409 views

             சந்திரிகாவை லாரி இடித்ததில் மயங்கி கீழே விழ, “சூர்யா” எனக் கத்திக் கொண்டே ஓடிவந்தான் சத்யா. நண்பனது குரலில் அவனை பார்த்த மற்ற நண்பர்களும் பின்னாடியே வர, அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர் அனைவரும்.

மருத்துவர் வந்து பரிசோதித்துக் கொண்டிருக்க, தவிப்புடன் நின்றுக் கொண்டிருந்தான் சத்யா. சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், “கீழ விழுந்ததுல தலைல்ல அடிபட்டிருக்கு. தையல் போட்டிருக்கோம். கையை பலமா ஊன்றியதில் கை உடைஞ்சருக்கு.” எனவும் அதிர்ந்து போனான் சத்யா.

எழில்தான், “இப்ப அவங்கள பார்க்கலாமா டாக்டர்?” எனக் கேட்க, “இல்லல்ல. டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். ஒரு ஒன் ஹவர் கழிச்சு, ஒவ்வொருத்தரா போய் பாருங்க. பயப்பட ஒன்னுமில்ல.” எனக் கூறி சென்றார் மருத்துவர்.

அப்போதும் சத்யா கவலையுடனே இருக்க, உதய் அவனருகில் வந்து, “ஹேய். ரிலாக்ஸ் ஆகுடா. அதெல்லாம் சந்துமாக்கு எதுவும் ஆகாது.” என சமாதானப்படுத்தினான்.

அதே நேரம் கண்களில் நீருடன் அங்கு வந்து சேர்ந்தாள் திவ்யா. “சந்திரிகா எங்க? எனக்கு அவளை உடனே பார்க்கனும்” என அழுது கொண்டே கூற, அவளையும் சமாதானப்படுத்தி அங்கேயே அமரவைத்த பின், அன்பு, “சந்திரிகா வீட்டுக்கு யாராவது சொன்னீங்களாடா?” எனக் கேட்டான்.

“இல்லயேடா. அவங்க வீட்டு நம்பர் எனக்கு தெரியாதே?” என்ற ஆதவ், “காலேஜ்க்கு சொல்லிட்டா. அவங்க சொல்லிடுவாங்க. நான் ஃபோன் பண்ணிட்டு வரேன்.” என கிளம்பினான். “இருடா. சந்திரிகா கண் முழிச்சதும் சொல்லலாம். இப்ப சொன்னா பயந்திடுவாங்க.” என அவனை அமர்த்தினான் உதய்.

அதே போல ஒரு மணி நேரத்தில் பார்க்க போகலாம் எனக் கூறியதும், திவ்யாவை முதலில் அனுப்பியவர்கள், மற்ற அனைவரும் அடுத்தடுத்து உள்ளே சென்றனர். சந்திரிகாவிற்கு வலது கையில் கட்டு போடப்பட்டிருக்க, வலது நெற்றியில் காயமாகி தையல் போடப்பட்டிருந்தது. மற்றபடி இயல்பாகவே இருந்தாள்.

உள்ளே வந்த திவ்யா, “எல்லாம் என்னாலதான். நானும் உன் கூட வந்திருக்கனும். ரொம்ப வலிக்குதா?” என அழுக, சந்திரிகாதான் அவளை சமாதானம் செய்ய வேண்டிருந்தது. ஆனால் தோழிக்காக இவ்வளவு வேதனை கொள்ளும் திவ்யாவை பார்க்கும் போது எழிலுக்கு உள்ளுக்குள் ஏதோ இடறியது.

அதன்பிறகு அனைவரும் வந்தாலும் சத்யா மட்டும் உள்ளே வராதது ஏதோ மாதிரி சந்திரிகாவிற்கு இருக்க இறுதியாக வந்த உதய்யிடம், “சத்யா வரலயாண்ணா?” எனக் கேட்டே விட்டாள்.

“உனக்கு ஜீஸ் வாங்கிட்டு வரேன்னு போயிருக்கான். நான் போய் வர சொல்றேன்.” என்றவன் சத்யாவிடம் வந்து, “மச்சி எதுனாலும் நாம அப்பறம் பேசிக்கலாம். நீ போய் பாரு.” என உள்ளே அனுப்பி வைத்தான்.

உள்ளே வந்தவனோ எதுவும் பேசாமல் அவளை ஆராயும் தோரணையில் பார்வையிட்டுக் கொண்டிருக்க, அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு சந்திரிகாவே, “சார். அவ்ளோ அடில்லாம் படல. நீங்க ஏன் இப்படி உம்முன்னு இருக்கிங்க. இங்க வந்து உட்காருங்க.” என உரிமையாக அழைக்க அவனும் வந்து அமர்ந்தான்.

அமர்ந்ததும் அவளது இடது கையை கண்ணில் ஒற்றிக் கொள்ள, அவனது கண்கள் கசிந்ததை அவளால் உணர முடிந்தது. “ஹேய். சத்யா. என்னதிது. அழறீங்களா?” என சந்திரிகா கேட்க, “ரொம்ப பயந்துட்டேன். உனக்கு வலிக்குதா?” எனக் கேட்டான் சத்யா.

“அதெல்லாம் ஒன்னுமில்ல. நீங்க முதல்ல நார்மலா இருங்க. உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்.” என சந்திரிகா கூற, “ம்ம். சொல்லு” எனவும், “நான் விழுந்தப்ப என்ன சொல்லி கூப்பிட்டீங்க?” எனக் கேட்டாள் சந்திரிகா.

“சூர்யான்னு சொன்னேன். உன் பேர்ல அதுவும் இருக்குல்ல. ஏன் கூப்பிட கூடாதா.?” என சத்யா கேட்க, “இல்ல இதுவரை யாரும் என்ன அப்படி கூப்பிட்டது இல்ல. ஆனா நீங்க கூப்பிடலாம். ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு. என் வாழ்நாள் முழுக்க எப்பவும் இந்த பேரை உங்க வாயால சொல்லிட்டே இருக்கனும். அவ்ளோதான்.” என்றாள் சந்திரிகா.

அவன் அவளை புரியாமல் பார்க்க, “யெஸ். எனக்கு உங்க கூட ரொம்ப நாள் வாழனும். உங்கள ரொம்ப நேசிக்கறேன். கல்யாணம் பண்ணிக்கறீங்களா?” என நேரடியாகவே அவன் கண்களை பார்த்து கேட்டாள்.

அவள் கூறியதை கேட்டதும் திகைத்தவன், சட்டென அவள் கைகளை விட்டு எழுந்து வேகமாக வெளியில் வரவும், அவளது குடும்பம் மருத்துவமனைக்குள் நுழையவும் சரியாக இருந்தது. ஆனால் அவன் யாரையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவன் வெளியில் சென்றதை கவனித்த உதய் பின்னே வர திவ்யாவும், எழிலும் தான் சந்திரிகாவின் அறையை காண்பித்தனர்.

மொத்த குடும்பமும் உள்ளே நுழைய அவளை பார்த்து பாட்டியும், அம்மாவும் அழ ஆரம்பித்தனர். எதற்கும் கலங்காத அவளது தந்தையே சற்று ஆடி போயிருக்க, நடந்தது என்னவென்று விசாரித்தார்.  லாரி என்றதும் உடனே காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்.

எல்லாருடைய கவனமும் சந்திரிகாவை நோக்கியிருக்க, அவள் மனமோ சத்யாவிடம் சென்றது. ‘ஏன் எதுவும் சொல்லாமல் சென்றான். ஒரு வேளை தன்னை பிடிக்கவில்லையோ. ஆனால் நான் விழும்போது அவன் கண்களில் தெரிந்த காதலை நான் பார்த்தேனே.’ என்றெல்லாம் தனக்குள் யோசித்து குழம்பிக் கொண்டிருந்தாள்.

‘சரி எப்படியும் தன்னை பார்க்க மீண்டும் வருவான். அப்போது கேட்டுக் கொள்ளலாம்’ என முடிவெடுத்துக் கொண்டு குடும்பத்தினரை கவனித்தாள். ஆனால் அவள் மருத்துவமனையில் இருந்த மூன்று நாட்களுமே அவன் வரவேயில்லை. அவளும் பார்க்கவே முடியவில்லை.

எப்படி முடியும்? அவன்தான் இவள் தூங்கும் போது யாருக்கும் தெரியாமல் வந்தல்லவா பார்த்து விட்டு போகிறான்!!! மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்வதற்குள் அந்த லாரிக்காரனை பிடித்து விசாரித்ததில் அவன் உண்மையை ஒப்புக் கொள்ள, தொழில் முறை எதிரி ஒருவனாலே இது நடந்திருப்பதை அறிந்து அவனை நேரடியாகவே சென்று கண்டித்து வந்தார் சக்கரவர்த்தி.

அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம் கழித்தே மீண்டும் கல்லூரிக்கு வந்தாள் சந்திரிகா. அவள் கல்லூரிக்கு வந்த அன்று காலையில் சத்யா கிளம்பி என்.சி.சி. கேம்ப்க்கு போனாதாக தெரிந்தது.

‘என்கிட்டயே கண்ணாமூச்சி விளையாடுறீங்களா? எவ்வளவு நாள் தப்பிக்க முடியும்னு பார்க்கிறேன்’ என தனக்குள்ளே நினைத்துக் கொண்டவள் அவனது வருகைக்காக காத்திருந்தாள். கேம்பில் இருந்த சத்யா, தனியாக அறையில் இருக்க, மனம் என்னவோ சந்திரிகாவிடம் தான் இருந்தது.

அவனருகில் வந்து உதய் அமர்ந்ததை கூட அறியாமல் ஏதோ யோசனையில் இருந்தான். சற்று நேரம் கழித்து, அவனையே பார்த்துக் கொண்டிருந்த உதய்யை பார்த்தவன், “நீ எப்படா வந்த?” என கேட்டான் சத்யா.

“இப்பதான் கொஞ்ச நேரம் ஆச்சு. நீ என்னடா பண்ணிட்டு இருக்க. எப்ப பாரு தனியா உட்கார்ந்து யோசனை பண்ற. ஏதாவது பிரச்சனையான்னு சொல்லு” எனக் கேட்டான் உதய். “அதெல்லாம் இல்லடா. நான் எப்பவும் போல தான் இருக்கேன்” என மழுப்பினான் சத்யா.

உதயோ மறுப்பாக தலையசைத்து, “உன்ன சின்ன வயசில இருந்து பார்த்திட்டு இருக்கேன்டா. நீ எவ்ளோ பொறுப்பா, எப்பவும் துறுதுறுன்னு உன் வேலைல அவ்வளவு கவனமா இருப்ப. இந்த மாதிரி சோர்ந்து போய், ஏதோ பேயறைஞ்சவன் மாதிரி, எப்ப பாரு யோசனைல்லயே, பார்த்ததே இல்ல.

நார்மலா கேம்ப்ல எல்லா ஆக்ட்விட்டீஸ்லயும் நீதான் பர்ஸ்ட் ஆ இருப்ப. ஆனா இந்த டைம் கலந்துக்கவே யோசிக்கற. இதெல்லாம் நல்லதுக்கு இல்லடா.” என்றான் ஒரு மாதிரி குரலில். பிறகு உதயே தொடர்ந்து, “சந்திரிகாவை லவ் பண்றியாடா?” எனக் கேட்டான். அதற்கு சத்யாவிடம் பதில் இல்லை. ஆனால் அந்த மவுனமே அவள் மீதான நேசத்தை உதய்க்கு உணர்த்தியது.

“எதுவா இருந்தாலும் ஊருக்கு போனதும் சந்திரிகாவை நேரா பாத்து பேசி சால்வ் பண்ணிக்கோ. மனசை போட்டு குழப்பிக்காத. ஆனா நீ இப்படி இருக்கறது நம்ம பியூச்சர்க்கு அவ்ளோ நல்லதில்லடா. என்றான் உதய். “நம்ம” என்றதில் அழுத்தம் கொடுத்து.

அதில் சற்று தெளிவடைந்தவன் சில முடிவுகளை எடுத்துக் கொண்டு, அதன்பிறகு இயல்பாகவே கேம்பை வெற்றிகரமாக முடித்தனர் இருவரும். கல்லூரிக்கு வந்த பிறகு சத்யாவே, சந்திரிகாவிடம் வந்து, “உன்கிட்ட தனியாக பேச வேண்டும். எப்போது, எங்கேன்னு முடிவு பண்ணிட்டு சொல்லு” எனக் கூறிச் சென்றான்.

‘கல்லூரிக்குள் வைத்து எதையும் பேசிக் கொள்ள வேண்டாம்’ என நினைத்தவள், அருகிலிருந்த பூங்கா ஒன்றிற்கு வர சொன்னாள். அதன்படி அன்று மாலை 4 மணி அளவில் அந்த பார்க்கில் இருந்த ஒரு மகிழ மரத்தடியில் காத்திருந்தாள் சந்திரிகா.

சற்று நேரத்தில் அங்கு வந்த சத்யா அவளுக்கு அருகில் சற்றே இடைவெளி விட்டு அமர்ந்தான். சில நிமிடங்கள் மௌனத்திலே கரைய, சந்திரிகா தான் முதலில் ஆரம்பித்தாள்.

“சொல்லுங்க. பேசனும்னு வர சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா எப்படி?” எனக் கேட்க, “நீ பண்றதெல்லாம் சரின்னு நினைக்கறீயா?” என அவன் எதிர்க் கேள்வி கேட்டான். “எதை சரியில்லைன்னு சொல்றீங்க. எனக்கு புரியற மாதிரி தெளிவாவே சொல்லுங்க?” இது சந்திரிகா.

“சரி நேரடியாவே சொல்றேன். படிக்கற வயசில இந்த காதல் கத்தரிக்கால்லாம் தேவையா?” என சத்யா கேட்க, “ஓ அப்ப நான் உங்கள லவ் பண்றது தப்புல்ல. அதை இப்ப சொல்றது தான் தப்புன்னு சொல்றீங்களா? நான் வேணா. இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு சொல்லட்டுமா.” என்றாள் சந்திரிகா.

“இது காதலே இல்லன்னு சொல்றேன். இந்த வயசில வர ஒரு அட்ராக்ஷன் அவ்வளவுதான். உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை இருக்கு. வீணா மனச அலைபாய விட்டு அதை கெடுத்துக்காத.” என அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

“ஆரம்பத்துல வேணா அது அட்ராக்ஷனா இருக்கலாம். ஆனா அது காதலா மாறி ரொம்ப நாள் ஆகிடுச்சு. இதை சொல்லவா நீங்க இவ்வளவு நாள் என்ன அவாய்ட் பண்ணிட்டு இருந்தீங்க. அன்னைக்கு நான் லவ்வை சொன்னப்பவே இதை எல்லாம் சொல்லி ஒத்துவராதுனு போயிருக்கலாமே.” எனக் கேட்டாள் சந்திரிகா.

“ம்ச்ச் அன்னைக்கு உனக்கு உடம்பு முடியாம இருந்தது சூர்யா. அதையும் இதையும் பேசி உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னு நினைச்சேன் அவ்ளோதான்” என சலித்துக் கொண்டான். “இந்த அக்கறைதான் சத்யா. மேலும் மேலும் உங்க மேல காதலை கூட்டிக்கிட்டே போகுது.” என்றாள் சந்திரிகா.

“சரி நான் காதலிக்கறது இருக்கட்டும். நீங்க சொல்லுங்க. என்ன நீங்க காதலிக்கவே இல்லை.?” எனக் கேட்டாள் கூர்மையாக. “எனக்கு உன் மேல அன்பு, பாசம் எல்லாமே இருக்கு. ஒரு தோழியா கூட உன்னை நான் பார்க்கறேன். ஆனா அது காதல் இல்ல.” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

“அதை ஏன் எங்கையோ பார்த்து சொல்றீங்க. என்னை பார்த்து சொல்லுங்க பார்க்கலாம்” என சந்திரிகா சொல்லவும், அவனுக்குள் சினம் மூண்டது. “என்ன சொல்ல சொல்ல கேட்காம, சொன்னதையே சொல்லிட்டு இருக்க. அப்படி என்ன தெரியும் என்ன பத்தி. லவ் பண்றாலாம் லவ். நான் யாருன்னு தெரியுமா? நான் ஒரு அனா.” என கத்தியவனின் நாவை தனது கரம் கொண்டு மூடினாள்.

அவன் சற்று அமைதியானதும், “எல்லாமே தெரியும். நீங்க யார்னு தெரியும். உங்களுக்கு யாரும் இல்லன்னு தெரியும். இனிமே எல்லாமாகவும் நான் இருக்க போறேனும் தெரியும்.” என்றாள் அமைதியாகவும் அதே சமயம் உறுதியாகவும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *