1,528 views
அந்த அதிகாலை இரண்டு மணிக்கு லேசாக மழை தூறிக் கொண்டிருக்க, தூக்க கலக்கத்தோடு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காரில் காத்திருந்தான் ஒருவன். அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தான் அஸ்வின். வந்தவனை வாவென்று கூட அழைக்காமல் காரில் இருந்தவன் பொரிய தொடங்கி விட்டான்.
“ஏண்டா, உனக்கு வேற நேரமே கிடைக்கலயா ஊருக்கு வரதுக்கு. இந்த ராத்திரில்ல என்னை ஏண்டா இப்படி அலைய விடுற?” எனக் கேட்டான் அஸ்வினின் தோழன் தீபக்ரூபன். அதற்கு அஸ்வின் “என்ன மச்சான் கோவிச்சுக்கிற, நான் இவ்ளோ நாள் இங்க இல்லாததால உன்ன பாக்கனும்னு எவ்ளோ ஆசையா வந்தேன். அதுமட்டுமா என்ன பாக்காம நீ ஏங்கி போயிருப்பனுதான் உன்னைய வர சொன்னேன்” என கூறி பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள, சட்டென சிரித்து விட்டான் தீபக்.
“டேய் போதும்டா. யாராவது பார்த்த தப்பா நினைச்சுக்க போறாங்க. இவருக்கு ஆசையாம், நான் ஏங்கி போய்ட்டனாம் வாடா” என முணுமுணுத்துக் கொண்டே வண்டியை கிளப்பினான் தீபக். பிறகு அஸ்வினே, “சாரி மச்சான் நேத்துதான் வேலை முடிஞ்சது. லாஸ்ட் டைம்ல புக் பண்ணவும் இந்த பிளைட் தான் கிடைச்சது” என்றான்.
“பரவாயில்லைடா விடு” என்றவன் நேராக தனது குடியிருப்பான அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றின் முன் காரை நிறுத்தினான். இது வழக்கம்போல நடப்பது தான். இரவு நேரங்களில் தாமதமாக வீட்டிற்கு சென்றால் தனது அன்னையின் தூக்கம் கெடும் என்று தாமதமாக நேர்ந்தால் தகவல் சொல்லி விட்டு தோழனது வீட்டிலே தங்கி விடுவான் அஸ்வின்.
அஸ்வினும், தீபக்கும் பள்ளிக் காலத்தில் இருந்தே தோழர்கள். தீபக்கின் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம். அவனது தந்தை அரசாங்க உத்யோகத்தில் இருக்க அடிக்கடி பணி மாறுதலால் வேறு வேறு ஊர்களுக்கு குடி பெயர்ந்து விடுவர். அப்படி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது ஒரு மாற்றலில் சென்னை வந்தனர். அப்போது புதிய பள்ளியில் தீபக்கிற்கு கிடைத்த நண்பன்தான் அஸ்வின்.
அதன்பிறகு இருவரும் ஒன்றாகவே பொறியியல் கல்லூரியில் சேர்ந்தனர். அந்த நேரத்தில் தந்தைக்கு சொந்த ஊருக்கே பணிமாறுதல் கிடைக்க, குடும்பத்தினரை மட்டும் அனுப்பி விட்டு இவன் இங்கேயே தங்கி விட்டான். கல்லூரிக் காலம் முடியும் முன்பே இருவரும் உற்றத் தோழர்கள் ஆகிவிட்டனர்.
படிப்பு முடிந்ததும் தீபக்கிற்கு கேம்பஸில் வேலை கிடைக்க அஸ்வினோ மேல்படிப்பை முடித்தான். அவர்கள் நட்பு மட்டும் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. தனியாக ஒரு வீடு எடுத்து தீபக் தங்கியிருக்க அடிக்கடி இங்கு வந்து விடுவான் அஸ்வின். வீட்டிற்கு வரவே மூன்று மணி ஆகிவிட்டதால் வந்தவுடன் களைப்பில் இருவரும் படுத்து விட்டனர்.
காலை ஒரு எட்டு மணியளவில் அஸ்வின் முழித்து பார்க்க, தீபக் அலுவலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். “டேய் எங்கடா கிளம்பற. இன்னைக்கு லீவ் போடலாம்ல.” என அஸ்வின் கேட்க, “இல்லடா ஒரு முக்கியமான கிளையண்ட் வராங்க. நான் கண்டிப்பா போகனும். காபி பிளாஸ்க்ல வச்சிருக்கேன். குடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பு. அம்மா எதிர்பார்ப்பாங்க.” என்றான் தீபக்.
“அதெல்லாம் மாட்டாங்க. ஏன்னா நான் வரேனு சொல்லவே இல்லையே” என அஸ்வின் கண் சிமிட்ட, “அதானே பார்த்தேன். இல்லன்னா இன்னேரம் எத்தனை கால் வந்துருக்கனுமே.” என்றவன் “சரிடா. டைம் ஆச்சு நான் வரேன்” என கிளம்பினான் தீபக்.
இவனும் எழுந்து குளித்து தயாராகி காபியை குடிக்க, கீழே கால்டாக்ஸி வெயிட் பண்ணுவதாக தகவல் வந்தது. தீபக் அப்படித்தான். எல்லா வேலைகளிலும் சரியாக இருப்பான். அதுவும் அஸ்வினுக்கு உள்ள தேவைகளை அவன் சொல்லாமலே நிறைவேற்றுவதில் வல்லவன்.
இவனிடம் வம்பு இழுப்பதற்காக மட்டுமே இவனிடம் சலித்துக் கொள்பவன் இவனுக்காக எதுவும் செய்ய தயாராக இருப்பான். நேற்றிரவு வருவதாக மட்டுமே சொல்லிருந்தான் அஸ்வின். தானாகவே ஏர்போர்ட் சென்று விட்டான் தீபக். அந்த அளவு இருவரின் நட்பு இழைந்திருந்தது.
அவனை நினைத்து இதழோரம் உதித்த சிரிப்போடு கிளம்பியவன் வீட்டிற்கு செல்ல அங்கு வீடு அமைதியாக இருந்தது. இவனும் சத்தம் போடாமல் ஹாலில் சென்று அமர, “மாமா.” என்ற அழைப்போடு உள்ளிருந்து ஓடி வந்தனர். தீரன் மற்றும் தீப்தி இருவரும். பின்னாடியே அவனது அக்கா காவ்யாவும், மாமா சந்துருவும் வர, பின்பு வீட்டினர் அனைவரும் வந்தனர்.
அப்பாவும், அண்ணனும் நலம் விசாரிக்க, அதற்குள் “ஏண்டா, உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா, வந்தத கூட சொல்லாம அங்க போயிருப்ப?” என தாய் சரஸ்வதி கேட்க, அவளது அக்காவோ, “அவனவன் இந்த வயசுல லவ்வர் கூட போய் தங்கறான்.. இவன் என்னவோ எப்ப பாரு அவனோடவே சுத்தறான்.. எனக்கென்னமோ டவுட்டா இருக்குமா.” என்றாள்.
“இவன் மேல வேணா டவுட் வரலாம். ஆனா அந்த பிள்ளை தங்கம். இப்ப கூட அவன்தானே நமக்கு சொன்னான்.” என்றார் சரஸ்வதி. ‘அடப்பாவி… அங்க நல்லவன் மாதிரி பேசிட்டு இப்படியாடா போட்டுக் குடுப்ப‘ என நினைத்தவன், ‘ஒரு சர்ப்ரைஸ் குடுக்க முடியுதாடா.’ என மனதுக்குள் தன்னையே நொந்துக் கொண்டு, ‘நல்லவேளை அண்ணி இங்கு இல்லை.. இருந்திருந்தால் அவரும் இவர்களோடு சேர்ந்திருப்பார்‘ என நினைத்தான்.
அவனது அண்ணி ஆருத்ராவிற்கு தற்போது பிரசவ சமயம் என்பதால் தாய் வீட்டிற்கு சென்றிருந்தாள். அதற்குள் தீப்தி, “மாமா நான் கேட்ட டால்தானே வாங்கிட்டு வந்தீங்க?” என்க. தீரனோ, “இல்ல மாமா நான் சொன்ன டால்தான் வாங்கிட்டு வந்திருப்பாங்க.” என கூறினான்.
அஸ்வின், “எல்லாருக்கும் வாங்கிட்டு வந்திருக்கேன்டா.” என்க. “சரி சரி வாங்க சாப்பிட்டு அப்பறம் எடுத்துக்கலாம் என சரஸ்வதி கூறவும், அனைவரும் உணவருந்த சென்றனர்.
பதினைந்து பேர் அமரக்கூடிய பெரிய டைனிங் டேபிள் அது. நீண்ட நாட்களுக்கு பின் அனைவரும் ஒன்றாக சாப்பிடுவதை பார்த்த சரஸ்வதிக்கு கண்கள் பனித்தன. தானே அனைவருக்கும் பரிமாற, அவரது மகிழ்ச்சியை புரிந்து கொண்ட தெய்வ விநாயகம் உள்ளம் மகிழ்ந்தார்.
அவருக்கும் குடும்பத்தினரோடு நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணம்தான். ஆனால் அவரது தொழில் அப்படி, மோட்டார் வாகனங்களுக்கான உதிரிப் பாகங்கள் செய்யும் தொழிற்சாலை இருக்க, ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால் பதித்திருந்தார். மகன்கள் வந்து பார்த்துக் கொண்டால் தான் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
சிரிப்பும், பேச்சுமாக சாப்பிட்டு முடிக்க, “சரி காவி நீ இங்கேயே இரு. மாமா ஆபிஸ் போய்ட்டு சாயங்காலம் வந்து கூட்டிட்டு போறேன்” என சந்துரு கிளம்பினான். அவன் சிறிய அளவில் ஸ்டார்ட்அப் எனும் தொழில் நிறுவனத்தை சாப்ட்வேர் துறையில் தொடங்கி நடத்தி வருகிறான்.
காவ்யா படித்த கல்லூரியில்தான் சந்துருவும் சீனியராக இருந்தான். அப்போது தொடங்கிய காதல் கைகூடி இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. சந்துரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அவனது பெற்றோர்கள் திருநெல்வேலி பக்கம் இருக்க, இவன் சென்னையிலே குடியேறி விட்டான் தொழிலுக்காக.
அஸ்வின் வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இவர்கள் வீடு உள்ளது. ஆரம்பத்தில் மருமகளையும் அவளது செழிப்பையும் பார்த்து கொஞ்சம் கலக்கத்தில் இருந்தவர்கள் அவளது குணத்தை கண்டு இப்போது முழுவதுமாக ஏற்றுக் கொண்டனர். தீரன், தீப்தி இருவரும் இரட்டைக் குழந்தைகள்.
பிறகு தந்தையும், தமையனும் இவனை ஓய்வு எடுக்கும்படி கூறிவிட்டு அலுவலகம் சென்றுவிட, இவனோ குழந்தைகளோடு சற்று நேரம் விளையாடி விட்டு அனைவரையும் கூட்டிக் கொண்டு அண்ணியை பார்க்க கிளம்பி விட்டான்.
ஆருத்ரா இவனுக்கு நல்லதொரு தோழியும் கூட. இவர்களை பார்த்ததும் ஆவலோடு வரவேற்றவள், “எப்படா வந்த” எனவும், “காலைலதான் அண்ணி.” என்றான் அஸ்வின். அதற்கு அவள் “இல்லையே.நடுராத்திரி வந்ததா நியூஸ் வந்தது.” என்றாள்.
“தெய்வமே. உங்களுக்கு தெரியாம இருக்குமா? மீ பாவம் விட்டுருங்க.” என்றவன் “அத்தை மாமா எங்க?” என்றவாறே அமர்ந்தான். “அவங்க இப்பதான் கோவிலுக்கு போனாங்க.” என்றவள் மாமியாரை நலம் விசாரித்தாள்.
பிறகு சற்று நேரம் பேசிவிட்டு கிளம்பறோம் எனவும், “இல்லத்தை மதியத்துக்கு இங்கயே சமைக்க சொல்லிட்டேன். சாப்பிட்டு போலாம்” என்றாள். “ஆபிஸ்க்கு குடுத்தனுப்பனும்ல” என சரஸ்வதி கூற, “இங்கிருந்தே குடுத்து விட்டுக்கலாம் நீங்க இருங்க” என்றவள் சலுகையாய் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
அதை கண்டு,”மாமியார் மருமகள் மாதிரியா இருக்கிங்க. ஒரு சண்டை பார்க்க முடியுதா?” என அஸ்வின் கேலி செய்ய, “உனக்கு ஏண்டா பொறாமை. நீ ஓரமா போய் விளையாடு” என இருவரும் துரத்தினர்.
பயந்த மாதிரி நடித்தாலும் மனதில் இது போலவே தனது மனைவியும், அன்னையும் இருக்க வேண்டுமென்ற ஆசையும் தோன்றியது. அப்போது கூடவே, சந்திரிகாவின் நினைவும் மின்னல் போல வந்து போனது…
பதிவுத்துறை அலுவலகத்தில் இறங்கிய சந்திரிகாவிற்கு ஏதேதோ எண்ணங்கள் தோன்ற, காதோரம் சூர்யா எனும் குரல் கிசுகிசுப்பாக கேட்க, சற்று நேரத்தில் அதை உதறியவள் உள்ளே சென்று அவர்கள் வேலையை முடித்துக் குடுத்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ் சந்திரிகா.” என்ற தான்யாவை முறைத்தவள், “ஒரு வாரம் ஆபிஸ் பக்கமே உன்னை பார்க்க கூடாது” என செல்லமாக மிரட்டி விட்டு சென்றாள். பின்பு திருமணம் இருந்த போதும் இரு நாட்கள் முன்பு வரை அலுவலகம் வந்தவள் ஆயிற்றே. அதனால்தான் இந்த செல்ல மிரட்டல்.
பின்பு அவள் மட்டும் கிளம்பி அலுவலகம் செல்ல அபிநய் இவளுக்காக காத்திருந்தவன் போல உள்ளே நுழைந்தான். “குட்மார்னிங் மேம்” என்றவன், சில கோப்புகளை கையெழுத்துக்காக வைத்தான். பிறகு அவளிடம், “மேடம் உங்களை பார்க்கனும்னு ஓரு அப்பாய்ண்ட்மென்ட் கேட்டுருக்காங்க.” என தயங்கியவாறு கூறினான்.
அவனை முறைத்தவள், “இது என்ன புதுசா என்கிட்ட கேட்கறீங்க அபி. முடியாதுன்னு நீங்களே சொல்ல வேண்டியது தானே” என்றாள் கண்டிப்பாக. “நான் சொல்லிட்டேன் மேம். ஆனா ரொம்ப பர்சனல். கண்டிப்பா பார்க்கனும். ஒன் வீக் ஆனாலும் பரவாயில்லை அரென்ஜ் பண்ணிக் குடுங்கன்னு கேட்கிறார் மேம்.” என்றான்.
“யாரு அவங்க?” என சந்திரிகா கேட்க, “ஏ வி எஸ் கம்பெனி ஓனர் தெய்வ விநாயகத்தோட சன் மிஸ்டர். அஸ்வின் கிருஷ்ணா” என்றான் அபி. அவன் பெயரை கேட்டதும் சற்று திகைப்புற்றவள் மனதில் நேற்று இரவு வீட்டில் நடந்தது நினைவுக்கு வந்தது.
“என்ன விசயமா பார்க்கனும்னு சொன்னாரா?” எனக் கேட்க, “இல்ல மேம் பர்சனல்னு சொன்னார்” என்றான் அபிநய். “ஓகே நான் யோசிச்சு இரண்டு நாள்ல சொல்றேன். அதுவரைக்கும் நீங்க எதும் சொல்ல வேணாம்” என்றவள் அதன்பின் வேலையில் மூழ்கினாள். ஆனாலும் அன்றைய தினம் என்னவோ போலவே அவளுக்கு நகர்ந்தது.