729 views

          

 

                திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு நீதிமன்றம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அசோக் அரஸ்ட் செய்திருந்தவனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்திருந்தனர். விசாரணை தொடங்கியது. அரசு வழக்கறிஞர் போதை பொருள் கடத்திய வழக்கில் கைது செய்திருப்பதாக கூற, கைதாகி இருந்தவனோ அதை மறுத்தான்.

நீ போதை பொருள் கடத்திட்டு போறப்பதான் உன்னை போலீஸ் கைது பண்ணிருக்காங்க. இப்ப மறுத்தா என்ன அர்த்தம்என அரசு வழக்கறிஞர் கேட்க, “ஐயா நான் வேலை வெட்டி இல்லாதவனுங்க. ஒரு நாள் வேலை தேடி சுத்திட்டு இருந்தப்ப ஒருத்தர் வந்து நான் வேலை தரேன். இதை முடி. உனக்கு பத்தாயிரம் தரேனு சொன்னாருங்க.

நானும் பணத்துக்கு ஆசைப்பட்டு என்ன வேலைனு கேட்டப்ப, ஆம்புலன்ஸ் ஒன்னுல ஏற சொல்லி இதை பத்திரமா கொண்டு போய் இறக்கி வைச்சிட்டு வரனும் அவ்ளோதான்னு சொன்னாங்க. நானும் உள்ள என்ன இருக்குனு கேட்டேங்க. ஆனால் அது உனக்கு தேவையில்லைனு சொல்லிட்டாங்க.

எங்க போகனும்னு கேட்டதுக்கு அதெல்லாம் டிரைவர் பாத்துக்குவான் நீ கிளம்பனு ஏத்தி விட்டுட்டாங்க. வர்ற வழியிலே இரண்டு டிரைவர் மாறிட்டாங்க. அப்பதான் போலீஸ் என்ன பிடிச்சிட்டாங்க. பணத்துக்கு ஆசைப்பட்டு நான் வண்டில ஏறுனது தப்புதான் என்னை மன்னிச்சு விட்டுருங்க. உள்ள என்ன இருந்ததுனு கூட எனக்கு தெரியாதுஎன்றான் அவன்.

அரசு வழக்கறிஞரோ, “இவர் பொய் கூற வாய்ப்புள்ளது. ஒருவேளை உண்மையாக இருப்பினும் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை அடையாளம் காட்ட இவரால்தான் முடியும். எனவே காவல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்என கூற, பிடித்த போதை பொருட்களை நேரடியாக கோர்ட்டில் ஒப்படைத்து விட்டான் அசோகமித்திரன்.

பிறகு ஏழு நாட்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளுமாறு உத்தரவிட்டு நீதிபதி எழுந்து செல்ல நீதிமன்றம் கலைந்தது. அவனை காவல் வாகனத்தில் ஏற்றப் போக கோர்ட் வாசலிலே வைத்து அவனை யாரோ சுட்டு விட்டனர். சடாரென அவனை வண்டியில் ஏற்றி அசோக் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதற்குள் அவன் உயிர் பிரிந்திருந்தது.

இப்ப என்ன சார் பண்றது?” என காவலர் ஒருவர் கேட்க, “இனிமேல் என்ன பண்றது. அப்ப இவன் கோர்ட்ல சொன்னதெல்லாம் பொய். கண்டுபிடிக்கறேன் யாருனுஎன சொல்லி விட்டு அசோக் அலுவலகம் செல்ல அங்கோ கமிஷ்னர் அவனை பிடிபிடியென பிடித்து விட்டார்.

என்னய்யா இங்க நான் சீனியரா, நீ சீனியரா என்னை மீறி ஏதோ கிழிக்க போறேனு நெனச்சல்ல. பாத்தியா உன்னால ஒரு உயிர் போய்டுச்சு. இனிமேல் என்ன கேட்காம ஏதாவது பண்ணனும்னு நெனச்சா, நானே உனக்கு டிரான்ஸ்பர் ரெக்கமண்ட் பண்ண வேண்டி இருக்கும்என திட்டி வெளியே அனுப்பினார்.

வெளியே வந்தவன் சத்யாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை கூற,அப்ப அடுத்து என்ன பண்ண போற?” என அவன் கேட்க, அசோக், “அவன் உயிரோட இருந்திருந்தாலும் அவன்கிட்ட எதுவும் வாங்கியிருக்க முடியாதுடா. அந்த அளவுக்கு ப்ரெயின் வாஷ் பண்ணியிருக்காங்க. பார்க்கலாம் நெக்ஸ்ட் ஏதாவது க்ளூ கிடைக்காமலா போய்டும். எப்படியும் இவ்ளோ பிடிபட்டுருக்கறதால உடனே மறுபடி டிரை பண்ண மாட்டானுங்க.” என்றவனுக்கு, அடுத்த வாரமே இதைவிட இரு மடங்கு பொருள் கடத்தப்பட இருக்கிறது என தெரியவில்லை.

அதன்பிறகு மேலும் ஒரு வாரம் கடந்திருக்க அதற்குள் ஏற்கனவே முடிவு செய்திருந்தது படி தனது புதிய அலுவலகத்தை திறந்திருந்தான் அஸ்வின்.
பொறியியலில் சிவில் பிரிவினை எடுத்து படித்திருந்ததால் கட்டுமான துறையில் ஆர்வம் கொண்டு ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸை தான் ஸ்டார்ட் செய்திருக்கிறான்.

ஆனால் சற்று வித்தியாசமாக பாரம்பரிய கட்டிடங்கள் கட்டுவதை மட்டும் இலக்காக கொண்டிருந்தது அவனது நிறுவனம். தீபக்கிற்கு ஒரு மாத சம்பளத்தை முன் பணமாக கட்டி வேலையிலிருந்து விடுபட வைத்து விட்டான். அனுவிற்கும் அவன் பார்த்திருந்த கல்லூரி பிடித்துவிட, அங்கேயே சேர்ந்து கொண்டாள். இந்த வாரத்தில் இருந்து வகுப்புகள் தொடங்குவதாக இருந்தது.

சந்திரிகாவின் பணியில் எந்த தொய்வும் இல்லாமல் சென்று கொண்டிருக்க, பாவம் அவள்தான் சத்யாவை பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். தான் காதலித்திருந்தாலும் திருமணம் ஆன அவனை காதலாக பார்ப்பது தவறு என மூளை எடுத்துரைத்தாலும் அவன் மேல் காதல் கொண்ட மனமோ அவன் நினைவில் எப்போதும் போல உருகிக் கொண்டுதான் இருந்தது.

அவனது நிலை புரிந்த தரணியும் அவளை வேலைகளில் ஈடுபட வைத்து மனதை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான். சஞ்சனா இவ்வளவு நாள் பிரிந்திருந்த தனது தோழிகளோடு ஊர் சுற்றிக் கொண்டாடிக் கொண்டு பொழுதை கழித்துக் கொண்டிருந்தாள்.

திங்கள்கிழமை காலை, அசோக் காவல் நிலையத்தில் அமர்ந்திருக்க, ஒரு ஃபோன் கால் வந்தது. அதை எடுத்து, “அசோக் ஹியர்என்க, “என்னங்க சார். அடுத்து எங்கள எப்படி பிடிக்கறதுனு யோசிச்சிட்டு இருக்கிங்களா? உங்களுக்கு வேணா ஒரு க்ளு தரவா. இன்னைக்கு பனிரெண்டு மணிக்கு கிண்டில இருந்து மவுண்ட் ரோடுக்கு சரக்கு கைமாத்தறோம். முடிஞ்சா பிடிங்க பார்க்கலாம்என்றது ஒரு குரல்.

அசோக், “யார்டா நீ பேரை சொல்லுடாஎன்பதற்குள் லைன் கட்டாகி இருந்தது. அவனது உதவியாளர் சண்முகத்தை அழைத்து ஃபோனில் வந்த தகவலை கூற, அவர்சார் நாம அந்த கால் வந்த நம்பர டிரேஸ் பண்ணி பார்க்கலாமா?” எனக் கேட்டார். “இல்லல்ல. அவன் எப்படியும் திருட்டு சிம்ல தான் பேசியிருப்பான். நாம ஸ்பாட்டுக்கு போய்டலாம் நீங்க மட்டும் கூட வாங்க போதும்எனக் கூறி வெளியேறினான்.

அங்கு சென்றால் கிண்டி கத்திபாரா பாலத்தில் ஏகப்பட்ட பாதைகள் இருக்க அதை கண்டு மலைத்தவன் மவுண்ட் ரோடு சாலை அருகே சென்று நின்று கொண்டான். ஆனால் ஏகப்பட்ட வாகனங்கள் வந்து கொண்டிருக்க எல்லாவற்றையும் நிறுத்தி எப்படி சோதனை போடுவது என நொந்து கொள்ள அதற்குள் கமிஷ்னர் வேறு கால் செய்தார்.

எங்க இருக்கிங்க. என் ரூம்க்கு வாங்கஎன அழைக்க, அவன் இங்கு இருக்கும் விவரத்தை கூற,ஏன்யா, எவனாவது ஏதாவது கால் பண்ணி சொன்னா உடனே நம்பிட்டு அங்க போய்டுவியா. உன்னை ஏமாத்த யாராது அளந்து விட்டுருப்பாங்க. என்ன கேட்காம எதுவும் பண்ண கூடாதுனு சொல்லி இருக்கேன்லஎன்றவர்,

சரி போனது போய்ட்டிங்க. அப்படியே போரூர்ல ஒரு சின்ன பொண்ணை காணோம்னு தகவல் வந்திருக்கு. இன்ஸ்பெக்டர் ஏற்கனவே போயிருக்காரு. நீ என்னனு பாரு.” என வைத்து விட இவனுக்கு ஆத்திரமாக வந்தது. வேறு வழியில்லாமல் கிளம்பி அங்கு சென்றான். போகும் வழியில் மீண்டும் சஞ்சனாவை பார்த்தான்.

நடு ரோட்டில் நின்று கொண்டு ஒருவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் சஞ்சனா. விஷயம் இதுதான். தோழி ஒருத்திக்கு இன்று பிறந்தநாளாக இருக்க பெரிய மால் ஒன்றிற்கு படம் பார்க்க வந்திருந்தனர். சஞ்சனாவே கார் எடுத்து வந்திருக்க தோழிகள் அனைவரும் நன்கு ரசித்து படம் பார்த்துவிட்டு மாலிலே கேக் வெட்டி செலிபிரேட் செய்து விட்டு வெளியில் வந்தனர்.

மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்க, சிக்னலில் கார் நின்று கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. இவளுக்கு அருகே பைக்கில் இரு இளைஞர்கள் நின்று கொண்டிருக்க, அவர்களிடம் வந்தாள் ஊதுபத்தி விற்கும் சிறுமி ஒருத்தி, “அண்ணா ஊதுபத்தி வாங்கிகோங்கண்ணாஎனக் கேட்க,ஊதுபத்தி வச்சு நாங்க என்ன பூஜையா பண்ண போறோம். போம்மா அங்கிட்டுஎன்றனர் அவர்கள்.

அந்த சிறுமியோ மீண்டும் ஒருமுறை கேட்கவும், “ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா. ஏற்கனவே இந்த வெயில்ல சிக்னல் போட்டுட்டானு கடுப்புல இருக்கேன். நீ வேற. போடி அங்கிட்டு.என்றவன் அதோடு இல்லாமல் கன்னத்தில் ஒரு அறையும் குடுக்க சுருண்டு விழுந்தாள் அந்த சிறுமி.

அவன் திட்டும்போதே இறங்கி விட்ட சஞ்சனா அடிக்கவும் கோபம் கொண்டு சட்டென அவனது பைக் சாவியை கையில் எடுத்துக் கொண்டாள். பின் ஓடிச் சென்று அந்த சிறுமியை தூக்கி விட்டவள். “ரொம்ப வலிக்குதாம்மா?” எனக் கேட்டுக் கொண்டிருக்க, வண்டிக்காரன் இறங்கி வந்து, “ஏய் சாவிய குடுஎனவும், விட்டாள் அவன் கன்னத்தில் ஒரு அறை.

அப்போதுதான் அசோக் அவளை பார்த்தது. அவன் கீழே இறங்கி வர, “ஏய் மிஸ்டர் என்ன உனக்கு அவ்ளோ திமிரா. அப்படி சார் என்ன முக்கியமான வேலைக்கு போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?எனக் கேட்க, “நாங்க எங்க போனா உனக்கு என்ன? சாவியை குடுஎன்றான் அவன்.

சாவியை அவன் முன் சுழற்றியவள், “குடுக்காம எங்க போறேன். அதற்கு முன்னாடி அந்த பொண்ணுகிட்ட சாரி கேளுஎனவும், அவளை இளக்காரமாக பார்க்க, அவளோ பயத்தில் சஞ்சனாவிடம் ஒன்றினாள். “இந்த வயசுல அந்த பொண்ணு உழைச்சு வாழனும்னு நினைக்கறான்னா, எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பா. அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசுல சுகமா வாழ்ற உனக்கு அதோட அருமை என்ன தெரியும். சாரி கேளு மிஸ்டர்.” என்றாள் சஞ்சனா.

அதற்குள் அருகில் இருந்த மற்றொருவன், “டேய் மச்சி போலீஸ்டாஎன்க, சட்டென அவள் கையில் இருந்த சாவியை பறிக்க முயன்றான். அதற்குள் அவர்களை நெருங்கியிருந்த அசோக், அவன் கைகளை பற்றிஇங்க என்ன பிரச்சனை?எனக் கேட்டான். அசோக் அருகில் வந்ததுமே மற்றவன் ஓட்டம் பிடிக்க நினைக்க சண்முகம் அவனை மடக்கி விட்டார்.

சார் உங்கள பார்த்ததும் ஓட பார்க்கிறான் சார்என சண்முகம் சொல்ல, அவனையும் ஒரு கையில் பிடித்தவன் பைக்கை செக் செய்யுமாறு கூற, பைக்கில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. “சார் இதுவே அரைக்கிலோ இருக்கும் சார்என்றவர் உடனே லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோனும் செய்தார்.

அதற்கு முன்பே டிராபிக்கில் ஏதோ பிரச்சனை என அங்கிருந்த ஒருவர் ஃபோன் செய்திருக்க, சரியான நேரத்திற்கு போலீஸார் வந்து அவர்களை கூட்டிச் சென்றனர். சஞ்சனாவிடம் இருந்து பைக் சாவியை வாங்கி ஒரு காவலரிடம் கொடுத்தவன், “தேங்க்ஸ் மிஸ். சஞ்சனா. எந்த பிரச்சனையா இருந்தா எனக்கென்னனு இருக்காம சரியான நேரத்தில நீங்க கேட்ட கேள்வி, இப்ப குற்றவாளிகளை பிடிக்க உதவி பண்ணியிருக்கு. மிக்க நன்றிஎன்றான்.

ஏனோ இந்த முறை அவனை பார்த்து முகம் திருப்ப முடியவில்லை அவளால். காக்கி உடையில் கம்பீரமாக நின்றிருந்தவனை பார்க்கும் போது அழகனாவே தெரிந்தான். சஞ்சனா, “இட்ஸ் ஓகேஎன பதில் கொடுக்க, அந்த சிறு பெண்ணை அழைத்தவன், “உங்க வீடு எங்க இருக்கு?” எனக் கேட்க,இல்ல அவளை நான் கூட்டிட்டு போய் விட்டறேன். நீங்க ஏதோ வேலையாதானே போனீங்க கிளம்புங்கஎன்றவள் அந்த சிறுமியை காருக்கு கூட்டி வந்தாள்.

அவள் தோழிகளில் ஒருத்தி,ஹேய் இவர் நாம ஸ்ரேயா கல்யாணத்துல பார்த்தோமே ஏசிபி சார் அவர்தானே?” எனக் கேட்க,அவரேதாண்டிஎன்றாள் மற்றொருத்தி. “அவர் எப்ப இருந்து உனக்கு இவ்ளோ குளோஸ் ஆனாரு?” என சஞ்சனாவை பார்த்து கேட்க,அப்படில்லாம் ஒன்னுமில்லடிஎன்றாள் சஞ்சனா.

அப்பறம் எப்படி உன் பேர் தெரியும்?” என இன்னொருத்தி கேட்க, “அக்காவோட ஃப்ரண்டுடி எனக்கே ரீசன்டா தான் தெரியும். ச்ச் இப்ப கிளம்பலாமா?” என காரில் ஏற, மற்றவர்களும் ஏறினர். அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அவளை விட்டு விட்டு இவர்களும் வீடு திரும்பினர். காவல் வாகனத்தில் சென்று அமர்ந்த அசோக்கோ இதழில் புன்னகையோடு, “போரூர் போங்க சண்முகம்என்றான். ஆனால் மனம் முழுவதும் சஞ்சனாவிடம் நிலைத்திருந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
3
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *