா. என்ன ஏது மறுபடி செக் பண்ண மாட்டீங்களா? கல்யாணம் ஆகி இவங்கள ஏமாத்தி விட்டுட்டேன் சொல்ல வரீங்களா. என்ன மேடம் நீங்க எதுவும் பேசாமா நிற்கிறீங்க? அப்படியா?” என ருக்குவிடம் தொடங்கி சந்திரிகாவிடம் முடித்தான்.

அப்போதும் கூட ருக்குவிற்கு கல்லூரி படிக்கும் போது தன்னிடம் பொய் கூறியதாக தான் புரிந்தது. லேசாக சந்திரிகாவிடம், “பாப்பா. நீங்க ஒன்னு சேரவே இல்லையா? நான்தான் குழப்பீட்டனா?” என மெதுவாக கேட்டார் ருக்கு. அவர் பேசியதில் ஏதோ ஒரு நம்பிக்கை வர, “நீங்க கொஞ்ச வெளியில இருங்க அக்கா. நான் வந்து விளக்கமா சொல்றேன்.” என அவரை அனுப்பி வைத்தாள்.

அதற்குள் அசோக், “டேய் உண்மையை சொல்லு. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நீதான் சொன்னதா சொல்றாங்க. என்ன நடந்தது” எனக் கேட்டான். “தப்பு என் மேல தான்டா ஒத்துக்கறேன். கல்யாணம் ஆகலன்னு சொன்னா ஏன் என்னனு எல்லாரும் என் பர்சனல் லைஃபை தோண்டுறாங்க.  இதுக்கு முன்னாடி வேலை பார்த்த இடத்துலலாம் இதை பேஸ் பண்ணிருக்கேன்னு உன்கிட்ட சொன்னேன்ல?” எனக் கேட்டான் அசோக்கிடம்.

அவன் ஆமோதிப்பாக தலை அசைக்க, “இங்க வந்த புதுசுல இந்தக்கா என்கிட்ட வந்து உன் பொண்டாட்டி நல்லாருக்கான்னு கேட்க, நான் என்ன பதில் சொல்ல போறேனு வேற நாலு காது ஒட்டுக் கேட்குது. அப்பதான் நான் கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஒரு பொய்யை சொன்னேன். அது இந்த அளவு போகும்னு நினைக்கல.

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலடா” என்ற கூற்றில் சந்திரிகா மகிழ்ச்சியடைய உடனேயே, “அதுலயும் இவங்கள எனக்கு இங்க வந்துதான் தெரியும். அப்பறம் எப்படி?” என்ற கூற்றில் மனம் உடைந்தாள்.

பிறகு சுதாரித்தவள், “சாரி சார். அவங்க உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர போறாங்கன்னு கூட எனக்கு தெரியாது. ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டாங்கன்னு நினைக்கறேன். மன்னிச்சுக்கோங்க.” என்ற சந்திரிகா தொடர்ந்து, “உங்களுக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க. இப்ப பரவாயில்லயா சார்.” எனவும் கேட்டு வைத்தாள்.

“ம்ம் பரவால்ல. இட்ஸ் ஓகே. பார்த்து போயிட்டு வாங்க.” என அவளை அனுப்பி வைத்தான். வெளியே வந்த சந்திரிகாவும் ஏதேதோ பேசி ருக்குவை சரிகட்டி அனுப்பி வைத்து விட்டு காரை எடுத்தாள். சத்யாவும் சரியான தலைவலி என்றபடியே சென்று படுத்துவிட அசோக்கிற்கு மட்டும் லேசான சந்தேகம் தோன்றியது.

‘யாரோ என்னவோ சொன்னதை நம்பி எப்படி அவங்க இவ்வளவு தூரம் வருவாங்க. அதோட இங்க நானும் தான் இருக்கேன். அது எப்படி அவனுக்கு உடம்பு சரியில்லனு கண்டுபிடிச்சாங்க. இவன் என்னடான்னா, அவங்கள பார்த்ததும் உருகுறான். அப்பறம் உடனே கோபப்பட்டு கத்தறான். சத்யா யார்க்கிட்டயும் கோவப்படுற ரகம் இல்லையே.

என்னவோ இருக்கு. இதை மொதல்ல கண்டுபிடிக்கனும்’ என யோசித்தவாறே சோபாவில் அமர்ந்தவன் அப்படியே தூங்கி போனான். (இவன் என்னடா கண்டுபிடிக்கறேனு தூங்கிட்டு இருக்கான். ஒருவேளை கனவுல தெரியுமோ)

           தீபக் வந்ததும் அனு வீட்டில் இருந்து கிளம்பிய அஸ்வினுக்கு, சந்திரிகாவின் நினைவு வர, ‘எதற்காக இன்று அப்பாய்மெண்ட் கேன்சல் செய்தாள்’ என்ற கேள்வி எழுந்தது. அவளது அலுவலகத்தில் விசாரித்த போதுm இன்று அவள் விடுமுறை என பதில் கிடைக்க மொபைல் அழைப்பும் சந்திரிகாவுக்கு கிடைக்கவில்லை.

உடனேயே தயங்காமல் சக்கரவர்த்திக்கு அழைப்பு விடுத்தான் அஸ்வின். அவர் மூலம் பிறந்தநாள் என அறிந்து கொண்டவன் வீட்டிற்கு வருவதாக கூறினான். எதிர்முனையில் அவர் என்ன கூறினாரோ, “சரி நான் பார்த்துக்கறேன் அங்கிள்” என்ற அஸ்வின் அழைப்பை துண்டித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.பிறகு ஒரு முடிவெடுத்தவனாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

          இங்கே தரணிக்கும், சஞ்சனாவுக்கும் இருப்பே கொள்ளவில்லை. காலையில் ஒரு முக்கியமான வேலை இருப்பதால் விடுப்பு எடுக்க முடியாது என சஞ்சனா மருத்துவமனைக்கு சென்று விட்டாள்.

தரணியும் ஒரு பிராஜக்ட் விசயமாக வெளியில் சென்றுவிட, இருவருமே மதியமே வீட்டிற்கு வந்து விட்டனர் சந்திரிகாவுடன் பொழுதை கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில். வீட்டிலோ அவள் இல்லாமல் இருக்க, சஞ்சனா, “அக்கா எங்கம்மா?” என தன் அன்னையிடம் கேட்டாள்.

அவரோ எப்போதும் அவளது பிறந்தநாளில் நடப்பதை கூற திகைத்து போயினர் தரணியும், சஞ்சனாவும். உடனே சந்திரிகாவின் அலைபேசிக்கு அழைப்பு விடுக்க, அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சற்று நேரம் பொறுத்து பார்க்கலாம் என நினைத்து அமர வெகு நேரம் தாண்டியும் அவள் வருவதாக இல்லை.

அப்போதுதான் அஸ்வின் தரணிக்கு அழைப்பு விடுத்தான். அவனும் சந்திரிகாவை பற்றி கேட்க, “வீட்ல இல்ல அஸ்வின்.” என்றான் தரணி. அதற்கு அஸ்வினோ, “அப்படி எங்க போனா அவ. நானும் எல்லா இடத்துலயும் தேடிட்டேன். கிடைக்கல.” என கூறவும், தரணியோ, “அஸ்வின் வார்த்தையை பார்த்து பேசுங்க. உங்களை யார் அவளை தேடி போக சொன்னா?” என்றான் கோபமாக.

“சாரி. சந்திரிகாவை காணோம்னு ஒரு பதட்டத்துல தான். சாரி.” என அஸ்வின் தணிந்தான். “நான் சந்திரிகா வந்ததும் சொல்றேன்.” என ஃபோனை வைத்து விட்டு தரணி, சஞ்சனாவிடம் விவரம் சொல்ல, “நாம ஏன் அக்காவை தேடி போக கூடாது.” எனக் கேட்டாள் சஞ்சனா.

“ச்ச். ஆன்ட்டி தான் சொன்னாங்கள்ள. அவ எப்பவும் போறதுதான். நைட்டுதான் வருவான்னு.” என தரணி சலித்து கொள்ள, “எப்பவும் நடக்காத ஒன்னு இந்த வருஷம் இருக்கு. இத்தனை வருஷமா அவ சத்யாவை பார்க்கல. ஆனா இப்ப சத்யா பக்கத்துலயே இருந்தும், தன்னால அவர் கூட இருக்க முடியலன்னு, ஏதாவது நினைச்சு கஷ்டத்துல இருப்பால்ல. அவ டிரைவிங்ல வேற இருக்கா” என சொல்லாமலே தனது பயத்தை வெளிப்படுத்தினாள் சஞ்சனா.

அதன்பிறகு தரணியும், சஞ்சனாவும் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப, வழியிலே அசோக்கிற்கு தொடர்பு கொண்டாள் சஞ்சனா. அவனோ அலைபேசி அழைப்பு சத்தத்தில் நல்ல தூக்கத்தில் இருந்து முழித்தவன். திரையில் ஒளிர்ந்த சஞ்சனாவின் நம்பரை பார்த்து தன்னையே கிள்ளிக் கொண்டான்.

‘உண்மைதான்’ என நினைத்துக் கொண்டே அழைப்பை ஏற்க, மறுமுனையில் சஞ்சனா சந்திரிகாவை தேட அவனது உதவி வேண்டும் எனக் கேட்டாள். இவனோ, “அவங்க கொஞ்ச நேரம் முன்னாடியே இங்கிருந்து போய்ட்டாங்களே” என வாயை விட, “அங்க எதுக்கு வந்தாங்க.” எனக் கேட்டாள் சஞ்சனா.

“அது ஒன்னும் பெரிய விசயம்லாம் இல்ல. நான் வந்து சொல்றேன்.” என அழைப்பை துண்டித்து விட்டு சத்யாவின் அறையை பார்த்தால் அவன் உறங்கி கொண்டிருந்தான். பிறகு அங்கிருந்து கிளம்பிய அசோக், விரைவிலேயே அவர்களோடு இணைந்து கொண்டதோடு காரின் எண்ணை வைத்து தேடவும் ஆணை பிறப்பித்தான்.

இவர்கள் தேடுவதை தெரிந்து கொண்ட அஸ்வினும் அவர்களோடு வந்து இணைந்து விட்டான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு, ஈ.சி.ஆர் செக்போஸ்டை தாண்டியதாக தகவல் வர அந்த பாதையில் காரை விட்டான் தரணி.

அங்கே ஒரு மரத்தில் மோதியவாறு சந்திரிகாவின் கார் நிற்க, ஸ்டீயரிங்கில் தலை வைத்தவாறு படுத்திருந்தாள் சந்திரிகா. “அக்கா.” எனவும் “சந்தும்மா”, “சந்திரிகா” என குரல் எழுப்பியபடி நால்வரும் காருக்கு அருகே சென்றனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்