372 views

 

               சந்திரிகாவை வீட்டுக் காவலில் வைத்தது போல அவளது தந்தை நினைத்துக் கொண்டிருக்க, அவளோ எதை பற்றியும் கவலைப்படாமல் அமைதியாகவே வலம் வந்து கொண்டிருந்தாள். அன்றைய மாலை பொழுதில் தனக்கு விருப்பமான மல்லிகை பந்தலின் அடியில் அமர்ந்து சத்யாவுடன் ஒரு வாரம் முன்பு பேசியதை நினைவு கூர்ந்தாள்.

சக்கரவர்த்திக்கு விசயம் தெரிந்ததும் அவர் கோபப்பட, அவளது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டது அவரால். சற்று நேரம் கழித்து தன் அன்னையிடம் சத்யாவிடம் ஒரே ஒரு முறை பேச வேண்டும் என இறைஞ்சியதில் அவரும் யாருக்கும் தெரியாமல் அலைபேசியை எடுத்துக் கொடுத்தார்.

சத்யாவும் இவளது அழைப்பினை எதிர்பார்த்திருப்பான் போல. ஒரே ரிங்கில் ஃபோனை எடுத்தான். “சத்யா” என அன்பொழுக சந்திரிகா அழைக்க, “என்னாச்சுடா. ஒன்னும் பிரச்சனை இல்லைல்ல. நான் வேணா அங்க வரவா?” எனக் கேட்டான் சத்யா.

“இல்ல சத்யா. இங்க ஒன்னும் பிரச்சனை இல்ல. நம்ப விசயம் கேள்விப்பட்டதுல வீட்ல எல்லாரும் கொஞ்சம் கோபமா இருக்காங்க. அவ்ளோதான். இந்த நேரத்துல நாம எது பண்ணுனாலும் அது தப்பாதான் போகும். அதனால அவங்க என்ன பண்ணாலும் கொஞ்ச நாளைக்கு நாம அமைதியா இருக்கலாம்.

அவங்க கோபம் கொஞ்சம் தணிஞ்சதும் நம்ப பக்க நியாயத்தை சொன்னா கண்டிப்பா ஏத்துப்பாங்க. அதுவரை நாம பேசறதை கூட அவாய்ட் பண்ணிக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க?” எனக் கேட்டாள்.

“நீ சொல்றதும் சரிதான் சூர்யா. உங்க வீட்ல எவ்வளவு ஆசையா வளர்த்திருப்பாங்க. பெரிய இடத்துல கல்யாணம் பண்ணி குடுக்கனும்னு எண்ணம் இருக்கும். நீ என்ன மாதிரி ஒருத்தனை லவ் பண்றன்னு சொன்னா கோவம் வரும்தானே. நீ சொல்ற மாதிரி நாம பொறுமையாகவே இருப்போம்.” என்றான் சத்யா.

“அது என்ன உங்கள மாதிரி. உங்களை பத்தி அவங்களுக்கு தெரியல சத்யா. கண்டிப்பா நான் புரிய வைப்பேன். உங்களுக்கு இந்த வாரம் முழுக்க செமஸ்டர் பரீச்சை இருக்குல்ல. அதுல கவனம் செலுத்துங்க. என்ன நடந்தாலும் உங்க லட்சியத்துல நீங்க தோற்க கூடாது சத்யா. இது என் மேல ஆணை.” என்றாள் சந்திரிகா.

“கண்டிப்பா. நீயும் பயப்படாம இரு. எல்லாம் நல்லதாவே நடக்கும். ஐ லவ் யூ சோ மச் மை டியர்.” என மனமுருகி சொன்னவன் தனது முத்தங்களையும் அனுப்பினான் சத்யா. “ஆமாங்க. நாம ஒன்னு சேரரத யாராலையும் தடுக்க முடியாது. லவ் யூ டூ. பத்திரமா இருக்கனும். யாரோ வர மாதிரி இருக்கு. நான் ஃபோனை வைக்கறேன்.” என வைத்து விட்டாள்.

இதுதான் அவனுடன் பேசும் கடைசி தருணம் என்பதை பாவி மகள் அறியாமல் போனாள். அதற்குள் அவளது அண்ணன் சுரேந்திரன் உள்ளே வந்திருக்க, நல்ல வேளை அவன் ஃபோனை பார்க்கவில்லை.

அவன் பங்குக்கு, “ஏதோ கொஞ்ச நாள் ஒரே நேரம் காலேஜ்ல போகல. அதுக்குள்ள என்னன்ன வேலை பண்ணி வச்சிருக்க நீ. அவனை பத்தி உனக்கு என்ன தெரியும். அவன் யாரு எப்படிப்பட்டவனு நான் உனக்கு புரிய வைக்கிறேன் பாரு.” என கோபத்தில் கத்தி விட்டு செல்ல இவளுக்குதான் ஆயாசமாக இருந்தது.

அதையெல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தவளை தாயின் குரல் கலைத்தது. “சந்திரிகா. கீர்த்தி ஃபோன் பண்ணி இருக்காடா. என்னனு பாரு.” என மல்லிகா சத்தமிட, “தோ. வரேன்மா.” என எழுந்து வந்தாள். அந்த நேரம் மற்றவர்கள் யாரும் வீட்டில் இல்லாமல் இருக்க, இவளும் சாவகாசமாக ஃபோனை எடுத்து, “சொல்லு கீர்த்தி. எப்படி இருக்க?” எனக் கேட்டாள்.

கீர்த்தி, “சந்து. நான் சொல்றதை பொறுமையா கேளு. ப்ளீஸ் பதட்டப்படாத.” எனவும், சந்திரிகாவோ, “என்னனு சொல்லுடி” என்றாள். “நீ கொஞ்சம் கே.எம்.எஸ் ஆஸ்பிட்டல் வர முடியுமா?” எனக் கேட்டாள் கீர்த்தி. “எதுக்குன்னு சொல்லு. யாருக்கு என்னாச்சு.?” என இவள் துருவி துருவி கேட்க, கீர்த்தியோ, “எப்படியாவது வாடி ப்ளீஸ்.” என்றவாறே ஃபோனை வைத்து விட்டாள்.

தனது அன்னையை அழைத்து விசயத்தை கூறவும், அவர் முதலில் யோசித்தவர் பிறகு, “சரி. நானும் வரேன். வா போகலாம்.” என்றார். “இல்லம்மா. வீட்ல யாரும் இல்ல. தாத்தா, பாட்டி திரும்பி வந்து தேடுவாங்க. நானே போயிட்டு வந்தர்றேன். நீ அவங்கள மட்டும் சமாளிச்சிடுமா. ப்ளீஸ்.” என அனுமதி கேட்க, மல்லிகாவிற்கும் அதுவே சரியென பட சந்திரிகாவை அனுப்பி வைத்தார்.

மருத்துவமனைக்கு உள்ளே சென்றவள் கீர்த்தியை தேடினாள். ஆனால் அவள் கண்ணில் பட்டதென்னவோ அவளது தந்தையும், தமையனும் தான். அவர்களில் இருவருக்கு ஏதேனும் ஆகி விட்டதோ என நினைத்து பதறியவள் அவர்களை ஆராய, அவர்கள் முகத்தில் லேசான பதட்டம் இருந்தாலும் இருவரும் நலமாகவே இருந்தனர்.

அதன்பிறகே வேறு வேலையாக கூட வந்திருக்க கூடும் என நினைத்து அவர்கள் கண்ணில் படாமல் மறைந்து கீர்த்தி ஏற்கனவே கூறி இருந்த அவசர சிகிச்சை பிரிவை நோக்கி சென்றாள். அங்கு ஏற்கனவே கீர்த்தி, திவ்யா, உதய், எழில் நால்வரும் நின்று கொண்டிருக்க இவளுக்கு எதுவும் புரியவில்லை.

கீர்த்தியிடம் சென்று, “என்னாச்சுன்னு இப்பவாது சொல்லு. யாருக்கு உடம்பு சரியில்லை? ஏன் எல்லாரும் இங்க இருக்கிங்க?” எனக் கேட்டவள், உதய்யிடம், “நீங்கள்ளாம் இங்க இருக்கிங்கன்னா சத்யா எங்கன்னா? மெடிக்கல் ஏதாவது போயிருக்காரா? யார் உள்ள இருக்காங்க?” என கேள்வி மேல் கேள்வி கேட்க, யாரும் பதிலே பேசவில்லை.

“ஏன் எல்லாரும் இப்படி இருக்கிங்க.” என்றவள், தானாகவே சென்று ஐசியூ கதவின் கண்ணாடியில் பார்க்க அங்கே அவள் கண்ட காட்சி அவளை நிலைகுலைய வைத்தது. ஆனாலும் நம்பாமல் மீண்டும் ஒருமுறை பார்க்க, உள்ளே படுத்து இருந்தது சாட்சாத் சத்யாவே தான்.

அதிர்ச்சியின் வீரியம் தாங்காமல் மயங்கி விழுந்தவளை ஓடி வந்து தாங்கி பிடித்தார் சக்கரவர்த்தி. அவளை ஒரு அறையில் அட்மிட் செய்து சோதிக்க, சற்று நேரத்தில் கண் திறந்து விட்டாள். ஆனால் அருகில் அவளது தந்தையும், தமையனும் நின்றதை கண்டு ஒரு நொடி திடுக்கிட்டாள்.

ஆனால் மறுநொடியே சத்யாவின் கோலம் நினைவில் வர, எழுந்து அறையை விட்டு ஓடிவர, அவள் பின்னாலே வந்தனர் சக்கரவர்த்தியும், சுரேந்திரனும். “என்ன ஆச்சு அவருக்கு. நீங்களாது சொல்லுங்கண்ணா” என அழுதாள் எழிலிடம். “அது, அது, சத்யாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சும்மா. அதுவும் நம்ம காலேஜ்க்கு வெளிலயே. உடனே இங்க வந்து சேர்த்துட்டோம். டாக்டர்ஸ் பாத்துட்டு இருக்காங்க.” என்றான் எழில்.

அதே நேரம் மருத்துவர் வெளியே வர, அவரிடம் ஓடி விசாரித்தாள் சந்திரிகா. மருத்துவரோ, “தலைல பலமா அடிபட்டிருக்கு. நிறைய இரத்தம் போய் இருக்கு. டிரீட்மெண்ட் பண்ணிட்டு இருக்கோம். எதுனாலும் இருபத்தி நாலு மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும்.” என்றார்.

அப்படியே தொய்ந்து போய் தரையில் அமர்ந்தவளை கீர்த்தியும், திவ்யாவும் சமாதானம் செய்து அங்கிருந்த சேரில் அமர வைத்தனர். நேரமாவதை உணர்ந்து அவர்கள் இருவரையும் கிளம்ப சொன்னான் உதய். அவர்களோ சந்திரிகாவின் நிலையினை உணர்ந்து அமைதியாக இருக்க, சந்திரிகாவோ சுதாரித்து, “நாங்க பாத்துக்கறோம் நீங்க கிளம்புங்க” என்றாள்.

அதுவரை அமைதியாக ஏதோ யோசனையில் இருந்த சக்கரவர்த்தி, “அவங்க மட்டும் இல்ல. நீயும்தான் கிளம்பு. இங்க இருந்து என்ன பண்ண போற.” என்றவர், அவள் பதிலுக்கு முன்பே சுரேந்திரனிடம் திரும்பி, “அவளை கூட்டிட்டு கிளம்பு” என பணித்தார்.

தனது தந்தையை வெறுமையாக பார்த்தவள், தனது அண்ணனிடம், “நான் சத்யாக்கு சரியாகற வரை எங்கையும் வர மாட்டேன் அண்ணா” என்றாள். இருவரில் யாரை சமாதானம் செய்வதென தெரியாமல் முழித்தவன், தனது தந்தையிடம் சென்று, “இன்னைக்கு ஒரு நாள் இங்க இருக்கட்டும்பா. காலையில நானே வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். நீங்க கிளம்புங்க” என்றான் சுரேந்திரன்.

அவனை தனியா கூட்டிச் சென்று ஏதோ கூறியவர், அங்கிருந்து கிளம்ப அதன் பின்பே திவ்யாவும், கீர்த்தியும் எழிலுடன் கிளம்பினர். ஏதோ ஃபோன் வரவும் அதை பேச சுரேந்திரன் சென்று விட உதய்யிடம் என்ன நடந்தது என விசாரித்தாள் சந்திரிகா.

“இன்னையோட எக்ஸாம் முடிஞ்சதுன்னு எல்லாரும் வெளில போலாம்னு எழில் சொன்னான். அவன்தான் உங்க எல்லாரையும் கூப்பிடலாம்னு ஐடியா சொன்னான். நீ காலேஜ் வராத விசயம் என்னையும், சத்யாவையும் தவிர மத்த ஃப்ரண்ட்ஸ்க்கு நாங்க சொல்லல. சத்யா தான் எக்ஸாம் முடியட்டும் இதெல்லாம் பெரிசு பண்ணாதன்னு சொல்லிட்டான்.

அப்பறம் எழில்,திவ்யாகிட்ட சொல்லவும் அவ வரேனு சொல்லி கீர்த்தியையும் வர சொல்லிட்டா. நம்ப காலேஜ் பக்கத்துல இருக்கிற ரெஸ்டாரண்ட்க்கு தான் போனோம். அப்பவும் சத்யா. நான் வரல இப்படியே போறேன்னுதான் சொன்னான். எல்லாரும் கம்பெல் பண்ணவும்தான் வந்தான்.

ஆனா அங்க வைச்சு கீர்த்தி மூலமா உங்க பிரச்சனை எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு. அதுக்கப்பறம் ஒரு மாதிரி வெக்ஸ் ஆகிட்டான். சாப்பிட்டதுமே நீங்க பேசிட்டு வாங்க நான் கிளம்பறேன்னு வெளில வந்தான். அவனை தனியா விடக் கூடாதுன்னு நானும் பின்னாடியே வந்தேன்.

ஆனா அதுக்குள்ள வேகமா ரோட் கிராஸ் பண்ணான். அப்ப பார்த்து ஒரு லாரி வந்து” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் திணறினான். “கவலைப்படாதீங்கன்னா. அவர்க்கு ஒன்னும் ஆகாது. கொஞ்ச நேரத்துல வந்து பேசுவார் பாருங்க.” என அவனுக்கு தைரியம் சொன்னாளோ இல்லை தன்னையே தேற்றிக் கொண்டாளோ அது அவளுக்கு தான் தெரியும்.

அதற்குள் சுரேந்திரன் வந்து விட, அதற்கு பின் யாரும் அங்கு பேசிக் கொள்ளவில்லை. நள்ளிரவு நெருங்கிய நேரத்தில் நர்ஸ் ஒருவர் சத்யாவின் அறையில் இருந்து வெளியே வர அவரிடம் சென்றாள் சந்திரிகா.

“சிஸ்டர் அவருக்கு இப்ப எப்படி இருக்கு. கண் முழிச்சிட்டாரா?” என சந்திரிகா கேட்க, “இன்னும் இல்லம்மா. ஆனா பல்ஸ்ல நல்ல முன்னேற்றம் இருக்கு. பயப்படாதீங்க” என்றார் அவர். “நான் ஒருமுறை பார்க்கலாமா?” என தயங்கியவாறே சந்திரிகா கேட்கவும், அவளது கலங்கிய முகத்தை கண்டு என்ன நினைத்தாரோ,

“சரி போங்க. ஆனா சீக்கிரம் வந்திடுங்க. ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடாதீங்க” எனக் கூறி விட்டு சென்றார். நாற்காலியில் அமர்ந்தவாறே உதய்யும், சுரேவும் லேசாக கண் அயர்ந்திருக்க இவள் மட்டும் உள்ளே சென்றாள்.

உள்ளே, தலை நிறைய கட்டுகள் போடப்பட்டு இரத்த திட்டுக்கள் ஆங்காங்கே தெரிந்தது. லாரி இடித்ததும் வேகமாக தூக்கி வீசப்பட்டதில் தலை சாலை ஓரம் இருந்த ஒரு கல்லில் இடிக்கவே தலையில் நிறைய காயமாகி போனது. உடலின் மற்ற பாகங்களில் பெரிதான காயம் எதுவும் இல்லை. கண் விழிக்காமல் படுத்து இருந்தவனை பார்க்கும்போது மனது பிசைந்தது.

அருகில் அமர்ந்து, அவனது கைகளை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டவள், “உங்களுக்கு ரொம்ப வலிக்குதா சத்யா. எல்லாம் சரியாகி போகும். நீங்க சீக்கிரம் குணமாகி வந்து என்ன சூர்யான்னு கூப்பிடுவீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்களும் அதே நம்பிக்கையோட இருக்கனும் சரியா. நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா?

ஆனா நீங்க இப்படி படுத்து இருந்தா நான் எப்படி சொல்றது. ஆனாலும் சொல்றேன். அதை கேட்டதும் நீங்க எழுந்து என்கிட்ட பேசுவீங்க பாருங்க.” என்றவள் தொடர்ந்தாள். “ரொம்ப நாளா எனக்கு எதுவும் செல்ல பேர் வைச்சு கூப்பிட மாட்டியான்னு கேட்பீங்கள்ள. உங்களுக்கு நான் புது பேர் கண்டுபிடிச்சுட்டேன். சொல்லவா?” எனக் கேட்டவள் சொல்லவும் செய்தாள்.

“ஐ லவ் யூ தீரன். உங்க பேர்தான். இனிமே இப்படிதான் கூப்பிடுவேன்.” என அவன் ஏதோ முழித்திருப்பது போல அவனுக்கு கேட்கும் என நினைத்தே பேசிக் கொண்டே இருந்தாள். ஆனால் அவனோ அசைவின்றி தான் இருந்தான். மேலும் அவள், “நான் இப்ப மட்டுமில்ல. எப்பவும் உங்களை மட்டும் தான் நேசிப்பேன்.

என்னை மன்னிச்சிடுங்க சத்யா. நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருந்தவரை நான்தான் காதல்னு சொல்லி உங்களை டார்ச்சர் பண்ணி இப்ப இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டேன்.” என தன் மன உணர்வுகளை கொட்டிக் கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் திடீரென பொறி தட்டியது.

சடாரென எழுந்தவள், உதய்யிடம் காலையில் வருவதாக கூறி விட்டு சுரேந்திரனை அழைத்துக் கொண்டு வேகமாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள் சந்திரிகா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *