Loading

              

                 நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சத்யா, திடீரென மயங்கி விழவும் அனைவரும் அவனை நோக்கி செல்ல, சந்திரிகாவோ செய்வதறியாமல் திகைத்து நின்றாள். ஆனால் ஓரிரு நிமிடங்களிலே சுதாரித்து அருகில் செல்ல, அதற்குள் ஆம்புலன்ஸ் வரவும் சத்யாவை உள்ளே படுக்க வைத்துவிட்டு கூடவே உதய் ஏற சந்திரிகாவும் அவனோடு ஏறி விட்டாள்.

மற்ற நண்பர்கள் பின் தொடர பத்தே நிமிடத்தில் அருகில் உள்ள மருத்துவமனையை அடைந்து விட்டனர். ஆனால் காயம் ஆழமாக இருந்ததில் ரத்தம் வேறு வெளியேறி இருக்க, அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து சென்றனர்.

சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர்,காயம் தான் கொஞ்சம் அதிகமா இருக்கு. கட்டு போட்டுருக்கோம். ஒன் வீக்காவது பெட் ரெஸ்ட்ல இருக்கனும். நடந்தா வீக்கம் வர வாய்ப்பிருக்கு. தண்ணி படாம பாத்துக்கோங்க. ஏன்னா ஆணி குத்தியிருக்கறதால செப்டிக் ஆக சான்ஸ் இருக்கு. மத்தபடி பயப்பட ஒன்னும் இல்ல.” என கூறி விட்டு சென்றார்.

அதன்பிறகு நார்மல் வார்டுக்கு மாற்றிவிட, இவர்கள் உள்ளே சென்ற போது அவன் முழித்திருந்தான். “என்னடா, பாத்து கவனமா இருக்க மாட்டியா?என எழில் கடிந்து கொள்ள, “விடுடா. விளையாடற ஆர்வத்துல பெரிசா தெரிஞ்சிருக்காது. விடு அதான் சரி ஆகிட்டான்ல.” என்றான் அன்பு.

இவர்களே மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்க, அறைக் கதவின் அருகில் நின்று கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சந்திரிகாவை அப்போதுதான் பார்த்தான் சத்யா. அவளை பார்த்ததும் உதய்யிடம் திரும்பியவன், “இவளை ஏண்டா இங்கெல்லாம் கூட்டிட்டு வந்தீங்க?” என கோபமாக சத்யா கேட்க, அப்போதுதான் அவளை கவனித்தனர்.

ஹேய் சாரி சந்தும்மா. இங்க வா. நீ பயப்படற மாதிரில்லாம் ஒன்னுமில்ல.” என அருகில் அழைத்தான் ஆதவ். அருகில் சென்றவள் சத்யாவிடம், “ரொம்ப வலிக்குதா?” என தன்மையாக கேட்க, அவளது கலங்கிய விழிகளை கண்டவன் என்ன நினைத்தானோ இளகிய குரலிலே, “வலி எல்லாம் இல்ல. சரி போய்டும். நீ பீல் பண்ணாம வீட்டுக்கு கிளம்புஎன்றான்.

இன்னும் சற்று நேரம் இருந்துவிட்டு போகிறேன் என்றவளை கட்டாயப்படுத்தி எழிலுடன் அனுப்பி வைத்தான் சத்யா. அடுத்து வந்த இரு நாட்கள் கல்லூரி விடுமுறை என்பதால் உதய் தான் பார்த்துக் கொள்வதாக கூறி, மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டான்.

ஆனால் மறுநாள் காலையிலேயே கையில் சாப்பாட்டுக் கூடையோடு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள் சந்திரிகா. அவள் வந்த நேரம் உதய் எங்கோ வெளியில் சென்றிருக்க, “ஹாய் எப்படி இருக்கீங்க. இப்ப வலி பரவாயில்லையா?என சத்யாவிடம் கேட்டுக் கொண்டே வந்தாள்.

இப்ப நீ எதுக்கு இங்க வந்த.” எனக் கேட்ட சத்யாவை விழி உயர்த்தி பார்த்தவள்,ம்ம். உங்களுக்கு சாப்பாடு குடுக்கத்தான்என கூறியவளை முறைத்தான். “உன்கிட்ட நான் கேட்டனா? நான் சாப்பாட்டுக்கே வழி இல்லாம இருக்கேனு. பேசாம கிளம்பி போ.” என்றான் கடுமையாக.

சட்டென முகம் வாடி விட்டது அவளுக்கு. ஆனால் நொடியில் தன் முக பாவனையை மாற்றிக் கொண்டவள், “ஃப்ரண்ட்ஸ்க்கு போய் யாராவது கேட்டு செய்வாங்களா?” எனக் கேட்டுக் கொண்டிருக்க, “ஹேய் நீ எப்ப வந்தஎனக் கேட்டபடியே உள்ளே வந்தான் உதய்.

இப்பதான்னா சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்என பதில் குடுத்தவாறே, இட்லியை எடுத்து தட்டில் வைத்து உதயிடம் நீட்டினாள். உடனே உதய், “பாரு மச்சி. சந்திரிகாக்கு நம்ப மேல எவ்ளோ அக்கறைன்னு. நெல்லுக்கு பாயறது கொஞ்சம் புல்லுக்கும் பாயட்டும்னு எனக்கும் சேர்த்து டிபன் வந்திருக்கு.

எவ்ளோ நாள் ஆச்சு இந்த மாதிரி வீட்டு சாப்பாடு சாப்பிட்டு.” என குதூகலமாக உண்ண ஆரம்பிக்க அவனை பார்த்த சத்யா எதுவும் பேசாமல் மௌனமானான். அதே நேரம், “அப்படில்லாம் ஒன்னுமில்லன்னா சாப்பிடுங்கஎன்ற சந்திரிகா அவனுக்கென்றே தயாரித்த சத்து மாவுக் கஞ்சியை ஸ்பூன் போட்டு சத்யாவிடம் நீட்ட மறுக்காமல் வாங்கி குடித்தான்.

ஆனால் உதயோ,அவனுக்கு மட்டும் ஏம்மா கஞ்சி குடுக்கற. டாக்டர் நார்மல் ஃபுட் குடுக்கலாம்னு சொல்லி இருக்காங்க. இட்லி சூப்பரா இருக்கு. அதே குடுஎன்றான். “அதுக்கில்லண்ணா, அவங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க. அதுக்குதான் சத்து மாவு கஞ்சி. அப்பறம் இட்லியும் இருக்கு. அது ஒரு பதினொரு மணிக்கு சாப்பிட வைங்க. த்தியானத்துக்கு நான் லஞ்ச் எடுத்துட்டு வரேன்என்றாள் சந்திரிகா.

உனக்கு ஏம்மா சிரமம்என உதய் கேட்பதற்குள் அங்கிருந்து சிட்டாக பறந்து விட்டாள். எங்கே இருந்தால் வேண்டாம் என மீண்டும் சொல்லி விடுவானோ சத்யா என நினைத்து தான் அப்படி வந்தாள். ஆனால் ஏன் இதையெல்லாம் செய்கிறாள் என சந்திரிகாவிற்கே முழுதாக தெரியவில்லை.

அவள் வயதிற்கு அது ஈர்ப்பா, அன்பா, அல்லது காதலா என்றெல்லாம் வரையறுத்து பார்க்க தெரியவில்லை. ஆனால் அவனை பார்த்துக் கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு சாப்பிட வைக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவள் மனதில் இருந்தது.

நேற்று மருத்துவமனையில் இருந்து கிளம்பும் போது எழிலிடம் கூறி மருத்துவரை சென்று இருவரும் பார்த்தனர். அப்போது மருத்துவர், “பயப்படல்லாம் எதுவுமே இல்லம்மா. ஆனா அவர் நேரத்துக்கு சரியா சாப்பிடாம உடம்ப ரொம்ப வீக்கா வச்சிருக்காரு.

அதோடு நேத்து ஸ்ட்ரெயின் பண்ணி விளையாடவும், உடம்பு ரொம்ப களைப்பாகியிருக்கு நேரத்துக்கு நல்லா சாப்பிட்டாவே எல்லாம் சரியாகிடும். இன்னும் இரண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம்.” என கூறியிருந்தது கூட அவனை சாப்பிட வைக்க ஒரு காரணமாக இருக்கலாம்.

அவள் சென்ற பிறகு உதய்யிடம், “ஏண்டா அந்த பொண்ணு இதெல்லாம் பண்றா. நம்பள பாத்துக்க நமக்கு தெரியாதா. சாப்பாடெல்லாம் கொண்டு வர வேணாம்னு சொல்லு.” என கூறினான் சத்யா. “அவ ஏதோ பாசத்துல பண்றாடா. இதை எல்லாம் ஏன் பெரிசு பண்ற. ரொம்ப நல்ல பொண்ணுடா. விடுஎன்றான் உதய்.

அதத்தான் நானும் சொல்றேன். அது மத்தவங்களுக்கு தப்பா தெரிஞ்சா அவளுக்கு தானே கஷ்டம். வேணாம்டா.” என எடுத்துக் கூற, உதய்யும், “சரிடா நான் பேசி பாக்குறேன்என்றான். இது எல்லாம் வெளியில்தான். சத்யாவின் மனதிற்குள்ளோ வேறு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

சந்திரிகாவை பார்க்கும்போது அவனது உணர்வுகள் மாறுவதை அவன் உணர்ந்திருந்தான். அவளை முதல்முறை பார்த்ததை நினைவு கூர்ந்தான். உச்சி வெயில் சுட்டெரிக்கும் அந்த கோடை காலத்தில் அன்று உச்சி பொழுதிலும் ஆதவன் வெளியே தலை காட்டவில்லை.

தனக்கு பதிலாக இளஞ்சிவப்பு வண்ண உடையில் கார் கூந்தல் கொண்ட காரிகை உலவி வருவதாக நினைத்துக் கொண்டு மறைந்திருந்தானோ, ஒரு ஆசிரமத்தில் நூறு பேர் வரை குழுமியிருக்க தனது பொற்கரங்களால் அனைவருக்கும் இனிப்பை கொடுத்து சிரித்தபடி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டிருந்தாள் அவள்.

இன்று அவளுக்கு பிறந்தநாளாம். அதை ஆசிரம தோழமைகளோடு கொண்டாட வந்திருப்பாள் போல. மறைந்திருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த சத்யாவிற்கு மனம் நிறைந்திருந்தது. அது ஏன் என அவனுக்கும் தெரியவில்லை.

அந்த நினைவில் தான் அன்று பாரதியின் கவிதைதனை விரும்பி படித்திருந்தான். அதன்பிறகு மற்றொரு நாள் தனது நண்பர்களிடம் நின்று ஒரு பெண் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அருகில் வந்தவன் கண்களில் மறுமுறை தென்பட்டாள் அவள்.

தனது சமயோசித புத்தியால் தனது நண்பர்களையே வேடிக்கையாக்கி விட்டு செல்லும் அவளை ரசித்து பார்த்திருந்தான். அதோடு விடாமல் அடுத்த முறை, நூலகத்தில் தன் மீது இடித்து விட்டு ஏதோ நினைவில் மானாக துள்ளிக் குதித்து ஓடும் அவளை பார்க்கும் போது ஒரு பரவசம் வந்தது அவனுக்குள்.

இறுதியாக, தனது தோழியாகவே இருந்தாலும் தனது நிலையில் இருந்து மாறாமல் அவளுக்கு எடுத்து சொன்ன விதத்தில் அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் பிறந்தது. ஆனால் அவள் தனது நண்பர்களுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருப்பாள் என்றோ, அதன் விளைவாக தன்னிடம் பேச வருவாள் என்றெல்லாம் அவன் நினைத்தும் பார்த்ததில்லை.

ஆனால் அவள் வந்து பேசும் வரை அவள் மீது இருந்த ஈர்ப்பு. அதன்பிறகு இல்லை. அதற்கு அவளை பற்றி அவன் அறிந்து கொண்டதே காரணம். அவளது குடும்ப செல்வநிலை பற்றி தெரிந்து கொண்டதோடு, இவன் கண்களில் தோன்றிய அதே ஈர்ப்பை அவள் கண்களும் பறை சாற்றிய போது உண்மை உரைத்தது அவனுக்கு.

அதன்பிறகே இனி அவளிடம் விலகி இருக்க வேண்டும் என மனதிற்குள் முடிவு செய்து கொண்டவன், தனது வார்த்தைகளையும், முக பாவனைகளையும் கடினமாக ஆக்கிக் கொண்டான்.

அவளுக்கு தன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கலாம். அதற்காகவே இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள். நாம் கடுமையாக நடந்து கொண்டாலே அது காணாமல் போய்விடும் அவளும் நல்ல விதமாக தனது வாழ்க்கையை பார்ப்பாள்என நினைத்துக் கொண்டான்.

ஆனால் நாம் நினைப்பதெல்லாம் அப்படியே நடந்து விட்டால் நம் விதி தோற்று விடாதா. அப்படித்தான் அவன் வாழ்க்கையும் ஆகப் போகிறது என்பதை அறியாமல் முடிவெடுத்துக் கொண்டிருந்தான்.

வீட்டிற்கு சென்ற சந்திரிகாவோ சோர்வாக இருக்க அவளது பாட்டி மடியில் படுத்திருந்தாள். “என்ன கண்ணு ஆச்சு. உடம்பு ஏதாவது முடியலயா?” என பாசமுடன் அவர் கேட்க, “அதெல்லாம் இல்ல பாட்டிஎன்க, “எதுனாலும் பாட்டிக்கிட்ட சொல்லும்மாஎனக் கேட்கவும்,

இல்ல பாட்டி. காலையில என் ஃப்ரண்டுக்கு சாப்பாடு எடுத்துட்டு போனேன்ல. அவங்க கொஞ்சம் கோபமா பேசின மாதிரி இருந்தது. அதான் வேற ஒன்னுமில்ல.” என்றாள் சந்திரிகா. “அப்படில்லாம் இருக்காதுடா. பொதுவாகவே நமக்கு உடம்பு முடியாம படுத்து இருந்தாலே ஒரு இயலாமையோட வெளிப்பாடா கோவம் தான் வரும். அதனால அப்படி தோனியிருக்கும். உடம்பு சரியானதும் பழையபடி நல்லா பேசுவாங்க பாரு.” என ஆறுதல் கூறினார்.

அதில் சற்று மனம் சற்று தெளிவடைந்தவள், “ம்ம் அப்படி கூட இருக்கும் பாட்டிஎன்றவள், “சரி. நான் போய் மதிய சாப்பாடு ரெடியாகிடுச்சானு பார்க்கிறேன்என்றவாறே எழுந்து ஓடும் தனது பேத்தியை பார்த்தவர், ‘யாருக்காவது ஒன்னுன்னா என் பேத்திக்கு தாங்காது. எவ்வளவு நல்ல மனசு பாருஎன அவளை நோக்கி நெட்டி முறித்தார். அதன்பிறகு சந்தோஷமாக சாப்பாட்டை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி வந்தாள்.

வந்தவுடனே அவளை ஏதாவது சொல்லாத. நான் பொறுமையா சொல்லிக்கறேன் சரியாஎன உதய் கேட்டுக் கொண்டதில் அமைதியாகவே சத்யா இருக்க, அவளோ அதில் இன்னும் மகிழ்ச்சியாகி சாப்பாடு பரிமாறினாள். இருவரும் அமைதியாகவே சாப்பிட்டு முடிக்க, மெதுவாகஹாஸ்டல்ல சாப்பாடு நல்லா இருக்காதான்னாஎனக் கேட்டாள்.

ஹாஸ்டல்லா. தெரியலயே. அங்க யார்ம்மா இருக்காங்க.” என உதய் கேட்க,நீங்க ரெண்டு பேரும் ஹாஸ்டல்ல தங்கி இல்லயா? அப்பறம் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுனு சொன்னீங்கஎனக் கேட்டவள் தொடர்ந்து.

அவளே,” ரூம் எடுத்து தங்கி இருக்கிங்களா? நீங்க எந்த ஊரு அப்பாம்மால்லாம் எங்கன்னா இருக்காங்கஎனக் கேட்டுக் கொண்டே செல்ல அவள் பேச ஆரம்பத்திதும் இருவரின் முகங்களும் இருண்டதை கவனியாமல் விட்டாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
4
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்