2,079 views
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே!!!
அழகான அந்த காலை வேளையில் சென்னையின் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் அந்த நீலாங்கரை கடற்கரை அருகே ஒரு பங்களாவில் இருந்து பாடல் ஒலித்தது. அந்த வீட்டின் மூத்த மனிதர் தணிகாச்சலம் தனது கணீர் குரலில் பாடி பூஜை செய்ய அருகில் அவரது மனையாள் சந்திரமதியம்மாள் நின்றிருந்தார்.
வீட்டிலிருந்த மற்ற உறுப்பினர்கள் தங்களது அறைகளில் முடங்கியிருக்க, மாடிப்படிகளில் அரவம் கேட்டது. ஒரு நிமிடம் பூஜையை நிறுத்தி இருவரும் அங்கு பார்க்க.. இளம் நீல நிறத்தில் பாந்தமாக புடவை உடுத்தி அழகு மயிலென இறங்கி வந்தாள் அவர்களின் பேத்தி சூர்ய சந்திரிகா.
இருவரின் கண்களும் ஏக்கத்துடன் அவளை நோக்க. அவளோ அலட்சிய பாவனையில் ஒரு நொடி அவர்களை நோக்கி பின் சமையலறை பக்கம் சென்றாள். இவள் உள்ளே போகும்முன் வெளியில் வந்த அவள் அன்னை மல்லிகா, இவளை பார்த்து, “அழகா இருக்கடா” என நெட்டி முறிக்க. அதற்கு சந்திரிகா “ஒரு கல்யாணத்துக்கு போகனும்மா. அதான் சேரி கட்டினேன்.” என்றாள்.
மல்லிகா, “சரிடா சாப்பிடு வா” என டைனிங் ஹாலுக்கு அழைத்து சென்றார். சந்திரிகா, “ம்ம். அம்மா எனக்கு சாப்பாடு வேணாம். அங்க போய் சாப்பிடனும்” எனவும். “சரிமா. காபி குடி” என தன் அன்னை குடுக்க மறுக்காமல் வாங்கி பருகினாள். பிறகு அன்னையிடம் மட்டும் விடை பெற்றவள் வெளியே சென்று காரில் ஏறப்போக, “அத்தை!” என்ற குரல் அவளை தடுத்தது.
திரும்பியவள், அங்கு வந்த நான்கு வயதேயான தனது அண்ணன் மகள் தீக்ஷிதாவை வாரி அணைத்துக் கொண்டாள். வீட்டிலுள்ள அத்தனை பேர்களையும் ஒதுக்கி விட்டவளால் தாயையும் தன் மருமகளையும் விலக்க முடிந்ததில்லை.
ஓரிரு நிமிடங்கள் அவளை கொஞ்சியபின், “அத்தைக்கு வேலை இருக்குடா. நான் சாயங்காலம் வந்து உன்கூட விளையாடுறேன்” என அவளை கீழே இறக்கி விட்டு, குழந்தையை அவளிடம் அனுப்பி விட்டு சற்று தொலைவில் நின்றிருந்த தன் அண்ணியிடம் பேச தோன்றாதவளாக காரில் ஏறிக் கொண்டாள்.
இது வழக்கமாக நடக்கும் செயலாகி விட்டதால் ஒரு பெருமூச்சுடன் குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள் அவளது அண்ணி கீர்த்திஜா. அந்த பெரிய கேட் திறக்க, அவள் கார் சாலைகளில் பயணப்பட்டது. காரில் ஏறிய சற்று நேரத்தில் தனது மடிக் கணிணியை திறந்து வேலையில் கவனமானாள் சந்திரிகா. அரை மணி நேர பயணத்தின் முடிவில் கார் ஒரு கோவில் முன் நிற்க, இறங்கியவள் பரிசுப் பெட்டியுடன் உள்ளே நுழைந்தாள்.
இவளை கண்டதும் மணமேடையில் அமர்ந்திருந்தவள் எழுந்திருக்க விழியாலே அவளை அமர்த்தியவள், அவள் கண்ணில் படுமாறு நின்றுக் கொண்டாள். திருமணத்திற்கு இருபது நபர்களே வந்திருக்க அருகில் இருந்த உணவகத்தில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமணம் முடிந்து மற்றவர்கள் செல்ல இவள் இருவரையும் வாழ்த்தியவள் அவர்களுடன் இணைந்தே உணவருந்தினாள். அப்போது “மேடம்” என மணப்பெண் தான்யா அழைக்க, “இப்ப மேடம் இல்ல கால் மீ சந்திரிகா” என்றவள், “சொல்லு தான்யா.” என்றாள்.
“இல்ல கல்யாணத்தை இன்னைக்கே ரிஜிஸ்டர் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிருந்தோம்.” என இழுக்க, “ம்ம் பண்ணிடலாமே. அதற்கு என்ன?” எனக் கேட்டாள் சந்திரிகா. “இல்ல பவானி வரேனு சொல்லிருந்தா. சாட்சிக் கையெழுத்துக்கு. ஆனா அவ அப்பாக்கு திடீர்னு உடம்பு சரியில்லையாம் அதான் வரமுடியல்ல. நீங்க வர முடியுமா..?” என தயங்கி தயங்கி கேட்டாள்.
பின்பு தான்யா சந்திரிகாவின் பிஏ அல்லவா. அவளது வேலை பளு பற்றி தெரிந்ததால் வந்த தயக்கமது. ஆனால் சந்திரிகாவோ யோசிக்க கூட இல்லாமல் “இதுல என்ன இருக்கு போலாம்பா” என்றவள், அவர்களோடு வெளியில் வந்து தனது காரில் ஏறி அவர்கள் காரை பின் தொடருமாறு கூறிவிட்டு தனது வேலையை பார்க்க தொடங்கி விட்டாள்.
சூர்ய சந்திரிகா… சென்னையின் முக்கிய இளம் தொழிலதிபர்களில் ஒருத்தி. இருபத்தியெட்டு வயதான மங்கையவள். அவளது தந்தை சக்கரவர்த்தி, முக்கிய தொழிலதிபர், பெரும் செல்வந்தர். பல்வேறு குடும்ப தொழில்கள் அவர்களுக்கு உண்டு. ஆனால் தங்கள் குடும்பத்தின் கால் படாத ஆர்க்கிடெக்சர் தொழிலை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறாள் சந்திரிகா.
இவ்வளவு பெரிய ஆளாக இருந்தும் எங்கும் சுதந்திரமாகவே வலம் வருவாள். ஏனென்றால் அவள்தான் அவ்வளவு பெரிய குடும்பத்து பெண் என்பதோ இல்லை அவள் நடத்தும் தூரிகை ஆர்க்கிடெக்சர்ஸ் நிறுவனத்தின் முதலாளி என்பதோ இன்று வரை வெளி உலகில் பலருக்கு தெரியாது. அப்படி தான் அவள் பார்த்துக் கொண்டாள்
முக்கியமான அலுவல் பணிகளுக்கு மட்டுமே நேரில் செல்வாள். அவளது அலுவலகத்திற்கு வந்தாலும் அவ்வளவு எளிதில் அவளை பார்த்துவிட முடியாது. பெரிதாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டாள். ஆனால் தான்யா இவளின் நெருங்கிய பள்ளி கால தோழி.
பள்ளிப் படிப்பிற்கு பின் தொடர்புகள் விட்டு போகி இருக்க, இவள் அலுவலகத்திற்கு பணிக்காக வந்திருந்த போது அவர்களின் நட்பு மீண்டும் தொடர்ந்தது. முதலில் முதல் நிலை பணியாளராக இருந்த தான்யா, தனது திறமையால் இவளுக்கு அந்தரங்க காரியதரிசியாக மாறி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.
இவளை பற்றிய அனைத்து விசயங்களும் அவளுக்கு அத்துபடி. அப்படித்தான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அலுவலகத்தில் ஒருநாளும் தோழி என்ற உரிமையில் பழக மாட்டாள். தான்யாவிற்கு பெற்றவர்கள் இல்லை. சிறு வயதில் ஒரு விபத்தில் இறந்துவிட அதன்பின் அவளின் அத்தை தான் இவளையும் வளர்த்தார். அவரது மகன்தான் அருள்குமரன். சிறு வயதில் இருந்த நட்புணர்வு பின்பு காதலாகி இன்று திருமணமும் முடிந்து விட்டது.
அருள்குமரனின் தந்தையும் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட பெரிதாக சொந்தங்களும் இல்லாததால் எளிமையாக கோவிலில் திருமணத்தை வைத்து விட்டனர். அலுவலக ஊழியர்களுக்காக தனது செலவில் ஒரு பார்ட்டி வைத்து கொள்ளலாம் என சந்திரிகா கூறி விட்டாள்.
திருமணத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என தன் தோழி கேட்டுக் கொண்டதற்கு இணங்க நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த திருமணத்தில்தான் கலந்து கொண்டாள். கார் பதிவுத்துறை அலுவலகத்தில் நிற்கவும், அவளது கைபேசி அலரவும் சரியாக இருந்தது.
அவளது மேனேஜர் அபிநய் தான் அழைத்திருந்தான். அவளது அலுவலகத்தில் அபிநய்தான் எல்லாமே எனக் கூறலாம். அந்த அளவிற்கு இவள் எள் என்றால் எண்ணையாக இருக்க கூடியவன். அவனுக்கு பதில் கூறிக் கொண்டே இறங்கியவள், “சரி நான் பாத்துக்கறேன்” என ஃபோனை வைத்து விட்டாள்.
அந்த இடத்தை பார்த்ததும், ஏதேதோ நினைவுகள் தாக்க அவள் கால்கள் வேரோடி அசையாமல் நிற்க, அவள் காதுகளில் “சூர்யா” என கிசுக் கிசுப்பாக ஒரு குரல் கேட்டது.
சிங்கப்பூரின் உயர்தரமான அந்த அப்பார்ட்மென்ட் குடியிருப்பு ஒன்றில் கடிகாரம் காலை பத்து மணியை தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. மூன்று முறை ஒலித்து யாரும் எடுக்காததால் நான்காம் முறை ஒலிக்க, தூக்க கலக்கத்திலே கைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தான் அவன்.
“ஹலோ… என அவன் கூறும் முன்னே, “டேய் நீ இன்னும் எழுந்திருக்கலயா?” என்ற குரல் ஒலிக்க, “நோ மாம். குட்மார்னிங்” என்றான். “எனக்குதான்டா குட் மார்னிங். உனக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில ஆப்டர்நூன் ஆகிடும்.” எனவும் சற்று தெளிந்தவன் எழுந்து அமர்ந்து “சொல்லுங்கம்மா” என்றான் சற்று சலிப்போடு.
“நீதான்டா சொல்லனும் எப்ப வருவ?” எனக்கேட்டார் அவனது தாய். “வேலை இன்னும் முடியல மா. முடிஞ்சதும் வந்தர்ரேன். மேக்ஸிமம் ஒன் வீக்.” என்றான் அவன். “சரிடா சீக்கிரம் வா. அம்மா பாவம்ல” என அவர் கொஞ்ச, “கண்டிப்பா மா” என்றவன் வீட்டில் உள்ள மற்றவர்களை நலம் விசாரித்து விட்டு ஃபோனை வைத்தான்.
அஸ்வின் கிருஷ்ணா சென்னையின் முக்கிய செல்வந்தரும், தொழிலதிபருமான தெய்வ விநாயகம் வீட்டின் கடைக்குட்டி வாரிசு. மூத்தவன் அருண்மொழி தந்தைக்கு தப்பாத தொழில் வாரிசு. அடுத்தவள் காவ்ய லெட்சுமிக்கு திருமணமாகி சென்னையிலே வசிக்கிறாள்.
சில மாதங்கள் முன்பு வரை அஸ்வினுக்கு தொழிலில் ஆர்வம் வரவில்லை. வேண்டுமட்டும் படித்தான். படிப்பில் ஆர்வமும் அதிகம். அதே நேரம் சுட்டித்தனத்திலும் கெட்டிக்காரன். மூத்த மகனும், கணவரும் என்னேரம் அலுவலில் மூழ்க, மகளும் திருமணமாகி சென்றபின் அஸ்வின் அன்னைக்கு முற்றிலும் செல்லப் பிள்ளையாகி விட்டான்.
ஆனால் அவனும் தொழிலில் கால் பதித்து முன்னேற வேண்டும் என்பது அவர் தந்தையின் ஆசை. அதை நிறைவேற்றுவதற்காக ஒரு பிராஜக்ட் செய்து பார்க்கலாம் என முடிவு செய்தவன், அதற்காகதான் சிங்கப்பூர் வந்தான். மூன்று மாதங்களாகியும் வேலைதான் முடிந்தபாடில்லை.
எப்படியும் இந்த ஒரு வாரத்தில் முடித்துவிட்டு கிளம்பி விட வேண்டும் என முடிவு எடுத்து பணியை பார்க்க கிளம்பினான். ஊர் பற்றிய நினைவு வந்ததும் ஃபோனை எடுத்து பார்த்து இதழ்கள் மலர்ந்து உற்சாகமாக கிளம்பினான்.
அலமாரியில் வைத்துவிட்டு போன அவனது ஃபோனின் கேலரியில் மெல்லிய புன்னகையோடு காட்சி அளித்துக் கொண்டிருந்தாள் சூர்ய சந்திரிகா.