
உயிர் – 19
நிச்சயம் முடிந்ததுமே தன் தாய் தந்தையை தனிமையில் அழைத்து அவர்களிடம் மன்னிப்பை வேண்டி விட்டான் ஆதவ் கிருஷ்ணா.
“நீ அனுராதாவை கல்யாணம் பண்ணிக்கிறதுல எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்ல ஆதவ். ஆனா, இதை நீ என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாமே” என்ற சத்யராஜிடம், “முன்னாடியே சொல்லி இருந்தா, இந்த கல்யாணம் இவ்வளவு தூரம் வந்திருக்காது பா” என்றான் தன் அன்னையை பார்த்துக் கொண்டே.
அவரோ முறைத்துக் கொண்டே நின்றிருக்க.
“சரி, விடு உமா. நம்ம பசங்களோட சந்தோஷம் தான நமக்கு முக்கியம். ஆதவ் அனுவை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறான். வாழ போறது அவன் தானே.. அவன் விருப்பப்படியே செய்வோம்”.
“என்னங்க பேசுறீங்க நீங்க.. அதுக்காக அந்த கோமதியோட பொண்ண போய்..” என்றவர் அதற்கு மேல் பேசாமல் தன் வாயை அழுத்தமாக மூடிக்கொண்டார்.
“எனக்கு உன்னுடைய மனநிலை புரியுது உமா. இந்த விஷயத்துல தப்பு மொத்தமும் உன் அண்ணன் மேல தான.. உன் அண்ணனையே உன்னால ஏத்துக்க முடிஞ்சிடுச்சு. அவங்கள உன்னால ஏத்துக்க முடியலையா.. அதுலயும், அனு என்ன தப்பு பண்ணா.. உன் அண்ணனுக்கு பொண்ணா பொறந்தது தவிர, அந்த பொண்ணு எனக்கு தெரிஞ்சு வேற எந்த தப்புமே பண்ணல” என்று அவர் நடு நிலையாக பேசவும்.
தன் கணவனும், மகனும் அனுவின் சார்பாக இருக்கும் பொழுது, இவர் ஒருவரால் மட்டும் என்ன செய்து விட முடியும். வேறு வழியின்றி அமைதியாக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் உமா.
பொழுது விடிந்தும் எதிலும் எந்த ஒரு முழு ஈடுபாட்டையும் செலுத்தாமல் உர்ரென்று சுற்றிக்கொண்டு இருந்தார் உமா.
கீதாவோ அவருக்கு நேர் எதிராய் அத்தனை மகிழ்ச்சியோடு தன் முப்பத்தி இரண்டு பற்களும் வெளியே தெரியும் அளவிற்கு சிரித்த முகமாக சுற்றிக்கொண்டு இருந்தார்.
நேற்று வரை உம்மென்று இருந்தவர். இன்று அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யவுமே, அவரின் மகிழ்ச்சிக்கான காரணம் என்ன என்பது மற்றவர்கள் அனைவருக்குமே அப்பட்டமாக விளங்கியது.
“என்னக்கா நீங்க, இப்படி அமைதியா வந்து உட்கார்ந்துட்டீங்க.. நம்ம பசங்க கல்யாணம்.. நாம தானே எல்லாத்தையும் முன்ன இருந்து நடத்தணும். பொண்ணுக்கு மாப்பிள்ளை விட்டு சார்பா புடவை, நகை எல்லாம் கொடுத்து விட்டுட்டீங்களா?” என்றவருக்கு வாயை சற்றும் திறக்காமல் ஒட்டிக் கொண்டதை போல் மூடிக்கொண்டு, “ம்ம்” என்றார் உமா.
“நானும் இப்போ தான் கொடுத்துட்டு வந்தேன். முன்னமே தெரிஞ்சிருந்தா என் மருமகளுக்கு பார்த்து பார்த்து எல்லாத்தையும் செலக்ட் பண்ணி இருப்பேன். அவசர கதியில வாங்குற மாதிரி ஆகிப்போச்சு” என்ற அங்கலாய்ப்பு வேறு.
அது உமாவிற்கு அவரின் கோபத்தை மேலும் ஏற்றிவிட்டது.
“என்ன தான் நாம இவங்களுக்கு இவங்களோட தான் கல்யாணம் நடக்கணும்னு ஆயிரம் கனவு கண்டு ஆசைப்பட்டாலும், கடவுள்னு ஒருத்தர் இருக்கார் இல்லையாக்கா.. அவர் தான் பிறக்கும் பொழுதே இவங்களுக்கு இவங்க தான்னு முடிச்சு போட்டு இருக்காரே. அதை மீறி நம்மால என்ன பண்ணிட முடியும். நாம என்ன நினைச்சாலும் கடைசியில கடவுளுடைய சித்தம் என்னவோ அதுபடி தான் எல்லாம் நடக்கும்” என்று வேறு கூற.
அவரின் பேச்சில் இருக்கும் குத்தலை உணர்ந்த கற்பகம், “கீதா இங்க என்ன பேச்சு வேண்டி கிடக்குது. அங்க போ ஐயர் என்னமோ கேட்குறார். அதை எல்லாம் எடுத்துக் கொடு” என்றவாறு இருவரையும் கலைத்து விட்டார்.
உமாவின் அருகில் அமர்ந்து, “அம்மாடி ஒரு விஷயம் மட்டும் கீதா சொன்னது உண்மை தான். கடவுளுடைய சித்தம் தான் அனுராதா உங்க வீட்டுக்கு மருமகளா வரர்து. இப்ப வேணும்னா உனக்கு இதுல விருப்பமில்லாம இருக்கலாம். ஆனா, உன் வாயாலேயே இப்படி ஒரு மருமக வர நீ கொடுத்து வச்சிருக்கனும்னு நீயே சொல்லுவ பாரு”.
“வயித்தெரிச்சலை கிளப்பாம போங்கம்மா” என்ற உமா கோபமாக எழுந்து சென்று விட்டார்.
மணமகன் அறைக்குள் இரு மணமகன்களுமே உல்லாசமான மனநிலையோடும், பூரிப்போடும் தயாராகிக் கொண்டிருந்தனர்.
“எப்படியோ நீ ஆசைப்பட்ட போலவே ருக்மணியையே கல்யாணம் பண்ண போற.. இப்போ உனக்கு ஹாப்பி தான?”.
“ஐயோ அண்ணா, நான் இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு வார்த்தையால சொல்ல முடியாது. கண்டிப்பா இதுக்கு நீங்க தான் காரணம். உங்களுக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும். என்னை விடுங்க.. உங்க மனசுலயும் அனுராதா.. என்னால இன்னும் நம்ப முடியல. உங்களுக்குள்ள இப்படி ஒரு ரோமியோவா” என்று ஆதவ்வை கிண்டல் அடிக்கவும்.
அவனை விளையாட்டாக முறைத்து பார்த்த ஆதவ், “ஓவரா பேசாதடா.. கடைசி நேரத்தில கூட மாப்பிள்ளையை மாத்திடுவேன்” என்றதும்.
“ஐயோ! அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க. என் வாழ்க்கையே உங்க கையில தான் இருக்கு” என்று சட்டென்று தன் அண்ணனிடம் சரண்டர் ஆகி விட்டான்.
பட்டு வேட்டி சட்டையில் இருவருமே அத்தனை நேர்த்தியாகவும், அழகாகவும், கம்பீரமாகவும் புது பொலிவுடன் மிளிர்ந்து கொண்டு இருந்தனர்.
மணமகள் அறைக்குள்ளோ ருக்மணி அகிலனின் அளவிற்கு பூரிப்பு இல்லாவிட்டாலும், ஒரு வித மகிழ்ச்சியோடு தான் தயாராகிக் கொண்டிருந்தாள்.
ஆனால், அனுராதாவின் நிலை தான் இன்னது என்று பிரித்தறிய முடியாமல் ஏனோ தானோ என அமர்ந்திருந்தாள்.
அவளுக்கே தன் மனநிலை எப்படி இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடியவில்லை.
ஏதோ ஒரு வெறுமை அவளை சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது.
சூறாவளியில் சிக்கிய துண்டு காகிதமாய் அவளின் மனம் அலை கழித்துக் கொண்டே இருந்தது.
எதையும் தெளிவாக சிந்திக்க முடியவில்லை. எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியவில்லை. குழம்பிய குட்டையாய் அவளின் மனம் இருக்க. ஆதவ்வின் மேலிருந்த கோபம் மட்டும் கொஞ்சமும் தனியாமல் அப்படியே இருந்தது.
“கொஞ்சம் சிரி அனு. உனக்கு இந்த சேரி ரொம்ப அழகா இருக்கு தெரியுமா” என்ற தன் அக்காவை வெறுமையான பார்வை பார்த்தவள். மீண்டும் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தாள்.
உண்மையிலேயே அழகு சிலை போல் தான் இருந்தாள். அந்த சிகப்பு நிற பட்டு அவளுக்கு அத்தனை அழகாய் இருந்தது. இதுவும் ஆதவ்வின் தேர்ந்தெடுப்பு தானே..
அதற்கு நேர்த்தியான அணிகலன்கள், அலங்காரங்கள் என தேவதையாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு சற்றும் சளைக்காத அழகோடு பதுமை போல் தயாராகி இருந்தாள் ருக்மணி.
அடுத்தடுத்த சடங்குகள் துரித வேகத்தில் அரங்கேற. அனுராதா மற்றும் ருக்மணியின் கழுத்தில் அவரவர் ஆண்மகன்கள் மாங்கல்யத்தை பூட்டி இருந்தனர்.
அனுராதா சற்றும் ஆதவன் புறம் தன் தலையை திருப்பவே இல்லை. எங்கோ இலக்கின்றி வெறித்த பார்வை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவளின் செவி மடலில் தீண்டிய, “செம்ம.. ஹாட்!” என்ற ஆதவ்வின் கிசுகிசுப்பில் திரும்பி அவனை முறைத்து பார்க்கவும்.
ஹோம குண்டத்தை தன் கண்களால் காட்டியவன், “இதை சொன்னேன்” என்றான் தன் இதழ் மடித்து அழகாய் புன்னகையை மறைத்தவாறு.
அவனின் செயலில் தன்னால் முடிந்த மட்டும் அவனை முறைத்து விட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவனின் இதழிலோ திருப்தி கலந்த நமட்டு புன்னகை.
மாங்கல்யத்தை பூட்டி முடித்ததும் ஒரு நொடி அகிலனின் விழிகளும், ருக்மணியின் விழிகளும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொள்ள. இருவரின் இதழிலும் மென்மையான புன்னகை தவழ்ந்தது.
எந்த வீட்டிற்கு தன் தந்தை இருக்கிறார் என்று போக மறுத்தாளோ, அதே வீட்டிற்கு இப்பொழுது மருமகளாய் வாழப் போகிறாள் ருக்மணி.
அதே போல், எந்த வீட்டின் வாசலை இனி தான் மிதிக்கவே கூடாது என்று ஒதுங்கி இருந்தாளோ, அதே வீட்டிற்கு மருமகளாய் வாழ அடியெடுத்து வைக்கிறாள் அனுராதா.
காலமும், நேரமும் எப்பொழுதும் ஒன்று போலிருக்காது. ஏதேனும் மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டு தானே இருக்கும். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு ஓடுவது தானே மனிதனின் இயல்பு.
அதன் பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி முடியவும். மணமகன்களையும், மணமகள்களையும் அவரவர் அறைக்கு ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர்.
இரு தாய்மார்களுக்குமே பெற்றவர்களின் வயிறு குளிர்ந்து விட்டது. தங்கள் மகள்களின் மணக்கோலத்தை கண்ட பிறகு.
அறைக்குள் உர்ரென்று அமர்ந்திருந்தாள் அனுராதா.
“இப்போ என்னடி?” என்ற ருக்மணியிடம், “நீங்க நேத்து என்கிட்ட என்ன சொன்னீங்க.. அம்மாவை பெரியம்மா கூட தங்க சொல்றேன்னு சொன்னீங்க இல்ல.. அம்மாவை கூப்பிட்டு பெரியம்மா கூட இனி தங்க சொல்லுங்க. அவங்க பெரியம்மா கூட தங்க சம்மதிச்சா தான் நான் அவரோட வீட்டுக்கு போவேன்” என்றாள் திடமான குரலில்.
அவளின் வார்த்தையில் அதிர்ந்து விழித்தவள், “என்னடி இப்படி எல்லாம் சொல்ற?”.
“நான் சொன்னது சொன்னது தான்க்கா. அம்மா மட்டும் பெரியம்மா கூட தங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னா, நானும் அவரோட வீட்டுக்கு போக மாட்டேன்”.
“சரி சரி.. நீ ஒன்னும் அவசரப்படாத. நான் சித்தி கிட்ட பேசுறேன்” என்றவள் கோமதியை வரவழைத்து அனு கூறியதை கூறி இருந்தாள்.
“என்ன அனு, இதெல்லாம் எப்படி சரி வரும்? உன் அப்பா அங்க இல்ல இருக்காரு” என்று சங்கடமாக கூறியவரை முறைத்தாள் அனுராதா.
“ஆமா, நீங்க ரெண்டு பேரும் அப்படியே எந்த ஒரு உண்மையையும் மறைக்காம ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா வாழுறீங்க பாருங்க. அவர் எங்க இருக்காரோ அங்க தான் நீங்களும் இருப்பீங்களோ”.
“ச்ச.. ச்ச.. நான் அப்படி சொல்லல”.
“அப்புறம் வேற எப்படி மா.. ஏற்கனவே, அந்த வீட்ல உங்களை வேலைக்காரி மாதிரி தான் நடத்துவாங்க. இப்போ நானும் இல்ல.. மொத்த வேலையும் உங்க தலையில தான் வந்து விழும். நான் சொன்னது சொன்னது தான். நீங்க பெரியம்மா கூட போய் தங்க சம்மதிச்சா தான் நான் உங்க மாப்பிள்ளை வீட்டுக்கு போவேன்”.
அவளின் வார்த்தையில் கோமதி தவிப்பாக ருக்மணியை பார்க்கவும்.
“அவ சொல்றதும் சரி தானே சித்தி. நீங்க என்ன அந்த வீட்டுக்கு வேலைக்காரியா.. நீங்களும் அந்த வீட்ல ஒரு மருமக தானே.. அந்த மாதிரி உங்களை யாரும் அங்க இதுவரைக்கும் ட்ரீட் பண்ணவே இல்ல. அப்புறம் ஏன் நீங்க அங்கேயே இருக்கணும்?”.
“அதுக்காக அக்கா கூட போய் நான் இருக்கிறது எப்படி சரி வரும்” என்று அவர் தயங்கவும்.
“என்னோட நீ வந்து இருக்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல கோமதி. நீ தாராளமா வந்து இருக்கலாம்” என்று விசித்ரா வேறு கூறவும்.
“அதுக்கு இல்லக்கா, யாரும் ஏதாவது சொல்லுவாங்களோன்னு தான்…” என்று இழுத்தார் கோமதி.
“போதும்மா.. இன்னும் எத்தனை காலத்துக்கு தான் அடுத்தவங்க இதை சொல்லுவாங்களோ, அதை சொல்லுவாங்களோனு பயந்து பயந்து வாழ முடியும். இதுவரைக்கும் நம்ம வாழ்க்கையை அடுத்தவங்களுக்கு பயந்து தான் வாழ்ந்திருக்கோம். இனியும் அப்படியே வாழ முடியாது. என்னுடைய முடிவு இது தான். இனி நீங்க தான் உங்க முடிவை சொல்லணும்” என்றவளோ கட்டிலில் சென்று அமர்ந்து விட்டாள்.
****
கதையை பற்றிய உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் 😊
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

என்னடா இது?? இப்ப தான் மனசுக்குள் காதல் ன்னு சொன்னாங்க, அடுத்து நிச்சயம், கூடவே கல்யாணமும் முடிச்சாச்சு.. இந்த மாப்பிள்ளை பயலுக போற speed ஒன்னும் சரியில்லையே…fire engine kku நம்ம அனு தான் speed breaker போல…😁😁
விட்டா பிடிக்க முடியாதுல அதான் உடனே கல்யாணம்.. 😉