376 views

 

                  மருத்துவமனையில் இருந்து திடீரென கிளம்பலாம் என கூறிய தங்கையை ஆச்சர்யமாக பார்த்தான் சுரேந்திரன். சந்திரிகா வேகமாக சென்று காரில் ஏறவும் பின்னாலே வந்து காரை கிளப்பினான். பக்கவாட்டில் அமர்ந்திருந்தவள் முகத்தில் இருந்து எதையும் கண்டறிய முடியவில்லை.

இருந்தும் கோபமாக இருப்பது போல தோன்றியது அவனுக்கு. மெதுவாக பேச்சு கொடுத்தவன், “என்னாச்சு. சந்துமா. சத்யா கண் முழிச்சிட்டானா?” எனக் கேட்டான் சுரேந்திரன். அவனை முறைத்து பார்த்தாள் சந்திரிகா. “என்னனு சொன்னாதானே தெரியும்.” என தன்மையாகவே சுரேந்திரன் கூற, “உனக்கு நிஜமாலுமே எதுமே தெரியாது அப்படிதானே?” எனக் கேட்டாள் சந்திரிகா.

அவன் தெரியாது என உதட்டை பிதுக்கவும், “வீட்ல வந்து சொல்றேன்.” என பேச்சை முடித்துக் கொண்டாள். வீட்டிற்கு வரும்போதே அதிகாலை நான்கு மணி ஆகிருக்க, சுரேந்திரன் அவனது அறைக்கு சென்று விட்டான். ஆனால் சந்திரிகாவோ வரவேற்பறை சோபாவிலே அமர்ந்திருந்தாள்.

காலையில் அவளது பாட்டி வந்து பார்க்கும் போதும் அப்படியே அமர்ந்திருக்க, அவர் அருகில் வந்து, “என்ன சந்துமா. இங்க உட்கார்ந்திருக்க. யாருக்கோ உடம்பு சரியில்லனு பார்க்க போனியாமா. இப்ப பரவாயில்லயா?” எனக் கேட்டார்.

அவரை நிமிர்ந்து பார்த்தவள் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருக்க, தாத்தா வந்து கேட்ட போதும் வாய் திறக்கவில்லை. தனது அன்னை வந்து கேள்வி கேட்டபோதும் பதில் சொன்னாலில்லை.

இறுதியாக அவளது தந்தை வரவும் வேகமாக எழுந்து அவர் முன் நின்றவள், “ஏன்பா இப்படி பண்ணீங்க?” எனக் கேட்கவும் சுரேந்திரன் ஹாலுக்கு வரவும் சரியாக இருந்தது. “ஹேய் இப்ப உனக்கு என்ன பிரச்சனை. ஏன் சும்மா அப்பாகிட்ட கத்திட்டே இருக்க. அவர் என்ன பண்ணாரு.?” எனக் கேட்டான் சுரேந்திரன்.

“என்ன பண்ணல. உங்க அப்பாரு. இன்னைக்கு சத்யா இப்படி இருக்க காரணமே இவர்தான். சத்யாக்கு யாரும் எதிரிங்கல்லாம் கிடையாது. அவ்வளவு கேர்லஸ்ஸா ரோட் கிராஸ் பண்றவரும் இல்ல. இந்த ஆக்ஸிடெண்ட் திட்டமிட்டு தான் நடந்திருக்கு. திட்டம் போட்டு குடுத்ததே இதோ நிற்கிறாரே இவராதான் இருக்கும்.” என்றாள் கோபமாக.

“ஏய். வாயை மூடு. யாரை பார்த்து என்ன சொல்ற. என் பிள்ளையை பார்த்தா கொலைகாரனை மாதிரி தெரியுதா உனக்கு? எவனோ ஒருத்தனுக்காக பெத்த அப்பனையே எதுக்க துணிஞ்சிட்டியா நீ” என பாட்டி அதட்ட, “நீ சொன்னா கேட்டுக்கற நல்ல பொண்ணுனு நினைச்சேன்மா. ஆனா இப்படி வீட்ல இருக்கறவங்கள எதுத்து பேசலாம் எங்க கத்துக்கிட்டனு தெரியல.” என ஆதங்கப்பட்டார் தாத்தா.

“உனக்கு யார் அப்படி சொன்னா?” என சுரேந்திரன் ஏதோ பேச வர, அவனை நிறுத்தினார் அவனது தந்தை சக்கரவர்த்தி. “விடு சுரே. என்னைக்கா இருந்தாலும் தெரியதானே போகுது. ஆமா. நான்தான் ஆள் செட் பண்ணி ஆக்ஸிடெண்ட் பண்ணேன். செத்துட்டானா? இல்ல அவன் இன்னும் உயிரோடதான் இருக்கானா?” என கேட்டதில் அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து நின்றனர்.

ஏன் சந்திரிகாவே ஒரு சந்தேகத்தில் அந்த கேள்வியை கேட்டிருந்தாலும், தனது தந்தை அப்படிப்பட்டவர் இல்லை என நம்பிக் கொண்டுதான் இருந்தாள். அப்படி ஏதும் இல்லை என கூறி விட மாட்டாரா என. இதில் தனது தமையனிடம் தெரிந்தால் தெரியட்டும் என்கிறார் என்றால் அவனும் இதற்கெல்லாம் உடந்தையோ என நொந்து போய் விட்டாள்.

“எதுக்குப்பா? இப்படி பண்ணீங்க? நான் நீங்க சொல்றது எதுக்கும் மறுப்பே சொல்லலயே. இத்தனை நாளா காலேஜ் கூட போகலயே?” எனக் கேட்டாள் சந்திரிகா. “உண்மைதான். ஆனா நீ அவனை மறக்கவும் இல்லையே. அமைதியா இருந்து ஏதாவது திருகல் வேலை பண்ணுவியோன்னு தோணுச்சு. அதான் அவனே இல்லன்னா நீ மறக்க ஈசியா இருக்கும்ல.” என்றார் சக்கரவர்த்தி அசால்ட்டாக.

“ஓகோ. அவன் இல்லன்னா நான் அவனை மறந்திடுவேனா? இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. அவனுக்கு எதுவும் ஆகாது. அப்படி ஆனாலும் நான் சாகிற வரை அவன் நினைப்பு என் மனச விட்டு போகாது. உங்க கண்ணு முன்னாடி நாங்க சந்தோஷமா வாழறதை நீங்க பார்க்கதானே போறீங்க?” என கத்தியவள்,

“அப்படி ஏதாவது ஆச்சுன்னா நான் உச்கள யாரையும் மன்னிக்கவே மாட்டேன்.” என்றவள் வேகமாக வீட்டை விட்டு வெளியேறி மருத்துவமனைக்கு வந்தாள். தனது தந்தை இந்த அளவுக்கு இறங்குவார் என நிச்சயமாக அவள் எதிர்பார்க்கவே இல்லை. அதை நினைத்து கொண்டே வேதனையோடு மருத்துவமனைக்கு வந்தாள்.

அதை விட வேதனையான விசயமே இனிமேல்தான் நடக்க போகிறது என்பதை அறியாமல். அவள் திரும்பி வந்தபோதும் அவன் கண் விழிக்கவில்லை. ஆனால் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் கூறியதில் ஒரு துளி மகிழ்ச்சி வந்தது அவளுக்கு.

பத்து மணியளவில் மற்ற நண்பர்கள் அனைவரும் வந்திருக்க, அதன் பிறகே மருத்துவர் வந்து பார்த்தார். பரிசோதித்து விட்டு வெளியே வந்தவர் இவர்களிடம், “பயப்பட ஒன்னுமில்ல. அவர் நல்லாவே ரெக்கவர் ஆகி இருக்கார். இப்ப ஸ்லீப்பிங் டோஸ் குடுத்துருக்கோம். ஒன் ஹவர்ல கண் முழிச்சிடுவார்.” எனக் கூறி சென்றார்.

சந்திரிகாவிடம் வந்த கீர்த்தி, “அதான் இப்ப பரவாயில்லன்னு சொல்லிட்டாங்கல்ல. நீ வீட்டுக்கு போய்ட்டு குளிச்சுட்டு, சாப்பிட்டு வாடி. நாங்க பாத்துக்கறோம்” என்றாள். அருகே இருந்த உதய்,”சந்திரிகா வீட்ல இருந்து கொஞ்ச முன்னாடிதானே வந்துச்சு.” எனக் கேட்டான் கீர்த்தியிடம்.

“வீட்டுக்கு போனியா, அப்பறம் ஏன் இப்படி இருக்க. டிரஸ் சேன்ஜ் ஆவது பண்ணிருக்கலாம்ல.” எனக் கேட்டதற்கு எந்த பதிலுமில்லை. சத்யா கண் முழித்ததும் பேசிக் கொள்ளலாம் என நினைத்தவர்கள். உதய்யிடம் ஆசிரமம் சென்று சத்யாவிற்கு தேவையான பொருட்களை எடுத்து வருமாறு கூறி எழிலுடன் அனுப்பி வைத்தனர்.

ஒரு மணி நேரம் கடந்து மற்றொரு மணி நேரத்தை கடந்த பின்பே கண் விழித்தான் சத்யா. அவன் கண் விழிக்கும் நேரம் சந்திரிகா உடன் இருக்கட்டும் என அவளை மட்டும் அவனது அறையில் விட்டு விட்டு மற்றவர்கள் வெளியே இருந்தனர். கண் விழித்த சத்யாவை காதலோடு சந்திரிகா பார்க்க, அவனுக்கோ அவள் யாரென்றே தெரியவில்லை.

“எக்ஸ்கியூஸ் மீ. நீங்க யாரு. நான் ஏன் இங்க இருக்கேன்.” என சத்யா கேட்டதும், அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. நீண்ட நேர மயக்கத்தில் நினைவு வரவில்லையோ என நினைத்து வெளியே சென்று உதய்யை அழைத்து வர, அந்தோ! அவனுக்கு உதய்யை கூட தெரியவில்லை.

மருத்துவர்கள் உதவியை நாட, அவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு, சந்திரிகாவிடம் கூறிய தகவல், அவளுக்கு ஒரு கூடை நெருப்பை தலையில் கொட்டியது போல இருந்தது. ஆம். சத்யா நினைவலைகளை இழந்து விட்டான். தலையில் பலமாக அடிபட்டதில் தான் யார் என்பதை கூட மறந்து சுய நினைவின்றி இருக்கிறான் என்பதே அது.

அப்போது மீண்டும் சக்கரவர்த்தியும், சுரேந்திரனும் மருத்துவமனைக்கு வந்தனர். சத்யாவிற்கு சந்திரிகாவை தெரியவில்லை எனும் போதே கீர்த்தி, சக்கரவர்த்திக்கு தகவல் கொடுத்திருந்தாள். மருத்துவரிடம் கேட்டு அவர்களும் நிலைமையை புரிந்து கொள்ள சுரேந்திரன் தான், “எப்பதான் டாக்டர் அவனுக்கு நினைவு வரும்.” எனக் கேட்டான்.

மருத்துவர் சொல்ல போகும் பதிலுக்காக ஆவலுடன் அவர் முகம் பார்த்தாள் சந்திரிகா. அவரோ, “அதை கரெக்டா சொல்ல முடியாது சார். ஒரு வருசத்துல வரலாம். இரண்டு வருசத்துல வரலாம். ஏன் நினைவே வராம கூட போக வாய்ப்பிருக்கு.” என குண்டை தூக்கி போட்டார்.

“நாங்கதான் இத்தனை பேர் இருக்கோம்ல. அவனுக்கு எல்லாத்தையும் பேசி புரிய வைச்சுட்டா. நியாபகம் வந்திடும்ல டாக்டர்” எனக் கேட்டான் அன்பு. “ப்ளீஸ் அந்த தப்பை மட்டும் பண்ணீடாதீங்க. தானா அவருக்கு நினைவு திரும்பனும். சாதாரணமா நீ இங்க படிச்ச உன் ஃப்ரண்ட்ஸ் நாங்கள்ளாம். இது மாதிரி சொல்லலாம்.

ஆனா உணர்வு ரீதியான நினைவுகள், ஃபார் எக்ஸாம்பில் காதல் மாதிரி ஏதாவது இருந்தா, அதை நினைவுபடுத்தும் போது அவங்க பயங்கரமா யோசிப்பாங்க. அது நிறைய பின்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தா கூட முடியலாம்” என மருத்துவர் கூறியதும், அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

அப்போதுதான் இதுவரை செய்தது பத்தாது என மற்றொரு தவறை செய்தார் சக்கரவர்த்தி. தளர்ந்து போய் அமர்ந்திருந்த தனது மகளிடம் “உன்கிட்ட கொஞ்சம் பேசனும். வா” என அழைத்து சென்றார். அவளிடம், “என்ன முடிவு பண்ணிருக்க?” எனக் கேட்க, சந்திரிகாவோ புரியாமல் பார்த்தாள்.

“அவன் இப்படி ஆனதுக்கு நான் ஒன்னும் காரணமில்ல. நீதான். என்ன பார்க்கிற. நீ அவனை காதலிச்சதால தானே இவ்வளவு பிரச்சனையும். அதனால இனிமேலாவது நான் சொல்றதை கேட்டீனா அவன் உயிராவது மிஞ்சும்” என சற்றும் இரக்கமே இல்லாமல் பேசினார் சக்கரவர்த்தி.

அவள் பதில் பேசாமல் இருக்க, அவரே தொடர்ந்து, “இப்ப நீ போய் அவன்கிட்ட கெஞ்சி நான் உன்னை காதலிச்சேனு சொன்னாலும் அவன் உயிருக்கு ஆபத்துதான். நல்லவேளையா அவனே உன்ன மறந்துட்டான். அதனால நீயும் அவனை மறக்கற வழியை பாரு. இங்க இருந்தா மறக்கறது கஷ்டம்தான். அதுனால ஒரு வாரத்துல நீ கனடா கிளம்பற. என்ன சொல்ற?” எனக் கேட்டார்.

அவரை வெறுப்போடு பார்த்தவள், எதுவும் பேசாமல் அங்கிருந்து உள்ளே வர, சத்யாவின் அறையில் ஏதோ சத்தம் கேட்டது. வெறி பிடித்தவன் போல அங்கிருந்த பொருட்களை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் அவன். அவனது அறைக்குள் நுழைய முயன்றவளை தடுத்து அழைத்து வந்தனர் கீர்த்தியும், திவ்யாவும்.

அதற்குள் மருத்துவர் உள்ளே நுழைந்து அவனுக்கு மயக்க ஊசி போட்ட பின்பே அமைதியானான். “என்னாச்சுடி. என்னை விடு. நான் அவரை பார்க்கனும்” என்றாள் சந்திரிகா ஆற்றாமையோடு. “வேணாம்டி. அவர் அவங்க அப்பாம்மா பத்தி கேட்டதுக்கு. அவங்க இல்லை. நீ ஆசரமத்தில தான் இருக்க நாங்கல்லாம் உன் நண்பர்கள்னு உதய் சொன்னதுக்கு தான் இந்த ஆர்ப்பாட்டம்.” என்றாள் திவ்யா.

“இதுல நீ வேற போய்.யாருனு கேட்டா நான்தான் உன் லவ்வர்னு சொல்ல போறீயா?” என்றாள் கீர்த்தி. என்ன செய்வதென்றே புரியாமல், தலையை பிடித்தவாறு சந்திரிகா அமரவும், திவ்யா அருகில் வந்து, “பீல் பண்ணாதடி. நீயும் சத்யாவோட ஃப்ரண்டுன்னு சொல்லிக்கலாம். நீ போய் பாரு.” என சமாதானம் செய்ய, உதய்யோ அதை கேட்டு, “இல்லம்மா அது சரியா வராது. நார்மலா அவன் இருந்தா நிலைமை வேற. சந்திரிகாவும் சமாளிக்கலாம்.

இப்ப அவன் கஷ்டப்படுறதை பார்த்து சந்திரிகா கண்டிப்பா தன்னோட உணர்வுகளை வெளிப்படுத்தாம இருக்க முடியாது. அதனால சத்யாவுக்கு ஏதாவது பிரச்சனை வர வாய்ப்பிருக்கு. கொஞ்ச நாள் சந்திரிகா சத்யாவை விட்டு விலகியே இருக்கட்டும். உன்ன ஒருமுறைதான் அவன் பார்த்திருக்கான். நீ யாருனு கேட்டா அடிபட்டப்ப உன்ன ஆஸ்பிட்டல்ல அவங்கதான் சேர்த்தாங்கன்னு நான் சமாளிச்சுக்கறேன்.

அவனுக்கு சரியானதும், நானே வந்து உன்கிட்ட சேர்த்து வைக்கறேன். அதுவரை நமக்குள்ள எந்த பேச்சு வார்த்தையும் வேணாம். இந்த அண்ணனை நம்பும்மா.” என கெஞ்சினான் உதய். ஒரே நாளில் தனது காதல் வாழ்க்கை தலைகீழாக மாறும் என கனவிலும் அவள் நினைக்கவில்லை. எல்லாமாக நானிருப்பேன் என்றவன் இன்றோ யார் நீ எனக் கேட்கிறான். என்ன செய்வாள் அவள்!!!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
2
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *