346 views

 

        பிறந்தநாள் விழா நல்ல முறையில் நிறைவு பெற.அதன்பிறகு ஒரு மாதம் எந்த வித பிரச்சனைகளும் இன்றி வாழ்வு ஒரு நிலையாக சென்று கொண்டிருந்தது சந்திரிகாவிற்கு. இதற்கிடையில் கீர்த்திக்கும் சத்யாவையும், இவர்களது காதலையும் பற்றி தெரிய வர, அவள் அதிகமாகவே துணுக்குற்றாள்.

சந்திரிகாவின் தந்தையை பற்றி அவள் நன்கு அறிவாள். எல்லா விசயங்களிலும் ஸ்டேட்டஸ்தான் முக்கியம் என்பவர் சத்யா எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் இவர்களது காதலை ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகமே என யோசித்தாள்.

அதை மறைக்காமல் சந்திரிகாவிடம் கேட்கவும் செய்தாள்.சத்யா நல்லவர்தான். ஆனா அப்பா அவரை ஏத்துப்பாரா? கல்யாணத்துக்கு சம்மதிப்பாரா? இதை பத்தில்லாம் நீ யோசிச்சியா?” எனக் கேட்டாள். தன்னுடைய நலனில் அக்கறை கொண்டே தன் தோழி இந்த கேள்வியை எழுப்புகிறாள் என புரிந்து கொண்ட சந்திரிகா கீர்த்திக்கு பதில் குடுத்தாள்.

நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன் கீர்த்தி. நான் ஒன்னும் நாளைக்கே அவரோடு சேர்ந்து வாழப் போறதில்லை. அவருக்கு சிவில் எக்ஸாம் எழுதி அதுல ஜெயிக்கறதுதான் கனவே. அவருக்கு இருக்கற திறமைக்கு கண்டிப்பா அதை சாதித்தும் காட்டுவார்.

சத்யாகிட்ட இப்ப இருக்கிற குறையா அப்பா யோசிக்கறது பணமாதான் இருக்கும். ஆனா படிச்சு ஒரு நல்ல வேலைக்கு போன பிறகு அந்த குறையும் இல்லாம போய்டும். எனக்கு அப்பா மேல நிறைய பாசமும், மரியாதையும் இருக்கு கீர்த்தி. ஆனா அதே அளவு காதல் சத்யா மேலையும் இருக்கு. நான் ஒருத்தருக்காக ஒருத்தர நிச்சயம் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

நாங்க ரெண்டு பேரும் லைஃப்ல செட்டில் ஆகற வரை எங்க காதல் விசயத்தை வீட்டில யார்க்கிட்டயும் சொல்லவும் மாட்டேன். நான் பிளான் பண்ணி எதையும் பண்ணல கீர்த்தி. சத்யா மேல எனக்கு இயல்பாகவே காதல் உருவாகிடுச்சு. அதை என்னைக்கும் என்னால விட்டுக் குடுக்க முடியாது.” என நீண்டதொரு தன்னிலை விளக்கம் கொடுத்தவளை நெகிழ்வாக பார்த்தாள் கீர்த்தி.

பின்னால் இருந்து அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த சத்யாவிற்கு பெருமையாக இருந்தது. “அவ ஏதோ சின்ன பொண்ணுடா. இவன் மேல இருக்கற ஒரு அட்ராக்ஷன லவ்னு சொல்லிட்டு திரியறா. அவங்க வீட்ல பணக்கார மாப்பிள்ளையா பார்த்ததும் இவன கழட்டி விட்டிருவா பாரு.” என தங்களை பற்றி தனக்கு பின்னால் பேசிக் கொண்டிருக்கும் சிலரை அறிவான் சத்யா.

ஆனால் சிறு பெண் என நினைத்தவளுக்குள் வாழ்க்கையை பற்றிய எவ்வளவு புரிதல் இருக்கிறது. இவளை என்றென்றும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இவளுக்காக எவ்வளவு துன்பம் வந்தாலும் அதை தாங்கி, தனது கனவை நனவாக்கி அதன் பின்பு தானே சென்று அவளது தந்தையிடம் பேச வேண்டும்என அந்த தருணத்தில் மனதில் நினைத்தான் சத்யா.

அதன்பிறகும் ஒரு மாதம் சந்திரிகாவின் தந்தை அவர்களை பின்தொடர ஆள் வைத்து அவர்களை வேவு பார்த்ததை இருவருமே அறியவில்லை. அதை சத்யா அறிந்து கொள்ளும் நாளும் வந்தது. ஒருநாள் சந்திரிகாவிற்கு உடல்நிலை சரியில்லை என விடுப்பில் இருக்க, அன்று பார்த்து கல்லூரிக்கு வந்தார் சக்கரவர்த்தி.

அவர் உள்ளே வரும்போதே அவரை கவனித்து விட்டான் சத்யா. கல்லூரி நிர்வாகியை அவருக்கு நன்கு தெரியும் என்பதால் அவரை பார்க்க வந்திருப்பார் என நினைத்துக் கொண்டான். ஆனால் இல்லையென்பது சக்கரவர்த்தி அலுவலகத்திற்குள் சென்ற பத்தே நிமிடங்களில் தெரிந்தது நிர்வாகியிடம் இருந்து இவனுக்கு அழைப்பு வந்ததில் இருந்து.

உள்ளே சென்று என்னவென்று சத்யா கேட்க. “சார் ஏதோ வேலை விசியமா உங்ககிட்ட பேசனுமாம். கூட்டிட்டு போப்பா.” என அனுப்பி வைத்தார் நிர்வாகி. இவன் சக்கரவர்த்தியுடன் காரில் ஏறி போவதை பார்த்த திவ்யா. சந்திரிகாவிற்கு தகவல் குடுக்க அவள் பதறி விட்டாள். என்ன நடந்தாலும் உடனே கூறுமாறு அவளிடம் கூறியவளுக்கு ஒரே பதட்டமாக இருந்தது.

சத்யாவை அழைத்து சென்ற சக்கரவர்த்தி, அவனது ஆசிரமத்தின் முன்பு காரை நிறுத்தியவர், இறங்கி அங்கே தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தார். “வாப்பா. நீயும் உட்காரு. அப்பறம் இங்கதானே உங்க வாசம். அதான் இங்க வைச்சே பேசலாம்னு கூட்டிட்டு வந்தேன்.” என்றார் சக்கரவர்த்தி.

பரவாயில்லை. சொல்லுங்க.” என்றான் நின்றபடியே சத்யா. “நீ சொல்ல போறன்னு தானே நான் நினைச்சேன். சொல்லு.” என்றார் சக்கரவர்த்தி. “எனக்கு உங்ககிட்ட சொல்ல என்ன இருக்கு. நீங்கதான் வேலை விசயமா கூப்பிட்டங்கன்னு சார் சொன்னார்.” என்றான் தெரியாதவன் போலவே.

ம்ம். சரி நானே சொல்லிடுறேன். அதான் தம்பி. உன் படிப்புக்கு ஏத்த வேலை வேணும்னா சொல்லு. நம்ப கம்பெனிலயே நல்ல வேலையா போட்டு தரேன். இல்ல தொழில் தொடங்க ஏதாவது பணம் வேணும்னாலும் கேளு. நானே முதல் போட்டு ஆரம்பிச்சு வைக்கறேன். இதைவிட பெரிய கல்லூரில சேர்ந்து படிக்கனும்னா அதையும் கூட செய்யறேன்.

ஆனா என் பொண்ணு வேணும்னு நினைச்சன்னா நான் வேற மாதிரி நினைக்க வேண்டி இருக்கும்என தன்மையாக ஆரம்பித்து கோபத்தில் முடித்தார். அவர் பேசியதிலே, அவருக்கு எல்லா உண்மைகளும் தெரிந்து விட்டது என்பதை அறிந்து கொண்ட சத்யா தன்மையாகவே பதில் கூறினான்.

நீங்க தப்பா நினைக்கற மாதிரி ஒன்னும் இல்லை. நான் நிஜமாகவே உங்க பொண்ணை லவ் பண்றேன். அவளுக்கும் அப்படித்தான்.படிப்பை முடிச்சிட்டு நாங்களே சொல்லனும்னு நினைச்சோம். அதுக்குள்ள நீங்களே தெரிஞ்சுகிட்டிங்க.” என பேசிக் கொண்டே இருக்க அவரோ, “நிறுத்துடா.” என சத்தமிட்டார்.

நீ எதுக்கு என்பொண்ணு பின்னாடி சுத்தறன்னு எனக்கு தெரியாதா. எல்லாம் காசு பண்ற வேலை. பிச்சக்கார அனாதை நாய்க்கு கோடீஸ்வரி இந்த சக்கரவர்த்தி பொண்ணு கேட்குதா? நாலு காசை வாங்கிட்டு இந்த ஊரை விட்டி ஓடிடு. எங்கையாவது போய் பொழச்சுக்கோ.” என கோபத்தில் வார்த்தையை விட்டார் சக்கரவர்த்தி.

அவர் பேசியதில் இவனுக்கும் கோபம் வர சந்திரிகாவிற்காக அதை அடக்கியவன்,ஓகோ. எவ்வளவு காசு குடுப்பீங்க. எங்க காதலுக்கு விலையா.” எனக் கேட்டான். சத்யா. “ம்ம் அப்படி வா வழிக்கு. அஞ்சு லட்சம் வாங்கிட்டு ஒதுங்கீடு.” என பேரம் பேசினார் சக்கரவர்த்தி.

இப்பதான் என் பொண்ணு கோடீஸ்வரின்னு சொன்னீங்க. ஆனா அவளோட விலை வெறும் அஞ்சு லட்சம்.” என கிண்டலாக கூறிய சத்யா தொடர்ந்து, “உங்க பொண்ணுக்கு வேணா நீங்க விலை பேசலாம். ஆனா எங்க காதலுக்கு எவ்வளவு விலை குடுத்தாலும் ஈடாகாது. சூர்யாவோட அப்பாங்கறதால நீங்க பேசனுதல்லாம் பொறுத்துக்கிட்டேன். என்னால சூர்யாவை விட முடியாது. உங்களால ஆனத பாத்துக்கோங்க.” என்றான் சத்யா.

என்ன பத்தி உனக்கு முழுசா தெரியல பாத்துக்கறேன்.” என்றவர் அங்கிருந்து கிளம்பினார். அவர் சென்ற உடனேயே அலைபேசியில் நடந்த அனைத்தையும் சந்திரிகாவிற்கு சொல்லி விட்டான் சத்யா. வீட்டிற்கு வரும் தந்தையை எதிர்நோக்கி ஹாலிலே அமர்ந்திருந்தாள் சந்திரிகா.

அவளை பார்த்தும் பார்க்காததை போல சென்ற சக்கரவர்த்தியை, “அப்பாஎன அழைத்தாள் சக்கரவர்த்தி. அவள் அழைத்ததும் அருகில் வந்தவர்,சொல்லு.” என்றார் கோபமாக. “நான்தான்பா சத்யாவை லவ் பண்ணேன். நீங்க ஏன்பா அவர் மேல கோபப்படறீங்க.” என கேட்டதும் சக்கரவர்த்தி விட்டார் அவளை ஒரு அறை.

ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருக்கவும் தொய்ந்து போய் சோபாவில் சரிய, சத்தம் கேட்டு அவளது அன்னை, தாத்தா, பாட்டி மூவரும் ஹாலுக்கு வந்தனர். “டேய். ஏண்டா பச்சை பிள்ளையை அடிக்கற. உனக்கு புத்தி கீது மழுங்கிடுச்சா.” என அவளது பாட்டி சக்கரவர்த்தியிடம் கேட்டவாறே, சந்திரிகாவை தூக்க மறுபுறம் அவளது அன்னை தாங்கி பிடித்தார்.

யாருக்கு எனக்கு புத்தி மழுங்கிடுச்சா. இவளுக்கு தான். இல்லன்னா படிக்கற வயசில தகுதி தராதரம் இல்லாமா காதல் வருமா காதல்.” என கத்தினார். காதல் என்றதும் சந்திரிகாவின் தாத்தா,என்னம்மா சொல்றான் உங்க அப்பன்.” எனக் கேட்டார்.

அவள் மௌனமாக இருக்க, “அவளை ஏன் கேட்கிறீங்க. நான் சொல்றேன். இவ கூட படிக்கற பையனை காதலிக்கறாளாம். அவன் யாருன்னு பார்த்தா, ஊர் பேர் தெரியாத ஒரு அனாதை.” என்றவர் தொடர்ந்து, “அது மட்டுமா. எங்கள யாராலையும் பிரிக்க முடியாதுன்னு சவால் என்கிட்டயே சவால் விடுறான் அவன்.” என்றார் சக்கரவர்த்தி.

சந்திரிகா, “அப்பா. அப்படில்லாம் சொல்லாதீங்கப்பா. அவர் ரொம்ப நல்லவர்.” என்றதும் மீண்டும் அடிக்க வர, நடுவில் புகுந்து அந்த அடிகளை தான் வாங்கி கொண்டார் மல்லிகா. அவருக்கும் சேர்த்து திட்டு விழுந்தது. “பிள்ளை வளக்கற லெட்சணத்தை பாரு.” என. இருவரையும் அடக்கிய அவளது பாட்டி, “எதுனாலும் அப்பறம் பேசிக்கலாம். விடுறா.” என அவளை அறைக்கு அழைத்து சென்றார்.

அறைக்கு அழைத்து சென்றவர் அவளை மடியில் படுக்க வைத்து,உங்கப்பன் கோபப்படுறானு நினைக்காத மா. இதெல்லாம் நம்ப குடும்பத்துக்கு ஒத்து வராது. உங்க தாத்தாவுக்கே இந்த காதல் கத்தரிக்கால்லாம் சுத்தமா பிடிக்காது. என் பொண்ணு இந்த மாதிரி ஒரு தப்பு பண்ணிதா இன்னைக்கு எங்க இருக்கான்னு கூட தெரியாத நிலைமைல்ல நான் இருக்கேன்.” என்றார்.

அவரது கூற்றில் அதிர்ந்தவள், “இப்போ என்ன சொன்னீங்க பாட்டிஎனக் கேட்க, அதற்குள் தன்னை மீட்டுக் கொண்டவர், “அதெல்லாம் தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ண போற. அவனை மறந்துட்டு உன் வாழ்க்கையை வாழ பாரு.” என கோபமாக கூறியவர் எழுந்து சென்றார்.

அவள் மனமோ பாட்டி கூறிய வார்த்தைகளே சுற்றிக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் அறைக்கு வந்த தாத்தாவிடம் அதை கேட்கவும் செய்தாள். “தாத்தா, எனக்கு அத்தை இருக்காங்களா..?” எனக் கேட்டு வைக்க, சாதாரணமாக பேசலாம் என வந்தவருக்கு கோபத்தில் முகம் இறுகியது.

ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாதவர், “இருந்தாமா. ஆனா இப்ப இல்லை. தகுதி பார்க்கமா காதல் கத்தரிக்கான்னு போய் வாழ்க்கையை கெடுத்துக்கிட்டா. அதனாலதான் சொல்றேன். இந்த வயசில வாழ்க்கையை பத்தின பக்குவம் இருக்காது. பெத்தவங்கள்ள பகைச்சிட்டு வாழற வாழ்க்கை நிம்மதியாவும் இருக்காது. தாத்தா சொல்றதை கேளுமா.”  என அவர் பங்கிற்கு அறிவுரை கூறிவிட்டு சென்றார்.

அதற்குள்ளே இரவாகி விட, இரவு உணவுடன் அறைக்கு வந்த மல்லிகா எதுவும் பேசாமல் அமைதியாக ஊட்டி விட இவளும் மறுக்காமல் வாங்கி கொண்டாள். மகள் உணவருந்தியதும் எழுந்து வெளியில் போக எத்தனிக்க, “நீ எதுவும் அட்வைஸ் பண்ணலயாம்மா?” எனக் கேட்டாள் சந்திரிகா.

யாரும் அட்வைஸ் பண்ணி திருத்தற அளவுக்கு நான் உன்னை வளர்க்கலடா. ஆனா இத்தனை நாள் உனக்கு செல்லம் குடுத்து வளர்த்த உங்க அப்பா இன்னைக்கு என்ன சொன்னாருன்னு பார்த்தியா. நான் உன்னை தப்பா வளர்த்துட்டனாமா. இதுதான்மா உலகம். அதுனால நீ எந்த விசயம் செஞ்சாலும் ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சு செய். அவ்ளோதான்.

உனக்கு சரின்னு பட்டத நீ தாராளமா செய்யலாம். ஆனா அதுனால யாருக்கும் பாதிப்பு வராம பாத்துக்கனும். சரியாஎன்றார் மல்லிகா. “சரிமா. உனக்கு அத்தையை பத்தி ஏதாவது தெரியுமா?எனக் கேட்க, “நான் இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே அவங்க இங்க இருந்து வெளில போயிட்டாங்க.

அதனால அவங்கள பத்தி எனக்கு எதுவும் பெரிசா தெரியாதுமா. உனக்கு ஒரு அத்தை இருக்காங்கன்னே. கல்யாணம் ஆகி நீ பொறந்ததுக்கு அப்பறம் தான் எனக்கே தெரியும்என்றார் மல்லிகா. “சரிமா நீ ரெஸ்ட் எடுஎன அவர் சென்று விட சந்திரிகாவோ யோசனையில் ஆழ்ந்தாள்.

அதன்பிறகு சத்யாவை அழைத்து சில விசயங்களை பேசியவள் அதன்பிறகு அமைதியாகவே இருந்தாள். அடுத்த ஒரு வாரமும் அவளுக்கு கல்லூரிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட போதும் அவள் அமைதியை கைவிடவில்லை. ஆனால் அந்த ஒரு வாரம் கழித்து வந்த ஒரு தகவல் அவள் தலையில் இடியை இறக்கியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *