380 views

 

      படைப்பாளிகளின் திறமை கண்ட பின்பே வெற்றி பெற்றவர் யார் என அறிவிக்கப்படும் என கூறியதும் திவ்யாவின் முகம் இருண்டது. ஆனால் அதை கண்டுகொண்ட சந்திரிகாவோ அவள் அருகில் வந்தாள். “என்னாச்சு திவ்யா. ஏன் ஒரு மாதிரி இருக்க?” என சந்திரிகா கேட்க, ‘தன்னை கண்டு நக்கல் செய்கிறாளோஎன நினைத்து சந்திரிகாவின் முகத்தை பார்த்தாள் திவ்யா.

அவள் முகபாவனை தீவிரமாக இருக்கவும், “இல்ல. இது எல்லாம் நான் வரைஞ்சது இல்ல. இப்ப லைவ்வா வரையனும்னா கண்டிப்பா தோத்துடுவேன். அதவிட எனக்கு வரைய தெரிலன்னு எல்லார்க்கும் தெரிஞ்சா அவமானமா போய்டும். போட்டில இருந்து விலகிடலாம்னு இருக்கேன்.” என்றாள் திவ்யா.

இப்ப நீ போட்டில இருந்து விலகினாலும் அதுவும் அவமானம்தான். அப்பவும் நீ வரைய தெரியாம விலகறன்னுதான் நினைப்பாங்கஎன சந்திரிகா கூற, திவ்யாவோ, ‘வேற என்னதான் பண்றதுஎன்ற ரீதியில் சந்திரிகாவை பார்த்தாள்.

முதல்ல உனக்கு வரைய தெரியாதுன்னு ஏன் நீயே முடிவு பண்ணிக்கற. உன்னோட எல்லா முடிவையும் நீயே எடுக்கற அளவு உங்க வீட்ல சுதந்திரம் இருக்குன்னா, படிப்பையும் நீதான் சூஸ் பண்ணிருப்ப. எத்தனையோ விதமான படிப்பு இருக்கும் போது நீ ஆர்க்கிடெக்சர்ர செலக்ட் பண்ணி இருக்கன்னா, ஏதோ ஒரு வகையில் உனக்கு இது பிடிச்சிருக்கு.

ரொம்பல்லாம் யோசிக்காம உனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பொருளையோ, இடத்தையோ கற்பனைல்ல கொண்டு வந்து வரைய டிரை பண்ணு. நல்லா வரைல்லன்னா கூட பரவால்ல. திடீர்னு வரைய சொன்னா எப்படின்னு யோசிச்சு விட்டுருவாங்க. நீ விலகுனாதா எல்லாருக்கும் சந்தேகமே வரும்.” எனக் கூறியவள் அவளது பதிலை எதிர்பார்க்காமல் தன்னிடத்திற்கு வந்து விட்டாள்.

அப்போதும் சத்யா வராமலிருக்கவும், அவளது மனம் ஏனோ சோர்ந்தது. அதே நினைவில் இருக்க போட்டி ஆரம்பமாகும் நேரம் வந்தது. பத்து பேரும் வரிசையாக நின்றிருக்க, பார்வையாளர்களும், வரைபவர்களும் எதிரெதிரில் இருக்க என்ன வரைகிறார்கள் என பார்க்க முடியவில்லை.

போட்டி தொடங்கியதும் திவ்யாவும் வரிசையில் இருப்பதை பார்த்து தனது கட்டை விரலை உயர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தாள் சந்திரிகா. பதிலுக்கு அவளும் தலையசைக்க அனைவரும் வரைய தொடங்கினர்.

போட்டி தொடங்கி பாதி நேரம் கடந்த நிலையில் அந்த அரங்கிற்குள் நுழைந்தான் சத்யா. அந்த பரபரப்பிலும் அவளது விழிகள் அவனைக் கண்டு விரிந்ததை அவனால் அறிய முடிந்தது. அதன்பிறகு ஒரு வழியாக போட்டி நேரம் நிறைவடைய அனைத்து ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. வரைந்தவர்களின் பெயர் இல்லாமலே.

ஆனால் சந்திரிகாவின் ஓவியத்தை எளிதாக கண்டு கொண்டான் சத்யா. அதன்பிறகு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. மூன்றாம் இடத்தை கலைக்கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவன் பெற இரண்டாம் இடத்தை விலங்கியல் துறை மாணவி பெற்றாள். “முதலிடத்தை பெறுபவர்என நடுவர் அறிவிக்க, அனைவரும் ஆவலோடு எதிர்நோக்கினர்.

சில நிமிட மவுனத்திற்கு பிறகுசந்திரிகா. பர்ஸ்ட் இயர் ஆர்க்கிடெக்சர்என்றதும் கரவொலி அடங்க வெகு நேரம் ஆனது. அவளது ஓவியத்தை அனைவருக்கும் சுட்டிக்காட்டினார் நடுவர்.

அடர்ந்த காட்டின் நடுவே, மரங்களின் நடுவே பூ மாலைகள் கோர்த்து ஒரு ஊஞ்சலில் காரிகை பெண்ணெருத்தி அமர்ந்திருக்க, அந்த எழிலுக்கு சற்றும் பொருந்தா வண்ணம் வதனத்தில் சோகம் காட்டி யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தார் போல அமைந்திருந்தது ஓவியத்தின் ஒரு பகுதி.

பக்கத்திலேயே சோலையின் வாசம் சற்றே குறைந்தார் போல ஒரு கானகத்தில் மர ஊஞ்சலில் பெண்ணொருத்தி அமர்ந்திருக்க, அவளது முகம் ஆயிரம் சூரியன்களை போல பிரகாசித்தது. அவளுடன் ஒரு ஆணும் அதாவது அவளது தலைவன் இருந்ததே அந்த பொலிவிற்கு காரணம் என்பதை போல தீட்டப்பட்டிருந்தது அந்த ஓவியம்.

முதலாம் ஓவியம், தான் வருவதற்கு முன்பாகவும், இரண்டாவதை தான் வந்ததற்கு பின்பும் தீட்டியிருக்க வேண்டும் என எளிதாக கண்டு கொண்டான் சத்யா. அந்த ஓவியத்தை கண்டவனது உள்ளம் ஆனந்த கூத்தாட, ஒருவித மயக்கத்தில் நின்றிருந்தான் சத்யா.

சந்திரிகா. சூப்பரா டிராயிங் பண்ணிருக்கால்ல.” என்றான் அன்பு. “ஆமாண்டா. மூனு ஓவியமுமே கருத்தாவும், தத்ரூபமாவும் இருந்தது.” என்ற உதய், “எப்படிடா. எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் மனசளவுல தங்கமான குணமா இருக்கால்லஎன்றான் சத்யாவிடம்.

ம்ம்.” என்ற சத்யாவின் கவனமோ சந்திரிகாவின் மீதே இருந்தது. வெற்றி பெற்றவர்களை அறிவித்ததும், அங்கிருந்தவர்கள் கலைய ஆரம்பிக்க நடுவர் குழுவோ இன்னும் ஒரு பரிசு மீதமிருக்கிறது என அறிவித்தது.

அனைவரும் ஆவலாக பார்க்க,நடுவர் குழுவின் பிரத்யேக பரிசு இந்த ஓவியத்திற்கு வழங்கப்படுகிறது.” என அவர்கள் காண்பித்தது சாட்சாத் திவ்யாவின் ஓவியம் தான்.

கடலலைகள் வந்து தழுவும் தூரத்தில் ஒரு மாளிகை போன்ற வீடு அமைந்திருக்க, அந்த வீட்டின் மேல்மாடத்தில் இருந்து கடலை ஒரு சிறு பெண்ணும், அவளது அன்னையும் இணைந்து பார்ப்பது போல அமைந்திருந்தது அந்த ஓவியம். அந்த கடலை விட அதிகளவு பாசம் செரிந்திருந்தது அந்த தாயின் கண்களில்.

பரிசு தனக்குதான் என தெரிந்ததும், திவ்யாவின் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. ஓடிவந்து சந்திரிகாவை கட்டிக் கொண்டதை அனைவரும் ஆச்சர்யமாக புரியாமல் பார்க்க, அவளோ திவ்யாவை ஆதுரமாக தட்டிக் கொடுத்தாள்.

சந்திரிகாவும், சத்யாவும் போட்டிகளில் வெற்றி பெற்றதற்கு டிரீட் வேண்டும். என நண்பர்கள் கேட்க, அனைவரும் ஒருநாள் கண்டிப்பாக வெளியில் போகலாம் என்றாள் சந்திரிகா. ஆனால் அடுத்தடுத்து அனைவருக்கும் வேலை இருந்து கொண்டே இருந்ததில் அது தள்ளிக் கொண்டே போனது.

அதன்பின்பு வந்த நாட்களில் திவ்யாவும், சந்திரிகாவும் இணை பிரியா தோழிகளாக வலம் வந்தனர். திவ்யாவை பற்றி சந்திரிகா அறிந்து கொண்டது இதுதான். திவ்யாவிற்கு பன்னிரண்டு வயதாகும் வரை அவள் வாழ்வில் சோகம் என்பதே இருந்ததில்லை.

தந்தை எப்போதும் பிஸினஸ், பிஸினஸ் என ஓடிக் கொண்டிருந்தாலும், தனது குடும்பத்தை பார்க்கவும் தவறியதில்லை. அவளது தாய் குடும்பத்தை அழகாக பார்த்துக் கொள்ள, தந்தை அவர்க்குரிய பொறுப்புகளை பார்த்துக் கொள்ள என மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்தது அந்த விபத்து நடக்கும் வரை.

தந்தை வேலை விசயமாக வெளியூர் சென்றிருக்க, அவளும், அவள் தாயும் ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பும் போது அவர்கள் காரும், ஒரு லாரியும் மோதிக் கொண்டதில் விபத்து நடந்தது. அந்த நிலையிலும் தனது மகளை வெளியே தள்ளி விட, திவ்யா விழுந்து எழுந்து பார்க்கும் போது, கார் மொத்தமும் எரிந்து கொண்டிருந்தது.

அம்மா!” என அலறியபடி அவள் அருகே சென்று பார்த்தபோது கார் முற்றிலும் எரிந்திருக்க, அதை பார்த்தவள் மயங்கி விழுந்தாள். அதன்பிறகே அவள் வாழ்வில் மகிழ்ச்சி என்பது தொலைவில் போக, அவள் தந்தையும், மனைவியின் மறைவின் சோகத்தில் மகளை மறந்து போனார்.

அதன்பின்பு பணமே அவளின் துணையாக இருந்தது. நினைத்த நேரத்திற்கு ஷாப்பிங் செய்வது, வெளியில் சுற்றுவது என சில வருடங்கள் போக தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாமல் போனது அவளது நல்ல நேரம் என்றே கூறலாம்.

கிட்டத்தட்ட அவள் கல்லூரி செல்லும் வயது வந்ததும் சுதாரித்த அவளது தந்தை அவளை சரியான வழியில் வழிநடத்த நினைக்கும் போது, அவள் நிறையவே மாறி இருந்தாள்.திவ்யாவின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொண்ட சந்திரிகாவிற்கு அவள் மீது அன்போடு அனுதாபமும் ஏற்பட்டது.

பனிரெண்டு வயது சிறுமிக்கு தாய் இல்லை என்பது எவ்வளவு கொடுமை. கண்ணில் பார்க்காத ஒரு பொக்கிஷத்தை நழுவ விட்டால் வரும் துன்பத்தை விட, கையில் கிடைத்து பாதியில் அது கைவிட்டு போகும்போது அனுபவிக்கும் வலி கொடுமையானது. அதுதான் திவ்யாவை துவண்டு போக செய்தது.

இதையெல்லாம் அறிந்த பிறகு சந்திரிகா அவளை இன்னும் நன்றாக பார்த்துக் கொண்டாள். அவர்களுக்கிடையே நட்பும் இழைந்தோடியது. ஒருநாள் திவ்யாவிடம், “நீ வரைஞ்ச படம் ரொம்ப நல்லா இருந்தது. எப்படி வரைஞ்ச?என சந்திரிகா கேட்க,

அது எங்களோட பீச் ஹவுஸ்தான். லீவ் நாள்ல நாங்க எல்லாரும் அங்க போய்டுவோம். அம்மாவும், நானும் அங்க இருந்து கடல பார்த்துக்கிட்டே ரொம்ப நேரம் பேசுவோம். அம்மா சாகிறதுக்கு ஒரு வாரம் முன்னாடி கூட அங்க போயிருந்தோம்.

அப்ப நாங்க அப்படி பேசிட்டு இருந்தத பாத்து, அப்பா அதை அப்படியே போட்டோ எடுத்து பிரேம் போட்டு வீட்ல வைச்சாரு. எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மா போனப்பிறகும் அதுதான் எனக்கு நிறைய நாள் துணையா இருந்தது. நீ உனக்கு பிடிச்சத வரைன்னு சொன்னப்ப எனக்கு அந்த மொமண்ட் தான் நியாபகம் வந்தது.” என்றாள் திவ்யா.

இதற்கிடையில் செமஸ்டர் தேர்வுகளும் தொடங்கியிருக்க, சத்யாவை பார்ப்பது சந்திரிகாவிற்கு அரிதாகி போனது. அதை ஒருபுறம் வைத்து விட்டு தனது தேர்வில் கவனமானாள் சந்திரிகா. அந்த செமஸ்டர் தேர்வில் வகுப்பில் முதல் மாணவியாகவும் வந்தாள்.

எந்த பிரிவு தன்னை முழுதாக மறக்கடிக்கும் என சத்யா நம்பினானோ, அதே பிரிவு அவர்களை இணைக்கவும் காரணமாகி போனது. ஒரு மூன்று மாதங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் மீண்டும் பார்க்க நேர்ந்த போது சந்திரிகாவின் மீதான காதலை முழுதாக உணர்ந்தான் சத்யா.

இப்போதெல்லாம் சந்திரிகா அவளது அண்ணனுடன் வருவதில்லை. அவனது கல்லூரி நேரம் இறுதி வருட புராஜக்ட்க்காக மாறி இருக்க, தனியாக ஸ்கூட்டரில் வர பழகி கொண்டாள்.

சில நாட்கள் அவளுடன் திவ்யாவும் இணைந்து கொள்வாள். அன்றும் அதே போல ஸ்கூட்டியை கல்லூரிக்குள் விட சாலையை கடக்கும்போது, எதிரில் இருந்த பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான் சத்யா.

நீண்ட நாட்கள் கழித்து அவனை பார்த்ததில் பரவசமானவள், அவனை பார்த்துக் கொண்டே சாலையை கடக்க முயல, பெரிதாக வண்டிகளும் சாலையில் இல்லை. ஆனால் எதிர்பாரா விதமாக எங்கிருந்தோ வந்த டிப்பர் லாரி ஒன்று அசுர வேகத்தில் வந்தது.

இவளது நல்ல நேரமோ என்னவோ சத்யாவை பார்த்த ஆர்வத்தில் வேகமாகவே வர லாரி வருவதற்குள் முக்கால் பாகம் தாண்டி விட்டாள். அப்போதுதான் அவளை பார்த்த சத்யா லாரி வருவதை கண்டு அவளை நோக்கி சைகை காட்டிக் கொண்டே வர, ஆனாலும் லாரி அவளை இடித்து கீழே தள்ளி விட்டு சென்றது.

கீழே விழுந்தவள் தலையில் அடிபடாமல் இருக்க, கையை நன்றாக ஊன்றியதில் கையில் பலமாக அடிபட்டது. “சூர்யா!!!” என கத்திக் கொண்டே சத்யா, அவளை நோக்கி ஓடிவர, அவனை பார்த்துக் கொண்டே மயங்கினாள் சந்திரிகா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *