674 views

 

              அசோக் ஸ்பாட்டுக்கு சென்றிருந்த போது அங்கு கூட்டம் கூடியிருந்தது. இன்ஸ்பெக்டரிடம் சென்றவன் “என்னாச்சு சார்?” எனக் கேட்க, “இவங்க பொண்ணு தான் சார்” என ஒரு பெண்ணை கைகாட்டி. “ஹஸ்பண்ட் ஆபிஸ் போய்ட்டாங்களாம். இவங்க ஏதோ ஆபிஸ் மீட்டிங்ல கான்கால்ல இருந்திருக்காங்க. பொண்ணு ஹால்ல டிவி பார்த்துட்டு இருந்திருக்கா. கொஞ்ச நேரத்தில பார்த்தா பொண்ண காணோம்னு சொல்றாங்க சார்” என தகவல் குடுத்தார்.

மற்றவர்களை கலைந்து போக சொல்லியவன், சிறுமியின் அன்னையிடம் சென்று “என்ன வயசு உங்க பெண்ணுக்கு?” என கேட்க, “ஒன்பது வயசு சார்.” என்றார் அவர். அசோக், “இன்னைக்கு ஸ்கூல் இல்லையா?” எனவும், “இருக்கு சார். ஆனா அவளுக்கு கொஞ்சம் பீவர் அதான் லீவ் போட்டுட்டா.” என்றார் அவர்.

“உங்க ஹஸ்பண்ட் எங்க?” எனக் கேட்டான் அசோக். “அவர் வந்திட்டு இருக்கார் சார்” என பதில் வர, “சரி எவ்வளவு நேரம் ஆச்சு காணாம போய்?” எனக் கேட்கவும், “ஒரு டூ ஹவர்ஸ் இருக்கும் சார்” என்க, “வீட்ட உள்ள பூட்டலயா?” எனக் கேட்டான் அசோக். “இல்ல சார். இது அப்பார்ட்மெண்ட் சேப்தான் அதனால பூட்டல. அப்பறம் நாங்க இரண்டு பேரும் வீட்ல இருந்தோம் அதான்” என்றார் அவர்.

அசோக், “நீங்க எங்க வொர்க் பண்றீங்க?” எனக் கேட்க, “நான் ஐடில இருக்கேன் சார். இவளுக்கு பீவரா இருக்கவும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போலாம்னு தான் லீவ் போட்டேன். அர்ஜன்ட்டா ஒரு மீட்டிங் இருந்தது. அதான் முடிச்சிட்டு போலாம்னு சொல்லிட்டு அவள டிவி பார்க்க சொன்னேன்” என்றார்.

“ஓகே” என்றவன் “செக்யூரிட்டிகிட்ட விசாரிச்சிங்களா?” என இன்ஸ்பெக்டரிடம் கேட்க, “விசாரிச்சிட்டேன் சார். ஆனா அவர் அப்பார்ட்மென்ட் ஆளுங்கள தவிர யாருமே வரலன்னு சொல்றாரு” எனவும், “சுத்தி தேடி பார்த்திங்களா?” எனக் கேட்டான். “பார்த்துட்டோம் சார். இன்னும் தேடிட்டு இருக்காங்க” என்றவுடன் “அப்ப அப்பார்ட்மெண்ட்ல ஆபிஸ் போனவங்க தவிர எல்லாரும் இங்க இருக்காங்களான்னு செக் பண்ணுங்க” என்ற போது அவன் கண்களில் பின்னால் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் பில்டிங் தெரிந்தது.

அசோக், “அங்க பார்த்திங்களா.” எனவும், அவரோ, “இல்ல சார் அது சுத்தி முள்வேலி இருக்கு. சோ பாப்பா அங்க போயிருக்க சான்ஸ் இல்ல” என்றவுடன் “அது என்ன பில்டிங்” என கேட்க, “அதுவும் இந்த அப்பார்ட்மெண்ட்ல வர பில்டிங்தான் சார். ஆனா ஏதோ லீகலா இல்லன்னு கேஸ் போயிட்டு இருக்கு சோ, ஸ்டாப் பண்ணிருக்காங்க.” என கூறினார் அந்த சிறுமியின் அன்னை.

“ஓஓ” என்றவனது கால்கள் அந்த பில்டிங்கை நோக்கி நகர, சுற்றிலும் முள்வேலி இருந்தது நன்றாகவே தெரிந்தது. இருப்பினும் ஏதோ ஒன்று அவனை உந்த, சுற்றி நடந்தவனுக்கு ஓரிடத்தில் மட்டும் கொஞ்சம் இடைவெளி இருந்தார் போல தோன்ற உள்ளே சென்று பார்த்தான். ஒரே ஆள் நுழையும் அளவு இடமிருக்க, “கான்ஸ்டபிள்ஸ் கமான் ஹியர்” என சப்தமிட்டுவிட்டு உள்ளே சென்றான் அசோக்.

 பிறகு அனைவரும் சென்று தேட கீழே ஒருவரும் இல்லை. பிறகு மூன்றாவது மாடியில் இருந்து ஒரு முனகல் சத்தம் வர சென்று பார்த்தால், குற்றுயிறாக ரத்தம் தோய்ந்த ஆடையோடு இருந்தாள் ஒரு சிறுமி. உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வைத்தான்.

அப்பார்ட்மெண்ட்க்கு வந்தவன் மீடியாக்கு நியூஸ் போக கூடாது என எச்சரித்து விட்டு வெளியில் வந்தான். ஆனால் அவன் நினைத்தால் போதுமா? அவன் கமிஷனர் அலுவலகம் வருவதற்குள் மீடியாக்கள், ‘போரூரில் ஒரு சிறுமி உயிருக்கு போராடிய நிலையில் கண்டெடுப்பு. முன் விரோதமா? என்ன காரணம். துரிதமாக செயல்பட்ட காவல்துறை.’ என செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

உள்ளே நுழைந்ததும் கமிஷ்னர், “பரவாயில்லையே வேலைல்ல இவ்வளவு ஷார்ப்பா இருக்க” என பாராட்ட, ‘டிரக்ஸ் கேஸை சொல்கிறாரோ.’ என நினைத்து, ‘எப்படியும் மொத்தமா எவ்ளோ கடத்துனானுங்களோ தெரில. அரை கிலோக்கு பாராட்டு வேற’ என நினைத்தான். பிறகுதான் தெரிந்தது சிறுமி விவகாரம் என. உடனே “இடியட்” என திட்டிக் கொண்டு “நான் ஹாஸ்பிட்டல் வர போய்ட்டு வந்தர்றேன் சார்” என வெளியே வந்தான்.

இன்ஸ்பெக்டரிடம் ஃபோன் செய்து எந்த மருத்துவமனை எனக் கேட்டவன், “அங்க மீடியா பீப்பிள் இருக்காங்களா?” எனவும் கேட்டான். “இல்ல சார் எனவும், ஓகே நான் பார்த்துக்கறேன்.” மேலும் சில விவரங்கள் கூறி விட்டு வெளியில் வர, அதற்குள் சிலர் அவனை பேட்டி எடுக்க வந்தனர்.

“எப்படி சார் கரெக்டா கண்டுபிடிச்சிங்க. எதுனால இப்படி நடந்தது” என கேள்விகள் பறக்க, “ஒரு நிமிஷம் இருங்க. பொண்ணை காணோம்னு கம்ப்ளெய்ண்ட் குடுத்தாங்க. நாங்க சர்ச் பண்ணோம் அவ்ளோதான். விசாரணை இனிமேல்தான் ஆரம்பிக்கனும். தகவல் தெரிஞ்சா உடனே சொல்றோம் வழியை விடுங்க.” என்றான் அமைதியாகவே.

“பொண்ணு பேர் என்ன சார்.  அவங்கப்பாம்மா என்ன பண்றாங்க?” என மீண்டும் ஒருவர் கேட்க, அசோக், “இப்ப அதை தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க?” எனக் கேட்க, “நியூஸ் சார். மக்களுக்கு உண்மை தெரியனும்” என வீரமாக ஒருவர் பதில் கொடுத்தார். அவரை முறைத்தவன், “ஓகோ, இன்னும் எனக்கே தெரியாது விசாரிச்சு உங்களுக்கு சொல்றேன்” என கோபமாக கிளம்பி சென்றான்.

செல்லும் வழியில் சத்யா அவனுக்கு ஃபோன் செய்து விவரம் கேட்க, “உனக்கும் தெரிஞ்சிருச்சா.” என கோபப்பட, “ஏண்டா. எனிதிங் சீரியஸ்” எனக் கேட்டான் சத்யா. அசோக், “ஒரு சின்ன பொண்ணுடா அது. யார் இப்படி பண்ணாங்கன்னு தெரியல. அதை பத்தி விசாரிக்கனும். அதுக்கு முன்னாடி அந்த பொண்ணை காப்பாத்தனும். ஆனா இவங்களுக்கு அந்த பொண்ணோட ஜாதகமே வேணுமாம். ப்யூச்சர்ல அந்த பொண்ணு மனசு எவ்வளவு பாடுபடும் புரிஞ்சுக்கவே மாட்றாங்க.” எனக் கூறியவன் “இதை வேற மாதிரிதான் டீல் பண்ணனும்” என்றான்.

அப்போது சத்யா, “நீ எங்க இருக்க” எனக் கேட்க, அசோக், “ஹாஸ்பிட்டல்தான் போய்ட்டு இருக்கேன்” என்க, “எந்த ஆஸ்பிட்டல்னு சொல்லிட்டியா..?” எனக் கேட்டான் சத்யா. “இல்ல தெரியாதுனு நினைக்கறேன். அங்க யாரும் வரலனு கான்ஸ்டபிள் சொன்னார்” என்றான் அசோக்.

சத்யா, “அப்ப நீயும் அங்க போகாத. ஏன்னா உன்னை பாலோ பண்ணி வருவாங்க.” என்றவன் வேறு ஒரு திட்டத்தை கூறி. “நீ விஜயா ஆஸ்பிட்டலுக்கு வந்திரு” என்க. அது சரியென பட்டது அசோக்கிற்கு. சற்று நேரத்தில் மாவட்ட ஆட்சியரும், துணை கமிஷ்னரும் கூட்டாக பேட்டி என செய்தி வெளியானது.

“சொல்லுங்க சார். அந்த பொண்ணு எப்படி இருக்கா?” என ஒருவர் கேள்வி எழுப்ப சத்யா பதிலளித்தான். “நான் இப்பதான் பார்த்துட்டு வந்தேன். அடி பலமா இருக்கறதால டாக்டர்ஸ் பாத்துட்டு இருக்காங்க. எதுனாலும் அவங்க ரிப்போர்ட்ஸ் பாத்திட்டு தான் சொல்ல முடியும்.”

“எப்படி காணாம போனா?” என ஒருவர் கேட்க, அசோக், “வீட்ல இருந்துதான் காணாம போயிருக்கா” எனவும், “வீட்டுக்குள்ள இருக்க கூட சேப்டி இல்லன்னா சட்டம் ஒழுங்கு சரியா இல்லன்னு எடுத்துக்கலாமா?’ என ஒருவர் கேட்க, அசோக், “அந்த பொண்ணு காணாம போனப்ப அவங்க அம்மாவும் வீட்ல தான் இருந்திருக்காங்க. சோ, இதுக்கெல்லாம் காரணம் அவங்க அம்மாதானு சொல்லி நாங்க கேஸை குளோஸ் பண்ணிடலாமா?” என சூடாக கேட்டான்.

இன்னொரு பெண், “என்ன சார் இப்படி பேசறீங்க?” என கேட்க, “பின்ன என்ன சொல்ல சொல்றீங்க இன்னும் இன்சிடென்ட் நடந்து ஃபைவ் ஹவர்ஸ் கூட ஆகல. அதுக்குள்ள அந்த பொண்ணை உயிரோட கண்டுபிடிக்க முடிஞ்சதே பெரிய விசயம். முதல்ல அந்த பொண்ணு நல்லாகி வரனும்னு நினைங்க. அப்பறமா உங்க கடமையை பாருங்க.” என்றான் அசோக்.

“அப்ப எங்களுக்கு சமூக பொறுப்பு இல்லனு சொல்றீங்களா?” என ஒருவன் கேட்க, “கண்டிப்பா நிறையவே இருக்கு. ஆனா, உங்க வேலை அதை சில நேரங்களில் மறக்கடிச்சிடுது. அதை நான் நியாபகப்படுத்தறேன் அவ்வளவுதான். “சார் அந்த பொண்ணு பேரு?” என ஒருவர் கேட்க. “பவித்ரா” என்ற சத்யா,

“ஆனா அதுக்கு மேல கேட்காதீங்க. பர்சனல் டீடெயில்ஸ் வேணாமே. அந்த பொண்ணோட எதிர்காலத்தை கன்சிடர் பண்ணி ஊடகங்களும் பொறுப்போட நடந்துக்கனும்” என்றவன், “ஓகே, எங்க வொர்க்கையும் நாங்க பார்க்கனும். பிளீஸ் கிவ் சம் டைம் பிளீஸ்” என்றவர்கள் விடைபெற்று ஹாஸ்பிட்டலுக்கு உள்ளே வந்தனர்.

உள்ளே சென்றதும், “இந்த கேஸ் புல்லா நீயே ஹேண்டில் பண்றமாதிரி நான் ஆர்டர் குடுத்துட்டேன் சோ, நோ பிராப்ளம்” என்றான் சத்யா. “ரொம்ப தேங்க்ஸ்டா. அவன் யாருனு கண்டுபிடிக்கனும்” என்றான் அசோக். அப்போது சண்முகம் ஃபோன் செய்து, “சார் நீங்க இங்க வரலயா? ஏன் அங்க வைச்சு பேட்டி குடுத்திருக்கீங்க” எனக் கேட்டார்.

“இல்ல சண்முகம் அந்த பாப்பா அங்க இருக்கறது யாருக்கும் தெரிய வேண்டாம் அதான் இந்த பிளான்” என கூறியவன், “டாக்டர் என்ன சொன்னாங்க?” எனக் கேட்டான். “ரேப்தான் சார். ரொம்ப கொடூரமா நடந்திருக்கான்.” எனவும் கோபத்தில் கைமுஷ்டி இறுகியது அவனுக்கு. “ஓகே நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன். நீங்க கொஞ்சம் கூடவே இருந்து பார்த்துக்க முடியுமா?” எனக் கேட்டான்.

“அதுக்கென்ன சார் பாத்துக்கறேன்” என்றார் சண்முகம். அவரிடம் பேசிவிட்டு வர, சத்யா கிளம்பி விட, அவனோடு நடந்த உரையாடலை நினைவு கூர்ந்தான். சத்யாவிடம் ஹாஸ்பிட்டல் போறேன் என்றதும் அவனோ, “வேணாம்டா. அங்க போனா மீடியாவை கண்ட்ரோல் பண்ண முடியாது. பொண்ணு ஃபோட்டாவை ஏன் அவங்க குடும்பத்தையே போட்டு ஒரு வழி பண்ணிடுவாங்க. சம்பந்தப்பட்ட ஆள் மாட்ற வரை இதை கொஞ்சம் சீக்ரெட்டா ஹேண்டில் பண்ணலாம் “என்றான்.

“அதுக்கு இப்ப என்ன பண்றது?” என அசோக் கேட்க, “பொண்ணு பேர் கூட வெளில வரக்கூடாது. நாமளே ஒரு பேர் வைப்போம். அவங்க இந்த ஆஸ்பிட்டல்ல இருக்கற மாதிரி நம்ப வைக்கனும். பொண்ணோட பேமிலி அப்பறம் நம்பள தவிர விசயம் யாருக்கும் தெரியக் கூடாது. குற்றவாளியை கண்டுபிடிச்சுட்டு அப்பறமா மத்ததை யோசிக்கலாம்” என்றான் சத்யா.

அதனால்தான் திடீரென இந்த பேட்டி. எப்படியும் இரு நாட்கள் சென்றால் இந்த பரபரப்பு ஓய்ந்து விடும் என கணித்தனர். இப்போதைக்கு அந்த பெண்ணின் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அசோக்கின் எண்ணமாக இருந்தது. ஆனால் அவனே எதிர்பாராமல் இந்த வழக்கு அவனுக்கு பல திருப்பங்களை தருவதற்கு காத்திருப்பதை அவன் அறியவில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
2
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *