461 views

           சத்யாவிற்கு அன்று காலையிலே மிகவும் சோர்வாக இருந்தது. அலுவலகத்திற்கு விடுப்பு கூறிவிட்டு வீட்டில் இருந்தான். அசோக் அவனுக்கு அழைப்பு விடுத்து, அவசரமாக சந்திக்க வேண்டும் என்றதும் வீட்டிற்கே வர சொன்னான். அசோக் வீட்டிற்கு வந்து பார்த்தபோது உடல் சூடு லேசாக இருந்தாலும் மிகவும் அசதியாக தெரிந்தான்.

அன்று பார்த்து சமைக்க வரும் அம்மாவும் ஏதோ வேலையாக விடுப்பில் இருக்க, சத்யா எதையும் செய்ய தோன்றாமல் படுத்திருந்தான். அசோக்,”என்னடா ஆச்சு. ஏன் ஒரு மாதிரி இருக்க? எனக் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்லடா. வேலை அதிகமா இருந்ததால சரியா தூங்கல அவ்ளோதான்.” என்றான் சத்யா.

சட்டென ஏதோ நியாபகம் வந்தவனாக நாள்காட்டியை பார்க்க, அது காட்டிய தேதியை பார்த்ததும் தெரிந்து கொண்டான் அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று. இன்று அவனது பெற்றோர் உயிர் நீத்த நாள். வருடா வருடம் இந்த நாள் வந்தால் மட்டும் என்ன செய்வது என்றே தெரியாமல் அவர்கள் நினைவிலே அமர்ந்திருப்பான்.

அன்று முழுவதும் என்ன செய்தாலும் அவனை சாப்பிட வைக்க முடியாது. இத்தனை வருடங்களில் அது அசோக்கிற்கு நன்கு தெரிந்திருந்தது. அதனால் அன்று முழுவதும் அவனை தனியே விடாமல் உதய்யோ, அசோக்கோ உடனிருந்து பார்த்துக் கொள்வர். இவன் மறந்தாலும், உதய் அவனுக்கு நியாபகம் செய்து விடுவான்.

இந்த முறை வேலையில் மறந்துவிட, ‘இந்த உதய்யும் ஏன் சொல்லவில்லை.’ என நினைத்தான். அதே நேரம் சரியாக அவன் ஃபோன் இசைத்தது. அறையை விட்டு வெளியே வந்து அசோக் எடுத்ததும், “டேய் மச்சி உதய்டா. எப்படி இருக்க. எங்க இருக்க?” எனக் கேட்க, “நல்லா இருக்கேன்டா. நான் சத்யா கூட தான் இருக்கேன். நீ நேத்தே ஏன் ஃபோன் பண்ணல.” எனக் கேட்டான் அசோக்.

“நான் சிரபுஞ்சில இருக்கேன்டா. நேத்து பயங்கர மழை. அதான் லைன் எதுமே கிடைக்கல. அவன் ஓகேவா.” எனக் கேட்டான் உதய்.”ம்ம் நான் பாத்துக்கறேன்டா. நீ எப்ப வர?” எனக் கேட்டான் அசோக். “நானும் டிரான்ஸ்பர் அப்ளை பண்ணிருக்கேன்டா. எனக்கும் சப்பாத்தி சாப்பிட்டு போர் அடிக்குது. சீக்கிரமா தமிழ்நாடு வந்திருவேன்.

நீங்கல்லாம் இல்லாதப்ப எனக்கு இங்க என்ன வேலை சரிடா அவனை பாத்துக்கோ. பாய்டா.” என்றவாறு ஃபோனை வைத்தான் உதய். மீண்டும் அறைக்கு சென்று பார்த்தபோது, சத்யா எழுந்து அமர்ந்து அசோக் கையில் கொண்டு வந்திருந்த ஃபைலை பார்த்துக் கொண்டிருந்தான்.

வேகமாக சென்று அந்த ஃபைலை பிடுங்கிய அசோக், “நீ இருக்கிற நிலைமைல இது ரொம்ப தேவையா?” எனக் கேட்டான். “என்னை என்னடா பண்ண சொல்ற. என் தனிமையை மறக்கடிக்கிற ஒரே விசயம் இந்த வேலை தான். இந்த நாள், எத்தனை வருஷம் ஆனாலும் என்னால மறக்க முடியாது. இப்ப தான் என் கண் முன்னாடி இரண்டு பேரும் இல்லாம போன மாதிரி இருக்கு. ஆனா எத்தனை வருடம் ஆகிருச்சு.

உனக்கு தெரியுமா அசோக், “யாருமில்லாத அனாதையா நான் இருந்தப்பல்லாம் என்ன பாத்துக்கிட்டது உதய்தான். அவன்தான் சொன்னான், “உனக்கு என்ன கோபம்னாலும், என்ன வேதனைனாலும், இந்த புத்தகம் மேல காட்டு. அது உன்னை வேற ஒரு உலகத்துக்கு எடுத்துட்டு போகும்னு.”

அதுனாலதான் அப்ப படிப்பு. இப்ப வேலைன்னு என்னை பிசியாவே வைச்சிக்கிறேன். அதுனாலதான் ஏதோ என்னால இருக்க முடியுது. ஆனா ஒன்னு மட்டும் உண்மைடா. லைஃப்ல எனக்கு எந்த நல்லதும் நடக்கலனாலும், உன்னை மாதிரி, உதய் மாதிரி நண்பர்கள் கிடைச்சதுல நான் கொடுத்து வைச்சவன்டா.” எனப் பேசிக் கொண்டே சென்றான் சத்யா.

வருடா வருடம் கேட்பது தான் என்றாலும், இன்று தான் புதிதாக கேட்பது போன்ற பாவனையில் கேட்டு வைத்தான் அசோக். மேலும் ஏதேதோ பேசி பேசியே மெதுவாக சத்யாவை தூங்க வைத்தான் அசோக். அவன் தூங்கி எழுந்தால் ஓரளவு சரியாகி விடுவான்.

தூங்கிய பிறகு, ஊரே பாராட்டும் ஒரு சிறந்த ஆட்சியாளன். மக்கள் மனமறிந்து நடக்கும் மாயவன். எல்லாரையும் கட்டுக்குள் வைக்கும் அதிகாரம் இருந்தும் தான் காட்டும் அன்புக்கு கட்டுப்பட்டு நடக்கிறான் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருந்தது அசோக்கிற்கு.

தன் மனதில் தன்னை ஒரு சிறந்த இடத்தில் வைத்திருக்கிறானே தனது தோழன் என பெருமையில் இருக்கும் அசோக்கிற்கு சத்யாவின் வாழ்வின் பல பக்கங்கள் இன்னும் தெரியவில்லை என அறியும்போது, அவனின் மனநிலை எப்படியிருக்கும் என தெரியவில்லை.

சந்திரிகா, சஞ்சனா இருவரும் வெளியே வராமல் இருக்க, யாரை முதலில் எழுப்பலாம் என தரணி யோசித்துக் கொண்டிருக்கும் போது அவனது அலைபேசி இசைத்தது. சைத்தான்” என்ற பெயர் மிளிர, சிரித்தவாறே அழைப்பை ஏற்று காதில் வைத்தவன், “சொல்லு சைத்தானே. எப்படி இருக்க?” எனக் கேட்டான்.

“என் பேரு சைந்தவி. சைத்தான் இல்ல.” என சிலுப்பிக் கொண்டவள், “எங்க இருக்க. சந்துக்கா ஃபோன் எடுக்கல. என்ன பண்றாங்க?” எனக் கேட்டாள் அவனது தங்கை சைந்தவி. “அவங்க எங்க எழுந்தாங்க. இன்னும் ரெண்டும் தூங்குதுங்க. வா போய் எழுப்பலாம்.” என பேசிக் கொண்டே படிகளில் ஏறினான் தரணி.

அங்கோ சந்திரிகா சாதாரணமான காட்டன் புடவையில் எளிமையாக கிளம்பிக் கொண்டிருந்தாள். கதவை தட்டி உள்ளே சென்றவன், “ஹேய். நீ தூங்கலயா? இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” என்றவன், “இந்தா சைந்தவி பேசனுமாம்” என அலைபேசியை கொடுத்தான்.

சந்திரிகா காதில் வைத்ததும், “விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தடே சந்துக்கா.” என்றாள் சைந்தவி. “தேங்க்ஸ்டா. கொஞ்சம் வேலை இருக்கு. அப்பறம் பேசறேன் பை.” என்ற சந்திரிகா, அவளது பதிலுக்காக காத்திருக்காமல் அழைப்பை துண்டித்தாள்.

தரணி ஏதோ பேச வர அந்த நேரம் உள்ளே வந்த சஞ்சனா, “ஹாய் அக்கா. மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே.” என கட்டி அணைத்து ஒரு முத்தம் வைத்தாள். “சரிடி ஓகே. எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன்.” என கிளம்பியவள் பெயருக்கு கூட அவர்களின் வாழ்த்தை பொருட்படுத்தவில்லை.

“இரு சந்திரிகா நானும் வரேன்.” என்ற தரணியை திரும்பி பார்த்தவள், “இன்னைக்கு என்னோட எல்லா அப்பாய்ட்மெண்ட்யையும் கேன்சல் பண்ண சொல்லு” என்றவள் வேகமாக இறங்கி வந்தாள். கீழே அவள் வருகைக்காக வீட்டில் உள்ள மற்றவர்கள் காத்திருக்க. ‘இவங்களை வேற சமாளிக்கனுமே.’ என யோசித்துக் கொண்டே இறங்கினாள்.

எதிர்பார்த்தபடி அனைவரும் வாழ்த்துக்களை கூற, தீக்ஷிதாவை எடுத்து கொஞ்சியவள், அவளிடம் முத்தங்களை பெற்றுக் கொண்டு, கீர்த்தியிடம் கொடுத்தாள். “கொஞ்சம் வேலை இருக்குமா. வெளியே போய்ட்டு வரேன்.” என தனது அன்னையிடம் சொல்ல, “ஒரு வாய் கேசரியாவது சாப்பிட்டு போம்மா.” என்ற மல்லிகாவிடம், “வந்து சாப்பிடறேன்மா. நேரமில்ல.” எனக் கூறியவள், தானே காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

மல்லிகாவிற்கு நன்றாக தெரியும். இன்று சந்திரிகா வீட்டிற்கு வர நள்ளிரவாகி விடும் என. நான்கு வருடங்களாக பார்ப்பதுதானே. கனடாவில் இருந்து இங்கு வந்த முதல் வருடம், வழக்கம் போல பிறந்தநாள் விழா வைக்கலாம் என தந்தை கூற, “ஏற்கனவே செத்தவளுக்குலாம் பிறந்தநாள் கொண்டாடக் கூடாது.” என முகத்தில் அடித்தவாறு கூறியவள் வெளியே சென்று விட்டாள்.

அதன்பிறகு இவள் பிறந்தநாள் அன்று வீட்டில் இருப்பதையே விட்டு விட்டாள். அது மட்டுமா சத்யாவுடனான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு, பிறந்தநாள் கொண்டாடுவதையே மறந்து விட்டாள். ஆனால் சத்யா இருந்த ஆசிரமத்திற்கு மதிய உணவு வழங்கும் பழக்கத்தை மட்டும் இன்னும் விடவில்லை.

அதோடு சேர்த்து அங்கிருக்கும் அனைவருக்கும் ஆடையும் வாங்கி கொடுக்க ஆரம்பித்தாள். அதே போல அன்றும் ஏற்பாடுகளை செய்தவள் காரிலியே இலக்கின்றி சுற்றிக் கொண்டிருந்தாள். சத்யாவுடனான தனது பிறந்தநாளன்று நடந்ததை நினைத்து பார்த்தாள்.

அவனும், இவளும் கோவிலுக்கு சென்றிருக்க, இறைவனை வழிபட்ட பிறகு, அங்கிருந்த அரசமரம் ஒன்றின் அடியில் அமர்ந்தனர். சத்யா, “இத்தனை வருஷமா இந்த நாள் வந்தாலே கஷ்டமா இருக்கும். ஆனா இந்த வருஷம் ஏனோ ரொம்ப நிம்மதியா ஃபீல் பண்றேண்டி.” எனக் கூறினான். “ஏன். என்னாச்சு?” என சந்திரிகா கேட்கவும் தனது பெற்றோரை பற்றிய விவரம் கூறவும் இவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

“உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டனா? இன்னைக்கு போய் உங்கள செலிபிரேட் பண்ண கூட்டிட்டு வந்துட்டேனே?” என பதறினாள். “ஹேய். அதெல்லாம் ஒன்னுமில்ல. நான்தான் பர்த்டே பேபியை வருத்தப்பட வச்சுட்டேன். அவங்க என் கூட இல்லனாலும் என் பக்கத்துலயே இருப்பாங்கன்னு நீதானே சொன்ன. நான் இப்படி இருக்கறத அவங்களும் விரும்புவாங்க. “அம்மா. பாருங்க. எப்படி என்னோட செலக்ஷன். இவதான் உங்க மருமக.” என்றான் சத்யா.

அந்த நேரம் இரு இலைகள் அவர்கள் மேல் விழ, தனது பெற்றோரின் ஆசியாகவே அதை நினைத்து மகிழ்ந்து போனான் சத்யா. இதை நினைத்து பார்க்கும் போதே ஆசிரமத்தில் இருந்து ஃபோன் வர நினைவில் இருந்து விடுபட்டவள் அங்கே சென்றாள்.

அங்கு அனைவரும் உணவு உட்கொண்ட பின் அந்த நேரத்தில் அங்கு வந்தார் ருக்குமணி. சத்யாவுடன் அங்கு வரும் வேளைகளில் அவரை பார்த்திருக்கிறாள் சந்திரிகா. அவரை அடையாளம் கண்டு கொண்டவள், “நீங்க ருக்கு அக்காதானே. நல்லா இருக்கிங்களா?” எனக் கேட்டாள்.

அவர்,”நல்லாயிருக்கேன் மா” என்க, “நான் சந்திரிகா. ரொம்ப நாள் ஆச்சு உங்களை பார்த்து. எங்க இருந்தீங்க?” எனவும், சட்டென சத்யாவின் நியாபகம் வந்தது அவருக்கு. “நான் கோயம்புத்தூர்ல இருந்தேன் மா. இப்ப கொஞ்ச நாள் முன்னாடி தான் இங்க வந்தேன். ஆமா நீ எப்போ ஊர்ல இருந்து வந்த?” என ருக்குமணி கேட்கவும்,

‘நாம கனடா போனது இவருக்கு எப்படி தெரியும்.’ என யோசித்தவள், “நான் ரொம்ப நாள் ஆச்சுக்கா இங்க வந்து.” என்றாள் சந்திரிகா. அதற்கு ருக்குவோ, “ஏன்மா. அந்த தம்பிக்கும் உனக்கும் ஏதாவது சண்டையா?” எனக் கேட்டதும் தூக்கி வாரி போட்டது சந்திரிகாவிற்கு.

‘இவர் தெரிந்து கேட்கிறாரா, இல்லை சாதாரணமாக கேட்கிறாரா? என்ன பதில் சொல்லலாம்’ என சந்திரிகா யோசித்துக் கொண்டிருக்க, ருக்கு, “நீ சொல்லலனா, எனக்கு தெரியாதா என்னா? சண்டை இல்லாமலா ஒரே ஊர்ல இருந்துகிட்டு தனித்தனியா தங்கி இருக்கீங்க?” என்றவர் தொடர்ந்து, “சரி சரி இங்க வேலையெல்லாம் முடிஞ்சதா?” எனக் கேட்டார்.

அவள் முடிஞ்சது எனவும், “அப்ப வா போகலாம்” என அழைத்து வந்தவர், காரில் ஏறி அவளை வண்டி எடுக்க சொன்னார். “அக்கா. அது வந்து” என தயங்கியவளை, “புருஷன் பொண்டாட்டினா நாலு சண்டை வரதான் செய்யும். அதுக்குன்னு விட்டுட்டு போய்ட்டா எல்லாம் சரியாகிடுமா?

அதுவும் அந்த தம்பி இப்ப உடம்பு சரியில்லமா இருக்கு. என்ன இருந்தாலும் நீ பாத்துக்கற மாதிரி வருமா?” எனக் கேட்டு வாயை அடைத்தார். சத்யாவிற்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் அவளை வேறு எதையும் யோசிய விடாமல் காரை எடுத்து சத்யா வீட்டை நோக்கி செலுத்தவும் வைத்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *