காலையில் எழுந்த விஸ்வ பிரசாத் தன் தினசரி பழக்கமான சூரியநமஸ்காரம் செய்து விட்டு உள்ளே வர, அவனின் மனமோ அவன் கடந்து வந்த பாதையை தான் நினைத்து கொண்டது.
‘எனக்கு கிடைத்த அம்மா மாதிரி யாருக்கும் கிடைச்சு இருக்க மாட்டாங்க. அப்பா முகத்தைக் கூட நான் மறந்துவிட்டேன். காசுக்குப் பஞ்சமே இல்லை. நல்ல வளமான குடும்பம் தான். அப்பா வேலையில் இருக்கும் போதே இறந்ததால் அம்மாக்கு அந்த வேலை வந்திடுச்சு. அது மட்டும் இல்ல. இரண்டு மில் இருக்கு. விவசாய நிலங்கள் இருக்கு.
இவ்வளவும் இப்ப அம்மா மட்டும் தான் ஒத்தையா பார்த்துக்கிறாங்க. என்னோட ஆசை நடிக்கனும்னு சொல்லும் போது எந்த தடையும் சொல்லாமல் எல்லா பொறுப்பையும் அவங்க தலையில் போட்டு கிட்டாங்க.
என்னோட சொந்த ஊர் மேல்மருவத்தூர். வருசம் முழுக்க மக்கள் கூட்டம் அமோகமாக இருக்கும். காரணம் அங்கு அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலம்.
அகிலாண்டேஸ்வரி, என் அம்மா தெய்வீக முகம் வயதோ முன் ஐம்பதுகள் கணவன் இறைவனடி சேர்ந்த பின் அவரின் பணியையும் சேர்த்து திறம்பட நடத்தும் திறமைமிக்கவர். தெய்வ நம்பிக்கையும் ஜாதி பற்றும் கொண்ட நவீன காலத்து பெண்மணி.
என்னை பற்றி சொல்ல என்ன இருக்கு…. ரொம்ப நல்ல பையன்ங்க. கோபம் எல்லாம் ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை தான் வரும். கடைசியா எப்ப வந்துச்சுனா என் லவ் ஜெனியை என் கண்ணு முன்னோடியே ஒருத்தன் ப்ரொபோஸ் பண்ணான் பாருங்க. அப்ப வந்த கோபத்துக்கு சுற்றி மீடியா மட்டும் இல்லை அவனுக்கு இந்த வருசம் திதி கொடுத்து இருப்பாங்க.
எனக்கு என்னோட பொருளை யாராவது பார்த்தாலே கோபம் வரும். எனக்கு பிடித்தாலும் சரி பிடிக்கலைனாலும் சரி என்னோடது எனக்கு மட்டும் தான்’ என்ற நீண்ட யோசனையில் இருந்தவன் தூரத்தில் கேட்ட சத்தத்தில்,
“ச்சை…. என்னமோ புதுசா நடந்த மாதிரி யோசிச்சிட்டு இருக்கேன். இட்ஸ் கெட்டிங் லேட் “ என்று வேக வேகமாக கிளம்பினான்.
ராமு “அம்மா.. இன்னிக்கு அன்னதானம் பண்ண வேண்டியதை எல்லாம் காரில் ஏத்தியாச்சு. நீங்களும் வரீங்களா” என “இல்ல ராமு இன்றைக்கு என்னால வர முடியாது. நீ போய் எல்லாத்தையும் பார்த்துக்கோ. தம்பி இப்ப கால் பண்ணும் நான் பேசிட்டு வேலைக்கு கிளம்பனும். குத்தகை பணம் கொடுக்க மேல தெரு ஆனந்த் வருவான் பார்த்துக்கோ” என ராமு கிளம்பினான்.
மகனின் போனுக்காக அவரும் காத்திருந்தார்.
“பைனலி இந்த படத்தோட டப்பிங் முடிஞ்சிடுச்சு. இந்த ஒரு வாரம் உனக்கு பிரேக்” என்று எனது மேனேஜர் சத்யாவிடம் சொல்ல,
“உண்மையாவே பிரேக் தானே. நான் என் ஊருக்கு போனதும் முக்கியமான வேலை இருக்குனு கூப்பிட மாட்டிங்க தானே” என்ற சத்யாவை பாவமாக பார்க்க மட்டுமே என்னால முடியும்.
“இப்ப எந்த வேலையும் இல்லடா. பயப்படாத எப்ப வரனும்னு நானே கால் பண்றேன்”
“பாஸ்… மேடம்வோட பிஏ கால் பண்ணாங்க. மே பி மேடம் சென்னை வரலாம். ஹவ் ஃபன்” என்ற சத்யாவை முறைத்து பார்த்தேன்.
ஜெனி என் காதலி தான். அவள் என்றால் அவ்வளவு பிடித்தம் தான். இருந்தும் இதுவரை என் சுண்டு விரல் கூட அவள் மேல் காதலாக பட்டது இல்லை. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது நட்பாக அணைத்தது உண்டு ஆனால் காதலாக ஒரு அடியை கூட எடுக்கவில்லை.
காரணம் வேற நான் சொல்லனுமா. என் அம்மாவோட கண்டிப்பாக வளர்ப்பு தான். ஏனோ என் கையால் தாலி ஏறும் வரை என் மனம் கண்டிப்பாக அவளிடம் இருந்து தள்ளி தான் நிற்கும்.
“அம்மாக்கு கால் பண்ணனுமே… நல்ல வேலை இப்பவாச்சு நியாபகம் வந்துச்சே இல்ல என் போனுக்காக காத்திட்டு இருப்பாங்க” என்று எண்ணி கொண்டே போன் எடுக்க, கால் போன அடுத்த நிமிடமே எடுக்கப்பட்டது. “தம்பி சாப்பிட்டியா பா” என்ற பாசமான வார்த்தையை தான் . பெற்றவர்கள் பாசத்தை வார்த்தையிலே கட்டிவிடுவார்கள் . பாசமாக கோவமாக ஏக்கமாக சோகமாக ஏமாற்றமாக என்று .
“நான் சாப்பிடறேன் முதலில் நீங்க சாப்பிட்டிங்களா… இந்த வாரத்தில் வீட்டுக்கு வர பார்க்கிறேன். எந்த நேரமும் வேலை வேலைனு இருக்காம நேரத்திற்கு சாப்பிடுங்க”
“சரி தம்பி நான் என்னை பார்த்துக்கிறேன். நீயும் நல்லா சாப்பிடு. சீக்கிரமா வீட்டுக்கு வா டா. இரண்டு மாசம் ஆகுது உன்னை பார்த்து” என மேலும் சில நிமிடங்கள் பேசிய பின் பேசியை அணைத்தான்.
*****
மும்பை, மேத்தா மேன்சன் பல கோடி சொத்துக்களுக்கு சொந்தமான குடும்பம். எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கும் யாராலும் அசைக்க முடியாத சாம்ராஜ்யம். இப்பெரிய சாம்ராஜ்யத்தை முடி சுடாத மன்னனாக ஆட்சி செய்தவர் தான் அசோக் மேத்தா.
அசோக் மேத்தா, பணம் சம்பாதிக்கும் முதலை. காய்ந்த மண்ணை கூட கோடிக்கு விற்கும் திறமைசாலி. பணத்தின் பின் ஓடி தன் மனைவியை காதலித்து கரம் பிடித்த மனைவியை இழந்தார்.
பணத்தை பெருக்கும் நோக்கில் இரவு பகல் பார்க்காமல் ஓடியவர் தன் அருமை மனைவி உடமில் பெருகும் நோயை கவனிக்க தவறி விட்டார். கவனிக்கும் போது நேரம் கடந்து விட்டது. மூன்று வயது மகளையும் காதல் கணவனையும் விட்டு நிரந்தரமாக சென்றார் மித்ரா.
ஒரு வருடம் வெறுமையாக வாழ்க்கை செல்ல பின் சுலோச்சனா அவர் வாழ்க்கையில் வந்தார். சுலோச்சனா அவரை மணத்து கொண்டதுக்கு பணம் ஒரு காரணம் என்றாலும் அவர் மேல் சிறிது பிடித்தமும் காரணம் தான். நாளடைவில் பிடித்தம் காதலாக மாற அவரை தன் வாழ்வில் இணைத்து கொண்டார்.
தற்போது அசோக் மேத்தா இறந்து 15 நாட்கள் ஆகிறது. யாரும் எதிர்பாராத மரணம். யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத மரணம்.
அவரின் மரணத்தை விட அடுத்து யார் இந்த சாம்ராஜ்யத்தின் தலைமை என்று தெரியாமல் பலருக்கு பலவிதமான பயம். ஆனால் ஒருவன் மட்டும் இவரின் மரணத்தை கொண்டாடிக் கொண்டு இருந்தான்.
அவன் ஜெயதேவ். சுலோச்சனாவின் சகோதரன். இருபதி ஒன்பது வயதாகியும் பொறுப்பு சிறிதும் இல்லை. பணம் கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யும் ரகம். அவனுக்கும் அவன் அறியாத பலவீனம் உண்டு. இன்னும் அவனே அறியவில்லை.
சுலோச்சனா மிட்டலிடம் பேசிக்கொண்டு இருந்தாள். மிட்டல், அசோக்கின் நெருங்கிய நண்பர் மற்றும் கிரிமினல் லாயர்.
“அப்பா சாவுக்கே வராத பொண்ணை இப்ப வர சொன்னா எப்படி வருவா. அவளுக்கு அங்க இருக்கிறது தான் விருப்பம் என்றால் இங்க இருக்கிற சொத்தை என் பொண்ணும் என் தம்பியும் பார்த்துப்பாங்க. அதுக்கு என்ன பண்ணனுமோ அதை பண்ணுங்க. என்னை எல்லாம் அவ கிட்ட பேச சொல்லாதீங்க” என்று சுலோச்சனா சென்று விட,
ஹாலில் மாட்டி இருந்த தனது நண்பன் புகைப்படத்தை பார்த்து ‘அசோக்… பார்த்தியா உன் மனைவி சொல்றதை. உன் பொண்ணை அவளோட பத்து வயதில் இந்த குடும்பத்தோடு இருந்து பிரிச்சா. இப்ப வரை நிறைய பேருக்கு உனக்கு இரண்டு பெண் குழந்தை என்றே தெரியாது. எல்லாத்தையும் மூடி மறைச்சிட்டு மனசாட்சியே இல்லாமல் அவளை குறை சொல்றாங்க. நான் எப்படியாவது அவளை இந்தியா வர வைப்பேன். உன்னை மாதிரி சுயநலமா என்னால யோசிக்க முடியாது. அவளுக்கு உன்னோட பாசம் தான் கிடைக்கல பட் அவளோட உரிமையை அவளுக்கு கண்டிப்பாக கிடைக்க வைப்பேன்’ என்று கிளம்பினார்.
*****
‘ஜெனி என்ன இந்த நேரத்திற்கு கால் பண்றா’ என்று யோசித்து கொண்டே விபி போன் எடுத்தான்.
“ஹாய்!!!! விபி” என்ற அவளின் உற்சாக குரல் கேட்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது.
“என்ன ஜெனி செம்ம ஹாப்பியா இருக்க போல”
“பின்ன இல்லையா…. இன்னும் நாலு நாளில் நான் சென்னையில் இருப்பேன். சூப்பர்ல…. உனக்கு எதுவும் வேலை இல்லைதானே. நெக்ஸ்ட் என்ன ப்ராஜெக்ட்”
“நான் மோஸ்ட்லி சென்னையில் தான் இருப்பேன்.. நெக்ஸ்ட் மேத்தா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஒரு மூவி இருக்கு. பட் அசோக் சரோட சடன் டெத் அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியலை” என்று சற்று சோர்வாக சொல்ல,
“விடு மேன் எல்லாமே உனக்கு பெஸ்டா தான் கிடைக்கும். அம்மா கிட்ட என்னை பற்றி பேசனியா” என்று ஆர்வமாக கேட்க,
“இன்னும் இல்ல ஜெனி. இந்த வீக் கண்டிப்பாக ஊருக்கு போவேன். நீ சென்னை வரை முன்ன நான் அம்மாவை பார்த்து நம்ம விசயத்தை சொல்றேன். கவலைப்படாத” என்று அவளின் ஆர்வம் அறிந்து சொன்னான்.
“ம்ம்ம்…. சரி பாய்” என்று அவளிடம் பேசிய விபியின் மனதில் சொல்ல முடியாத அமைதி பெற்றது.
‘இது தான் ஜெனி சிறிய நேரம் பேசினா கூட எனக்கு அவ்வளவு எனர்ஜியை தருவா. சீக்கிரமா அம்மாகிட்ட பேசனும். இன்றைக்கு தான் நல்லா தூங்கணும்’ என்று தன் படுக்கை அறை நோக்கி சென்றான்.
பாவம் அவன் அறியாதது. அவன் நினைத்த எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை என்று. அவனை புரட்டி போட ஒரு புயல் இந்தியாவை நோக்கி அதி விரைவில் வர போகிறது.
பல காதல் இணைவது இல்லை. அதனால் அது எல்லாம் காதலாகமல் போகுமோ. இணைந்தால் தான் காதலா நினைத்து கொண்டே வாழ்ந்தாலும் காதல் என்றும் மனதில் இருந்து அழிவதில்லை. எங்கோ ஒரு ஓரத்தில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கும். எளிதில் மறக்கும் விஷயமா உண்மை காதல்????
தொடரட்டும்….
நிலானி