பாண்டிச்சேரி புதுச்சேரி என்றும் அழைக்கப்படும் அழகிய கடற்கரை நகரம். பிரெஞ்சு நாட்டின் கலாச்சாரம் இன்னும் ஆதிக்கம் செலுத்தி கொண்டும் இந்திய நாட்டின் அரசியல் கட்டமைப்பும் ஒருங்கே பெற்றது.
கடற்கரை மற்ற இடங்களை விட சற்று வித்தியாசமானது அழகானது. கடற்கரை அருகே அமைந்து இருந்தது அந்த திருமண மண்டபம். மக்கள் கூட்டத்தால் கடலை விட அதிக அலை இங்கே தான் காணப்பட்டது. பின்னே நடக்க இருக்கும் கல்யாணம் இரு பெரும் பணக்காரர்களின் வாரிசுக்கு ஆயிற்றே.
விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு சென்னையில் தன் தொழிலை தொடங்கி தற்பொழுது விரிவாக்கம் செய்து, அங்கே ஓர் குட்டி தொழல் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் தான் சுந்தர். இவரின் தர்மபத்தினி இந்திரா. இருவருக்கும் இரண்டு புதல்வர்கள். முத்தவன் மாதவ் இளையவன் பிரணவ்.
மாதவ் தந்தை பிள்ளை என்றால், ப்ரணவ் தாயின் செல்ல பிள்ளை. மாதவ் பொறுப்பாக தந்தையின் தொழில்களை கவனித்து கொள்ள, பிரணவ் அவனுக்கு பிடித்ததை மட்டுமே செய்பவன். இருவருக்கும் மலைக்கும் மடுக்கும் வேற்றுமை இருந்த போதும் பாசத்தில் இருவரும் ஒற்றுமையான சகோதரர்கள் தான்.
பாண்டிச்சேரியில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் ஷோரூம் வைத்திருப்பவர் தான் ராகவன். அவரின் காதல் மனைவி தீபா. இருவரின் காதலுக்கு சாட்சியாக ஒற்றை மாணிக்க கல் தான் பிரணிதா. தற்பொழுது தான் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, தந்தையின் தொழிலை பல மாற்றங்கள் செய்து பெரிய அளவுக்கு தங்கள் தொழிலை எடுத்து செல்ல வேண்டும் என்ற பல கனவுகளோடு இருந்தவளின் கனவை கல்யாணம் என்ற பேச்சு தடுத்து நிறுத்தி வைத்துள்ளது.
மாதவ் வெட்ஸ் பிரணிதா என்று மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் கண்களை கவரும் வகையில் அலங்கரித்து இருக்கும் பெயர் பலகையை கண் கலங்க பார்த்து கொண்டு இருக்கும் தன் மனைவி தீபா தோளை அணைத்த படி பிடித்தார் ராகவன்.
“என்ன மா இப்ப போய் இப்படி கண் கலங்கிட்டு இருக்க. பாப்பா பார்த்த என்ன நினைப்பா.முதலில் அவ வர முன்ன கண்ணை துடை” என்ற கணவனை சின்ன முறைப்புடன்,
“அவளுக்கு தான் இன்றைக்கு கல்யாணம். அப்படி இருக்க அவ ஏன் வெளியே வர போகிற. வர வர முளை வேலை செய்யறதே இல்ல போல. ஏங்க என்னமோ தெரியல மனசுக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு. என்னனு சொல்ல தெரியல. எதுவும் தப்ப நடக்காது தானே” என்று படபடவென்று அடித்து கொள்ளும் மனதை சமாதனம் செய்ய கேட்க,
“அட நீ வேற ஏன் டி…. நல்லதையே நினை நல்லதே நடக்கும். நம்ம பாப்பாக்கு என்ன குறை. அவ எல்லாருக்கும் நல்லது தானே பண்ணி இருக்கா அவளுக்கு நல்லது தான் நடக்கும். அதுவும் இல்லாமல் நான் மாப்பிளை வீட்டை பற்றி விசாரிச்ச வரை ரொம்ப நல்ல விதமா தான் சொன்னங்க. என்ன சின்ன பையன் மட்டும் கொஞ்சம் பொறுப்பில்லாத ஊர் சுற்றி கொண்டு இருக்கான். மத்தபடி எல்லாமே ஓகே தான். நம்ம பொண்ணு சந்தோசமா இருப்பா” என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்க,
மணமகள் அறை, “மேடம் மேக்கப் எல்லாம் ஓவர். நீங்க கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கிறது என்றால் எடுங்க. நாங்க போய் சாப்பிட்டு வந்திடுறோம்” என்று இவளுக்கு மேக்கப் போட்ட இருவரும் வெளியே செல்ல, கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தவள் விழியில் இருந்து கோடாக இறங்கியது கண்ணீர்.
மனதில் வலி இருந்தும் வெளியே சொல்ல கூட முடியவில்லை. தாய் தந்தைக்காக இதழில் போலி புன்னகை ஒட்ட வைத்து இருந்தாள். கதவு திறக்கும் சத்தத்தில் பக்கத்தில் இருந்த டிஷ்யூவால் கண்ணீரை வேகமாக துடைத்து கொண்டு முகத்தை சிரித்த மாதிரி வைத்து கொண்டாள்.
வந்தது அவளின் கல்லூரி தோழிகள் முவரும் தான். ரேணு, ஜீவா மற்றும் ஜோதி. மற்ற ஒரு தோழி வரவில்லை.
ஜீவா “பாருங்க டி மேடம் எதோ சாதிக்கிற மாதிரி எல்லாம் பேசிட்டு நம்ம செட்டிலே முதல் ஆளாக கல்யாணம் பண்ற கூத்தை” என்று வந்ததும் அவளை கிண்டல் செய்ய,
ஜோதி “நான் கூட இவளை என்னமோ நினைச்சேன் டி. சரி மாப்பிள்ளை சார் எப்படி இருக்கார்” என்ற கேள்விக்கு மௌனமாக சிரித்தாள்.
ரேணு “நம்ம கிட்ட மேடம் சொல்ல மாட்டங்க. பட் இவளையே ஒருத்தன் இம்ப்ரெஸ் பண்ணி இருக்கான் என்றால் பாருங்களேன். காலேஜ் மொத்தமும் இவ பின்னாடி சுற்றிய கதையை நம்ம மாப்பிளை கிட்ட சொல்லி கொடுக்கறோம்” என்று சிரித்து கொண்டு அவளையும் சிரிக்க வைத்து கொண்டு இருந்தனர்.
மணமகன் அறை அதற்கு நேர் மாறாக இருந்தது. சுந்தர் “நீ பண்றது சரி இல்ல இந்திரா ஒரு பொண்ணுக்கு தெரிஞ்சே பாவம் பண்றோம். இப்ப கூட போய் உண்மையை சொல்லிடலாம். மாதவ் இங்க இல்லை என்ற உண்மையை உன்னால இன்னும் எவ்வளவு நேரம் தான் சமாளிக்க முடியும்” என்று நியாயமாக கேட்க,
“எனக்கு தெரியும் நீங்க கொஞ்சம் நேரம் வாயை மூடிட்டு இருந்தால் எனக்கு அதுவே போதும்” என்று தன் கையில் இருக்கும் அலைபேசியில் “டேய் ப்ரனவை கூட்டிட்டு வர உனக்கு இவ்வளவு நேரமா. சீக்கிரமா வா” என
“அவனை எதுக்கு இங்க கூப்பிடுற. வேண்டாம் இந்திரா சொன்ன கேளு” என்று மனுசன் கத்தியதை அவர் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை.
****
ஐயர் கூறும் மந்திரத்தையும் சாஸ்திர சம்பிரதாயத்தை கர்ம கச்சிதமாக அக்னியின் முன்பு அமர்ந்து செய்து கொண்டு இருந்தாள் பிரணிதா.
“மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ” என்று கூறி பல நிமிடங்கள் கடந்தும் இன்னும் ஒருவரும் அந்த பக்கம் இருந்து வரவில்லை. இதுவே பல சலசலப்புக்கு காரணமாக இருக்க,
ராகவன் “என்னமா இது இந்த நேரத்தில் இப்படி பண்ணிட்டு இருக்காங்க. இரு நான் போய் என்ன என்று பார்த்து விட்டு வரேன்” என்று மாப்பிளை அறையை நோக்கி செல்லும் நேரம் சுந்தர் வேகமாக அவரிடம் வந்து,
“மன்னிச்சிகோங்க சம்மந்தி. நடக்கிறது எதுவும் என் கையில் இல்லை. ஆனால் உங்க பொண்ணை இனி என் பொண்ணா நல்ல பார்த்துப்போம்” என்று சொல்ல
அவர் கூறுவது எதுவும் புரியாமல் இவர் முழிக்கும் சமயம், மணமகன் அறையில் இருந்து பட்டு வேட்டி வெள்ளை சட்டை அணிந்து தன் முகத்தில் புன்னகைக்கு பெரிய பஞ்சம் என்று அனைவர்க்கும் தெரிவிக்கும் வண்ணம் இறுகிய முகத்துடன் பக்கத்தில் நடந்து வரும் தன் தோழன் நந்தன் கையை யாரும் அறியா வண்ணம் பற்றி கொண்டு வந்தான் பிரணவ்.
தீபா “அண்ணா அங்க வருகிறது உங்க இரண்டாவது மகன் தானே.அவர் எதுக்கு மாப்பிள்ளை தோரணையில் வருகிறார்” என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாத நிலையில் தவிக்க,
இவர்கள் தங்களுக்குள் பேசி கொண்டு இருக்கும் சமயத்தில் “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்ற சத்தத்தில் அதிர்ந்து திரும்ப,
பிரணவ் இறுகிய முகத்தோடு தன் கையில் இருக்கும் பொன் தாலியை பிரணிதா கழுத்தில் கட்டியவன் மனதில் என்ன தோன்றியதோ அவளின் முகத்தை கவனிக்க,
அவளோ ‘யார் வேண்டுமோ என் கழுத்தில் தாலி கட்டி கொள்ளுங்கள் எனக்கு ஒரு கவலையும் இல்லை’ என்ற நிலையில் மாப்பிளை மாறியதை கூட அறியாமல் சிலையாக உட்கார்ந்து இருந்தாள்.
உள்ளுணர்வு எதோ சொல்ல, மெதுவாக தன் தலையை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் மேலும் பெரிதாக விரிந்து, அவளின் அளவில்லாத அதிர்ச்சியை காட்டியது.
அடுத்த நிமிடம் தன் தாய் தந்தையை காண, அவர்களோ மேடைக்கு சற்று தொலைவில் நடந்த சம்பவத்தில் அதிர்ந்து இருந்தனர்.
வந்த பலருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. கடைசி நிமிடத்தில் மாப்பிள்ளை மாறியதற்கு யார் காரணம் என்று அறிய நேரம் இல்லாமல் வந்த நோக்கம் மணமக்களை வாழ்த்த தானே என்ற வகையில் கைகளில் இருக்கும் பூக்களையும் அட்சதையும் தூவி ஆசிர்வாதம் செய்தனர்.
இந்திரா அதிர்ந்து நிற்கும் ராகவனையும் தீபாவையும் நெருங்கி “உங்க மனசு எனக்கு புரியுது. ஆனால் கவலைப்படாதிங்க உங்க பெண்ணை நாங்க நல்ல பார்த்துப்போம்” என
எதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்ற விரத்தி புன்னகை மட்டுமே இருவர் முகத்திலும்.
தன்னையே அதிர்ந்து பார்க்கும் பெண்ணவளின் விழி அசைவில் சுற்றம் மறந்து அவளையே பார்க்க, நந்தன் அவனின் கையை பற்றி அடுத்து செய்ய வேண்டியதை கண்ணால் சுட்டி காட்ட, குங்குமத்தை அவளின் நெற்றியில் வைத்து தன்னவள் ஆக்கி கொண்டான்.
பல பரபரப்புகளுக்கு நடுவே கல்யாணம் நல்லபடியாக முடிந்தது. இரண்டு கார் சென்னையை நோக்கி சென்றது. முதல் காரில் ராகவன் மற்றும் தீபா இருக்க, பின்னே வந்த காரில் முன்னாள் சுந்தர் மற்றும் இந்திரா அமர்ந்து இருக்க, பின்னே நந்தன் பிரணவ் மற்றும் பிரணிதா இருந்தனர்.
தன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஒரே நொடியில் தலை கீழாக மாறி இருக்க பிரணிதா மனதிலோ ‘கடவுளே உன் மேல இருக்கிற நம்பிக்கையில் தானே நான் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டேன். இப்ப மாப்பிள்ளை மாறி, இதோ என் பக்கத்தில் இருக்காரே இவர் தாலி கட்டியதில் இருந்து இப்ப வரை ஒரு வார்த்தை கூட பேசல. இப்ப என்னடா என்றால் காரில் ஏறியதும் தூங்கி விட்டார். நான் என்ன செய்றது’ என்று மனதில் பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழிக்க,
மனதின் பாரம் ஏற ஏற, அவளால் மூச்சே விட முடியவில்லை. தன் கண்களை இறுக்க மூடி கொண்டு சாய்ந்து இருக்க, சற்று நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள்.
வண்டி ஒரு குலுங்கு குலுங்கியதில் மெல்ல தன் கண்ணை திறந்தாள். அவள் இருக்கும் நிலையை கண்டதும் அவளுக்கு சங்கடமாக ஆகி விட்டது. பிரணவின் அகன்ற தோளில் சாய்ந்து அவனின் ஒரு கையை தன் கைக்குள் பிணைத்து வைத்து இருந்தாள். இது தான் அவளின் எதிர்காலம் என்று அவள் அறியவில்லை.
இந்திரா “நீ பொறுமையா இறங்குமா. அவனை நந்தன் எழுப்புவான்” என அவளும் தலையை வேகமாக ஆட்டி விட்டு இறங்கி விட்டாள். ஓரமாக ஏற்கனவே இறங்கி இருந்த தாய் தந்தை அருகே செல்ல,
தீபா “மாப்பிள்ளை எதாவது சொன்னாரா மா” என்ற அவரின் கேள்விக்கு, அவளோ இல்லை என்று தலையை ஆடினாள்.
இந்திரா ஆரத்தி எடுக்க அழைக்க, நிலைப்படி அருகே சென்றாள், அவள் அருகே பிரணவ் வந்து நின்றான். ஆரத்தி எடுத்ததும் உள்ளே செல்ல, அடுத்த நொடி நடந்த நிகழ்வில் பிரணிதாவின் உலகமே நொறுங்கி விட்டது.
அவளின் தாயோ மகளின் நிலையை நினைத்து கதற ஆரம்பித்து விட்டார். ராகவன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க, காலையில் காட்டிய புடவையின் மடிப்பே அழியாமல் இருக்க தன் உலகமே அழிந்தது போல் உணர்ந்தாள் பிரணிதா.
அப்படி இவள் நினைக்க காரணம் தான் யாதோ?
உயிராட்டங்கள் தொடரட்டும்….
நிலானி தாஸ்
இந்திரா செஞ்சது ரொம்ப தவறு கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கிட்ட கேட்கல அவளை பெத்தவங்க கிட்டையும் கேட்கல தானா ஒரு முடிவு எடுத்து மாப்பிள்ளை மாத்துனா என்ன அர்த்தம்??
இந்த பிரணவ் அப்படி என்ன பண்ணி வச்சா எல்லாரும் இப்படி அதிர்ச்சி ஆகுறாங்க??