385 views

 

            சந்திரிகா தன்னை பற்றி எல்லாமே தெரியும் என்றதில் சத்யா திகைத்து பார்க்க சந்திரிகாவோ, “வேறு ஏதாவது சொல்லனுமா?” எனக் கேட்டாள். அவனுக்குள் ஒரு உணர்வு பரவி அவனை இம்சித்தது. அது அவமானமா, தன்னிரக்கமா, இல்லை ஆனந்தமா என அவனால் பிரித்தறிய முடியவில்லை.

அப்படியே தளர்ந்து போய் மரத்தில் சாய்ந்து அமர்ந்தான். சந்திரிகா பதறி போய் அவனருகில் சென்று அமர, அவளது மடியில் படுத்துக் கொண்டான். கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருக்க, சந்திரிகா எவ்வாறு சமாதானம் செய்வது என்பதை அறியாமல் அவனது தலையை மென்மையாக வருடி கொடுத்தாள்.

அந்த சுகத்தில் தன்னை மீறி தூங்க ஆரம்பித்தான் சத்யா. அவனை பார்க்கும் போது ஒரு சிறு குழந்தை அம்மா அடித்ததில் அழுதுவிட்டு தாயிடமே தஞ்சம் புகுவதை போல இருந்தது. உறக்கம் ஒரு ஆகச்சிறந்த வரபிரசாதம். கவலையோடு இருக்கும்போது சற்று நேரம் துயில் கொள்வது அதை பாதியாக குறைக்கும்.

சத்யா சரியாகி உறங்கி பல நாட்கள் இருக்கும். அதனால்தான் அவள் மடியில் படுத்ததும் தாயின் சிறகுகளை நாடும் சிறு பறவையை போல. கதகதப்பாக உணர்ந்தவன் அப்படியே தூங்கி போனான். ஒரு அரை மணி நேரம் அப்படியே தூங்கி எழுந்தவன், சந்திரிகாவை பார்த்து சிரிக்க முயன்றான்.

அவளோ மறுப்பாக தலையசைத்து, “ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க. எதுனாலும் நாளைக்கு பேசிக்கலாம்” என கூறி அனுப்பி வைத்தாள். மறுநாள் சந்திரிகாவை சந்தித்தவன், அவள் கேளாமலே அவனது கடந்த காலம் பற்றி உரைக்க ஆரம்பித்தான்.

ஆசிரமத்தில் வளரும் எல்லா குழந்தைகளும், ஊர், பேர் தெரியாதவர்களாக இருப்பார்கள் என அவசியமில்லை. சத்யா போல விதிவிலக்காகவும் சிலர் இருப்பர். சத்யா பிறக்கும் போதே யாருமில்லாதவன் அல்ல. ஒரு வளம் நிறைந்த குடும்பத்தில் செல்வந்தர் ஒருவருக்கு ஒற்றை பையனாக பிறந்தான்.

அவனது தந்தைக்கும், தாய்க்கும் செல்ல மகனாய், செல்வ மகனாய் சீராட்டப்பட்டு வளர்க்கப்பட்டான். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. அவனுக்கு ஏழாம் அகவை பிறந்தநாள் கொண்டாடும் வரை. அதன்பிறகு அவர்கள் தொழிலில் சரிவு ஏற்பட, அவனது தந்தை அதை சமாளிக்க முடியாமல் சொத்துக்களை விற்க ஆரம்பித்ததோடு, நண்பர்கள் தயவில் போதை பழக்கமும் வந்தது.

எட்டு வயது நடந்து கொண்டிருக்கும் போது, தந்தை போதை வஸ்து அருந்தி இருப்பது தெரியாமல் காரில் செல்ல வேண்டும் என அடம்பிடித்தான் சத்யா. அவன்தான் சிறு பையன் ஏதோ ஆர்வத்தில் கேட்கிறான் என விடாமல், தனது மனைவியையும் உற்சாகமாக உடன் அழைத்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்வாக இருந்த தனது கணவனை பார்த்தவருக்கும் அதே உற்சாகம் தொற்றிக் கொள்ள, மூவருமாக காரில் ஏறி ஊரை சுற்றினர். திடீரென திருப்பத்தில் ஒரு மணல் லாரி வர, சத்யாவின் தந்தை போதை மயக்கத்தில் அதை கவனிக்க மறந்து திருப்ப, நிமிடத்தில் கார் கவிழ்ந்தது.

சத்யாவின் தந்தை அந்த இடத்திலே உயிரை விட, அவனது தாயாரையும் அவனையும் மருத்துவமனையில் சேர்த்தனர் அருகில் இருந்தவர்கள். சத்யாவின் தாய் அவனை இறுக்கி கட்டிக் கொண்டதில், அவனுக்கு பெரிதாக அடிபடவில்லை. ஆனால் அவரது உடல்நிலை மோசமாக இருந்தது.

எப்படியும் சாக போகிறோம் என தெரிந்தவர் மகனை அருகில் இழுத்து சில விசயங்களை கூறி விட்டு கண்ணை மூடினார். ஒரே நேரத்தில் தனது தாயையும், தந்தையையும் பலி கொடுத்து விட்டு எட்டு வயது பாலகன் அழுததை அந்த மருத்துமனையே சோகமாக பார்த்தது.

அவனது கதறல் அங்குள்ளவர்கள் அனைவரையும் உலுக்க, தந்தையின் நண்பர் ஒருவர் மூலம் இறுதி காரியங்கள் தொய்வில்லாமல் நடந்தது. காதல் திருமணம் செய்து கொண்டதால் பெரிதாக உறவினர் வட்டம் இல்லாமல் போக, சொத்துக்களும் கடன் வாங்கியவர்களால் சூரையாடப்பட்டது.

அத்தனை சொத்துக்கு சொந்தக்காரன் ஒரே நாளில் அனைத்தையும் இழந்து அனாதையாக ஆனான். அவனது தந்தையின் நண்பர்தான் அவனை இந்த ஆசிரமத்தில் சேர்த்து விட்டு சென்றார். ‘தந்தை வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தி அனைவரும் ஒன்றாக இறந்து விடலாம் என நினைத்திருப்பாரோ.’ என்று அதன்பிறகு பல நாட்கள் நினைத்திருக்கிறான்.

ஆனால் அவன் சாக வேண்டும் என ஒரு நாளும் நினைக்காத வண்ணம் இருக்க, அந்த ஆசிரமத்தில் இருந்த சிலரும், அவனது தாயின் வார்த்தைகளும் உதவியது. அதன்பிறகு படிப்பு ஒன்றே துணை என படித்தான். எல்லா செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். தனிமை தன்னை தாக்காதவாறு பார்த்துக் கொண்டான்.

உதய், இவனுக்கு முன்பே ஆசிரமத்தில் இருந்தவன். இவனிடம் ஓயாமல் பேசி பேசியே நட்பை வளர்த்துக் கொண்டான். இப்போதும் அவனுக்கு உதய்யை தவிர உற்ற நண்பர்கள் யாரும் இல்லை.உதய்யின் நண்பர்களிடமும் அளவாக தான் வைத்துக் கொள்வான்.

சத்யா இதையெல்லாம் சந்திரிகாவிடம் கூறிய போது, அவள் மிகுந்த வேதனையுற்றாள். இதுவரை அவன் பட்ட துன்பங்கள் அனைத்திற்கும் சேர்த்து வரும் காலங்களில் அவனை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தாள்.

ஆனால் இதை எல்லாம் விட மிகப்பெரிய துன்பத்தை அவளாலே அவன் அனுபவிக்க போகிறான் என்பதை பாவம் அவள் அப்போது அறியவில்லை. அதன்பிறகு வந்த ஆறு மாதங்கள் சத்யாவும், சந்திரிகாவும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர். காதலை கொண்டாடி தீர்த்தனர்.

தினமும் ஒரு ஐந்து நிமிடமாகவாது இருவரும் பார்த்து பேசிக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். ஒருநாள் மாலை கல்லூரி வளாகத்திலே ஓரு மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க சந்திரிகா, அந்த கேள்வியை கேட்டாள்.

“சத்யா, அத்தை அப்படி என்னதான் சொன்னாங்க?” எனக் கேட்க, சத்யாவும் அதை நினைவு கூர்ந்தான். “கண்ணா. அம்மா சொல்றதை நல்லா நியாபகம் வைச்சுக்கோப்பா. எந்த சூழ்நிலையிலையும் உன் தைரியத்தை கைவிடவே கூடாது. யாரையும் ஏமாத்தாம நல்லபடியா படிச்சு நீ பெரிய ஆளா ஆகனும்.

உன்னால நாலு பேர் வாழ்ந்தாங்கன்னு இருக்கனுமே தவிர, யாரும் கெட்டு போய்ட்டாங்கன்னு பேர் வாங்கவே கூடாது. அப்பாவும், அம்மாவும் எப்பவும் உன் கூடவேதான் இருப்போம். பத்திரமா இருக்கனும் கண்ணா” என அவனை உருவி கொடுத்தவர் அடுத்த நொடி தன் கண்ணை மூடி இருந்தார்.

சத்யா கூறியதும், சந்திரிகா அவனை ஆதரவாக அணைத்துக் கொண்டாள். இவர்களது காதல் நண்பர்களுக்கும் ஓரளவு தெரிய வர எல்லோருக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. உதய் மட்டும் தான் இதை நினைத்து சற்று கவலை கொண்டான்.

தனது நண்பனின் ஆசை நிறைவேறுமா? என்ற ஐயம் அவன் மனதில் தோன்றியதே அதற்கு காரணம். ஆனால் அதை இருவரிடமும் அவன் வெளிப்படுத்தவில்லை. அன்றொரு நாள், “உங்களுக்கு சின்ன வயசு ஆசை ஏதாவது இருக்கா?” என சந்திரிகா கேட்க, “இருக்கு. ஆனா சொன்னா நீ கிண்டல் பண்ணுவ.” என்றான் சத்யா.

“பிளீஸ், பிளீஸ் சொல்லுங்க. நான் கிண்டல்லாம் பண்ண மாட்டேன்.” என சந்திரிகா கேட்கவும், “எனக்கு சின்ன வயசுல சுத்தற மிட்டாய் ரொம்ப பிடிக்கும். ஆனா வீட்ல அதெல்லாம் கிடைக்காது. அதுனால ஸ்கூல்க்கு வெளில ஒரு பாட்டி விற்பாங்க. நான் வீட்டுக்கு தெரியாம வாங்கி சாப்பிடுவேன். ஆனா இப்பெல்லாம் கிடைக்கறதே இல்லை” என்றான் சத்யா.

“சுத்தற மிட்டாய் பிடிக்குமா?” என ஆச்சர்யமாக கேட்டாலும், மறுநாள் எங்கேயோ தேடி பிடித்து அவ்வளவு மிட்டாய்களை கை நிறைய தர, அவன் முகத்தில் அவ்வளவு ஆச்சர்யம். “ஹேய். எங்க கிடைச்சது. இவ்ளோ மிட்டாய். தேங்க்ஸ்பா!!” என அள்ளிக் கொண்டான்.

இது போன்ற சின்ன சின்ன நிகழ்வுகளில் பெரிதாக சந்தோஷப்பட்டு தங்களது அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இப்படியே முதல் வருடம் முடிந்து இருவரும் இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைத்தனர்.

ஒரு நாள் அப்படிதான். சத்யா சோகமாக இருக்க, சந்திரிகா என்னவென்று விசாரிக்க, “சூர்யா. என்ன நீ நிஜமா லவ் பண்றீயா?” எனக் கேட்டான் சத்யா. அவளோ திகைத்து போய் அவனை பார்த்து, “ஏன் இப்படி கேட்கறீங்க? என்னாச்சு?” எனக் கேட்டாள்.

“இல்ல லவ்வர்ஸ்னா இரண்டு பேருக்கும் அப்பப்ப சண்டைல்லாம் வரும். அப்பறம் சமாதானம் ஆவாங்க. பொண்ணுங்க எப்பவும் ஏதாவது பசங்ககிட்ட எதிர்பார்த்துட்டே இருப்பாங்கன்னுலாம் நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா நீ என்கிட்ட சண்டையும் போட மாட்ற. எதுவும் எதிர்பார்க்கவும் மாட்டேங்கற. அதான்” எனவும், சந்திரிகா சிரித்தே விட்டாள்.

“உங்ககிட்ட சண்டை போட மாட்டேனு எப்ப சொன்னேன். கல்யாணத்துக்கப்பறம் டெய்லியும் சண்டை போடுவேன். எனக்கு என்ன வேண்டும்னாலும் உங்ககிட்ட தான் கேட்பேன். ஆனா இப்ப இல்லை. உங்களுக்கும் சரி. எனக்கும் சரி. வாழ்க்கைல்ல நிறைய லட்சியங்கள் இருக்கு. அதுக்கு என்னைக்கும் நம்ப காதல் தடையா இருக்கவே கூடாது.

நாம சேர்ந்து ஜெயிக்கனுமே தவிர, இது மாதிரியான சின்ன சின்ன விசயத்துல கவனம் செலுத்தி படிப்பை கோட்டை விட்டுட கூடாது. இப்ப நான் சண்டை போட்டா அந்த நாள் முழுக்க என்னை எப்படி சமாதானம் பண்றதுன்னே உங்க மனசில ஓடிட்டு இருக்கும். அதுமாதிரி தான் எனக்கும்.

நம்ப சேர்ந்து இருக்கற கொஞ்ச நேரமும் சந்தோஷம் மட்டும்தான் நிறைஞ்சு இருக்கனும். நீங்க சிரிச்சுட்டே இருந்தா அதுவே எனக்கு போதும்.” என கூற, சத்யா அவளை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டான். “ரியலி பிரவுட் ஆப் யூ மை கேர்ள். நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கனும். தேங்க் யூ சோ மச்” என்றான்

ஆனால் இவ்வளவுக்கு பிறகும் தனது காதலை வார்த்தைகளால் சத்யா வெளிப்படுத்தவே இல்லை. சந்திரிகாவிற்கு அது புரிந்தாலும் அவளும் எதுவும் கேட்கவில்லை. அவள் காதருகே, “கல்யாணம் பண்ணிகிட்டாதான் நீ உரிமையா இருப்பன்னா நாளைக்கே பண்ணிக்கலாமா?” என்றான் விளையாட்டாக.

“கண்டிப்பா. பண்ணிக்கிட்டா போச்சு” என்றாள் இவள் சீரியசாக. “சரி. சரி. நீ கிளம்பு டைம் ஆச்சு. விளையாட்டா ஒன்னும் பேச முடியல” என சலித்துக் கொண்டு அவளை அனுப்பி வைத்தான். “சரி. ஓகே நான் கிளம்பறேன். நாளைக்கு என்னோட பிறந்தநாள். யாரும் குடுக்க முடியாத ஒரு கிப்ட்டை உங்ககிட்ட எதிர்பார்ப்பேன்.” என்றவாறே சென்று விட்டாள்.

சரியாக பன்னிரெண்டு மணிக்கு உதய்யின் உதவியுடன் சுவர் ஏறி குதித்து, சரியாக அவளது அறைக்கு வந்தான் சத்யா. சந்திரிகாவை எழுப்பி பிறந்த நாள் வாழ்த்துக்களை கூற, அவளோ முதலில் பயத்தில் கத்த போனாள். அவளது வாயை பொத்தியவன், “ஹேய். நான்தான்டீ. கத்தாத.” என்றான்.

அதன்பிறகு சற்றே நிதானமானவள், “இந்த நேரத்தில் இங்க என்ன பண்றீங்க.” எனக் கேட்க, அவனோ அவளது பெட்டில் சாவதானமாக படுத்துக் கொண்டு, என் காதலிக்கு இன்று பிறந்தநாள் அல்லவா. அதான் விஷ் பண்ண வந்தேன்” என்றான்.

“சரி. சரி. விஷ் பண்ணிட்டீங்கள்ள போதும். கிளம்புங்க. யாராவது பார்த்தா பிரச்சனை ஆகிடும். நாளைக்கு காலேஜ்ல பாத்துக்கலாம்” என்றாள் சந்திரிகா. அவளை இழுத்து அருகில் படுக்க வைத்தவன், “என்னடீ. கிளம்பு, கிளம்புன்னு சொல்ற. விஷ் பண்ணா போதுமா? கிப்ட் குடுக்க வேணாமா?” எனக் கேட்டான்.

“ம்ம். சரி குடுங்க. என்ன வாங்கிட்டு வந்தீங்க?” என கையை நீட்ட, அவனோ, “நான் மட்டுமே குடுக்கற கிப்டை எப்படி வாங்கிட்டு வர முடியும்” என சிரித்தான். “அப்படின்னா” என்றவளிடம், “அதான் உனக்கு கிப்ட் குடுக்க போறேன்.” என அருகில் நெருங்க, அவனது பார்வையை கண்டதும், அவளோ துள்ளி எழுந்தாள்.

“உங்க பேச்சே சரி இல்லை.”கிளம்புங்க.” என அவள் கூற. “போக மாட்டேனே.” என அருகில் வர, அவள் சுவரோடு ஒன்றி கண்களை மூடிக் கொண்டு, “பிளீஸ். இதெல்லாம் தப்பு. கிளம்புங்க.” எனக் கூற, அவளது நெற்றியில் தனது முதல் முத்தத்தை பதித்தவன், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனது அன்பான சூர்யாவிற்கு.” என வாழ்த்தியதோடு, “ஐ லவ் யூ சோ மச் மை டியர்” என காதலையும் சொன்னவன்,

அவளது கைகளில் ஒரு கவரை குடுத்துவிட்டு வந்த வழியே சென்று விட்டான். சந்திரிகா கண் திறந்து பார்க்கும்போது அறையில் அவன் இல்லை. அவன் குடுத்த பரிசு மட்டும் அவளது கைகளில்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *