670 views

 

            ரகுவை கடத்தி கொண்டு வந்து அசோக்கும் அவனது நண்பர்களும் விசாரித்ததில், “உண்மையை கூறி விடுகிறேன்” என கெஞ்சினான் ரகு. அவன் கூறியது இதுதான். “நான் படிச்சு முடிச்சு ரொம்ப நாளா வேலை தேடிட்டு இருந்தேன் சார். ஆனா படிச்சதுக்கு தகுந்த வேலை கிடைக்கல.

வீட்லயும் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் பண்ணாங்க. ஒரு கட்டத்துல எனக்கு செலவு பண்ணிக்கவே காசு இல்லாம ஆகிடுச்சு” எனவும், “அதனால” என்றான் ஆதி. “அப்பதான் என் காலேஜ் ஃப்ரண்ட பார்த்தேன். அவன்தான் எனக்கு வேலை வாங்கி தரதா சொல்லி ஒருத்தர்கிட்ட கூட்டிட்டு போனான்.” என்றான் ரகு.

“ஆனா நீ வேலை தேடிட்டு இருக்கறதா தானே சொன்னாங்க. அப்படி என்ன வேலை பார்க்கற” என அசோக் கேட்க,”அப்படிதான் எல்லார்கிட்டயும் நான் சொல்லிருக்கேன். அவர்கிட்ட நான் வேலை செய்யறது யாருக்கும் தெரியாது” என்றான் ரகு.

பின் அவனே தொடர்ந்து, “ஆனா அவங்க சொன்ன வேலை. கேட்கற நேரத்துக்கு அவங்களுக்கு பொண்ணு ரெடி பண்ணி தரனும்.” என தயங்கியவாறே கூறினான். அவன் கூறியதை கேட்ட அசோக், அவனை அறைந்து விட்டான்.

“காசு வேணும்னா என்ன வேலை சொன்னாலும் செய்வீங்களாடா. யாருடா அவன் சொல்லு” எனக் கேட்டான் அசோக். “அதை மட்டும் என்ன கேட்காதீங்க சார். நான் சொன்னேனு தெரிஞ்சா என்னை உயிரோடவே விட மாட்டாங்க” என்றான் ரகு.

‘இப்ப மட்டும் நீ உயிரோட இருப்பன்னு நம்பற’ என மனதிற்குள் நினைத்த மாறன் ரகுவிடம், “சரி. எப்படியும் அவன் பெரிய ஆளாதான் இருப்பான். அப்பறம் ஏன் உன்கிட்ட சொல்லனும். அவனுக்கு கிடைக்காத சகவாசமா என்ன?” எனக் கேட்டான்.

“இல்ல அவனோட ஸ்டேட்டஸ்க்கு அவன்கிட்ட பழகறதெல்லாம் ஹை சொசைட்டி கேர்ல்ஸ். அவங்களை தொட்டு பிரச்சனை ஆகறத விட, மிடில் கிளாஸ்ல பணம் தேவைப்படற பொண்ணுங்க தான் அவனோட சாய்ஸா இருந்தது. எனக்கு ஆரம்பத்தில இந்த வேலையை பண்ண இஷ்டம் இல்ல சார். ஆனா என் சிச்சுவேஷன் அப்படி இருந்ததால எனக்கும் வேற வழி தெரியல.” எனக் கூறி மேலும் இரு அடிகளை வாங்கினான்.

“மிடில் கிளாஸ் பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரமாடா உங்களுக்கு” எனக் கேட்டவாறே அடித்த அசோக், “சரி அன்னைக்கு என்ன நடந்தது. அதை சொல்லு” என்றான்.

“வழக்கமா எப்பவும் காலேஜ் பொண்ணுங்கள தான் இதுல மாட்டி விடுவோம். ஆனா அன்னைக்கு என்கிட்ட சின்ன பொண்ணுதான் வேணும்னு கேட்டான் சார். நான் முடியாதுனு சொன்னதுக்கு இவ்வளவு நாள் நீ பண்ண எல்லாத்துக்கும் என்கிட்ட ஆதாரம் இருக்கு. அதை வச்சு உன்னை உள்ள தள்ளிடுவேன். ஏன் நானே ஆள் செட் பண்ணி நீதான் ரேப் பண்ணணு சொல்லுவேனு மிரட்டி ஒன் ஹவர்தான் டைம்னு சொன்னான் சார்.”

“அதுக்கு.” என சஞ்சய் கேட்க, “அவசரமா வெளிய வந்தேன். அப்ப பக்கத்து வீட்ல ஏதோ சத்தம் கேட்டது. என்னனு உள்ள எட்டி பார்த்தா, கண்ணாடி ஜக் கீழ விழுந்து உடைஞ்சிருந்தது. பாப்பாதான் கீழ போட்டுட்டா. ரூம்க்கு உள்ள எட்டி பார்த்துட்டே கிளீன் பண்ண போனா. அப்ப நான்தான் கிளீன் பண்ணி குடுத்தேன்.” என்றவன் தொடர்ந்தான்.

“அம்மா திட்டுவாங்க அங்கிள்னு பயப்படவும் என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். நான் அவள சமாதானம் பண்ணதான் சாக்லேட் குடுத்தேன். அதை சாப்டதும் மயங்கிட்டா. மறுபடி ஃபோன் வந்துட்டே இருக்கவும் நான் பயந்து போய் தப்பு பண்ணிட்டேன் சார். நானே அவளை அவன்கிட்ட குடுத்துட்டேன்.” என அடித்துக் கொண்டு அழுதான்.

“இப்ப அழுது நடிக்காதடா. போதை கலந்த சாக்லேட்டை கொடுத்து அந்த பொண்ணுக்கு இப்படி ஆக விட்டதுக்கு பதில் சொல்லியே ஆகனும். சொல்லு யார் அவன்” என அசோக் மிரட்ட, “அதற்கு போதை சாக்லேட்னு தெரிஞ்சு குடுக்கல சார். அவசரத்துல தெரியாமதான்.” எனவும், “அது சரி போதை சாக்லேட் வேற சப்ளை பண்றீங்களா? சொல்லுடா யார் அவன்?” என ஆதி அவனை அடித்ததில் அவன் பெயரையும் கூறினான். ஆனால் அதை கேட்டு ஐவரும் உறைந்து நின்றனர். அவன் கூறிய ஆளின் பலம் அப்படி.

            ஞாயிற்றுக்கிழமை அதிசயமாக காலையிலே எழுந்து, கிளம்பி, “அம்மா இப்ப வரப் போறீங்களா? இல்ல நான் போகட்டுமா?” என கத்திக் கொண்டிருந்தான் அஸ்வின் கிருஷ்ணா. “வரேன்டா” என குரல் கொடுத்துக் கொண்டே வர அதற்கு முன்பே அவனது தந்தை காரில் அமர்ந்திருந்தார்.

“இப்ப ஏண்டா கத்தற பக்கத்தில தானே” என அவன் தாய் கேட்க, “ம்ம். நான் சிக்ஸ் தேர்ட்டிக்கே அங்க இருப்பேனு சொல்லிருந்தேன். இப்ப பாருங்க இங்கையே செவன் ஆச்சு. அங்க போனா நான்தான் தூங்கியிருப்பேனு அண்ணி சொல்வாங்க” என சிறு பிள்ளையாய் செல்லக் கோபம் கொண்டான் அஸ்வின்.

“சரிடா. நான் சொல்றேன். என்னாலதான் லேட்டுனு. சரியா.” என்றபடியே சில பைகளை வைத்த சரஸ்வதி காரில் ஏறிக் கொள்ள, சாலையில் விரைந்தது கார். அப்போது சரஸ்வதியின் ஃபோன் அடிக்க, “யாரும்மா”என்றார் தெய்வவிநாயகம்.

“வேற யாரு உங்க சீமந்த புத்திரிதான்” என்றவர், எடுத்து “ம்ம் வந்துட்டோம்” என்றவாறே ஃபோனை வைத்தார்.இன்றைக்கு அவர்களது பேரனுக்கு புண்ணியதானம் செய்து பேர் வைக்கும் விழாவும் வைத்திருந்தனர்.

விழா பத்து மணிக்கு தான் என்றாலும் முதல் நாளே வருமாறு மருமகள் அழைக்க, காலையில் நேரமாக வந்து விடுகிறோம் எனக் கூறி இருந்தனர்.
இவர்களுக்கு முன்பே சந்துருவும், காவ்யாவும் குழந்தைகளோடு சென்றிருந்தனர். தீபக் தங்கையோடு நேராக அங்கே வந்து விடுவதாக கூறி இருந்தான்.

இவர்கள் உள்ளே நுழைய ஆருத்ரா வந்து மாமானாரையும், மாமியாரையும் வரவேற்று விட்டு, “இன்னைக்கும் நீ சொன்ன டைம்க்கு வரல. தூங்கிட்டதானே.” என அஸ்வினின் காதில் சொல்ல, அவனோ அவன் தாயை முறைத்தான்.

“இல்லம்மா” அது என சரஸ்வதி ஆரம்பிக்க, அஸ்வின் இடையில் புகுந்து “ஆமா. அண்ணி தூங்கிட்டேன். அதுக்கு இப்ப என்ன, எங்க என் பையன்?” என்றபடி உள்ளே சென்றான். அண்ணியாகவே இருந்தாலும் தன் தாயை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் செல்லும் தன் மகனை நினைத்து பெருமையாக உள்ளே சென்றார் சரஸ்வதி.

இவனை கண்டதும் தீரன் ஓடி வந்து கட்டிக் கொள்ள, தீப்தி வந்து, “மாமா. தம்பி எழுந்துக்கவே மாட்றான். வாங்க எழுப்பலாம்” என அழைத்தாள். “அவன் சின்னக் குழந்தைல்ல. அதான். தூங்கட்டும். நாம பங்சன் ஆரம்பிச்சதும் எழுப்பலாம்” என அவளிடம் பதில் கூறிய அஸ்வின் அவர்களோடு இணைந்து விளையாட ஆரம்பித்தான்.

சிறு குழந்தைகளுக்கு நிகராக அவன் விளையாடுவதை அங்கிருந்த பலரின் கண்கள் சுவாரஸ்யமாக பார்க்க, அதில் சில யுவதிகளும் அடக்கம். அதே நேரம், அங்கு, தனது தமையனோடு வந்து இறங்கினாள் அனு. அஸ்வினை பார்த்து ரசித்தபடியே உள்ளே வந்தவள், மற்ற சிலரின் கண்களும் அவன் மேல் இருப்பதை கண்டு சுணங்கினாள்.

அதே உணர்வில் அவனிடம் பேசாமலே உள்ளே சென்று விட்டாள். தீபக் நேராக அஸ்வினிடம் வந்து அமர்ந்து கொள்ள அவனிடம், “அனு எங்கடா” எனக் கேட்டான் அஸ்வின். “இப்பதான் உள்ள போனாடா” எனவும் அவனும் எழுந்து உள்ளே சென்றான்.

அவன் உள்ளே வர அனுவோ ஏனோ அவனை தவிர்த்து விட்டு யாரிடமோ பேசிக் கொண்டே சென்று விட்டாள். அஸ்வினும், தான் வந்ததை கவனிக்கவில்லை என நினைத்து விட்டு விட சற்று நேரத்தில் விழா தொடங்கியது.

முதலில் ஐயர் வந்து புண்ணியதானம் செய்து சென்றுவிட, பின்பு பேர் வைக்கும் வைபவம் தொடங்க, “ஆருத்ரா. என்ன பேர்மா செலக்ட் பண்ணிருக்கிங்க. முதல்ல குழந்தை காதுல மூனு முறை சொல்லுங்க” என்றார் உறவினர் ஒருவர்.

ஆருவோ, குழந்தையை தூக்கி அஸ்வினிடம் கொடுத்தவள், “ம்ம் சொல்லு” என்றாள் அவனை பார்த்து. அனைவரும் ஆச்சர்யமாக பார்க்க, அஸ்வினும் திகைத்து, ‘என்றோ ஒருநாள், நான்தான் பேர் வைப்பேன். இல்லன்னா அவ்ளோதான் பாருங்க அண்ணி.’ என்று சொன்னதை நினைவில் வைத்து தன்னிடம் குழந்தையை கொடுப்பவளை பார்த்தான்.

“நீதான் என் பிள்ளைக்கு பேர் வைக்கனும்” என அழுத்தமாக கூற, அதன்பின் யோசியாது, நவநீத மோகனன்” என குழந்தையின் காதில் மூன்று முறை ஓத மற்றவர்களும் அதையே செய்தனர்.

ஆருத்ராவிற்கும், அஸ்வினுக்குமான உறவு அவ்வளவு ஆழமானது. சில நேரம் நண்பர்களாக, சில நேரம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாலும் ஒத்த வயதுடைய தன் கொழுந்தனை மூத்த மகனை போல தான் பார்க்கிறாள்.

இன்றுவரை சந்திரிகாவின் மீது அஸ்வினுக்கு இருக்கும் விருப்பம் தெரிந்தவள் அவள் மட்டுமே. அவள் மூலமாகதான் அஸ்வினுக்கு, சந்திரிகாவை அவனது பெற்றோர் பேசினர் என்பது இதுவரை அவனுக்கே தெரியாத ஒன்று.

அதன் பிறகு விழா சிறப்பாக நடந்து முடிய அனைவரும் கிளம்பினர். வந்ததில் இருந்து அனுவுடன் பேசவே இல்லையே என நினைத்து அவளிடம் பேச சென்றால் அவளோ, “அவசரமாக ஒரு அசைன்மென்ட் எழுத வேண்டும்.. சீக்கிரமா கிளம்பனும் அண்ணா” என தன் அண்ணனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதைக் கேட்டுக் கொண்டே வந்த அஸ்வின், “அவளுக்குதான் வேலை இருக்குனு சொல்றா இல்லடா. கூட்டிட்டு போ.” என அவர்களை அனுப்பி வைத்தான். ஆனால் அதுவும் அனுவுக்கு கோபமாக தான் வந்தது. அதே கோபத்தோடு அவள் கிளம்பி சென்றாள். அதன்பிறகு மற்றவர்களும் சாயங்காலம் வரை அங்கிருந்து விட்டு பிறகே கிளம்பி வீட்டிற்கு வந்தனர்.

               சந்திரிகா அலுவலகத்தில் இருக்க, அவளது அறைக்கு வந்தான் தரணி. “சந்து அஸ்வின் குடுத்த புராஜக்ட் பத்தி என்ன டிசைட் பண்ணிருக்க.” எனக் கேட்க, “நமக்கு இப்ப கவர்மெண்ட் புராஜக்ட் வேற இருக்கு உனக்கே தெரியும். அப்பறம் எப்படி” என பழைய கதையையே படித்தாள்.

“நீ மொதல்ல புராஜக்ட்டை பத்தி படிச்சு பார்த்தியா. படிக்காம சும்மா அதையே சொல்லிட்டு இருக்காத. இன்னும் ஒன் ஹவர்ல வரேன். அதுக்குள்ள படிக்கற.”  என மிரட்டலாக கூறியவன், “அதோட பில்டிங் ரெடியாகறத்துக்குள்ள நாம கொஞ்சம் ப்ரீ ஆகிடலாம். அதுவரை அசிஸ்டன்ஸ் குடுத்தா போதும்” என சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அதன்பிறகே அந்த ஃபைலை எடுத்து பார்த்தவள் படிக்க, படிக்க அதில் மூழ்கி போனாள். தரணி திரும்பி வரும்போதும் அந்த ஃபைலையே பார்த்துக் கொண்டிருக்க சிரித்தவாறே வந்து எதிரில் அமர்ந்தான்.

“என்ன மேடம் பண்றீங்க?” எனக் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்னால நம்பவே முடியல. இந்த புராஜக்ட் இப்பலாம் பண்ண முடியுமா?” என ஆச்சர்யமாக கேட்டாள். “நீ என்ன பில்டிங் ஆ கட்ட போற. அதுக்கு பினிஷிங்தானே. அதுக்கே இந்த பில்டப்பா.” என தரணி கேட்க, “ம்ம். நானும் பில்டிங்கை தான் கேட்டேன்.” என்றாள்.

“இப்ப சொல்லு. புராஜக்ட் எடுத்துக்கலாமா?” என தரணி கேட்க, அவளும் ஆவலோடு தலையாட்டினாள். “இதை நான் அஸ்வின்கிட்ட சொல்றேன்” என ஃபோனை எடுத்து அவனுக்கு அழைக்க, அவன் நாளை காலை அலுவலகத்திற்கு வருவதாக கூறி வைத்தான்.

அங்கோ சிரித்தபடியே ஃபோன் பேசிக் கொண்டு வரும் தனது நண்பனை தீபக் கேள்வியாக பார்க்க, அஸ்வினோ அவனை கட்டிக் கொண்டு, “சந்திரிகா புராஜக்ட்கு ஓகே சொல்லிட்டா” எனக் கூற, தீபக்கும் அதில் மகிழ்ந்தான்.

அன்றைய தினம், நாள் மகிழ்வோடு செல்ல இரவு நேரத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து நிலாவை ரசித்துக் கொண்டிருந்த சந்திரிகாவின் அருகில் வந்து அமர்ந்தாள் சஞ்சனா. “பௌர்ணமி நிலா சூப்பரா இருக்கு இல்லக்கா” என சஞ்சனா கேட்க, “ம்ம் ஆமா. சாப்டியா” என கேட்டாள் சந்திரிகா.

“ம்ம். அக்கா நல்ல மூட்ல இருக்கியா. உன்கிட்ட ஒன்னு கேட்கனும்” என சஞ்சனா கூற, “ம்ம் கேளு.” என்றாள் சந்திரிகா. “உன் லவ் ஸ்டோரியை கொஞ்சம் சொல்றியா” என சஞ்சனா கேட்க, அதிர்ச்சியோடு அவளை பார்த்தவள் சடாரென எழுந்து நின்றாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
1
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *