676 views

            

                    காலையிலே படுக்கையில் இருந்து எழத்தோன்றாமல் நினைவுகளோடு சிக்கி தவித்தாள் சந்திரிகா. “சூர்யா என்ன விட்டுட்டு போய்ட மாட்டல்ல?” என சத்யா கேட்க, “உன்னை விட்டுட்டு போய் நான் என்ன பண்ண முடியும். உனக்கு எப்பவும் சந்தேகம்தானா” என சந்திரிகா திருப்பிக் கேட்க, “இல்ல நீதானே சொன்ன உங்கப்பா ஒத்துக்கறது கஷ்டம்னு. அதான் கேட்டேன். நான் சின்ன வயசில இருந்து நிறைய கஷ்டத்தை பாத்துட்டேன். நீயும் இல்லன்னா நான் என்ன பண்றது” என கேட்டவன் அவள் கண்களுக்கு வளர்ந்த குழந்தையாக தோன்றினான்.

“அப்படில்லாம் உன்னை விட்டுட்டு நானும் போக மாட்டேன். நீயும் போக மாட்ட சரியா” என மடியில் சாய்த்து சமாதானம் சொன்னாள் சந்திரிகா. அது நினைவில் வர சந்திரிகாவின் விழிகள் கண்ணீரால் நனைந்தது. இரண்டுமே நடந்து விட்டதே. என்ன செய்வது. கடந்த ஒன்பது வருடங்களில் அவன் நினைவோடு வாழ பழகி கொண்டவள் தான்.

ஆனால் இப்போது மீண்டும் கண் முன்னே வர காரணம்தான் என்ன. வந்தவன் தனியே இருந்திருந்தால் அவனிடம் மீண்டும் பேச முயன்றிப்பாளோ என்னவோ. குடும்பமாக அல்லவா இருக்கிறான். உயிரோடு இருந்தாலே போதும் என அவனை விட்டு ஓடியவள்தான். இன்று ஏனோ முடியவில்லை.

அழுகையில் கரைந்தவளை கதவு தட்டும் சத்தம் கலைத்தது. முகத்தை அடித்து கழுவியவள் கதவை திறக்க வெளியில் சஞ்சனா, தீக்ஷிதாவுடன் நின்றிருந்தாள். சந்திரிகாவின் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தவள், “தூங்கிட்டு இருந்தியாக்கா, டிஸ்டர்ப் பண்ணிட்டனா?” எனக் கேட்டாள்.

“இல்லடா எழுந்துட்டேன். ஆமா நீ இவ்ளோ சீக்கிரம் ரெடி ஆகிட்ட.” என்றவள் தீக்ஷிதாவை வாரி கன்னத்தில் முத்தமிட்டாள். பதிலுக்கு அவளும் முத்தம் வைத்தவள், “அத்தை இன்னைக்கு சஞ்சு அத்தையும் வேலைக்கு போகுதாம். அப்பறம் என்கூட யார் விளையாடுவா. போ வேணாம் சொல்லு” என்றாள் தன் மழலை குரலில்.

அப்போதுதான் சஞ்சனா நேற்றிரவே கூறியது நினைவுக்கு வந்தது. “அக்கா நாளைல்ல இருந்து டியூட்டில ஜாயின் பண்ணனும்” என்க, “ஏண்டா இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்கலாம்ல” என சந்திரிகா கேட்க, “போதும்க்கா. ரெஸ்ட் எடுத்தது. எல்லா இடமும் சுத்தியாச்சு. இதுக்கு மேல வீட்ல இருந்தா எனக்கே போர் அடிச்சிடும். கனடால இருந்து வந்ததுமே ஜாயின் பண்ணிக்கலாம் சொன்னாங்க. நானே ஆல்ரெடி லேட்” எனவும் இவளும் சரி என்றிருந்தாள்.

“சாரிடி மறந்துட்டேன்” என்றவள், “இப்பவே போகனுமா?” எனக் கேட்க. “நோ பிராப்ளம்கா நீ ரெஸ்ட் எடு நான் தரணி கூட போய்க்கறேன் என்றாள். அதற்குள் தரணியும் அங்கே வந்திருந்தான். அவனிடம் சந்திரிகா, “சாரி தரணி ரொம்ப வேலை வைக்கறனோ?” என்க. “ஹேய் என்னாச்சு உனக்கு. இதெல்லாம் ஒரு வேலையா” என்றான் தரணி.

சந்திரிகா, “அதுக்கில்ல இன்னைக்கு மட்டும் ஆபிஸ் பாத்துக்கறியா. எனக்கு கொஞ்சம் பீவரிஷ்ஷா இருக்கு” எனவும் பதறியவன், “ஹாஸ்பிட்டல் போலாமா?” எனக் கேட்டான். “அதெல்லாம் தேவை இல்ல ரெஸ்ட் எடுத்தா போதும்” என்றாள் சந்திரிகா.

சஞ்சனா, “மனசை போட்டு குழப்பிக்காதக்கா. தூங்கி எழு சரியாகிடும்” என சொல்ல, சந்திரிகா குழந்தையிடம், “குட்டிம்மா. இன்னைக்கு என்னோட நீ விளையாடுவியாம். சஞ்சு அத்தை வேலைக்கு போகட்டும் பாய் சொல்லு” என்க, அவளும் சிரித்தவாறே வழியனுப்ப சந்திரிகாவிடமும் விடைபெற்று இருவரும் கிளம்பினர்.

      அசோக் பணிக்கு கிளம்பும் முன்னே பவித்ராவை சேர்த்திருந்த மருத்துவமனைக்கு சென்றிருந்தான். மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனாக சிறுமி உயிர் பிழைத்திருக்க அவளது பெற்றோர்கள் இவன் வந்ததும் நன்றி கூறினர். இப்போது சற்று தெளிவாக இருக்கவும் அசோக், “நீங்க வீட்ல இருந்தும் எப்படி இந்த மாதிரி” என அவளை பெற்றவளிடம் கேட்டான்.

“இல்ல சார். ரொம்ப சேப்ட்டியான அப்பார்ட்மெண்ட் எங்களது. எவ்வளவோ நாள் வெளில விளையாட போயிருக்கா. ஒருமுறை கூட எந்த பிரச்சனையும் வந்ததில்ல. வெளி ஆளுங்க யாரையும் உள்ள அலோ பண்ண மாட்டாங்க. நேத்து திடிருனு லீவ் போட்டதால ஒரு அர்ஜன்ட் மீட்டிங் அட்டென் பண்ற மாதிரி ஆகிடுச்சு.

அதான் டிவி பார்க்க சொல்லிட்டு போனேன். வந்து பார்த்தா காணோம். பக்கத்துல தான் இருப்பானு நினைச்சு தேடினேன் சார். ஆனா இப்படி ஆகும்னு நினைக்கல” என்றவள் அழ, அவள் கணவர் சமாதானப்படுத்தி, “என் பொண்ணை யார் இப்படி பண்ணதுனு கண்டுபிடிச்சிருங்க சார். அவனை கொல்லனும்” என்றார்.

அசோக், “ஓகே சார். எமோஷனல் ஆகாதிங்க. கண்டுபிடிச்சர்லாம். பாப்பாவை பாத்திங்களா?” எனக் கேட்க, “இன்னும் இல்ல சார் கண்முழிக்கலன்னு சொன்னாங்க.” என்றனர். “பயப்படாதீங்க. சரி ஆகிடுவா. முழிச்சா எப்படி பிகேவ் பண்றானு பாத்திட்டு முடிவு பண்ணிக்கலாம்” என்றவன்,

“தப்பா எடுத்துக்காதிங்க. பாப்பாக்கு ஏதாவது தெரிஞ்சிருந்தா. அது நமக்கு குற்றவாளியை கண்டுபிடிக்க ரொம்ப உதவியா இருக்கும். ஏதாவது சொன்னா சொல்றீங்களா?” என்றான் அசோக். “கண்டிப்பா சார்” என அவர் கூற, “ஓகே பாத்துக்கோங்க” என்றவன் சண்முகத்தை அழைத்துக் கொண்டு புதிதாக ஒரு லேடி போலீஸை அங்கிருக்க சொல்லிவிட்டு கிளம்பினான்.

      இங்கு அலுவலகத்திற்கு சென்ற சத்யேந்திரனோ ஒரு வழியாக அனைத்து தொழிலதிபர்களையும் பார்த்து முடித்திருக்க, எல்லோரை பற்றியும் ஓரளவு அறிய முடிந்தது. அதன்பிறகு சற்று நேரம் மனுக்கள் பிரிவுக்கு சென்றிருக்க முன்பை விட இப்போது மனுக்கள் அதிகரித்து இருந்தது.

தனது உதவியாளரை அழைத்தவன், “என்னாச்சு. ஏன் இவ்ளோ பெண்டிங் இருக்கு. என்னதான் பிராப்ளம்” எனக் கேட்க, “எல்லாம் உங்களாலதான் சார்” என்றார் அவர். அவன் புரியாமல் பார்க்க, “இல்ல சார் முன்னாடில்லாம் மனு குடுத்தாலும் பெரிசா ஆக்சன் எடுக்க மாட்டாங்கன்னு ஒரு எண்ணம் இருந்தது.

ஆனா இப்ப நீங்க உடனடியாக சின்ன சின்ன பிரச்சனைல்லாம் சரி பண்ணி குடுக்கிறீங்கன்னு தெரிஞ்சதுல மனு கொடுக்க மக்கள் ஆர்வமா வராங்க அதுதான் விசயம்” என்றார். “ஓ ஓகே ஓகே. ஓகே டைம் எடுத்துக்கோங்க. ஆனா ரொம்ப டிலே பண்ண வேண்டாம்” என்றவன், உள்ளே வந்து பைல் செக் செய்தான்.

அதில் வந்த ஒரு மனு பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்டதாக இருந்தது. தன்னிடம் வசதி இல்லாத காரணத்தால் தன் மகளை தனியார் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என அரசு பள்ளியில் சேர்த்ததாகவும், அங்கு பாடம் படிப்பதில் பிரச்சனை இல்லைதான் ஆனால் கழிவறை வசதி சரியாக இல்லாததால் உடலில் பிரச்சனை ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.

இதுவரை பள்ளியில் ஆசிரியர் சரி இல்லை. பாடம் நடத்துவதில்லை, இது போன்ற புகார்கள்தான் வரும். ஆனால் இது சற்று வித்தியாசமாக பட, உடனடியாக இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என நினைத்தவன், தனது உதவியாளர் இருவரோடு அந்த பள்ளிக்கு சென்றான்.

அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த தலைமை ஆசிரியர் இவரை வரவேற்று “எதிர்பார்க்கவே இல்லை சார் சர்ப்ரைஸ் விசிட். ஏதாவது கம்ப்ளைண்ட் ஆ சார்” எனக் கேட்க, “அதெல்லாம் இல்ல சும்மாதான்” என்றவன் அந்த பள்ளியை சுற்றி பார்த்தபோது கழிவறை மட்டுமல்ல கட்டிடமே சற்று பழையதாக தான் இருந்தது.

பிறகு தலைமை ஆசிரியரிடம் விவரம் கேட்க, “ஆமா சார். கவர்மெண்ட் ஃபண்ட் அலர்ட் பண்றதா சொல்றாங்க. ஆனா முழுசா கைக்கு வரதில்ல. அந்த அமொண்ட்டும் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷனுக்கெல்லாம் பத்தாது. சரியான வசதிகள் இல்லாததால சேர்க்கை எண்ணிக்கை குறைஞ்சுகிட்டே இருக்கு.

மக்களும் இப்பெல்லாம் கல்வியோட தரத்தை விட பள்ளிக்கட்டிடங்களின் தரத்தை தான் பெரிசா பாக்கறாங்க. இத்தனைக்கும் நம்ப ஸ்கூல்ல படிக்கற பிள்ளைகள் நல்ல மார்க்தான் வாங்கறாங்க. ஆனா அவங்க தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதை தான் கௌரவமாக பார்க்கிறார்கள்” என கூறினார்.

இதையெல்லாம் கேட்டவனுக்கு கஷ்டமாக இருந்தது. படிப்பை முழுவதும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவன் அவன். ஆனா இது போன்ற காரணங்களுக்காக தனியார் பள்ளிகளை நாடுவதை குறைக்க முடியுமா என பார்க்க வேண்டும் என நினைத்தான்.

தனியார் பள்ளிகளில் வசதிகள் அதிகம் இருந்தாலும் அத்தனைக்கும் பணம் பிரதானம் அல்லவா. பணம் இருப்பவர்கள் சேர்ப்பதை பற்றி பரவாயில்லை. ஏழை மக்களும் இந்த பகட்டை விரும்புவதை என்ன செய்வது என நினைத்துக் கொண்டவன். தன்னாலான உதவிகளை செய்வதாக அவரிடம் கூறி அங்கிருந்து விடைபெற்றான். அதன்பின்பு அந்த பள்ளிக்கு ஏதாவது நிலுவைத் தொகை இருந்தால் அதை உடனே வழங்க ஆவண செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தான்.

அப்போது இது போல எத்தனை பள்ளிகள் இருக்கும் என தெரியவில்லையே என நினைத்தவன், அது குறித்த சர்வே ஒன்றை எடுக்க வேண்டுமென குறித்துக் கொண்டான்.  பிறகு நன்றாக யோசித்தில் அவனுக்கு ஒரு புதிய யோசனை ஒன்று தோன்றியது. அதை செயல்படுத்த எண்ணி முதல்கட்ட பணிகளை முடுக்கி விட்டான்.

              அனுப்பிரியாவிற்கு கல்லூரி தொடங்கி சில நாட்களே ஆகிருக்க, தினமும் தீபக்கே கல்லூரிக்கு வந்து விடுவான். சாயங்காலம் திரும்ப அழைத்து செல்வான். இன்றும் கல்லூரி முடிந்து அவனுக்காக காத்திருக்க, ஒரு கார் வந்து அவள் அருகில் நின்றது. முன் எச்சரிக்கையாக அவள் சற்று பின் நகர காரில் இருந்து இறங்கியதோ அஸ்வின்.

கூலிங்கிளாஸை கழற்றியபடி ஸ்டைலாக அவளிடம் வந்தவன், “ஹாய் அனு பயந்துட்டியா? நானேதான்” என்றான். அனு, “ஓ நான் பயந்ததை நீங்க பார்த்திங்க” எனக் கேட்க, “பயப்படலயா. சரி ஓகே வா போகலாம்” என அழைத்தான் அஸ்வின். அவளோ காரின் உள்ளே பார்த்து விட்டு “அண்ணா வரலயா?” எனக் கேட்டாள்.

அஸ்வின், “இல்ல அவனுக்கு ஒரு முக்கியமான வேலை அதான் நான் வந்தேன். வா ஏறு” எனவும் மறுக்காமல் ஏறி அமர… காரை செலுத்தினான். அப்போது அவனது ஃபோன் அடிக்க, திரையில் அன்னையின் எண் தெரிந்தது. எடுத்ததும், “அஸ்வின் எங்கடா இருக்க” என பதட்டத்துடன் அவரது குரல் ஒலிக்க, “டிரைவிங்ல இருக்கேன்மா. என்னாச்சு. ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு?” எனக் கேட்டான்.

அவரோ,”உடனே மியாட் ஆஸ்பிட்டல் வாடா” என்க. “யாருக்கு, என்னாச்சும்மா?” என இவன் கேட்டபோதே லைன் கட்டாகி இருந்தது. என்னவென்று தெரியாமல் ஒரு நிமிடம் யோசிக்க, அனுதான், “காரை எடுங்க அஸ்வின் போகலாம்” என்றாள். பிறகு காரை விரட்டியவன் அவளை கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தான். உள்ளே சென்றவன் அங்கிருந்த அனைவரையும் பார்த்து திகைத்து நின்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *