375 views

 

               சந்திரிகா கண் திறந்தபோது அறையில் சத்யா இல்லாததை கண்டு தன்னுள் சிரித்துக் கொண்டாள். பிறகு அவன் கொடுத்த கவரை பிரித்தபோது, உள்ளே பச்சை நிறத்தில் ஒரு பட்டுப்புடவை பளபளத்தது. கூடவே மல்லிகைப்பூவும், ஒரு குங்கும சிமிழும் இருந்ததை கண்டு சந்திரிகா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

யாரும் கொடுக்க முடியாத பரிசை எதிர்பார்க்கிறேன் என்றதற்காக இப்படி ஒரு சிறப்பான பரிசை தருவான் என அவள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அதன் கூடவே கையால் செய்யப்பட்ட ஒரு கிரீட்டிங் கார்டும் இருந்தது. அதில்,

சந்திரனின் முகத்தைக் கொண்ட
என் சந்திரிகையே..!!

உன் கார்குழலில் எனை
கட்டிப்போடும் பேரழகே..!!

காற்றாற்று வெள்ளத்தில்.. நான்
தத்தளித்துக் கொண்டிருக்க.. எனை
கரைசேர்க்க வந்த காரிகையே..!!

என்றும் உன் கரம்பிடிக்க நினைத்து
காத்திருக்கிறேன் காரிருளில்..!!

உன் பிறந்தநாள் எனும்
இந்நன்நாளில்.. உன்னுடன் இணைய துடிக்கும் ஓருயிர் என நான்..!!!

என்ற கவிதை எழுதப்பட்டு இருந்தது. கவிதையை கண்டு சிலிர்த்து போனவள் அதை பத்திரப்படுத்தினாள்.

மறுநாள் காலையில் அந்த புடவையை அணிந்து, தலை நிறைய அவன் கொடுத்த பூவை வைத்துக் கொண்டவள், மெலிதான ஒப்பனையுடன் வெளியில் வந்தாள். முதல் முறையாக மகள் பட்டுப்புடவை அணிந்திருப்பதை பார்த்து, அவளது தாயின் மனம் பூரித்து போனது.

“என் கண்ணே பட்டுடும் போல தங்கம்” என நெட்டி முறித்தவர், தன் கையால் செய்த இனிப்பை ஊட்டி பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினார். பிறகு வீட்டில் உள்ள அனைவரும் வாழ்த்துக்களை கூற, கல்லூரிக்கு கிளம்பினாள்.

“இன்னைக்கு லீவ் போட்டுருக்கலாம் இல்லமா?” என சக்கரவர்த்தி கேட்க, “இல்லப்பா. இன்னைக்கு ஒரு முக்கியமான செமினார் இருக்கு. சாயங்காலம் சீக்கிரம் வந்தடறேன்” என்றாள் சந்திரிகா. “சரிமா. ஈவ்னிங் வீட்ல பங்சன் இருக்கு. உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு வா” என்றார் சக்கரவர்த்தி.

கல்லூரிக்குள் சென்ற சந்திரிகாவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே சென்ற சந்திரிகா மரத்தடியில் சத்யாவின் வருகைக்காக காத்திருந்தாள். அப்போது அவளை நோக்கி ஒரு பெண் ஓடிவந்து, “எக்ஸ்யூஸ்மி. இங்க ஆர்க்கிடெக் டிப்பார்ட்மெண்ட் எங்க இருக்கு?” எனக் கேட்டாள்.

“இங்க இருந்து இரண்டாவது பில்டிங். நானும் அங்கதான் செகண்ட் இயர் படிக்கறேன். உங்களை பார்த்ததில்லையே. நீங்க?” எனக் கேட்டாள் சந்திரிகா. “ஐ ஆம் கீர்த்திஜா. நான் நியூவா ஜாயின் பண்ணியிருக்கேன். செகண்ட் இயர்ல” என்றாள் புதியவள்.

சற்று நேரம் பேசிக் கொண்டிருந்ததில் இருவரை பற்றியும் அறிய, “ஹேய். நீ கீர்த்திதானே. என்னை தெரியலயா? நான் சந்திரிகா” என வியந்து கேட்டாள் சந்திரிகா. கீர்த்தியும், சந்திரிகாவும் சிறு வயது தோழிகள். இருவரின் வீடுகளும் அருகருகே இருக்க, இருவரது குடும்பங்களும் நட்புடனே இணைந்திருந்தது.

கீர்த்தியின் தந்தை பல ஊர்களில் தொழில் செய்து கொண்டிருக்க, ஒரு சூழ்நிலையில் சென்னையை விட்டுவிட்டு கோவையில் குடும்பத்தோடு செட்டிலாகி விட்டார். அதன்பிறகு நட்பு இருவரின் தந்தைகளோடே தொடர, குழந்தைகள் பேசிக் கொள்வது அரிதாகிப் போனது.

“ஹேய். சந்து. ஆமாடி அடையாளமே தெரியல. அதுவும் இன்னைக்கு சேரில வேற இருக்கியா. சுத்தம்” என்றவள் அவளை கட்டிக் கொள்ள, நீண்ட நாட்களுக்கு பிறகு தோழியை பார்த்த சந்திரிகாவின் மனமும் நிறைந்தது. அப்போது அங்கு வந்த சத்யா, கீர்த்தியை கேள்வியாக பார்க்க, அவளை சத்யாவிற்கு அறிமுகப்படுத்தியவள், கீர்த்தியிடம் சத்யாவை தனது தோழன் எனக் கூறி அறிமுகம் செய்தாள்.

ஆனால் சத்யாவை பார்க்கும்போது, சந்திரிகாவின் கன்னங்களில் செம்மை படர்வதை அறிந்து கொண்ட கீர்த்தி, அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. சத்யா மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துக்களை கூற, அதைக் கேட்ட கீர்த்தி, “ஹேய். இன்னைக்கு பர்த்டேவா. சொல்லவே இல்ல. விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே” என்றதோடு கட்டி அணைத்து ஒரு முத்தமும் கொடுத்தாள்.

அதை ஏக்கத்துடன் சத்யா பார்ப்பதை கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டாள் சந்திரிகா. அதே நேரம் சத்யாவின் மற்ற தோழர்களும் அங்கு வந்து தங்களது வாழ்த்துக்களை கூறினர். பிறகு கீர்த்தியை பார்த்து, “வாடி. நாம வெளில போகலாம்” எனக் கூப்பிட்டாள் சந்திரிகா.

“வந்த முதல் நாளே மட்டம் போட்டா அவ்ளோதான். நீங்க போயிட்டு வாங்க” என கீர்த்தி கூறவும், “சரிடி. சாயங்காலம் வீட்ல பங்சன் இருக்கு. கண்டிப்பா வரனும்.” என சந்திரிகா அழைப்பு விடுக்கவும், தலையசைத்துவிட்டு வகுப்பிற்கு சென்றாள் கீர்த்தி. அதன்பிறகு நண்பர்களோடு திவ்யாவும் இணைந்து கொள்ள, ஒரு புகழ்வாய்ந்த பெரிய ரெஸ்டாரண்டுக்கு சென்றனர்.

தோழமைகள் அனைவரும் சேர்ந்து கேக் ஆர்டர் செய்து தர, அனைவருடனும் இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினாள் சந்திரிகா. “அப்பறம்மா என்ன வாங்கி கொடுத்தான் பர்த்டேக்கு?” என எழில் சத்யாவை கைக்காட்டி கேட்க, “டிரஸ்ணா” என்று மட்டும் சொன்னாள் புடவையை காட்டி.

அவளது புடவையை பார்த்த திவ்யா, “சூப்பர் செலக்க்ஷண்ணா” என்றாள் சத்யாவை பார்த்து. பிறகு சற்று நேரம் ஆரவாரமாக கொண்டாடித் தீர்த்தவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது எழில் தனது இருசக்கர வாகனத்தை சத்யாவிடம் கொடுத்து, “எங்கையாவது வெளில கூட்டிட்டு போய்ட்டு வாடா” என்றான்.

அதன்பிறகு அன்றைய பொழுதின் மீதி நேரத்தை சத்யாவுடனே கழித்தவள், சொன்னபடி நேரமாகவே வீட்டுக்கு சென்றாள் சந்திரிகா. அன்றைக்கு இரவு சந்திரிகாவின் வீட்டில் பிறந்தநாள் விழா களை கட்டியது. பெரும் செல்வந்தர்கள் பலரும் அங்கு குழுமியிருக்க, பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்திருந்தார் சக்கரவர்த்தி.

கீர்த்தியின் வீட்டினர் அடுத்தத் தெருவிலே குடிவந்திருக்க, அவர்கள் வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர். சற்று நேரத்தில் சந்திரிகாவின் தோழமைகள் அனைவரும் அங்கு வந்துவிட்டனர். அனைத்து பகுதிகளிலும் பணத்தின் செழுமை தெரிந்த அந்த வீட்டையும், விழா ஏற்பாட்டின் விதத்தையும் பார்த்த சத்யாவிற்கு முதல்முறை நெஞ்சில் ஒரு பயம் எழுந்தது.

நல்ல மெரூன் நிறத்தில் அழகிய காக்ரா சோளியை அணிந்து தேவதை போல இறங்கிவந்தாள் சந்திரிகா. அத்தனை கூட்டத்திலும் சத்யாவை கண்டு அவனுக்காக தனது பிரத்யேக சிரிப்பினை சிந்தியவளை கண்ட சத்யாவின் மனதில் பயம் போய் ஒருவித பெருமித உணர்வு வந்தது.

அதன்பிறகு விழா தொடங்க, கேக் வெட்டி அனைவருக்கும் அளித்தபின் வந்திருந்த அனைவரும் வாழ்த்தி பரிசினை அளித்தனர். உணவு வகைகள் பஃபே முறையில் வைக்கப்பட்டிருந்தது. மெல்லிய கச்சேரி ஒன்று நடந்து கொண்டிருக்க, அதை ரசித்தபடியே வந்திருந்த விருந்தினர்கள் உணவை ருசித்துக் கொண்டிருந்தனர்.

தனது நண்பர்கள் அனைவரையும் தனது குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்தாள் சந்திரிகா. அப்போதுதான் கீர்த்தியை முதல்முறை பார்த்தான் சுரேந்திரன். சிறுவயதில் பார்த்திருந்தாலும், இப்போது புதிதாக தெரிந்தாள் கீர்த்தி அவனுக்கு. அவளது அமைதியான தோரணை அவளை கவர மேலோட்டமாக விசாரித்துவிட்டு அங்கிருந்து நகன்றான்.

சந்திரிகாவின் தோழமைகள் அனைவரையும் பார்த்த சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்றார். ஆனால் முதல் பார்வையிலேயே சத்யாவையும், உதய்யையும் ஏனோ அவருக்கு பிடிக்கவில்லை. இதை சத்யா அவரை பார்த்தவுடனே உணர்ந்து கொள்ள, சந்திரிகாவோ இருந்த மகிழ்ச்சியில் அதை கவனிக்க தவறினாள்.

எல்லோரையும் பார்த்து பேசிக் கொண்டிருந்தாலும், அவ்வபோது சத்யாவிற்கும், சந்திரிகாவிற்கும் இடையில் பார்வை பரிமாற்றம் நடந்து கொண்டுதான் இருந்தது. இதைக் கண்டு கொண்ட சக்கரவர்த்திக்கு உள்ளுக்குள் ஏதோ நெருட அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்.

இறுதியில் அவராக சில யோசனைகளை நினைத்தவர், அதை செயல்படுத்த முடிவெடுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் ஆட்டம் பாட்டத்துடன் கச்சேரி களைகட்ட, சந்திரிகா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால் சத்யாவிற்குதான் அங்கிருப்பது ஒருவித சங்கடத்தை தர, கிளம்பலாம் என நினைத்து சந்திரிகாவிடம் கூறச் சென்றான்.

அப்போது ஏதோ வேலையாக சக்கரவர்த்தி வெளியே சென்றிருக்க, சத்யாவை பார்த்ததும், “வாங்க” என அவனை இழுத்துச் சென்றாள். “எங்க? விடு நான் கிளம்பறேன்” என சத்யா கூறவும், திரும்பி அவனை பார்த்தவள், எதுவும் பேசாமல் ஒரு சேரில் அமர வைத்தாள். பிறகு சென்று இரு தட்டுகளில் உணவை எடுத்து வந்தவள் அவனை சாப்பிட சொன்னாள்.

சத்யா, “பரவாயில்ல. நீ சாப்பிடு. நான் கிளம்பறேன்” என்க, “என்னாச்சுங்க? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? யாராவது ஏதாவது சொன்னாங்களா?” எனக் கேட்டுக் கொண்டே சுற்றிலும் பார்த்தாள். எல்லோரும் அவரவர் வேலைகளில் பிசியாக இருக்க, மல்லிகை பந்தலின் கீழே இவர்கள் அமர்ந்திருக்க, யாரும் இவர்களை கவனிக்கவில்லை.

“அதெல்லாம் ஒன்னுமில்ல சூர்யா. டைம் ஆச்சுல்ல. அதான்” என சத்யா கூற, “ம்ம். இப்ப கிளம்பிடலாம்” என்றவள் அவனுக்கு ஊட்டிவிட ஆரம்பிக்க, அவனும் மறுக்காமல் வாங்கி கொண்டதோடு, திருப்பி அவளுக்கு ஊட்டிவிடவும் செய்தான். ஆனால் இதைப் பார்த்துவிட்ட அவர்களது தோழமைகள், யாரும் இவர்களை பார்க்காதவாறு மறைத்து நின்று கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

சாப்பிட்டு முடித்ததும் அவர்களை கவனித்தவள், சத்யாவை நெருங்கி, “ஐ லவ் யூ சத்யா” என்றவாறே கன்னத்தில் முத்தமிட்டாள். அவனும் திருப்பி, “லவ் யூ டூ சூர்யா. ஒன்ஸ் எகைன் ஹேப்பி பர்த்டே” என்றவாறே நெற்றியில் முத்தமிட்டான். மனம் நிறைந்து அவள் விடைகொடுக்க, இவனும் நிறைந்த மனதோடு அவளிடம் விடைபெற்று வர சந்திரிகாவை தேடிக் கொண்டு வந்தார் அவளது அன்னை.

சட்டென வந்து நண்பர்களுடன் நின்று கொண்டவள், “இங்கதான்ம்மா சாப்பிட்டு இருந்தோம்” என பதில் கொடுத்தாள். “சாப்பிடத்தாண்டா நானும் தேடினேன். சரி நீ பேசிட்டு இரு” என்று அவர் கிளம்ப, தோழர்கள் அவரிடம் விடைபெற்று சத்யாவை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தனர்.

அன்றிரவு சத்யாவிற்கு அவள் வாங்கி கொடுத்த அலைபேசியின் மூலம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் தாமதமாகவே உறங்க சென்றனர். ஆனால் அப்போதும் சந்திரிகாவிற்கு உறக்கம் வரவில்லை. காலையில் இருந்து நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தவள், ஒரே நாளில் எவ்வளவு மகிழ்ச்சியான நிகழ்வுகள் என நினைத்து சந்தோஷப்பட்டாள்.

இந்த நாள்தான் அவள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க போகிறாள். இதன்பிறகு வாழ்வின் கஷ்டகாலம் அவளுக்கு ஆரம்பிக்க போகிறது என்பதை பாவம் அந்த பேதை உணரவில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *