1,325 views

அன்று மாலை காரில் வந்து கொண்டிருக்க, சந்திரிகாவின் நினைவு நேற்று வீட்டில் நடந்ததை அசை போட்டுக் கொண்டிருந்தது. நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைய அனைவரும் ஹாலில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். இவள் யாரையும் கண்டு கொள்ளாமல் படியை நோக்கி செல்ல… “மல்லிகா உன் பொண்ணுக்கிட்ட கொஞ்சம் பேசனும் இங்க வர சொல்லுஎன்றார் சக்கரவரத்தி.

மல்லிகா சந்திரிகாவை பார்க்க, அவள் எதுவும் பேசாமல் தனியாக அங்கிருந்த சோபா ஒன்றில் அமர்ந்தாள். இவளை ஒரு பார்வை பார்த்தவர், “இந்த போட்டாவை பார்க்க சொல்லுஎன மல்லிகாவிடம் ஒரு புகைப்படத்தை கொடுத்ததோடு, “இவன் பேரு அஸ்வின் கிருஷ்ணா. நம்ப அசோஸியேஷன் சேம்பர் தெய்வ விநாயகத்தோட இரண்டாவது பையன். இப்ப பிஸினஸ்ல இறங்கியிருக்கான். நல்ல குணம்.” என பேசிக் கொண்டே போக, சட்டென எழுந்தாள் சந்திரிகா.

ஏன் என்பது போல பார்த்தவர்களிடம் சந்திரிகா,”எனக்கு வேலை இருக்கு, அதோட எனக்கும் இந்த பேச்சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதான்எனவும், “இருக்கு. ஏன்னா, இவன்தான் உனக்கு நான் பார்த்துருக்கிற மாப்பிள்ளைஎன்ற சக்கரவர்த்தியின் கூற்றில் ஒரு நொடி அதிர்ந்தவள். முகபாவனையை தீவிரமாக்கி,”எனக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலையை உங்களுக்கு நான் குடுக்கல. இனிமேல் கல்யாண பேச்சு எடுக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.” என அவரை நேராகவே பார்த்து கூறினாள்.

நான் பார்க்காம, வேற யார் பார்ப்பாங்க. நான் உன் அப்பா.” என அவர் திமிராக கூற, “அப்பாங்கிற உறவு என்னைக்கும் நீங்கதான். நான் இல்லைன்னு சொல்லல. ஆனால் அந்த உரிமையை நீங்க இழந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. இனிமேல் கல்யாண பேச்சை எடுத்திங்கன்னா அம்மாக்காக கூட பார்க்காம நான் மறுபடி பாரீன் போக வேண்டியிருக்கும்என்றவள் தனது அறைக்கு சென்று விட்டாள்.

அவள் சென்றதும், தந்தையிடம் சென்ற அவளது அண்ணன் சுரேந்திரன், “நாங்க எல்லாரும் பண்ண தப்பை உணர்ந்துட்டோம். அப்படி இருந்தும் எங்கள அவளால மன்னிக்க முடியல. நீங்க மட்டும் ஏன்பா மேல மேல அவளை நோகடிச்சு அவ வெறுப்பை சம்பாதிச்சிட்டு இருக்கீங்க? எனக் கேட்டான்.

அதுக்காக அப்படியே விட்றனுமா அவளை. இந்த கல்யாணம் மட்டும் நடந்தா எனக்கு எவ்ளோ லாபம் தெரியுமா? அதுவும் அவங்களா வந்து கேட்டாங்கஎன சக்கரவர்த்தி பெருமை கொள்ள, “நமக்கு இருக்கிற சொத்தே இன்னும் நாலு தலைமுறைக்கு போதும்டா. நீ எவ்ளோ சம்பாதிச்சு என்ன? உன் பொண்ணு உன் காசுல சாப்பிட கூட மாட்றா. உன் பேச்சை கேட்டு உனக்கு சப்போர்ட் பண்ணதுக்கு இன்னைக்கு எங்க பேத்தி கூட பேச கூட முடியாம இருக்கோம். இனிமேலாவது அவளுக்கு பிடிச்சமாதிரி இருக்க விடுஎன்றார் சந்திரமதி வேதனையுடன்.

தாத்தா தணிகாச்சலத்தின் முகமும் அதையே பிரதிபலிக்க, மல்லிகாவோ மகள் போன பின்பே அங்கிருந்து சென்றிருந்தார். ‘இதை நான் வேற மாதிரி பார்த்துக்கறேன்என மனதில் நினைத்தவாறே அங்கிருந்து அகன்றார் சக்கரவர்த்தி.

அதை நினைத்து பார்த்தவள், ‘இப்ப அஸ்வின் நம்பள பார்க்கனும்னு சொல்றாருன்னா. இது இவரோட பிளானாதான் இருக்கனும்என நினைத்தவள். ‘அந்த அஸ்வின் நல்லவனா இருந்ததா ஈசியா புரிய வச்சுடலாம். ஆனா இவரை மாதிரியே ஆள பிடிச்சிருந்தா, விசாரிச்சுதான் முடிவு பண்ணனும்என முடிவெடுத்துக் கொண்டாள்.
            
அதன்படி அவள் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் அவனை பற்றியும், அவனது குடும்பம் பற்றியும் நல்லவிதமாகவே இருக்க, அவனை சந்திக்க முடிவு செய்து அபிநய்யிடம், “அஸ்வினோட ஃபோன் நம்பர் எதுவும் இருக்கா அபி.” எனக் கேட்டாள் சந்திரிகா.

இருக்கு மேம். அப்பாயிண்ட்மென்ட் பிக்ஸ் பண்ணிடலாமா.?” என அபி கேட்க… “நோ. நோ. ஆபிஸ் அவர்ஸ் வேணாம். பர்சனல் விசயம்தானே. நானே பாத்துக்கறேன்என அவனது நம்பர் வாங்கி கொண்டாள்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு நன்கு உறங்கி கொண்டிருந்தான் அஸ்வின் கிருஷ்ணா. அப்போது அவன் வீட்டிற்கு வந்தான் தீபக் ரூபன். “வாங்க சார். எப்படி இருக்கிங்க? இத்தனை நாளா ஆளையே காணோம். இப்ப உன் ஃப்ரண்ட் வந்தவுடனே வந்துட்ட.”  என சரஸ்வதி கேட்டார்.

நல்லா இருக்கேன்மா. அப்படில்லாம் இல்லம்மா. கொஞ்சம் வேலை அதான் வர முடியல.” என்றவன்அவன் எங்கம்மா?” எனக் கேட்டான். அவரோ, “அவனா, மேல தூங்கிட்டு இருக்கான்பா.” என்க. “என்னது இன்னும் தூங்கறானா? என அலறவும். “ஏண்டா. தூங்கினா என்ன?” எனக் கேட்டார் சரஸ்வதி.

இன்னைக்கு ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும். நீ லீவ் போடுனு சொல்லிட்டு அவன் மட்டும் இன்னும் தூங்கறானா?” என கூறி அவன் அறைக்கு சென்றான். உள்ளே சென்றால், அஸ்வினோ ஃபோனை கையில் வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

தீபக், “ஏண்டா, என்ன கிளம்பி வர சொல்லிட்டு நீ தூங்கறியானு கேட்க வந்தா நீ ஏண்டா விட்டத்தை பார்த்து சிரிச்சிட்டு இருக்க.” எனக் கேட்க, அவனை பார்த்தும் சிரித்து விட்டு குளியலறையில் நுழைந்து கொண்டான் அஸ்வின்.

தீபக்,அச்சோ. இவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலயே. போற வழியில எங்கையாவது கூட்டிட்டு போய் மந்திரிச்சு விடனும்என சீரியசாக நினைத்துக் கொண்டிருக்க, உள்ளே அஸ்வினோ சற்று முன் நடந்த நிகழ்வினை நினைத்துக் கொண்டிருந்தான்.

அஸ்வினின் ஃபோன் இரண்டாம் முறையாக அலற, தூக்கத்திலே எடுத்து காதில் வைக்க, மறுமுனையில் பெண் குரல் வேறு யாரு சந்திரிகாதான். “அஸ்வினா?” எனக் கேட்டாள். “எஸ். நீங்கஎனக் கேட்டான்.

நான் சந்திரிகா. தெரியும்னு நினைக்கறேன்என்றவுடன் தூக்கி வாரிப் போட எழுந்தவனுக்கு தூக்கம் கலைந்து போனது. “சொல்லுங்க. சந்திரிகா.” என்க. “நீங்க அப்பாய்ண்மென்ட் கேட்டிங்களாமே. அதுக்குதான் கால் பண்ணேன்என்றாள் சந்திரிகா.

ஆமா. ஆனா நீங்களே கால் பண்ணுவிங்கன்னு எதிர்பார்க்கல. சொல்லுங்க. எத்தனை மணிக்கு ஆபிஸ் வரனும்?” எனக் கேட்டான் அஸ்வின். சந்திரிகா, “இல்ல ஆபிஸ் வேண்டாம். அங்க பிரைவசி இருக்காது. பர்சனல் விசயம் அங்க பேச முடியாது. சோ வெளில எங்கையாது மீட் பண்ணலாமா?எனக் கேட்க, சிறகில்லாமல் பறந்தான் அஸ்வின்.

கண்டிப்பா எங்கனு நீங்களே சொல்லிடுங்கஎன அஸ்வின் கேட்க, “செம்மொழி பூங்காக்கு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஒரு அஞ்சு மணிக்கு ஓகே வா?” எனக் கேட்டாள் சந்திரிகா. ‘ஆமா அது ரொம்ப பிரைவசியான இடம் பாரு.’ என மனதில் நினைத்தவன் வெளியே சரி என்றான்.

குளித்து கிளம்பி வரவே அறையில் இருந்த தீபக்கை பார்த்து, “மச்சான் நீ எப்படா வந்த? ஒரு குரல் குடுக்க மாட்ட?எனக் கேட்க, அவனை முறைத்து பார்த்தான் தீபக். “ஏண்டா இவ்ளோ பாசமா பார்க்கிற?எனக் கேட்டவனை பார்த்து, நான் வந்தது உனக்கு தெரியாதுஎனக் கேட்டான்.

அதோடு, “ஏண்டா உனக்கு அம்மா கல்யாணம் பண்ண போறதா தானே சொன்னாங்க. நீ ஏண்டா நிச்சயமே பண்ணிட்ட மாதிரி நடந்துக்கற.” என தீபக் கேட்க அஸ்வின், “அப்படில்லாம் இல்லடா. வா போலாம்என கிளம்பி கீழே வந்தனர்.

மகனது முகம் மலர்ச்சியாக இருந்ததை பார்த்து அன்னையின் அகம் மலர்ந்தது. பின்னே நேற்றிரவு வரை இந்த உற்சாகம் இல்லையே. அதுதான் காரணம். முதன்முதலில் சந்திரிகாவை பார்த்தது. தெய்வ விநாயகமும், சரஸ்வதியும்தான். ஒரு ஆபிஸ் பார்ட்டிக்கு வந்திருந்தவளை பார்த்தவுடன் பிடித்து விட்டது அவர்களுக்கு.

பிறகு யாரென விசாரித்துசக்கரவர்த்தியின் மகள் என தெரிந்து இவர்களாகதான் அவரிடம் கேட்டனர். அதற்கு முன் மகனது விருப்பத்தை அறிய எண்ணி, அவளது புகைப்படத்தை அனுப்பி சம்மதம் கேட்க, தங்களது விருப்பம் போல செய்யலாம், ஆனா மத்த விசயமெல்லாம் நான் வந்ததும் பேசிக்கலாம் எனக் கூறி விட்டான் அஸ்வின்.

அவன் பதிலில் உள்ளம் மகிழ்ந்து அவரிடம் கேட்க, அவரும் விருப்பப்பட்டதாகவே தெரிய வர மகிழ்ச்சியடைந்தனர். இதற்குள் அஸ்வினும், சந்திரிகாவை பிடித்ததோடு, அன்னைக்கும் பிடித்ததால், ஆர்வமாகவே இருந்தான். இவன் இந்தியா வந்ததை அறிந்ததும் தான் சக்கரவர்த்தி மகளிடம் பேசியது.

அவள் முடியாது என்று விட, அவரோ, அவள் திருமணம் செய்தால் இது போல தொழில் செய்ய முடியாது என பயப்படுவதாக இவர்களிடம் திரித்து கூறி விட்டார். எதற்கும் ஒருமுறை அவளிடம் பேசிப்பார்க்கலாம் என அவளது அலுவலகம் வந்தபோதுதான் தெரிந்தது. அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது என.

ஏனோ வீட்டிற்கு சென்று பார்க்க மனம் ஒப்பவில்லை. ஒருவேளை ஒத்துக் கொண்டால் அனைவரிடமும் கூறிக் கொள்ளலாம் என நினைத்தான். அதன்பிறகு வீணாக ஆசையை வளர்க்க வேண்டாம் என தன் அன்னையிடம் கூறி விட்டவனால் ஏனோ இயல்பாக இருக்க முடியவில்லை.

பார்த்து பேசி பிடிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. முதன்முதலில் ஒரு நிராகரிப்பாகவே தோன்றியது.ஆனால் அவன் மனம் அறிந்த சரஸ்வதியோ தன்னால்தானோ என நினைத்து கவலைக் கொண்டார்.

இப்போது அவனது உற்சாகம் கண்டு அனைத்தையும் மறந்து விட்டதாக நினைத்துக் கொண்டவருக்கு, உற்சாகத்திற்கு காரணமே அவள்தான் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.

    ‘ஒட்டக முதுகு சாலை’ என அழைக்கப்படும் முசோரியின் எழில் நிறைந்த அழகிய நடைபாதையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தான் ஒருவன். சற்று நேரத்தில் அவனுடன் இணைந்து கொண்டான் அவனது நண்பன் அசோகமித்திரன்.

அவன் வந்ததும் தெரியாமல் இவன் ஏதோ யோசனையில் நடந்து கொண்டிருக்க, “என்னடா சத்யா ஒரு மாதிரி இருக்க?” எனக் கேட்டான் அசோக். அவன் கேட்டதும், நடையை நிறுத்திவிட்டு ஓரிடத்தில் அமர்ந்து அசோக்கை பார்த்தான் சத்யேந்திரன்.

ஒன்னுமில்லடா. மறுபடி டிரான்ஸ்பர் போட்டு இருக்காங்க. அதை பத்திதான் யோசிச்சுட்டு இருந்தேன்என்றான் சத்யா. “இதுல யோசிக்க என்ன இருக்கு, நீ டிரான்ஸ்பர் பத்தில்லாம் கவலையே பட மாட்டியேசொல்ல போனா இந்த ஏழு வருஷத்திலயே நீ மூனு இடத்துல வொர்க் பண்ணிட்ட. அப்பறம் என்ன?” எனக் கேட்டான் அசோக்..

அப்படி இல்லடா. இது வரை நார்த்லயே இருந்துட்டேன். பர்ஸ்ட் டைம் சௌத்ல அதும் சென்னை போட்டுருக்காங்க. இத்தனை வருஷம் கழிச்சு மறுபடி அங்க போகனுமேனு ஒரு யோசனை அவ்ளோதான்.” என்றான் சத்யா.

நம்ம வேலை அப்படி. போய்தான் ஆகனும். நீ ஓகே சொல்லிருந்தா உனக்கு டிரைனிங் போஸ்டே சென்னைல்ல இருந்திருக்கும். நீ ஏன் வேணாம்னு சொன்னன்னு தெரியல. எனக்கு நெக்ஸ்ட் மந்த்தான் தெரியும். நான் சென்னைதான் கேட்டுருக்கேன். பார்க்கலாம். நீ மனச போட்டு குழப்பிக்காம உன் வேலைல கான்ஸன்ட்ரேட் பண்ணு சரியா.” என அசோக் கூற சத்யா தலையாட்டினான். மனதில் உழன்ற நிகழ்வுகளை புறம்தள்ளி, சென்னை செல்ல தயாரானான் சத்யா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
5
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்